(வஜ்ரநாபவதவ்ருத்தாந்தம்)
The destruction of Vajranabha - An account of Prabhavati | Vishnu-Parva-Chapter-148-092 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : வஜ்ரநாபன் பெற்ற வரங்கள்; பத்ரநாபன் பெற்ற வரம்; பிரபாவதியிடம் அன்னப்பறவையைத் தூதனுப்பிய இந்திரன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவரே, ஓ! அறவோரில் முதன்மையானவரே, பானுமதி அபகரிக்கப்பட்டதையும், கேசவனின் வெற்றிப்பேற்றையும், ஒப்பற்ற சக்தி கொண்ட விருஷ்ணிகள் கடலில் தேவர்களைப் போல விளையாடியதையும்,(1) தேவலோகத்தில் இருந்து சாலிக்யம் கொண்டு வரப்பட்டதையும், இன்னும் பல அற்புதக் காரியங்களையும் நான் கேட்டேன்.(2) நிகும்பன் அழிக்கப்பட்டதைச் சொன்னபோது வஜ்ரநாபன் குறித்து நீர் குறிப்பிட்டீர். ஓ! முனிவரே, இப்போது அதைக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்" என்றான்.(3)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பெரும் மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றலே, காமன் {பிரத்யும்னன்}, சாம்பன் ஆகியோரின் வெற்றிப்பேற்றையும், வஜ்ரநாபனின் அழிவையும் நான் சொல்லப்போகிறேன் கேட்பாயாக.(4) ஓ! படைகளை வெல்பவனே, வஜ்ரநாபன் என்ற பெயர் படைத்த பேரசுரன் ஒருவன் சுமேரு மலையின் உச்சியில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தான்.(5) உலகின் பெரும்பாட்டனும், தெய்வீகனுமான பிரம்மன், அவனது தவங்களில் மகிழ்ந்து ஒரு வரம் கேட்குமாறு அவனிடம் சொன்னான்.(6) ஓ! ஜனமேஜய மன்னா, தானவர்களில் முதன்மையான அவன், தேவர்களால் கொல்லப்படாத நிலையைப் பெறுவது, காற்றும் புக முடியாததும், நினைக்காத போதும் விருப்பத்திற்குரிய ஒவ்வொரு பொருளையும் கொடுக்கவல்லதும், மதில்களால் சூழப்பட்ட தோட்டங்களையும், கிளை நகரங்கள் பலவற்றையும், பெருமைகள் அனைத்துடன் கூடிய ஒப்பற்ற ரத்தினங்களையும் கொண்டதுமான வஜ்ர நகரத்தைப் பெறுவது என்ற இரு வரங்களைக் கேட்டான்.(7-9) பேரசுரன் வஜ்ரநாபன் அந்த வரத்தின் மூலம் தான் வேண்டியதைப் பெற்றுக் கொண்டு வஜ்ர நகரத்தில் வாழ்ந்து வந்தான்.(10) ஓ! மன்னா, இந்த வரத்தைப் பெற்ற அந்தப் பேரசுரனின் புகலிடத்தை நாடி வந்த கோடிக்கணக்கான அசுரர்கள், அவனது தோட்டங்களிலும், அழகிய கிளை நகரங்கள் பலவற்றிலும் வாழ்ந்து வந்தனர்.(11) ஓ! மன்னா, தேவர்களின் பகைவர்களான அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், ஊட்டத்துடனும், நிறைவுடனும் அங்கே வாழ்ந்து வந்தனர்.(12)
ஒரு காலத்தில் தான் பெற்ற வரத்தினாலும், தன்னுடைய நகரத்தினாலும் செருக்கில் மிதந்து வந்த தீயவனான வஜ்ரநாபன், உலகை ஒடுக்க முற்பட்டான்.(13) ஓ! மன்னா, அவன் தேவர்களின் மன்னனிடம் {இந்திரனிடம்} சென்று, "ஓ! பாகனைக் கொன்றவனே, மூவுலகங்கள் அனைத்தும் கசியபரின் உயரான்ம மகன்கள் அனைவருக்கும் உரிய பொது உடைமைகளாகும். எனவே, நான் மூவுலகங்களையும் ஆள விரும்புகிறேன். ஓ! தேவர்களின் மன்னா, என்னுடைய முன்மொழிவை நீ ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னுடன் போரிடுவாயாக" என்றான்.(14,15)
ஓ! குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, தேவர்களில் முதன்மையான மஹேந்திரன், வஜ்ரநாபனின் சொற்களைக் கேட்டு, பிருஹஸ்பதியுடன் ஆலோசித்து,(16) "ஓ! மென்மையானவனே, நம் தந்தையான கசியப முனிவர் இப்போது தவத்தில் ஈடுபட்டு வருகிறார். அது நிறைவடைந்ததும் அவரே நியாயமானதைச் செய்வார்" என்றான்.(17)
அந்தத் தானவன் தன்னுடைய தந்தையான கசியபரிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான். தேவர்களின் மன்னன் சொன்னதையே கசியபரும் சொன்னார்.(18) அவர் {கசியபர்}, "ஓ! மகனே, வஜ்ர நகரத்திற்குச் சென்று தற்கட்டுப்பாட்டுடன் அங்கே வாழ்வாயாக. யஜ்ஞம் நிறைவடைந்ததும் நியாயமானதைச் செய்கிறேன்" என்றார்.(19)
இவ்வாறு சொல்லப்பட்ட வஜ்ரநாபன் தன் நகருக்குத் திரும்பிச் சென்றான். மஹேந்திரன், பல வாயில்களைக் கொண்ட துவாராவதி நகருக்குச் சென்று,(20) வஜ்ரநாபன் சொன்னதை வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} கமுக்கமாகச் சொன்னான். அப்போது ஜனார்த்தனன்,(21) "ஓ! வாசவா, இப்போது வசுதேவரின் குதிரை வேள்வி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது நிறைவடைந்ததும் நான் வஜ்ரநாபனைக் கொல்வேன்.(22) ஓ! தலைவா, ஓ! அறவோரின் புகலிடமே, வஜ்ரநாபனின் விருப்பமில்லாமல் காற்றாலும் அவனது நகருக்குள் புக முடியாது. வசதியான ஒரு நேரத்தில் நாம் அதற்குள் நுழைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்றான்.(23)
ஓ! பரதனின் வழித்தோன்றலே, அந்தக் குதிரைவேள்வியில் தேவர்களின் மன்னன் {இந்திரன்}, வாசுதேவனின் மகனால் {பிரத்யும்னனால்} கௌரவிக்கப்பட்டுப் புறப்பட்டுச் சென்றான்.(24) வீரமிக்க வாசவனும் {இந்திரனும்}, தேவர்களில் முதன்மையான கேசவனும் வசுதேவரின் வேள்வி நிறைவடைவதற்கு முன்பே வஜ்ர நகரத்திற்குள் நுழைவதற்கான வழிமுறைகளைச் சிந்திக்கத் தொடங்கினர்.(25)
வசுதேவனின் வேள்வியில் பத்ரன் என்ற பெயர் கொண்ட நடிகன் ஒருவன், தன்னுடைய அழகிய நடிப்பால் பெரும் முனிவர்களை மகிழ்ச்சியடையச் செய்தான்.(26) அப்போது அந்த முன்னணி முனிவர்கள் ஒரு வரத்தை வேண்டுமாறு அவனிடம் கேட்டனர். தேவர்களின் மன்னனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவனும், நடிகனுமான பத்ரன், அந்தக் குதிரை வேள்வியில் கூடியிருந்த சிறந்த முனிவர்களான அவர்களை வணங்கி, கல்வி தேவியினால் {சரஸ்வதியினால்} தூண்டப்பட்டது போலக் கிருஷ்ணனின் விருப்பத்திற்கேற்ற வகையில் பின்வரும் வரத்தை வேண்டினான்.(27,28)
அந்த நடிகன் {பத்ரன்}, "ஓ! முனிவர்களில் முதன்மையானவர்களே, நான் இருபிறப்பாளர்கள் அனைவரின் உணவென ஆவேனாக[1]; தனித்தீவுகளாக இருக்கும் ஏழு கண்டங்களைக் கொண்ட பூமி முழுவதும் செல்லக்கூடியவன் ஆவேனாக;(29) எத்தடையுமின்றி நான் வானம் முழுவதும் திரிபவன் ஆவேனாக; பலத்தைக் கொடையாகப் பெற்றவனும், அசையும் உயிரினங்களாலும், அசையாத உயிரினங்களாலும் கொல்லப்பட முடியாதவனும் ஆவேனாக.(30) பிறந்த, இறந்த, பிறக்கப்போகிற எந்த வடிவத்தையும் நான் ஏற்கவல்லவன் ஆவேனாக. {அனைத்து வகையிலும் அவர்களைப் போன்றே தோன்றும் {நடிக்கும்} திறமையுடன் இருப்பேனாக}.(31) எனக்கு முதுமை நேராதிருக்கட்டும், முனிவர்கள் எப்போதும் என்னிடம் நிறைவடைந்தவர்களாக இருக்கட்டும்" என்று கேட்டான்.(32)
[1] சித்திரசாலை பதிப்பில், "பிராமணர்கள் அனைவரும் எனக்கு மதிப்புடன் உணவு வழங்க வேண்டும" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "எல்லா த்விஜர்களுக்கும் நான் அனுபவிக்கத் தக்கவனாக ஆக வேண்டும்" என்றிருக்கிறது.
ஓ! மன்னா, அந்த முனிவர்கள், "அப்படியே ஆகட்டும்" என்றனர். தேவனைப் போன்ற அவன் {பத்ரன்}, தனித்தீவுகளான ஏழு கண்டங்களை {த்வீபங்களைக்} கொண்ட பூமி முழுவதும் திரியத் தொடங்கினான்.(33) தானவ மன்னர்களின் நகரங்களிலும், உத்தரகுரு, பத்ராஸ்வம், கேதுமாலம் என்ற நாடுகளிலும், காலாம்ரத்தீவிலும் தன்னுடைய நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினான்.(34) இந்த வரத்தைப் பெற்ற அந்தப் பெரும் நடிகன், ஒவ்வொரு பர்வத்தின் போதும் யாதவர்களால் அலங்கரிக்கப்பட்ட துவாரகைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.(35)
ஒரு நாள் தேவர்களின் மன்னனும், தெய்வீகனுமான சக்ரன் {இந்திரன்}, தார்தராஷ்டிர அன்னப்பறவைகளிடம்,(36) "ஓ! தெய்வீகப் பறவைகளே, நீங்கள் தேவர்கள், அறவோர் ஆகியோரின் விமானங்களாக இருப்பினும், கசியபரால் பெறப்பட்ட என்னுடன் பிறந்தவர்களுமாவீர்கள்.(37) இப்போது தேவர்களின் பகைவரைக் கொல்லும் பெருங்கடமை நமக்கிருக்கிறது. அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். இந்த ஆலோசனையை வெளிப்படுத்தாமல் கவனமாக இருப்பீராக.(38) தேவர்களின் ஆணைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியவில்லையெனில் கடுந்தண்டனைகளைப் பெறுவீர்கள். ஓ! அன்னங்களில் முதன்மையானவர்களே, நீங்கள் விரும்பியவாறு எங்கும் செல்லவல்லவர்கள்.(39) எனவே, வேறு யாரும் நுழைய முடியாத வஜ்ரநாபனின் மிகச் சிறந்த நகரத்திற்குச் சென்று அவனது அந்தப்புரத்தில் உள்ள தடாகங்களில் நீங்கள் திரிய வேண்டும்.(40)
அந்த வஜ்ரநாபனுக்கு, மூவுலகங்களிலும் ஒப்பற்ற அழகைக் கொண்டவளும், சந்திரக் கதிர்களைப் போன்று வெண்ணிறம் கொண்டவளும், பெண்களில் ரத்தினமும், பிரபாவதி என்ற பெயர் கொண்டவளுமான மகள் ஒருத்தி இருக்கிறாள்.(41) ஹைமவதி தேவியால் அருளப்பட்ட வரத்தின் மூலம் அந்த அழகிய மகள் அவளது அன்னைக்குக் கிடைத்தாள்.(42) ஓ! அன்னங்களே, அந்த அழகிய பெண்ணை அவளது தோழியர் ஸ்வயம்வரத்தில் நிறுத்த போகின்றர், அவளும் தான் விரும்பிய கணவனைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள்.(43) உயரான்ம பிரத்யும்னனின் பல்வேறு திறன்களையும், அவனது குடும்பம், அழகு, குணம், வயது ஆகியவற்றையும் அவளிடம் நீங்கள் விளக்கிச் சொல்வீராக.(44) வஜ்ரநாபனின் மகளான அந்தக் கன்னிகை பிரத்யும்னனிடம் அன்பு கொள்கிறாள் என்பதைக் காணும்போது, அந்தச் செய்தியைக் கவனமாகக் கொண்டு சென்று,(45) பிரத்யும்னனின் பதில் செய்தியை அவளுக்குத் தெரிவிப்பீராக. தூது செல்லும் இந்தப் பணியில், உங்கள் நுண்ணறிவுக்குத் தகுந்த வகையில்,(46) அவர்களின் கண்களையும், முகங்களையும் ஆள்வீராக {கண்காணிப்பீராக}[2]. இவ்வாறு நீங்கள் எனக்கு நன்மையைச் செய்ய வேண்டும்.(47) ஓ! அன்னங்களே, பிரபாவதியின் மனத்தை ஈர்ப்பது போன்ற வகையில் பிரத்யும்னனின் திறன்கள் அனைத்தையும் நீங்கள் விளக்கிச் சொல்ல வேண்டும்.(48) அங்கே நடப்பனவற்றை எனக்கும், துவாராவதியில் உள்ள என் தம்பி கிருஷ்ணனுக்கும் தினமும் சொல்ல வேண்டும்.(49) தற்கட்டுப்பாட்டைக் கொண்ட தலைவன் பிரத்யும்னன், வஜ்ரநாபனின் மகளை அபகரிக்கும் வரை நீங்கள் இவ்வாறு முயற்சி செய்ய வேண்டும்.(50)
[2] சித்திரசாலை பதிப்பில், "என்னால் விரும்பப்படும்படியும், சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடியும் உங்கள் நுண்ணறிவுடன் செயல்படுவீராக. அனைத்து வழிமுறைகளினாலும் மகிழ்ச்சிநிறைந்த கண்களுடனும், முகங்களுடனும் உங்கள் பணிகளைச் செய்வீராக" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "தக்க காலத்தில் எனக்கு ஹிதமானது உங்கள் ஸ்வய புத்தியால் செய்யத்தக்கது. ப்ரபாவதியின் நேத்ரமும், முகமும் மலரும்படி உங்களால் செய்யத்தக்கது" என்றிருக்கிறது.
பிரம்மன் அளித்த வரத்தால் செருக்கில் மிதக்கும் அந்தத் தானவர்களைத் தேவர்களால் கொல்ல முடியாது. எனவே பிரத்யும்னனும், தேவர்களின் பிற மகன்களும்தான் போரில் அவர்களை அழிக்க வேண்டும்.(51) பத்ரன் என்ற பெயரைக் கொண்ட நடிகன் ஒருவன், (அவனது நகருக்குள் நுழையும்) வரத்தை இப்போது அடைந்திருக்கிறான். எனவே, பிரத்யும்னன் தலைமையிலான யாதவர்கள் வேடந்தரித்துக் கொண்டு வஜ்ரநாபனின் நகருக்குள் நுழைவார்கள்.(52) ஓ! தார்தராஷ்டிரர்களே, நான் சொன்ன இவை யாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டும். எனக்கு இந்த நன்மையைச் செய்வதைத் தவிர்த்துக் காலத்திற்குத் தகுந்த பயனை விளைவிக்கும் செயல்களையும் நீங்கள் செய்ய வேண்டும்.(53) ஓ! அன்னங்களே, வஜ்ரன் விரும்பினால் மட்டுமே அவனுடைய நகருக்குள் நீங்கள் நுழைய முடியும். தேவர்களால் எந்த வழிமுறைகளினாலும் அங்கே நுழைய முடியாது" என்றான் {இந்திரன்}.(54)
விஷ்ணு பர்வம் பகுதி – 148 – 092ல் உள்ள சுலோகங்கள் : 54
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |