Tuesday, 21 July 2020

பெருங்கடலில் இருந்து தன் ஆசானின் மகனை மீட்ட கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 88 – 033

(ராமக்ருஷ்ணயோர்வித்யாஸம்பாதனம்)

Krishna brings back this preceptor's son from the ocean | Vishnu-Parva-Chapter-88-033 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  சாந்தீபனி முனியிடம் குருகுல வாசம் சென்ற பலராமனும், கிருஷ்ணனும்; குருவின் மரித்துப் போன மகனை மீட்டு குருதக்ஷிணை கொடுத்தது...

Sandipani muni Krishna and Balarama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வீரனும், பலமிக்கவனுமான கிருஷ்ணன், ரோஹிணியின் மகனுடன் {பலராமனுடன்} சேர்ந்து யாதவர்களால் நிறைந்திருக்கும் மதுரா நகரில் வாழத் தொடங்கினான்.(1) இளமை மிளிரும் அரச அழகில் அவனது உடல் படிப்படியாக ஒளிரத் தொடங்கியது, பெருங்கடலைப் போன்ற யமுனையால் அலங்கரிக்கப்பட்ட மதுரா நகரில் அவன் திரியத் தொடங்கினான்[1].(2)

[1] பாகவதத்தில், இந்த இடத்தில், கிருஷ்ணன் தன் பெற்றோரான தேவகியிடமும், வஸுதேவனிடமும் பேசி ஆறுதல் சொல்வதும், நந்தகோபனை மீண்டும் விரஜத்திற்கு {கோகுலத்துக்கு / பிருந்தாவனத்திற்கு} அனுப்புவதும், வஸுதேவன், ராமகிருஷ்ணர்களுக்கு உபநயனம் செய்து வைத்ததும், பிறகு கர்க்க முனிவரிடம் சென்று பிரம்மச்சரிய நோன்பை ஏற்றுக் கொண்டதும் சொல்லப்படுகிறது. அதன் பிறகே அவர்கள் சாந்தீபனி முனிவரிடம் கல்வி கற்கச் செல்வது விவரிக்கப்படுகிறது.

Sandipani Balarama and Krishna
சில நாட்கள் கழிந்ததும், வேத கல்வியாலும், நல்லொழுக்கத்தாலும் அலங்கரிக்கப்பட்ட ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனும், தனுர்வேதத்தை (போர் அறிவியலைக்) கற்கும் நோக்கில், காசி மாகாணத்தில், அவந்தி நகரில் உள்ள சாந்தீபனி என்ற ஆசானிடம் சென்று தங்கள் குடும்பத்தைக் குறித்து {கோத்ரத்தை} அவரிடம் சொன்னார்கள்[2].(3,4) அவர்கள் செருக்கற்றவர்களாகத் தொண்டு செய்யத் தொடங்கியதும், அவர் {சாந்தீபனி} ஜனார்த்தனனையும், ராமனையும் தமது சீடர்களாக ஏற்றுக் கொண்டு பயனுள்ள அறிவியலை அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.(5) வீரர்களான ராமனும், ஜனார்த்தனனும், தாங்கள் கேட்பனவற்றை உடனே கற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தனர்; எனவே அறுபத்துநான்கு பகலிரவுகளுக்குள் அவர்கள் வேதங்களையும், அவற்றின் அங்கங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ச்சியடைந்தனர்[3].(6) அதன்பிறகு உடனேயே அவர்களுடைய ஆசான் நான்கு பிரிவுகளைக்[4] கொண்ட தனுர்வேதத்தையும், பல்வேறு ஆயுதங்களைப் புதிரான வகையில் பயன்படுத்து வகைகளையும் அவர்களுக்குக் கற்பித்தார்.(7) அவர் {சாந்தீபனி}, அவர்களின் {ராமகிருஷ்ணர்களின்} மீமானிட குணங்களை நினைத்து, சந்திரனும், சூரியனும் என அவர்களைக் கருதினார்.(8) பர்வத்தில் அந்த உயரான்ம தேவர்களை அவர் துதித்தபோது, தம் முன் சிவனையும், விஷ்ணுவையும் கண்டார்.(9)

[2] சித்திரசாலை பதிப்பில், "சிலகாலம் கழித்து, பலராமனும் கேசவனும் (கிருஷ்ணனும்), அவந்தி நகரில் வசிக்கும் காசியின் சாந்தீபனி ஆசானிடம்" சென்றனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சிறிது காலம் கழித்து, ராமனும், கேசவனும், காசியின் ஆசானும், தற்போது அவந்தி நகரத்தில் வசித்து வந்தவருமான சாந்தீபனியிடம் சென்றனர்" என்றிருக்கிறது. அவந்தி என்பதன் அடிக்குறிப்பில், "தற்போதைய உஜ்ஜைன் நகரைக் குறிக்கிறது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "சிறிது காலம் கழிந்ததும், ராமகேசவர் இருவரும் சேர்ந்து தநிர் வேதம் கற்க, காசியில் பிறந்து அவந்தியில் வஸிக்கும் "சாந்தீபனி" யெனும் குருவை அடைந்து தம் கோத்ரத்தைத் தெரிவித்துக் கொண்டும்" என்றிருக்கிறது. எனவே காசியில் பிறந்து, அவந்தியில் வசிக்கும் சாந்தீபனி என்றே நாம் கொள்ள வேண்டும். கிருஷ்ணன் உஜ்ஜைன் நகரில் சாந்தீபனி முனிவரிடம் கல்வி பயின்றான் என்று சொல்லப்படுகிறது.

[3] "இந்து கல்வியின் ஒரு பிரிவாக இருக்கும் இத்தகைய அறிவியலை {அங்கங்களைப்} புரிந்து கொள்வது வேதங்களைச் சார்ந்தது என்று கருதப்படுவதால் இது வேதாங்கம் என்றழைக்கப்படுகிறது. ஆறு பாடங்களைக் குறித்த படைப்புகள் இந்த விளக்கத்தின் கீழ் வருகின்றன. அவை, உச்சரிப்பு, இலக்கணம், யாப்பு, தெளிவற்ற சொற்களின் விளக்கம், அறச்சடங்குகளின் விளக்கம், வானியல் ஆகியனவாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சிக்ஷை {உச்சரிப்பு முறை விளக்கம்}, வியாகரணம் {இலக்கணம்}, சந்தஸ் {யாப்பு / செய்யுள் இலக்கணம்}, நிருக்தம் {சொல் இலக்கணம்}, கல்பம் {செயல்முறை, வேள்வி விளக்கம், வேள்விச் சாலை அமைக்க வேண்டிய இடம் குறித்த கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கியது}, ஜோதிடம் {வானியல்} என்பன வேதாங்கங்கள் ஆகும். சித்திரசாலை பதிப்பில், "ஒரு முறை கேட்டாலே கற்கவல்ல அந்த வீரர்கள் (மாணவர்கள்) இருவரும் (தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட பாடங்களைப்) புரிந்து கொண்டனர். அவர்கள் அறுபத்து நான்கு பகலிரவுகளில் வேதங்களையும், அதன் அங்கங்களையும் கற்றுக் கொண்டனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "துணிச்சல்மிக்கவர்களான அவ்விருவரும் தாங்கள் கேட்ட அனைத்தையும் நினைவில் கொள்ளக்கூடியவர்களாக இருந்தனர். அறுபத்து நான்கு பகலிரவுகளில் அவர்கள் வேதங்கள் மற்றும் வேதாங்கங்கள் அனைத்தையும் கற்றனர்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமனுஜ ஐயங்காரின் பதிப்பில், "[வேதம் தவிர மற்ற] எல்லா [64] கலைகளை மட்டிலும் உபதேசித்தார். முன்னரே வேதம் பயின்ற அந்த இரண்டு வீரரும் முறைப்படி குருவைப் பணிந்தடைந்து அறுபத்து நான்கு நாட்களில் அங்கங்களுடன் கூடிய வேதத்தைப் பயின்றார்கள்" என்றிருக்கிறது.

