(யயாதி சரித்ர கதனம்)
Account of the king Yayati | Harivamsa-Parva-Chapter-30 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : நஹுஷனின் மகன்கள்; யயாதி அடைந்த தெய்வீகத் தேர்; ஜராஸந்தனிடம் இருந்த அந்தத் தேரை பீமன் கிருஷ்ணனுக்கு அளித்தது; யயாதியின் மகன்கள்; யயாதியின் முதுமையை ஏற்றுக் கொண்ட பூரு; யயாதி சொன்ன அனுபவ மொழி; சொர்க்கத்தை அடைந்த யயாதி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சக்திமிக்க நஹுஷன், தன் தந்தையின் மகளான {பித்ரு கன்னிகையான} விரஜையிடம் {ஸுஸ்வதையிடம்}[1], இந்திரனின் பிரகாசத்தைக் கொடையாகக் கொண்ட ஆறு மகன்களைப் பெற்றான்.(1) அவர்கள் யதி, யயாதி, ஸங்யாதி {ஸம்யாதி}, ஆயாதி {ஆயதி}, யாதி {பவன்} மற்றும் ஆறாவதாக ஸுயாதி ஆகியோராவர்; அவர்களில் யயாதி மன்னனான்.(2) யதி, அவர்கள் யாவரிலும் மூத்தவனாக இருந்தான். அவனுக்கு அடுத்தவனே யயாதி ஆவான். அறவோர் முதன்மையானவனாக இருந்ததால் அவன் கௌ என்ற பெயர் கொண்டவளான ககுஸ்தனின் மகளை அடைந்தான். யதி ஒரு முனிவனாக இருந்தான். இறுதி விடுதலையை {முக்தியை} அடைந்த அவன் பிரம்மத்தில் ஒன்று கலந்தான்.(3) மற்ற ஐவரில் யயாதி இவ்வுலகை வென்றான். அவன் சுக்ராச்சாரியரின் {உசானஸின்} மகளான தேவயானியையும், விருஷபர்வன் என்ற பெயரைக் கொண்ட ஓரசுரனின் மகளான சர்மிஷ்டையையும் மணந்து கொண்டான்.(4) தேவயானி, யது மற்றும் துர்வஸுவையும், சர்மிஷ்டை, திருஹ்யு, அனு மற்றும் பூருவையும் பெற்றனர்.(5)
[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் "தந்தையின் மகள்" என்றே இருக்கிறது. அவ்வாறெனில்தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் "பித்ருக்களின் மகள்", அதாவது "பித்ரு கன்னிகை" என்றிருக்கிறது. ஹரிவம்ச பர்வம் 18:64-67ல் "கர்தம பிரஜாபதியின் மூதாதையர்கள், பிரஜாபதியான புலஹரின் வழித்தோன்றல்களாவர். இந்தப் பித்ருக்கள் திரளாக ஸுஸ்வதர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். அவர்களின் மனத்தில் பிறந்த மகள் விரஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறாள். இவளே நஹுஷனின் மனைவியும், யயாதியின் தாயுமாவாள்" எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவனிடம் {யயாதியிடம்} நிறைவடைந்த சக்ரன் {இந்திரன்}, பிரகாசமானதும், தெய்வீகமானதும், தடையில்லாமல் எங்கும் செல்லவல்லதுமான ஒரு பொற்தேரைக் கொடுத்தான். மனோ வேகம் கொண்டவையும், தெய்வீகமானவையுமான சிறந்த குதிரைகள் அதில் பூட்டப்பட்டிருந்தன. அந்தத் தேரைக் கொண்டே அவன் அனைத்துப் பணிகளையும் நிறைவடைய் செய்தான். அந்தத் தேரில் ஏறிய யயாதி, போரில் தடுக்கப்பட முடியாதவனாக ஆறே இரவுகளுக்குள் மொத்த உலகத்தையும், வாசவனுடன் கூடிய தேவர்களையும் வென்றான்.(6,7) ஓ !ஜனமேஜயா, அந்தத் தேரானது ஸுநாமன் {ஜனமேஜயன்} பிறக்கும் வரை பௌரவர்களின் உடைமையாக இருந்தது.(8) குருவின் மகனான மன்னன் பரீக்ஷித், நுண்ணறிவுமிக்கக் கார்க்கியருடைய {கர்க்கருடைய} சாபத்தின் மூலம் அந்தத் தேரைத் தொலைத்தான்[2].(9)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "அந்தத் தேரானது கௌரவ அரசவம்சத்தைச் சேர்ந்த மன்னன் வசுவின் காலம் வரை பௌரவக் குலத்தின் மதிப்புமிக்க உடைமையாக இருந்தது. கௌரவக் குலத்தைச் சேர்ந்தவனும், பரீக்ஷித்தின் மகனுமான ஜனமேஜயன் காலம் வரை அஃது இவ்வுலகில் இருந்தது ஆனால் கர்க்க முனிவரின் சாபத்தினால் அது மறைந்து போனது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், உன் காலம் வரை அனைத்துப் பௌரவர்களும் அந்தத் தேரை அனுபவித்தனர். பரீக்ஷித்தின் மகனுடைய காலம் வரை அது குருவின் வழித்தோன்றல்களுடைய நாட்டில் இருந்தது. அதன் பிறகு நுண்ணறிவுமிக்கக் கர்க்கரால் அந்தத் தேர் மறைந்து போனது" என்றிருக்கிறது. மேலும் இந்தத் தேரை சுக்ரன் யயாதிக்குக் கொடுத்ததாகவும் இருக்கிறது. இங்கே மூன்று பதிப்புகள் சொல்வதும் பிழையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இங்கே சொல்லப்படுபவன் அர்ஜுனனின் பேரனான பரிக்ஷித்தோ, கொள்ளுப்பேரனான ஜனமேஜயனாகவோ இருக்க முடியாது. மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தின் 150ம் பகுதியில் பீஷ்மர் பழங்காலத்து மன்னர்களான பரீக்ஷித் மற்றும் ஜனமேஜயன் குறித்து யுதிஷ்டிரனிடம் சொல்கிறார். அப்போது அர்ஜுனனின் பேரனான பரீக்ஷித் இல்லை. இங்கே சுட்டப்படுவது அந்தப் பழங்காலத்து பரீக்ஷித்தும் ஜனமேஜயனுமாக இருக்க வேண்டும். மேலும் அர்ஜுனனின் கொள்ளுப்பேரனான ஜனமேஜயனிடம் தான் வைசம்பாயனரால் இந்தக் கதை சொல்லப்படுகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஓ! ஜனமேஜயா, அந்த மன்னன் {ஜனமேஜயன்} கடுமொழி பேசிய கார்க்கியரின் {கர்க்கரின்} மகனைக் கொன்றதால் பிராமணக்கொலை செய்த குற்றவுணர்வுடன் இருந்தான்.(10) அந்த அரசமுனி {ஜனமேஜயன்}, தன் மேனிமுழுவதும் கூடிய கடும் நாற்றத்துடன் {லோஹகந்தமெனும் இரும்பின் நாற்றத்துடன்} அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருந்தான். பிறகு, குடுமக்களாலும், கிராமவாசிகளாலும் கைவிடப்பட்டவனான அவனால் எங்கும் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லை.(11) இவ்வாறு துயரில் பீடிக்கப்பட்ட அவனால் எங்கும் உய்வை {நிவாரணத்தைப்} பெற முடியவில்லை. அப்போது அவன், சௌனக குலத்தில் பிறந்த தவசியான இந்தோரதரின் புகலிடத்தை நாடினான்[3].(12) இந்திரோதர், அந்த மன்னனைத் தூய்மையடையச் செய்வதற்காக ஒரு குதிரை வேள்வியைச் செய்வதில் ஈடுபட்டார்.(13) யாகம் முடிந்து அவன் நீராடியபோது, அவனுடைய உடலில் இருந்த அந்தக் கடும் நாற்றம் மறைந்து போனது. பிறகு, ஓ! மன்னா, தேவர்களின் தலைவன் {இந்திரன்} அந்தத் தெய்வீகத் தேரைச் சேதிகளின் மன்னனான வஸுவுக்கு {உபரிசர வஸுவுக்குக்} கொடுத்தான்; அவனிடம் இருந்து பிருஹத்ரதன் அதையடைந்தான்[4].(14) அந்தத் தேர் அவனிடம் இருந்து படிப்படியாக ஜராசந்தனின் கைகளுக்குச் சென்றது. குருவின் வழித்தோன்றலான பீமன் ஜராசந்தனைக் கொன்ற போது, அந்தத் தேரைப் பெரும் மகிழ்ச்சியுடன் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குக்} கொடுத்தான்.
[3] ஜனமேஜயன் இந்திரோதரின் புகலிடத்தை நாடிச் செல்லும் இந்தப் பகுதி மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தின் 150ம் பகுதியில் இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
[4] பிபேக்திப்ராயின் பதிப்பில், "பிருஹத்ரதன் {உபரிசர வசு என்றும் அழைக்கப்படும்} வசுவின் மகனாவான். ஜராசந்தன் இந்தப் பிருஹத்ரதனின் மகனாவான்" என்றிருக்கிறது.
யயாதி, பெருங்கடல்களுடனும், ஏழு தீவுகளான கண்டங்களுடனும் கூடிய பூமியை வென்று அதை (தன் மகன்களுக்கு மத்தியில்) பிரித்துக் கொடுத்தான். அந்த நஹுஷன் மகன் {யயாதி}, துர்வஸுவை தென்கிழக்குப் பகுதியின் மன்னனாகவும், அனு மற்றும் திருஹ்யுவை, முறையாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் மன்னர்களாகவும், மூத்தவனான யதுவை வட கிழக்கின் மன்னனாகவும், பூருவை நடுப்பகுதியின் {மத்திய பகுதியின்} மன்னனாகவும் நிறுவினான். இப்போதும் அவர்கள் {அவர்களின் சந்ததியினர்}, அவரவருக்குரிய மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்களையும், ஏழு தீவுகளான கண்டங்களுடன் கூடிய பூமியையும் நீதியுடன் ஆண்டு வருகின்றனர். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அவர்களுடைய சந்ததியை நான் பின்னர்ச் சொல்கிறேன்.(15-20)
இவ்வாறு ஐந்து மகன்களால் அருளப்பட்டவனும், தன்னுடைய விற்கள், கணைகள் மற்றும் அரசின் பொறுப்பு ஆகியவற்றை அவர்களுக்கு {தன் மகன்களுக்குக்} கொடுத்தவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்த யயாதி மன்னனை முதுமை பீடித்தது. எப்போதும் வெற்றியாளனாக இருந்த அந்த மன்னன், ஆயுதங்களை இழந்தவனாகப் பூமியின் மீது தன் கண்களைச் செலுத்திய போது, மகிழ்ச்சியை உணர்ந்தான். இவ்வாறு அவன் பூமியைப் பிரித்துக் கொடுத்தபிறகு, யதுவிடம்,(21,22) "ஓ! மகனே, உன் அலுவலில் இருந்து ஓய்வு பெற்று என்னுடைய இந்த முதுமையை உன்னில் நீ ஏற்றுக் கொள்வாயாக. என் முதுமையை உனக்குக் கொடுத்துவிட்டு, உன் இளமை மற்றும் அழகு என்ற கொடையைப் பெற்றுக் கொண்டு நான் பூமியில் திரிந்து வருவேன்" என்றான்.
அதற்கு யது,(23) "நான் ஒரு பிராமணருக்குப் பிச்சை அளிப்பதாக உறுதியளித்திருக்கிறேன். இஃது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இதை உறுதி செய்யாமல் என்னால் உமது முதுமை ஏற்றுக் கொள்ள முடியாது. உணவு மற்றும் பானம் தொடர்பான பல தொல்லைகள் முதுமையில் உண்டு. எனவே, ஓ! மன்னா, உமது முதுமை ஏற்க நான் விரும்பவில்லை.(25) ஓ! மன்னா, என்னைவிட உமது அன்புக்குரிய மற்ற மகன்களை நீர் கொண்டிருக்கிறீர். எனவே, ஓ! பக்திமிக்க மன்னா, உமது மற்ற மகன்களிடம் உமது முதுமையை ஏற்றுக் கொள்ள ஆணையிடுவீராக" என்று மறுமொழி கூறினான்.(26)
யதுவால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட மன்னன் கோபத்தில் நிறைந்தான். பேசுபவர்களில் முதன்மையானவனான யயாதி, தன் மகன் மீது குற்றஞ்சாட்டும் வகையில்,(27) "ஓ! தீய புத்தி கொண்டவனே, உன் ஆசானும், உனக்கான கல்வியைக் கொடுத்தவனுமான என்னை அலட்சியம் செய்துவிட்டு, வேறு யாரை நாடி எந்த அறத்தை உன்னால் பின்பற்ற முடியும்?" என்றான்.(28) யதுவிடம் இவ்வாறு கோபத்தில் பேசி அவன், அவனைச் சபிக்கும் வகையில், "ஓ! அற்ப மூடா, உன் மகன்கள் தங்கள் அரசை இழப்பார்கள்" என்றான்.(29)
ஓ! பாரதர்களில் முதன்மையானவனே[5], இதே போலவே துர்வஸு, திருஹ்யு, அனு ஆகியோரையும் அந்த மன்னன் வேண்டினான். அவர்கள் அனைவராலும் ஒரே மாதிரியாகவே அவமதிக்கவும் பட்டான்.(30) ஓ! அரச முனிகளில் முதன்மையானவனே, எப்போதும் வெற்றியாளனாக இருந்த யயாதி, நான் உனக்கு முன்பு {மஹாபாரதம் சொல்லிக் கொண்டிருந்தபோது} விளக்கிச் சொன்னதைப் போலவே அவர்கள் அனைவரையும் சபித்தான்.(31) ஓ! பரதனின் வழித்தோன்றலே, பூருவுக்கு முன் பிறந்த தன்னுடைய நான்கு மகன்களையும் இவ்வாறு சபித்த அந்த மன்னன், அவனிடம் {பூருவிடம்},(32) "ஓ! பூரு, நீ ஏற்றுக்கொண்டால், நான் என் முதுமையை உனக்கு மாற்றி, உன் அழகையும், இளமையையும் பெற்றுக் கொண்டு இந்த உலகத்தில் திரிவேன்" என்றான்.(33)
[5] இங்கே மன்மதநாததத்தரின் பதிப்பில் பாரதர்களில் முதன்மையான மன்னன் என்று யயாதி குறிப்பிடப்படுகிறான். பரதனோ யயாதிக்கு மிகப் பிந்தையவன். மற்ற பதிப்புகளைக் கண்டதில் இது ஜனமேஜயனைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. எனவே இங்கே நாமும் வைசம்பாயனர் ஜனமேஜயனை இவ்வாறு அழைப்பதாகக் கொண்டிருக்கிறோம்.
பலமிக்கவனும் அவனுடைய மகனுமான பூரு அவனுடைய முதுமையை ஏற்றுக் கொண்டான். யயாதியும், பூருவின் அழகுடன் கூடியவனாக உலகில் திரிந்து வந்தான்.(34) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, அந்தத் தலைவன் {யயாதி} இன்பங்களின் எல்லையைக் கண்டபடியே சைத்ரரதக் காட்டில் விஷ்ராவ்யையுடன் {அப்சரஸான விஷ்வாசியுடன்} வாழ்ந்து வந்தான்.(35) அந்த மன்னன் இன்பங்களில் தணிவடைந்தவனாகப் பூருவிடம் வந்து தன் முதுமையைத் திரும்பப் பெற்றுக் கொண்டான்.(36) ஓ! பெரும் மன்னா, அங்கே யயாதியால் பாடப்பட்ட பாடல்களைக் கேட்பாயாக. அவற்றைக் கேட்பதன் மூலம் ஓர் ஆமை தன் அங்கங்களை இழுத்துக் கொள்வதைப் போல ஒரு மனிதன் இன்பங்களில் இருந்து தன்னை இழுத்துக் கொள்வான்.(37)
{யயாதி}, "ஆசையானது அதற்குரிய பொருளை அனுபவிப்பதனால் ஒருபோதும் தணிவதில்லை. அதற்குப் பதிலாகத் தெளிந்த நெய்யூட்டப்படும் நெருப்பைப் போன்ற விகிதத்தையே அஃது அடைகிறது.(38) பூமியிலுள்ள அரிசி, வாற்கோதுமை, பொன், விலங்குகள், பெண்கள் ஆகியன ஒரு மனிதனுக்கு நிறைவளிக்கப் போதுமானவையல்ல. இதைக் கண்டும் மனிதர்கள் தங்கள் புலன்களில் நிறைவடைவதில்லை.(39) ஒரு மனிதன், தன் செயல், எண்ணம் மற்றும் சொற்களாலும் எவ்வுயிரினத்திற்கும் தீங்கிழையாமல் இருக்கும்போது அவன் பிரம்மத்துடன் ஒன்றுகலக்கிறான்.(40) ஒரு மனிதன் எவரிடமும் அச்சங்கொள்ளவில்லை எனும்போது, எவரும் அவனிடம் அச்சங்கொள்ளவில்லை எனும்போது, அவன் எந்த ஆசையையும் {விருப்பையும்}, வன்மத்தையும் {வெறுப்பையும்} வளர்க்கவில்லை எனும்போது, அவன் பிரம்மத்துடன் ஒன்றுகலக்கிறான்.(41) உண்மையில், தீயோரால் ஒருபோதும் கைவிட முடியாததும், முதுமையை அடைந்தாலும் சிதையாததும், மரணத்தைத் தரும் நோயைப் போன்றதுமான தாகத்தை {ஆசையைத்} தணித்துக் கொள்ளும்போது அவன் மகிழ்ச்சியை அடைகிறான்(42) ஒரு மனிதன் வயதால் சிதைவடையும்போது, அவனது மயிரும், பற்களும் விழுமென்றாலும், வாழ்வு மற்றும் செல்வத்தின் மீதுள்ள ஆசை மட்டும் ஒருபோதும் {அவனிடம்} மறைவதில்லை.(43) உணர்வுப் பசிகளை நிறைவேற்றிக் கொள்வதால் இவ்வுலகில் அடையப்படும் எந்த இன்பமும், இங்கேயுள்ள எந்தத் தெய்வீக இன்பமும் என இவற்றில் யாவும், ஆசையற்றுப் போவதனால் கிட்டும் இன்பத்தின் பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது" என்றான்.(44)
அரசமுனியான யயாதி இதைச் சொல்லிவிட்டு, தன் மனைவியுடன்[6] காட்டுக்குள் ஓய்ந்து சென்று, பல ஆண்டுகள் கடுந்தவம் செய்தான்.(45) அந்தப் பெருந்தவசி, பிருகு மலையில் தவம் செய்து, தன் உடலைக் கைவிட்டு, தன் மனைவியுடன் சொர்க்கத்தை அடைந்தான்.(45)
[6] யயாதிக்கு தேவயானி, சர்மிஷ்டை என்று இரு மனைவிகள். இங்கே மனைவி என்று ஒருமையில் சொல்லப்பட்டுள்ளது. தேவயானி, யயாதி சபிக்கப்படக் காரணமாக இருந்தவள். மேலும் அவளுடைய மகன்கள் இருவரில் ஒருவரும் யயாதியின் முதுமையே ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. சர்மிஷ்டையின் இளைய மகன் பூருவே அரியணை ஏற்கிறான். எனவே, இங்கே சுட்டப்படுபவள் சர்மிஷ்டையாகவே இருக்க வேண்டும்.
ஓ! பெரும் மன்னா, அவனுடைய குடும்பத்தில் ஐந்து அரசமுனிகள் பிறந்தனர். சூரியக் கதிர்களால் கைப்பற்றப்படுவதைப் போல அவர்களால் மொத்த பூமியும் கைப்பற்றப்பட்டது.(47) இனி, அரச முனிகள் அனைவராலும் மதிக்கப்படும் யதுவின் குடும்பத்தை {குலத்தைக்} குறித்துக் கேட்பாயாக. விருஷ்ணி குலத்தைத் தழைக்கச் செய்பவயும் நாராயணனான ஹரி இவனது {யதுவின்} குடும்பத்திலேயே தன் பிறப்பை அடைந்தான்.(48) ஓ! மன்னா, மன்னன் யயாதியின் புனித வாழ்க்கை வரலாற்றைக் கேட்பவன் எவனோ, அதைப் படிப்பவன் எவனோ, அவன் உடல்நலம், மக்கள்பேறு, நீண்ட வாழ்நாள் மற்றும் புகழ் ஆகியவற்றை அடைவான்" என்றார் {வைசம்பாயனர்}.(49)
ஹரிவம்ச பர்வம் பகுதி – 30ல் உள்ள சுலோகங்கள் : 49
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |