Sunday, 21 June 2020

கிருஷ்ணன் எதிர்த்த இந்திரவிழா | விஷ்ணு பர்வம் பகுதி – 71 – 016

(ஷரத்வர்ணனம்)

Krishna protests against Indra-Yajna: An account of Autumn | Vishnu-Parva-Chapter-71-016 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : இந்திர விழாவை எதிர்த்த கிருஷ்ணன்; மலை மற்றும் பசு வழிபாட்டிற்கு அவசியமான காரணங்களைச் சொல்லி வற்புறுத்தியது; கூதிர் கால வர்ணனை...

Krishna about Govardhana giri pooja to elder gopas

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இந்திரவிழாவைக் குறித்த முதிய கோபனின் சொற்களைக் கேட்ட தாமோதரன் {கிருஷ்ணன்}, சக்ரனின் {இந்திரனின்} வலிமையை நன்கறிந்தும் அவரிடம் {அந்த முதியவரிடம்}[1],(1) "காட்டில் திரிபவர்களான நாம் அனைவரும் ஆயர்களாக {கோபாலர்களாக} இருக்கிறோம். விலைமதிப்பற்ற ஆநிரைகள் நம் வாழ்வதாரமாக அமைந்திருக்கின்றன. எனவே, நாம் பசுக்களையும், மலைகளையும், காடுகளையும் வழிபட வேண்டும்.(2) உழவர்களுக்கு உழவுத் தொழிலும், வணிகர்களுக்கு வணிகப்பொருட்களும் வாழ்வாதார வழிமுறைகளாகும், நமக்கோ பசுக்களே {கோரக்ஷணம் / ஆநிரை காத்தல்} வாழ்வாதாரத்திற்கான சிறந்த வழிமுறை ஆகும். மூன்று வேதங்களையும் நன்கறிந்த அறிஞர்களால் இது விதிக்கப்பட்டிருக்கிறது.(3) ஒவ்வொரு வர்ணத்திற்கும் பெருந்தெய்வமும், வழிபாட்டுக்குரியதும், துதிக்கத்தக்கதும், அவர்களுக்கு நன்மையைச் செய்வதும் அவரவர்களுக்கு உரிய தொழிலே ஆகும்.(4) ஒன்றால் நன்மையடைந்து மற்றொன்றை வழிபடும் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் என இரண்டு வகை ஆபத்துகளைச் சந்திக்கிறான்.(5) வயல்கள் உழவுத்தொழிலால் பாதுகாக்கப்படுகின்றன, காடுகள் வயல்களால் பேணிக்காக்கப்படுகின்றன, மலைகள் காடுகளால் ஆதரிக்கப்படுகின்றன, இந்த மலைகளே நம் ஒரே புகலிடமாக இருக்கின்றன. இந்தக் காட்டில் இருக்கும் மலைகள் தாங்கள் விரும்பிய வடிவை ஏற்கின்றன என நான் கேட்டிருக்கிறேன். அவை பல்வேறு வடிவங்களை ஏற்றுத் தங்கள் மேட்டுச் சமவெளிகளில் விளையாடுகின்றன. (6) நகங்களைக் கொண்டவற்றில் முதன்மையான புலிகளின் வடிவங்களைச் சில வேளைகளிலும், பிடரிமயிருடன் கூடிய சிங்கங்களின் வடிவங்களைச் சில வேளைகளிலும் ஏற்கும் அவை, காடுகளை அழிப்பவர்களைச் சூறையாடி தங்களுக்குரிய காடுகளைப் பாதுகாக்கின்றன.(7)

[1] "இந்த அத்தியாயத்தில், மழையின் தேவனைக் கௌரவிக்கும் இந்திர வேள்வி அல்லது யாகத்தை நிறுத்த கிருஷ்ணன் முயற்சிக்கிறான். அவன் உயிரற்ற {அவசியமற்ற} சடங்குகள் மற்றும் விழாக்களை எதிர்த்தான் என்பது அவன் எதிர் பிரச்சாரம் செய்யும் விதத்தில் இருந்து தெளிவாகிறது. அவன் தன் குல மக்கள் அனைவரிடமும், தங்கள் வாழ்வாதாரத்தைச் சார்ந்த தேவையே தங்களுக்குக் கடவுள் என்பதை நம்பும்படி அறிவுறுத்துகிறான். அவன் பயனற்ற சடங்குகளையும், விழாக்களையும் ஆதரிக்கவில்லை. மேலும் நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு உயர்ந்த வடிவிலான நம்பிக்கையையே தன் நாட்டின் முன் வைக்க எப்போதும் அவன் முயற்சித்தான். ஆனால் அவன் அதை மிகவும் மென்மையான வடிவத்தில் அறிமுகப்படுத்தினான். இதன் காரணமாகவே அவன் இருப்பிலுள்ள காரியங்களின் வகைமுறைகளில் புரட்சி செய்யவில்லை. இந்திர யாகத்துக்கு எதிரான அவனது நிலைப்பாடும், அவன் அறிமுகப்படுத்திய மலை, காடு முதலியனவற்றின் வழிபாடும், அவன் பிற்கால வாழ்வில் போதித்த கடமை {தர்மம் / அறம்} எனும் பெரிய வழிபாட்டுமுறையாகத் தங்களை வளர்த்துக் கொண்டன. ஒருவன் தன் வாழ்வாதார வழிமுறைகளை வழிபடுவதில் உள்ள உருவகத்தை உரிக்கும்போது, ஒருவன் தன் கடமையைச் செய்வதையே கடவுள் வழிபாட்டைப் போலப் புனிதமானதாகக் கருத வேண்டும் என்ற பொருளை அஃது அடையும். புதிய வடிவிலான வழிபாட்டு முறையை அறிமுகம் செய்யும் இந்நிகழ்வும் அவனது மீமானிட சக்தியை உறுதிப்படுத்துகிறது. சிறுவனேயான அவன், ஏற்கனவே தன் மக்களுக்கு மத்தியில் நிறுவப்பட்டுள்ள வழிபாட்டுமுறையை விட்டுவிட்டு அவர்கள் தன்னைப் பின்பற்றும் அளவுக்கு அவர்களிடம் ஆளுமை கொண்டவனாக இருந்திருக்கிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

காட்டில் வாழும் இனத்தோர்[2] அல்லது அதன் {காட்டின்} மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை அடைவோர்[3] காட்டை உருக்குலைக்கும்போது, அவை {அந்தக் காடுகள்} ஆண்மையை உண்ணும் தங்கள் பணியால் எந்த நேரத்திலும் அவர்களை அழித்துவிடும்[4].(8) பிராமணர்கள், மந்திரங்கள் முக்கியத்துவம் பெறும் யக்ஞங்களைச் செய்கிறார்கள், உழவர்கள் உழுசாலை {கலப்பையை} கௌரவிக்கும் வகையில் வேள்வியைச் செய்ய வேண்டும், ஆயர்களான நாமோ மலைகளைக் கௌரவிக்கும் வகையிலான விழாவைக் கொண்டாட வேண்டும். நாம் காட்டில் இருக்கும் மலைகளை வழிபட வேண்டும்.(9) எனவே, ஓ! கோபர்களே {ஆயர்களே}, மலைகளைக் கௌரவிக்கும் வகையில் வேள்வியைச் செய்யப் போகும் நீங்கள் ஒரு மரத்தின் அடியிலோ, ஒரு மலையின் அடியிலோ உங்கள் இதயம் விரும்பும் செயல்களில் ஈடுபடுவீர்களாக.(10) அந்த மங்கலமான இடத்தில் கிணறுகளை வெட்டி, தொழுவங்களை அமைத்து, வேள்வியில் விலங்குகளைக் கொன்று ஆயர்கள் தங்கள் விழாவைக் கொண்டாடட்டும். இதில் விவாதங்களுக்கான அவசியமில்லை.(11) பசுக்கள், கூதிர்கால மலர்களால் பளபளக்கும் அந்தச் சிறந்த மலையை வலம் வந்து மீண்டும் விரஜத்திற்கு {பிருந்தாவனத்திற்கு மாற்றப்பட்ட கோகுலத்துக்குத்} திரும்பட்டும்.(12) மேகங்களற்றதும், பல நல்லியல்புகளைக் கொண்டதும், பசுக்களுக்கு நிறைவைக் கொடுக்கும் இனிய நீரும், புல்லும் நிறைந்ததுமான இந்த அழகிய கூதிர்காலத்தில் அனைவரும் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறார்கள்.(13)

[2] "பீலர்கள் {மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடியினர்} அல்லது காட்டில் வாழும் பிற காட்டுவாசி இனக்குழுக்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "இவர்கள் ஆயர்கள் அல்லது காட்டில் பசுக்களை மேய்த்துத் தங்கள் வாழ்வாதார வழிமுறைகளை அடையும் பிறர் அல்லது காட்டின் விளைச்சலை விற்போர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] சித்திராசாலை பதிப்பில், "காட்டைச் சார்ந்து வாழ்வோர் அழிவுகரமான செயல்களில் ஈடுபட்டால், அந்தக் காடு தகுந்த செயல்பாடுகளின் மூலம் அந்தத் தீயோரைக் கொன்றுவிடும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தீய ஒழுக்கங் கொண்டு, கொடுஞ்செயல்களைச் செய்வர்கள் இருக்கிறார்கள். காட்டில் இருந்து வாழ்வை ஈட்டியும், முறைகேடான வழியில் அவர்கள் செயல்பாட்டால் அவை {காடுகள்} அவர்களைக் கொல்லும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "வனவாஸிகள் எப்போது இவைகளைத் துன்புறுத்துகின்றனரோ, அப்போது கொடுமை செய்யும் அவர்களையே ஹிம்ஸைத் தொழிலாலேயே அழிக்கின்றன" என்றிருக்கிறது.

{கூதிர் கால வர்ணனை} ஏதோவோரிடத்தில் மலர்ந்த பிரியக மலர்களால் வெண்மையாக, ஏதோவோரிடத்தில் பாணாஸனங்களால் அடர்நீலமாக, முழுதாக வளர்ந்த புற்கள் நிறைந்ததாக, மயில்கள் அற்றதாக இருக்கும் காடு, மிக அழகானதாகத் தோன்றுகிறது.(14) நீர் மற்றும் மின்னல்கள் இல்லாத தெளிந்த மேகங்கள், யானைகளின் மந்தையைப் போல வானில் நகர்ந்து வருகின்றன.(15) புது நீர் ஈர்த்த மேகங்கள் தொடர்ந்து முழங்குவதால் புத்தம்புது பசுந்தழைகள் சூழந்த மரங்கள் நிறைவடைந்தவை போலத் தெரிந்தன.(16) வெண்மேகத்தைத் தலைப்பாகையாகக் கொண்டும், அன்னம்போன்ற சாமரங்களால் வீசப்பட்டும், முழு நிலவைக் கொடையாகக் கொண்டும் புதியாய் நிறுவப்பட்ட மன்னனைப் போல வானம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(17) மழைக்காலம் முடிந்ததும், தடாகங்கள் மற்றும் குளங்கள் அனைத்தும், அன்னப்பறவைகளின் வரிசைகளுடன் சிரித்துக் கொண்டிருப்பவை போலத் தெரிந்தன. ஸாரஸங்களின் ஒலிகளால் நிறைந்த அவை நாளுக்கு நாள் அளவில் குறைந்து வருகின்றன.(18) சக்கரவாகங்களைத் தங்கள் மார்பாகவும், கரைகளைத் தங்கள் இடையாகவும், அன்னங்களைத் தங்கள் புன்னகையாகவும் கொண்ட ஆறுகள், தங்கள் கணவர்களிடம் செல்பவை போலப் பெருங்கடலை நோக்கிப் பாய்கின்றன.(19)

முற்றாக மலர்ந்த அல்லிகளால் அழகூட்டப்பட்ட நீரும், நட்சத்திரங்களைச் சூடிய வானும், ஒன்றையொன்று கேலி செய்து கொள்பவை போல இரவில் தெரிகின்றன {சிரிக்கின்றன}.(20) கிரௌஞ்சங்களின் இசையை எதிரொலித்தும், முதிர்ந்த கமலநெற்கதிர்களால் நீலமடைந்தும் இருக்கும் காட்டின் பேரழகைக் காண்பவன் மனத்தில் பெரும் மகிழ்ச்சியை அடைகிறான்.(21) மலர்ந்த மரங்களால் பளபளக்கும் தடாகங்கள், குளங்கள், ஏரிகள், ஆறுகள், வயல்கள் ஆகியன பேரழகாகத் தெரிகின்றன.(22) தாமிர வண்ணத்திலும், கருநீல வண்ணத்திலும் தாமரைகள் புதுவெள்ளத்தில் அழகாகத் தோன்றுகின்றன.(23) மயில்கள் செருக்கில் இருந்து விடுபட்டிருக்கின்றன, வானம் மேகங்களற்றதாக இருக்கிறது, பெருங்கடல் நீரால் நிறைந்திருக்கிறது, காற்றும் படிப்படியாக விகிதங்களை ஏற்கிறது.(24) மழைக்காலத்தில் ஆடிய மயில்களால் கைவிடப்பட்ட இறகுகளின் மூலம் பூமி பல கண்களைக் கொண்டதாகத் தெரிகிறது.(25)

யமுனை ஆறானவள், சேற்றால் நிறைந்தவையும், காஸ {கோரைப்புல்} மலர்கள், மற்றும் செடிகொடிகளால் மறைக்கப்பட்டவையும், அன்னங்கள் மற்றும் ஸாரஸங்கள் நிறைந்தவையுமான கரைகளுடன் பேரெழிலாகத் தோன்றுகிறாள்.(26) உரிய காலத்தில் முதிர்ந்த தானியங்கள் நிறைந்த வயல்களிலும், காட்டிலும் திரிந்து, தானியங்களை உண்டு, நீரைப் பருகி வாழும் பறவைகள் உற்சாகத்துடன் இசையொலிகளை வெளியிடுகின்றன.(27) மழைக்காலத்தில் தங்கள் நீரைப் பொழிந்த மேகங்களால் இளம்பயிர்கள் முற்றி வளர்ந்திருக்கின்றன.(28) சந்திரன் தன் மேக ஆடையைக் கைவிட்டும், கூதிர் காலத்தால் ஒளிபெற்றும் தெளிந்த வானில் மகிழ்ச்சியான இதயத்துடன் திரிபவனைப் போலத் தெரிகிறான்.(29) இப்போது பசுக்கள் அளவில் இரண்டு மடங்கான பாலைத் தருகின்றன, காளைகள் இரண்டு மடங்கு வெறிக் கொண்டிருக்கின்றன, காடு இரண்டு மடங்கு அழகுடன் இருக்கிறது, பூமி தானியங்களால் மிகவும் நிறைந்திருக்கிறாள்.(30) மேகங்களற்ற நட்சத்திரங்கள், தாமரைகளால் அழகூட்டப்பட்ட நீர் மற்றும் மனிதர்களின் மனம் ஆகியன நாளுக்கு நாள் மகிழ்ச்சி நிறைந்தவையாகின்றன.(31) சக்திவாய்ந்த கதிர்களைக் கொண்ட சூரியன், மேகங்களற்றவனாக, கூதிர் காலப் பிரகாசத்தில் ஒளிர்பவனாக அனைத்துப் பக்கங்களிலும் தன் ஒளியைப் பரப்பி, நீரை இழுத்து வருகிறான்.(32)

பூமியின் பாதுகாவலர்களும், வெற்றியை அடைய விரும்புகிறவர்களுமான மன்னர்கள் தங்கள் படைகளின் உற்சாகத்தைத் தூண்டி ஒருவரையொருவர் எதிர்த்துச் செல்கின்றனர்.(33) சேறுகள் வறண்டும், பந்துஜீவ {செம்பருத்தி} மலர்களால் சிவந்தும், பலவண்ணங்களுடன் அழகாக இருக்கும் காடுகள் மனத்திற்கு மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன.(34) மலர்ந்த அஸனை {சரஸனை / வேங்கை / கருமருது}, ஸப்தபர்ணை {ஏழிலைப்பாலை}, காஞ்சனை {கோவிதாரை / மலையாத்தி} மரங்கள் காட்டுக்கு அழகூட்டுகின்றன. வானாஸனை {இஷுஸாவை}, தந்திவிதபம் {நிகும்பம் / காட்டாமணக்கு}, பிரியகை, ஸ்வர்ணகை {கொன்றை}, {ஸ்குமர, பிசுகை,} கேதகி {கேதகை / தாழை} மரங்கள் ஆகியவை மலர்களால் மறைக்கப்பட்டிருக்கின்றன, பெண் ஆந்தைகளும், கருவண்டுகளும் அங்கேயும் இங்கேயும் திரிந்து கொண்டிருக்கின்றன.(36) கணிகையின் அழகை ஏற்றதைப் போலக் கூதிர் காலம் விரஜத்தில் {ஆயர்ப்பாடியில்} நடக்கிறது, கடையும் மத்தொலிகளால் பசுத்தொழுவங்கள் நிறைந்திருக்கின்றன.(37) கொடியில் கருடச் சின்னத்தைக் கொண்டவனான முதன்மை தேவன் (விஷ்ணு) மழைக்காலத்தில் மகிழ்ச்சியாக உறங்கினான். இப்போது தேவர்கள் அவனை எழுப்ப முயற்சிக்கின்றனர்.(38)

ஓ! ஆயர்களே, அழகிய தானியங்கள் நிறைந்த இந்தக் கூதிர் காலத்தில், காற்றின் தேவனுடைய {வாயுவின்} வசிப்பிடத்திற்கு ஒப்பானவனும், வெள்ளை, சிவப்பு மற்றும் நீல நிறப் பறவைகளால் நாடப்படுபவனும், இந்திரவில்லால் அலங்கரிக்கப்பட்ட மேகங்களைப் போன்ற கனிகளால் நிறைந்திருப்பவனும், செடிகொடிகள் மற்றும் மரங்களுடன் கூடிய தோப்புகளைச் சூடியிருப்பவனும், பரந்த மேட்டுச் சமவெளிகளால் அலங்கரிக்கப்பட்டவனுமான மலைகளில் முதன்மையானவனை {கிரிதேவனை} நாம் வழிபடுவோம். குறிப்பாக நாம் பசுக்களை வழிபடுவோம்.(39-41) காது வளையங்களாலும், கொம்புகளில் மயில் இறகுகளாலும், கழுத்தில் தொங்கும் மணிகளாலும், கூதிர் கால மலர்களாலும் பசுக்களை அலங்கரித்து, உங்கள் நன்மைக்காக அவற்றை நீவிர் வழிபடுவீராக.(42) மேலும் மலையைக் கௌரவிக்கும் வகையில் வேள்வி நடைபெறட்டும். தேவர்களால் சக்ரன் {இந்திரன்} வழிபடப்படுவதைப் போலவே மலையைக் கௌரவிக்கும் வகையில் நாம் அந்த வேள்வியை {மலைவிழாவைக்} கொண்டாடுவோம்.(43) மேலும் பசுக்களுக்கான வேள்வியைச் செய்யுமாறும் நான் உண்மையிலேயே உங்களை வற்புறுத்துகிறேன். உங்களுக்கு என் மேல் அன்பேதும் இருந்தால், நான் உங்கள் நண்பனாக இருந்தால் நீங்கள் அனைவரும் பசுக்களை வழிபடுவீராக. இதில் ஐயமேதும் கொள்ள வேண்டாம்.(44) இணக்கத்துடன் கூடிய என்னுடைய இந்தச் சொற்களை மதித்தால் நீங்கள் நல்வாழ்வை அடைவீர்கள். எனவே, நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்தாமல் {தயக்கமில்லாமல்} என் சொற்களை {ஏற்று} நிறைவேற்றுவீராக" என்றான் {கிருஷ்ணன்}" என்றார் {வைசம்பாயனர்}.(45)

விஷ்ணு பர்வம் பகுதி – 71 – 016ல் உள்ள சுலோகங்கள் : 45
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அசமஞ்சன் அதிரதன் அரிஷ்டன் அர்ஜுனன் அனு அஜமீடன் ஆபவர் ஆயு ஆஹுகன் இந்திரன் இளை உக்ரஸேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு ஊர்வசி ஊர்வர் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கபிலர் கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குரோஷ்டு குவலாஷ்வன் சகடாசுரன் சததன்வன் சத்யகர்மன் சத்ருக்னன் சந்தனு சந்திரன் சனத்குமாரர் சன்னதி சிவன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தன்வந்தரி தாரை திதிக்ஷு திரிசங்கு திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பார்வதி பிரதீபன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரஸேனன் பிராசேதஸ் பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மது மயன் மாயாதேவி மார்க்கண்டேயர் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஸுதேவன் வாயு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹரி ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு