(பித்ரு கல்பம் - 8 | பித்ருகல்ப ஸமாப்தி - பிரம்மதத்த சரிதம்)
Brahmadatta retires from the world | Harivamsa-Parva-Chapter-24 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : எறும்புகளின் மொழியைக் கேட்டுச் சிரித்த பிரம்மதத்தன்; அவனது அற்புத சக்தியை நிரூபிக்குமாறு கேட்ட சன்னதி; எல்லாம்வல்ல நாராயணனைக் கண்ட பிரம்மதத்தன்; ஸ்லோகங்களைச் சொன்ன பிராமணர்; அனைத்தையும் துறந்து மனைவியுடன் காட்டுக்குச் சென்ற பிரம்மதத்தன்; முக்தியை அடைந்தது...
மார்க்கண்டேயர் {பீஷ்மரிடம்}, "தவசியும், துறவியுமான அந்த வைப்ராஜர்களில் {வாத்துகளில்} ஒருவன், விஷ்வக்ஸேனன் என்ற பெயரில் பிரம்மதத்தனுக்கு மகனாகப் பிறந்தான்[1].(1) ஒரு காலத்தில், சச்சியின் துணையுடன் கூடிய இந்திரனைப் போலப் பிரம்மதத்தன் தன் மனைவியின் துணையுடன் காட்டில் இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தான்.(2) அப்போது, பெண் எறும்பை வேண்டும் ஓர் எறும்பின் ஒலியையும், மேலும் அது வெளிப்படுத்திய நிறைவின்மையையும் கேட்டான்.(3) அப்பாவியான அந்தப் பெண் எறும்பு, தன் கணவனின் வேண்டுதலைக் கேட்டு வெளிப்படுத்திய வெறுப்பையும் கேட்டு பிரம்மதத்தன் உரக்கச் சிரித்தான்.(4)
[1] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "அந்த அன்னப்பறவைகளுக்கு மத்தியில் தவம் செய்து கொண்டிருந்த மன்னன் விப்ராஜன், தன் ஊனுடலை முற்றாகத் துறந்து, விஷ்வக்ஸேனன் என்ற பெயரில் பிரம்மதத்தனின் மகனாக மறுபிறவி எடுத்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "விப்ராஜன் தன் ஆத்மாவில் யோகத்தில் பீடிக்கப்பட்டான். தவத்தில் கலந்த அவன் விஷ்வக்ஸேனன் என்று அறியப்பட்டான்" என்றிருக்கிறது. விப்ராஜன் என்பதன் அடிக்குறிப்பில், "செம்பதிப்பு வைப்ராஜன் என்று சொல்கிறது. வைப்ராஜன் (விப்ராஜனின் மகன்) என்பதும் பொருள் தந்தாலும், நாம் விப்ரஜன் என்பதே சரியாகத் தெரிவதால் இவ்வாறு திருத்தியிருக்கிறோம்" என்றிருக்கிறது. Henry David Thoreau-ன் The Transmigration of the Seven Brahmans-ல், "விப்ராஜன், பக்தியால் உயிரூட்டப்பட்டவானாக, மகிமையால் மறைக்கப்பட்டவனாக, விஷ்வக்ஸேனன் என்ற பெயரில் பிரம்மதத்தனின் மகனான மறுபிறவியெடுத்தான்" என்றிருக்கிறது.
அப்போது அவனுடைய மனைவியான சௌனதி {சன்னதி}, {தன் கணவன் தன்னையே கேலி செய்கிறான் என்ற நினைப்பால் உண்டான} கவலையால் பீடிக்கப்பட்டு வெட்கமடைந்தாள். அந்த அழகிய காரிகை, நீண்ட நாட்களாக உணவைத் தவிர்த்து வந்தாள்.(5) அவளுடைய கணவன், அவளை நிறைவடையச் செய்ய முயன்றபோது, தூய புன்னகையைக் கொண்ட அவள், "ஓ! மன்னா, நீர் என்னைக் கண்டு சிரிக்க நான் உயிர்வாழ விரும்பவில்லை" என்றாள்.(6)
அந்த மன்னன் {பிரம்மதத்தன்} தன் சிரிப்புக்கான காரணத்தைச் சொன்ன போதும், அவனுடைய சொற்களை நம்பாமல், கோபத்துடன் அவள், "இது மனித சக்திக்கு உட்பட்டதல்ல.(7) {வருங்காலத்தை அறியும்} முன்னறிவின் துணையோ, மாசிலாப் பிறவியில் தான் செய்த நற்செயல்களாலோ அல்லாமல் ஓர் எறும்பின் ஒலியை எந்த மனிதனால் புரிந்து கொள்ள முடியும்?(8) ஓ! மன்னா, தபத்தினாலோ, வேறு எந்த ஞானத்தினாலோ நீர் விலங்குகளின் ஒலியைப் புரிந்து கொள்ளும் சக்தியை அடைந்திருந்தால், அதை நான் அறியும் வகையில் எந்த வழிமுறையிலாவது என்னை நம்பச் செய்வீராக. இல்லையெனில், ஓ! மன்னா, நான் என் உயிரைத் துறப்பேன். நான் உண்மையாகவும், உறுதியாகவும் கூறுகிறேன்" என்றாள்.(9,10)
பெருஞ்சிறப்புமிக்க அரசன் பிரம்மதத்தன், அரசியின் அந்தக் கொடுஞ்சொற்களைக் கேட்டுப் பெரிதும் துயரடைந்தான். அப்போது அவன் உலகங்கள் அனைத்தின் தலைவனும், எல்லாம் வல்லவனுமான நாராயணனின் பாதுகாப்பை மதிப்புடன் வேண்டினான். பெருஞ்சிறப்புமிக்க அந்த மன்னன், தன் புலன்களை அடக்கி, உணவைத் தவிர்த்து, ஆறு இரவுகளுக்குள் எல்லாம் வல்ல தெய்வமான நாராயணனைக் கண்டான். அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட அந்தத் தலைவன் {நாராயணன்} அவனிடம் {பிரம்மதத்தனிடம்},(11-13) "ஓ! பிரம்மதத்தா, இந்த இரவு கழிந்ததும் நீ நன்னிலையை அடைவாய்" என்றான். இதைச் சொன்ன அந்தத் தலைவன் அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(14)
நான்கு உயரான்மப் பிராமணர்களின் தந்தை, தமது மகன்களிடம் இருந்து ஸ்லோகத்தை {இரண்டு ஸ்லோகங்களை} அறிந்து கொண்டு, அருளப்பட்டவராகத் தம்மைக் கருதினார்.(15) பிறகு அவர், அந்த மன்னனிடமும், அவனது அமைச்சர்களிடமும் செல்ல விரும்பினார். எனினும், அங்கே சென்ற அவரால் அவர்களிடம் அந்த ஸ்லோகத்தை உரைக்கும் வாய்ப்பைக் காண முடியவில்லை.(16) அப்போது, குளத்தில் குளித்து, நாராயணனிடம் வரம்பெற்று வந்த அவன் {பிரம்மதத்தன்}, ஒரு பொற்தேரில் மகிழ்ச்சியாக ஏறி நகருக்குள் நுழைந்தான்.(17) இருபிறப்பாளர்களில் முதன்மையான கண்டரீகன், அவனது தேரோட்டியாகவும், பாஞ்சாலன் சாமரம் வீசுபவனாகவும் செயல்பட்டனர். (18)
அந்தக் கணத்தையே சாதகமானதாகக் கருதிய அந்தப் பிராமணர், அந்த மன்னன் மற்றும் அவனது இரண்டு அமைச்சர்களின் முன்னிலையில் அந்த ஸ்லோகத்தை {இரண்டு ஸ்லோகங்களை} உரைத்தார்.(19) {அவர்}, "தசார்ண மாகாணத்தில் ஏழு வேடர்களாகப் பிறந்தவர்கள், மறுபிறவியில் காலஞ்சர மலையில் மான்களாகவும், பிறகு சரத் தீவில் சக்கரவாகங்களாகவும், அதன் பிறகு மானஸத் தடாகத்தில் வாத்துகளாகவும் {அன்னப்பறவைகளாகவும்} பிறந்தனர். இறுதியாக அவர்கள் குருக்ஷேத்திரத்தில் வேதங்களை நன்கறிந்த பிராமணர்களாகப் பிறந்தனர். அவர்களில் நற்குடும்பத்தில் பிறந்த நால்வர் {யோகப் பாதையில்} வெகு தொலைவில் உள்ள பகுதிக்குச் சென்றுவிட்டனர். நீங்களோ யோகப் பாதையில் இருந்து விலகி மூழ்கிக் கொண்டிருக்கிறீர்கள்" என்றார்.(20-21)
ஓ! பரதனின் வழித்தோன்றலே, இதைக் கேட்டு மன்னன் பிரம்மதத்தன் கலக்கமடைந்தன், கண்டரீகன் மற்றும் பாஞ்சாலன் ஆகியோரிடம் இருந்து முறையே குதிரைகளின் கடிவாளங்களும், கரங்களில் இருந்த சாமரங்களும் நழுவி விழுந்தன. இதைக் கண்ட குடிமக்களும், நண்பர்களும் பெரிதும் கலக்கமடைந்தனர்.(22,23) மன்னன் தன் அமைச்சர்கள் இருவருடன் ஒரு கணம் தேரில் காத்திருந்து, தன் நினைவு மீண்ட பிறகு அரண்மனைக்குச் சென்றான்.(24)
அப்போது அவன், குறிப்பிடப்பட்ட அந்தத் தடாகத்தை நினைவு கூர்ந்து, முற்பிறவியில் பயின்ற யோக சக்தியை மீண்டும் அடைந்து, அந்தப் பிராமணருக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய பல்வேறு பொருட்களையும், தேர்களையும் அளித்து அவரைக் கௌரவித்தான்.(25) பிறகு, பகைவரை அடக்குபவனான பிரம்மதத்தன், தன் மகன் விஷ்வக்ஸேனனை அரியணையில் அமர்த்திவிட்டுத் தன் மனைவியுடன் சேர்ந்து காட்டுக்குள் ஓய்ந்து சென்றான்.(26)
அந்த மன்னன் {பிரம்மதத்தன்}, யோகம் பயில்வதற்காகக் காட்டுக்குச் சென்ற பிறகு, தேவலரின் மகளும், நல்லியல்பு கொண்டவளுமான சன்னதி, பெரும் மகிழ்ச்சியுடன் அந்த மன்னனிடம்,(27) "ஓ! ஏகாதிபதி, எறும்புகளின் ஒலியைப் புரிந்து கொள்ள இயன்றவராக இருந்தும், பாலியல் ஆசைகளுக்கு நீர் அடிமையாக இருக்கிறீர்; எனவேதான், பேராபத்தில் இருந்த உம்மைக் கோபமடையச் செய்ய விரும்பினேன்.(28) இப்பிறவியில் இருந்து நாம் மிகச் சிறந்த நிலையை அடைய வேண்டும். நீர் யோகப் பயிற்சியில் இருந்து விலகியதன் விளைவால் நான் அதை உமக்கு நினைவூட்டினேன்" என்றாள்.(29)
அந்த மன்னன், தன் மனைவியின் சொற்களைக் கேட்டுப் பெரும் நிறைவடைந்தான். யோக சக்தியை அடைந்த அவன், அடைதற்கு மிக அரிய உயர்ந்த நிலையை அடைந்தான்.(30) அவன், தன் வினைகளால் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, மிகச் சிறந்த சாங்கிய யோகத்தை அடைந்து, உன்னத நிலையை எட்டினான்.(31) பெரும் தவசியான அந்தப் பாஞ்சால்யன், சிக்ஷையை மட்டும் நிறுவி, வேதங்களின் முறையை விதித்துப் பெரும்புகழையும், யோகாசான் என்ற நிலையையும் அடைந்தான்.(32)
ஓ! கங்கையின் மைந்தா {பீஷ்மா}, பழங்காலத்தில் இவையாவும் என் கண் முன்பாகவே நடைபெற்றன. இதைத் தியானித்து, நன்னிலையை அடைவாயாக.(33) இந்த மிகச் சிறந்த கதையைத் தியானிக்கும் பிறரும், ஒருபோதும் இழிபிறவிகளை அடையமாட்டார்கள்.(34) ஓ! பரதனின் வழித்தோன்றலே, பெருஞ்சிறப்புவாய்ந்த இந்த வரலாற்றைக் கேட்கும் ஒருவனுடைய மனம் எப்போதும் யோகம் பயில்வதையே விரும்பும்.(35) இதைத் தியானிக்கும் எவனும், எப்போதும் அமைதியில் இன்புற்று, இவ்வுலகில் அடைதற்கரிதான ஒரு யோகியின் தூய நிலையைப் படிப்படியாக அடைவான்" என்றார் {மார்க்கண்டேயர்}".(36)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நுண்ணறிவுமிக்க மார்க்கண்டேயர், சிராத்தத்தால் உண்டாகும் பலன்களை விளக்கும் வழியிலும், யோகப் பயிற்சியைப் பரப்பும் வகையிலும் முற்காலத்தில் இவ்வாறு பேசினார்.(37) தெய்வீக சோமன் அனைத்து உயிரனங்களுக்கும் ஊட்டத்தை அளிக்கிறான். எனவே, விருஷ்ணி குடும்பத்தை {குலத்தை} விளக்கும் போதே சந்திர குடும்பத்தைக் குறித்தும் என்னிடம் இருந்து கேட்பாயாக" என்றார்.(38)
ஹரிவம்ச பர்வம் பகுதி – 24ல் உள்ள சுலோகங்கள் : 38
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |