(வஜ்ரநாபபுரம் ப்ரதி ப்ரத்யும்நாதீனாம் கமனம்)
The celestial swans go to the city of Vajra | Vishnu-Parva-Chapter-149-093 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : வஜ்ரநகரம் சென்ற அன்னங்கள்; சுசீமுகீ என்ற அன்னப்பறவையைத் தோழியாக அடைந்த பிரபாவதி; பிரத்யும்னன் குறித்து பிரபாவதியிடமும், பத்ரநாபன் குறித்து வஜ்ரநாபனிடமும் சொன்ன அன்னம்; துவாரகை திரும்பிய அன்னங்கள்; நடிகனாகப் பிரத்யும்னன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, அந்த அன்னப்பறவைகள் முன்பிருந்தே வஜ்ரபுரத்திற்குச் செல்வது வழக்கம். எனவே வாசவனின் சொற்களைக் கேட்ட உடனே அங்கே அவை சென்றன.(1) ஓ! வீரா, அந்தப் பறவைகள், தீண்டதகுந்த மென்மையான தங்கத் தாமரைகளும், நீலோத்பலங்களும் நிறைந்த அழகிய தடாகங்களில் இறங்கின. அவை ஏற்கனவே அங்கே பல முறை வந்திருந்தாலும் இப்போது தங்கள் இனிய செம்மொழியால் {மதுரமான ஸம்ஸ்க்ருத அபூர்வ பாஷையில் பேசி} அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.(2,3) ஓ! ஜனமேஜய மன்னா, அந்தத் தெய்வீக அன்னப்பறவைகள் இனிய சொற்களைப் பேசி வஜ்ரநாபனின் அந்தப்புரத் தடாகங்களில் திரிந்து அவனுக்கு மிகப் பிடித்தமானவையாகின.
அப்போது அவன் அந்தத் தார்தராஷ்டிரங்களிடம் பின்வரும் சொற்களில்,(4,5) "தேவலோகத்தில் வாழ்வதால் எப்போதும் நீங்கள் இனிய சொற்களைப் பேசுகிறீர்கள். என் வீட்டில் பெரும் விழாவென நீங்கள் அறியும்போதெல்லாம் இங்கே வாருங்கள். ஓ! தேவலோகத்தில் வாழும் அன்னங்களே, என்னுடைய இந்த வீட்டை உங்களுடையதாகக் கருதி நம்பிக்கையுடன் இங்கே நுழையுங்கள்" என்றான்.(6,7)
ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, வஜ்ரநாபனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பறவைகள் அந்தத் தானவ மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தன; தேவர்களின் பணிகளைச் செய்வதற்காக மனிதர்களைப் போலப் பேசி, பல்வேறு சொற்களைச் சொல்லும் {கதைகள்} அனைத்தையும் அவை அறிந்து கொண்டன.(8,9) அருள் வடிவங்கள் அனைத்துடனும் கசியபருடைய மகன்களின் (தானவர்களின்) அரண்மனைகளில் வாழும் பெண்கள், அந்த அன்னங்கள் பேசும் அழகிய கதைகளைக் கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.(10)
இவ்வாறு வஜ்ரநாபனின் அந்தப்புரத்திற்குள் திரிந்து வந்த அன்னங்கள், புன்னகையுடன் இருக்கும் அவனது அழகிய மகள் பிரபாவதியைக் கண்டு அவளிடம் அறிமுகம் செய்து கொண்டன.(11) அந்த அன்னங்களில் சுசீமுகி என்பவள் {என்ற அன்னப்பறவை}, அழகிய புன்னகையைக் கொண்ட அந்த இளவரசியிடம் {பிரபாவதியிடம்} நட்பு பூண்டாள்.(12) அந்தச் சுசீமுகி, நூற்றுக்கணக்கான அழகிய கதைகளைச் சொல்லி வஜ்ரநாபனின் மகளிடம் நம்பிக்கையை உண்டாக்கி, ஒரு நாள் அவளிடம் {பிரபாவதியிடம்},(13) "ஓ! பிரபாவதி, அழகு, குணம், திறன்களைப் பொறுத்தவரையில் உன்னை நான் மூவுலகிலும் பேரழகியாகக் கருதுகிறேன். நான் உன்னிடம் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.(14) ஓ! அழகிய புன்னகையைக் கொண்டவளே, உன் இளமை கிட்டத்தட்ட வீணாகிறது; ஓடை நீரைப் போலச் சென்றதேதும் திரும்புவதில்லை.(15) இவ்வுலகில் பெண்களுக்கு ஆண்களுடன் இன்புறுவதைவிடப் பெரிய மகிழ்ச்சி வேறேதும் கிடையாது. ஓ! மங்கலப் பெண்ணே, நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்.(16) ஓ! அழகிய அங்கங்களைக் கொண்டவளே, உன் தந்தை நீ விரும்பியவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள ஆணையிட்டும், தேவர்களிலோ, அசுரர்களிலோ யாரையும் நீ கணவனாகத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதேன்?(17) ஓ! இளமைநிறைந்த பெண்ணே, அழகும், வீரமும், பிற திறன்களும் கொண்ட மணமகன்கள் பலர் இங்கே வந்தாலும் அவர்கள் அலட்சியம் செய்து புறக்கணிக்கப்பட்டவர்களாகத் திரும்பிச் செல்கிறார்கள்.(18)
ஓ! பெண்ணே {பிரபாவதியே}, உன் குடும்பத்திற்கும், அழகிற்கும் ஏற்ற மணமகனை நீ விரும்பாதபோது, ஓ! அழகிய அங்கங்களைக் கொண்டவளே, துணிவு, திறமை, குலமரபு, அழகு ஆகியவற்றில் மூவுலகிலும் இணையற்றவனாக இருக்கும் ருக்மிணியின் மகன் பிரத்யும்னன் இங்கே ஏன் வரப் போகிறான்?(19,20) ஓ! அழகிய இடையைக் கொண்டவளே, பெருஞ்சக்தி வாய்ந்தவனும், அற ஆன்மா கொண்டவனுமான அவன் மனிதர்களுக்கு மத்தியில் மனிதனாக இருந்தாலும், தேவர்களுக்கு மத்தியில் தேவனாகவும், தானவர்களுக்கு மத்தியில் அவர்களில் ஒருவனாகவும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(21) பசுவால் பாலையும், ஓடையால் நீரையும் தடுக்க முடியாததைப் போல அவனைக் கண்ட பெண்களால் தங்கள் இயல்பான அன்பை {காதலைத்} தடை செய்ய முடியாது.(22) நான் அவனுடைய முகத்தை முழு நிலவுடனோ, அவனுடைய கண்களைத் தாமரைகளுடனோ, அவனது நடையைச் சிங்கத்துடனோ ஒப்பிடத் துணியேன்.(23)
ஓ! அழகிய பெண்ணே, என்னால் வேறென்ன சொல்ல முடியும்? பெருஞ்சக்தி வாய்ந்த தலைவன் விஷ்ணு, உலகின் சாரத்தைப் பிழிந்து (அங்கங்கள் அற்ற அனங்க தேவனை) காமனைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து, தன் அங்கங்களில் ஒன்றாக்கி தன் மகனாகவும் கொண்டான்.(24) அவன் {பிரத்யும்மன்} தன்னுடைய குழந்தைப்பருவத்தில் பாவம் நிறைந்த சம்பராசுரனால் அபகரிக்கப்பட்டான்; அவனை {சம்பரனைக்} கொன்று தன் குணத்திற்குக் களங்கமேற்படாமல் அவனது {சம்பரனின்} மாய சக்திகள் அனைத்தையும் அறிந்து கொண்டான்.(25) மூவுலகங்களிலும் அடையத் தகுந்த சிறப்புத் திறன்கள் அனைத்தும், உன்னால் கற்பனை செய்யக் கூடிய அனைத்தும் பிரத்யும்னனிடம் இருக்கின்ற்ன.(26) அவன் பிரகாசத்தில் நெருப்பைப் போன்றவன், பொறுமையில் பூமியைப் போன்றவன், கம்பீரத்தில் ஆழமான தடாகத்தைப் போன்றவன்" என்று சொன்னாள் {சுசீமுகி}.(27)
இதைக் கேட்ட பிரபாவதி, அந்தச் சுசீமுகியிடம், "ஓ! மென்மையான பெண்ணே, விஷ்ணு மனிதர்களின் உலகில் வாழ்ந்து வருகிறார் என்பதை என் தந்தைக்கும், நுண்ணறிவுமக்க நாரதருக்கும் இடையில் நடந்த உரையாடல்களில் பலமுறை கேட்டிருக்கிறேன்.(28) எரியும் தேர்கள், சாரங்கம் (வில்), கதாயுதம் ஆகியவற்றால் அவர் தைத்தியர்களின் குலங்களை அழித்திருக்கிறார். ஓ! மதிப்பிற்குரிய பெண்ணே, அவர் திதியின் மகன்களுடைய பெரும்பகைவராவார்.(29) தானவர்களின் மன்னர், தமது நலத்திற்காகக் கிளை நகரங்களில் வாழும் அசுரர்களின் மூலம் விஷ்ணுவைக் குறித்த செய்திகளைத் திரட்டி வருகிறார்.(30) ஓ! இனிய புன்னகை கொண்டவளே, ஒவ்வொரு பெண்ணும், தன் தந்தையின் குடும்பத்தைவிட மேன்மையான குடும்பத்தைச் சேர்ந்த கணவரையே விரும்புவாள்.(31) அவரை இங்கே கொண்டு வருவதற்கான வழிமுறைகளை உன்னால் காண முடிந்தால் எனக்குப் பேருதவியைச் செய்தவளும், எங்களது குடும்பத்தை {குலத்தைத்} தூய்மைப்படுத்தியவளும் ஆவாய்.(32) ஓ! இனிய சொற்களைப் பேசுபவளே, விருஷ்ணிகளின் குலத்தில் பிறந்த பிரத்யும்னரை எவ்வாறு என் கணவராக்கிக் கொள்ள முடியும் என்பதை எனக்குச் சொல்வாயாக.(33) ஹரி தைத்தியர்களின் பெரும்பகைவர் என்பதையும், அவர்களுக்குப் பெருந்தொல்லைகளைக் கொடுத்து வருகிறார் என்பதையும் அசுர மூதாட்டிகளின் உரையாடல்களில் இருந்து அறிந்திருக்கிறேன்.(34) பிரத்யும்னர் பிறந்தது எவ்வாறு என்பதையும், பெருஞ்சக்தி வாய்ந்த காலசம்பரன் அவரால் கொல்லப்பட்டது எவ்வாறு என்பதையும் நான் முன்பே கேட்டிருக்கிறேன்.(35) இன்னும் நான் என்ன சொல்லப் போகிறேன்? பிரத்யும்னர் எப்போதும் என் இதயத்தில் இருக்கிறார். ஆனால் அவருடன் சேரும் வழிமுறை மட்டுமே தெரியவில்லை.(36) ஓ! மதிப்பிற்குரிய தோழி, உன் பணிப்பெண்ணாக இருந்தாலும் நான் உன்னை என் தூதராக நியமிக்கிறேன். நான் அவருடன் சேரும் வழிமுறையை எனக்கு நீ சுட்டிக் காட்டுவாயாக" என்றாள்.(37)
அப்போது அவளைத் தேற்றிய சுசீமுகி புன்னகையுடன், "ஓ! இனிய புன்னகையைக் கொண்டவளே, நான் அங்கே உன் தூதராகச் சென்று உன்னுடைய பெரும் பக்தியை அவனிடம் சொல்வேன்.(38,39) ஓ! அழகிய இடையைக் கொண்டவளே, ஓ! இனிய புன்னகையைக் கொண்டவளே, அவனை இங்கே வரச் செய்யவும், உன்னை அந்தக் காமனின் துணைவியாக்கவும் நான் முயல்வேன்.(40) ஓ! அழகிய கண்களைக் கொண்டவளே, நான் சொன்னதை உண்மையாகக் கருதுவாயாக. நான் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக உன் தந்தையிடம் சொல்வாயாக; அதன் மூலம் நீ பெரும் நன்மையை அறுவடை செய்வாய்" என்றாள் {சுசீமுகி}.(41)
அன்னத்தால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அதன்படியே பிரபாவதி செயல்பட்டாள். தானவர்களின் மன்னன் {வஜ்ரநாபன்}, தன் அந்தப்புரத்தில் இருந்த அந்த அன்னத்திடம் {சுசீமுகியிடம்},(42) "ஓ! அழகிய சுசீமுகி, பேச்சில் உன் புத்திசாலித்தனத்தைப் பிரபாவதி என்னிடம் சொன்னாள். நல்ல கதைகளை நீ எங்களுக்குச் சொல்வாயாக. பிறரால் காணத் தகுந்தவையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இவ்வுலகில் இதற்கு முன் எவரும் காணாதவையும், உன்னால் காணப்பட்டவையுமான அற்புதங்களை எங்களுக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(43,44)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அப்போது அந்த அன்னப்பறவை வஜ்ரநாபனிடம், "ஓ! தானவர்களில் முதன்மையானவனே, சுமேரு மலையின் சாரலில் அற்புதம் நிறைந்த அருஞ்செயலைச் செய்பவளும், சாண்டிலி என்ற பெயர்கொண்டவளுமான நுண்ணறிவுமிக்கப் பெண்துறவியை நான் கண்டேன்.(45,46) மலைத்தலைவனின் மங்கல மகளுக்கு (உமைக்கு) நல்ல தோழியாக இருக்கும் அந்தச் சாண்டிலி, பரந்த மனம் கொண்டவளாகவும், உலகிற்குப் பெரும் நன்மையைச் செய்பவளாகவும் இருக்கிறாள்[1].(47) முனிவர்களிடம் வரம் பெற்றவனும், விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவனும், மூவுலகங்களில் உள்ள அனைவருக்கும் எப்போதும் உணவைக் கொடுப்பவனும், அனைவராலும் விரும்பப்படுபவனுமான மங்கல நடிகன் ஒருவனையும் நான் கண்டேன்.(48) ஓ! பாவமற்ற வீரா, அந்த நடிகன் உத்தரகுரு, காலம்ர, பத்ராஸ்வ, கேதுமாலா தீவுகளுக்கும், இன்னும் பிற தீவுகளுக்கும் எப்போதும் பயணம் செய்கிறான்.(49) அவன் தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் பாடல்கள் பலவற்றையும், நடனங்கள் பலவற்றையும் அறிந்திருக்கிறான். அவன் தன்னுடைய நடனத்தால் தேவர்களையும் ஆச்சரியப்படுத்துகிறான்" என்றது {என்றாள் சுசீமுகி}.(50)
[1] சித்திரசாலை பதிப்பில், "ஓ! தானவர்களில் சிறந்தவனே, மேரு மலைக்கு அருகில் அற்புதச் செய்யலைச் செய்பவளும், நல்ல மனம் கொண்டவளுமான சாண்டிலி என்ற பெயரைக் கொண்ட நல்ல பெண்மணி ஒருத்தியைக் கண்டேன். மேலும், மலையின் மகளும், சிறந்தவளுமான சாண்டிலியின் மங்கலத் தோழியும், உயிரினங்கள் அனைத்தின் நலத்தையும் விரும்புபவளும், நல்ல மனம் கொண்டவளுமான கௌசல்யையையும் நான் கண்டேன்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அஸுரச்ரேஷ்டனே, ஆச்சர்ய கார்யங்கள் செய்யும் நல்ல மனதுடைய பதிவ்ரதை சாண்டிலி என்பவள் என்னால் பார்க்கப்பட்டாள். அவள் எல்லா ப்ராணிகளின் ஹிதத்தில் ப்ரியமுடையவள். நல்ல மனதுள்ளவளும் கூட. சைலி புத்ரி சாண்டில்யைக்கு மங்களமான தோழி (ஒருத்தி). அவளுக்குக் கௌஸல்யை எனப் பெயர்" என்றிருக்கிறது.
வஜ்ரநாபன், "ஓ! அன்னமே, இதை நான் ஏற்கனவே பலமுறை கேட்டிருக்கிறேன். உயரான்ம சித்தர்களும், சாரணர்களும் இதை எனக்குச் சொல்லியிருக்கின்றனர்.(51) ஓ! பறவையின் மகளே, இந்த வரத்தை அடைந்திருக்கும் அந்த நடிகனைக் காணும் ஆவலில் நானும் பீடிக்கப்பட்டிருக்கிறேன். அவனை என்னிடம் வரச் செய்யும் வகையில் என்னுடைய புகழை அவனிடம் சொல்ல எவரும் இல்லை" என்றான்.(52)
அந்த அன்னம் {வஜ்ரநாபனிடம்}, "ஓ! அசுரர்களில் முதன்மையானவனே, அந்த நடிகன் சிறப்புத் தகுதிகளை மெச்சுபவனாவான். சிறப்புத் திறன்களைக் கொண்ட நபர்களை {குணவான்களைப்} பற்றிக் கேள்விப்பட்டு {அவர்களைக் காண்பதற்காக} தனித்தீவுகளான ஏழு கண்டங்களுக்கும் அவன் பயணிக்கிறான்.(53) ஓ! பேரசுரா, உன்னுடைய பெருஞ்சாதனைகளை அவன் கேட்டுவிட்டால், ஏற்கனவே இங்கே வந்துவிட்டவனாக அவனை அறிவாயாக" என்றது {என்றாள் சுசீமுகி}.(54)
வஜ்ரநாபன், "ஓ! பறவையின் மங்கல மகளே, ஓ! அன்னமே, உனக்கு நன்மை நேரட்டும். அந்த நடிகன் இங்கே வருவதற்கான ஏற்பாட்டைச் செய்வாயாக" என்றான்.(55)
வஜ்ரநாபனால் இவ்வாறு தூதுப்பணிக்காக அனுப்பப்பட்ட அன்னங்கள் கிருஷ்ணனிடமும், தேவர்களின் மன்னனிடமும் {இந்திரனிடமும்} சென்று அனைத்தையும் சொல்லின.(56) இதைக் கேட்ட அதோக்ஷஜன் {கிருஷ்ணன்}, பிரபாவதியை அடைந்து, வஜ்ரநாபனைக் கொல்லும் பணியில் பிரத்யும்னனை ஈடுபடுத்தினான்.(57) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அந்த ஹரி, தெய்வீக மாயையைப் பயன்படுத்தி, நடிகர்களின் வேடத்தில் பைமர்களை அனுப்பினான்.(58)
அவர்கள் பிரத்யும்னனை நாயகனாகவும் {நாடகத்தலைவனாகவும்}, சாம்பனை நகைச்சுவை நடிகனாகவும் {விதூஷகனாகவும்}, கதனை அவனது தோழனாகவும் {பக்க பாடகனாகவும் / பாரிபார்ஷவனாகவும்} வேடந்தரிக்கச் செய்தனர். பைமர்கள் பிறர் நல்ல ஆடைகளுடன் {துணை நடிகர்களாக} மாறுவேடம் பூண்டனர்.(59) இசைக்கருவிகளுடன் கூடிய முன்னணி ஆடற்பெண்டிர் {வேசிகள்} அந்தக் குழுவுக்குத் தகுந்த நாயகிகளாக இருந்தனர். நடிகன் பத்ரனும், அவனது குழுவினரும் தகுந்த ஆடைகளை உடுத்திக் கொண்டனர்.(60) அதன்பிறகு அந்த யாதவர்கள், பெருந்தேர்வீரனான பிரத்யும்னனால் செலுத்தப்பட்ட தேர்களில் {விமானத்தில்} ஏறிக்கொண்டு பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களின் பணியைச் செய்வதற்காகப் புறப்பட்டுச் சென்றனர்.(61) ஓ! மன்னா, ஆண்களாக இருந்தாலும் அவர்கள் ஆண்களாகவும், தேவையின் அடிப்படையில் பெண்களாகவும் வேடந்தரித்துச் சென்றனர்.(62) பிறகு அவர்கள் அசுரர்களின் வசிப்பிடமான வஜ்ரத்தின் துணை நகரான ஸுபுரத்தை அடைந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(63)
விஷ்ணு பர்வம் பகுதி – 149 – 093ல் உள்ள சுலோகங்கள் : 63
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |