(அக்ரூரசரிதம்)
An account of Akrura | Harivamsa-Parva-Chapter-39 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : சியமந்தக மணிக்காக ஸத்ராஜித்தைக் கொன்ற சததன்வன்; சியமந்தக மணியை அக்ரூரனிடம் கொடுத்த சததன்வன்; கிருஷ்ணனிடம் அழுத ஸத்தியபாமா; சததன்வனைக் கொன்ற கிருஷ்ணன்; கிருஷ்ணனிடம் கோபமடைந்து மிதிலைக்குச் சென்ற பலராமன்; பெரும் வேள்விகளைச் செய்த அக்ரூரன்; அக்ரூரனிடம் சியமந்தக மணியைப் பெற்று அவனுக்கே அதைத் திருப்பியளித்த கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணனால் ஸத்ராஜித்துக்குக் கொடுக்கப்பட்டதும், சததன்வனால் களவாடப்பட்டதும், ஒப்பற்றதுமான அந்த மணியை {சியமந்தக மணியை} அக்ரூரன் வைத்திருந்தான்.(1) அக்ரூரன், அழகிய ஸத்யபாமாவை எப்போதும் விரும்பினான்[1]. அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததும் அந்த மதிப்புமிக்க மணியைத் தன்னுடைமையாகக் கொள்ள அவன் விரும்பினான்.(2) அதன்பேரில், பெருஞ்சக்தி கொண்ட சததன்வன் ஒரு பயங்கர இரவில் ஸத்ராஜித்தைக் கொன்று, அந்த மணியை அபகரித்து அதை அக்ரூரனுக்குப் பரிசளித்தான்[2].(3)
[1] "இந்த வாக்கியம் குழப்பமானது, இதை மேலும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அக்ரூரன் சத்தியபாமாவைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்தான். ஆனால் அவள் கிருஷ்ணனுக்குக் கொடுக்கப்படுவதைக் கண்ட போது அவன் பெரிதும் புண்பட்டான். அதன் பிறகு அவன் சியமந்தக மணியை அடையும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்தான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பப்ரு குடும்பத்தைச் சார்ந்த மன்னன் அக்ரூரன், சியமந்த மணியை அடைய வேண்டும் என்ற விருப்பத்தை நெடுநாட்களாகக் கொண்டிருந்ததால், ஸத்ராஜித்திடம் ஸத்யபாமாவைத் திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டிருந்தான். ஆனால் அந்த மணி கிருஷ்ணனால் களவாடப்பட்டது என்றறிந்தபோது அவன் புண்பட்டான். அதைக் கிருஷ்ணன் மீண்டும் ஸத்ராஜித்திடம் கொடுத்தபோது, அவனுடைய ஆசை புத்துயிர் பெற்றது. ஆனால் இப்போதோ ஸத்ராஜித்திடம் கேட்பதற்கு அவனிடம் ஸத்யபாமா இல்லை. எனவே அவன் மற்றொரு போஜனான ஹ்ருதிகனின் மகன் சததன்வனுடன் சேர்ந்து அந்த மணியை ’எப்படியேனும்’ கொண்டு வந்து விட வேண்டுமெனச் சதி செய்தான். ஆனால் சததன்வனோ, நடு இரவில் ஸத்ராஜித்தைக் கொன்று அந்த மணியைக் களவாடி அதை மன்னன் அக்ரூரனிடம் கொடுத்தான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அக்ரூரன், நடு இரவில் ஒரு கோழையைப் போல ஸத்ராஜித்தைக் கொல்லுமாறு சததன்வனிடம் சொல்லவில்லை. ஆனால் சததன்வன் கொண்டிருந்த பேய்போன்ற பேராசையின் காரணமாக அவ்வாறு செய்துவிட்டு, அந்த மணியை அக்ரூரனிடம் கொண்டு வந்து அதை மறைக்குமாறு அவனை வேண்டுகிறான். முதலில் அக்ரூரன் மறுத்தாலும், பின்னர் அதை ஏற்றுக் கொள்கிறான் என்று மற்றொரு உரை சொல்கிறது. உண்மையில், ஸத்ராஜித்தின் மகளான ஸத்யபாமாவைத் திருமணம் செய்து கொள்ளவும், அந்த மணியை அடையவும் மூன்று பேர் முயற்சி செய்தனர். அவர்கள் அக்ரூரன், கிருதவர்மன் மற்றும் சததன்வன் ஆகியோராவார். ஸத்யபாமாவும், {சியமந்தக} மணியும் கிருஷ்ணனிடம் சென்றதும், இந்த மூவரும் தங்களின் மதிப்புக் குறைந்துவிட்டதாக உணர்ந்து, பழிதீர்க்க விரும்பினர். ருக்மிணி கல்யாணக் கதைக்கும், இந்தக் கதைக்கும் கூட ஒரு தொடர்பிருக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அக்ரூரன், தன் இதயத்தில் நீண்ட காலமாகச் சியமந்தக மணியை அடைய விரும்பியிருந்தான், மேலும் மாசற்றவளான ஸத்யபாமாவையும் அவன் விரும்பினான். பப்ரு போஜனின் வழித்தோன்றலான சததன்வனும் இதே போன்ற விருப்பத்தை வளர்த்து வந்தான். கிருஷ்ணன் அந்தச் சியமந்தக மணியை ஸத்ராஜித்திடம் ஒப்படைத்தான். பெரும் பலம் கொண்டவனான சததன்வன் நடு இரவில் ஸத்ராஜித்தைக் கொன்றான். அந்த மணியை அபகரித்து வந்து அக்ரூரனிடம் கொடுத்தான். ஓர் உடன்பாட்டைச் செய்து கொண்டு அக்ரூரனும் அந்த மணியை ஏற்றுக் கொண்டான்" என்றிருக்கிறது.
சததன்வனிடம் இருந்து அந்த மணியைப் பெற்றுக் கொண்ட அவன் (அக்ரூரன்), அந்த மணி தன்னிடம் இருப்பதை ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது என்ற உறுதிமொழியை அவனிடம் பெற்றுக் கொண்டான்.(4) (அவன் {அக்ரூரன்}), "கிருஷ்ணன் உன்னைத் தாக்கினால் நான் உன்னைச் சார்ந்திருப்பேன். மொத்த துவாரகையின் மெய்யாகவே இப்போது என் கட்டுப்பாட்டில் இருக்கிறது" என்றான்.(5)
சிறப்புமிக்கவளான ஸத்யபாமா, தன் தந்தை (ஸத்ராஜித்) கொல்லப்பட்டதும், துயரில் பீடிக்கப்பட்டவளாக ஒரு தேரில் ஏறி வாரணாவத நகரத்திற்குச் சென்றாள்.(6) பிறகு அவள், போஜ குலத்தின் சததன்வனால் இழைக்கப்பட்ட செயல் குறித்துத் தன் கணவனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்னாள். அப்போது துயரால் பீடிக்கப்பட்டிருந்த அவள் {ஸத்யபாமா}, அவனது {கிருஷ்ணனின்} அருகில் நின்று கண்ணீர் சிந்தத் தொடங்கினாள்.(7) கிருஷ்ணன், அரக்கு மாளிகையில் எரிந்த பாண்டவர்களுக்கு நீர்க்கடன் செலுத்திவிட்டு, அவர்களுக்கான {பாண்டவர்களுக்கான} ஈமச் சடங்குகளைச் செய்வதில் சாத்யகியை ஈடுபடுத்தினான்[3].(8) {இவ்வாறு சாத்யகியை ஈடுபடுத்திவிட்டு அவன் விரைவாகத் துவாரகைக்குச் சென்றான்}. துவாரகா நகருக்கு விரைந்த சென்ற அருள்நிறைந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}[4], தன் அண்ணனான ஹலாதரனிடம் {பலராமனிடம்}[5],(9) "பிரஸேனன் சிங்கத்தால் கொல்லப்பட்டான், ஸத்ராஜித் சததன்வனால் கொல்லப்பட்டான். எனவே, நானே சியமந்தக மணியின் உரிமையாளன் ஆவேன்.(10) எனவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரரே, விரைவாக உமது தேரில் ஏறுவீராக. பெருஞ்சக்திமிக்கப் போஜனான சததன்வனைக் கொன்ற பிறகு சியமந்தகம் நமதாகும்" என்றான்.(11)
[3] "இஃது ஒரு மஹாபாரத நிகழ்வைக் குறிப்பிடுகிறது. துரியோதனன், பாண்டவர்களை எரிப்பதற்காகக் கட்டப்பட்ட அரக்கு மாளிகைக்கு வஞ்சகமாக அவர்களை வர வைத்து, அதற்குத் தீ மூட்டினான். எனினும், இதை ஏற்கனவே அறிந்த அவர்கள் தப்பிவிட்டாலும், அவர்கள் எரிந்து விட்டதாகவே துரியோதனன் கருதினான். அந்தத் தோற்றத்தை அப்படியே தக்க வைப்பதற்காகக் கிருஷ்ணன் ஈமச்சடங்குகளைச் செய்தான் (ஜதுக்கிரக உபபர்வத்தைப் பார்க்கவும்)" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். ஆதிபர்வம், ஜதுக்கிரக உப பர்வத்தில் பகுதி 44-50ல் பாண்டவர்கள் வாரணாவதத்தில் உள்ள அரக்கு மாளிகைக்குச் செல்வதும், அங்கே இருந்து தப்பிக்கச் சுரங்கம் தோண்டுவதும், பீமனே அம்மாளிக்கைக்குத் தீ மூட்டுவதும் விளக்கப்பட்டிருக்கிறது. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு நீர்க்கடன் செலுத்தும் காட்சி ஆதிபர்வம் 152ம் பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது.
[4] "இது கிருஷ்ணனுடைய பெயராகும். அசுர மன்னன் மதுவைக் கொன்றதால் அவன் அவ்வாறு அழைக்கப்பட்டான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[5] "போர்க்களத்திற்கு ஏர்க்கலப்பையை எப்போதும் எடுத்துச் செல்பவன் என்பதால் பலராமன் அவ்வாறு அழைக்கப்பட்டான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். பலராமன் ஹலாயுதன் {கலாயுதன்} என்றும் அழைக்கப்பட்டான்.
அதன்பேரில் கிருஷ்ணனுக்கும், சததன்வனுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் ஏற்பட்டது. பின்னவன் அனைத்துப் பக்கங்களிலும் அக்ரூரனைக் கண்டான் {தேடினான்}.(12) கிருஷ்ணன் மற்றும் சததன்வன் ஆகியோர் இருவரும் கடுஞ்சினத்துடன் இருப்பதைக் கண்ட அக்ரூரன், உதவ இயன்றவனாக இருந்தபோதிலும் தன் தீய குணத்தினால் அந்த ஹிருதிகன் மகனுக்கு {சததன்வனுக்கு} உதவாமல் இருந்தான்.(13) அச்சத்தால் பீடிக்கப்பட்ட சததன்வன் தப்பி ஓடினான். ஒரு பெண் குதிரையுடன் அவன் நூறு யோஜனை தொலைவைக் கடந்தான்[6].(14) ஓ! மன்னா, போஜ குலத்தின் சததன்வன், விஜ்ஞாதாஹ்ருதயம் {விக்யாதாஹ்ருதயம்} என்ற பெயரைக் கொண்ட அந்தப் பெண் குதிரையில் நூறு யோஜனை தொலைவைக் கடந்தான். அவளுடன் {அந்தப் பெண்குதிரையுடன்} சேர்ந்து அவன் கிருஷ்ணனுடன் போரிட்டான்.(15) நூறு யோஜனைகளைக் கடந்த சததன்வன், அவள் {அந்தப் பெண் குதிரை} அசைவற்றிருப்பதையும், தேர் வேகமாகச் செல்வதையும் கண்டு அவளை விடுவித்தான்.(16) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அந்தப் பெண் குதிரை களைப்பால் பீடிக்கப்பட்டதும், அவனுடைய உயிர் மூச்சுகள் அனைத்தும் வான் நோக்கி உயரச் சென்றன. அப்போது கிருஷ்ணன், ராமனிடம்,(17) "ஓ! பெருங்கரங்களைக் கொண்டவரே, இங்கேயே காத்திருப்பீராக. அந்தப் பெண்குதிரையின் பரிதாப நிலையை நான் கண்டேன். நடந்தே சென்று நான் சியமந்தக மணியை அடைவேன்" என்றான்[7].(18)
[6] "நான்கு குரோசத்திற்கு இணையான இந்தத் தொலைவு 8000 முழம் ஆகும் அல்லது சரியாக 4000 யார்டு அளவைக் கொண்ட ஒன்பது மைல் தொலைவாக இருக்கும்; மற்ற கணக்கீடுகள் ஐந்து மைல்கள் அல்லது நாலரை மைல்கள் தொலைவைக் குறிப்பிடுகின்றன என வில்சன் சொல்கிறார்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். "ஒரு யோஜனை என்பது 8 கி.மீ. அளவுக்கு இணையானது என்பது ஆர்யபட்டரின் குறிப்பு. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 13 கி.மீக்கு இணையானது என்கிறார். The Ancient Geography of Indiaவில் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் {Alexander Cunningham) 13.2 கி.மீ. என்கிறார். ஒரு யோஜனை என்பது 1.6 கி.மீ. தான் என்றும் சிலர் வாதிடுகின்றனர்" என முழுமஹாபாரதம் துரோண பர்வம் பகுதி 111ல் வரும் 2ம் அடிக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "குதிரை இறந்ததும் சததன்வன் கீழே இறங்கி ஓடத் தொடங்கினான். அப்போது கிருஷ்ணன் தன் அண்ணன் பலராமனிடம், "ஓ! வலிய கரங்களைக் கொண்ட அண்ணா, சற்றுநேரம் இங்கே காத்திருப்பீராக. நம் குதிரைகள் களைப்படைவதாகத் தெரிகிறது. இவற்றுக்கு ஓய்வு தேவை. அந்த அஞ்சாநெஞ்சனும் ஓடவே செய்கிறான். எனவே, நானும் ஓடியே அவனைத் துரத்திச் சென்று உடமையைக் கவந்து வருகிறேன்" என்றான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவன் தப்பியோடும்போது, தேரில் இருந்த கிருஷ்ணன், ராமனிடம், "ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, நீர் இங்கே காத்திருப்பீராக. என் குதிரைகளும் களைத்திருக்கின்றன. நான் ஓடியே அவனைப் பின்தொடர்ந்து சென்று சியமந்தக மணியைக் கைப்பற்றுவேன்" என்றான்" என்றிருக்கிறது.
அதன்பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உயர்ந்த திறனைக் கொண்டிருந்த அச்யுதன் (கிருஷ்ணன்), மிதிலைக்குச் செல்லும் வழியில் வைத்து சததன்வனைக் கொன்றான்.(19) பெருஞ்சக்தி கொண்ட அந்தப் போஜமன்னனைக் கொன்ற பிறகும், அவனால் சியமந்தகத்தைக் காண முடியவில்லை. கிருஷ்ணன் திரும்பி வந்ததைக் கண்ட பலராமன், அவனிடம், "அந்த மணியை என்னிடம் கொடுப்பாயாக" என்றான்.(20)
கிருஷ்ணன், "அஃது என்னிடம் இல்லை" என்றான். இதனால் ராமன் {பலராமன்} கோபத்தில் நிறைந்தான். அவன் ஜனார்த்தனனிடம், "உனக்கு ஐயோ, உனக்கு ஐயோ" என்று மீண்டும் மீண்டும் சொன்னான். பிறகு, "நீ என் தம்பியாக இருப்பதால் உன்னை நான் மன்னிக்கிறேன். நீ நலமுடன் செல்வாயாக. உன்னிடமோ, துவாரகையின் விருஷ்ணிகளிடமோ எனக்கு ஆகவேண்டியது ஏதுமில்லை" என்றான்[8].(21) பகைவரை அடக்குபவனான ராமன் {பலராமன்} அதன்பிறகு மிதிலை நகருக்குள் நுழைந்தான். அப்போது அவனது இதயம் விரும்பும் பரிசுகள் அனைத்தையும் கொடுத்து மிதிலையின் மன்னன் அவனை வரவேற்றான்.(23)
[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "திரும்பி வந்த கிருஷ்ணனிடம் பலராமன், "அந்த மணி எங்கே? அதை என்னிடம் கொடுப்பாயாக" என்று கேட்டான். கிருஷ்ணன், பலராமனிடம், "அஃது அவனிடம் இல்லை. என் முயற்சி பலனளிக்கவில்லை" என்றான். அதன்பேரில், "உனக்கு ஐயோ, ஐயோ" என்று மீண்டும் மீண்டும் சொன்ன பலராமன், மீண்டும் ஜனார்த்தனனிடம், "நீ என் தம்பி என்பதால், உன் வஞ்சனைகளையும், ஏமாற்றுத்தனங்களையும் இதுவரை நான் எதிர்கொண்டேன். இனி முடியாது. உன்னாலோ, விருஷ்ணிகளாலோ, துவாரகையாலோ எனக்கு ஆகவேண்டியது எதுவுமில்லை. நமக்குள் உள்ள பந்தத்தை நான் அறுத்துக் கொள்கிறேன். நான் போகிறேன், நீ நலமாகச் செல்வாயாக" என்றான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கிருஷ்ணன் திரும்பியதும், அந்தக் கலப்பைதாரி அவனிடம், "மணியை என்னிடம் கொடுப்பாயாக" என்றான். கிருஷ்ணன், "அஃது என்னிடம் இல்லை" என்றான். கோபத்தால் நிறைந்த ராமன், ஜனார்த்தனனிடம், "உனக்கு ஐயோ. முன்பும் நீ என்னை அவமதித்திருக்கிறாய். நீ என் தம்பியாகையால் நான் அதைப் பொறுத்தேன். நீ நலமாக இருப்பாயாக. நான் செல்கிறேன். உனக்கோ, துவாரகைக்கோ, விருஷ்ணிகளுக்கோ நான் செய்ய வேண்டியது ஏதுமில்லை" என்றான்" என்றிருக்கிறது.
அதே வேளையில், பெரும் நுண்ணறிவுமிக்கப் பப்ரு {பப்ருவின் மகன் அக்ரூரன்}, வேள்விகள் செய்வதற்கான பல்வேறு பொருட்களைத் திரட்டத் தொடங்கினான்.(24) காந்தினியின் சிறப்புமிக்க மகனானவன் {அக்ரூரன்}, சியமந்த மணியின் காரணமாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தொடக்கம் (தீக்ஷை) போன்ற கவசத்திற்குள் {யாகதீக்ஷை என்ற கவசத்திற்குள்}[9] நுழைந்தான்.(25) அவன், வேள்விகள் செய்வதற்காக மிகச் சிறந்த ஆபரணங்களையும், பல்வேறு பொருட்களையும் அறுபதாயிரம் {60000} வருடங்கள் அர்ப்பணித்தான்.(26) உணவு மற்றும் பல்வேறு கொடைகளுடன் செய்யப்பட்ட உயரான்ம அக்ரூரனின் அந்த வேள்வி, அக்ரூரயஜ்ஞம் என்றழைக்கப்பட்டது.(27) அப்போது மன்னன் துரியோதனன், மிதிலை நகருக்குச் சென்று, கதாயுதப் பயன்பாட்டில் மிகச் சிறந்த போதனைகளைப் பலபத்ரனிடம் {பலராமனிடம்} பெற்றான்.(28) அதன்பின்னர், விருஷ்ணி குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், உயரான்ம கிருஷ்ணனும் சேர்ந்து பலராமனை நிறைவடையச் செய்து துவாரகை நகருக்குத் திரும்ப அழைத்து வந்தனர்.(29)
[9] "வேள்விகள் செய்வது தீப்பேறுகள் அனைத்திற்கும் எதிரான சான்று என்பதால் அவன் அவற்றைச் செய்யத் தொடங்கிறான்" என்றிருக்கிறது.
அப்போது, மனிதர்களில் முதன்மையான அக்ரூரன், அந்தகர்களுடன் சேர்ந்து துவாரகையை விட்டுச் சென்றான். பெருஞ்சக்திவாய்ந்த ஸத்ராஜித்தையும், அவனது நண்பர்களையும் கொன்றதிலும், தன் உற்றார் உறவினருக்கு மத்தியில் உண்டான பிளவிலும் கிருஷ்ணன் அவனை (அக்ரூரனைப்) புறக்கணித்தான்[10]. அக்ரூரன் சென்ற பிறகு, பாகசாஸனன் {இந்திரன்}[11] மழை பொழியாதிருந்தான்.(30,31) மொத்த நாடும் பஞ்சத்தால் அழிந்தபோது குகுரர்களும் அந்தகர்களும், அக்ரூரனைத் தணிவடையச் செய்யத் தொடங்கினர்.(32) தயாளனான அக்ரூரன் துவாரகைக்குத் திரும்பியபோது, ஆயிரங்கண் இந்திரன், கடற்கரையில் மழைபொழியத் தொடங்கினான்.(33) ஓ! குருக்களில் முதன்மையானவனே, அந்த அக்ரூரன், கிருஷ்ணனை நிறைவடையச் செய்வதற்காகத் தன்னுடன் பிறந்தவளான ஸுசீலையை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.(34)
[10] தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில், "சததன்வனால் ஸத்ராஜித் கொல்லப்பட்டதற்கு வெகு காலத்திற்குப் பிறகு, அக்ரூரன் வேதச் சடங்குகள் முதலியவற்றைச் செய்தற்கும் பிறகு, யாதவக் குல மரபினருக்கு மத்தியில் ஒரு சச்சரவு நேர்ந்தது. ஒரு யாதவன், சத்ருக்னன் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு யாதவனைக் கொன்றான். அக்ரூரன் கொல்லப்பட்ட யாதவனின் தரப்பில் இருந்தான். அங்கே ஒரு மோதல் நடந்தது. அதில் அக்ரூரனின் தரப்புத் தோல்வி அடைந்ததால், தப்பியோடிய தன் உற்றார் உறவினரான அந்தகர்களோடு சேர்ந்து அவனும் தப்பியோடினான். கிருஷ்ணன், தன் குல மரபினருக்கு மத்தியில் நடந்த உட்பூசலைக் கண்டு யாருக்கும் ஆதரவளிக்காமல் இருந்தான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இந்த ஸ்லோகத்தைப் புரிந்து கொள்வது சிக்கலானதாகும். இந்த நாட்களில் கிருஷ்ணன் அறியாமல் பெரும் வேத சடங்குகளைச் செய்தபடியே அக்ரூரன் காசியில் இருந்தானா, மதுராவில் இருந்தானா, துவாரகையில் இருந்தானா என்பது தெரியவில்லை. இது போன்ற கேள்விகளும், இன்னும் அதிகமான கேள்விகளும் பின்வரும் ஸ்லோகங்களிலும் கூட உந்தியெழும்" என்றிருக்கிறது.
[11] "இது மழையின் தேவனான இந்திரனின் பெயராகும். பகன் என்ற பெயரில் இருந்த ஓர் அசுரனைக் கொன்றதன் மூலம் அவன் இந்தப் பட்டப்பெயரைப் பெற்றான். இந்தச் சொல்லுக்கு, "பகனைத் தண்டித்தவன்" என்பது பொருளாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
அக்ரூரனின் வளங்கள் மற்றும் தயாளத்தைக் கொண்டு சியமந்தகம் அவனிடம் தான் இருக்கிறது என்பதை ஊகித்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஓரு சபைக்கு மத்தியில் வைத்து அவனிடம், "ஓ! தலைவா, அந்த மணி {சியமந்தகம்} உன்னிடம்தான் இருக்கிறது {என்பதை நானறிவேன்}. அதை நீ என்னிடம் கொடுப்பாயாக. ஓ! கௌரவங்களை அளிப்பவனே, என்னை வஞ்சிக்காதே. ஓ! பாவமற்றவனே, அறுபது வருடங்களுக்கு முன்பு என்னைப் பீடித்திருந்த கோபம் இப்போது திடீரென மூள்கிறது. வெகுகாலம் கடந்து விட்டது. எனவே அந்த மணியை என்னிடம் கொடுப்பாயாக" என்றான்.(35-37)
கிருஷ்ணனுடைய சொற்களின் பேரில் சிறு துன்பத்தையும் அடையாதவனும், உயர்ந்த மனம் கொண்டவனுமான அக்ரூரன், சாத்வதர்களின் சபைக்கு மத்தியில் வைத்து அந்த மணியை அவனிடம் கொடுத்தான்.(38) பணிவுடன் அந்த மணியைக் கொடுத்த அக்ரூரனிடம் இருந்து அதைப் பெற்றுக் கொண்டவனும், பகைவர்களை ஒடுக்குபவனுமான ஹரி {கிருஷ்ணன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அதை அவனிடமே திருப்பிக் கொடுத்தான்.(39) அக்ரூரன், கிருஷ்ணனின் கரங்களில் இருந்து அந்த மணியைப் பெற்று, அதைத் தன் மார்போடு தழுவிக் கொண்டு அங்கே சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்" என்றார் {வைசம்பாயனர்}[12].(40)
[12] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கிருஷ்ணன் அந்த மணி யாரிடம் இருக்க வேண்டும் என்று சிறிது நேரம் சிந்தித்தான். அதைக் கொள்வதற்கு மூன்று பேர் மட்டுமே இருந்தனர். முதலில் அதைப் பாமா {சத்தியபாமா} வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதை வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு அவள் நுண்ணறிவுமிக்கவளல்ல. அவளுக்குப் பிறகு அதை வைத்துக் கொள்ளக்கூடிய ஒருவன் பலராமன். ஆனால் மகிழ்ச்சிமிக்கவனும், நற்பேறு நிறைந்தவனுமான அவனோ, சடங்குகள் செய்வதில் எல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல் மது மற்றும் உணவு தொடர்பான காரியங்களில் அதிகக் கவலை கொள்பவன் ஆவான். அடுத்து வருபவன் கிருஷ்ணன். ஆனால் அவன் மற்ற காரியங்கள் அனைத்தையும் விட்டுவிட்டுச் சடங்குகள் மற்றும் கொடைகளில் ஈடுபட்டுப் பொறுமையாகவும், அமைதியாகவும் அமர்ந்திருக்க முடியாது. எனவே, அந்த மணியைக் கொள்ளத்தகுந்த இன்னும் பிற மோசமானவர்கள் பலரிலும் சிறந்தவனாக அக்ரூரன் மட்டுமே எஞ்சியிருக்கிறான். அவசியமில்லாமல் பெறப்படும் மணிகள், தேர்கள், விற்கள் உள்ளிட்ட இதுபோன்ற தெய்வீகப் பொருட்கள், பேரழிவுகளின் தீவினைக்கஞ்சாத எந்த இல்லறத்தானின் {எந்த மனிதனின்} வீட்டிலும் தங்காது" என்றிருக்கிறது.
ஹரிவம்ச பர்வம் பகுதி – 39ல் உள்ள சுலோகங்கள் : 40
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |