(ஹர்யஷ்வராஜகதா யதோருத்பத்திஷ்சம்)
An account of Haryashva | Vishnu-Parva-Chapter-93-037 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : ஜராசந்தனிடம் கொண்ட அச்சமும், அது தீரும் வழியும்; மன்னன் ஹரியஷ்வனின் கதை; யது, யாதவர்களின் தோற்றம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பலம்வாய்ந்தவனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, ரோஹிணியின் மகனுடன் {பலராமனுடன்} சேர்ந்து யாதவர்களால் நிறைந்த மதுரா நகரில் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்.(1) இளமை அழகுடனும், அரச செழிப்புடனும் அவனது மேனி படிப்படியாக மிளிர்ந்தது, காடுகளால் அலங்கரிக்கப்பட்ட மதுரா எங்கும் அவன் திரியத் தொடங்கினான்.(2)
ராஜகிருஹத்தின் மன்னன் ஜராசந்தன், மீண்டும் தன் மகள்கள் இருவராலும் தூண்டப்பட்டும், கம்ஸனின் மரணத்தை நினைவு கூர்ந்தும் போருக்கான ஆயத்தங்களைச் செய்தான்.(3) இவ்வகையில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான யாதவர்கள் பதினேழு முறை ஜராசந்தனுடன் போரிட்டும் அவர்களால் அவனைப் போரில் கொல்ல இயலவில்லை.(4) மகதத்தின் செழிப்புமிக்க மன்னன் {ஜராசந்தன்}, தன்னுடைய நால்வகைப் படையுடன் பதினெட்டாம் படையெடுப்புக்கான ஆயத்தங்களைச் செய்தான்.(5) பெருஞ்சக்திவாய்ந்தவனும், ராஜகிருஹத்தின் வீரமிக்க மன்னனும், ஆற்றலில் தேவர்களின் மன்னனை {இந்திரனைப்} போன்றவனும், அழகிய பேரரசனுமான ஜராசந்தன், தன்னுடைய முந்தைய தோல்விகளால் நாணமடைந்தும், கிருஷ்ணனைக் கொல்லும் நோக்குடனும் ஒரு பெரும்படையால் சூழபட்டவனாகப் புறப்பட்டுச் சென்றான்.(6,7) ஜராசந்தன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட யாதவர்கள், அவன் திரும்பிவிட்டான் {புறப்பட்டு வருகிறான்} என்பதைக் கேட்டதும் ஆலோசனை செய்யத் தொடங்கினர்.(8)
அப்போது பேரொளி கொண்டவனும், அறநெறியின் விதிகளை நன்கறிந்தவனுமான விகத்ருவானவன்[1], உக்ரஸேனனின் முன்னிலையில் வைத்துத் தாமரைக் கண்ணனான கிருஷ்ணனிடம்,(9) "ஓ! குழந்தாய் கோவிந்தா, நமது குலத்தின் தோற்றம் குறித்துக் கேட்பாயாக. உரிய நேரம் வந்துவிட்டதால் நான் இதை உரைக்கிறேன். ஓ! பக்திமானே {சாதுவே}, என் சொற்கள் முறையெனக் கருதினால் அவற்றின் படி நீ செயல்படுவாயாக.(10) ஆன்ம ஞானத்தை நன்கறிந்த வியாசரால் சொல்லப்பட்டது போல இந்த யாதவக் குலத்தினுடைய தோற்றத்தை நான் விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(11) மனுவின் குலத்தில், இக்ஷ்வாகுவுக்குப் பிறந்தவனும், மஹேந்திரனைப் போன்ற பலம்வாய்ந்தவனும், செழிப்புமிக்கவனும், ஹரியஷ்வன் என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான மன்னன் ஒருவன் இருந்தான்[2].(12) அவனுக்கு இந்திரனின் சச்சியைப் போன்றவளும், அன்புக்குரியவளும், தைத்தியன் மதுவின் மகளும், மதுமதி என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு மனைவி இருந்தாள்.(13) அவள் இளமை நிறைந்தவளாகவும், ஒப்பற்ற அழகைக் கொண்டவளாகவும், மன்னனின் விருப்பங்களை எப்போதும் நிறைவேற்றுபவளாகவும் இருந்தாள்.(14) தானவ மன்னனின் மகளான அவள், பெண்ணாக இருந்தாலும், விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவளாகவும், அழகிய இடையைக் கொண்டவளாகவும், இக்ஷ்வாகுக்களின் குலத்தில் முதன்மையானவனின் {ஹரியஷ்வனின்} விருப்பத்தை நிறைவேற்றுபவளாகவும், வானுலாவும் ரோஹிணியைப் போல ஒரே மனைவியென்ற நோன்பு {ஏகபத்னி விரதத்தை} நோற்பவளாகவும் இருந்தாள்.(15)
[1] இந்த விகத்ரு, ஹரிவம்ச விஷ்ணு பர்வம் 22ம் பகுதியின் 8ம் ஸ்லோகத்தில் சொல்லப்படும் பட்டியலில் இருக்கிறான்.
[2] இக்ஷ்வாகுவுடைய ஒன்பது மகன்களின் பெயர் பட்டியலில் ஹர்யஷ்வனின் பெயர் இல்லை. இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவன் என்பதைச் சொல்வதற்காக இக்ஷ்வாகுவுக்குப் பிறந்தவன் என்று இங்குச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். இக்ஷ்வாகு குலத்தின் பதிமூன்றாம் தலைமுறையில் ஹரியஷ்வன் என்ற மன்னன் ஒருவன் குறிப்பிடப்படுகிறான். ஹரிவம்ச பர்வம் பகுதி 12ல் அவன் திருடாஷ்வனின் மகனாகவும், துந்துமாரன் என்கிற குவலாஷ்வனின் பேரனாகவும் சொல்லப்படுகிறான். அவன் இவனாக இருக்கும் வாய்ப்பு குறைவே. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த அத்தியாயமும், இதில் உள்ள செய்திகளும் இல்லை.
ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு காலத்தில், மன்னர்களில் முதன்மையானவனும், தாமரைக் கண்ணைக் கொண்டவனும், காலஞானத்தை அறிந்தவனுமான ஹரியஷ்வன், தன் அண்ணனால் வெளியேற்றப்பட்டவனாக அயோத்யையை விட்டு அகன்றான். அவன் மிகச் சொற்பமான நபர்களுடனும், தன் அன்புக்குரிய மனைவியுடனும் காடுகளுக்குச் சென்று அங்கே வாழத் தொடங்கினான்.(16,17)
ஒரு நாள், தாமரைக் கண்களைக் கொண்டவளான மதுமதி, அண்ணனால் வெளியேற்றப்பட்ட மன்னனிடம்,(18) "ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, நீர் உமது நாட்டின் மீது கொண்ட ஆசைகள் அனைத்தையும் கைவிடுவீராக. நாமிருவரும் என் தந்தை மதுவின் வீட்டிற்குச் செல்வோம்.(19) விரும்பிய மலர்களையும், கனிகளையும் பொழியும் மரங்களைக் கொண்டதும், தேவர்களின் நகரைப் போன்றதுமான மதுவனம் அங்கே இருக்கிறது.(20) ஓ! மன்னா, நீர் என் தந்தைக்கும், அன்னைக்கும் அன்புக்குரியவராக இருக்கிறீர், என்னுடன் பிறந்த லவணனும் என் நிறைவுக்காக உமக்கன்பனாகவே இருப்பான்.(21) நாம் அவனுடன் சேர்ந்து நம் நாட்டில் இருப்பதைப் போலவே அங்கே மகிழ்ச்சியாக இன்புற்றிருப்போம். ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, நந்தனத் தோட்டத்திற்குத் தேவர்கள் செல்வதைப் போலவே நாம் அங்கே சென்று தேவர்களின் நகரத்தில் இருப்பதைப் போல இன்புற்றிருப்போம். உமக்கு நன்மை நேரட்டும்.(22) ஓ! அரசே, உமது அண்ணனை நம்புவது வீணே. அவர் நமக்கு எதிராகத் தீங்கு செய்பவராகவும், தன் நாட்டைக் குறித்து எப்போதும் செருக்குடையவராகவும் இருக்கிறார். எனவே நாம் அவரைக் கைவிட வேண்டும்.(23) ஓர் அடிமையை {பணியாளைப்} போல அண்டியிருக்க வேண்டிய அத்தகைய இழிந்த வசிப்பிடத்திற்கு ஐயோ. எனவே, ஓ! வீரரே, நாமிருவரும் என் தந்தையின் வீட்டுக்குச் செல்வோம்" என்றாள் {மதுமதி}.(24)
காமத்தால் பீடிக்கப்பட்ட அந்த மன்னன் {ஹரியஷ்வன்}, தன் மாமனாரின் உதவியின் மூலம் தன் அண்ணனை அழிக்க விரும்பவில்லை என்றாலும், தன் மனைவியின் சொற்களை விரும்பவே செய்தான்.(25) அதன் பின் மனிதர்களில் முதன்மையான மன்னன் ஹரியஷ்வன், ஆசையால் பீடிக்கப்பட்டவனாகத் தன் அழகிய மனைவியுடன் மதுவின் நகரத்திற்குச் சென்றான். தானவர்களின் மன்னன் {மது} அவனிடம் {ஹரியஷ்வனிடம்} அன்புடன், "ஓ! மகனே ஹரியஷ்வா, உனக்கு நல்வரவு. உன்னைக் கண்டதில் நான் நிறைவடைகிறேன்.(26,27) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, மதுவனம் தவிர இந்த நாடு முழுவதையும் நான் உனக்குத் தருகிறேன்; நீ இங்கேயே வாழ்வாயாக.(28) இந்தக் காட்டில் {மது வனத்தில்} லவணன் உனக்கு உதவி செய்பவனாகவும், உன் எதிரிகளை அழிப்பதில் உனக்கு வழிகாட்டியாகவும் இருப்பான்.(29) பசுக்கள் மிகுந்ததும், இடையர்கள் நிறைந்ததும், கடலின் நீரால் அலங்கரிக்கப்பட்டதுமான இந்தச் செழிப்புமிக்க நாட்டை நீ ஆள்வாயாக.(30) ஓ! மகனே {மருமகனே}, நீ இங்கே வாழ்ந்தால், பெரும் மலைக்கோட்டையை அடைவாய், செழிப்புமிக்கக் கிராமங்களையும், நகரங்களையும் கொண்ட உன்னுடைய இந்தப் பரந்த நாடு மன்னர்களின் வசிப்பிடமாக இருக்கும்[3].(31) கடலால் நீர் அளிக்கப்படும் {மழை பொழியும்} நாடு, ஆபத்துகளில் இருந்து விடுபட்டதாகும். அங்கே ஆநர்த்தம் என்ற பெயரைக் கொண்ட ஒரு பரந்த மாகாணத்தை நீ அடைவாய்.(32) ஓ! மன்னா, எனினும் காலவோட்டத்திலேயே இவற்றை நீ அடைவாய். நீ இப்போது இந்த நாட்டின் மன்னனுக்குரிய கடமைகளைச் செய்வதில் ஈடுபடுவாயாக.(33) ஓ! குழந்தாய், காலப்போக்கில் உன் குடும்பம் {குலம்} யயாதியில் இருந்து தொடங்கும் யது குலத்துடன் இரண்டறக் கலக்கும். நீ சூரிய குலத்தில் பிறந்திருந்தாலும் உன் குலம் சந்திர குலத்தின் உட்பிரிவாக அமையும்.(34) ஓ! குழந்தாய், இந்த மிகச் சிறந்த ஆட்சிப்பகுதியை உனக்கு அளித்த பிறகு, தபம் செய்வதற்கான இடமும், உப்பின் வசிப்பிடமுமான பெருங்கடலுக்கு நான் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்.(35) ஓ! மகனே, உன் குலத்தைப் பெருகச் செய்வதற்காக, செழிப்புமிக்க இந்தப் பெரிய நாட்டை லவணனுடன் சேர்ந்து ஆள்வாயாக" என்றான் {அசுரன் மது}.(36)
[3] சித்திரசாலை பதிப்பில், "மகனே, இங்கே ஆட்சி செய்யப்போகும் உனக்குக் கிரி நகரத்தின் பெருங்கோட்டையானது, நாட்டின் பெருங்காரியங்களில் ஈடுபடும் மன்னனின் வசிப்பிடமாக இருக்கும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "குழந்தாய், இங்கு வஸிக்கும் உனக்கு, பெரிய மலை ப்ரதேச அரண் உண்டு, ஸௌராஷ்ட்ர தேச ராஜா வஸிக்கும் தலைநகராகும் ஸமுத்திரம் பக்கத்திலுள்ள நீர் நிலை மிகுந்த தேசமாகையால் வ்யாதியற்றதுமாகும்" என்றிருக்கிறது.
மதுவின் இந்தச் சொற்களைக் கேட்ட ஹரியஷ்வன், "நீருக்குள் நீர் நுழைவீராக" என்று சொல்லிவிட்டு அந்த நாட்டை ஏற்றுக் கொண்டான், அந்தத் தைத்தியனும், தபசிகளின் புகலிடமான வருணனின் வசிப்பிடத்திற்குச் சென்றான்.(37) அதன் பிறகு, தேவர்களைப் போன்ற பெரும்பிரகாசம் கொண்ட ஹரியஷ்வன், அந்தச் சிறந்த மலையில் {கிரிவரத்தில்} வசிப்பதற்கான ஒரு நகரத்தை அமைத்தான்.(38) அழகிய நகரங்களையும், மதிப்புமிக்கப் பசுக்களையும் கொண்ட அந்த ஆநர்த்த நாடு விரைவில் செழிப்படைந்தது.(39) குடிமக்கள் வசித்ததும், காடுகளால் அலங்கரிக்கப்பட்டதும், கடலின் கரையில் அமைந்திருந்ததும், சுவர்களும் {மதில்களும்}, கிராமங்களும் நிறைந்ததுமான அநூப நாடு {சதுப்பு நிலத்துடன் கூடிய ஆநர்த்த நாடு}, கழனிகளாலும், தானியங்களாலும் நிறைந்திருந்தது[4].(40) பெரும் பலம்வாய்ந்த மன்னனான ஹரியஷ்வன், குடிமக்களின் இன்பத்தையும், நகரங்களின் மகிழ்ச்சியையும் அதிகரித்து, தன் அரச கடமைகளைச் செய்து புகழுடன் அந்தச் செழிப்பு மிக்க நாட்டை ஆட்சி செய்தான்.(41) உயரான்மாவான ஹரியஷ்வனின் சரியான நிர்வாகத்தால் செழிப்படைந்த அந்நாடு, ஒரு நாட்டுக்குரிய தன்மைகள் அனைத்தையும் அடைந்து, படிப்படியாகப் பரிமாணத்தில் வளர்ந்தது {அளவில் பெருகியது}.(42) ஓ! தலைவா, அரசனுக்குரிய அருஞ்செயல்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த அரசன், நாட்டில் இருந்து கொண்டு தன் ஒழுக்கத்தாலும், அறநெறியாலும் தன் குடும்பச் செழிப்பை {குல செழிப்பை} அடைந்தான்.(43)
[4] மற்ற இரண்டு பதிப்புகளிலும் அநூப நாடு என்பது குறிப்பிடப்படவில்லை. சித்திரசாலை பதிப்பில், "ஆநர்த்தம் என்ற பெயரைக் கொண்ட மங்கலமான அந்த நாடு, பசுக்களெனும் செல்வத்தால் செல்வத்தையும், வளத்தையும் மிக விரைவில் அடைந்தது. காடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தச் சதுப்பு நிலமானது, கோட்டைகளுடனும், கிரமங்களுடனும், எல்லைகளில் வினோதச் செடிகளுடனும் வளமாக இருந்தது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஆநர்த்தம் எனும் அந்தத் தேசம் நல்ல ராஜ்யமாகவும், பசுச் செல்வம் கூடியதும், குறுகிய காலத்தில் செழிப்புள்ளதாயுமாயிற்று. பயிர் நிலம் நிரம்பியதும், நீர்நிலையுள்ள வனத்தை எல்லையாகவுடையதும், சுற்றிலும் கிராமங்களையுடையதும், ஆச்சர்யமானதும், பரந்ததுமான ராஜ்யத்தை ப்ரஜைகளுக்கு ஆநந்தத்தை மூட்டியும், ராஜ்யத்தை வளர்க்கும் ராஜ தர்மத்துடனும் புகழ்பெறப் போற்றி அந்த ராஜா வளர்த்தான்" என்றிருக்கிறது.
அதன்பிறகு, நுண்ணறிவுமிக்கவனான ஹரியஷ்வன், ஒரு மகனை அடைய விரும்பி புனித நோன்புகளைப் படிப்படியாகப் பயிலத் தொடங்கினான். அவன் {ஹரியஷ்வன்} சிறப்புமிக்கத் தன் மகன் யதுவை மதுமதியிடம் பெற்றான்.(44) எக்காள முழக்கத்தைப் போன்ற குரலைக் கொண்டவனும், பகைவர்களால் தடுக்கப்பட முடியாதவனும், அரசக்குறிகள் அனைத்தையும் கொண்டவனும், பேராற்றல் படைத்தவனுமான யது படிப்படியாக வளரத் தொடங்கினான்.(45,46) அவனே {யதுவே} பூமியைச் செழிப்புடன் ஆண்டு வந்த உயரான்ம ஹரியஷ்வனின் ஒரே மகனாவான்.(47) ஹரியஷ்வன், தன் நாட்டை எந்தக் குறையுமின்றிப் பத்தாயிரம் ஆண்டுகள் பக்தியுடன் ஆண்டு, பூமியில் இருந்து மறைந்து, தேவர்களின் நகரை அடைந்தான்.(48) அதன்பிறகு குடிமக்கள் வீரமிக்க யதுவை அந்த நாட்டில் நிறுவினார்கள் {நாட்டின் அரியணையில் நிறுவினார்கள்}. இந்திரனைப் போன்ற அழகனான (எவனிடம் யாதவர்கள் பிறந்தனரோ அந்த) யது, தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு, சூரியனைப் போல எழுந்து பூமியை ஆட்சி செய்தான். (அவனுடைய ஆட்சிக்காலத்தில்) கள்வர்களிடம் கொண்ட அச்சம் {குடிமக்களிடம்} அகன்றது.(49,50)
ஒரு காலத்தில், விண்மீன்களால் (சூழப்பட்ட) சந்திரனைப் போல, நற்குணங்கள் நிறைந்த தன் மனைவியருடன் நீரில் விளையாடிக் கொண்டிருந்த மன்னன் {யது}, பெருங்கடலின் நீரில் நீந்தத் தொடங்கிய போது, பாம்புகளின் பலம்வாய்ந்த மன்னனான தூம்ரவர்ணனால் திடீரெனத் தாக்கப்பட்டான்.(51,52) அவன், வைரங்களாலான தூண்களையும், கதவுகளையும் கொண்டதும், முத்துக்கள், வெண்சங்குகளின் குவியலாலும், பல்வேறு ரத்தினத் திரள்களாலும், பவளங்களாலும், இலைகளால் மறைக்கப்பட்ட மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான பாம்புகளின் மன்னனின் நகரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டான். அது கடலின் வயிற்றுக்குள் வாழும் முன்னணி பாம்புகளால் நிறைந்திருந்தது, அதன் நடுவில் பொன், அல்லது சந்திரனைப் போன்ற ஒளியுடன் கூடிய கோவில்கள் இருந்தன.(53-55) மன்னர்களின் தலைவனான அவன் {யது}, கடலின் தெளிந்த நீரில், பூமியின் பரப்பில் உள்ளதைப் போலவே கட்டப்பட்டிருந்த பாம்புத் தலைவனின் நகரத்தைக் கண்டான்.(56) மன்னன் யது, பெண் பாம்புகளால் நிறைந்திருந்த அடியற்ற நீர்ப்பரப்புக்குள் இதயம் தெளிந்தவனாக நுழைந்தான்.(57) ரத்தினங்களாலானதும், தாமரை இலைகள் பரப்பப்பட்டதும், தாமரை நூல்களால் கட்டப்பட்டதுமான மிகச் சிறந்த நீர் இருக்கை அவனுக்கு அளிக்கப்பட்டது.(58)
அந்தச் சிறந்த இருக்கையில் மன்னன் யது அமர்ந்த போது, பன்னகர்களின் மன்னனான தூம்ரவர்ணன் மதிப்புடன் வந்து,(59) "ஓ! யதுக்களில் முதன்மையானவனே, உன் தந்தை {ஹரியஷ்வன்}, இந்தப் பெருங்குலத்தைப் பூமியில் நிறுவி, பெருஞ்சக்திவாய்ந்த அரசனான உன்னைப் பெற்றுச் சொர்க்கத்திற்குச் சென்று விட்டான்.(60) ஓ! குழந்தாய், (உலகின்) நன்மைக்காக உன் தந்தையால் நிறுவப்பட்ட மன்னர்களின் சுரங்கமாகவே இருக்கும் இந்தக் குலம் உன் பெயரால் யாதவக் குலம் என்று அறியப்படும்.(61) ஓ! தலைவா, உன்னுடைய குலத்தில் தேவர்களும், ரிஷிகளும், பெரும் உரகர்களின் அழிவற்ற மகன்களும் மனிதர்களாகப் பிறப்பார்கள்.(62) எனவே, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, உன் கடமைகளைப் பின்பற்றிக் கொண்டும், குடிமுதல்வனுக்குரிய பணிகளைச் செய்து கொண்டும், யுவனாஷ்வனின்[5] தங்கையிடம் நான் பெற்ற மகள்களான இந்தக் கன்னிகையர் ஐவரையும் நீ ஏற்பாயாக. நீ வரம்பெறத் தகுந்தவன், நான் உனக்கு ஒரு வரத்தை அளிப்பேன்.(63,64) உன் குலத்தில் பிறக்கப் போகிறவர்கள், பௌமன் {பைமன்}, சாத்வதன் {குகுரர்}[6], போஜன், அந்தகன், யாதவன், தாசார்ஹன், விருஷ்ணி என்ற ஏழு (குலங்களின்) பெயர்களில் கொண்டாடப்படுவார்கள்" என்றான் {தூம்ரவர்ணன்}.(65)
[5] சூரிய குலத்தில் இக்ஷ்வாகுவில் இருந்து ஏழாம் தலைமுறையைச் சார்ந்த ஒருவன் யுவனாஷ்வன் என்ற பெயரில் ஹரிவம்ச பர்வம் 11ம் பகுதியில் குறிப்பிடப்படுகிறான். இவன் அவனாக இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவே.
[6] மற்ற இரண்டு பதிப்புகளிலும் குகுரர்கள் என்றே இருக்கிறது.
பன்னகர்களில் முதன்மையானனும், மகளுக்கான நோன்பை {கன்யா விரதம்} நோற்றுக் கொண்டிருந்தவனுமான தூம்ரவர்ணன், இதைச் சொல்லிவிட்டுக் கைகளில் {புனித} நீருடன் தன் மகள்களை அவனுக்கு மகிழ்ச்சியாகக் கொடுத்தான். அதன் பிறகு அவன், யதுவுக்குப் பின்வரும் வரத்தை மகிழ்ச்சியுடன் அளித்தான். (66,67) {தூம்ரவர்ணன்}, "ஓ! கௌரவங்களை அளிப்பவனே, பெற்றோருக்கு நிகரான சக்தியுடன் கூடிய ஐந்து மகன்களை என்னுடைய ஐந்து மகள்களும் பெற்றெடுப்பார்கள்.(68) உன் குலத்தில் பிறந்த மன்னர்கள் அனைவரும், என் வரத்தின் சக்தியால், விரும்பிய வடிவங்களை ஏற்க வல்லவர்களாகவும், நீரில் திரிய வல்லவர்களாகவும் இருப்பார்கள்" என்றான் {என்று வரமளித்தான் தூம்ரவர்ணன்}.(69)
இவ்வாறு வரத்தையும், ஐந்து கன்னிகைகளையும் பெற்றுக் கொண்ட மன்னன் யது, நீரில் இருந்து எழும் சந்திரனைப் போல விரைவில் எழுந்தான்.(70) தெய்வீக மலர்மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தவனும், திருமண உடையுடன் இருந்தவனுமான மன்னன் {யது}, ஐந்து விண்மீன்களுக்கு மத்தியில் உள்ள சந்திரனைப் போல, ஐந்து பெண்களால் சூழப்பட்டவனாகப் பாம்புகளின் அந்தப்புரம் முழுவதும் சென்றான்.(71,72) அந்த மன்னன் {யது}, நெருப்புகளைப் போன்ற தன் மனைவியர் ஐவரையும் தேற்றி, மகிழ்ச்சியால் நிறைந்தவனாகத் தன் நகரத்திற்குத் திரும்பிச் சென்றான்" {என்றான் விகத்ரு} என்றார் {வைசம்பாயனர்}.(73)
விஷ்ணு பர்வம் பகுதி – 93 – 037ல் உள்ள சுலோகங்கள் : 73
விஷ்ணு பர்வம் பகுதி – 93 – 037ல் உள்ள சுலோகங்கள் : 73
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |