(ஐலோல்பத்தி - ஊர்வசி-புரூரவ விருத்தம்)
An account of Pururava| Harivamsa-Parva-Chapter-26 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பிரம்மனால் சபிக்கப்பட்ட ஊர்வசி; புரூரவனை அடைந்து அவள் செய்து கொண்ட ஒப்பந்தம்; ஐம்பத்தொன்பது ஆண்டுகள் அவனுடன் வாழ்ந்து ஆறு மகன்களைப் பெற்றது; கந்தர்வர்களின் முயற்சியால் சாபத்தில் இருந்து விடுதலையடைந்த ஊர்வசி; அக்னியை மூன்றாகப் பிரித்த புரூரவஸ்...
வைசம்பாயனர் {ஜனமேஜயா}, "ஓ! பெரும் மன்னா, புதனின் மகனான புரூரவன், கல்விமானாகவும், சுறுசுறுப்பானவனாகவும், ஈகை மனம் கொண்டவனாகவும் இருந்தான். அவன் பல வேள்விகளைச் செய்து கொடைகள் பலவற்றை அளித்தான்.(1) அவன் பிரம்மஞானத்தை அறிந்தவனாகவும், பலமிக்கவனாகவும், போரில் பகைவர்களால் வீழ்த்தப்பட முடியாதவனாகவும் இருந்தான். அந்த மன்னன் தன் இல்லத்தில் அணையா நெருப்பைப் பாதுகாத்து, பல வேள்விகளைச் செய்து கொண்டாடினான்.(2) அவன் வாய்மை நிறைந்தவனாகவும், பக்திமானாகவும், பேரழகனாகவும் இருந்தான். அவன் தன் பாலியல் பசிகளில் முழுமையான கட்டுப்பாட்டுடன் இருந்தான். அந்நேரத்தில் அவனது மகிமைக்கு நிகராக மூவுலகிலும் வேறெவரும் இல்லை.(3)
சிறப்புமிக்கவளான ஊர்வசி தன் செருக்கைக் கைவிட்டு விட்டு, மன்னிக்கும் தன்மை கொண்டவனும், பக்திமானும், பிரம்மஞானத்தை அறிந்தவனுமான அந்த மன்னனை {புரூரவனைத்} தன் தலைவனாகத் தேர்ந்தெடுத்தாள்.(4) ஓ!பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, மன்னன் புரூரவன், ஊர்வசியுடன் சேர்ந்து அழகிய சைத்ரரதத் தோட்டத்தில் பத்து ஆண்டுகளும், மந்தாகினி ஆற்றின் கரைகளில் ஐந்து ஆண்டுகளும், அளகை நகரத்தில் {அளகாபுரியில்} ஐந்து ஆண்டுகளும், பதரிக் காட்டில் {விசாலை நகரத்தில்} ஆறு ஆண்டுகளும், சிறந்தவையான நந்தனத் தோட்டங்களில் ஏழு ஆண்டுகளும், விரும்பிய போதெல்லாம் கனிகளைத் தரும் உத்தர குரு மாகாணத்தில் எட்டு ஆண்டுகளும், கந்தமாதன மலையடிவாரத்தில் பத்து ஆண்டுகளும், வட சுமேருவின் சிகரத்தில் எட்டு ஆண்டுகளும் வாழ்ந்தான்.(5-7) மன்னன் புரூரவன், தேவர்களுக்குரிய இந்த அழகிய தோட்டங்களில் ஊர்வசியுடன் சேர்ந்து பெரும் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.(8)
அந்த மன்னன், பெரும் முனிவர்களால் மிக உயர்வாகப் பேசப்பட்ட பிரயாகை என்ற புனிதமான மாகாணத்தை ஆட்சி செய்தான்.(9) அவனுடைய ஏழு மகன்களும், உயரான்மாக்களாகவும், தேவலோகத்தில் பிறந்த தேவர்களின் மகன்களைப் போன்றவர்களாகவும் இருந்தனர். அவர்கள் ஆயு, தீமான், அமாவஸு, அற ஆன்மவான விஷ்வாயு, சிருதாயு, திருடாயு, வலாயு {வனாயு}, சதாயு என்று பெயரிடப்பட்டனர்[1]. அவர்கள் அனைவரும் ஊர்வசியால் பெறப்பட்டனர்" என்றார் {வைசம்பாயனர்}.(10,11)
