Thursday 23 April 2020

ரிசேயுவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 32

(புருவம்சானுகீர்த்தனம்)

An account of the Richeyu's family | Harivamsa-Parva-Chapter-32 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : துஷ்யந்தன் சகுந்தலை; பரதன் செய்த வேள்வி; பரதனின் சந்ததி; வாராணஸியின் மன்னன் திவோதாஸன்; அஜமீடன், ஜன்ஹு, குசிகன்; அஜமீடனின் வழித்தோன்றல்களான பாஞ்சாலர்கள்; சந்தனு, கிருபர், கிருபி, அஜமீடனின் வழித்தோன்றல்களான கௌரவர்கள்; குருவின் வழியில் வந்த சேதிநாட்டு உபரிசரவஸு; வஸுவின் வழியில் வந்த மகதர்கள்; பிரதீபனின் வழியில் வந்த பாஹ்லீகர்கள்; பூரு வம்சத்தில் வந்த பாண்டிய, சோழ, சேர நாட்டினர்; யயாதியின் மூன்றாம் மகனான த்ரஹ்யுவின் வழி வந்தவர்களான காந்தார நாட்டினர்; நான்காம் மகனான அனுவின் சந்ததி...

Dushyanta and Shakuntala
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{ரௌத்ராஸ்வனின் ஆறாவது மகனான} மன்னன் ரிசேயு வெல்லப்பட முடியாதவனாகவும், ஒப்பாரற்றவனாகவும் இருந்தான். தக்ஷகனின் மகளான ஈவலனை {ஜ்வலனை} அவனுடைய மனைவியானாள்.(1) புனிதமானவளான அந்த அரசி, புனிதப் பேரரசன் மதினாரனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு {மதினாரனுக்குப்} பெரும்பக்திமான்களான மூன்று மகன்கள் இருந்தனர்.(2) அவர்களில் முதல்வன் தங்ஸுவும் {தம்ஸுவும்}, இரண்டாமவன் பிரதிரதனும், மற்றும் இளையவன் ஸுபாஹுவும் ஆவர். அவனுக்கு {மதினாரனுக்கு} கௌரி என்ற பெயரைக் கொண்டவளும், மாந்தாதாவின் தாயுமான நன்கறியப்பட்ட மகள் ஒருத்தியும் இருந்தாள்.(3) அவர்கள் அனைவரும் வேதங்களை நன்கறிந்தவர்களாகவும், பிரம்மஞானத்தைக் கொண்டவர்களாகவும், வாய்மை நிறைந்தவர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டை நன்கறிந்தவர்களாகவும், பலம் நிறைந்தவர்களாகவும், போரில் திறன் நிறைந்தவர்களாகவும் இருந்தனர்.(4)



ஓ! மன்னா {ஜனமேஜயா}, {மதினாரனின் இரண்டாம் மகனான} பிரதிரதனுக்கு, கண்வர் என்ற மகன் இருந்தார், அவருக்கு {கண்வருக்கு} மேதாதி என்ற மகன் இருந்தார். அவரிடம் {மேதாதியிடம்} இருந்தே இருபிறப்பாளர்கள் காண்யாயனர்கள் {காண்வாயனர்கள் / காண்வசாகர்கள்} என்ற குடும்பத்தைப் பெற்றனர்.(5) ஓ! ஜனமேஜயா, அவருக்கு {மேதாதிக்கு} ஈலினி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள். பிரம்மவாதிகளைவிடவும் பலம் நிறைந்தவனான தங்ஸு அவளை {ஈலினியை} மணந்து கொண்டான்.(6) அவனுடைய {தங்ஸுவின்} மகனும், அறம் வளர்த்தவனும், அரச முனியுமான ஸுரோதன் {தர்மநேத்ரன்}, பிரம்மவாதியாகவும், பலம்நிறைந்தவனாகவும், வீரனாகவும் இருந்தான். உபதானவி என்பவள் அவனுடைய மனைவியாக இருந்தாள்.(7) அவளுக்குப் போர்வீரர்களான நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் துஷ்மந்தன் {துஷ்யந்தன்}[1], ஸுஷ்மந்தன், பிரவீரன் மற்றும் அனகன் ஆகியோராவர்.(8)

[1] மஹாபாரதம், ஆதிபர்வம் பகுதி 68 முதல் 74 வரை துஷ்யந்தன் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

வீரனான பரதன் துஷ்மந்தனின் {துஷ்யந்தனின்} மகனாவான். (தன்னுடைய குழந்தைப் பருவத்தில்) ஸர்வதமனன் என்ற பெயரைக் கொண்டிருந்த அவன் {பரதன்}, உயரான்மாவாகவும், ஒரு கோடி யானைகளின் பலத்தைக்[2] கொடையாகக் கொண்டவனாகவும் இருந்தான்.(9) உன்னதனான துஷ்மந்தன், உயர்ந்த தலைவனும், பரதன் என்ற பெயரைக் கொண்டவனுமான அந்த மகனை சகுந்தலையிடம் பெற்றான்.(10) சொர்க்கத்தில் இருந்து ஒரு குரல், மன்னன் துஷ்மந்தனிடம், "தாய் என்பவள் ஒரு தோலுறை மட்டுமே. மகன் தந்தைக்கு உரியவன். அவன், தன்னைப் பெற்றவனின் வழியைப் பின்பற்றுகிறான்.(11) ஓ! துஷ்மந்தா, உன் மகனைக் கவனித்துக் கொள்வாயாக, சகுந்தலையை அவமதிக்காதே. ஓ! மன்னா, தந்தையின் ஒரு பகுதியாகப் பிறக்கும் மகன் அவனை மரண வசிப்பிடத்தில் {யமனின் வசிப்பிடத்தில்} இருந்து விடுவிக்கிறான்.(12) உன்னாலேயே அவள் கருவுற்றாள். சகுந்தலை உண்மையையே சொன்னாள்" என்றது.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில், "ஓராயிரம் யானைகளின் பலம்" என்றிருக்கிறது.

நான் ஏற்கனவே சொன்னது போல், மன்னன் பரதனின் மகன்கள் அனைவரும் அவர்களின் அன்னையால் {அன்னையரால்} அழிக்கப்பட்ட போது, அங்கிரஸ் மகனான பிருஹஸ்தியின் மகனும், பெருந்தவசியுமான பரத்வாஜர், யாகங்களின் தலைமைத் தேவர்களான மருத்துகளால் பரதனின் மகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[3].(13,14) பரதன் சார்பில் நுண்ணறிவுமிக்கப் பரத்வாஜரிடம் இந்தக் கடமையை மருத்துக்கள் ஒப்படைத்த இந்த எடுத்துக்காட்டு அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது.(15) சந்ததியை உண்டாக்கும் சக்தி பரதனிடம் இல்லாதபோது, பரத்வாஜர் வேள்விகளைச் செய்து மருத்துகளைக் கௌரவித்து, விதாதன் என்ற பெயரைக் கொண்ட ஒரு மகனைப் பெற்றார். பரதன், தன் பேரனான விதாதன் பிறந்ததும், சொர்க்கத்திற்குச் சென்றான்.(16,17) அதன்பிறகு பரத்வாஜர், விதாதனை அரியணையில் அமர்த்திவிட்டு காட்டுக்குள் ஓய்ந்து சென்றார்.

[3] பரதன், பரத்வாஜர் செய்த வேள்வி மூலம் பூமன்யு என்ற மகனைப் பெற்றதாக மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதி 94ல் இருக்கிறது. 

அவன் {விதாதன் / பூமன்யு}, ஸுஹோத்ரன், ஸுஹோதாரன், கயன், கர்க்கன், கபிலன் என்ற ஐந்து மகன்களைப் பெற்றான். ஸுஹோத்ரன், பெரும்பலம் நிறைந்த காசிகன் மற்றும் மன்னன் கிருத்ஸமதி ஆகிய இரு மகன்களைக் கொண்டிருந்தான்[4]. பின்னவன் {கிருத்ஸமதி}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களுக்கு மத்தியில் தன் மகன்களைக் கொண்டிருந்தான்.(18-20) காசேயன் மற்றும் தீர்க்கதபன் ஆகியோர் காசிகனின் மகன்களாவர். பின்னவனால் கல்விமானான தன்வந்தரி பெறப்பட்டான்.(21) தன்வந்தரிக்குக் கேதுமான் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அவனுடைய {கேதுமானின்} மகன் வீர மன்னனான பீமரதன் ஆவான். அவனுடைய {பீமரதனின்} மகன், ராட்சசர்கள் அனைவரையும் கொன்றவனும், திவோதாஸன் என்ற பெயரில் வாராணஸி நகரின் மன்னனாகக் கொண்டாடப்பட்டவனுமாவான்.(22,23) அந்நேரத்தில், ஓ! மன்னா, க்ஷேமகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு ராட்சசன், உயரான்மாவும், நுண்ணறிவுமிக்கவனுமான நிகும்பன் வாராணஸி நகரம் ஓராயிரம் வருடங்கள் எவரும் வசிப்போரற்றதாகும் என்ற சபித்ததன் விளைவால் அந்நகரை மக்களற்றதாக்கினான். வாராணஸி நகரம் இவ்வாறு சபிக்கப்பட்ட உடனேயே மன்னன் திவோதாஸன், கோமதி ஆற்றங்கரையில் மிக அழகிய நகரம் ஒன்றை அமைத்தான்.(24,25) முன்னர் அந்த வாராணஸி நகரம், யது குலத்தில் பிறந்த அரசமுனியான மன்னன் பத்ரஸேண்யனின் உடைமையாக இருந்தது. சிறந்த வில்லாளிகளான அவனுடைய நூறு மகன்களைக் கொன்றே மன்னன் திவோதாஸன் தன் அரசை அங்கே அமைத்தான்.(26,27)

[4] மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதி 94:24,25ல், "பூமன்யு தனது மனைவியான புஷ்கரணியிடம் சுஹோத்ரன், சுஹோத்ரி {சுஹோதா}, சுஹோவிஹ், சுஜேயன், திவிரதன், கீசிகன் என்ற ஆறு மகன்களைப் பெற்றான்" என்றும், அதே அத்யாயம் 30ம் ஸ்லோகத்தில் "சுஹோத்ரன் தனது மனைவி {இக்ஷ்வாகுவின் மகள்} அய்க்ஷாகியிடம் அஜமீடன், சுமீடன் மற்றும் புருமீடன் ஆகிய மூன்று மகன்களைப் பெற்றான்" என்றுமிருக்கிறது

வீர மன்னனான பிரதர்த்தனன் திவோதாஸனின் மகனாவான். வத்ஸனும், பர்க்கனும் அவனுடைய {பிரதர்த்தனனின்} இரு மகன்களாவர்.(28) வத்ஸனின் மகன் அலர்க்கனும், அவனிடம் {அலர்க்கனிடம்} பிறந்தவன் சன்னதிமானுமாவர். பத்ரஸேண்யனின் மகனான உயரான்ம துர்தமன் ஹைஹயனால் தன் மகனாகத் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டான். வன்போரில் திவோதாஸனால் அபகரிக்கப்பட்ட தன் மூதாதையரின் அரசை அவன் {துர்தமன்} மீட்டான். குழந்தை என்று நினைத்த திவோதாஸனின், கருணையால் அவன் தப்ப விடப்பட்டான்.(29,30) மன்னன் அஷ்டரதன் {திவோதாஸன் / அவன் மகனான பிரதர்த்தனன்}, பீமரதனின் மகனாவான். பகைமைகளுக்கு ஒரு முடிவை எட்டும் வகையில் அந்த க்ஷத்திரியன் (துர்தமனின் மகன்களான) சிறுவர்கள் அனைவரையும் கொன்றான். காசியின் மன்னனான அலர்க்கன், வாய்மை நிறைந்தனாகவும், பிராமணர்களின் நலத்தைக் கவனித்துக் கொள்பவனாகவும் இருந்தான்.(31,32) இளமையும், அழகும் நிறைந்தவனான அந்த மன்னன் தன் நாட்டை அறுபதாயிரத்து, அறுபது நூறு வருடங்கள் {அறுபத்தாறாயிரம் ஆண்டுகள்} ஆண்டான்.(33) காசியின் மன்னன் அழகுள்ளவனாகவும், இளமையானவனாகவும் இருந்தான். லோபமுத்திரையின் உதவியால் அவன் நீண்ட வாழ்நாளை அடைந்தான்.(34) {நிகும்பனின்} சாபம் தீர்ந்ததும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த மன்னன் {அலர்க்கன்}, க்ஷேமகன் என்ற ராட்சசனைக் கொன்று, அழகிய வாராணஸி நகரத்தை மீண்டும் அமைத்தான்.(35)

மன்னன் ஸுனீதன் அலர்க்கனின் மகனாவான். பெருஞ்சிறப்புமிக்க க்ஷேம்யன் ஸுனீதனின் மகனாவான்.(36) க்ஷேம்யனின் மகன் கேதுமானும், அவனது {கேதுமானின்} மகன் வர்ஷகேதுவும் ஆவர்; பின்னவனின் {வர்ஷகேதுவின்} மகன் மன்னன் விபு ஆவான்.(37) விபுவின் மகன் ஆனர்த்தனும், அவனது {ஆனர்த்தனின்} மகன் ஸுகுமாரனும் ஆவர். அவனுடைய {ஸுகுமாரனின்} மகன், வலிமைமிக்கத் தேர்வீரனும், பெருஞ்சக்திமிக்கவனும், பக்திமானுமான மன்னன் ஸத்யகேது ஆவான். வத்ஸனில் இருந்து அவனுடைய மாகாணம் வத்ஸம் என்றும், பார்க்கவனின் மாகாணம் பர்க்கம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அங்கீரஸின் மகன்களாகப் பார்க்கவ குலத்தில் பிறந்தவர்களாவர். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, அவர்கள், பிராமணர்களாகவும், க்ஷத்திரியர்களாகவும், வைசியர்களாகவும் இருந்தனர்.(38-40)

ஸுஹோத்ரனின் மகன் பிருஹத், அவனுக்கு அஜமீடன், த்விமீடன் மற்றும் சக்திமிக்கப் புருமீடன் ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்[5]. அஜமீடனுக்கு, நீலினி, கேஸினை {கேஸினி}, அழகிய காரிகையான பூமினி {தூமினி} என்ற பெயர்களைக் கொண்ட மூன்று அழகிய மனைவியர் இருந்தனர்.(41,42) அஜமீடன், கேஸினியிடம் பலம்நிறைந்தவனான ஜன்ஹுவைப் பெற்றான். அவன் ஸர்வமேதமெனும் பெரும் வேள்வியைச் செய்தான். அவனைத் தன் கணவனாகுமாறு கங்கை வேண்டினாள். அவன் அவளுடைய முன்மொழிவை ஏற்க மறுத்ததால், அவனுடைய வேள்விக் களத்தில் வெள்ளம் பெருகச் செய்தாள்.(43,44) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, பகைவர்களைக் கொல்பவனான ஜன்ஹு, இவ்வாறு தன் வேள்விக்களம் கங்கையால் மூழ்கடிக்கப்பட்டதைக் கண்டு சீற்றமடைந்தவனாக அவளிடம், "ஓ! கங்கா, மூவுலகங்களிலும் உள்ள உன்னுடைய நீர் முழுவதையும் குடித்துத் தீர்க்கப் போகிறேன். உன் ஆணவத்திற்கான விலை நீ கொடுப்பாய்" என்றான்.(45,46)

[5] இதே அத்தியாயம் 18-20ம் ஸ்லோகத்தில், "ஸுஹோத்ரனுக்கு, பெரும்பலம் நிறைந்த காசிகன் மற்றும் மன்னன் கிருத்ஸமதி ஆகிய இரு மகன்களைக் கொண்டிருந்தான்" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில் இந்த 41ம் ஸ்லோகம், "விதாதனின் மகனும், பரதனின் பேரனுமான ஸுஹோத்ரன் என்பவன், அஜமீடன், த்விமீடன் மற்றும் புருமீடன் என்ற பெயர்களைக் கொண்ட மூன்று மகன்களைப் பெற்றான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மன்மதநாததத்தரின் பதிப்பில் இருப்பதைப் போலவே, "ஸுஹோத்ரனுக்குப் பிருஹத் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். பிருஹத்துக்கு, அஜமீடன், த்விமீடன் மற்றும் புருமீடன் என்ற பெயர்களில் மூன்று மகன்கள் இருந்தனர்" என்றே இருக்கிறது. மஹாபாரதம், ஆதிபர்வம் 94:30ல், "சுஹோத்ரன் தனது மனைவி {இக்ஷ்வாகுவின் மகள்} அய்க்ஷாகியிடம் அஜமீடன், சுமீடன் மற்றும் புருமீடன் ஆகிய மூன்று மகன்களைப் பெற்றான்" என்றுமிருக்கிறது.

ஜன்ஹுவால் கங்கை குடிக்கப்பட்டதைக் கண்ட உயரான்ம முனிவர்கள், அவளை ஜானவி என்ற பெயரில் அவனுடைய மகளாக்கினர்.(47) ஜன்ஹு, யுவனாஷ்வனின் மகளான காவேரியை மணந்து கொண்டான். அவளை {காவேரியைச்} சபித்ததன் மூலம் கங்கை அவளுடைய ஒருபாதி உடலை ஓராறாக மாற்றினாள்.(48) பேரரசன் பலாகாஷ்வன் ஜன்ஹுவுக்குப் பிடித்தமான மகனாவான்[6].(49) அவன் வேட்டை விரும்பியாக இருந்தான். அவனுடைய மகனான குசிகன் பன்ஹவர்களுடன் {பஹ்லவர்களுடன்} காட்டில் வளர்ந்து வந்தான்.(50) குசிகன், இந்திரனைப் போன்ற பலம்நிறைந்த ஒரு மகனை அடைய விரும்பி கடுந்தவம் செய்தான்.(51) மகவான் தன் சொந்த விருப்பத்தின் பேரில், மன்னன் காதி எந்தப் பெயரில் குசிக குலத்தில் பிறந்தான். அவனுடைய மகன்கள் விஷ்வாமித்ரர், விஷ்வரதன், விஷ்வஜித் மற்றும் விஷ்வக்ருத் ஆகியோராவர். ஓ! மன்னா, சத்யவதி அவனுடைய இளைய மகள் ஆவாள். ரிசீகர் அவளிடம் ஜமதக்னியைப் பெற்றார்.(52,53) தேவராதன் மற்றும் பிறர் அடங்கிய விஷ்வாமித்ரரின் மகன்கள் மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டனர். அவர்களுடைய பெயர்களைக் கேட்பாயாக.(54) தேவஷ்ரவனின் மகன் கதி, இவனிடமிருந்தே காத்யாயனர்கள் தங்கள் பெயர்களை அடைந்தனர். ஹிரண்யாக்ஷன் ஷாலாவதியிடமும், ரேணுமான் {ரேணுமந்தன்} ரேணுவிடமும் பெறப்பட்டனர்.(55) அதையுந்தவிர, ஓ! மன்னா, ஸாங்க்ருத்யர், காலவர் மற்றும் மௌத்கல்யர் ஆகியோரும் அவருடைய மகன்களாவர். அந்த உயரான்ம கௌசிகர்களின் குடும்பங்கள் இன்னும் நன்கறியப்பட்டிருக்கின்றன.(56)

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "வலிமைமிக்க அஜகன், ஜஹ்னுவின் மகனாவான், அஜகனின் மகன் பலாகாஷ்வன், அவனுடைய மகன் குசிகன் ஆவான். வேட்டையை விரும்புபவனான இந்தக் குசிகன், பஹ்லவர்களுடனும், வேறு காட்டுவாசிகளுடனும் சேர்ந்து வளர்ந்தான்" என்றிருக்கிறது. பிகேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே இருக்கிறது.

பாணிக்கள் {பாணினி}, பப்ருக்கள் {பப்ரவன்}, தியானஜாப்யர்கள் {த்யான ஜபன்}, மன்னன் தேவராதனும் பிறரும், ஷாதங்காயனன் {ஷாலங்காயனன்}, ஸௌஸ்ரவன், லௌஹிதன், யாமதூலன் {யாமதூதன்}, காரீஷிகள் {காரீஷயன்} மற்றும் ஸொன்ஷ்ருதர்கள் {ஸைந்தவாயனன்} ஆகியோர் அனைவரும் கௌசிகரின் {குசிகரின்} வழித்தோன்றல்களாவர். அவர்கள் தங்களுக்குள் உள்ள தர வேறுபாட்டிற்கு ஏற்ப திருமணக் கூட்டணிகளை ஏற்பாடு செய்து கொள்கின்றனர். ஓ! பேரரசே, பிராமண முனிவர்களான கௌசிகர்கள் மற்றும் பௌரவர்களுடனான கூட்டணி என்பது பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும் இடையிலான கலப்பு மணம் என்று அறியப்பட்டது. விஷ்வாமித்ரரின் மகன்களுக்கு மத்தியில் ஸுனஸேபரே மூத்தவர் ஆவார்.(57-60) அந்த முனிவர்களில் முதன்மையானவர் பிருகு குலத்தில் பிறந்திருந்தாலும், ஒரு கௌசிகரின் நிலையை அடைந்தார். விஷ்வாமித்ரருக்கு தேவராதன் மற்றும் பிறர் உட்பட வேறு மகன்களும் இருந்தனர்.(61) விஷ்வாமித்ரர் திருஷத்வதியிடம் அஷ்டகன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றார், அவன் லௌஹன் என்ற மகனைப் பெற்றான். இவ்வாறே நான் ஜன்ஹுவின் சந்ததியை விளக்கிச் சொன்னேன்.(62)

ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அஜமீடனின் பிற மகன்களைக் குறித்துக் கேட்பாயாக. அவன் தன் மனைவியான நீலினியிடம் ஸுஷாந்தியைப் பெற்றான்.(63) ஸுஷாந்தியிடம் இருந்து புருஜாதியும், அவனிடம் {புருஜாதியிடம்} இருந்து வாஹ்யாஷ்வனும் பிறந்தனர். பின்னவனுக்குத் தேவர்களுக்கு ஒப்பான ஐந்து மகன்கள் இருந்தனர்.(64) அவர்கள் முத்கலன், மன்னன் ஸ்ருஞ்ஜயன், ப்ருஹத்திஷு, யவனீரன் மற்றும் பலமிக்கவனான க்ருமிதாஷ்வன் ஆகியோராவர்.(65) அவர்கள் ஐவரும் தங்கள் நாட்டைப் பாதுகாக்க வல்லவர்கள் என்றும், வளமிக்கக் கிராமங்களை உள்ளடக்கிய பாஞ்சால மாகாணத்தில் தலைவர்களாக இருந்தனர் என்றும் நாம் கேள்விப்படுகிறோம்.(66) அவர்கள் ஐவரும் தங்கள் நிலத்தைப் பாதுகாக்க இயன்றவர்களாக இருந்ததால் அது பாஞ்சாலம் என்றழைக்கப்பட்டது. முத்கலரின் மகன்கள் பெருஞ்சிறப்புமிக்க மௌத்கல்யர்களாவர்.(67) அவர்கள் அனைவரும் உன்னதமானவர்களாகவும், இருபிறப்பாளர்களாகவும், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். கண்வர் மற்றும் முத்கலரின் வழித்தோன்றல்கள் அங்கிரஸின் தரப்பை அடைந்தனர்.(68) முதல்கலரின் மூத்த மகன், பெருஞ்சிறப்புமிக்கப் பிராமண முனிவரான இந்திரஸேனராவார், அவரிடம் இருந்து வத்யஷ்வன் பிறந்தான். அவன் {வத்யஷ்யன்} மேனகையிடம் இரட்டையரைப் பெற்றான்; இவ்வாறே நாம் கேள்விப்படுகிறோம். அவர்களில் ஒருவன் அரசமுனியான திவோதாஸனும், மற்றொருத்தி சிறப்புமிக்க அஹல்யையும் ஆவர்.(70) சிரத்வனர் {சிரத்வதர் / கௌதமர்} அஹல்யையிடம் முனிவர்களில் முதன்மையான சதானந்தரைப் பெற்றார். அவருடைய {சதானந்தரின்} மகன், வில் அறிவியலில் திறம்பெற்றவரும், பெருஞ்சிறப்புமிக்கவருமான ஸத்யத்ருதி ஆவார். தம் முன் ஒரு தேவ கன்னிகையைக் கண்டு ஆசையால் பீடிக்கப்பட்டதன் விளைவாக இரட்டையரைப் பெற்றார். மன்னன் சந்தனு வேட்டைக்குச் சென்றபோது, கருணை கொண்டு அவர்களை எடுத்து வளர்த்தான். அந்த மகன் கிருபன் என்றும், மகள் கிருபி என்றும் பெயரிடப்பட்டனர். அவர்கள் சாரத்வதர்கள் என்றழைக்கப்பட்டனர், கௌதமர்கள் என்றும் அறியப்பட்டனர்.(71-74)

இனி நான் திவோதாஸனின் சந்ததியைக் குறித்து விளக்கப் போகிறேன். அரச முனியான மித்ரேயன் திவோதாஸனின் மகனாவான்.(75) அவனிடம் இருந்தே மைத்ரேய குலம் அமைந்து அவனுக்குப் பின்னால் மைத்ரேயர்கள் என்று அழைக்கப்பட்டனர். பிருகுவின் வழித்தோன்றல்கள் க்ஷேத்ரோபோதரின் {க்ஷத்ரோத்பேதரின்} தரப்பை அடைந்தனர்.(76) உயரானம் ஸ்ருஞ்சயனுக்குப் பஞ்சஜனன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான், அவனுடைய {பஞ்சஜனனின்} மகன் மன்னன் ஸோமதத்தன் ஆவான். அவனுடைய மகன் பெருஞ்சிறப்புமிக்க ஸஹத்வனும் {ஸஹதேவனும்}, அவனுடைய மகன் மன்னன் ஸோமகனும் ஆவர்.(77,78) அந்தக் குடும்பம் அழிந்துபோகும் தருணத்தில் ஸோமகன் மீண்டும் அஜமீடனின் இரட்டையர்களில் பிறந்தான். அவனுடைய {ஸோமகனின்} மகன் ஜந்துவும், அவனுக்கு {ஜந்துவுக்கு} நூறு மகன்களும் இருந்தனர்.(79) அவர்களில் பிருஷதன் இளையவனாவான். அவனே துருபதனின் தந்தையாவான். துருபதனின் மகன் திருஷ்டத்யும்னனும், அவருடைய மகன் திருஷ்டகேதுவும் ஆவர்.(80) இந்த உயரான்ம ஸோமகர்கள் அஜமீடர்கள் என்று அறியப்பட்டனர். உயரான்ம அஜமீடனின் மகன்கள் ஸோமகர்கள் என்ற பெயரில் அறியப்பட்டனர்.(81)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, உன் மூதாதையரின் அன்னையும், மகன்களைப் பெற விரும்பியவளுமான தூமினி, அஜமீடனின் மூன்றாவது ராணியாவாள்.(82) எப்போதும் நோன்புகளை நோற்பவளான அந்தப் பெண்மணி, ஒரு மகனைப் பெறுவதற்காகப் பெண்கள் செய்வதற்கு மிகக் கடினமான பத்து லட்சம் ஆண்டுகள்[7] நீளும் கடுந்தவத்தைச் செய்தாள்.(83) ஓ! ஜனமேஜயா, கட்டுப்பாட்டுடன் கூடிய தூய உணவை உண்டு, முறையாக நெருப்பில் காணிக்கையிட்டு, நெருப்பு வழிபாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் குசப் புல்லில் படுத்துக் கொண்டாள். அஜமீடம் தூமினி என்ற அந்தப் பெண்ணை அறிந்தான், அவள் ரிக்ஷன் என்ற பெயரில் புகையின் வண்ணத்துடன் கூடிய ஓர் அழகிய மகனை ஈன்றாள். அவனிடம் இருந்து சம்வர்ணனும், அவனிடம் இருந்து குருவும் பிறந்தனர், அவன் {குரு} பிரயாகையைக் கடந்து சென்று குருக்ஷேத்ரம் எனும் நகரை அமைத்தான்.(84,85) அந்த உயரான்ம மன்னன் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, பக்திமான்கள் வசிக்கும் அந்தப் புனிதமான, அழகான மாகாணத்தைப் பண்படுத்திய பிறகு, சக்ரன் {இந்திரன்} அவனுக்கு ஒரு வரமளித்தான். அவனுடைய குடும்பம் பெருமைமிக்கதாக இருந்தது, அவனிடம் {குருவிடமிருந்தே} இருந்தே கௌரவர்கள் தங்கள் பட்டப்பெயரைப் பெற்றனர்.(86,87)

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பத்தாயிரம் ஆண்டுகள்" என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில், "நூறு ஆண்டுகள்" என்றும் இருக்கிறது.

குருவுக்கு, ஸுதன்வன், ஸுதனன் {ஸுதனு}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பரீக்ஷித், பிரவரன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர், அவர்களின் பெயர்களைக் கேட்டால் பகைவர்கள் நடுங்கினர்.(88) நுண்ணறிவுமிக்க ஸுஹோத்ரன் ஸுதன்வனின் மகனாவான். அவனுடைய {ஸுதன்வனின்} மகன், வேதங்களையும், பிற சாத்திரங்களையும் நன்கு கற்ற சியவனர் ஆவார். க்ருதயஜ்ஞன் சியவனரின் மகனாவான். பக்திமானான அந்த மன்னன் பல வேள்விகளைச் செய்து, மகிமையில் இந்திரனுக்கு நிகரான ஒரு மகனைப் பெற்றான்.(90) அவன் வானத்திலும், காற்றிலும் திரியவல்லவனும், சேதிகளின் மன்னனுமான வஸு ஆவான். அவன் கிரிகையிடம் ஏழு மகன்களைப் பெற்றான்.(91) வலிமைமிக்கத் தேர்வீரனான மகத மன்னன் பிருஹத்ரதன், பிரத்யக்ரஹன், மணிவாஹனன் என்ற பெயரையும் கொண்ட குசன், மாருதன், யது, மீனான காளி மற்றும் ஸத்தமன். பிருஹத்ரதன் மகன், குசாக்ரன் என்ற மகனைப் பெற்றான்,(92,93) அவனுடைய {குசார்க்கனின்} மகன் கல்விமானும், பலமிக்கவனுமான விருஷபன் ஆவான், அவனுடைய {விருஷபனின்} மகன் பக்திமானான புஷ்பவாரி {புஷ்பவந்த்} ஆவான். அவனுடைய {புஷ்பவாரியின்} மகன், பலமிக்க மன்னன் ஸத்யதுலன் {ஸத்யஹிதன்} என்ற பெயரைக் கொண்டவனாவான்.(94,95) அவனுடைய {ஸத்யதுலனின்} மகன் அற ஆன்மாவான ஊர்ஜனும், அவனுடைய {ஊர்ஜனின்} மகன் ஸம்பவனும் ஆவான். ஸம்பவனுக்கு ஒரு பலமிக்க மகன் இரு பகுதிகளாகப் பிறந்து ஜரையால் {ஒன்றாகத்} தைக்கப்பட்டான். அதன்படி இந்த மகன் ஜராசந்தன் என்ற பெயரிடப்பட்டான்.(96,97) பெரும் பலம் நிறைந்த ஜராசந்தன் க்ஷத்திரியர்கள் அனைவரையும் வீழ்த்தினான். அவனுடைய மகன் பலம் நிறைந்தவனான ஸஹதேவனாவான்.(98) அவனுடைய {ஸஹதேவனின்} மகன், அழகனும் பெருஞ்சிறப்புமிக்கவனும், ஒரு பெரும்பக்திமானைப் பெற்றவனுமான உதாயு ஆவான்.(99) மகத நாட்டில் வாழ்ந்து வந்த அவனுடைய பெயர் சுருததர்மன் ஆகும்.

பரீக்ஷித்தின் மகன் பக்திமானான ஜனமேஜயன் ஆவான்.(100) அவனுக்கு {ஜனமேஜயனுக்கு}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான சுருதஸேனன், உக்ரஸேனன், மற்றும் பீமஸேசன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர்.(101) அவர்கள் அனைவரும் பெருஞ்செழிப்பு மிக்கவர்களாகவும், பலம் நிறைந்தவர்களாகவும், துணிவு மிக்கவர்களாகவும் இருந்தனர். இந்த மூன்று மகன்களையும் தவிர, ஜனமேஜயன் மணிமதியிடம், ஸுரதன், மதிமான் என்ற மற்றுமிரு மகன்களைப் பெற்றான்.(102) ஸுரதனின் மகன் பலம்நிறைந்த விதூரதனும், அவனுடைய {விதூரதனின்} மகன் வலிமைமிக்கத் தேர்வீரனான ரிக்ஷனும் ஆவர்.(103) அவன் இரண்டாவது ரிக்ஷனாக இருப்பினும், முதல்வனைப் போலவே சிறப்புமிக்கவனாக இருந்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, உன்னுடைய குடும்பத்தில் இரண்டு ரிக்ஷர்களும், இரண்டு பரீக்ஷித்துகளும், மூன்று பீமஸேனர்களும், இரண்டு ஜனமேஜயர்களும் பிறந்தனர். ரண்டாம் ரிக்ஷனுக்குப் பீமஸேனன் என்ற பெயரில் ஒரு மகனும், அவனுக்கு {பீமஸேனனுக்குப்} பிரதீபன் என்ற மகனும் இருந்தனர். அவனுடைய {பிரதீபனின்} மகன்கள், வலிமைமிக்கத் தேர்வீரர்களான சந்தனு, தேவாபி மற்றும் பாஹ்லீகன் ஆகியோராவர்.(104-106)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, நீ பிறந்த குடும்பம் சந்தனுவின் குடும்பமாகும். ஓ! மன்னா, பாஹ்லீகனுக்கு ஏழு நாடுகள் இருந்தன {ஸப்தவாஹ்யம் என்ற நாடு இருந்தது}.(107) பாஹ்லீகனின் மகன் பெருஞ்சிறப்புமிக்க ஸோமதத்தனும், அவனுடைய {ஸோமதத்தனின்} மகன்கள், பூரி, பூரிஸ்ரவஸ் மற்றும் சலன் ஆகியோராவர்.(108) {சந்தனு மற்றும் பாஹ்லீகனின் அண்ணனான} தேவாபி முனிவர் தேவர்களின் புரோஹிதராக இருந்தார்.(109) மன்னன் சந்தனு, குரு மன்னர்களில் முதன்மையானவனாக இருந்தான். ஓ! பெரும் மன்னா, நீ சந்தனு குலத்தின் குடும்பத்திலேயே பிறந்தாய்.(110) அவன் {சந்தனு} கங்கையிடம், தேவவிரதன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். பாண்டவர்களின் பாட்டனான அவர், பீஷ்மர் என்ற பெயரில் கொண்டாடப்பட்டார்.(111) காளி (சத்யவதி), சந்தனுவுக்கு மிகப் பிடித்தமானவனும், அற ஆன்மாவும், பாவமற்ற மகனுமான விசித்ரவீரியனைப் பெற்றாள்.(112) கிருஷ்ணத்வைபாயனர் {வியாசர்}, விசித்ரவீரியனின் மனைவியிடம் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரனைப் பெற்றார். திருதராஷ்டிரன், காந்தாரியிடம், துரியோதனனை மூத்தவனாகக் கொண்ட நூறு மகன்களைப் பெற்று மன்னனானான்.(113,114) பாண்டுவின் மகன் தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அவனுடைய {தனஞ்சயனின்} மகன், சுபத்திரையின் மூலம் பிறந்த அபிமன்யுவும் ஆவர்.(115) ஓ! மன்னா, இதுவே நீ பிறந்த பூரு குலமாகும்.

இனி துர்வஸு, த்ரஹ்யு, அனு மற்றும் யது ஆகியோரின் குடும்பங்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(116) துர்வஸுவின் மகன் வஹ்னியும், அவனுடைய {வஹ்னியின்} மகன் கோபானுவும், அவனுடைய {கோபானுவின்} மகன் தடுக்கப்படமுடியாத மன்னன் திரைஸனுவும் ஆவர். அவனுடைய {திரைஸனுவின்} மகன் கரந்தமனும், அவனுடைய {கரந்தமனின்} மகன் மருத்தனும் ஆவர். நான் ஏற்கனவே அவீக்ஷிதன் மகன் மருத்தன் என்ற மற்றொரு பெயரைக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த மன்னன் மருத்தனுக்கு மகனெவரும் இல்லை, அதன்பேரில் அவன் அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல வேள்விகளைச் செய்தான். ஓ! மன்னா, அவன் {மருத்தன்} ஸம்மதை என்ற பெயரில் ஒரு மகளைப் பெற்றான். அவன் உயரான்ம சம்வர்த்தனுக்கு அவளை {ஸம்மதையைக்} கொடையாக அளித்தான். அதன்பிறகு அவன் {மருத்தன்} பாவமற்றவனும், பூரு குலத்தின் மன்னனான துஷ்மந்தனை {துஷ்யந்தனைத்} தன் மகனாக அடைந்தான்.(117-120)

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இவ்வாறே முதுமையை மாற்றிக் கொள்வதில் உண்டான யயாதியின் சாபத்தால் துர்வஸுவின் குலம் குருக்களுடன் கலந்தது. துஷ்யந்தனின் மகன் மன்னன் கருத்தாமனும், அவனுடைய மகன் ஆக்ரீடனும் ஆவர். அவனுக்கு {ஆக்ரீடனுக்கு}, பாண்டியன், கேரளன் {சேரன்}, கோலன் மற்றும் சோழன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர். வளமிக்க அவர்களுடைய நிலப்பகுதிகள் முறையே பாண்டியம் {பாண்டிய நாடு}, சோழம் {சோழ நாடு}, கேரளம் {சேர நாடு} எனப் பெயரிடப்பட்டது.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, த்ரஹ்யுவின் மகன்கள் பப்ருவும், சேதுவும் ஆவர். சேதுவின் மகன் அங்காரன், மருத்துகளின் தலைவனாக அறியப்பட்டான். பலம்நிறைந்தவனான அந்த மன்னன் {அங்காரன்}, பெருஞ்சிரமத்தின் பேரில் போரில் யௌவானாஷ்வனால் கொல்லப்பட்டான். அவனுடன் நடந்த அந்தக் கொடும்போர் பதினான்கு மாதங்கள் நீடித்தது.(121-125) மன்னன் காந்தாரன் அங்காரனின் மகனாவான், அவனுடைய பெயரிலேயே இன்னும் காந்தார நாடு அழைக்கப்படுகிறது. அந்த நிலப்பகுதியைச் சேர்ந்த குதிரைகளே தங்கள் வகையில் மிகச் சிறந்தவையாகும்.

அனுவின் மகன் தர்மனும், அவனுடைய மகன் கிருதனும் {திருதனும்} ஆவர். கிருதன், துதுஹனைப் பெற்றான், அவனுடைய {துதுஹனின்} மகன் பிரசேதன் ஆவான். பிரசேதனின் மகன் ஸுசேதன் ஆவான். இவ்வாறே நான் அனுவின் குடும்பத்தை விளக்கிச் சொன்னேன். இனி, மிகச் சிறந்ததும், பலம்நிறைந்ததுமான மூத்தவன் யதுவின் குடும்பத்தை விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக" என்றார் {வைசம்பாயனர்}.(126-129)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 32ல் உள்ள சுலோகங்கள் : 129
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்