[4] சித்திரசாலை பதிப்பில், "பிறகு அந்த ஆசிரியர் நேரத்தைக் கடத்தாமல் வில் அறிவியலின் (தீக்ஷை - தொடக்கம், சங்கிரகம் - புரிந்து கொள்ளுதல், சித்தி - நிறைவேற்றல், பிரயோகம் - பயன்பாடு ஆகியவற்றைக் கொண்ட) நான்கு பகுதிகளையும், பிற ஆயுதங்களின் பயன்பாட்டையும் அவர்களுக்குக் கற்பித்தார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்த ஆசான் குறுகிய காலத்திற்குள் போரில் ஆயுதங்களின் பயன்பாட்டையும், தனுர் வேதத்தின் நான்கு கூறுகளையும் அவர்களுக்குக் கற்பித்தார்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "நான்கு கூறுகள் என்பன பல்வேறு வழிகளில் விளக்கப்படுகின்றன. யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை மற்றும் காலாட்படை என்று விளக்கப்படுவது அவற்றில் ஒன்றாகும். அழைத்தல், பொருத்துதல், ஏவுதல், திரும்பப் பெறல் என்ற நான்கு செய்நுட்பங்கள் இவை என்பது பொருவாக ஏற்றுக்கொள்ளப்படும் விளக்கமாகும். இந்த விளக்கம் தெய்வீக ஆயுதங்களுக்கே பொருந்தும். தொடக்கம், புரிந்து கொள்ளல், நிறைவேற்றல், பயன்பாடு என்ற வரையறை அனைத்து ஆயுதப் பயன்பாடுகளுக்கும் உகந்ததாகும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "நான்கு பாதங்களோடு கூடிய தனுர் வேதத்தையும் எய்வதும், மீட்பதும், சேர்ந்த அஸ்த்ர வித்தையையும் [பூர்ணமாக] குறுகிய காலத்தில் குரு அவ்விருவரையும் பயிற்றுவித்தார்" என்றிருக்கிறது.

அதன்பிறகு, ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, தங்கள் கல்வியை நிறைவாகக் கற்ற பலதேவனும், கிருஷ்ணனும் தங்கள் ஆசானான சாந்தீபனியிடம், "எங்கள் ஆசானாகச் செயல்பட்ட உமக்கு நாங்கள் என்ன தர வேண்டும்?" என்று கேட்டனர்.(10)

அவர்களுடைய சக்தியை அறிந்த அந்த ஆசான் {சாந்தீபனி}, {தமது மனைவியுடன் கலந்தாலோசித்துவிட்டு}, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன், "உப்புநீர் கடலில் இறந்து போன என் மகனை நீங்கள் மீட்டுக் கொண்டு வர நான் விரும்புகிறேன்.(11) ஓ! கிருஷ்ணா, எனக்கு ஒரேயொரு மகன் இருந்தான். நான் பிரபாஸத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட போது திமி மீனொன்று {திமிங்கலம்} என் மகனைக் கொண்டு சென்றது. என்னுடைய மகனான அவனை நீ திரும்பக் கொண்டு வருவாயாக" என்றார் {சாந்தீபனி}.(12)

Samudra addresses Krishna and Balarama
ராமனுடைய ஏற்புடன் கிருஷ்ணன், "அவ்வாறே ஆகட்டும்" என்றான். பிறகு அந்த ஹரி {கிருஷ்ணன்}, பெருங்கடலுக்குச் சென்று அதன் நீருக்குள் நுழைந்தான்.(13) அப்போது கூப்பிய கரங்களுடன் வந்த கடலின் தேவனிடம் {ஸமுத்ரனிடம்} வாஸுதேவன் {கிருஷ்ணன்}, "சாந்தீபனியின் மகன் எங்கே?" என்று கேட்டான்.(14)

பெருங்கடலானவன் {ஸமுத்ரன்}, "ஓ! மாதவா, பஞ்சனன் என்ற பெயரையும், பேருடலையும் கொண்ட தைத்தியன் ஒருவன் திமிங்கல வடிவில் வந்து அந்தச் சிறுவனை விழுங்கிச்சென்றான்" என்றான்.(15)

அழிவற்ற புருஷனான அச்யுதன் (கிருஷ்ணன்) இதைக் கேட்டு, பஞ்சனனிடம் சென்று அவனைக் கொன்றான். ஆனால் அவனால் தன் ஆசானின் மகனைப் பெற முடியவில்லை.(16) பஞ்சனனைக் கொன்ற பிறகு ஜனார்த்தனன் அடைந்த சங்கானது, தேவர்களுக்கும், மனிதர்களுக்கு மத்தியில் பாஞ்சஜன்யம் என்று அறியப்படுகிறது[5].(17)

[5] இங்கே சொல்லப்படும் பஞ்சனன் என்ற அசுரன் சங்கின் வடிவில் வந்து சாந்தீபனியின் மகனை விழுங்கியதாகப் பாகவதத்தில் குறிப்பிடப்படுகிறது. இயல்பில் சங்காக இருந்த அந்த அசுரனே இறந்த பின்னர்ப் பாஞ்சஜன்யம் என்று கொண்டாடப்பட்ட சங்கானான்.

Krishna and Balarama summons Yama
அதன்பிறகு அந்தப் புருஷர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்} வைவஸ்வானின் (யமனின்) வசிப்பிடத்திற்குச் சென்றான். கதாதரன் அவனை அடைந்ததும் யமன் அவனை வணங்கினான்.(18) கிருஷ்ணன் அவனிடம், "என் ஆசானின் மகனைத் தருவாயாக" என்று கேட்டான். அதன்பேரில் அவர்களுக்கிடையில் அங்கே ஒரு பயங்கரப் போர் நடைபெற்றது.(19) புருஷர்களில் முதன்மையான அச்யுதன், அச்சம் நிறைந்தவனும், விவஸ்வானின் {சூரியனின்} மகனுமான அவனை {யமனை} வென்று, தன் ஆசானின் மகனான அந்தக் குழந்தையை அடைந்தான்.(20)

வெகு காலத்திற்கு முன்பே தொலைந்த தன் ஆசானின் மகனை யமலோகத்தில் இருந்து அவன் கொண்டு வந்தான். நீண்ட காலத்திற்கு முன்பே இறந்து போன சாந்தீபனியின் மகன், ஒப்பற்ற ஆற்றலுடன் கூடிய கிருஷ்ணனின் சக்தியால் உடல் வடிவத்துடன் மீண்டான்.(21) எவராலும் நினைத்துப் பார்க்கவோ, செய்யவோ முடியாத பேரற்புதம் நிறைந்த இந்த அருஞ்செயலைக் கண்டு உயிரினங்கள் அனைத்தும் வியப்பில் நிறைந்தன.(22) அண்டத்தின் தலைவனான மாதவன், தன் ஆசானின் மகனையும், பாஞ்சஜன்யத்தையும், விலைமதிப்புமிக்கப் பல்வேறு ரத்தினங்களையும் எடுத்துக் கொண்டு திரும்பினான்.(23) அந்த வாசவன் தம்பி {கிருஷ்ணன்}, யமனின் பணியாட்களான ராட்சசர்களின் மூலம் விலைமதிப்புமிக்க ரத்தினங்கள் அனைத்தையும் கொண்டு வந்து அவற்றைத் தன் ஆசானுக்கு அர்ப்பணித்தான்.(24)

Krishna rescue Sandipani munis son
பெரும் நுண்ணறிவைக் கொண்டவர்களும், உலகங்கள் அனைத்திலும் கதாயுதம், வாள்கள், ஏனைய பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான ராமனும், கேசவனும், முன்பைப் போலே வயதும், அழகும் கொண்ட தங்கள் ஆசான் சாந்தீபனியின் மகனையும், ரத்தினங்கள் அனைத்தையும் அவரிடம் {சாந்தீபனியிடம்} ஒப்படைத்து நிறைவடைந்தனர்.(25,26) காசியரின் மகனான சாந்தீபனி, வெகு காலத்திற்கு முன்பு இழந்த தன் மகனுடன் இணக்கமடைந்ததில் பெரும் நிறைவடைந்து ராமனையும், கேசவனையும் வெகுவாகக் கௌரவித்தார்.(27) நோன்புகளை நோற்பவர்களும், வீரர்களுமான வஸுதேவனின் மகன்கள் இருவரும், அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தவதில் தேர்ச்சியை அடைந்து, தங்கள் ஆசானால் கௌரவிக்கப்பட்டு, மதுராவுக்குத் திரும்பினர்.(28)

உக்ரஸேனனின் தலைமையில் சிறுவர்களாகவும், முதியவர்களாகவும் இருந்த யாதவர்கள் அனைவரும், யது குலக் கொழுந்துகளான அவ்விருவரும் வருவதைக் கேட்டு, அவர்களை வரவேற்பதற்காக நகரத்தை விட்டுப் பெரும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.(29) முதியவர்களும், இளைஞர்களுமான குடிமக்கள் அனைவரும், புரோகிதர்களும், அமைச்சர்களும் நகரத்தின் முன்பு வரிசையாக நின்றனர்.(30) எக்காளங்கள் ஒலிக்கப்பட்டன, மக்கள் ஜனார்த்தனனின் மகிமைகளைப் பாடத் தொடங்கினர், வீதிகள் அனைத்தும் கொடிகளாலும், மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டன.(31) கோவிந்தன் திரும்பியதால், இந்திர வேள்வி நடைபெறுவதைப் போல வீடுகள் தோறும் இன்பத்தில் நிறைந்தன.(32) யாதவர்களால் மிகவும் விரும்பப்படும் அருள் பாடல்களையும், துதிப் பாடல்களையும் வீதிகளில் பாடகர்கள் பாடத் தொடங்கினர்.(33)

அவர்கள் {யாதவர்கள்}, "உலகெங்கும் கொண்டாடப்படும் சகோதரர்களான ராமன், கோவிந்தன் இருவரும் நகரம் திரும்புகின்றனர். நாம் அனைவரும் நண்பர்களுடன் அச்சமின்றி விளையாடுவோம்" என அறிவித்தனர்.(34) ஓ! மன்னா, கோவிந்தன் மதுராவை அடைந்த போது, அங்கே எவனும் வறியவனாகவோ, கவலை நிறைந்தவனாகவோ, உணர்வற்றனாகவோ {பித்தனாகவோ} இல்லை.(35) பறவைகள் தங்கள் இனிய ஒலியைப் பொழியத் தொடங்கின, குதிரைகள், யானைகள், பசுக்கள் என அனைத்தும் உற்சாகமாக இருந்தன. ஆண்களும், பெண்களும் நல்ல ஸுகமான மனநிலையை அடைந்தனர்.(36) இனிய தென்றல் வீசத் தொடங்கியது, பத்து திக்குகளும் புழுதியற்றிருந்தன, கோவில்களில் இருந்த காவல் தெய்வங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.(37) ஜனார்த்தனன் நகரை அடைந்தபோது பொற்காலத்தில் {கிருத யுகத்தில்} தோன்றும் அறிகுறிகள் {நற்சகுனங்கள்} அனைத்தும் அங்கே தோன்றின.(38)

பிறகு, பகைவரைக் கொல்பவனான ஜனார்த்தனன் ஒரு மங்கலமான நேரத்தில் குதிரைகளால் இழுக்கப்படும் ஒரு தேரில் ஏறி மதுரா நகருக்குள் நுழைந்தான்.(39) உபேந்திரன் அழகிய மதுரா நகருக்குள் நுழைந்தபோது, சக்ரனைப் பின்தொடரும் தேவர்களைப் போல யாதவர்கள் அனைவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(40) பிறகு, அஸ்த மலைக்குள் நுழையும் சூரியனையும், சந்திரனையும் போல யதுவின் வழித்தோன்றல்களான அவ்விருவரும் வஸுதேவனின் வீட்டிற்குள் மகிழ்ச்சியாக நுழைந்தனர்.(41) யாதவர்களுடன் சேர்ந்து விரும்பியவாறு திரியும் வஸுதேவன் மகன்களான அந்த உயரான்மாக்கள் இருவரும், தங்கள் வீட்டில் ஆயுதங்கள் அனைத்தையும் வைத்துவிட்டு, தாமரை இலைகளாலும், காரந்தவங்களாலும் {பறவைகளாலும்} அழகூட்டப்பட்ட ரைவத மலையின் அருகே உள்ள தெளிந்த நீரைக் கொண்ட ஓடைகளிலும், கனிகளும், மலர்களும் நிறைந்த காடுகளிலும் திரியத் தொடங்கினர்.(42-44) அழகிய முகங்களையும், ஒரே இதயத்தையும் கொண்டவர்களான ராமனும், கேசவனும் இவ்வாறு சிறிது நாட்கள் உக்ரஸேனனின் {அவனது ஆட்சியின்} கீழ் இன்புற்றிருந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(45)

விஷ்ணு பர்வம் பகுதி – 88 – 033ல் உள்ள சுலோகங்கள் : 45
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்