Wednesday 22 April 2020

பூருவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 31

(கக்ஷேயு வம்ச வர்ணனம்)

An account of the Puru's family | Harivamsa-Parva-Chapter-31 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பூருவின் வழித்தோன்றலான ரௌஸ்ராஸ்வன்; மஹாமனனின் முதல் மகனான உசீநரனின் வழித்தோன்றல்களான சௌவீரம், கைகேயம் மற்றும் மத்ரக நாட்டு மன்னர்கள்; அவனது இரண்டாம் மகனான திதிக்ஷுவின் வழித்தோன்றலான பலி, பலியின் மகன்களின் வழியில் வந்த அங்க, வங்க, சுங்க மற்றும் கலிங்க நாட்டு மன்னர்கள்; அங்க நாட்டு மன்னர்களின் குலவரிசை; அங்க நாட்டு மன்னன் ஜயத்ரதனின் தம்பியான விஜயனின் வழித்தோன்றலான சத்யகர்மனுக்கு ஒரு பிராமணப் பெண் மூலம் பிறந்த அதிரதன்; கர்ணனைத் தத்தெடுத்த அதிரதன்; அங்கநாட்டு மன்னனான கர்ணனின் வழித்தோன்றல்கள்....

ஜனேமஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பிராமணரே, பூரு, திருஹ்யு, அனு, யது மற்றும் துர்வஸு ஆகியோரைக் குறித்துத் தனித்தனியாகவும், உண்மையாகவும், கேட்க விரும்புகிறேன். விருஷ்ணிகளின் குலத்தை விளக்கும்போது தொடக்கத்தில் இருந்தே விரிவாக அவர்களைக் குறித்து விளக்குவீராக" என்றான்.(1,2)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "முதலில் நீ பிறந்ததும், உன் குடும்பமுமான பூருவின் குலத்தைக் குறித்துத் தொடக்கத்தில் இருந்து கேட்பாயாக.(3) ஓ! மன்னா, மிகச் சிறந்த குடும்பமான பூருவின் குடும்பத்தைக் குறித்தும், திருஹ்யு, அனு, யது மற்றும் துர்வஸு ஆகியோரின் குடும்பங்களைக் குறித்தும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(4) ஓ! ஜனமேஜயா, பூருவின் மகன் பெருஞ்சக்திவாய்ந்த மன்னனாவான்; கிழக்குப் பகுதியை வென்றவனான பிராசீனவானே அவனுடைய மகனாவான்.(5) பிராசீனவானின் மகன் பிரவீரனும், அவனுடைய {பிரவீரனின்} மகன் மனஸ்யுவும் ஆவர். அவனுடைய {மனஸ்யுவின்} மகன் மன்னன் அபயதன், அவனுடைய {அபயதனின்} மகன் மன்னன் ஸுதன்வனும் ஆவர். அவனுடைய {ஸுதன்வனின்} மகன் பஹுகவனும், அவனுடைய {பஹுகவனின்} மகன் ஸம்யாதியும் ஆவர்.(6,7) அவனுடைய {ஸம்யாதியின்} மகன் ரஹஸ்யாதியும், அவனுடைய {ரஹஸ்யாதியின்} மகன் ரௌத்ராஸ்வனும் ஆவர். பின்னவன் {ரௌத்ராஸ்வன்} பத்து மகன்களையும், பத்து மகள்களையும் கொண்டிருந்தான்.(8)

அந்த மகன்கள் முறையே தசார்ணேயு, கிருகணேயு, கக்ஷேயு, ஸ்தண்டிலேசு {ஸ்தண்டிலேயு}, ஸௌனதேயு {ஸன்னதேயு}, ரிசேயு, ஸ்தலேயு, ஜலேயு, தனேயு, மற்றும் வனேயு என்ற பெயர்களைக் கொண்டோராவர். மகள்களாக ருத்ரை, ஸூத்ரை, பத்ரை, சாலதை, மலதை, கலதை, சலதை {மலஹை}, பலதை, ஸுரதை {ஸுரஸை}, மற்றும் கோசபதை {கோசபலை} என்ற பெயர்களைக் கொண்டோராவர். இந்தப் பத்து மகள்களும், தங்கள் அழகில் ஊர்வசி மற்றும் பிற பெண்குல ரத்திரங்களையும் வீழ்த்தினர்.(9-11) அத்ரி குலத்தில் பிறந்த பிரபாகர முனிவர் அவர்களின் கணவராக இருந்தார். அவர் ருத்ரையிடம் சோமன் {சந்திரனிடம்} என்ற தன் சிறப்புமிக்க மகனைப் பெற்றார்.(12) சூரியன், ராகுவால் {ஸ்வர்ப்பானுவால்} வீழ்த்தப்பட்டுப் பூமியில் விழுந்து மொத்த உலகும் இருளில் மூழ்கும்போது அவன் {சோமன்} தன் கதிர்களை எங்கும் பரப்புகிறான்[1].(13)

[1] ஹரிவம்ச பர்வம் 25:5,6ல் சந்திரன் அத்ரியின் மகன் என்று இருக்கிறது. இங்கே அத்ரியின் வழி வந்த பிரபாகர முனிவரின் மகனாகச் சொல்லப்படுகிறான்.

அந்த முனிவர் {பிரபாகரர்}, "உனக்கு நன்மை நேரட்டும்" என்றபோது, அவரது சொற்களின்படியே சூரியன் வானத்தில் இருந்து விழாதிருந்தான்.(14) பெருந்தவசியான அந்த அத்ரி {பிரபாகரர்}, பெருங்குடும்பங்களை நிறுவியவராவார். அவரது வேள்வியில் தேவர்களும் வளங்களைச் சுமந்தனர்[2].(15) இந்த உயரான்ம முனிவர், ரௌத்ராஸ்வனின் பத்து மகள்களிடம், எப்போதும் கடுந்தவங்களைச் செய்யும் பத்து மகன்களைப் பெற்றார்.(16) ஓ! மன்னா, வேதங்களில் தேர்ந்த அந்த முனிவர்கள், குலங்களை நிறுவியவர்களாக இருந்தனர். அவர்கள் ஸ்வஸ்தியாத்ரேயர்கள் என்ற பெயரைக் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் அத்ரியிடம் செல்வமேதும் இருக்கவில்லை[3].(17)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "அத்ரியின் சந்ததியை நோக்கமாகக் கொண்ட வேத சடங்குகளில் அவருக்காகவே தேவர்கள் சில பொருள்களை ஈடாக நிர்ணயித்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வேள்விகளில் அத்ரியின் பரம்பரைக்கெனத் தேவர்கள் செல்வத்தை ஒதுக்கிக் கட்டளையிட்டனர்" என்றிருக்கிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஆனால் அவர்கள் {அந்த ஸ்வஸ்தியாத்ரேயர்கள்} அத்ரியின் மரபுரிமைகளைப் பெறவில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அம்முனிவர்கள் தேவர்களில் நிறைவடைந்தவர்களாகவும், தங்களுக்கெனக் கோத்ரங்களை நிறுவியவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அத்ரியின் வளங்களைப் பெறவில்லையெனினும் அவர்கள் ஸ்வஸ்தியாத்ரேயர்கள் என்று அறியப்பட்டனர்" என்றிருக்கிறது.

{ரௌத்ராஸ்வனின் மூன்றாவது மகனான} கக்ஷேயுவுக்கு, பெரும் தேர்வீரர்களான ஸுபானரன் {ஸபானரன்}, சாக்ஷுஷன், பரமன்யு ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.(18) கல்விமானான மன்னன் காலானலன், ஸுபானரன் மகனாவன். அவனுடைய மகன் பக்திமானான ஸ்ருஞ்ஜயன் ஆவான்.(19) வீர மன்னனான புரஞ்ஜயன், ஸ்ருஞ்ஜயனின் மகனாவான். ஓ! மன்னா, ஜனமேஜயன், புரஞ்ஜயனின் மகனாவான்.(20) அரசமுனியான மஹாசாலன், ஜனமேஜயனின் மகனாவான். அவன் வேதங்களை நன்கறிந்தவனாகவும், பூமியில் புகழ்பெற்றவனாகவும் இருந்தான்.(21) பக்திமானான மஹாமனன், மஹாசாலனின் மகனாவான். வீரனும், தயாள மனம் கொண்டவனும், தேவர்கள் அனைவராலும் மதிக்கப்படுபவனுமாக அவன் {மஹாமனன்} இருந்தான்.(22)

ஓ! பரதனின் வழித்தோன்றலே, மஹாமனன், பெரும்பலம் கொண்டவர்களான உசீநரன், மற்றும் திதிக்ஷு என்ற இரு மகன்களைப் பெற்றான்.(23) உசீநரன், அரசமுனிகளான நிருகன், க்ருமி, நவன், தர்வன், திருஷத்வதி ஆகியோரின் குடும்பங்களில் ஐந்து மனைவியரைக் கொண்டான்.(24) அவன் தன் மனைவியரிடம் தன் குலத்தைத் தழைக்கச் செய்த ஐந்து மகன்களைப் பெற்றான். ஓ! பரதனின் வழித்தோன்றலே, அவன் தன் முதிய வயதில் கடும் தவங்களைச் செய்து அந்த மகன்கள் அனைவரையும் பெற்றான்.(25) நிருகையிடம், நிருகன் என்ற மகனையும், க்ருமியிடம், கிருமன் என்ற மகனையும், நவையிடம், நவன் என்ற மகனையும், தர்வியிடம், ஸுவ்ரதன் என்ற மகனையும், திருஷத்வதியிடம் மன்னன் சிபியும் பிறந்தனர். சிபியின் மகன்கள் சிபிக்கள் {அல்லது சைப்யர்கள்} என்ற பெயரையும், நிருகனின் மகன்கள் யௌதேயர்கள் என்ற பெயரையும் கொண்டனர்.(26,27) நவனின் தலைநகரம் நவராஷ்டிரம், கிருமியின் {கிருமனின்} தலைநகரம் கிருமிதை {கிருமிலாபுரி}, ஸுவ்ரதனின் தலைநகர் அம்பஷ்டம் {அம்பஷ்டபுரம்} என்ற பெயர்களில் கொண்டாடப்பட்டன. சிபியின் மகன்களுடைய பெயர்களை என்னிடம் இருந்து கேட்பாயாக.(28) வீரத்திற்காக மூவுலகிலும் புகழ்பெற்றவர்களான நான்கு மகன்கள் அவனுக்கு இருந்தனர். அவர்கள் விருஷதர்பன், ஸுவீரன், கைகயன், மற்றும் மத்ரபன் {மத்ரகன்} ஆகியோராவர்.(29) அவர்களது வளமிக்க நகரங்கள் கைகேயம், மத்ரபம் {மத்ரகம்} என்ற பெயர்களிலும் மற்றும் பிற பெயர்களையும் கொண்டிருந்தன. விருஷதர்பனும், மற்றும் பிறர் அனைவரும் வீரமிக்கவர்களாக இருந்தனர்.

{மஹாமனனின் இரண்டாம் மகனான} திதிக்ஷுவின் மகன்களுடைய பெயர்களை இப்போது கேட்பாயாக.(30) ஓ! பாரதக் குலத்தின் கொழுந்தே, திதிக்ஷுவின் மகனான உஷத்ரதன், கிழக்குப் பகுதியின் மன்னனாக இருந்தான். அவனுடைய {உஷத்ரதனின்} மகன் பேனன், அவனுடைய {பேனனின்} மகன் ஸுதபனாவான் {ஸுதபஸனாவான்}, அவனிடம் {ஸுதபனிடம்} இருந்து பலி பிறந்தான். அந்த (அசுர) மன்னன் மனிதனாகப் பிறந்திருந்தான். அவன் தங்க அம்பறாத்தூணி ஒன்றைக் கொண்டிருந்தான்.(31,32) மன்னன் பலி, பழங்காலத்தில் பெருந்தவசியாக இருந்தான். அவன் இவ்வுலகில் தன் சந்ததியைப் பெருக்கிய ஐந்து மகன்களைப் பெற்றான்.(33) அவர்களில் முதலில் பிறந்தவன் அங்கனாவான். அதன் பிறகு வங்கனும், ஸும்ஹனும் {ஸுஹ்மனும் / ஸுங்கனும்} பிறந்தனர். அவர்களுக்குப் பிறகு, புண்ட்ரனும், கலிங்கனும் பிறந்தனர். இவர்களே பலியின் க்ஷத்திரிய மகன்களாவர். பலியின் பிராமண வழித்தோன்றல்களும் இந்தப் பூமியில் செழித்திருந்தனர். ஓ! பரதனின் வழித்தோன்றலே, அவனிடம் நிறைவடைந்திருந்த பிரம்மன் அவனுக்குப் பல்வேறு வரங்களை அளித்தான்.(34,35) பெரும் தவசி என்ற கௌரவம், ஒரு கல்ப காலம் நீடித்த நீண்ட வாழ்வு, போரில் வீழாநிலை, அற முறையின் தலைமை, மூவுலகங்களையும் காணும் பார்வை, ஆணையிடுவதில் மேலாதிக்கம், அற நுட்பங்களில் ஆழமான பார்வை மற்றும் ஒப்பற்ற பலம் ஆகியவையே அவ்வரங்கள் ஆகும்.(36,37)

அப்போது பிரம்மன், மன்னன் பலியிடம், "நீ இவ்வுலகில் எப்போதும் நான்கு வர்ணங்களையும் காப்பவனாக இருப்பாய்" என்று சொன்னான். இதன்பேரில் அவன் மனத்தில் பெரும் சமநிலையை {பற்றற்ற உள்ளச் சமநிலையுடன் கூடிய மன அமைதியை} அடைந்திருந்தான்.(38) (பலி பிரம்மச்சரிய வாழ்வைப் பின்பற்றி வந்தான்) அதன்படியே பெரும்பலம் நிறைந்தவரும், முனிவர்களில் முதன்மையானருமான தீர்க்கதமஸ், அவனது {பலியின்} மனைவியான சுதேஷ்ணையிடம் அந்த க்ஷேத்ரஜ மகன்கள் அனைவரையும் பெற்றார்.(39) பலி, பாவமற்றவர்களான தன் மகன்கள் ஐவரையும் அரியணையில் அமர்த்திவிட்டுத் தன்னை அருளப்பட்டவனாகக் கருதினான். அதன்பிறகு, எவராலும் தடுக்கப்படமுடியாதவனான அந்தப் பெருந்தவசி {பலி} யோகத்தைப் பயின்றவாறே காலத்திற்காகக் காத்திருக்கத் தொடங்கினான். ஓ! மன்னா, நீண்ட காலத்திற்குப் பிறகு அவன் தன் சொந்த உலகத்திற்குத் திரும்பினான்.(40,41) அவனுடைய {பலியினுடைய} மகன்கள் அங்கம், வங்கம், ஸும்ஹம், கலிங்கம் மற்றும் புண்ட்ரகம் என்ற பெயர்களில் ஐந்து மாகாணங்களைப் பெற்றிருந்தனர். இனி அங்கனின் மகன்களைக் குறித்துக் கேட்பாயாக.(42)

பெரும்பேரரசனான ததிவாஹனன் அங்கனின் மகனாவான். அவனுடைய {ததிவாஹனன்} மகன் மன்னன் திவிரதன் ஆவான்.(43) அவனுடைய {திவிரதனின்} மகன் கல்விமானும், இந்திரனுக்கு இணையான ஆற்றலைக் கொண்டவனுமான மன்னன் தர்மரதன் ஆவான். அவனுடைய மகன் சித்ரரதனாவான்.(44) உயரான்ம சித்ரரதன், விஷ்ணுபத மலையில் யாகம் செய்து கொண்டாடி, தேவர்களின் தலைவனுடன் சோமச்சாற்றைப் பருகினான்.(45) சித்ரரதனின் மகன் லோமபாதன் என்ற பெயரைக் கொண்ட தசரதனும், அவனுடைய {தசரதன் / லோமபாதனின்} மகள் சாந்தையும் ஆவாள்.(46) அவன், {விபாண்டகரின் மகனான} ரிஷ்யசிருங்கருடைய உதவியின் மூலம், தன் குலத்தைத் தழைக்கச் செய்தவனும், பெருஞ்சிறப்புமிக்கவனும், சதுரங்கன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு வீர மகனைப் பெற்றான்.(47) சம்பாவில் {சம்பா என்ற நாட்டில்} பிருதுலாக்ஷன் என்ற பெயரில் மிகச் சிறப்புவாய்ந்த மன்னன், சதுரங்கனின் மகனாவான்.(48) சம்பாவின் தலைநகரமானது, முன்பு மாலினி {மாலினிபுரி} என்ற பெயரில் இருந்த சம்பையாகும் {சம்பாபுரியாகும்}. பூர்ணபத்ர முனிவரின் உதவியின் மூலம் ஹர்யங்கன் அவனது {பிருதுலாக்ஷனின்} மகனாகப் பிறந்தான்.(49) அதன்பேரில் விபாண்டகரின் மகனான ரிஷ்யசிருங்க முனிவர், அவனைச் சுமப்பதற்காக இந்திரனின் யானையான ஐராவதத்தை மந்திரத்தின் மூலம் கீழே கொண்டு வந்தார்.(50)

ஹர்யங்கனின் மகன் மன்னன் பத்ரரதனும், அவனுடைய {பத்ரரதனின்} மகன் மன்னன் பிருஹத்கர்மனும் ஆவர்.(51) அவனுடைய {பிருஹத்கர்மனின்} மகன் பிருஹத்தர்ப்பனும், அவனிடம் {பிருஹத்தர்ப்பனிடம்} இருந்து பிறந்தவன் பிருஹன்மனனும் {பிருஹத்மனனும்}, அவனுடைய {பிருஹன்மனனின்} மகன் வீர மன்னன் ஜயத்ரதனும், அவனுடைய {ஜயத்ரதனின்} மகன் த்ருடரதனும் ஆவர். ஓ! ஜனமேஜயா, திருடரதனின் மகன் விஷ்வஜித்தன் ஆவான்.(52,53) அவனுடைய {விஷ்வஜித்தின்} மகன் கர்ணனும், அவனுடைய {கர்ணனின்} மகன் விகர்ணனும் ஆவர். அவன் {விகர்ணன்}, அங்க குலத்தைப் பெருகச் செய்த நூறு மகன்களைக் கொண்டிருந்தான்[4].

[4] பிபேக்திப்ராயின் பதிப்பில் இத்தோடு இந்த அத்யாயம் நிறைவுறுகிறது. பின்வரும் செய்திகள் அதில் இல்லை.

பிருகத்தர்ப்பனின் மகனான பிருஹன்மனன், சைத்யனின் ஈரழகிய மகள்களான இரு மனைவியரைக் கொண்டிருந்தான். அவர்கள் குடும்பத்தைப் பிரித்தவர்களான யஸோதேவி, மற்றும் ஸத்வி {ஸத்யை} ஆகியோராவர்.(54,55) ஓ! மன்னா, ஜயத்ரதன் யஸோதேவியிடம் பிறந்தான். ஸாத்வியிடம் இருந்து (உள்ளச்சமநிலை மற்றும் பிற குணங்களால்) பிராமணர்களில் மேலானவனாகவும், (வீரம் மற்றும் மேன்மையான பிற சாதனைகளால்) க்ஷத்திரியர்களில் மேலானவனாகவும் கொண்டாடப்படும் மன்னன் விஜயன் பிறந்தான்.(56) {ஸத்விக்குப் பிறந்தவனும், பிருஹன்மனனின் இரண்டாம் மகனுமான} விஜயனின் மகன் த்ருதியும், அவனுடைய {த்ருதியின்} மகன் த்ருதவ்ரதனும் ஆவர். அவனுடைய மகன் பெருஞ்சிறப்புமிக்க ஸத்யகர்மன் ஆவான்.(57) அவனுடைய {ஸத்யகர்மனின்} மகன், வலிமைமிக்கத் தேர்வீரனும், கர்ணனை தத்தெடுத்தவனுமான சூதன்[5] ஆவான். எனவேதான் கர்ணன் தேரோட்டியின் மகன் என்றழைக்கப்பட்டான்.(58) பெரும்பலம் நிறைந்தவனான கர்ணனின் குடும்பம் இவ்வாறே விளக்கப்பட்டது. கர்ணனின் மகன் விருஷஸேனனும், அவனுடைய {விருஷஸேனனின்} மகன் விருஷனும் ஆவர்.(59) இவ்வாறே வலிமைமிக்கத் தேர்வீரர்களான பல மகன்களைக் கொண்டிருந்த அங்கனின் குடும்பத்தில் வந்த வாய்மைநிறைந்த உன்னத மன்னர்களைக் குறித்து விளக்கினேன்.(60) ஓ! மன்னா, இனி, நீ பிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவனும், {பூருவின் ஒன்பதாம் தலைமுறை வழித்தோன்றலான} ரௌத்ராஸ்வனின் {ஆறாவது} மகனுமான ரிசேயுவின் குடும்பத்தைக் குறித்துக் கேட்பாயாக" என்றார் {வைசம்பாயனர்}.(61)

[5] க்ஷத்ரியனான ஸத்யகர்மனுக்கும், ஒரு பிராமணப் பெண்ணுக்கும் பிறந்ததால், அவனுடைய மகன் சூதன் ஆனான். அதிரதன் நந்தனன் என்பது அவனது பெயராகும்.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 31ல் உள்ள சுலோகங்கள் : 61
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்