Friday 4 December 2020

நடிகர்களாக வஜ்ரபுரத்தை அடைந்த யாதவர்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 150 – 94

(வஜ்ரநாபபுரே ப்ரத்யும்னப்ரவேஷம்)

The Yadavas arrive at the city of Asuras as actors | Vishnu-Parva-Chapter-150-094 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நடிகர்களின் திறமைக்கேற்ற பாராட்டும், பரிசும்; பிரத்யும்னன் குறித்துப் பிரபாவதியிடம் கூறிய சுசீமுகீ; மலர்மாலையில் மறைந்து வண்டாக வந்த பிரத்யும்னன்; பிரபாவதியின் சந்திரோபாலம்பணம்...


Ramayana play in front of Vajranabha by Pradyumna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பின்னர் மன்னன் வஜ்ரநாபன் நகரங்களில் வாழும் அசுரர்களிடம், "அவர்களுக்கு {நடிகர்களுக்கு} மிகச் சிறந்த அறைகளைக் கொடுங்கள்.(1) அவர்களை விருந்தினர்களாக நடத்தி, மக்களுக்கு விருப்பமான பல்வேறு ரத்தினங்களையும், பல்வேறு ஆடைகளையும் அவர்களுக்குக் கொடுங்கள்" என்று ஆணையிட்டான்.(2)

அவர்களும், தங்கள் தலைவனின் ஆணையை ஏற்று இவை அனைத்தையும் செய்தனர். ஏற்கனவே நாம் கேள்விப்பட்ட அந்த நடிகனும் {பத்ரன்} அங்கே வந்து அவர்களின் ஆவலை அதிகரித்தான்.(3) அவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கூடியவர்களாக ரத்தினங்களைக் கொடையாக அளித்து அந்த நடிகனை வரவேற்றனர்.(4) அதன் பிறகு வரம்பெற்ற நடிகன், ஸுபுர நகரக் குடிமக்களைத் தன் நடனத்தின் மூலம் பெரும் மகிழ்ச்சியடையச் செய்தான்.(5)

ராட்சசர்களின் மன்னனை (ராவணனை) அழிப்பதற்காக ஒப்பற்ற விஷ்ணுவின் பிறப்பு உள்ளிட்ட பெருங்காவியமான ராமாயணத்தை நிகழ்த்திக் காண்பித்தனர்.(6) சாந்தைக்காக லோமபாதரும், தசரதனும் முனிவர் ரிஷ்யங்கரிடம் எவ்வாறு வேசிகளை அழைத்து வந்தனர் என்பது நடித்துக் காட்டப்பட்டது.(7) அந்த நிகழ்ச்சியில் ராமன், லக்ஷ்மணன், சத்ருக்னன், பரதன், ரிஷ்யசிருங்கர், சாந்தை ஆகிய பாத்திரங்களை அதே தோற்றத்தில் கண்டதாகத் தானவ முதியோர் மீண்டும் மீண்டும் சொல்லி வியக்கும் வண்ணம் அந்த நடிகர்கள் நடித்துக் காட்டினர்.(8,9) அவர்களது உடைகள், நடிப்பு, நுழைவு, அறிமுகம் ஆகியவற்றைக் கண்ட தானவர்கள் ஆச்சரியத்தில் நிறைந்தனர்.(10) அந்த நிகழ்ச்சியின் குறிப்பிட்ட பகுதிகளில் அசுரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து மீண்டும் மீண்டும் எழுந்து தங்கள் பாராட்டைத் தெரிவித்து,(11) பொன், வைடூரியங்களாலான அழகிய ஆரங்களையும் {மாலைகளையும்}, கங்கணங்களையும், துணிமணிகளையும் கொடைளித்தனர்.(12) அந்த நடிகர்கள் தங்கள் ஊதியத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு அசுரர்களின் குடும்பம் {முன்னோர்கள்}, பிறப்புக்கு {கோத்ரத்துக்கு} ஏற்பத் தனி ஸ்லோகங்களுடன் அவர்களைத் துதித்தனர்.(13)

ஓ! மன்னா, அதன் பிறகு சார்பு நகரங்களில் {கிளை நகரங்களில்} வசிப்போர் அந்த அழகிய நடிகர்களின் வரவை வஜ்ரநாபனுக்கு அறிவித்தனர்.(14) ஓ! பாரதா, தைத்தியர்களின் மன்னன் இதை முன்பே கேள்விப்பட்டிருந்தான். இதனால் மகிழ்ச்சியடைந்த அவன் அந்த நடிகனை அழைத்து வர தூதனை அனுப்பினான்.(15) தானவ மன்னனின் ஆணையின் பேரில் கிளை நகரங்களில் வாழும் தைத்தியர்கள், நடிகர்களின் வேடத்தில் இருந்த யாதவர்களை அழகிய வஜ்ரபுரத்திற்கு அழைத்துச் சென்றனர்.(16) அவர்கள் தங்குவதற்குத் தேவ தச்சனால் கட்டப்பட்ட அழகிய வீடு ஒன்று அளிக்கப்பட்டது, நூற்றுக்கணக்கான அவசியப் பொருட்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.(17) அதன் பிறகு அந்தப் பேரசுரன் வஜ்ரநாபன் ஓர் அழகிய பந்தலை அமைத்து அந்த நடிகர்களுடன் சேர்ந்து ஒரு பெரும் விழாவை நடத்தினான்.(18) அவர்களுக்குக் களைப்பு நீங்கியதும், பெருஞ்சக்திவாய்ந்த வஜ்ரநாபன் ஏராளமான ரத்தினங்களை அவர்களுக்குக் கொடுத்து நாடகத்தைத் தொடங்குமாறு அவர்களை வேண்டினான்.(19) ஓ! மன்னா, அந்தப் பேரசுரன், அனைத்தையும் பார்க்கக்கூடிய இடத்தில் திரைக்குப் பின்னால் தன் குடும்பப் பெண்களை அமர்த்திவிட்டுத் தன் உற்றார் உறவினர்களுடன் வந்து அமர்ந்து கொண்டான்.(20)

பயங்கரச் செயல்களைச் செய்பவர்களான பைமர்கள், நடிகர்களாகத் தங்களுக்குத் தாங்கே உடுத்திக் கொண்டும், இசைநாடகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டும் அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்தனர்.(21) முதலில் அவர்கள் கானம் {ஜாலர்தாளம்}, வேணு {சுசீரம் / புல்லாங்குழல்}, முரஜம் {முரசுகள் / மிருதங்கங்கள்}, ஆனகம் {துந்துபி} முதலிய இசைக்கருவிகளிலும், தந்திக் கருவிகளிலும் {வீணையிலும்} பல்வேறு ராகங்களை இசைத்தனர்,(22) பிறகு, பைமர்களால் அழைத்து வரப்பட்ட பெண்கள், மனத்திற்கும், காதுக்கும் இனிமையைத் தரும் சாலிக்ய காந்தர்வப் பாடலைப் பாடினார்கள்.(23) ஏழு ஸ்வரங்களுடன் கூடிய காந்தாரத்தையும், பிறவற்றையும், வசந்தம் ராகத்துடனும், பிற ராகங்களுடனும் கூடிய மூன்று கிராமங்களையும் பயன்படுத்திக் கங்கையின் புனிதநிலையில் இறங்கி வந்ததைச் சொல்லும் பாடலை இனிமையாகப் பாடினர்[1].(24) அசுரர்கள், நேரமும் {லயமும்}, ராகமும் {தாளமும்} அமைந்ததும், கங்கை இறங்கி வந்ததைச் சொல்வதுமான அந்த இனிய பாடலைக் கேட்டு மீண்டு மீண்டும் எழுந்து நடிகரங்களை மகிழ்ச்சியிலாழ்த்தினர்.(25)

[1] சித்திரசாலை பதிப்பில், "(ஷட்ஜம், மத்யமம், காந்தாரம் முதலிய) கிராம ராங்கங்களை விரிவாக்கி கங்கை இறங்கி வந்ததைச் சொல்லும் (கங்காவதரணம்) பாடலை ஆஸாரித்துடனும், இனிய ஒலிகளுடன் கூடிய பல்வேறு ராகங்களில் அழகாகப் பாடினர்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "காந்தாரம் எனும் ராகத் தொகுதியையும், கங்காவதரணம் எனும் விசேஷ ராகத்தையும் இனிய ஆஸாரிதம், வித்தம் எனும் ராகங்களையும் ஸுஸ்வரத்துடன் பாடினர்" என்றிருக்கிறது.

நடிகனாக வேடந்தரித்திருந்த பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னனும், கதனும், சாம்பனும் ஏதோவொரு காரியத்திற்காக நந்தியை[2] இசைத்தனர்.(26) அந்த முன்னுரை முடிந்த பின்னர் ருக்மிணியின் மகன், கங்கை இறங்கி வந்ததைக் குறித்துச் சொல்லும் பாடலை அழகிய அசைவுகளுடன் பாடினான்.(27) அதன்பிறகு, ரம்பாபிசாரம்[3] எனும் கௌபேர நாடகத்தை அவர்கள் நடிக்கத் தொடங்கினர். ராவணன் வேடத்தில் சூரனும், ரம்பையின் வேடத்தில் மநோவதியும்,(28) நளகூபரனின் வேடத்தில் பிரத்யும்னனும், அவனது விதூஷகனாக[4] சாம்பனும் நடித்தனர். யாதவர்கள் தங்கள் மாய சக்திகளால் கைலாசத்தின் காட்சியை அங்கே காட்டினர்[5].(26-29) அவர்கள், கோபங்கொண்ட நளகூபரனால் தீய ராவணன் எவ்வாறு சபிக்கப்பட்டான், ரம்பை எவ்வாறு தேற்றப்பட்டாள் என்பதை நடித்துக் காட்டினர்.(30)

[2] "இஃது ஓர் அறச்சடங்கின் தொடக்கத்திலோ, ஒரு நாடகத்தின் தொடக்கத்திலோ ஆசி கூறும் வகையில் மன்னனைத் துதிப்பது அல்லது ஒரு தேவனைப் புகழ்வதாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "ரம்பை தன் காதலனைத் தேடி செல்லும் கதையைச் சொல்லும் நாடகம் இஃது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] "அரச சபைகளில் இருக்கும் நகைச்சுவை நடிகன் இப்படி அழைக்கப்படுவான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[5] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "ராவணன், ரம்பை, நளகூபரன் உள்ளிட்ட ஆக்யானம், மஹாபாரதத்தின் ராமோபாக்யானப்பகுதியில் வருகிறது. இந்த முழு நிகழ்வு ராமாயணத்தின் உத்தரக் காண்டம் அத்தியாயம் 26ல் விளக்கப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.

வீர யாதவர்களால் நடிக்கப்பட்ட உயரான்ம நாரதரின் மகிமையைச் சொல்லும் இந்த நாடகப்பகுதி நிறைவடைந்ததும், பெருஞ்சக்திவாய்ந்த பைமர்களின் ஆடல்களில் தானவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.(31,32) அவர்கள் விலைமதிப்புமிக்க ஆடைகள், ஆபரணங்கள், வைடூரியம் பதிக்கப்பட்ட பதக்கங்களைக் கொண்ட ஆரங்கள்,(33) அழகிய விமானங்கள், வானுலாவும் தேர்கள், {தேவலோக யானைகளின் குலத்தில் பிறந்த} ஆகாயத்தில் செல்லக்கூடிய யானைகள்,(34) தெய்வீகமான குளிர்ந்த சந்தனம், நறுமணமிக்க அகில், இன்னும் பிற நறுமணப் பொருட்கள்,(35) நினைத்தவுடன் விருப்பங்கள் அனைத்தையும் தரவல்ல மதிப்புமிக்கச் சிந்தாமணி ரத்தினங்கள் ஆகியவற்றை அவர்களுக்குக் கொடையளித்தனர்.(36) தானவர்கள் இவ்வழியில் ஒவ்வொரு காட்சிக்கும் கொடையளித்துத் தங்கள் வளங்களையும், ரத்தினங்களையும் இழந்தனர். தானவத் தலைவர்களின் பெண்களும் இதே விதியைப் பகிர்ந்து கொண்டனர்.(37)

மறுபுறம், பிரபாவதியின் தோழியான சுசீமுகி, அவளிடம், "ஓ! அழகியே, பைமர்களால் பாதுகாக்கப்படும் அழகிய துவாரகை நகரத்திற்கு நான் சென்றிருந்தேன்.(38) ஓ! இனிய புன்னகையையும், அழகிய கண்களையும் கொண்டவளே, அங்கே நான் பிரத்யும்னனைக் கமுக்கமாகச் சந்தித்து, உன் காதலை {பக்தியை} அவனிடம் தெரிவித்தேன்.(39) ஓ! தாமரை போன்ற கண்களைக் கொண்டவளே, இதில் மகிழ்ச்சியடைந்த அவன் உன்னைச் சந்திக்க இந்த மாலை வேளையை நிச்சயித்திருக்கிறான்.(40) ஓ! அழகிய இடையைக் கொண்டவளே, பைமர்கள் ஒரு பொய்யையும் ஒருபோதும் பேசுவதில்லை; உண்மையில் இன்றே நீ உன் காதலனைச் சந்திப்பாய்" என்றாள்.(41)

இதைக் கேட்ட பிரபாவதி, மகிழ்ச்சியில் நிறைந்தவளாக அந்த அன்னத்திடம், "ஓ! அழகிய பெண்ணே, இன்று என் அறையில் காத்திருந்து இங்கேயே உறங்குவாயாக.(42) நீ என்னுடன் இருந்தால் எவருக்கும் நான் அஞ்சமாட்டேன். உன்னுடன் சேர்ந்தே நான் கேசவரின் மகனைக் காண விரும்புகிறேன்" என்றாள்.(43)

அந்த அன்னமும், தாமரைக் கண்களைக் கொண்டவளும், தன் தோழியுமான பிரபாவதியிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்றது. அதன்பிறகு பிரபாவதி தன் அறைக்குச் சென்றாள்.(44) அதன்பிறகு, தேவதச்சனால் கட்டப்பட்ட அந்த வீட்டின் மேல் மாடியில், பிரத்யும்னனின் வரவுக்கான ஏற்பாடுகளைப் பிரபாவதி செய்யத் தொடங்கினாள்.(45) அந்த ஏற்பாடுகள் முடிந்ததும் பிரபாவதியின் அனுமதியுடன் காமனை {பிரத்யும்னனை} அழைத்து வருவதற்காக அந்த அன்னமானவள் காற்றைப் போன்ற வேகத்துடன் சென்றாள்.(46)

இனிய புன்னகையைக் கொண்ட அவள் {அந்த அன்னம்}, நடிகனின் வேடத்தில் வாழ்ந்து வந்த காமனிடம் {பிரத்யும்னனிடம்} சென்று , "இன்றிரவில் நீ அவளைச் சந்திப்பாய்" என்றாள்.(47)

பிறகு வேகமாகப் பிரபாவதியிடம் திரும்பிச் சென்று அவள், "ஓ! அகன்ற விழிகளைக் கொண்டவளே, உன்னைத் தேற்றிக் கொள்வாயாக; ருக்மிணியின் மகன் வரப் போகிறான்" என்றாள்.(48)

அப்போது, தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனும், பகைவரைக் கொல்பவனுமான பிரத்யும்னன், வண்டுகள் நிறைந்த நறுமணமிக்க மலர்மாலை பிரபாவதிக்காகக் கொண்டு செல்லப்படுவதைக் கண்டு, ஒரு வண்டின் வடிவை ஏற்று அதில் {அந்த மாலையில்} அமர்ந்து கொண்டான்.(49,50) கருவண்டுகள் நிறைந்த அந்த மாலையானது, பணிப்பெண்களால் அந்தப்புரத்திற்குப் பிரபாவதியிடம் கொண்டு செல்லப்பட்டது.(51) அந்த மாலையானது பிரபாவதியின் அருகிலேயே வைக்கப்பட்டிருந்தது. ஓ! மென்மையான மன்னா, மெதுவாக மாலை வேளை வந்ததும், மற்ற வண்டுகள் பறந்து சென்று விட்டன.(52) பைமத் தலைவனான அந்த வீரன் {பிரத்யும்னன்} தன்னைப் பின்தொடர எவரும் இல்லாதவனாகப் பிரபாவதியின் காதை அலங்கரித்திருந்த மலரில் மெதுவாக அமர்ந்தான்.(53)

புத்திசாலித்தனமாகப் பேசுபவளான பிரபாவதி, அப்போது அழகிய முழு நிலவு எழுவதைக் கண்டு, அந்த அன்னத்திடம் {சுசீமுகியிடம்},(54) "ஓ! தோழி, என் அங்கங்கள் எரிகின்றன, என் வாய் உலர்ந்து போகிறது, என் முகம் வாடுகிறது, என் இதயம் ஆவலால் நிறைந்திருக்கிறது. இந்நோயின் பெயரென்ன?(55) புதிதாயெழும் முழு நிலவின் குளிர்ந்த கதிர்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றன. எனக்கு விருப்பமில்லாததைப் போல இன்னும் எனக்குள் கவலையை உண்டாக்குகிறது.(56) ஓ! பெண்களின் இயல்புக்கு ஐயோ {சீ, சீ என்ன இந்தப் பெண்களின் இயல்பு} அவரை நான் கண்டதில்லை. அவரைக் குறித்துக் கேள்விப்பட்டதிலேயே நான் அவரை விரும்புகிறேன். இருப்பினும் என் அங்கங்கள் எரிகின்றன.(57) என் காதலர் இன்னும் வராததால் இவ்வாறு சொல்கிறேன். {என் காதலர் வராத ஏக்கத்தில் என் அங்கங்கள் எரிகின்றன}. அவர் வராமல் இருந்தால் {இளமையில் மரணமடைந்த} குமுதவதியின் விதியையே நானும் அடைவேன். ஐயோ, நான் தற்கட்டுப்பாட்டைக் கொண்டவளாக இருந்தாலும் காமனெனும் பாம்பால் கடிக்கப்பட்டேன்.(58) நிலவின் கதிர்கள் இயல்பில் குளுமையானவை, இனிமையானவை, எழில் மிக்கவை. ஆனால், அவை என் உடலைச் சுடுகின்றன.(59) பல்வேறு மலர்களின் மணங்களைச் சுமந்து வரும் தென்றல் இயல்பில் குளிர்ந்ததாக இருப்பினும் காட்டுத் தீயைப் போல என் அழகிய உடலைச் சுடுகின்றது.(60) நான் பொறுமையாக இருக்க நினைத்தாலும் பலவீனமான என் மனம் அந்த உறுதியைக் கலைத்து அவ்வாறான நிலையை அடைய அனுமதிக்க மறுக்கிறது.(61) என் இதயம் நடுங்குகிறது, மீண்டும் மீண்டும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் மனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்து, மதியிழந்தவளாகச் சாகப் போகிறேன்" என்றாள் {பிரபாவதி}".(62)

விஷ்ணு பர்வம் பகுதி – 150 – 094ல் உள்ள சுலோகங்கள் : 62
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்