(கோவர்த்தனமஹோத்ஸவம்)
The reply of the Gopas | Vishnu-Parva-Chapter-72-017 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனிடம் ஆயர்கள் சொன்ன மறுமொழி; மலை, மற்றும் பசுக்களுக்கு நடைபெற்ற வழிபாடு; மலைதேவன் ஆசி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தாமோதரனின் சொற்களைக் கேட்டுக் கோபர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்; அவனது அமுத மொழியின் உண்மைப் பொருளை அறிந்து கொண்ட அவர்கள் தயக்கமில்லாமல்,(1) "ஓ! குழந்தாய், பசுக்களின் பெருக்கத்திற்கும், ஆயர்களின் நல்வாழ்வுக்கும் உகந்ததாக இருக்கும் உன் புத்தியைக் கண்டு நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.(2) ஓ! கிருஷ்ணா, நீயே எங்கள் வழியும், மகிழ்ச்சியும், புகலிடமுமாக இருக்கிறாய். எங்கள் இதயங்களைப் புரிந்து கொள்ளும் நீயே பேரிடர்களில் இருந்து எங்களை மீட்கும் மீட்பனாக இருக்கிறாய். நீங்கள் எங்கள் நண்பர்களின் நண்பனாவாய்.(3) உனது தயவின் மூலம் மகிழ்ச்சி நிறைந்த ஆயர்களின் குக்கிராமமான கோகுலம்[1] பகைவர்களற்றவளாக இருக்கிறாள். மங்கலம் நிறைந்தவளான அவள் தேவர்களின் நகரைப் போல மகிழ்ச்சியுடனும், இன்பத்துடனும் வாழ்கிறாள்.(4) உன் பிறப்பு தொடங்கி, காணத் தகுந்தவையும், பிறரால் செய்ய இயலாதவையுமான உன் செயல்களைக் கண்டும், {"நான் உயர்ந்தவன்" என்ற நினைப்புடன்} நீ சொல்லும் ஆணவச் சொற்களைக் கேட்டும் எங்கள் மனங்கள் ஆச்சரியத்தால் நிறைகின்றன.(5)
[1] "கோகுலம் என்பது ஆயர்களின் கிராமமான விரஜத்தின் மற்றொரு பெயராகும். இப்போதும் மதுராவில் இருந்து ஐந்து அல்லது ஆறு மைல்கள் தொலைவில் இதே பெயருடன் ஒரு கிராமம் இருக்கிறது. கோவர்த்தன மலைக்கு அருகில் அமைந்திருப்பதாக விவரிக்கப்படும் பண்டைய கோகுலம் இதுதானா என்பது ஐயம் நிறந்ததே" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
தேவர்களின் மத்தியில் புரந்தரனை {இந்திரனைப்} போல மனிதர்களில் நீ உன் ஒப்பற்ற சக்தி, பலம் மற்றும் புகழின் மூலம் மேன்மையை {மீயுயர்வை} அடைந்திருக்கிறாய்.(6) உன் கடுஞ்சக்தி, மிகமேன்மையான ஒளி ஆகியவற்றால் தேவர்களுக்கு மத்தியில் சூரியனைப் போல மனிதர்களில் நீ மேன்மையை அடைந்திருக்கிறாய்.(7) தேவர்களுக்கு மத்தியில் சந்திரனைப் போல உன் அருள், அழகு, மகிழ்ச்சி நிறைந்த முகம் மற்றும் புன்னகையால் நீ மனிதர்களின் மத்தியில் முக்கியத்துவத்தை அடைந்தாய்.(8) உன் பலம், சக்தி, உடல் மற்றும் பிள்ளை பருவத்தில் நீ செய்த அருஞ்செயல்கள் ஆகியவற்றில் கார்த்திகேயனால்[2] மட்டுமே உனக்கு நிகராக முடியும். மனிதர்களுக்கு மத்தியில் உனக்கு ஒப்பானவன் எவனும் இல்லை.(9) கரையைக் கடக்க முடியாத பெருங்கடலைப் போலவே, மலையைக் கௌரவிக்கும் வகையில் யஜ்ஞம் செய்வது குறித்த உன் முன்மொழிவை எவனால் அலட்சியம் செய்ய முடியும்?(10)
[2] "இவன் போர் தேவனும், சிவனின் மகனுமாவான். புராணத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தின் உடல்வடிங்களான தேவகன்னிகளால் எடுத்து வளர்க்கப்பட்டதால் கிருத்திகை என்பதில் இருந்து பெறப்பட்ட பெயராகும் இஃது. இவன் போர்க்கலையில் மிகத் திறம்பெற்றவனும், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில் தேவர் படையின் தளபடியாக நியமிக்கப்பட்டவன் ஆவான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
இந்திர யஜ்ஞத்திற்குப் பதிலாகப் பசுக்கள் மற்றும் ஆயர்களின் நல்வாழ்வுக்கென உன்னால் அமைக்கப்படும் இந்தக் கிரி யஜ்ஞம் {மலைவிழா}[3] எங்களால் செய்யப்படும்.(11) இனிமை நிறைந்த பால் உணவு வகைகள் தயாரிக்கப்படட்டும், குடிக்கும் இடத்தில் {பந்திகளில்}[4] அழகான குடுவைகள் வைக்கப்படட்டும்.(12) அகன்ற ஆறுகள் மற்றும் துரோணிகளில்[5] பால் நிறைக்கப்படட்டும், அதே அளவு வறுத்த இறைச்சியும், கோபர்கள் மூன்று இரவுகளைக் கழிக்கும் வகையில் பல்வேறு உணவு மற்றும் பானங்கள் ஆகியனவும் மலைக்கு எடுத்துச் செல்லப்படட்டும்.(13,14) ஆயர்கள் அனைவரையும் கொண்டதும், எருமை மற்றும் பிற விலங்குகளின் இறைச்சி நிறைந்ததுமான இந்த யஜ்ஞம் உடனே நடைபெறட்டும்[6].(15)
[3] "கோவர்த்தன மலையைக் கௌரவிக்கும் வகையில் ஒரு வேள்வி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[4] "உரையில் இருக்கும் சொல் உதபானம் ஆகும். உதம் என்றால் நீரையும், பா என்ற வேர் பருகுவதையும் குறிக்கும். இஃது ஒரு கிணறு என்ற பொருளையும் தரும். இங்கே நீர் பருகுவதற்குரிய இடம் என்று பொருள்படுகிறது. ஒரு கிணற்றின் அருகில் மக்கள் சுகமாக அமரவும், நீர் பருகவும் வசதியாகப் பெரிய நடைபாதை இருப்பது இன்றும் பல இடங்களில் காணப்படுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[5] "படகின் வடிவிலானதும், நீர் கொள்ளவும் ஊற்றவும் பயன்படுத்தப்படுவதும், கல் மற்றும் மரத்தால் ஆனதுமான எந்தப் பாத்திரமும், குளிக்கும் தொட்டி, குளியல் பாத்திரம், வாளியும், நீர்க்குடங்களும் துரோணிகளே ஆகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[6] சித்திரசாலை பதிப்பில், "சோறு மற்றும் இறைச்சிக்கான பாத்திரங்களையும் தட்டுக்களையும் நாங்கள் மகிழ்ச்சியாக ஏற்பாடு செய்கிறோம். மூன்று பகல்கள் மற்றும் இரவுகளுக்குத் தேவையான பாலையும், பாலாலான உணவுப் பொருட்களையும் திரட்டுவோம். உணவுக்காக எருமைகளைப் போன்ற விலங்குகளைக் கொல்வோம். இந்த வேள்வி கோபர்கள் அனைவருடனும் நடைபெறட்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "உணவு, பீடங்கள் மற்றும் இனிய பாலை நாங்கள் ஏற்பாடு செய்வோம். கிணறுகளுக்கு அருகில் அழகிய பாத்திரங்கள் வைக்கப்படட்டும். பாயஸம் மற்றும் பிற உணவுப் பொருட்களுக்கான பெரிய குடங்கள் ஆயத்தம் செய்யப்படட்டும். உண்ணத்தக்க அனைத்து வகை உணவுப் பொருட்களும், பேயமும் கொண்டு வரப்படட்டும். இறைச்சிக்கும், கேளிக்கைக்குமான பாத்திரங்கள் கொண்டு வரப்படட்டும். பாலையும், வேறு பால்சார்ந்த உணவுப் பொருட்களையும் திரட்டுவதில் நாம் மூன்று இரவுகளைச் செலவிடுவோம். உண்ணப்பட வேண்டிய எருமைகளுக்கும், பிற விலங்குகளுக்கும் தானியங்கள் வழங்கப்படட்டும். கோபர்கள் அனைவரும் இந்த வேள்வியை ஏற்பாடு செய்வதில் ஈடுபடட்டும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "மாம்ஸ உணவு நிறைந்த பாத்ரங்களும், சித்ரான்மை நிறைந்த பாத்ரங்களும் வைக்கப்படும் ஆயர்ப்பாடி முழுதும் மூன்றுநாள் கறந்த பால் எல்லாம் கொண்டு வரப்படட்டும். உணவிற்குரிய எருமை முதலிய ம்ருகங்கள் பக்வம் செய்யப்படட்டும். ஒன்று சேர்ந்த எல்லாக் கோபர்களாலும் இந்த யஜ்ஞம் துவக்கப்படட்டும்" என்றிருக்கிறது.
அதன்பிறகு, ஆயர்களின் கிராமம் முழுவதும் திளைப்படைந்த பசுக்களுடன் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. எக்காளங்களின் ஒலிகளும், காளைகளின் முழக்கங்களும், கன்றுகள் கத்தும் ஒலியும் சேர்ந்து கோபர்களுக்குப் பெரும் மகிழ்வை உண்டாக்கின.(16) தயிர் ஆறுகளும், தெளிந்த நெய் சுழல்களும், பாலாறுகளும் அங்கே அமைக்கப்பட்டன. இறைச்சிக் குவியலும், மலை போலத் திரட்டி வைக்கப்பட்ட சோறும் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இவ்வாறு அங்கே இருந்த கோபர்கள் {ஆயர்கள்} அனைவராலும் அந்தக் கிரி யஜ்ஞம் செய்யப்பட்டது. கோபர்களும் {ஆயர்களும்}, கோபியரும் {ஆய்ச்சியரும்} அங்கே மகிழ்ச்சியில் நிறைந்திருந்தனர்.(17,18) நூற்றுக்கணக்கான உணவிடங்கள் {பந்திகள்} அங்கே அமைக்கப்பட்டன. அது {அந்த மலை} மாலைகளாலும், பல்வேறு வகை நறுமணப்பொருட்கள் மற்றும் தூபங்களாலும் நிறைந்திருந்தது.(19) வேள்விக்குரிய பல்வேறு பொருட்கள் அங்கே முறையாகப் பரப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு மங்கல காலத்தில் பிராமணர்களுடன் கூடிய கோபர்கள் {ஆயர்கள்} கிரி யஜ்ஞத்தைக் கொண்டாடினர்.(20)
யஜ்ஞம் முடிந்த பிறகு, கிருஷ்ணன் பெரும் மாய சக்தியைக் கைக்கொண்டு மலையின் வடிவை ஏற்று, மிகச்சிறந்த சோறு, இறைச்சி, தயிர் மற்றும் பாலை உண்டு பருகினான்.(21) பிராமணர்களும் அங்கே உண்டதிலும், தங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறியதிலும் பெரும் நிறைவடைந்தனர். அவர்கள் மகிழ்ச்சியாக ஆசிகளைக் கூறி விடைபெற்றுச் சென்றனர்.(22) தலைவன் கிருஷ்ணன் அந்த வேள்வியில் தன் இதய விருப்பத்தின்படி தெய்வீக வடிவை ஏற்று உணவையும், பானங்களையும் ஏற்று, "நான் நிறைவடைந்தேன்" எனப் புன்னகையுடன் சொன்னான்.(23) அந்த மலையின் உச்சியில் தெய்வீக மலர்மாலைகள், நறுமணக் குழம்புகள் ஆகியவற்றால் பளபளக்கும் மலையின் வடிவில் கிருஷ்ணனையே கண்ட முன்னணி கோபர்கள் {ஆயர்கள்}, அவனை வணங்கி வழிபட்டு அவனது புகலிடத்தை நாடினார்கள்.(24) அந்த மலையால் தன் உண்மை வடிவத்தை மறைத்துக் கொண்டவனும், எல்லாம் வல்லவனுமான தலைவன் கிருஷ்ணன், தன்னை வணங்கும் கோபர்களுடன் சேர்ந்து தன்னைத் தானே துதித்தான் {கிருஷ்ணன் வணங்கப்படும் மலையாகவும் இருந்தான், வழிபடும் ஆயராகவும் இருந்தான்}.(25)
ஆச்சரியத்தால் நிறைந்த கோபர்கள், அந்தச் சிறந்த மலையில் இருந்த தேவனிடம் {மலை தேவனான கிருஷ்ணனிடம்}, "ஓ! தலைவா, நாங்கள் உன்னிடம் அர்ப்பணிப்புள்ள அடிமைகள், நாங்கள் என்ன செய்ய வேண்டுமென ஆணையிடுவாயாக" என்றனர்.(26)
அவன் மலையிடம் இருந்து தோன்றும் சொற்களால் அவர்களுக்கு மறுமொழி கூறும் வகையில், "உங்களுக்குப் பசுக்களிடம் இரக்கம் இருந்தால், இன்றுமுதல் என் வழிபாட்டில் ஈடுபடுவீராக.(27) விரும்பத்தக்க பொருட்கள் அனைத்தையும் அருள்பவனும், நல்லெண்ணம் கொண்டவனுமான உங்கள் முதல் தேவன் நானே, என் தயவால் விலைமதிப்பற்ற ஒரு கோடி {பத்தாயிரம்}[7] பசுக்களை உடைமைகளாகப் பெற்றீர்.(28) நீவிர் என்னிடம் பற்றும், ஆர்வமும் கொண்டீரெனில் நான் காட்டில் உங்களுக்கு நன்மையைச் செய்வேன், உங்கள் துணையுடன் தேவலோகம் போல இங்கே இன்புற்றிருப்பேன்.(29) நான் மகிழ்ச்சியடைந்திருப்பதால், நந்தனுக்கும், பிற முன்னணி கோபர்களுக்கும், ஆயர்கள் அடையத் தகுந்த ஏராளமான செல்வத்தை அளிக்கப் போகிறேன்.(30) பசுக்கள் தங்கள் கன்றுகளுடன் சேர்ந்து என்னை வலம் வரட்டும். நான் உண்மையில் உயர்ந்த இன்பநிலையை அடைவேன்" என்றான் {மலை தேவன்}.(31)
[7] மற்ற பதிப்புகள் அனைத்திலும் பத்தாயிரம் பசுக்கள் என்ற இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் பத்து மில்லியன் பசுக்கள் என்றிருக்கிறது.
அதன்பிறகு அந்தச் சிறந்த மலையை அழகூட்டும்படி பசுக்களும், காளைகளும் கூட்டங்களாக அதை வலம்வந்தன.(32) மலர்மாலைகளால் தங்கள் கொம்புகள் மற்றும் தலைகள் அலங்கரிக்கப்பட்டவையும், மலர்களாலான அங்கதங்களைக் கொண்டவையும், மகிழ்ச்சிமிக்கவையுமான எண்ணற்ற பசுக்கள் விரைவாக அதை வலம் வரத்தொடங்கின.(33) பல்வேறு வண்ணங்களைப் பூசிக்கொண்டவர்களும், சிவப்பு, இளநீலம்கலந்த கருஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் ஆடைகளை உடுத்தியவர்களுமான ஆயர்கள், அந்தப் பசுக்களை முறைப்படுத்துவதற்காக அவற்றைப் பின்தொடர்ந்து சென்றனர்.(34) அற்புதமான அந்தச் சபையில், மயில் இறகுகளாலான அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், தலைமயிரைக் கட்டுவதற்கான கயிற்றை {மயில் பீலிகளால்} நன்கு அமைத்துக் கொண்டவர்களும்,(35) தங்கள் கரங்களில் ஆயுதங்களை {தடிகளைக்} கொண்டவர்களுமான ஆயர்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தனர். ஆயர்களில் சிலர் பசுக்களைக் கட்டுப்படுத்த விரைந்தனர், சிலர் மகிழ்ச்சியில் ஆடினர், சிலர் காளைகளைச் செலுத்திக் கொண்டு சென்றனர்.(36) இவ்வாறு முறையாக அந்த விழா நிறைவையடைந்தபோது, மலையில் பிறந்த தேவன் திடீரென மறைந்தான்,(37) கிருஷ்ணரும், கோபர்களும் விரஜத்திற்கு {கோகுலத்திற்குத்} திரும்பிச் சென்றனர். இவ்வாறு அந்தக் கிரி யஜ்ஞம் அமைக்கப்பட்டபோது,(38) அந்த அற்புதக் காட்சியைக் கண்ட சிறுவர்களும், முதியவர்களுமான ஆயர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்து மதுசூதனனின் மகிமைகளைப் பாடத் தொடங்கினர்" என்றார் {வைசம்பாயனர்}.(39)
விஷ்ணு பர்வம் பகுதி – 72 – 017ல் உள்ள சுலோகங்கள் : 39
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |