Friday 24 July 2020

ஜராசந்தனின் படை | விஷ்ணு பர்வம் பகுதி – 90 – 035

(யாதவமாகதயுத்தம்)

Jarasandha's army| Vishnu-Parva-Chapter-90-035 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  ஜராசந்தனின் படை அணிவகுப்பும்; அதைத் தொடர்ந்த போரும்...

The siege of Mathura by Jarasandha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஜனார்த்தனன் தலைமையிலான யாதவர்கள் அனைவரும் தங்களுக்குள் ஆலோசித்து, மதுராவின் தோட்டங்களில் {காடுகளில்} அமைந்து வரும் மன்னர்களின் முகாம்களை ஆய்வு செய்தனர்.(1) அதன் பிறகு, கிருஷ்ணன் மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் ராமனிடம் {பலராமனிடம்}, "மன்னன் ஜராசந்தன் நம்மை நெருங்கிவிட்டதால் உண்மையில் தேவர்களின் நோக்கம் விரைவில் நிறைவேறப் போகிறது. காற்றைப் போல வீசிக் கொண்டிருக்கும் தேர்க்கொடிகள் காணப்படுகின்றன.(2,3) ஓ! ஐயா, அதோ வெற்றியை விரும்பும் மன்னர்களின் குடைகள் சந்திரனைப் போல வெண்மையாக ஒளிர்வதைப் பாரும்.(4) ஓ! ஐயா, மன்னர்களின் தேர்களில் அமைந்திருக்கும் வெண்குடைகளின் வரிசைகள் வானில் உலாவும் அன்னப்பறவைகளைப் போல நம்மை நோக்கி நகர்கின்றன.(5) மன்னன் ஜராசந்தன் உரிய நேரத்தில் இங்கே வந்திருக்கிறான். இவனே போரில் நமது முதல் விருந்தினனும், நம் பலத்தையும், பலவீனத்தையும் சோதிக்கும் உரைகல்லும் ஆவான்.(6) ஓ! ஐயா, பேரரசன் இங்கே வந்திருக்கையில் {ஒற்றுமையுடன்} போரை நாம் தொடங்குவோம். பகைவனுடைய படையின் பலத்தை இப்போது மதிப்பிடுவீராக" என்றான் {கிருஷ்ணன்}.(7) எவ்விதக் கவலையுமின்றி இந்தச் சொற்களைச் சொன்ன கிருஷ்ணன், ஜராசந்தனைக் கொல்லவும், அவனோடு போரிடவும் விரும்பியவனாக அவனது படையை ஆய்வு செய்யத் தொடங்கினான்.(8)

மந்திரங்களை அறிந்த யதுக்களில் முதன்மையானவனும், அழிவற்றவனுமான கிருஷ்ணன், அங்கே கூடியிருந்த மன்னர்களையும், படைகளையும் ஆய்வு செய்தவாறு தனக்குள்ளேயே சிந்திக்கத் தொடங்கினான்.(9) {அவன் தனக்குள்ளேயே}, "மனிதர்களின் வழிகளில் நடப்பவர்களும், சாத்திரங்கள் சுட்டுவதைப் போலத் தங்கள் செயல்களின் காரணமாக மரணத்தை அடையப் போகிறவர்களுமான மன்னர்களே இங்கே கூடியிருக்கிறார்கள்.(10) முன்னணி மன்னர்களான இவர்கள், மரணத்தின் விளிம்பில் இருப்பவர்கள் என்றும், வேள்வி விலங்குகளைப் போலக் காலனால் நீர் தெளிக்கப்பட்டவர்கள் என்றும் நான் கருதுகிறேன். அவர்கள் தேவலோகத்திற்குச் செல்லப் போகிறவர்கள் என்பதைப் போல அவர்களின் உடல்கள் அனைத்தும் ஒளிர்கின்றன.(11) பலம் வாய்ந்த அரசுகளால் மறைக்கப்பட்ட பிருத்வியானவள் (பூமியானவள்) இந்த அரசுகளின் படைகளால் தாக்கப்பட்டும், இவர்களின் சுமையால் களைப்படைந்தும், தேவலோகத்தில் பிரம்மனிடம் சென்றாள். விரைவில் பூமியின் பரப்பானது மனிதர்களற்றதாகப் போகிறது.(12,13) நூற்றுக்கணக்கான மன்னர்கள் கொல்லப்படுவார்கள்" {என்று நினைத்துக் கொண்டான் கிருஷ்ணன்}"[1].

[1] "பண்டார்க்கர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், பூனா (1969) வெளியிட்டதும், திரு.பி.எல்.வைத்யாவால் செம்பதிப்பாகத் தொகுக்கப்பட்டதுமான ஹரிவம்சம், தொகுதி 1 பக்கம் 513ல் பின் வரும் அடிக்குறிப்பு உள்ளது, 'அற்புதம் நிறைந்த செயல்களைச் செய்யக்கூடிய கிருஷ்ணன் இவ்வகையில் சிந்தித்தான்' என்றிருக்கிறது" எனச் சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

வைசம்பாயனர், "பெருஞ்சக்திவாய்ந்தவனும், பிரகாசமிக்கவனும், விடாமுயற்சியுடன் கூடியவனும், குடிமுதல்வனுமான ஜராசந்தன், அழகிய இருக்கைகளைக் கொண்டவையும், பலம்வாய்ந்த குதிரைகளால் இழுக்கப்படுபவையும், எங்கும் தடையின்றிச் செல்லக்கூடியவையுமான தேர்களுடனும், பளபளக்கும் மணிகளையும், தங்க இருக்கைகளையும் கொண்டவையும், போர்க்கலையை நன்கறிந்த தேர்வீரர்களுடன் கூடியவையும், நுண்ணறிவுமிக்கச் சாரதிகளால் {மாவுத்தர்களால்} செலுத்தப்படுபவையுமான மேகம் போன்ற யானைகளுடனும், குதிரைவீரர்களால் செலுத்தப்படுபவையும், மேகங்களுக்கு ஒப்பானவையும், குதித்துப் பாய்பவையுமான குதிரைகளுடனும், வாள்களும், கவசங்களும் தரித்தவர்களும், பாம்புகளைப் போல வானில் குதிக்கக்கூடியவர்களும், பயங்கரர்களுமான எண்ணற்ற காலாட்படை வீரர்களுடனும் கூடிய கடல் போன்ற நால் வகைப் படைகள் சூழ {ஜராசந்தன்} அங்கே வந்தான்.(14-19) எண்ணற்ற மன்னர்கள் அவனைக் கவனமாகப் பின்தொடர்ந்து வந்தனர். நகரத்தின் திக்குகள் அனைத்திலும், அதன் காடுகள் அனைத்திலும், மேக முழக்கங்களுக்கு ஒப்பான தேர்களின் சடசடப்பொலியும், மதங்கொண்ட யானைகள் சூடியிருந்த ஆபரணங்களின் கிங்கிணி ஒலியும், குதிரைகளின் கனைப்பொலியும், காலாட்படையினரின் சிங்க முழக்கங்களும் எதிரொலித்துக் கொண்டிருந்தபோது பேரரசன் ஜராசந்தனின் படையானது கடல் போலத் தெரிந்தது[2]. முழங்கிக் கொண்டும், தோள்களைத் தட்டிக் கொண்டும் இருந்த செருக்குமிக்கப் போர்வீரர்களுடன் கூடிய அந்த மன்னர்களின் படைகள், மேகக்கூட்டங்களைப் போலத் தோன்றின. தேர்களையும், மதங்கொண்ட யானைகளையும், வேகமாகச் செல்லும் குதிரைகளையும், வானுலாவிகளுக்கு ஒப்பான காலாட்படை வீரர்களையும் கொண்ட அந்தப் படையானது, மழைக்காலங்களில் கடலில் இறங்கும் மேகத் திரள்களைப் போலத் தெரிந்தது.(20-24)

[2] "பண்டார்க்கர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், பூனா (1969) வெளியிட்டதும், திரு.பி.எல்.வைத்யாவால் செம்பதிப்பாகத் தொகுக்கப்பட்டதுமான ஹரிவம்சம், தொகுதி 1 பக்கம் 514ல் பின் வரும் அடிக்குறிப்பு உள்ளது, 'அந்த மன்னன் {ஜராசந்தன்} இருபத்தொரு அக்ஷௌஹிணிகளின் துணையுடன் இருந்தான்' என்றிருக்கிறது" எனச் சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

அதன்பிறகு, ஜராசந்தன் தலைமையிலான மன்னர்கள் அனைவரும் தங்கள் படைகளுடன் சேர்ந்து மதுரா நகரைச் சுற்றி முகாம் அமைத்தனர்.(25) கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த படைப் பிரிவுகள், வளர்பிறையில் பொங்கும் கடலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தன.(26) அந்த இரவு கழிந்ததும், போரிட விரும்பிய மன்னர்கள், நகருக்குள் நுழைவதற்காக எழுந்தனர்.(27) யமுனைக் கரையில் கூடியிருந்த அந்த மன்னர்கள், ஆவலின் காரணமாகப் போரின் தொடக்கத்தில் உரிய ஆலோசனைகளைச் செய்தனர்.(28) அப்போது, அண்ட அழிவின் போது கரைபுரளும் கடலுக்கு ஒப்பாக மன்னர்களின் பேரமளி கேட்டது.(29) தலைகளில் தலைக்கவசங்களுடனும், கையில் பிரம்புகளுடனும் கூடிய முதிய காவலர்கள் மன்னனுடைய ஆணையின் பேரில் "மா (அஃதாவது, ஒலியெழுப்பாதீர்)" என்று கூச்சலிட்டபடியே திரியத் தொடங்கினர்.(30) அதன்பேரில் அமைதியடைந்த அந்தப் படையானது, மீன்களும், பெரும்பாம்புகளும் நிறைந்த ஒரு கடலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(31)

மன்னனின் ஆணையை அறிவித்ததும், பெருங்கடலைப் போன்ற அந்தப் படை ஒரு யோகியைப் போல அசைவற்றதாக அமைதியடைந்தபோது, மன்னன் ஜராசந்தன் பிருஹஸ்பதியைப் போலப் பேசினான்.(32) {அவன்}, "மன்னர்களின் கூட்டுப்படையினர் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் இந்த நகரத்தை முற்றுகையிடட்டும்.(33) கல்லாயுதங்களையும் {கல் வீசும் பொறிகள்}, கதாயுதங்களையும் அவர்கள் ஆயத்தம் செய்யட்டும், சமவெளிகள் எங்கும் நீர் நிறையட்டும். அவர்கள் வாள்களையும், குத்துவாள்களையும் ஏந்தட்டும்.(34) அவர்கள் டங்கங்களையும் {மண்வெட்டிகளையும்}, கனித்ரங்களையும் {கடப்பாரைகளையும்} கொண்டு நகரத்தை {நகரத்தின் மதில்களைப்} பிளக்கட்டும். போர் வழிமுறைகளில் நிபுணர்களான மன்னர்கள் நகரை நெருங்கட்டும்.(35) வஸுதேவனின் மகன்களும், இடையர் வேடம் பூண்டவர்களுமான கிருஷ்ணன், ஸங்கர்ஷணன் என்ற இருவரையும் கூரிய கணைகளால் போரில் நான் கொல்லாதவரையில், கணைகளால் வானம் மறையாதவரையில் நகர முற்றுகை தொடரட்டும்.(36,37) மன்னர்கள் அனைவரும் என் கட்டளையை ஏற்று, புறநகரில் காத்திருந்து, வாய்ப்பேற்பட்ட உடனேயே நகருக்குள் நுழையட்டும்.(38)

மத்ர மன்னன், கலிங்க மன்னன், சேகிதானன், பாஹ்லிக மன்னன், காஷ்மீர மன்னனான கோநந்தன், கரூஷ மன்னன்,(39) கிம்புருஷ நாட்டின் திருமன் {கிம்புருஷன்}, மலைப்பகுதியின் தானவர்கள் {பர்வதீயன், அனாமயன்} ஆகியோர் வேகமாக ஒன்று சேர்ந்து, நகரத்தின் மேற்கு வாயிலைப் பாதுகாக்கட்டும்.(40) பூரு குலத்தின் வேணுதாரி {பௌரவன், வேணுதாரி}, விதர்ப்ப மன்னன் சௌனகன் {வைதர்ப்பன், ஸோமகன்}, போஜர்களின் மன்னன் ருக்மி, மாலவ மன்னன் சூர்யாக்ஷன்,(41) பாஞ்சாலர்களின் மன்னனான பெரும்பலம்வாய்ந்த துருபதன்[3], அவந்தியின் விந்த அனுவிந்தர்கள், பலம்வாய்ந்தவனான தந்தவக்தரன், சாகலி, புருமித்ரன், பேரரசன் விராடன்,(42) கௌசம்பி மன்னன், மாலவன், சததந்வா, விதூரதன், பூரிஸ்ரவன், த்ரிகர்த்த மன்னன், பாங்கன் {பாணன்}, பஞ்சநதன்(43) ஆகிய சிறப்புமிக்கவர்களும், வஜ்ரம் போன்று பலம்வாய்ந்தவர்களும், இப்போது கோட்டையைத் தாக்கவல்லவர்களுமான இவர்கள் யாவரும், வடக்கு வாயிலை அடைந்து நகரத்தைத் தாக்கட்டும்.(44)

[3] மன்மதநாததத்தரின் பதிப்பைத் தவிர வேறு எந்தப் பதிப்பிலும் துருபதனின் பெயர் சொல்லப்படவில்லை.

அம்ஸுமானின் மகனான வீரன் கைதவேயன் {கைதவன்}, உலூகன், ஏகலவ்யன், பிருஹத்க்ஷத்ரன், க்ஷத்ரதர்மா, ஜயத்ரதன்,(45) உத்தமௌஜஸ், சல்லியன், கௌரவர்கள், கேகயர்கள், வைதிசத்தின் மன்னன் வாமதேவன் {வைதிசன், வாமதேவன்}, ஸாங்க்ருதி, ஸினியின் மன்னன்(46) ஆகியோர் நகரின் கிழக்கு வாயிலை அடையட்டும். அவர்கள் மேகங்களை விலக்கும் காற்றைப் போல அனைத்தையும் அழிக்கட்டும்.(47)

நானும், தரதனும், சேதியின் பலம்வாய்ந்த மன்னனும் {சிசுபாலனின் தந்தை தமகோஷன்} எங்கள் படைகளுடன் தெற்கு வாயிலைப் பாதுகாக்கப் போகிறோம்.(48) இவ்வாறு அனைத்துப் பக்கங்களிலும் இந்தப் படைகளால் முற்றுகையிடப்படும் இந்த நகரம் தன் மேல் இடி விழுந்ததைப் போலப் பேரச்சம் கொள்ளட்டும்.(49) கதாதாரிகள் கதாயுதங்களுடனும், பரிகாதாரிகள் பரிகங்களுடனும், படையின் பிற வீரர்கள் வேறு பல்வேறு ஆயுதங்களுடனும் இந்நகரைப் பிளக்கட்டும்.(50) ஓ! மன்னர்களே, மலைகளையும், மடுக்களையும் கொண்ட இந்த நகரம் உங்களால் இன்று தரைமட்டமாகட்டும்" என்றான் {ஜராசந்தன்}[4].(51)

[4] "பண்டார்க்கர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், பூனா (1969) வெளியிட்டதும், திரு.பி.எல்.வைத்யாவால் செம்பதிப்பாகத் தொகுக்கப்பட்டதுமான ஹரிவம்சம், தொகுதி 1 பக்கம் 514ல் பின் வரும் அடிக்குறிப்பு உள்ளது, 'சக்ரனுக்கு (இந்திரனுக்கு) இணையான வீரம் கொண்டவனான ஜராசந்தன் இதைச் சொன்னான்' என்றிருக்கிறது" எனச் சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

இவ்வாறு தன் நால்வகைப் படைகளையும் அணிவகுத்த மன்னன் ஜராசந்தன், பிற மன்னர்களுடன் சேர்ந்து கோபத்துடன் யாதவர்களை நோக்கிச் சென்றான்.(52) நுண்ணறிவுமிக்கவர்களும், ஆயுதங்களை நன்கு தரித்தவர்களுமான தசார்ஹ போர்வீரர்களும் அவர்களை எதிர்த்தனர். இவ்வாறே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரைப் போல மன்னர்களின் பெரும்படைக்கும், குறைந்த எண்ணிக்கையிலான யாதவர்களுக்கும் இடையில் தேர்களும், யானைகளும் நிறைந்த அந்தப் பயங்கரப் போர் தொடங்கியது.(53) அந்த நேரத்தில் நகரத்தை விட்டு வெளியே வரும் வஸுதேவனின் மகன்கள் இருவரையும் கண்ட மன்னர்களின் படைகள் இதயம் சோர்ந்தன, விலங்குகள் அஞ்சிக் கலக்கமடைந்தன.(54) யதுவின் வழித்தோன்றல்களான ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனுமான இருவரும் தங்கள் தங்கள் தேர்களில் அமர்ந்து கொண்டு கடலைக் கலங்கடிக்கும் இரு மகரங்களைப் போல அங்கே கோபத்துடன் திரியத் தொடங்கினர்.(55) அதன்பிறகு, உண்மையில் அவர்கள் போரிடத் தொடங்கிய போது, ஆயுதப் பயன்பாடு குறித்த அவர்களுடைய புராதன நுண்ணறிவு அவர்களுக்குள் எழுந்தது.(56)

அந்தப் போர்க்களத்திலும் வலிமையானவையும், சுடர்விடுபவையுமான பேராயுதங்கள் வானில் இருந்து இறங்கின.(57) அந்தப் பேராயுதங்கள், மன்னர்களின் தசைகளை உண்ணும் வகையில் தாகத்துடன் கூடியவை போல உடல் வடிவங்களை ஏற்றும், தெய்வீக மாலைகளாலும், நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டும், தன்னொளியால் எரிந்து கொண்டும், வானுலாவிகளை {பறவைகளை} அச்சுறுத்திக் கொண்டும் வானில் இருந்து பாய்ந்தன. அரச இறைச்சியை உண்ணும் விருப்பத்தில் ராட்சசர்களும் அவற்றைப் பின்தொடர்ந்து வந்தனர்.(58,59) கலப்பையான ஸம்வர்த்தகம் {ஸம்வத்ஸரம்}, உலக்கையான ஸௌநந்தம், விற்களில் முதன்மையான சாரங்கம், கதாயுதமான கௌமேதகீ எனும் விஷ்ணுவின் சக்திவாய்ந்த ஆயுதங்கள் நான்கும் அவ்விரு யாதவர்களின் பொருட்டுப் பெரும்போரில் இறங்கியபோது,(61) சாத்வதர்களில் முதன்மையானவனும், அழகனுமான ராமன் {பலராமன்}, தெய்வீக மாலைகளுடன் பளபளப்பதும், கொடிபோல் உயர்ந்ததும், பாம்பைப் போல வளைந்து செல்வதுமான கலப்பையை {ஸம்வர்த்தகத்தை} முதலில் தன் வலக்கையில் ஏந்தினான், {பிறகு} பகைவரிடம் மனச்சோர்வை ஏற்படுத்துவதும், உலக்கைகளில் சிறந்ததுமான ஸௌநந்தத்தை {தன் இடக்கையில்} ஏந்தினான்.(62,63) பலம்வாய்ந்தவனான கிருஷ்ணன், உலகங்கள் அனைத்தாலும் காணத்தகுந்ததும், கொண்டாடப்பட்டதுமான சாரங்க வில்லை எடுத்துக் கொண்டான்.(64) எவனுடைய பிறப்புக்கான அவசியத்தைத் தேவர்கள் அறிந்திருந்தார்களோ அந்தத் தாமரைக் கண்ணனான கிருஷ்ணனின் மறுகரத்தை கௌமேதகீ எனும் பெயரைக் கொண்ட கதாயுதம் அலங்கரித்தது.(65)

இவ்வாறு ஆயுதம் தரித்த வீரன் ராமனும் {பலராமனும்}, விஷ்ணுவுக்கு ஒப்பான கோவிந்தனும் {கிருஷ்ணனும்} போரில் பகைவரை ஒடுக்கினர்.(66) வஸுதேவனின் வீரமகன்களும், ஒருவரையொருவர் சார்ந்திருப்பவர்களும், அண்ணனும் தம்பியுமான அவ்விருவரும், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, பகைவரை வீழ்த்தி தேவர்கள் இருவரைப் போல அங்கே திரிந்து கொண்டிருந்தனர்.(67,68) பகைவருக்குக் காலனைப் போலப் போர்க்களத்தில் திரிந்த ராமன் {பலராமன்}, பாம்புகளின் மன்னனுக்கு ஒப்பான தன் கலப்பையைக் கோபத்தில் உயர்த்தி, க்ஷத்திரியப் போர்வீரர்களின் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும் இழுத்து வீசி தன் கோபத்தைத் தணித்துக் கொள்ளத் தொடங்கினான்.(69,70) மலை போன்ற யானைகளைத் தன் கலப்பையின் முனையால் தூக்கி வீசி தன் உலக்கையின் வீச்சுகளால் அவற்றைக் கடைவதைப் போல அந்தப் போர்க்களத்தில் திரியத் தொடங்கினான்.(71)

கிட்டத்தட்ட அழியும் நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னணி க்ஷத்திரியர்கள், க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனான ஜராசந்தனிடம் அச்சத்துடன் திரும்பிச் சென்ற போது, அவன் அவர்களிடம், "அச்சத்தால் போர்க்களத்தில் புறமுதுகிட்ட உங்கள் க்ஷத்திரிய ஒழுக்கத்திற்கு ஐயோ.(72,73) தேர்களை இழந்தவர்களும், போர்க்களத்தை விட்டுத் தப்பி ஓடுபவர்களும் குழந்தையைக் கொல்லும் பாவத்தைப் போன்ற கொடும்பாவத்தை இழைத்தவர்களெனக் கல்விமான்கள் சொல்கிறார்கள்.(74) ஓ! பீதியடைந்த க்ஷத்திரியர்களே, ஏன் ஓடுகிறீர்கள்? உங்கள் ஒழுக்கத்திற்கு ஐயோ. என் விற்களால் தூண்டப்பட்டு நீங்கள் விரைவில் திரும்புவீராக.(75) நீங்கள் போரிட வேண்டாம். பார்வையாளராகக் காத்திருப்பீராக. அந்த இடையர்கள் இருவரையும் நானே யமனுலகுக்கு அனுப்பப் போகிறேன்" என்றான் {ஜராசந்தன்}.(76)

இவ்வாறு ஜராசந்தனால் தூண்டப்பட்ட க்ஷத்திரியர்கள் மீண்டும் மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன் மீண்டும் அணிவகுத்தனர். அவர்கள் கணைகளாலான வலையைப் பரப்பி மீண்டும் போரில் ஈடுபட்டனர்.(77) கவசங்கள், நிஸ்திரிங்ஷங்கள், முக்கோணக் கொடிகள், வாள்கள், கொடிகள், நாண்பூட்டப்பட்ட விற்கள், அம்பறாத்தூணிகள் ஆகியவற்றுடனும், பொன்னாலான சேணங்களால் பளபளக்கும் குதிரைகளின் துணையுடனும், மேகமுழக்கம் போன்ற சடசடப்பொலியுடன் பின்தொடரும் தேர்களுடனும், மேகங்களுக்கு ஒப்பானவையும், மாவுத்தர்களால் செலுத்தப்படுபவையுமான யானைகளுடனும் அவர்கள் மீண்டும் போர்க்களத்திற்குப் புறப்பட்டனர்.(78,79) தலைக்கு மேல் உயர்த்தப்பட்ட குடைகளுடன் கூடியவர்களும், அழகிய சாமரங்களால் வீசப்பட்டவர்ளுமாகத் தேர்களில் இருந்த மன்னர்கள் போர்க்களத்தில் பேரொளியுடன் திகழ்ந்தனர்.(80) போர்வீரர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான சில மன்னர்கள் கனமான தங்கள் கதாயுதங்களுடனும், தண்டங்களுடனும் {உலக்கைகளுடனும்} போர்க்களத்தில் நுழைந்தனர்.(81)

அதே வேளையில், தேவர்களின் மகிழ்ச்சியை எப்போதும் அதிகரிப்பவனும், பலம்வாய்ந்தவனுமான கிருஷ்ணன், கருடச் சின்னம் பொறித்த முக்கோணக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட மிகச் சிறந்த தேரில் அமர்ந்து கொண்டு,(82) கவனமாக ஜராசந்தனை அணுகி, எட்டுக் கணைகளால் அவனையும் {ஜராசந்தனையும்}, ஐந்து கூரிய கணைகளால் அவனது தேரோட்டியையும் {தேரோட்டியைக் கொன்றான்},(83) பிற கணைகளால் அவனது குதிரைகளையும் துளைத்தான் {குதிரைகளையும் கொன்றான்}. வலிமைமிக்கத் தேர்வீரன் சித்திரசேனனும்,(84) படைத்தலைவன் கைசிகனுமாகிய அவ்விருவரும் ஆபத்தான இந்த அவல நிலையில் ஜராசந்தனைக் கண்டு கிருஷ்ணனின் கணைகளை அறுத்தனர். மேலும் கைசிகன் மூன்று கணைகளால் பலதேவனைத் துளைத்தான்.(85) வீரனான பலதேவன் தன்னுடைய பல்லத்தைக் கொண்டு அவனது வில்லை இரண்டு துண்டுகளாக அறுத்தான். பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கரங்களுடன் கூடிய அந்த வீரன்(86) கணைமழையை உடனே பொழிந்து பலரையும் தாக்கினான். இதனால் கோபமடைந்த சித்திரசேனன், ஒன்பது கணைகளால் அவனைத் தாக்கினான்.(87) அப்போது கைசிகன் ஐந்து கணைகளாலும், ஜராசந்தன் ஏழு கணைகளாலும் அவனைத் தாக்கினர். ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் மும்மூன்று நாராசங்களால் தாக்கினான்.(88)

பலம்வாய்ந்தவனான பலதேவன் பத்து கூரிய பல்லங்களால் சித்திரசேனனின் தேரைத் தாக்கினான். பலதேவன், தன் பல்லத்தைக் கொண்டு அவனது வில்லை இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(89) பலம்வாய்ந்தவனான சித்திரசேனன், தன் வில் முறிந்து, தேரையும் இழந்ததும், பெரும் கோபம் கொண்டவனாகவும், முசலாயுதனை {கலப்பை தரித்தவனை / பலராமனைக்} கொல்ல விரும்பியவனாகவும் {கதாயுதத்துடன்} அவனை நோக்கி விரைந்தான்.(90) சித்திரசேனனைக் கொல்வதற்காக நாராசங்களை ஏவிய ராமனின் {பலராமனின்} வில்லைப் பெருஞ்சக்திவாய்ந்தவனான ஜராசந்தன் அறுத்தான்.(91) கோபத்தில் இருந்த மகத மன்னன் {ஜராசந்தன்}, தன் கதாயுதத்தால் அவனது குதிரைகளையும் கொன்றான். பெருஞ்சக்திவாய்ந்தவனும், வீரனுமான ஜராசந்தன் இவ்வாறே ராமனை எதிர்த்தான்.(92) ராமன் தன் முசலத்தை {கலப்பையை} எடுத்துக் கொண்டு ஜராசந்தனைத் தொடர்ந்து சென்றான். அப்போது ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய அவ்விருவருக்குமிடையில் ஒரு போர் நேரிட்டது.(93)

மகதமன்னன் {ஜராசந்தன்}, ராமனுடன் {பலராமனுடன்} போரிடுவதைக் கண்ட சித்திரசேனன், (மற்றொரு) தேரில் ஏறி, பெரும் யானைப்படையுடனும், பிற போர்வீரர்களுடனும் சேர்ந்து ஜராசந்தனைச் சூழ்ந்து கொண்டான் {அவ்விருவருக்கிடையில் நடந்த போரில் இடையூறு செய்தான்}. அப்போது அந்த இரண்டு படைகளுக்கும் இடையில் பயங்கரப் போர் நடந்தது.(94,95) பெரும்படையால் சூழப்பட்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான ஜராசந்தன், ராமனையும், கிருஷ்ணனையும் முன்னிட்டுச் சென்ற யாதவர்களைத் தாக்கினான்.(96) அப்போது அவ்விரு படைகளில் இருந்தும், கலங்கிய கடலைப் போன்ற பேரமளி எழுந்தது.(97) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கே இரு படைகளில் இருந்தும் எண்ணற்ற எக்காளங்கள், சங்குகள், பேரிகைகள் ஆகியவற்றின் பேரொலி கேட்டது.(98) அனைத்துப் பக்கங்களிலும் படைவீரர்களின் முழக்கங்களும், தோள்தட்டும் ஒலிகளும் கேட்டன. (குதிரைகளின்) குளம்புகளாலும், (தேர்களின்) சக்கரங்களாலும் அங்கே புழுதிப் புயல் எழுந்தது.(99) விற்களையும், பல்வேறு ஆயுதங்களையும் தரித்து நின்ற வீரர்கள் ஒருவரையொருவர் கண்டு வீரமுழக்கம் செய்தனர்.(100) பெரும் பலம்வாய்ந்த ஆயிரக்கணக்கான தேர்வீரர்ளும், மாவுத்தர்களும் {யானைப் பாகர்களும்}, காலாட்படை வீரர்களும் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து அச்சமில்லாமல் போரில் ஈடுபட்டனர். ஜராசந்தன் படைக்கும், யாதவர்களின் படைக்குமிடையில் அங்கே ஒரு பயங்கரப் போர் நடந்தது.(101,102)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, சினி, ஆனாதிருஷ்டி, பப்ரு, விப்ருது, ஆஹுகன் ஆகியோர் பலதேவனைத் தங்கள் முன்னிறுத்திக் கொண்டும், தங்கள் படையில் பாதி அளவை அழைத்துக் கொண்டும்,(103) ஜராசந்தன், சேதிகளின் மன்னன் {தமகோஷன்}, பெருஞ்சக்திவாய்ந்த உதீச்யன், சல்லியன், சால்வன் ஆகியோராலும் பிற மன்னர்களாலும் பாதுகாக்கப்பட்ட பகைவனின் படையின் தென் பக்கத்தைத் தாக்கினார்கள். அவர்கள் தங்கள் உயிரைத துச்சமாக மதித்துக் கணைகளை ஏவத் தொடங்கினர்.(104,105) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அவகாஹன், பிருது, கங்கன், சத்தியும்னன், விதூரதன் ஆகியோர் கிருஷ்ணனின் தலைமையிலான பாதிப் படையுடன் சென்று,(106) பெருஞ்சக்திவாய்ந்த பீஷ்மகன், ருக்மி, தேவகன், மத்ர மன்னன் ஆகியோராலும், சக்தியும் ஆற்றலும் கொண்ட மேற்கத்திய, தெற்கத்திய மன்னர்களாலும் பாதுகாக்கப்பட்ட(107) படைப்பிரிவைத் தாக்கினார்கள். அவர்களும் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து சக்திகள், ரிஷ்டிகள், பராசங்கள், கணைகள் ஆகியவற்றை ஏவி ஒரு பயங்கரப் போரைத் தொடங்கினார்கள்.(108) அந்தப் போரில் சாத்யகி, சித்திரகன் {சத்யசித்ரகன்}[5], ஸ்யாமன், சக்திமிக்க யுயுதானன் {சாத்யகி}, ராஜாதிதேவன், மிருதுரன் ஆகியோராலும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான ஸ்வபல்கன்,(109) ஸத்ராஜித், பிரஸேனன் ஆகியோராலும் சூழப்பட்ட அந்தப் பெரும்படையானது பகைவருடைய படையின் இடது பகுதியைத் தாக்கியது. மிருதுரனால் தலைமை தாங்கப்பட்டவர்களும், வேணுதாரியின் தலைமையிலான பலம்வாய்ந்த மேற்கத்திய மன்னர்களின் துணையுடனும், திருதராஷ்டிர மகன்கள் துணையுடன் கூடியவர்களுமான பகைவருடைய படையில் பாதி அளவைத் தாக்கிப் போரிடத் தொடங்கினர்" என்றார் {வைசம்பாயனர்}.(110,111)

[5] இதே வரியில் பின்னால் வரும் யுயுதானன் என்பதும் சாத்யகியையே குறிப்பதால், இங்கே வரும் முதல் இரண்டு பெயரும் சேர்ந்து சத்யசித்ரகன் என்ற ஒருவனின் பெயராக இருக்க வேண்டும்.

விஷ்ணு பர்வம் பகுதி – 90 – 035ல் உள்ள சுலோகங்கள் : 111
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்