[1] இந்தப் பெயருடன் சேர்த்து எட்டு பேர் ஆகின்றனர். ஆனால் ஊர்வசியால் பெறப்பட்ட மகன்கள் எழுவர் என்ற குறிப்பு இருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில், ஆயுவுக்குப் பிறகு வீரம்நிறைந்த அமாவுஸு என்றே பெயர்க்குறிப்பு வருகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலோ, "ஆயு, தீமான், அமாவஸு, திருதாயு, வனாயு, சதாயு" என்று அறுவர் மட்டுமே குறிப்பிடப்படுகின்றனர். விஷ்வாயு மற்றும் திருடாயு விடுபட்டிருக்கின்றனர். மஹாபாரதம், ஆதிபர்வம் பகுதி 75ல் புரூரவனின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் ஆறு மகன்கள் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பல்வேறு ஸ்ருதிகளை நன்கு கற்றவரே, அப்சரஸான ஊர்வசி ஏன் தேவர்களை விட்டுவிட்டு, மனிதர்களின் மன்னனிடம் வந்தாள்? இது குறித்து நீர் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(12)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பேரழகு ஊர்வசி, பிரம்மனால் சபிக்கப்பட்ட காலத்திற்கு இணங்க இளையின் மகனான ஒரு மனிதனிடம் {புரூரவனிடம்} வந்தாள்.(13) ஊர்வசி, தன் சாபத்தில் இருந்து விடுபடுவதற்காக அந்த மன்னனிடம், ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளும் வகையில், "ஓ! மன்னா, நான் உம்மை அம்மணமாகக் காண மாட்டேன். மேலும் நீர் என்னை ஆசையில் நிறைந்தவளாகக் காணும்போதெல்லாம் என்னுடன் கூட வேண்டும்.(14) என் படுக்கையின் அருகில் செம்மறியாட்டுக் குட்டிகள் இரண்டு எப்போதும் நிறுத்தப்பட வேண்டும், மேலும் பகலில் சிறிதளவே தெளிந்த நெய்யை உட்கொண்டு எப்போதும் நீர் வாழ வேண்டும்.(15) ஓ! மன்னா, இந்த உடன்பாட்டை நிறைவேற்றி, அதற்கு நீர் உண்மையாக இருக்கும் வரையே நான் உம்முடன் வாழ்வேன். இதுவே நம் ஒப்பந்தம்" என்றாள்.(16)
மன்னன் அவளது நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றினான். இவ்வாறே ஒரு சாபத்தின் ஆதிக்கத்திலும், புரூரவன் மீது கொண்ட மதிப்பினாலும் அந்தக் காரிகை {ஊர்வசி}, மேற்குறிப்பிடப்பட்ட இடங்களில் ஐம்பத்தொன்பது ஆண்டுகளுக்கு அவனுடன் வாழ்ந்தாள். ஊர்வசி ஒரு மனிதனுடன் வாழ்வதன் காரணமாகக் கந்தர்வர்கள் அனைவரும் கவலையில் நிறைந்திருந்தனர்.(17,18)
கந்தர்வர்கள், "ஓ! பெருமைமிக்கவளும், காரிகைகளில் சிறந்தவளும், தேவலோக ரத்தினமுமான ஊர்வசி, தேவர்களிடம் திரும்பி வரும் வகையில் ஏதாவது செய்யுங்கள்" என்றனர்.(19)
அவர்களில் பேசுபவர்களில் முதன்மையானவனும், விஷ்வாவஸு என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு கந்தர்வன், "உடன்பாட்டுக்குள் நுழைந்தபோது அவர்கள் பேசியதை நான் கேட்டேன்.(20) மன்னன் உடன்பாட்டை மீறினால் ஊர்வசி அவனைக் கைவிடுவாள். அந்த மன்னனை ஊர்வசியிடம் இருந்து எவ்வாறு பிரிப்பது என்பதை நான் நன்கறிவேன்.(21) எனவே, உங்கள் பணியை நிறைவேற்றுவதற்காக நான் ஒரு துணைவனுடன் {அல்லது உங்கள் துணையுடன் அங்கே} செல்லப் போகிறேன்" என்றான். அந்தப் பெருஞ்சிறப்புமிக்கவன் (கந்தர்வன்), இதைச் சொல்லிவிட்டு, பிரதிஷ்டானம் {பிரதிஷ்டானபுரம்} என்ற நகரத்திற்குச் சென்றான்.(22)
இரவில் அங்கே சென்ற அவன், ஓர் ஆட்டுக்குட்டியைக் களவு செய்தான். அழகிய புன்னகையைக் கொண்ட அந்தக் காரிகை, அவ்விரண்டு ஆட்டுக்குட்டிகளுக்கும் தாயைப் போல இருந்தாள்.(23) கந்தர்வன் வந்ததைக் கேள்விப்பட்டு, சாபம் தீர்வதற்கான வேளை வந்துவிட்டதெனப் புரிந்து கொண்ட அந்தச் சிறப்புமிக்கவள் (காரிகை) அந்த மன்னனிடம், " என் மகன்களைக் களவு செய்தவன் எவன்?" என்று கேட்டாள்.(24)
அவளால் அவ்வாறு கேட்கப்பட்டபோதும், அவன் அம்மணமாக இருந்ததால், "என் தேவி ஆடையற்றவனாக என்னைக் கண்டால், எங்கள் உடன்பாட்டின் விதிமுறைகள் அழிந்ததாகும்" என்று நினைத்து எழாதிருந்தான்.(25)
அப்போது கந்தர்வர்கள் மற்றொரு ஆட்டுக்குட்டியையும் களவு செய்தனர். இரண்டாவதும் அபகரிக்கப்பட்ட போது அந்தக் காரிகை {ஊர்வசி}, இளையின் மகனிடம் {புரூரவனிடம்},(26) "ஓ! மன்னா, ஓ! தலைவா, நான் கவனிக்க யாருமற்றவள் என்பதைப் போல, என் மகன்களைக் களவு செய்பவன் எவன்?" என்று கேட்டாள்.(27)
இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன், ஆடையற்றவனாக இருந்தபோதிலும் ஆட்டுக்குட்டிகளைத் தேடி ஓடினான். அதே வேளையில் கந்தர்வர்கள் மின்னல்களை உண்டாக்கினர். மன்னன், மின்னல்களால் ஒளியூட்டப்பட்ட அந்த இடத்தை விட்டு வெளியே சென்ற போது, அவள் திடீரென அவனை அம்மணமாகக் கண்டாள். விரும்பியபடி திரியும் அந்த அப்ரசஸ், இவ்வாறு ஆடையற்றவனாக அவனைக் கண்டதும், {அங்கிருந்து} சென்று விட்டாள்..(28,29) அங்கே விடப்பட்ட ஆட்டுக்குட்டிகள் இரண்டையும் கண்ட மன்னன் அவற்றைப் பிடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தான். (திரும்பி வந்ததும்) அவன் ஊர்வசியைக் காணாமல், பெருந்துயரில் பீடிக்கப்பட்டவனாக அழுது புலம்பத் தொடங்கினான்.(30)
அவன் அவளைத் தேடி உலகம் முழுவதும் பயணித்தான். பிறகு அந்தப் பெரும்பலம் கொண்ட மன்னன், குருக்ஷேத்திர மாகாணத்தின் பிலக்ஷமெனும் புனிதத்தலத்தில் {பிலக்ஷதீர்த்தத்தில்}, ஹைமவதி என்றழைக்கப்படும் தடாகத்தில் {புஷ்கரணியில்} அவள் நீராடிக் கொண்டிருப்பதைக் கண்டான். அந்த அழகிய காரிகை மேலும் ஐந்து அப்சரஸ்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.(31,32) அவள் இவ்வாறு விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட மன்னன், பெருஞ்சோகத்தில் நிறைந்தவனாக அழுது புலம்பத் தொடங்கினான். தொலைவிலேயே மன்னனைக் கண்ட ஊர்வசியும், தன் தோழிகளிடம், "மனிதர்களில் முதன்மையான இவருடன்தான் நான் சில காலம் வாழ்ந்தேன்" என்றாள். இதைச் சொன்னபடியே அவள் அவர்களிடம் மன்னனைச் சுட்டிக் காட்டினாள்.(33,34)
ஓ! மன்னா, அந்த அப்சரஸ்கள் அவள் திரும்பிச் சென்றுவிடுவாளோ என்று கவலை கொண்டனர். அப்போது அந்த மன்னன் அவளிடம் இனிய சொற்களில், "ஓ! கொடியவளே, சொற்களில் கொடியவளாக நீ காட்டிக் கொண்டாலும், இதயத்தில் நீ என் மனைவியாகவே எஞ்சியிருக்கிறாய்" என்றான்[2].(35)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஊர்வசி தன் தோழிகளுடன் மீண்டும் தன்னிடம் இருந்து விலகிச் சென்றுவிடுவாள் என்ற ஐயத்துடன் அந்த மன்னன் அவளிடம், "மனையாளே, அங்கேயே நிற்பாயாக. கடுமனம் கொண்ட பெண்ணே, சிறிது நேரம் நாம் ஒன்றாகப் பேசலாம்" என்றான்" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், "ரிக்வேதப் பாடல் 95ல் ஊர்வசி புரூரவன் ஸம்வாத ஸூக்தம் 10-95ல் இந்த வசனம் இருக்கிறது" என்றிருக்கிறது.
அப்போது ஊர்வசி அந்த இளையின் மகனிடம் {புரூரவனிடம்}, "ஓ! தலைவா, உம்மூலமாக நான் கருவுற்றிருக்கிறேன். ஒரு வருடத்திற்குள் உமது மகன்கள் அனைவரும் பிறந்து விடுவார்கள். ஓ! மன்னா, இன்னுமோர் இரவு என்னுடன் வாழ்வீராக" என்றாள்[3].(36,37)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "அப்போது ஊர்வசி இளையின் மகனான புரூரவனிடம், "என் தலைவா, நான் உமது வித்தை என் கருவில் சுமக்கிறேன். நீர் ஒவ்வொரு ஆண்டிலும் ஓரிரவு வேளையை என்னுடன் செலவிடுவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மகனைப் பெறுவீராக" என்றாள்" என்றிருக்கிறது.
பெருஞ்சிறப்புமிக்கவனான அந்த மன்னன் இதைக் கேட்டு நிறைவடைந்தவனாகத் தன் நகரத்திற்குத் திரும்பிச் சென்றான். ஓராண்டு கடந்ததும் ஊர்வசி மீண்டும் அவனிடம் வந்தாள்.(38) பெருஞ்சிறப்புமிக்க அந்த மன்னன் அவளுடன் ஓரிரவு வாழ்ந்தான். அதன்பேரில் ஊர்வசி, அந்த இளையின் மகனிடம், "கந்தர்வர்கள் உமக்கொரு வரமளிப்பார்கள்.(39) ஓ! மன்னா, உயரான்ம கந்தர்வர்களுக்கு நிகரான அழகை அவர்களிடமிருந்து வரமாக இரந்து கேட்பீராக" என்றாள்[4].(40)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஊர்வசி ஓராண்டிற்கு ஓரிரவு என வந்து மன்னனுடன் தங்கி, ஒரு சந்தர்ப்பத்தில், அந்த மன்னனிடம், "ஓ! தலைவா, கந்தர்வர்கள் உம்மிடம் நிறைவடைந்து உமக்கொரு வரமளிக்க விரும்புகிறார்கள், எனவே, நீர் அவர்களிடம் நேரடியா அதைக் கேட்கலாம். ஆனால் நான் கந்தர்வர்களைப் போன்ற வடிவை நீர் பெற வேண்டும் என்று கேட்க விரும்புகிறேன்" என்றாள்" என்றிருக்கிறது.
பிறகு அந்த மன்னன் கந்தர்வர்களிடம் இருந்து ஒரு வரத்தை வேண்டினான், அவர்களும் "அவ்வாறே ஆகட்டும்" என்றனர். அதன் பேரில் ஒரு பையில் {ஸ்தாலியில் [பாத்திரத்தில்]} நெருப்பை நிறைத்த கந்தர்வர்கள், அவனிடம்,(41) "ஓ! மன்னா, இந்த நெருப்பைக் கொண்டு ஒரு யாகத்தைச் செய்து கொண்டாடிய பிறகு நீ எங்கள் உலகத்தை அடைவாய்" என்றனர். அதன் பேரில் மன்னன், இளவரசர்களை {தன் மகன்களை} தன்னுடன் அழைத்துக் கொண்டு தன் நகரத்திற்குச் சென்றான்.(42) அந்த மன்னன், அந்த நெருப்பைக் காட்டில் வீசிவிட்டு தன் மகன்களுடன் தன் நகரத்திற்குச் சென்றான். அங்கே அவன் திரேத நெருப்பை {திரேதாக்னியைக்} காணாமல் ஓர் அத்தி மரத்தை {அரச மரத்தை} மட்டுமே கண்டான்[5].(43) சமி வகையைச் சேர்ந்த அத்தி மரத்தை {அரச மரத்தைக்} கண்டு அவன் ஆச்சரியமடைந்தான். நெருப்பின் அழிவை அவன் கந்தர்வர்களுக்குத் தெரிவித்தான்.(44)
[5] "மொத்தமாக மூன்று புனித நெருப்புகள் அல்லது தெற்கு சார்ந்த, இல்லம் சார்ந்த, வேள்வி சார்ந்த நெருப்புகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஒரு கையில் பிள்ளைகளுடனும், மறு கையில் நெருப்புக்குடத்துடனும் நகருக்குள் நுழைவதைப் பெருத்தமற்றதாகக் கருதிய அவன், நெருப்புக்குடத்தைப் பாதுகாப்பாகத் தரையில் வைத்துவிட்டு, பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவன் மீண்டும் அந்த இடத்திற்குத் திரும்பியபோது நெருப்புக்குடம் இருந்த இடத்தில் ஓர் அரச மரம் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தான்" என்றிருக்கிறது. மூலத்தில், "அக்னிம் அரண்யே து ஸ புத்ர꞉ து க்ருʼஹம்" என்றிருக்கிறது. இங்கே வரும் அரண்யம் என்பதற்கும் ஆரண்யம் என்பதற்கும் வேறுபாடு இருக்க வேண்டும். இங்கே தே.ரா.ஹ.ராவின் பதிப்பின் உரையே பொருத்தமானதாகத் தெரிகிறது.
மொத்த கதையையும் கேட்ட அவர்கள் {அந்த மரத்தில் இருந்து} ஒரு மரத்துண்டை எடுத்து நெருப்பை மூட்ட ஆணையிட்டனர். பிறகு அவன், அந்த அத்தி மரத்தில் {அரச மரத்தில்} இருந்து ஒரு மரத்துண்டை எடுத்து, முறையாக நெருப்பைக் கடைந்து, அதைக் கொண்டு பல்வேறு யாகங்களில் தேவர்களை வழிபட்டு, கந்தர்வர்களின் உலகத்தை அடைந்தான்.(45,46) கந்தர்வர்களிடம் இருந்து வரத்தைப் பெற்ற அவன் {கார்ஹபத்ய, ஆஹவனீய, தாக்சிந்த்யாக்னிகளை} திரேத நெருப்பை நிறுவினான். முதலில் அந்நெருப்பு ஒன்றாகவே இருந்தது. இளையின் மகன் அதை மூன்றாகப் பிரித்தான்.(47) மனிதர்களில் முதன்மையானவனும், இளையின் அரசமகனுமான அவன் அவ்வளவு பலமிக்கவனாக இருந்தான். அந்தப் பெருஞ்சிறப்புமிக்க மன்னன் புரூரவன், முனிவர்களால் உயர்வாகப் பேசப்படும் பிரயாகை மாகாணத்தில் கங்கையின் வட கரையில் அமைந்துள்ள பிரதிஷ்டான நகரத்தில் ஆட்சி செய்தான்" என்றார் {வைசம்பாயனர்}[6].(48,49)
[6] இந்தப் பகுதியின் ஸ்லோகம் 12 முதல் 49 வரையுள்ள செய்தி பிபேப்திப்ராயின் பதிப்பில் இல்லை. 11ம் ஸ்லோகத்திற்குப் பிறகு அடுத்த அத்யாயம் முழுமையும் கடந்தே மீண்டும் செய்திகள் தொடர்கின்றன.
ஹரிவம்ச பர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் :49
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |