(க்ருஷ்ணம்பரதிகோபவாக்யம்)
An account of Indra-Yajna | Vishnu-Parva-Chapter-70-015 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : இந்திர விழாவிற்கான காரணத்தைக் கேட்ட கிருஷ்ணன்; அவனுக்குப் பதில் சொன்ன முதிய ஆயர்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணனும், பலராமனும் இவ்வாறு காட்டில் விளையாடித் திரிந்தபடியே மழைக்காலத்தின் இரு மாதங்களைக்[1] கழித்தனர்.(1) அதன்பிறகு விரஜத்திற்கு {ஆய்ச்சேரிக்குத்} திரும்பிய அவ்விரு வீரச் சகோதரர்களும், இந்திரனைக் கௌரவிக்கும் வகையில் ஒரு யாகம் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதையும், ஆயர்கள் பரபரப்பாகக் களியாட்டங்களில் ஈடுபட்டிருப்பதையும் கேள்விப்பட்டனர்.(2) இதைக் கண்ட கிருஷ்ணன், ஆவல் நிறைந்தவனாக, "உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிறைத்திருக்கும் இந்தச் சக்ர வேள்வி {இந்திரவிழா} என்பது என்ன?" என்று கேட்டான்.(3)
[1] "இந்தியாவில் ஒரு வருடமானது இரு மாதங்களைக் கொண்ட ஆறு பருவ காலங்களாகப் பகுக்கப்பட்டிருக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
ஆயர்களுக்கு மத்தியில் ஒரு முதியவர், "இந்திரனின் கொடி ஏன் வழிபடப்படுகிறது என்பதைக் கேட்பாயாக.(4) ஓ! பகைவரை அடக்குபவனே, தேவர்களின் மன்னனும், உலகின் தலைவனுமான இந்திரன், மேகங்களின் தலைவனாக இருக்கிறான். இக்காரணத்தினால் தொல்பழங்காலத்திலிருந்து, தலைமுறை தலைமுறையாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.(5) அவனால் {இந்திரனால்} ஆணையிடப்பட்டு, அவனது வில்லால் {வானவில்லால்} அலங்கரிக்கப்படும் மேகங்கள் புதுமழைப் பொழிவின் மூலம் தானியங்களை விளைவிக்கின்றன.(6)
மேகங்களையும், நீரையும் தருபவனும், பல வேள்விகளின் பங்கைப் பெறுபவனுமான தலைவன் புரந்தரன் {இந்திரன்}, இவ்விழாவைக் கண்டு நிறைவடைந்து, மொத்த உலகையும் நிறைவடையச் செய்கிறான்.(7) நாமும், பிற மனிதர்களும் அவனால் {இந்திரனால்} விளைவிக்கப்படும் தானியங்களை உண்டு வாழ்கிறோம், தேவர்களும் கூட இதன் மூலம் பெரும் நிறைவடைகின்றனர்.(8) தேவர்களின் மன்னன் மழையை அனுப்பும்போது தானியங்கள் விளைகின்றன. ஆகுதிகளால் பூமி நிறைவடையும்போது, மொத்த அண்டமும் அமுதத்தால் நிறைந்ததைப் போலத் தோன்றுகிறது.(9) அவனால் விளைவிக்கப்படும் புல்லை உண்டு பசுக்களும், காளைகளும், கன்றுகளும் ஊட்டத்தையும், சுகத்தையும் அடைகின்றன.(10) மேகம் எங்கே நீரைப் பொழிகிறதோ, அங்கே புல்லும், தானியங்களும் இல்லாத தரையையோ, பசித்த விலங்கையோ காண முடியாது.(11)
தலைவன் சக்ரனால் {இந்திரனால்} கறக்கப்படும் சூரியனின் அமுதக் கதிர்கள், மேகங்களின் மூலம் அமுதம் போன்ற மழையின் வடிவில் வெளிப்படுகின்றன.(12) மேகங்களில் இருந்து சக்தியுடன் அவனால் {இந்திரனால்} வெளிப்படுத்தப்படுவதும், காற்றால் அறிவிக்கப்படுவதுமான பயங்கரச் சிங்க முழக்கத்தையே மக்கள் மேகமுழக்கங்களாக அறிகிறார்கள்.(13) அவன் வெளியிடும் பயங்கர ஒலியானது, காற்றின் துணையுடன் மேகங்களால் சுமக்கப்படும்போது, மலைகளையே பிளக்கும் வஜ்ரத்தின் முழக்கம் போல {இடியோசையாகக்} கேட்கப்படுகிறது.(14) ஓ! என் குழந்தாய், பூதகணங்களால் சூழப்பட்ட பெருந்தலைவன் சிவனைப் போலவே இந்திரனும் விரும்பியவாறு திரியும் மேகங்களால் சூழப்பட்டவனாக வானத்தில் இருந்து வஜ்ர முழக்கத்தின் {இடியோசையின்} துணையுடன் கூடிய மழையை அனுப்புகிறான்.(15)
சிலவேளைகளில் கெட்ட நாளுக்கு ஒப்பாகவும், சில வேளைகளில் சிதறிய தங்கத்திற்கு ஒப்பாகவும், சில வேளைகளில் மைக்கு {அஞ்சனத்திற்கு} ஒப்பாகவும், சில வேளைகளில் நீர்த்துளிகளைப் பொழிந்தும் மேகங்கள் வானத்தை வண்ணந்தீட்டுகின்றன. நீரைத் தருபவனான இந்திரன், இவ்வாறு சூரியக் கதிர்களின் மூலம் பூமியில் இருந்து நீரைப் பிரித்தெடுத்து, அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக மீண்டும் அதைப் பூமிக்கு அனுப்புகிறான்[2].(16-18) ஓ! கிருஷ்ணா, இந்தக் காரணங்களால்தான் இந்த மழைக்காலமானது இந்திரனை வழிபடுவதற்கான காலமாக உறுதிப்படுத்தப்படுகிறது. மன்னர்களும், பிற மனிதர்களும் இந்த மழைக்காலத்தில் இந்திரனை மகிழ்ச்சியுடன் வழிபடுகிறார்கள். நாமும் அவ்வாறே செய்கிறோம்[3]" என்று மறுமொழி கூறினார் {அந்த முதிய கோபர்}" என்றார் {வைசம்பாயனர்}.(19)
[2] "பண்டைய இந்துக்கள் மேகங்கள் உருவாகும் அறிவியலை அறியாதவர்களல்ல என்பதையே இது காட்டுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[3] "மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும் ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்க" என்றும், "நாவலோங்கிய மாபெருந்தீவினுட் காவற்றெய்வந் தேவர்கோற் கெடுத்த தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்" என்றும் உள்ள மணிமேகலை பாடல்களால் தமிழகத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டதை அறிய முடிகிறது. இந்திர விழாவைத் "தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்" என்று சீத்தலைசாத்தனார் கூறுகிறார். சிலப்பதிகாரத்திலும் இந்திரவிழா குறித்த செய்திகள் உண்டு. சிலப்பதிகாரம், மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது.
விஷ்ணு பர்வம் பகுதி – 70 – 015ல் உள்ள சுலோகங்கள் : 19
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |