(பிரத்யும்னபாஷணம்)
A description of the rainy season | Vishnu-Parva-Chapter-152-096 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : மழைக்காலம்; கிருஷ்ணனின் சந்திரவம்ச அவதாரம்; பிரபாவதியின் பெருமை சொன்ன பிரத்யும்னன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "முழுநிலவைப் போன்ற முகத்தைக் கொண்ட காமன் {பிரத்யும்னன்}, மழைக்காலத்தில் மேகங்களால் நிறைந்த வானைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அழகிய கண்களைக் கொண்ட பிரபாவதியிடம்,(1) "ஓ! அழகிய பெண்ணே, கூந்தலில் மறைந்திருக்கும் உன் முகத்தைப் போலவே அழகிய கதிர்களைக் கொண்ட சந்திரன் மேகங்களால் மறைக்கப்பட்டிருப்பதைப் பார்.(2) ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, உன்னுடைய அழகிய பொன்னாபரணத்தைப் போலவே மேகங்களில் இருக்கும் மின்னல் அழகாகத் தெரிவதைப் பார். ஓ! அழகிய அங்கங்களைக் கொண்டவளே, மழைத்தாரைகளைப் பொழிந்து முழங்கும் மேகங்கள் உன்னுடைய ஆரங்களை {முத்துமாலைகளைப்} போல இருக்கின்றன.(3) நீர்த்துளிகளில் நுழையும் கொக்குகள் உன் பல்வரிசையைப் போல ஒளிர்கின்றன. ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, தாமரைகள் மூழ்கியிருப்பதால் ஓடைகள் நிறைந்த தடாகங்கள் அழகாகத் தெரியவில்லை.(4) கொக்குகளால் அலங்கரிக்கப்பட்டுத் தூய்மையான அழகிய பற்களைப் போலத் தெரியும் மேகங்கள், காட்டில் ஒன்றோடொன்று மோத இருக்கும் பெருந்தந்தங்களுடைய யானைகளைப் போலத் தெரிகின்றன.(5)
ஓ! அழகிய அங்கங்களைக் கொண்டவளே, உன் நெற்றியில் இருக்கும் வளையங்களை {கோடுகளைப்} போலவே வானத்தையும் மேகங்களையும் அலங்கரிக்கும் மூவண்ண வானவில் காரிகையருக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது.(6) அழகின் இலக்கணமான மயில்கள் தங்கள் இணைகளின் துணையுடன் மேக முழக்கங்களைக் கேட்டு மகிழ்ந்து தங்கள் பெரும் தோகைகளை விரித்து அகவிக் கொண்டிருக்கின்றன.(7) மற்ற மயில்கள், கோபுரங்களிலும், சந்திரனைப் போன்ற வெண்ணிறம் கொண்ட வீடுகளின் மேற்கூரைகளிலும் தங்கள் எழில்மிகு அழகை வெளிப்படுத்தியவாறு ஆடிக் கொண்டிருக்கின்றன.(8) களைப்படைந்த இறகுகளைக் கொண்ட அழகிய மயில்கள் ஒரு கணத்தில் மர உச்சிகளை அலங்கரித்துப் புதிதாய் முளைத்த புல்லுக்கு அஞ்சி மீண்டும் வெறுந்தரையை அடைகின்றன.(9) சந்தனம் போன்ற குளிர்ந்த மழைத்துளிகளில் இருந்து வீசும் இனிமைமிக்கத் தென்றல், காமனின் நண்பர்களான சர்ஜ, அர்ஜுன மலர்களின் நறுமணத்தைச் சுமந்தபடியே வீசுகிறது.(10)
ஓ! அழகிய உடலைக் கொண்டவளே, இந்தக் காற்று புது மழையைக் கொண்டு வராமலும், தன்னுடன் விளையாடியவரின் களைப்பை நீக்காமலும் இருந்தால் நிச்சயம் என்னால் விரும்பப்படாது.(11) காதலர்கள் இணைவதற்கு உகந்த இந்தக் காலத்தில் நறுமணமிக்கத் தென்றல் வீசுவதைவிட மனிதர்களுக்குப் பிடித்தமானது வேறு யாது?(12) ஓ! அழகிய உடல்படைத்தவளே, அன்னப்பறவைகள் நீர் பெருகும் ஆற்றங்கரைகளைக் கண்டு களைத்து, தங்கள் இதயம் விரும்பும் இடங்களைக் காண சாரஸங்கள், கிரௌஞ்சங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகச் செல்கின்றன.(13) ஓ! அழகிய கண்களைக் கொண்டவளே, அன்னங்களும், தேர்ச்சக்கரங்களைப் போலச் சடசடக்கும் சாரஸங்களும் சென்றபிறகு ஆறுகளும், தடாகங்களும் அழகாகத் தெரியவில்லை.(14)
ஹரியின் இயல்பையும், மழைக்காலத்தின் உண்மை இயல்பையும் அறிந்த நித்ரா தேவி, பேரழகுடைய ஸ்ரீயை {ஸ்ரீதேவியை} வணங்கிவிட்டு, தேவலோகத்தில் ஓய்வில் கிடக்கும் உலகின் தலைவனான உபேந்திரனின் புகலிடத்தை நாடினாள்.(15) ஓ! தாமரை போன்ற கண்களைக் கொண்டவளே, தெய்வீகனான உபேந்திரன் {கிருஷ்ணன்} உறங்கும்போது, துணி போன்ற மேகத்தால் மறைக்கப்பட்டு ஒளிரும் சந்திரனும் அவது {கிருஷ்ணனுடைய} முகத்தின் நிறத்தைக் காட்டுகிறான்.(16) கிருஷ்ணனை மகிழ்விக்க விரும்பும் அனைத்துப் பருவகாலங்களும், கதம்ப, அர்ஜுன, நீப, கேடக மலர் மாலைகளைக் கொண்டு வந்து அனைத்து வகை மலர்களையும் பொழிகின்றன.(17) நஞ்சு பூசப்பட்ட முகங்களுடன் கூடிய பாம்புகளுடன் கூடியவையும், வண்டுகள் நிறைந்தவையுமான அனைத்து மலர்களும், மரங்களும் மனிதர்களின் பேராவலைத் தூண்டுகின்றன.(18)
நீருண்ட மேகங்களின் கனத்தால் வானம் அழுத்தப்படுவதைக் கண்டுவிட்டதைப் போல உன் அழகிய முகமும், முலைகளும், தொடைகளும் அகழிக்குள் நுழைகின்றன {வற்றுகின்றன / நிறம் மங்குகின்றன}.(19) கொக்குகளால் அமைந்த மாலையால் அலங்கரிக்கப்பட்டதைப் போன்ற அந்த அழகிய மேகங்களைக் கண்டால், உலகின் நன்மைக்காக அவை பூமியில் தானியங்களைப் பொழிவதைப் போலத் தெரிகிறது.(20) பலம்வாய்ந்த மன்னன் தன்னுடைய யானையை மதங்கொண்ட யானைகளுடன் மோத விடுவதைப் போலவே காற்றும் நீருண்ட மேகங்களை ஒன்றோடொன்று மோதச் செய்கிறது.(21) முட்டைகளில் இருந்து பிறப்பவையான புறாக்களுக்கும், மயில்களுக்கும், பிற பறவைகளுக்கும் மகிழ்ச்சியை அளிப்பதும், காற்றால் தூய்மை செய்யப்பட்டதுமான தெய்வீக நீரை மேகங்கள் பொழிகின்றன.(22) வாய்மையையும், அறத்தையும் விரும்பும் இருபிறப்பாளர்கள் தங்கள் சீடர்களால் சூழப்பட்டவர்களாக ரிக்குகளை உரைப்பதைப் போலக் காளைகளும் பசுக்களுடன் சேர்ந்து மேய்ச்சல் நிலங்களில் முழங்குகின்றன.(23) பெண்கள் எப்போதும் தங்கள் காதலரின் துணையுடன் வாழ விரும்புவதும் இந்த மழைக் காலத்தின் பண்புகளில் ஒன்றாகும்.(24)
ஓ! அழகிய பெண்ணே, உன் முகத்தோற்றதிற்கு ஒப்பான சந்திரன், கிரஹம் போன்ற மேகத்தால் உடல் பீடிக்கப்பட்டவனாகப் புலப்படாமல் போவது மட்டுமே மழைக்காலத்தின் ஒரே குறையென நான் உணர்கிறேன்.(25) இந்தக் காலத்தில் மேகம் மறைக்கப் போகும் இடைவெளியில் சந்திரன் காட்சி தரும்போது, அந்நிய நாட்டில் இருந்து திரும்பி வந்த நண்பனைக் காண்பது போலவே மக்கள் அவனைப் பார்க்கிறார்கள்.(26) பிரிவால் வாடும் பெண்களின் புலம்பல்களுக்குச் சாட்சியாக இருக்கும் சந்திரனைக் காண்போரின் கண்கள், பிரிவால் வாடும் பெண்கள் காதலரைக் கண்டதும் அடையும் இன்பத்தைப் போல இன்புறுகின்றன. இவ்வாறே எனக்குத் தோன்றுகிறது என்றாலும் இஃது உண்மையல்ல.(27) சந்திரனின் காட்சி, காதலருடன் சேர்ந்திருக்கும் பெண்களின் கண்களுக்கு விருந்தாகவும், பிரிவால் வாடுவோருக்குக் காட்டுத் தீயாகவும் இருப்பதால் சந்திரன் பெண்களின் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் பிறப்பிடமாவான்.(28) உன் தந்தையின் நகரத்தில் சந்திரன் இல்லாத போதும் அவனுடைய கதிர்களின் பிரகாசம் இருக்கும்; எனவே சந்திரனை உன் முன்னால் நான் புகழும் போது, அவனால் விளையும் நன்மைகளையும், தீமைகளையும் உன்னால் புரிந்து கொள்ள முடியாது.(29) அறவோரால் பயிலப்படும் கடுந்தவங்களைச் செய்து, அடைவதற்குக் கடினமானதும், அனைவராலும் வழிபடப்படுவதுமான பிரம்ம லோகத்தை {பிராமண ராஜ்ஜியத்தை} அவன் அடைந்திருக்கிறான். பிராமணர்கள் {பவமான} வேள்வியில் சாமம் உரைத்து {சாமவேத கானம் செய்து} பெருஞ்சோமனின் {சந்திரனின்} மகிமைகளைத் துதிக்கின்றனர்.(30)
வேள்வி நெருப்பானது கந்தர்வலோகத்தில் இருந்து புரூரவனால் கொண்டு வரப்படும் வழியிலேயே மறைந்தது. அந்த இடத்தில் தேடிய போது ஓர் அரச மரம் {அரணிக் கட்டை} காணப்பட்டது. அந்த மரத்தில் இருந்து விறகுகளைச் சேகரித்து மூன்று நெருப்புகளும் தூண்டப்பட்டன. எனவே, மரங்கள் மற்றும் மூலிகைகளின் தலைவனான சந்திரனே மறைந்த நெருப்பை அரச மரத்தில் {அரணிக் கட்டையில்} இருந்து மீட்டான். சந்திரன், மிகச் சிறந்த செயல்களைச் செய்யும் புதனின் தந்தை ஆவான். மன்னன் புரூரவன் புதனின் மகனாவான்.(31) ஓ! அழகிய பெண்ணே, முன்பொரு காலத்தில் கடுந்தவம் செய்யும் முனிவர்களால் அவனது அமுதவுடல் பருகப்பட்டபோது, அந்த உயரான்ம சோமன் {புரூரவனாகப் பிறந்து}, அப்சரஸ்களில் முதன்மையான ஊர்வசியை விரும்பினான்.(32) அவனுடைய வம்சத்தில் தோன்றிய ஆயு, குசப் புற்களின் நுனியின் மூலம் தேவலோகத்தை அடைந்து சிறு தெய்வமென்ற மதிப்பை அடைந்தான், வீரனான நகுஷனும் தேவர்களின் மன்னன் {இந்திரன்} என்ற மதிப்பை அடைந்தான்[1].(33)
[1] சித்திரசாலை பதிப்பில், "பெருந்துணிவுமிக்கச் செயல்களைச் செய்பவனும், தலைவனான மன்னன் புரூரவனை மகனாகக் கொண்டவனுமான புதனின் தந்தை {சந்திரன்} புகழத் தகுந்தவன். செடிகொடி மூலிகைகளின் தலைவனான அவன், தொலைந்து போன நெருப்பை ஷமியின் கருவறையில் வெளிப்படுத்தினான்.(31) ஓ! அன்புக்குரியவளே, அழகிய அங்கங்களைக் கொண்டவளே, அதே போல நெடுங்காலத்திற்கு முன்பு (புரூரவனின் வடிவில் இருந்த) இந்தப் பேரான்மா, தெய்வீகப் பெண்களில் சிறந்தவளான ஊர்வசியை விரும்பினான். அவனது (சோமனின்) மொத்த உடலும் அமுதமாக இருந்தது. நெடுங்காலத்திற்கு முன்பு கடுந்தவங்களைச் செய்து வந்த முனிவர்கள், அவனது உடலை அழித்து அமுதம் பருகினர்.(32) சந்திரனின் குலத்தில் நுண்ணறிவுமிக்க மன்னன் புரூரவன் பிறந்தான. குசப் புற்களால் செய்யப்படும் வேள்விகளால் வளம் அடைந்த அவன் சொர்க்கத்தை அடைந்து அங்கே வழிபடப்பட்டான். அவனது குலத்தில் ஆயு பிறந்தான், அவனுடைய வீர மகன் நகுஷன் தேவர்களின் மன்னனானான்.(33)" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஸோமன் (சந்த்ரன்) புதனின் பிதா. மேலான வீர்ய கார்யங்கள் புரியும் அரசன் "புரூரவஸ்" என்பான் புதனின் மகன். ப்ராணாக்னியாகத் துதிக்கப்படும் ருத்ர ஸ்வரூபியான சந்த்ரன் மறைந்த அக்னியை அரணிக் கட்டையிலிருந்து பிறப்பித்தான். உடலழகியே, மஹாத்மா சந்த்ரன் முன்னாள் சிறந்த ஊர்வசியை விரும்பினான். அம்ருதமயமான தேஹமுடைய அவன் கடுந்தவமுடைய முனி ச்ரேஷ்டர்களால் "அப்படியே" பருகப்பட்டான். மறுபடியும் புத்திமான் அரசன் ஒருவன் குசப்புற்களின் முனைகளால் அக்னியில் யாகம் செய்தான். ஸ்வர்க்கத்தில் கௌரவிக்கப்படுகிறான். அவன் வம்சத்தில் "ஆயுவும், நகுஷனும்" உதித்தனர். அந்த வீர நகுஷனும் தேவேந்த்ர பதவியை அடைந்தான்" என்றிருக்கிறது.
தெய்வீகத் தலைவனும், உலகத்தைப் படைத்தவனுமான ஹரி, தேவர்களின் பணி நிமித்தம் பைமத் தலைவனாக எவனுடைய குலத்தில் பிறந்தானோ அந்தச் சந்திரன், எப்போதும் தக்ஷனின் மகள்களால் {27 நட்சத்திரங்களால்} சூழப்பட்டவனாக இருக்கிறான்.(34) குலத்தின் கொடியாகவும், தன செயல்களால் குடிமுதல்வன் என்ற மதிப்பை அடைந்தவனுமான உயரான்ம வஸு அவனுடைய குலத்திலேயே பிறந்தான்; சந்திர குலத்தில் முதன்மையான மன்னன் யதுவின் வம்சத்தில் தேவர்களின் மன்னனுக்கு ஒப்பான போஜர்கள் பிறந்தனர், ஏற்கனவே குடிமுதல்வர்களாக இருந்தவர்களும் மீண்டும் சந்திர குலத்தில் பிறந்தனர்.(35,36) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே, சந்திர குலத்தில் பிறந்த யதுவின் வம்சத்தில் வஞ்சகனாவோ, நாத்திகனாகவோ, மதிப்பற்றவனாகவோ, அழகற்றவனாகவோ, கோழையாகவோ எந்த மன்னனும் பிறந்ததில்லை.(37) நற்குணங்களின் சுரங்கமான நீ குணவானான ஓர் இளவரசரின் மருமகளாக இருக்கிறாய். எனவே அறவோர் விரும்பும் ஈஷ்வரனை வணங்குவாயாக.(38) ஓ! பெண்ணே, புருஷர்களில் முதன்மையானவனும், பெரும்பாட்டன், தேவர்கள் மற்றும் உலகங்களுக்குப் புகலிடமாக இருப்பவனுமான நாராயணனே உன் மாமனார். அவரை வணங்குவாயாக" என்றான் {பிரத்யும்னன்}.(39)
விஷ்ணு பர்வம் பகுதி – 152 – 096ல் உள்ள சுலோகங்கள் : 39
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |