(ஜராஸந்தேன மதுரோபரோதம்)
Jarasandha prepares to attack Madhura | Vishnu-Parva-Chapter-89-034 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கம்ஸனின் மாமனாரான ஜராசந்தன் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து மதுராவை முற்றுகையிட்டது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணன், ரோஹிணியின் மகனுடன் {பலராமனுடன்} சேர்ந்து யாதவர்களால் நிறைந்திருக்கும் மதுரா நகரில் சில நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்தான்.(1) இளமை அழகுடனும், அரச செழிப்புடனும் அவனது மேனி படிப்படியாக மிளிர்ந்தது, காடுகளால் அலங்கரிக்கப்பட்ட மதுரா எங்கும் அவன் திரியத் தொடங்கினான்.(2) இவ்வகையில் சில நாட்கள் கடந்ததும், ராஜகிருஹத்தின் மன்னனான ஜராசந்தன், தன் மகள்கள் இருவரின் மூலம் கம்ஸனின் மரணத்தைக் கேள்விப்பட்டான்.(3) பலம்வாய்ந்த ஜராசந்தன் இதைக் கேட்டதும் பெரும் கோபமடைந்தான். பலம்வாய்ந்தவனான ஜராசந்தன், கம்ஸனுக்குத் தான் பட்ட கடனை அடைக்கும் வகையிலும், யதுக்கள் அனைவரையும் கொல்லும் வகையிலும், ஆறு பிரிவுகளுடன்[1] கூடிய தன் படையுடன் உடனே புறப்பட்டான்.(4,5)
[1] சித்திர சாலை பதிப்பில் ஆறு பிரிவுகள் என்பதன் அருகில் அடைப்புக்குறிக்குள், "யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை, உணவுப்பிரிவு, வணிகப்பிரிவு ஆகியன" என்றிருக்கிறது.
ஓ! மன்னா, அந்த மகத மன்னனுக்கு {ஜராசந்தனுக்கு} அழகும், இளமையும் நிறைந்தவர்களும், அஸ்தி, பிராப்தி என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான மகள்கள் இருவர் இருந்தனர். {அவர்கள் மெல்லிடையையும், பருத்த முலைகளையும் கொண்டவர்களாக இருந்தனர்}[2] பிருஹத்ரதனுடைய அரச மகன் {ஜராசந்தன்} அவர்களைக் கம்ஸனுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.(5,6) அவன் {கம்ஸன்}, ஆஹுகன் மகனான தன் தந்தையைச் சங்கிலியில் பிணைத்துவிட்டு அவர்களின் {தன் மனைவியரின்} துணையில் இன்புற்றிருந்தான். சூரசேனத்தின் தலைவன் {கம்ஸன்}, ஜராந்தனை (ஜராசந்தனின் உதவியைச்} சார்ந்தவனாகவும், யாதவர்களை அடிக்கடி அவமதிப்பவனாகவும் இருந்து எவ்வாறு மன்னன் ஆனான் என்பதை நீ பலமுறை கேட்டிருக்கிறாய்.(7) வஸுதேவன், தன் உற்றார் உறவினரின் மூலம் தன் கடமைகளில் நிறைவடையவும், அவர்களின் {உற்றார் உறவினரின்} நோக்கங்களை நிறைவேற்றவும் எப்போதும் கவனமாக உக்ரஸேனனுக்கு நன்மை செய்வதில் ஈடுபட்டான். கம்ஸன் அவனையும் விட்டானில்லை.(8) தீய ஆன்மா கொண்ட கம்ஸன், ராமனாலும், கிருஷ்ணனாலும் கொல்லப்பட்டபோது, போஜர்களாலும், விருஷ்ணிகளாலும், அந்தகர்களாலும் சூழப்பட்ட உக்ரஸேனன் மன்னனானான்.(9)
[2] அடைப்புக்குறிக்குள் இருக்கும் குறிப்பு சித்திரசாலை பதிப்பிலும், பிபேக்திப்ராய், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்கார் ஆகியோர் பதிப்புகளிலும் இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் விடுபட்டிருந்தது.
அந்த வீரனின் {கம்ஸனின்} மனைவியரான அஸ்தியும், பிராப்தியும் மன்னன் ஜராசந்தனின் அன்புக்குரிய மகள்களாவர். எனவே மகதத்தின் மன்னனான அவன் {ஜராசந்தன்}, அவர்களின் தூண்டுதலின் பேரில் கோபத்தில் நெருப்பாக எரிந்து, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு மதுராவுக்குப் புறப்பட்டான்.(10) ஜராசந்தனின் ஆற்றலால் வீழ்த்தப்பட்டவர்களும், அடக்கப்பட்டவர்களும், பெருஞ்சக்திவாய்ந்த போர்வீரர்களுமான மன்னர்கள் அனைவரும், நண்பர்கள், உற்றார் உறவினர்கள், கூட்டாளிகள் அனைவரும் ஜராசந்தனை நிறைவடையச் செய்யும் நோக்கில் தங்கள் படைகள் சூழ அவனை {ஜராசந்தனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.
காரூஷ மன்னன் தந்தவக்தரன், பலம்வாய்ந்தவனான சேதி மன்னன் {சிசுபாலனின் தந்தை தமகோஷன்},[3](11-13) கலிங்க மன்னன், பலம்வாய்ந்தவர்களில் முதன்மையானவனான பௌண்ட்ரன், ஸாங்க்ருதி, கேசிகத்தின் மன்னன் {கேசிகன்}, மன்னன் பீஷ்மகன்,(14) அவனது {பீஷ்மகனின்} மகனும், வாசுதேவனையும், அர்ஜுனனையும் எப்போதும் போருக்கு அறைகூவியழைப்பவனும், வில்லாளிகளில் முதன்மையானவனுமான ருக்மி,(15) வேணுதாரி, சுருதர்வா, கிராதன், அம்சுமான், அங்கத்தையும், வங்கத்தையும் சேர்ந்த பலம்வாய்ந்த மன்னர்கள்,(16) கோசலத்தையும், காசியையும், தசார்ணத்தையும் சேர்ந்த மன்னர்கள், சும்ஹத்தின் பலம்வாய்ந்த மன்னன் {சுகேஷ்வரன்}, விதேகத்தின் தலைவன்,(17) மத்ரத்தின் பலம்வாய்ந்த மன்னன் {சல்லியன்}, திரிகர்த்தத்தின் தலைவன், ஆற்றலுடன் கூடியவனான சால்வ மன்னன், பெரும்பலம் வாய்ந்தவனான தரதன்,(18) யவனர்களின் தலைவனும், ஆற்றல்மிக்கவனுமான பகதத்தன், ஸௌவீர மன்னனான சைப்யன், பலவான்களில் முதன்மையான பாண்டியன்,(19) காந்தார மன்னனான ஸுபலன், மஹாபலன், நக்னஜித், காஷ்மீர மன்னன் கோனர்த்தன், தரத மன்னன், பெரும்பலம்வாய்ந்த துரியோதன், திருதராஷ்டிரனின் பிற மகன்கள் உள்ளிட்ட இவர்களும்,(20) பெரும் பலம் வாய்ந்த பிற மன்னர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும் ஜனார்த்தனனிடம் கொண்ட பொறாமையின் பேரில் ஜராசந்தனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(22)
[3] விஷ்ணு பர்வம் 45:2ல் ஜராசந்தனுடன் வந்த சேதி மன்னனின் பெயர் தமகோஷன் {சிசுபாலனின் தந்தை} என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது அவர்கள் ஏராளமான தானியங்களும், வைக்கோலும் நிறைந்த சூரசேன மாகாணத்தில் நுழைந்து, தங்கள் தங்களுக்குரிய படைகளை அங்கே நிறுத்திக் கொண்டு மதுரா நகரை முற்றுகையிட்டனர்" என்றார் {வைசம்பாயனர்}.(22)
விஷ்ணு பர்வம் பகுதி – 89 – 034ல் உள்ள சுலோகங்கள் : 22
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |