(ஸோமோத்பத்தி வர்ணனம்)
An account of the birth of the moon | Harivamsa-Parva-Chapter-25 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : அத்ரி முனிவரின் கண்களில் இருந்து பிறந்த சந்திரன்; சந்திரனின் சக்தியால் பூமியில் பெருகிய தாவரங்கள்; சந்திரன் செய்த ராஜசூயம்; பிருஹஸ்பதியின் மனைவியான தாரையை அபகரித்த சந்திரன்; சந்திரனுக்குத் தாரையிடம் பிறந்த புதன்; புதனின் மகன் புரூரவஸ்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, பழங்காலத்தில் பிரம்மன் சந்ததியைப் படைக்கும் விருப்பத்தை வளர்த்தபோது அவனது மனத்தில் பெறப்பட்ட மகனே, சோமனின் தந்தையும், தெய்வீக முனிவருமான அத்ரியாவார்.(1) அத்ரி, தம் மகன்கள் அனைவருடன் கூடியவராகத் தமது சொற்கள், மனம் மற்றும் செயல் ஆகியவற்றின் மூலம் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்யத் தொடங்கினார்.(2) கபடமற்றவரும், பெரும்பிரகாசம், அறம்சார்ந்த ஆன்மாவை, உறுதியான நோன்பு ஆகியவற்றைக் கொண்டவருமான அந்த முனிவர் {அத்ரி}, முன்பொரு காலத்தில் தன் கரங்களை உயர்த்திய படி மிகச் சிறந்த அமைதி தவத்தை {மௌனவிரதத்தை / அனுத்தம தவத்தை} மூவாயிரம் தேவ வருடங்கள் பயின்றார். இதை நாம் கேள்விப்படுகிறோம்.(3,4)
ஓ! பரதனின் வழித்தோன்றலே, அந்த முனிவர், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி நிலையான தவங்களைச் செய்யத் தொடங்கிய போது அவரது மேனி சந்திரனின் மென் மிளிர்வை ஏற்றது.(5) புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்த அவரது மேனியில் ஏற்பட்ட சந்திரனைப் போன்ற இந்த மிளிர்வு விரைவில் வானமெங்கும் பரவியது. அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கிப் பத்து திசைப்புள்ளிகளிலும் பெருகியோடியது.(6) அப்போது பத்து தேவிகளும் மகிழ்ச்சியாகப் பத்து வெவ்வேறு வழிகளில் கருவுற்றனர். அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அதைச் செய்திருந்தாலும் அவர்களால் அதை வைத்துக் கொள்ள முடியவில்லை.(7) அப்போது, பிரகாசமானவனும், அனைவரையும் பாதுகாப்பவனுமான சந்திரன், திசைகள் அனைத்திற்கும் ஒளியூட்டியபடியே கருவில் இருந்து கீழே விழுந்தான்.(8) திசைகளால் அந்தக் கருவை அதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியாதபோது, அந்தக் கருவானது அவர்களுடன் சேர்ந்து கீழே பூமியில் விழுந்தது.(9) சந்திரன் இவ்வாறு விழுந்ததைக் கண்டவனும், அனைவரின் பெரும்பாட்டனுமான பிரம்மன், மக்கள் அனைவருக்கும் நன்மையைச் செய்வதற்காகத் தன் தேரில் ஏற்றிக் கொண்டான்[1].(10)
[1] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "பெருமைமிக்கவரான அந்த அத்ரியின் கடுந்தவம் உறுதிப்பட்டபோது, தேவர்களின் இமைக்காத தன்மையைப் பெற்று, தன்னுடலுக்குள் நிலவொளி போன்ற ஒளிப்பாய்ச்சலை வெளியிட்டார் தன்னொளியில் மிளிர்ந்தார். அந்த ஒளிக்கற்றை அத்ரி முனிவரின் தலைவழியே உயர்ந்து, சிந்திக்கும் ஆன்மாவைக் கொண்ட அவரை வண்ணத்துப் பூச்சியின் நோய்க்குறியைப் போன்ற வெள்ளிநிறத்தை அடையச் செய்தது. பிறகு அந்த வெள்ளி போன்ற பிரகாசம் அவரது கண்களில் நீர் இருப்பதைப் போல அவரது விழிகள் இரண்டையும் உருளச் செய்து, தன்னொளிக் குவியலாகக் கட்டியாகத் திரண்டு தரையில் விழுந்தது. அந்தக் குவியல் கட்டியே சோமன் அல்லது சந்திரன் என்ற சிறுவனானான். அவனே, திசைப்புள்ளிகளையும் சந்திரவொளியால் ஒளிரச் செய்தான். அந்தச் சிறுவன் தரையில் விழுந்ததைக் கண்ட பத்துத் திசைகளின் தலைமை தேவர்களும் அங்கே விரைந்து வந்து அவனைக் கவனமாக வளர்க்கத் தங்கள் கரத்தில் ஏந்தினர். அந்தச் சிறுவன் மிகக் குளிர்ந்தவனாக இருப்பினும், அந்தத் தேவர்களால் அவனைத் தங்கள் கைகளில் ஏந்த முடிந்தது. ஆனால், அவனை வெகுநேரம் வைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அவர்கள் மிகக் குளிர்ந்தவனாக இருந்த அந்தச் சிறுவனைத் தங்கள் கரங்களில் இருந்து உலகில் நழுவவிட்டனர். அந்தச் சிறுவனும், திசைத் தேவர்களால் தன்னைப் பாதுகாப்பாகப் பிடித்துக் கொள்ள முடியாததால் திடீரெனத் தரையில் விழுந்தான். அந்தச் சிறுவன் தரையில் கிடப்பதைக் கண்ட உலகங்களின் பெரும்பாட்டன் உலகின் நன்மைக்காக அந்தப் பிள்ளைக்காக ஒரு தேரை வடிவமைத்து, அதில் அவனை ஏற்றினான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அத்ரி மூவாயிரம் தேவ வருட காலம் அனுத்தம தவம் செய்தார் என்று நாம் கேள்விப்படுகிறோம். அவர் கண்ணிமைக்காமல் அங்கே நின்று தன் வித்தைத் தாங்கிப் பிடித்தார். ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே, ஒரு பெரும்புத்தி அவரது உடலில் வெளிப்பட்டது, அது சோமனின் சாறாகும். தூய ஆன்மாவுடன் கூடிய சோமனின் சாறு அவரது உடலில் மேல்நோக்கி எழுந்து, அவரது கண்களின் இருந்து நீரின் வடிவில் வெளிப்பட்டு, பத்துத் திசைகளிலும் பாய்ந்து, அவற்றுக்கு ஒளியூட்டியது. பத்துக் கருக்களைக் கண்ட {பத்து திசைகளுக்குரிய} பத்து தேவியரும், அவற்றுக்கு ஊற்றமளிக்க விரைந்து முன்வந்தாலும், அவ்வாறு செய்ய இயலாதவர்களாக இருந்தனர். பலம் நிறைந்த அந்தக் கருக்கள் அந்தப் பத்து தேவியரிடமிருந்தும் வேகமாகக் கீழே விழுந்து, அனைத்துக்கும் ஊட்டமளிப்பவனும், உலகங்களுக்கு ஒளியூட்டுபனுமான குளுமையான கதிர்களைக் கொண்டவனை உதிக்கச் செய்தது. திசைகளால் அந்தக் கருக்களைப் பிடித்து வைத்துக் கொள்ள முடியவில்லை. அந்தக் கருக்கள் திடீரெனக் கீழே பூமியில் விழுந்தன. உலகங்களின் பாட்டனான பிரம்மன் சோமன் விழுந்ததைக் கண்டான். உலகங்களின் நன்மையை உறுதி செய்ய விரும்பி அவனை ஒரு தேரில் நிறுவினான்" என்றிருக்கிறது. மூன்றிலும் பிபேக்திப்ராயின் உரை எளிமையாக இருப்பதாகத் தெரிகிறது. ஹரிவம்சபர்வம் 31:12ல் சந்திரன் அத்ரியின் குலத்தில் வந்த பிரபாகர முனிவர் மற்றும் அவரது மனைவியான ருத்ரைக்குப் பிறந்தவனாகச் சொல்லப்படுகிறான்.
அந்தத் தேர் வேதங்களால் அமைந்தது; அதன் வடிவம் அறமாக இருந்தது, மேலும் அது பிரம்மனைச் சுமந்தது; ஆயிரம் மந்திரங்கள் குதிரைகளாக அதில் பூட்டப்பட்டன என்று நாம் கேள்விப்படுகிறோம்.(11) அத்ரியின் மகனான அந்தப் பேரான்மா பூமிக்கு வந்தபோது, தேவர்கள் அனைவரும், பிரம்மனின் மனத்தில் பிறந்த ஏழு மகன்களும் அவனது மகிமைகளைப் பாடத் தொடங்கினர்.(12) ஓ! குழந்தாய், அதே போலவே, அங்கிரஸ் மகன்களும், பிருகுவும், அவரது மகன்களும், ரிக் மற்றும் யஜுஸ் மந்திரங்களுடன் அவனது மகிமைகளைப் பாடத் தொடங்கினர்.(13) பிரகாசமிக்கவனான சந்திரன், அந்த முனிவர்கள் இவ்வாறு தன் மகிமைகளைப் பாடியதும், பெருகும் தன்னொளியை வட்ட வடிவில் வானத்தில் நிறுத்தினான். அது மூவுலங்களுக்கும் முழுமையாக ஒளியூட்டியது.(14) பெருஞ்சிறப்புமிக்கவனான அந்தச் சந்திரன், தன்னுடைய அந்த மிகச் சிறந்த தேரில், கடலால் சூழப்பட்ட உலகை இருபத்தோரு முறை வலம் வந்தான்.(15)
அவனுடைய தேர் அசைவின் காரணமாகப் பூமியில் உருகிய அவனது ஒளி, பிரகாசமாக ஒளிரும் செடிகளானது.(16) ஓ! மன்னா, தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் பிற உயிரினங்களின் ஊட்டத்துக்கு வழிவகுத்தது; இவ்வாறே சந்திரன் அண்டத்திற்கு ஊட்டமளிக்கிறான்.(17) ஓ! பெருமைமிக்கவனே, தன் செயல்களின் மூலம் ஒளியை அடைந்து, முனிவர்களால் மகிமைகள் பாடப்பட்ட அந்தத் தெய்வீகச் சந்திரன், ஓராயிரம் பத்ம ஆண்டுகள் கடுந்தவம் செய்தான்.(18) அண்டத்தைத் தாங்கிப் பிடிக்கும் நீரின் வடிவிலான வெள்ளிநிற தேவிகள் அனைவருக்கும் சந்திரனே காப்பிடமாக இருந்தான். அவன் தன் செயல்களின் மூலம் கொண்டாடப்பட்டான்.(19)
அதன்பேரில், ஓ! ஜனமேஜயா, வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையான பிரம்மன், அவனுக்கு வித்துகள், செடிகள், பிராமணர்கள் மற்றும் நீரின் மேல் அரசுரிமையை {அவற்றை ஆளும் உரிமையை} அளித்தான்.(20) ஓ! ஏகாதிபதி, கதிர்களின் தலைவன், அரியணையில் நிறுவப்பட்டதும், தன் கதிர்களால் மூவுலகங்களுக்கும் ஒளியூட்டினான்.(21) தக்ஷனுக்கு, பெரும் நோன்புகளைக் கொண்டவர்களான இருபத்தேழு மகள்கள் இருந்தனர். மக்கள் அவர்களை {தக்ஷனின் மகள்களை} விண்மீன்களாக {நட்சத்திரங்களென} அறிவார்கள். பிராசேதஸின் மகனான தக்ஷன், அவர்கள் அனைவரையும் அவனுக்கு {சந்திரனுக்கு} அளித்தான்.(22) பித்ருக்கின் தலைவனான சந்திரன், அந்தப் பேரரசை அடைந்ததும், ஒரு லட்சம் பசுக்கள் {ஸஹஸ்ர சத தக்ஷிணைகள்} கொடையாக அளிக்கப்படும் ஒரு ராஜசூய வேள்விக்கான ஏற்பாட்டைச் செய்தான்.(23)
{அவ்வேள்வியில்} தெய்வீக அத்ரி ஹோதாவாக இருந்தார், பிருகு அத்வர்யுவாகவும், ஹிரண்யகர்ப்பர் {அங்கிரஸ் / நாரதர்} உத்காதராகவும், பிரம்மனே பிரம்மனாகவும்[2] இருந்தனர்.(24) ஸனத்குமார் மற்றும் வேறு உயர்ந்த முனிவர்கள் சூழ இருந்த தெய்வீக நாராயணன், முன்னிலை வகித்தான்.(25) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அங்கே கூடியிருந்த மூவுலகங்களின் முனிவர்கள் அனைவருக்கும், பிராமணத் தவசிகளுக்கும் தெய்வீக சோமன் கொடைகளை அளித்தானென நாம் கேள்விப்படுகிறோம்.(26) ஸினிவாலி, குஹு, த்யுதி, புஷ்டி, பிரபை, வஸு, திருதி, கீர்த்தி மற்றும் லக்ஷ்மி என்ற ஒன்பது தேவியரும் அவனுக்கு ஊழியம் செய்தனர்.(27) மன்னர்களில் முதன்மையான சந்திரன், யாகம் முடிந்த பிறகு நீராடி, தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரையும் வழிபட்டு, பத்துத் திசைகளுக்கும் நிலையாக ஒளியூட்டத் தொடங்கினான்.(28) ஓ! குழந்தாய், தவசிகளால் கௌரவிக்கப்பட்டு, அடைதற்கு மிக அரிதான செழிப்பை அடைந்த அவனது மனம் பணிவில் இருந்து விலகத் தொடங்கியது.(29)
[2] "ஒரு ஹோதா என்பவர், ஒரு வேள்வியில் ரிக்வேத ஸ்லோகங்களை உரைப்பவராவார். ஓர் அத்வர்யு என்பவர், யஜுர் வேத சடங்குகளை நன்கறிந்த ஒரு பிராமணராவார். ஓர் உத்காதர் என்பவர், சாம வேதப் பாடல்களைப் பாடுபவராவார். பிரம்மம் என்பது, வேள்விகளைக் கண்காணிக்கும், அல்லது வேள்விகளுக்குத் தலைமை தாங்கும் புரோகிதரைக் குறிக்கும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
தாரா சசாங்கம்
சந்திரன், அங்கிரசின் மகனான பிருஹஸ்பதியை அலட்சியம் செய்து, அவரது {பிருஹஸ்பதியின்} சிறப்புமிக்க மனைவியான தாரையை வலுக்கட்டாயமாக அபகரித்துச் சென்றான்.(30) தேவர்களாலும், முனிவர்களாலும் வேண்டப்பட்டாலும் அவன் அவளைத் திருப்பிக் கொடுக்காமல் இருந்தான். தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதி, இதனால் அவனிடம் சினம் கொண்டிருந்தார்.(31) உசானஸ் {சுக்கிராச்சாரியர்} அவனது {சோமனின்} பக்கங்களைப் பாதுகாக்கத் தொடங்கினார். சிறப்புமிக்கத் தேவனான ருத்திரன், முற்காலத்தில் பிருஹஸ்பதியின் தந்தையுடைய {அங்கீரஸின்} சீடனாவான். அவர் மீது கொண்ட மதிப்பால் அவன் (ருத்ரன்), தன் கைகளில் அஜாகாவ வில்லை எடுத்துக் கொண்டு அவரது பின்புறத்தைக் காத்தான்[3].(32,33) தாரையின் காரணமாகத் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அழிவைத் தரக்கூடிய ஒரு பயங்கரப் போரானது, அசுரர்களின் அழிவுக்காக உயரான்ம சிவன் தன் வலிமைமிக்க ஆயுதமான பிரம்மசிரஸை வைத்திருந்த இடத்தில் நடந்தது. (அதன் படி) அங்கே அவர்களது மகிமை அழிந்தது.(34,35)
[3] பிபேக்திப்ராயின் பதிப்பில், "பெருஞ்சக்தி கொண்ட உசானஸ் முற்காலத்தில் பிருஹஸ்பதியின் தந்தையான அங்கீரஸின் சீடராக இருந்ததால் அவர் அவரது தரப்பை அடைந்தார். சிறப்புமிக்கத் தேவனான ருத்திரன், பிருஹஸ்பதி மீது கொண்ட அன்பால் அவரது தரப்பை அடைந்து தன் அஜாகவ வில்லைப் பற்றினான். அந்தப் பேரான்மா, பிரம்மசிரம் என்றறியப்படும் உயர்ந்த ஆயுதத்தை அதில் பொருத்தி, தைத்தியர்களின் மீது ஏவி அவர்களது புகழை அழித்தான்" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பிலும் பிபேக்திப்ராய் பதிப்பில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
தாராஸங்க்ராமம் - நட்சத்திரப் போர்
ஓ! பரதனின் வழித்தோன்றலே, அறவிதிகளை நன்கறிந்தவர்களும், பிருஹஸ்பதியின் தரப்பை அடைந்தவர்களுமான தேவர்கள் மற்றும், ஆசானின் மனைவியை அபகரித்த சோமனின் தரப்பை அடைந்த துஷிதர்கள் என்ற தேவர்கள் ஆகியோர், பரமதேவனான நித்திய பிரம்மனின் புகலிடத்தை நாடினார்கள்.(36) அதன்பேரில் அங்கே வந்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, சுக்கிரனையும், சங்கரனையும் (போரிடாமல் தடுத்து) தாரையைப் பிருஹஸ்பதியிடம் திருப்பியளித்தான்.(37)
தாரை கருவுற்றிருப்பதைக் கண்ட பிருஹஸ்பதி, அவளிடம், "நீ இந்தக் குழந்தையை என் வீட்டில் பெற்றுக் கொள்ளக்கூடாது" என்றான்.(38) அவள், கள்வர்களை அழிப்பவனும், எரிதழலைப் போன்ற பிராகசமிக்கவனுமான ஒரு மகனை இழை {புல் போன்ற} ஈர்க்குக்கட்டில் பெற்றெடுத்தாள்[4].(39) அந்த அழகிய சிறுவன் பிறந்ததும், அவன் தேவர்களின் அழகை மறைத்தான். இதனால் ஐயத்தால் நிறைந்த தேவர்கள், தாரையிடம் "இவன் யார்? இவன் பிருஹஸ்பதியின் மகனா, சோமனின் மகனா? எங்களுக்கு உண்மையைச் சொல்வாயாக" என்று கேட்டனர். இவ்வாறு தேவர்களால் கேட்கப்பட்டபோது, வெட்கத்தால் அவளால் பதிலேதும் கொடுக்கமுடியவில்லை.(40,41)
[4] பிபேக்திப்ராயின் பதிப்பில், "பிராமணரான பிருஹஸ்பதி, தாரை கருவுற்றிருப்பதைக் கண்டார். அவர், "இந்தக் கருவறை எனக்குச் சொந்தமானது, இங்கே வேறொருவனின் வித்து ஒருபோதும் வளர்க்கப்படக்கூடாது" என்றார். அந்தக் கரு, நெருப்பு போலச் சுடர்விட்டதால் அவள் அதைப் புல்தரையில் களைந்தெடுத்தாள். இந்தக் குழந்தை கொள்ளையர்களைக் கொல்பவனாக ஆனான்" என்றிருக்கிறது.
அதன்பேரில். கள்வர்களைக் கொல்பவனான அவளது மகன், அவளைச் சபிக்க எத்தனித்தான். பிரம்மனே வந்து அவனைத் தடுத்து, இந்த ஐயத்திற்கான தீர்வைத் தாரையிடம் கேட்கும் வகையில்,(42) "ஓ! தாரா, உண்மையை எங்களுக்குச் சொல்வாயாக. இவன் யாருடைய மகன்?" என்று கேட்டான்.
அவள், வரங்களை அளிப்பவனான தலைவன் பிரம்மனிடம், தன் கரங்களைக் கூப்பிய படியே, "(இவன்) சோமனுடையவன் {சோமனின் மகன்}" என்றாள். அப்போது அவனுடைய தந்தையான குடிமுதல்வன் சோமன், கள்வர்களை அழிப்பவனான தன் உயரான்ம மகனின் தலையை {உச்சியை} முகர்ந்தான்.(43,44)
அந்த நுண்ணறிவுமிக்கவன் (சோமன் {சந்திரன்}), தன் மகனுக்குப் புதன் என்று பெயரிட்டான். அவன் எப்போதும் வானத்தில் எதிர் திசையிலேயே உதிக்கின்றான்[5].(45) புதன், வைராஜனின் {வைவஸ்தவ மனுவின்} மகளான இளையிடம் ஒரு மகனைப் பெற்றான்[6]. அவனுடைய மகனே பெரும் மன்னனான புரூரவன் ஆவான்.(46) அவன் {புரூரவன்} ஊர்வசியிடம் ஏழு உயரான்ம மகன்களைப் பெற்றான். சந்திரனின் ஆணவத்தின் காரணமாக அவன் காச நோயை அடைந்தான்[7].(47) அவன் இந்நோயால் தாக்குண்டதால் அவனுடைய சுற்றுப்பாதை குறைவடைந்தது. அவன் அப்போது தன் தந்தையான அத்ரியின் புகலிடத்தை நாடினான்.(48) பெருந்தவசியான அத்ரி அவனுடைய பாபங்களில் இருந்து அவனை விடுவித்தார். இவ்வாறு காச நோயில் இருந்து விடுபட்ட அவன் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(49)
[5] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சோதிடத்தில் சோமனும் புதனும் பகைவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒருவேளை இது, புதன் சோமனுக்குத் தொல்லைகளைக் கொடுப்பவன் என்ற பொருளைத் தரலாம்" என்றிருக்கிறது.
[6] புதன் இளையை மணந்த கதை ஹரிவம்ச பர்வம் பகுதி 10-ல் https://harivamsam.arasan.info/2020/03/Harivamsa-Harivamsa-Parva-Chapter-10.html சொல்லப்பட்டிருக்கிறது.
[7] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சந்திரன் தன் {இருபத்தேழு} மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் அதிகம் அன்பு செலுத்தியதால் அவர்களின் தந்தையான தக்ஷன் அவனை இவ்வாறு சபித்தான்" என்றிருக்கிறது.
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வாறே மகிமையை அதிகரிக்கும் சந்திரனின் பிறப்பு குறித்த கதையை உனக்குச் சொன்னேன். இப்போது அவனுடைய குடும்பத்தை {குலத்தைக்} குறித்து நான் சொல்லப் போகிறேன்.(50) எப்போதும் அருளைத் தரும் சந்திரனின் பிறப்புக் கதையைக் கேட்பதால் ஒருவன் நோய்களில் இருந்து விடுபட்டு, நீண்ட வாழ்நாளையும், நெடும் சந்ததியையும் அடைந்து, தன் பாபங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுவான்" என்றார் {வைசம்பாயனர்}.(51)
ஹரிவம்ச பர்வம் பகுதி – 25ல் உள்ள சுலோகங்கள் : 51
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |