Saturday, 18 April 2020

காசியின் மன்னர்கள் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 29

(காசியபவர்ணனம் - திவோதாஸ சரிதம்)

An account of Kashi kings | Harivamsa-Parva-Chapter-29 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : அனேனனின் வழித்தோன்றலான தன்வந்தரி; தன்வந்தரியின் வழித்தோன்றலான திவோதாஸன்; மாமனாரின் வசிப்பிடத்தில் வசித்த சிவன்; சிவனின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சொன்ன பார்வதி; வாராணசியை வீடாகத் தேர்ந்தெடுத்த சிவன்; நிகும்பனுக்கு வாராணசியில் சிலை நிறுவிய நாவிதன் கண்டூகன்; திவோதாசனின் மனைவி நிகும்பனின் சிலையிடம் பிள்ளை வரம் வேண்டியது; பிள்ளை கொடுக்காததால் கோபமடைந்த திவோதாஸன் நிகும்பனின் வசிப்பிடத்தை அழித்தது; நிகும்பனின் சாபத்தால் மக்களின்றி வெறுமையான வாராணசி; சிவனும் பார்வதியும் மூன்று யுகங்களாக வாராணசியில் வாழ்ந்தது; நான்காவது யுகத்தில் புலப்படாத நிலையில் வாழ்வது; திவோதாஸனின் சந்ததி...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{ஆயுவின் மகன்களில் மூன்றாமவனான} ரம்பனுக்குச் சந்ததி இல்லை. {நான்காமவன் ரஜியின் வம்சம் முந்தைய அத்யாயத்தில் விளக்கப்பட்டது. ஐந்தாமவனான} அனேனனின் சந்ததியைச் சொல்லப் போகிறேன். அவனது {அனேனனின்} மகன் பெருஞ்சிறப்புமிக்க மன்னன் பிரதிக்ஷத்ரன் ஆவான்.(1) அவனுடைய {பிரதிக்ஷத்ரனின்} மகன் ஸ்ருஞ்ஜயன் என்ற பெயரைக் கொண்டவனாவான், அவனுடைய {ஸ்ருஞ்ஜயனின்} மகன் ஜயனும், அவனுடைய {ஜயனின்} மகன் விஜயனும் ஆவர்.(2) அவனுடைய {விஜயனின் மகன்} மகன் கிருதியும், அவனுடைய {கிருதியின்} மகன் ஹர்யஸ்வனும் ஆவர். அவனுடைய {ஹர்யஸ்வனின்} மகன் பலம்நிறைந்த மன்னனான ஸஹதேவன் ஆவான். ஸஹதேவனின் மகன் அற ஆன்மாவான நதீனனும், அவனுடைய {நதீனனின்} மகன் ஜயத்ஸேனனும், அவனுடைய {ஜயத்ஸேனனின்} மகன் ஸங்க்ருதியும் ஆவர். ஸங்கிருதியின் மகன் பக்திமிக்க ஆன்மா கொண்டவனும், பெருஞ்சிறப்புமிக்கவனும், எப்போதும் க்ஷத்திரியக் கடமைகளை நிறைவேற்றுபவனுமான க்ஷத்ரவிருத்தன் {க்ஷத்ரதர்மன்}[1] ஆவான். இவ்வாறு அனேனனின் சந்ததியைச் சொன்னேன். இனி {ஆயுவின் மகன்களில் இரண்டாமவனான விருத்தஷர்மனின்} க்ஷத்ரவிருத்தனின் வழித்தோன்றல்களைக் கேட்பாயாக[2].(3-5)



[1] இங்கே மூலத்தில் https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Adhyaya-29.html "த⁴ர்மாத்மா க்ஷத்ரத⁴ர்மா" என்றே இருக்கிறது. இங்கே மன்மதநாததத்தரின் பதிப்பில் பிழையேற்பட்டிருக்க வேண்டும். 
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ப்ரதிக்ஷத்ரன், ஸ்ருஞ்ஜயன், ஜயன், விஜயன், க்ருதி, ஹர்யஸ்வன், ஸஹதேவன், நதீனன், ஜயத்ஸேனன், ஸங்க்ருதி, க்ஷத்ரதர்மன் என்பது அனேனனின் பரம்பரையாகும். இனி க்ஷத்ரவிருத்தனின் அஃதாவது ஆயுவின் மற்றொரு {இரண்டாவது} மகனான விருத்தஸர்மனின் பரம்பரையைக் கொஞ்சம் அறிவாயாக" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த அத்தியாயம் முழுமையும் விடுபட்டிருக்கிறது.

க்ஷத்ரவிருத்தனின் மகன் பெருஞ்சிறப்புமிக்க ஸுனஹோத்ரன் ஆவான். அவனுக்கு, காசன், சலன், கிருத்ஸமதன் என்ற பெயர்களில் பக்திமிக்கவர்களான மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களில் {மூன்றாமவனான} கிருத்ஸமனின் மகன் சுனகனாவான், அவனுடைய சந்ததியினரான சௌனகர்கள் பிராமணர்களாகவும், க்ஷத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், சூத்திரர்களாகவும் இருந்தனர். {இரண்டாமவனான} சலனின் மகன் அர்ஷ்டிஷேணனும், அவனுடைய மகன் சுதாபனும் {காசகனும்} ஆவர். {முதலாமவனான} காசனின் மகன்கள், காஷ்யன் {காசி}, மற்றும் தீர்க்கதபன் ஆகியோராவர். பின்னவனின் {தீர்க்கதபனின்} மகன் கல்விமானான தன்வந்தரி {தன்வன்} ஆவான். நுண்ணறிவுமிக்க முதிய மன்னனான தீர்கதபனின் கடுந்தவத்தின் முடிவில், இவ்வுலகில் இரண்டாம் பிறவியை எடுக்கும் வகையில், அந்தத் தன்வந்தரி கடலில் இருந்து எழுந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(6-10)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! தலைவா, மனிதர்களின் நிலத்தில் தன்வந்தரி ஏன் பிறந்தான்? இதை முறையாகவும், உண்மையாகவும் உம்மிடம் இருந்து நான் அறிய விரும்புகிறேன். எனவே அதை விளக்குவீராக" என்றான்.(11)

வைசம்பாயனர், "ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, தன்வந்தரியின் பிறப்பைக் குறித்துக் கேட்பாயாக. பழங்காலத்தில் அமுதம் கடையப்பட்ட போது பெருங்கடலில் இருந்து தன்வந்தரி எழுந்தான். தன்னருளில் முழுமையாக மறைக்கப்பட்ட அவன், அமுதக் கலசத்துடன் வெளியே வந்தான். தொழிலில் வெற்றியை அருளும் விஷ்ணுவைத் தியானித்த அவன், விரைவில் அவனைக் கண்டதும் எழுந்து நின்றான்.(12,13) விஷ்ணு அவனிடம், "நீ நீரில் இருந்து வெளி வந்ததால் அப்ஜன் என்று அறியப்படுவாய்" என்றான். அதனால் அவன் அப்ஜன் என்ற பெயரிலும் அறியப்படுகிறான்.

அப்போது அப்ஜன் அவனிடம் {விஷ்ணுவிடம்}, "ஓ! தலைவா, நான் உன் மகனாவேன். எனவே, ஓ! தேவர்களின் தலைவா, வேள்விக் காணிக்கைகளில் ஒரு பங்கையும், இவ்வுலகில் ஓர் இடத்தையும் எனக்கு அளிப்பாயாக" என்றான்.

இவ்வாறு சொல்லப்பட்டவனும், அவனைக் கண்டவனுமான தெய்வீகத் தலைவன் அவனிடம் உண்மையைப் பேசும் வகையில்,(15) "வேள்விகளில் வெளிப்படும் தேவர்கள், தங்களுக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பங்கைக் கொண்டிருக்கிறார்கள். பெரும் முனிவர்களும், பல்வேறு தேவர்களுக்குப் பல்வேறு பலியுணவுகளை அர்ப்பணித்திருக்கின்றனர். எனவே, மிகச் சிறியதென்றாலும், வேதங்களில் குறிப்பிடப்படாத எந்தப் பொருளையும் என்னால் உனக்குத் தர இயலாது என்பதை அறிவாயாக. ஓ! மகனே, நீ தேவர்களுக்குப் பிறகு பிறந்தாய், எனவே, வேள்விக்காணிக்கைகளில் நீ பங்கு கொள்ள முடியாது.(16,17) உன் இரண்டாவது பிறவியில், நீ உலகில் பெரும்புகழை ஈட்டுவாய். கருவறையில் இருக்கும்போதே நீ அணிமா சித்தியை அடைவாய்[3].(18) அவ்வுடலுடன் நீ தேவனின் கண்ணியத்தை அடைவாய். சரு, மந்திரம், நோன்புகள் மற்றும் ஜபங்களால் இருபிறப்பாளர்கள் உன்னை வழிபடுவார்கள்.(19) நீ எட்டுப் பிரிவுகளுடன் கூடிய ஆயுர்வேதத்தைப் பிரச்சாரம் செய்வாய். நிச்சயம் வரப்போகும் இப்படைப்பை நீ உன் {முதலில் பிறந்த} நீர்நிலைப் பிறப்பில் அறிவாய்.(20) இரண்டாம் யுகமான துவாபர யுகம் தொடங்கும்போது, நீ நிச்சயம் மீண்டும் பிறப்பாய்" என்றான். தன்வந்தரிக்கு இந்த வரத்தை அளித்துவிட்டு மீண்டும் விஷ்ணு மறைந்தான்.(21)

[3] "இருப்பில் இருந்து இறுதி விடுதலையை {முக்தி நிலையை} அடைதல்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

இரண்டாவதாகத் துவாபர யுகம் தொடங்கியபோது, காசியின் மன்னனும், ஸுனஹோத்ரனின் மகனுமான {வழித்தோன்றலுமான} தீர்க்கதபன், ஒரு மகனைப் பெற வேண்டி தன் வழிபாட்டுக்குரிய {அப்ஜ} தேவனுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கி,(22) "எனக்கு ஒரு மகனை அளிக்கப் போகும் இந்தத் தேவனின் பாதுகாப்பில் என்னை நான் கிடத்திக் கொள்ளப் போகிறேன்" என்றான். அந்த மன்னன் {தீர்க்கதபன்}, ஒரு மகனுக்காகத் தேவன் அப்ஜனை {தன்வந்தரியை} வழிபட்டான்.(23) அதன்பேரில் அந்தத் தெய்வீகத் தலைவன் {தன்வந்தரி}, அந்த மன்னனிடம் நிறைவடைந்தவனாக, "ஓ! நன்னோன்புகளைக் கொண்டவனே, நீ வேண்டும் எந்த வரத்தையும் நான் உனக்கு அருள்வேன்" என்றான்.(24) மன்னன் {தீர்க்கதபன்}, "ஓ! தலைவா {தன்வந்திரியே}, நீ நிறைவடைந்தால், சிறப்புமிக்க மகனாக நீ எனக்குப் பிறப்பாயாக" என்றான். அப்போது, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அவன் {தன்வந்தரி} அங்கேயே அப்போதே மறைந்தான்.(25) அதன் பிறகு, தேவனான தன்வந்தரி அவனது வீட்டில் பிறந்தான். நோய்கள் அனைத்தையும் அழிக்கவல்லவனான அவன் {தன்வந்தரி} காசியின் மன்னனான். பரத்வாஜரிடம் இருந்து ஆயுர்வேத ஞானத்தை அடைந்த அவன், மருத்துவர்களின் தொழிலை எட்டு வகைகளாகப்[4] பிரித்து அவற்றைத் தன் சீடர்களுக்கு அளித்தான்.(27)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "காயச் சிகித்ஸை<1> = பொதுவான மருத்துவம், பா³ல சிகித்ஸை<2> = குழந்தை மருத்துவம், க்³ரஹம்<3> = தீய ஆவிகளால் பீடிக்கப்படுதல் முதலியவற்றுக்கான மருத்துவம், ஊர்த்⁴வ-அங்க³ சிகித்ஸை<4> = தலை, கண்கள், காதுகள் உள்ளிட்ட உடலின் மேற் பகுதிகளுக்கான மருத்துவம், ஸ²ல்ய சிகித்ஸை<5> = வீச்சுவெட்டுகள் {கசையடிகள்}, ஆழமான வெட்டுக் காயங்கள் முதலியவற்றுக்கான மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை, த³ம்ஷ்ட்ர சிகித்ஸை<6> = விஷக்கடிகளுக்கான மருத்துவம், ஜரா சிகித்ஸை<7> = மூப்புத் தொடர்பான காரியங்களுக்கான மருத்துவம், வ்ருஷ {அ} வாஜிகரணம்<8> = கசாயம் முதலியவற்றைப் பயன்படுத்தி, ஆற்றல்குறை, தளர்ச்சி ஆகியவற்றிற்கும், இளமையை நீட்டித்தல் ஆகியவற்றுக்குமுரிய மருத்துவம் - ஆகியவையே அந்த எட்டு வகை ஆயுர்வேத மருத்துவங்கள்" என்றிருக்கிறது.

தன்வந்தரியின் மகன் கேதுமான் என்றும், அவனுடைய {கேதுமானின்} மகன் பீமரதன் என்றும் அறியப்பட்டனர்.(28) அவனுடைய {பீமரதனின்} மகன் மன்னன் திவோதாஸன் ஆவான். பக்திமிக்க ஆன்மாவான திவோதாஸன் வாராணஸியின் மன்னன் ஆனான்.(29) ஓ! மன்னா, அந்நேரத்தில், ருத்திரனின் பணியாளான ராட்சசன் க்ஷேமகன், வாராணஸி நகரத்தை வசிப்போரற்றதாக்கினான்.(30) நுண்ணறிவு மிக்கவனும், உயரான்மாவுமான நிகும்பன் {நிகும்பகன்}[5] வாராணஸிக்கு எதிராக, "ஓராயிரம் வருட காலம் மெய்யாகவே உன்னில் வாழ யாரும் இருக்க மாட்டார்கள்" என்று சாபமளித்தான்.(31)

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சிலர், சிவன் மற்றும் பார்வதியின் மகனான விநாயகனின் பட்டப்பெயராக இதைக் கொண்டும், விநாயகன் நாகதந்தி செடிக்கு ஒப்பான தந்தங்களைக் கொண்டிருப்பதன் காரணத்தாலும், இங்கே சொல்லப்படும் நிகும்பனை விநாயகன் என்றே எடுத்துக் கொள்கின்றனர். கும்பம் என்றால் யானையின் நெற்றி என்றும் வேறு சில செடிகள் என்றும் பொருள் கொள்ளலாம். பின்வரப்போகும் உரையில் நிகும்பனின் சிலை காசியின் நுழைவாயிலில் நிறுவப்பட்டது என்று இருக்கிறது. நாம் அழகாகத் தெரியும் தேவர்களின் சிலைகளை நிறுவுவோமேயன்றி பிருங்கி, சிருங்கி, வீரபத்ரன் முதலிய கடுந்தோற்றமுள்ள ருத்ரகணங்களின் சிலைகளை நிறுவுவதில்லை. எனவே, விநாயகனின் சிலை மட்டுமே காசியின் நுழைவாயிலில் நிறுவப்பட்டிருக்க முடியும். இந்த வாதங்களின் பேரில் நிகும்பன் என்பதை விநாயகன் என்றும் கொள்ளலாம்" என்றிருக்கிறது. மேலும் இனி வரப் போகும் ஸ்லோகங்களில் நிகும்பன் கணங்களின் தலைவன் என்றும் குறிப்பிடப்படுகிறான். கணங்களின் தலைவன் கணபதியாவான். எனவே, அதுவும் விநாயகனையே சுட்டுகிறது.

காசி இவ்வாறு சபிக்கப்பட்டதும் மன்னன் திவோதாஸன், தன் அழகிய தலைநகரை (வாராணஸிக்கு அருகில்) கோமதி ஆற்றங்கரையில் அமைத்தான்.(32) முற்காலத்தில் வாராணஸி, யதுகுலத்தைச் சார்ந்த மஹிஷ்மானின் {மஹிஷ்மந்தன்} மகனான பத்ரஸேண்யனுக்கு {பத்ரஸ்ரேண்யனுக்கு} உரியதாக இருந்தது. திவோதாஸன், மிகச் சிறந்த வில்லாளிகளாக இருந்த பத்ரஸேண்யனின் நூறு மகன்களைக் கொன்று அந்த நகரத்தை அடைந்தான். இவ்வாறு (மன்னன் திவோதாஸனுடைய) ஆதிக்கத்தின் பேரில் பத்ரஸேண்யன் தன் நாட்டை இழந்தான்.(33,34)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பலமிக்க நிகும்பன் வாராணஸியை ஏன் சபித்தான்? அந்தப் புனித நிலத்தைச் சபித்த அந்த அறம்சார்ந்த நிகும்பன் யார்?" என்று கேட்டான்.(35)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெரும்பலமிக்கப் பேரரசனும், அரசமுனியுமான திவோதாஸன், செழிப்புமிக்க அந்நகரை {பத்ரஸேண்யனிடம் இருந்து} அடைந்து, அங்கேயே வாழத் தொடங்கினான்.(36) அந்நேரத்தில் தலைவன் சிவன், கொடையைப்[6] பெற்றுக் கொண்டு, தன் தேவியின் (தன் மனைவியான துர்க்கையின்) நிறைவுக்காகத் தன் மாமனாரின் {ஹிமவானின்} வசிப்பிடத்தில் வாழ்ந்து வந்தான்.(37) மதிப்புமிக்கக் குடும்பத்தில் பிறந்தவர்களும், பெரும் முனிவர்களுமான பார்ஷதர்கள் அந்தத் தேவனுடைய {சிவனுடைய} ஆணையின் பேரில், மேற்குறிப்பிட்ட வடிவங்களிலும், ஆடைகளிலும், பார்வதியை நிறைவடையச் செய்து கொண்டிருந்தனர். பெருந்தேவியான பார்வதி இதனால் நிறைவடைந்தாலும், {பார்வதியின் அன்னையான} மேனகை {மேனா தேவி} அவ்வாறு நிறைவடையவில்லை. அவள் தொடர்ந்து தேவனையும் {சிவனையும்}, தேவியையும் {பார்வதியையும்} இழிவு செய்யத் தொடங்கினாள்[7].(39)

[6] கன்னிகாதானமாக இருக்கலாம் 
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "தேவன் சிவனின் ஆன்மக்குழுவான பிரமதக் கணங்களும் {பார்ஷதர்களும்} சிவனுடைய ஆணையின் பேரில் {சிவனின் மாமனார் வீட்டிலும்} சிவனுடனேயே இருந்தனர். இந்தக் குழுவைச் சார்ந்த பேரான்ம உறுப்பினர்கள் சங்கர ஸாரூப்ய தேஜம் என்ற சிவனைப் போன்ற தோற்றத்தையே கொண்டிருந்தனர் {சிவனைப் போன்ற வடிவம் மற்றும் உடைகளுடனேயே இருந்தனர்}. சிவனின் சாராம்சமான சிவ ஸ்வரூப தத்வத்தையே கற்று வந்தவர்கள் என்பதால், அவர்களுக்குச் சிவனுடன் சேர்ந்து பாடுவது, துதிப்பது, ஆடுவது ஆகியவற்றைத் தவிர வேறேதும் காரியம் இருக்கவில்லை. எனவே, இப்போது சிவனின் மாமனார் வீட்டிலும், பழைமையான இந்த நல்லப்பழக்கம் தொடர்ந்தபோது, சிவையின் {பார்வதியின்} பெயரையும் சிவனுடன் சேர்த்துப் பாடவும், ஆடவும், துதிக்கவும் தொடங்கினர். புதிதாகத் திருமணம் செய்து கொண்ட சிவை மற்றும் சிவன் ஆகியோர் இந்தக் கொண்டாட்டத்தில் பெரிதும் மகிழ்ச்சியடைந்தாலும், பார்வதியின் அன்னையும், ஹிமவானின் மனைவியுமான மேனாதேவி என்ற பெண்மணி, தன் வீட்டில் இதுபோன்ற சாலையோரக் கண்காட்சிகள் நடைபெறுவதைக் காண்பதில் எரிச்சலடைந்து பார்வதியை இழிவாகப் பேசினாள்" என்றிருக்கிறது.

அவள் {மேனகை / மேனாதேவி}, "உன் கணவர் மஹேஸ்வரன், பார்ஷதர்களின் துணையுடன் சேர்ந்து எப்போதும் இழிவான காரியங்களையே செய்து வருகிறார். அவர் வறியவராகவும், பண்பற்றவராகவும் இருக்கிறார்[8]" என்றாள்.(40)

[8] இம்மொழி, "பார்ஷதர்களின் துணையுடன் எப்போதும் இழிவான காரியங்களையே செய்யும் உன் கணவன் மஹேஸ்வரன், வறியவனும், பண்பற்றவனுமாவான்" என்று கடுமையாகவே இருந்திருக்க வேண்டும்.

தன் அன்னையால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் தேவி, எப்போதுமுள்ள பெண்களின் வழக்கத்தைப் போலவே கடுங்கோபம் அடைந்தாள். சற்றே சிரித்தபடியே அவள் பவனிடம் {சிவனிடம்} வந்தாள்.(41) மங்கிய முகத்துடன் கூடிய அந்தத் தேவி மஹாதேவனிடம், "ஓ! தலைவா, நான் இங்கே வாழ மாட்டேன்; என்னை உமது வீட்டுக்கு அழைத்துச் செல்வீராக" என்றாள்.(42)

தனக்கான ஒரு வீட்டை காண்பதற்காக மஹாதேவன், உலகம் முழுவதையும் நோக்கினான். ஓ! குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, பெரும்பலம் நிறைந்த மஹேஸ்வரன், அறப் பண்பாட்டின் நிறைவில் ஒவ்வொருவரும் அடையும் வாராணஸியைத் தேர்ந்தெடுத்தான். திவோதாஸன் அந்நகரத்தில் குடியேறியிருப்பதைக் கேள்விப்பட்ட பவன் {சிவன்}, தன்னுடன் இருந்த நிகும்பனிடம் {விநாயகனிடம்}, "ஓ! கணங்களின் மன்னா {கணேஷ்வரா}, பனாரஸ் {வாராணஸி} நகரத்திற்குச் செல்வாயாக, அங்கே இருக்கும் மன்னன் {திவோதாஸன்} பெரும்பலம் நிறைந்தவனாக இருப்பதால், மென்மையான வழிமுறைகளின் மூலம் அதைக் குடிமக்களற்றதாக்குவாயாக" என்றான். அதன்பேரில், வாராணஸி நகரத்திற்குச் சென்ற நிகும்பன், கண்டுகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு நாவிதனின் கனவில் தோன்றி, அவனிடம், "ஓ! பாவமற்றவனே, நான் உனக்கு நன்மையைச் செய்வேன். நம்பிக்கைக்குரிய என்னுடைய வடிவத்தை {சிலையை} நகரத்தில் வைப்பாயாக" என்றான்[9]. ஓ! மன்னா, கனவில் ஆணையிட்டவை அனைத்தும் செய்யப்பட்டன.(43-48)

[9] தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில், "நான் தங்குவதற்கான ஓரிடத்தை நீ எனக்குக் காண்பித்தால் நான் உனக்கு உதவி செய்வேன். நீ இதற்கு ஒப்புக் கொண்டால் என் தோற்றத்துடன் கூடிய ஒரு பிரதிமையை {சிலையை} அமைத்து, இந்நகரத்தின் நுழைவாயிலில் அதை நிறுவுவாயாக" என்றிருக்கிறது.

இதுகுறித்து மன்னனுக்கு {திவோதாஸனுக்கு} முறையாக அறிவித்த அவன் {அந்த நாவிதன் கண்டூகன்}, நறுமணப் பொருட்கள், மாலைகள், தூபங்கள், விளக்குகள், உணவு மற்றும் பானத்துடன், நகரத்தின் நுழைவாயிலில் நாள்தோறும் அவனை (நிகும்பனை) வழிபடத் தொடங்கினான்.(49,50) இவ்வாறே கணங்களின் தலைவன் {கணபதியான நிகும்பன்} நாள்தோறும் வழிபடப்பட்டான். அதன் பேரில் அவன் {நிகும்பன்}, மகன்கள், பொன், நீண்ட வாழ்நாள் மற்றும் விருப்பத்திற்குரிய பொருட்கள் என ஆயிரக்கணக்கான வரங்களை {அந்நகரின்} குடிமக்களுக்குக் கொடுக்கத் தொடங்கினான்.(51) மன்னன் திவோதாஸனின் மூத்த ராணியானவள், ஸுயசை என்ற பெயரில் கொண்டாடப்பட்டாள். கற்புடைய அந்தக் காரிகை, தன் கணவனால் அனுப்பப்பட்டு, ஒரு மகனை {வரமாக} வேண்டி {சிலை நிறுவப்பட்ட நகரத்தின் நுழைவாயிலுக்கு} அங்கே வந்தாள்.(52) அவனுக்கு {நிகும்பனுக்குப்} பெரும்பூஜை செய்து, ஒரு மகனை வேண்டினாள். இவ்வாறே அவள் ஒரு மகனுக்காக நாள்தோறும் அங்கே வந்து கொண்டிருந்தாள்.(53)

ஆனால், ஏதோவொரு காரணத்திற்காக அவளுக்கு மகனை வழங்காத நிகும்பன், "{இதன் காரணமாக} மன்னன் {திவோதாஸன் என் மீது} சினங்கொண்டால், நான் என் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வேன்" என்று நினைத்தான்.(54) இப்படியே நீண்ட காலம் ஆனதும் மன்னன் பெருங்கோபம் அடைந்தான். அவன், "முக்கிய நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள இந்தப் பூதம் {நிகும்பன்}, என் குடிமக்களுக்கு நூற்றுக்கணக்கான வரங்களை மகிழ்ச்சியுடன் கொடுக்கிறான்; எனக்கு ஒன்றையும் ஏன் அவன் கொடுக்கவில்லை? இந்நகரத்தில் உள்ள என் மக்கள் எப்போதும் அவனை வழிபடுகின்றனர். நான் என் மனைவிக்காக ஒரு மகனை அவனிடம் வேண்டினேன். நன்றியற்றவனான அந்த அற்பன், எனக்கு ஒரு மகனை வழங்க மறுப்பது ஏன்?(55-57) எனவே, இந்தப் பூதம் எவரிடமிருந்தும், குறிப்பாக என்னிடமிருந்து நன்னடத்தையை எதிர்பார்க்கத் தகுந்தவனல்ல. எனவே, தீய ஆன்மா கொண்ட இவனது வசிப்பிடத்தை நான் அழிக்கப்போகிறேன்" என்றான்.(58)

தீய ஆன்மா கொண்ட அந்தத் தீய மன்னன் {திவோதாஸன்}, இந்தத் தீர்மானத்தை அடைந்து, கணங்களின் மன்னனுடைய வீட்டை அழித்தான்.(59) தன் வீடு {கோவில்} அழிக்கப்பட்டதைக் கண்ட நிகும்பன், "நான் எக்குற்றத்தையும் இழைக்காத போதும், என் வீடு அழிக்கப்பட்டதால், உடனே இந்நகரம் மக்களற்றதாகப் போகட்டும்" என்று சபித்தான்.(60)

அவனுடைய சாபத்தின் பேரில் வாராணஸி நகரம் மக்களற்றுப் போனது. நிகும்பன் அந்த நகரத்தை இவ்வாறு சபித்துவிட்டு, மஹாதேவனிடம் {சிவனிடம்} சென்றான்.(61) வாராணஸியில் வசித்தவர்கள், உடனே பல்வேறு திசைகளில் தப்பி ஓடினர். பிறகு சிவதேவன் அந்நகரத்தில் தன் வீட்டைக் கட்டிக் கொண்டான்.(62) மஹாதேவன், மலைகளின் மன்னனுடைய மகளுடன் விளையாடியபடி அங்கே வாழ்ந்து வந்தான். தகுதியற்றவர்களுக்கு விடுதலை {முக்தி} வழங்கப்பட்டதால் தேவி {பார்வதி} அந்த இடத்தை விரும்பவில்லை. அப்போது அவள், "நான் இங்கே வாழ மாட்டேன்" என்று சொன்னாள்[10].(63)

[10] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பார்வதி, தன் தாயின் வீட்டில் இருந்து மறுவீட்டிற்கு வந்ததனால் அவளை நிறைடையச் செய்யும் வகையில் காசியில் சிவையுடன் {பார்வதியுடன்} சிவன் வசித்து வந்தபோது, அவள் அந்த இடத்தைப் புழுதி போன்று வெறுமையானதாக உணர்ந்தாள். அவள் சிவனிடம் புகார் கூறும் வகையில், "என் தலைவா, என்னால் இங்கே வாழ முடியாது, என்னை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வீராக" என்றாள். இங்கே அவள், காசி என்றழைக்கப்படுவது மனிதர்களைக் கொண்ட வீடா அல்லது, மனிதர்களற்ற சுடுகாடா என்று ஆச்சரியமடைந்து, அந்த வீடு {காசி} குறித்துப் புகார் செய்கிறாள். இந்த உரையில் {உரையாசிரியர்} நீலகண்டர் ஓர் அத்வைதக் கருத்தை அடைகிறார். பார்வதியின் இந்த உரையாடல் சிவனுக்கு மறைமுகமாக ஒன்றைச் சொல்கிறது. பார்வதி, தாய்மையில் உண்டாகும் அன்பினால் உடனே காசியைச் சாபத்தில் இருந்து விடுவிக்கவே இவ்வாறு சிவனை நச்சரிக்கிறாள். அவள் தன் கணவனிடம், "தகுதியற்றவர்களும் முக்தி அடையும் இடமிது என்று சொல்கிறீர். ஆனால் இங்கே யாருக்கு முக்தியளிப்பது? இங்கே இருப்பதெல்லாம் சுவர்களும், தூண்களும் மட்டும்தானே. இங்கே கொடைபெறுபவர் {க்³ரஹீத} ஒருவர் இருந்தால்தான் நீர் கொடையளிப்பவர் {தாதர்} ஆவீர். இங்கேயோ, உம்மையும், முக்திக்கு அப்பாற்பட்டவர்களான உமது பஜனை கீர்த்தன தரப்புமின்றி வேறு எவரும் இல்லை. முதலில் என் பிள்ளைகளை {மக்களை} இந்த வீட்டுக்கு {காசிக்கு} அழைத்து வருவீராக. அவர்கள் வாழக்கூடிய இடமாக இந்நகரத்தை மாற்றுவீராக. அதன்பிறகு புரிந்து கொள்ள முடியாத உங்கள் தத்துவங்களை என் காதுகளில் சூடுவீராக {சொல்வீராக}. மனிதர்கள் இல்லாத வீடு வீடே ஆகாது, நீர் இல்லறத்தானும் இல்லை, நான் இல்லறத்தாளுமில்லை. இதை நீர் செய்ய விட்டால் நான் என் அன்னையின் இடத்திற்கே திரும்பிச் செல்வேன்" என்கிறாள். சிவன் அவளிடம், "ஆயிரம் வருடங்கள் {இந்நகரம்} பாழடையும் என்ற சாபத்தின் ஒரு பகுதியை நீ ஏன் கவனியாமல் இருக்கிறாய்? நான் இந்த நகரத்தைச் சீராக்குவேன். கவலைப்படாதே" என்றான். இதற்கிடையில், அந்தச் சாபத்தின் ஒரு பகுதியான ஓராயிரமாண்டு கால நிபந்தனை முடிந்து காசி மீண்டும் மக்களால் நிறைந்தது. அன்னப்பூர்ணா {அன்னப்பூரணி} என்றழைக்கப்படும் அன்னை அங்கே அந்த மக்களுக்கு உணவளிக்கிறாள். {உணவில்} எஞ்சியவற்றையோ, இரவலர்களின் கிண்ணங்களில் {பிச்சைப் பாத்திரங்களில்} இரண்டு கவளங்களையோ வீசாமல், உயிரோட்டமுள்ளவர்களாக அவர்களை அவள் வாழச் செய்கிறாள். அன்னம் உணவென்பதில் ஐயமில்லை, ஆனால் இங்கே அடையாளப்பூர்வமாக அவள் அன்னம் + கதம் + ப்ராணி = உணவு சார்ந்த உயிரினங்களை வசதியாக வாழச் செய்கிறாள். மேலும் சிவன் இங்கே விஷ்வநாதன் என்றழைக்கப்படுகிறான்; விஷ்வம் என்பதற்கு அகிலம் மட்டுமே பொருளல்ல; அது மக்கள் என்றும் பொருள்படும்; எனவே அவன் மக்களின் தலைவனான விஷ்வநாதனாவான். இதன் விளைவாகவே மக்கள் புனிதப்பயணிகளாகக் காசிக்குப் போவதும், வருவதுமாக இருக்கிறார்கள். இதனால்தான், "வாழ்நாளில் ஒருமுறையாவது காசிக்குச் செல்ல வேண்டும்" என்ற பழமொழி உண்டானது.

சிவன், "நான் என் வீட்டில் வாழ்வதில்லை. என் வீடு (உடல்) எப்போதும் அப்படியே இருக்கும். நான் அங்கே செல்வதில்லை. ஓ! தேவி, நீ உன் வீட்டுக்குச் செல்வாயாக" என்றான்[11].(64)

[11] "சிவன், "தன்னுரிமை கொண்ட ஆத்மாக்களான அவிமுக்தர்களோடு இருப்பதால் என்னால் இந்த வீட்டிலோ, வேறு வீட்டிலோ இருக்க முடியாது. இந்தக் காசியானது, ஆத்மாக்கள் முக்தியடையும் இடமாகும். நான் வேறு எங்குச் செல்வது என்ற கேள்வியேதும் எழவில்லையென்றாலும், நீ விரும்பினால் உன் வீட்டிற்கு நீ செல்வாயாக" என்று பார்வதியிடம் சொன்னான். எனவே, தன்னுரிமை கொண்ட ஆத்மாக்களான அவிமுக்த ஆத்மாக்கள் நாடும் முக்கிய இடமாகக் காசி இருப்பதால், சிவதேவன், மறுகரையில் ஆன்மாக்களை இறக்குவதற்கான தனிப்பட்ட இடமாகக் காசியைக் குறிப்பிட்டான். இவ்வாறே காசி சபிக்கப்பட்டும், மீட்கப்பட்டும், புனிதத்தலமாகப் புத்துயிரூட்டப்பட்டது.

திரிபுரத்தை அழித்த அந்த முக்கண் தேவன் புன்னகையுடன் இச்சொற்களைச் சொன்னான். அந்தக் காலத்திலேயே அந்நகரம் {வாராணஸி / காசி / பனாரஸ்} அவிமுக்தம் என்று தேவன் சிவனாலேயே சொல்லப்பட்டது. இவ்வாறே வாராணஸி அவிமுக்தம் என்று விளக்கப்படுகிறது. அற ஆன்மா கொண்ட தேவனும், தேவர்கள் அனைவரால் துதிக்கப்படுபவனுமான மஹேஸ்வரன், சத்வம், திரேதம் மற்றும் துவாபரம் என்ற மூன்று யுக காலம் தேவியின் {பார்வதியின்} துணையுடன் அங்கே வாழ்ந்து வந்தான்.(67) அந்த உயரான்மத் தேவனின் நகரம் கலியுகத்தில் மறைந்து போனது. அந்த நகரம் மறைந்தபோதும் புலப்படாதவனாக மஹேஸ்வரன் அங்கே வாழ்ந்து வந்தான். இவ்வாறே வாராணஸி சபிக்கப்பட்டு, மீண்டும் மக்களால் நிறைந்தது.(68)

பத்ரஸேண்யனுக்கு {பத்ரஸ்ரேண்யனுக்கு} துர்தமன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். திவோதாஸன் பத்ரஸேண்யனின் நூறு மகன்களைக் கொன்ற போது, அவனை {துர்தமனை} ஒரு சிறுவன் என்று கருதியதால் கருணையின் பேரில் உயிரோடு விட்டான்.(69) ஓ! பெரும் மன்னா, பேரரசன் துர்மதன், ஹைஹையனால் அவனது மகனாகக் {சுவீகரித்துக்} கொள்ளப்பட்டான். பகைமைகளுக்கு ஒரு முடிவை ஏற்படுத்துவதற்காகப் பத்ரஸேண்யனின் மகனும், உயரான்ம க்ஷத்திரிய மன்னனுமான துர்தமன், தன்னுடைய மூதாதையரின் நாட்டைப் பலவந்தமாக அபகரித்த திவோதாஸனிடம் இருந்து மீண்டும் அதைக் கைப்பற்றினான்.(70,71) திவோதாஸன், திருஷத்வதியிடம் பிரதர்த்தனன் என்ற வீரனைப் பெற்றான். அவனுடைய மகனான அந்தச் சிறுவன் {பிரதர்த்தனன்} துர்தமனை வீழ்த்தினான்.(72) பிரதர்த்தனனுக்கு, வத்ஸன் மற்றும் பாகன் {பர்க்கன்} என்ற பெயர்களில் இரு மகன்கள் இருந்தனர். வத்ஸனின் மகன் அலர்க்கனும், அவனுடைய {அலர்க்கனின்} மகன் ஸன்னதியும் ஆவர்.(73)

காசியின் மன்னனான அலர்க்கன், வாய்மை நிறைந்தவனாகவும், பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு மிக்கவனாகவும் இருந்தான். புராதன முனிவர்கள் அரசமுனியான அலர்க்கனைப் புகழ்ந்து பின்வரும் பாடலை {ஸ்லோகத்தை} அமைத்தனர்.(74) {அவர்கள்}, "காசியின் ஆட்சியாளர்களில் முதன்மையான இவன் {அலர்க்கன்}, அறுபது ஆயிரமும், அறுபது நூறும் கொண்ட {அறுபத்தாறாயிரம்}[12] ஆண்டுகள் இளமையையும், அழகையும் அனுபவித்தான்" {என்று பாடினர்}.(75) {அகஸ்தியரின் மனைவியான} லோபமுத்திரையின் உதவி மூலம், அவன் நீண்ட வாழ்நாள் காலத்தை {நீளாயுளை} அடைந்தான். இளமை நிறைந்தவனும், அழகனுமான அந்த மன்னன் {அலர்க்கன்} பெரும்பரப்பில் உள்ள நாட்டைக் கொண்டிருந்தான். சாபம் தீர்ந்ததும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த மன்னன், ராட்சசன் க்ஷேமகனைக் கொன்று, அழகிய வாராணஸி நகரத்தை மீண்டும் அமைத்தான். {அலர்க்கனின் மகன் ஸன்னதி ஆவான்}. ஸன்னதியின் மகன் பக்திமானான ஸுனீதன் ஆவான்.(76,77)

[12] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "அறுபதாயிரத்து அறுநூறு ஆண்டுகள்" என்றிருக்கிறது.

ஸுனீதனின் மகன் பெருஞ்சிறப்புமிக்க க்ஷேம்யனும், அவனுடைய {க்ஷேம்யனின்} மகன் கேதுமானும், அவனுடைய {கேதுமானின்} மகன் ஸுகேதுவுமாவர்.(78) அவனுடைய {ஸுகேதுவின்} மகன் தர்மகேது என்றும், அவனுடைய {தர்மகேதுவின்} மகன் ஸத்யகேது என்றும், அவனுடைய {ஸத்யகேதுவின்} மகன் விபு என்றும், அவனுடைய {விபுவின்} மகன் ஆவர்த்தன் {ஆனர்த்தன்} என்றும், அவனுடைய {ஆனர்த்தனின்} மகன் ஸுகுமாரன் என்றும் பெயர் படைத்தவர்களாக இருந்தனர். அவனுடைய {ஸுகுமாரனின்} மகன் பெரும்பக்திமானான திருஷ்டகேதுவும், அவனுடைய {திருஷ்டகேதுவின்} மகன் வேணுஹோத்ரனும், அவனுடைய {வேணுஹோத்ரனின்} மகன் பர்க்கனும் ஆவர். வத்ஸ மாகாணம் {வத்ஸபூமி} வத்ஸனுக்கு உரியதாக இருந்தது. பிருகுவின் நிலம் {பர்க்கபூமி என்று} பார்க்கவரின் பெயரைக் கொண்டிருந்தது. அங்கீரஸின் மகன்கள் பிருகு குலத்தில் பிறந்தனர். அவருக்குப் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மகன்கள் {சந்ததியினர்} இருந்தனர்[13]. இவ்வாறே நான் காசி மன்னர்களின் குடும்பத்தை {குலத்தைக்} குறித்து உனக்கு விளக்கிச் சொன்னேன். இனி நஹுஷனின் சந்ததியைச் சொல்லப் போகிறேன்" என்றார் {வைசம்பாயனர்}.(79-83)

[13] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "திவோதாஸனின் மகனான மன்னன் பிரதர்த்தனனுக்கு வத்ஸன், பர்க்கன் என்ற பெயர்களில் இரு மகன்கள் இருந்தனர். வத்ஸனின் மகன் அலர்க்கன் ஆவான். அலர்க்கனின் மகன் சன்னதி ஆவான். மன்னன் அலர்க்கன் அறிஞர்கள் மதிக்கும் அரசமுனியாகவும், வாய்மையில் கவனம் செலுத்துபவனாகவும், புராதனமானவர்கள் புகழ்ந்து, துதிக்கும் வகையில் காரியங்களைச் சாதிப்பவனாகவும் இருந்தான். காசி அரச வம்சத்தைச் செழிப்படையச் செய்தவனான மன்னன் அலர்க்கன், தன் இளமையைத் தக்க வைத்துக் கொண்டு அறுபதாயிரத்தறுநூறு ஆண்டுகள் காசியில் அரசாட்சி செய்தான். அகஸ்திய முனிவரின் மனைவியான லோபாமுத்ரையின் அருளால் இந்த மன்னன் அலர்க்கன், இளைமை நிறைந்தவனாகவும், அழகானவனாகவும், நீண்ட ஆயுள் கொண்டவனாகவும் இருந்தான். காசி நகரம் சாபத்தின் காரணமாக மக்களற்றுப் போனதால் அந்நகரத்தில் க்ஷேமகன் என்ற அசுரன் ஆதிக்கம் செலுத்தி வந்தான். மன்னன் அலர்க்கன் அதற்கொரு முடிவு கட்டும் வகையில் அசுரன் க்ஷேமகனைக் கொன்று, அந்நகருக்கு மீண்டும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தான். மன்னன் ஸன்னதியானவன், மன்னன் அலர்க்கனின் மகனாவான்; ஸன்னதி, ஸுனீதன், க்ஷேம்யன், கேதுமான், ஸுகேது, தர்மகேது, ஸத்யகேது, விபு, ஆனர்த்தன், ஸுகுமாரன், திருஷ்டகேது, வேணுஹோத்ரன், பர்க்கன் ஆகியோர் அவனது {அலர்க்கனின்} பரம்பரையில் வந்த வழித்தோன்றல்களாவர். மன்னன் பிரதர்த்தனனின் மகன்களான வத்ஸன் மற்றும் பர்க்கன் ஆகிய இருவராவர். இதில் பர்க்கனின் வழி வந்த பிராமணர்கள் பார்க்கவர்கள் ஆனார்கள். அதேவேளையில் வஸ்தனுடைய சந்ததியினரில், மன்னன் அலர்க்கனைத் தவிர்த்த பிறர், க்ஷத்திரியர்களாக மட்டுமில்லாமல், ஒரே கோத்ரத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்டதன் மூலம், அதாவது ஸகோத்ரீக விவாஹம் மூலம் பிராமணர்களாகவும், வைசியர்களாகவும் இருந்தனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இந்த ஸ்லோகத்தில் கடினமான வாக்கிய அமைப்புகள் தென்படுகின்றன. {உரையாசிரியர்} நீலகண்டர், "புத்ர அந்தரம் ஆஹம் - அலர்க்கனின் {இங்கே தவறு நேர்ந்திருக்க வேண்டும், பின்வருபவர்கள் பிரதர்த்தனனின் மகன்களாவர்} இரு மகன்களான வத்ஸன் மற்றும் பர்க்கனின் சந்ததிக்கிடையிலான வேறுபாட்டை இந்த உரைச் சொல்கிறது" என இங்கே விளக்குகிறார். வத்ஸபு⁴மி இதி = பா⁴ர்க³வத்= வத்ஸப்⁴ராது꞉ = வத்ஸனுடன் பிறந்தவனான பர்க்கன், அல்லது, பார்க்கவன், அல்லது பிராமணன்; அலர்க்கனின் மகனான அந்தப் பர்க்கனில் இருந்து, பிராமண மரபைப் பின்பற்றும் கூட்டத்தினர் சிலர் பார்க்கவர்கள் என்று அழைக்கப்படலானார்கள். அரச குடும்பங்களில் பிறந்த க்ஷத்ரியர்கள் எவ்வாறு பார்க்கவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்? ஏன் அவ்வாறு சொல்லக்கூடாதா? அங்கீரஸ கோத்ரத்தைச் சார்ந்த காலவரில் இருந்து வந்த பிராமணர்கள் அங்கீரசர்கள் என்று குறிப்பிடப்படுவதைப் போலவே; விஷ்வாமித்ரர் தன் விருப்பத்தின் தன்மையாலும், தாய்வழியிலான பிராமண வழித்தோன்றலினாலும் தன் பிராமணத் தன்மையை மீட்டுக் கொண்டதைப் போலவே; அலர்க்கனின் {பிரதர்த்தனனின்} மகனான இந்தப் பர்க்கனும், அவனது சந்ததியினரும் பார்க்கவர்கள், பிராமணர்கள் என்று குறிப்பிடப்பட்டனர். "த்வாத்" என்ற சொல்லே, அஃதாவது அங்கீரஸத்வாத், பார்க்கவத்வாத் என்பனவவற்றில் உள்ள தன்மை என்ற பின்னொட்டே, இது பிராமணத்வம் என்றும் பிராமணத்தன்மை என்றும் சொல்கிறது. எனவே, இவை வத்ஸபூமி, பிருகுபூமி என்றழைக்கப்படும் இன்னும் இரு மகன்களைக் குறிப்பிடவில்லை; ஏனெனில், இங்கே பூமி என்பது, க்ஷேத்ரபீஜந்யாயத்தில் க்ஷேத்ரம் இருப்பதைப் போலவே, சந்ததி வெளிவருவது, மற்றும் களமிறக்கப்படுவதைக் குறிக்கிறது" என்றிருக்கிறது. மேலும் வாயு, பிரம்ம, ஸ்கந்த புராணங்கள் மற்றும் பல புராணங்களில் இருந்தும் மேற்கோள்கள் இன்னும் அதிமாகக் காட்டப்பட்டுள்ளன. மேலதிக தகவல்களை அறிய விரும்புவோர் http://mahabharata-resources.org/harivamsa/hv_1_29.html சுட்டிக்குச் சென்றால் அந்தப் பக்கத்தின் இறுதியில் ஆங்கிலத்தில் அவற்றை அறியலாம்.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 29ல் உள்ள சுலோகங்கள் : 83
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்