Wednesday, 9 December 2020

பிரத்யும்னன் பிரபாவதி திருமணம் | விஷ்ணு பர்வம் பகுதி – 151 – 95

(பிரபாவதீபாணிக்ரஹணம்)

Pradyumna appears before Prabhavati and marries her | Vishnu-Parva-Chapter-150-095 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரபாவதியை காந்தர்வ மணம்புரிந்த பிரத்யும்னன்; வஜ்ரநாபனின் தம்பி சுநாபனின் மகள்களான சந்திரவதி கதனையும், குணவதி சாம்பனையும் மணந்தது...


Pradyumna weds Prabhavati in Gandharva form of marriage

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு, கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னன், "இந்தக் கன்னிகை முற்றிலும் என்னால் பீடிக்கப்பட்டிருக்கிறாள்" என்று நினைத்து அங்கிருந்த அன்னத்திடம் மகிழ்ச்சியாக,(1) "மாலையுடன் இருக்கும் {ஆறு பாதங்களுடன் கூடிய} வண்டுகள் பிறவற்றுடன் சேர்ந்து நானும் ஒரு வண்டின் வேடத்தில் இங்கே இருக்கிறேனெனத் தைத்தியனின் மகளிடம் சொல்வாயாக.(2) இப்போது நான் அவள் வசத்தில் இருக்கிறேன். அவள் விரும்பியவாறு என்னுடன் இருக்கலாம்" என்றான்[1]. ரதியின் கணவனான அவன் {காமனான பிரத்யும்னன்} இதைச் சொல்லிவிட்டு தன் சொந்த வடிவில் அங்கே தோன்றினான்.(3) அந்த நேரத்தில் அந்த வீடு நுண்ணறிவுமிக்க மதனனின் {மன்மதனான பிரத்யும்னனின்} மேனியொளியால் ஒளியூட்டப்பட்டிருந்தது. சந்திரனின் எழில்மிகு கதிர்கள் வெட்கமடைந்தன.(4) பர்வ நாள் ஒன்றில் {பௌர்ணமியில்} நீர்நிலைகளின் தலைவன் (பெருங்கடல்) இரவின் தலைவனுடன் (சந்திரனுடன்) எழுவதைப் போலப் பிரபாவதியின் காதல் கடல் அந்தக் காமனைக் கண்டதும் பெருகிற்று.(5)

[1] சித்திரசாலை பதிப்பில், "அவள் விரும்பியவாறு என்னிடம் பேசலாம்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "என்னிடம் இஷ்டப்படியிருக்கலாம்" என்றிருக்கிறது.

தாமரைகளைப் போன்ற கண்களைக் கொண்ட பிரபாவதி, வெட்கத்துடன் சற்றே கண்களைத் திருப்பி {கடைக்கண்ணால் அவனைக் கண்டு}, தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.(6) இதைக் கண்ட பிரத்யும்னன், அழகியும், எழில்மிக்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளுமான மெல்லியள் பிரபாவதியின் முகத்தைத் தன் கைகளில் தாங்கினான். மயிர் சிலர்த்த மேனியுடன் கூடிய அவன்,(7) "நூறுமுறை விரும்பியதை அடைந்த பிறகும், முழு மதிக்கு ஒப்பான உன் முகம் ஏன் கீழ் நோக்கியிருக்கிறது? ஏன் என்னுடன் பேசாதிருக்கிறாய்?(8) ஓ! அழகிய முகத்தாளே, உன் முகத்தின் ஒளியை மறைக்காதே. அச்சத்தைக் கைவிட்டு உன் பணியாளான என்னை ஆதரிப்பாயாக.(9) ஓ! அச்சம் கொண்டவளே, நேரம் அதிகமில்லை. நான் திரும்பிச் செல்லும் வேளை வந்துவிட்டது. உன் அச்சத்தை விலக்குமாறு நான் கை கூப்பி வேண்டுகிறேன்.(10) அழகிலும், மெய்ப்பற்றிலும் ஒப்பற்றவளான நீ காலத்திற்கும், இடத்திற்கும் இணக்கமான காந்தர்வத் திருமணத்தின் மூலம் என்னை ஆதரிப்பாயாக" என்றான் {பிரத்யும்னன்}.(11)

பைம {பீம குல} வீரனான பிரத்யும்னன் அப்போது (தன் மேனியில் அணிந்திருந்த) ரத்தினத்தில் இருக்கும் நெருப்பைத் தீண்டி, மந்திரங்களைச் சொல்லி, மலர்களுடன் ஹோமச் சடங்கைச் செய்தான்.(12) பிறகு, மிகச் சிறந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரபாவதியின் கரங்களைப் பற்றிக் கொண்டு அந்த ரத்தினத்தில் இருந்த நெருப்பை வலம் வந்தான்.(13) ஓ! மன்னா, அந்த நேரத்தில் ஒளியின் தெய்வீகத் தலைவனும், அறதிற்கும், பாவத்திற்கும் சான்றாக இருப்பவனுமான ஹுதாசனன் {அக்னி தேவன்}, அச்யுதனின் மகனுடைய மதிப்பைத் தக்க வைப்பதற்காகச் சுடர்விட்டெரிந்தான்.(14)

அப்போது யதுவின் வழித்தோன்றலான அந்த வீரன் {பிரத்யும்னன், பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டிய} தக்ஷிணை (பணக்கொடை) குறித்துத் தன் மனத்தில் தீர்மானித்தவனாக அன்னத்திடம் {சுசீமுகியிடம்} "ஓ! பறவையே, வாயிலில் நின்று எங்களைக் காப்பாயாக" என்றான்.(15) அதைக் கேட்ட அன்னம் அவனை வணங்கிவிட்டுச் சென்றது.

{காமன் (பிரத்யும்னன்), அந்த எழில்விழியாளின் வலக்கையைப் பிடித்துக் கொண்டு மிகச் சிறந்த பள்ளியறைக்கு அழைத்துச் சென்றான்.(16) அதன் பிறகு அவளைத் தன் தொடையில் அமரச் செய்து மீண்டும் மீண்டும் தேற்றினான். மெதுவாகக் கழுத்தை முகர்ந்தபடியே அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.(17) தாமரை மலரில் தேன் பருகும் வண்டைப் போல அவளது முகத்தைப் பருகினான். காமத்தில் திறன்மிக்கவனான அவன் (பிரத்யும்னன்), அழகிய கூந்தலுடன் கூடிய அந்தப் பெண்ணை (பிரபாவதியை) மெதுவாகத் தழுவினான்.(18) பின்னர் அவன் இரவில் அவளைச் சலிப்பின்றி இன்புறச் செய்தான். காமத்தில் திறன்மிக்கவனான அந்தப் பிரத்யும்னன் மெதுவாகச் செயல்பட்டான்.(19) கிருஷ்ணனின் மகனான அந்தத் தலைவன் {பிரத்யும்னன்} அங்கேயே தங்கி அவளுடன் இன்புற்றிருந்தான். சூரியன் எழும் நேரத்தில் (அதிகாலையில்) நடிகர்களின் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றான்}[2].(20) பிரபாவதி தயக்கம் காட்டினாலும் அவனுக்கு விடை கொடுத்தனுப்பினாள், அவனும் தன காதலியின் அழகை மனத்தில் நினைத்தபடியே சென்றான்.(21)

[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் 16 முதல் 20ம் ஸ்லோகம் வரையுள்ள செய்திகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அவை சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ப்ரத்யும்னன் வலக் கையால் ப்ரபாவதியைப் பிடித்து உத்தம சயனத்துக்கு அழைத்துச் சென்றான். ப்ரத்யும்னன் இவளைத் தொடையில் உட்கார வைத்துத் திரும்பத் திரும்பச் சாந்தப்படுத்தித் தன் முகக் காற்றால் மணம் பெறச் செய்து மெதுவாகக் கன்னத்தில் முத்தமிட்டான். பிறகு வண்டு போல் ப்ரபாவதியின் முகப் பத்மத்தைப் பானம் செய்தான். இன்ப ஸமர்த்தனான ப்ரத்யும்னன் முறைப்படி அழகிய பின்பாகமுடைய ப்ரபாவதியை அணைத்துக் கொண்டான். க்ருஷ்ணன் மகன் இன்பச் செயலில் வல்லவன். ப்ரபு ப்ரத்யும்னன் ரஹஸ்யத்தில் ப்ரபாவதியுடன் ரமித்தான். அவளுக்கு ப்ரியமில்லாத கார்யம் செய்யவில்லை. அவன் ப்ரபாவதியுடன் ரமித்து வஸித்தான். அருணோதயக் காலத்தில் ப்ரத்யும்னன் நடிகர்களிருக்குமிடம் அடைந்தான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "அதன்பிறகு அவன் மொத்த இரவையும் அங்கேயே கழித்துவிட்டு, அதிகாலையில் அரங்கத்திற்குச் சென்றான்" என்று மட்டுமே இருக்கிறது.

பெரும்பணிகளைச் செய்யவல்ல பைமர்கள், இவ்வாறே இந்திரன், கிருஷ்ணன் ஆகியோரின் ஆணைக்காகக் காத்திருந்து, நடிகர்களின் வேடத்தில் அங்கே வாழ்ந்து வந்தனர்.(22) அந்த உயரான்மாக்கள், வஜ்ரநாபன் மூவுலகங்களையும் வெல்வதற்காகப் புறப்படும் வரை ரகசியத்தை வெளியிடாமல் அங்கே காத்திருந்தனர்.(23) கசியபர் வேள்வி செய்து கொண்டிருந்த வரை அந்த உயரான்மாக்களுக்கும், அறம்சார்ந்த தேவர்களுக்கும், மூவுலகங்களையும் வெல்லக் காத்திருந்த அசுரர்களுக்கும் இடையில் எந்தச் சச்சரவும் நேரவில்லை.(24) நுண்ணறிவுமிக்க யாதவர்கள் உரிய காலத்திற்காக இவ்வாறு காத்திருந்தபோது, அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கவல்ல மழைக்காலம் அங்கே தோன்றியது.(25)

மனம் போன்ற வேகம் கொண்டவையான {தார்தராஷ்டிர} அன்னங்கள், பெருஞ்சக்தி வாய்ந்த இளவரசர்களின் செய்திகளைச் சக்ரனுக்கும், கேசவனுக்கும் தினமும் கொண்டு சென்றன.(26) பெருஞ்சக்தி வாய்ந்த பிரத்யும்னன், இவ்வாறு அந்தத் தார்தராஷ்டிரங்களின் காவலுடன் அழகிய பிரபாவதியுடன் ஒவ்வோரிரவையும் கழித்தான்.(27) வாசவனின் ஆணையின் பேரில் வஜ்ர நகரத்தில் உள்ள அன்னங்களாலும், நடிகர்களாலும் தாங்கள் சூழப்பட்டிருப்பதைக் காலத்தால் பீடிக்கப்பட்ட அசுரர்களால் உணர முடியவில்லை.(28) ருக்மிணியின் வீரமகன், அன்னங்களின் பாதுகாப்புடன் மெல்ல மெல்ல பகல் பொழுதையும் பிரபாவதியின் வீட்டில் கழிக்கத் தொடங்கினான்.(29) ஓ! குருவின் வழிதோன்றலே, அவன் தன் உடலின் ஓர் அம்சம் மேடையில் தோன்றுமாறும், மறு அம்சம் பிரபாவதியுடன் வாழுமாறும் தன் மாய சக்திகளைப் பயன்படுத்தினான்.(30) உயரான்ம யாதவர்களின் செழிப்பு, பணிவு, குணம், விளையாட்டுத் தனம், புத்திசாலித்தனம், எளிமை, கல்வித் திறன் ஆகியவற்றைக் கண்டு அசுரர்கள் பொறாமை அடைந்தனர்.(31) யாதவப் பெண்களின் அழகு, வசதி, நறுமணம், தூய சொற்கள், தூய ஒழுக்கம் ஆகியவற்றைக் கண்டு அசுரப் பெண்கள் பொறாமை அடைந்தனர்.(32)

ஓ! மன்னா, வஜ்ரநாபனின் சிறப்புமிக்கத் தம்பியான சுநாபன் என்பவனுக்கு, அழகுமிக்கவர்களும், குணம் நிறைந்தவர்களுமான மகள்கள் இருவர் இருந்தனர்.(33) அவர்களில் ஒருத்தி சந்திரவதி என்ற பெயரையும், மற்றொருத்தி குணவதி என்ற பெயரையும் கொண்டிருந்தனர். அவர்கள் தினமும் பிரபாவதியின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.(34) ஒரு நாள் பிரபாவதி தன் வீட்டில் காதலில் ஈடுபடுவதைக் கண்டு, தங்கள் மீது அவள் வைத்திருக்கும் அன்பில் நம்பிக்கையால் அது குறித்து அவர்கள் அவளிடம் கேட்டனர்.(35)

அவள் {பிரபாவதி}, "விரும்பிய கணவனை வசப்படுத்தி விரைவில் கொண்டு வரச் செய்வதும், செழிப்பைத் தருவதுமான ஒரு வித்தை என்னிடம் இருக்கிறது.(36) தானவனாகவோ, தேவனாகவோ இருந்தாலும் நினைக்கப்பட்ட உடனே அவன் தன் வசத்தை இழந்து வந்து விடும் அளவுக்கு அஃது {அந்த வித்தை} அற்புத சக்தியைக் கொண்டது. அந்த வித்தையின் சக்தி மூலம் நான் ஒரு தேவனின் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.(37) என் சக்தியின் மூலம் எனக்கு மிகப் பிடித்தமானவராகிவிட்ட இந்தப் பிரத்யும்னரைப் பார்" என்றாள். அழகும், இளமையும் கொண்ட அவனைக் கண்டதும் அவர்கள் ஆச்சரியத்தில் நிறைந்தனர்.(38)

அந்த அழகிய பிரபாவதி, அருள்நிறைந்தவளாகச் சிரித்துக் கொண்டே அந்தக் காலத்துக்குத் தகுந்த இந்தச் சொற்களைத் தன் தங்கையருக்குச் சொல்லும் வகையில்,(39) "தேவர்கள் எப்போதும் அறச் செயல்களிலும், தவங்களிலும் ஈடுபடுபவர்களாகவும், வாய்மை நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். மறுபுறம், பேரசுரர்கள் செருக்கு நிறைந்தவர்களாகவும், இன்பங்களை விரும்புகிறவர்களாகவும், பொய்மை நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(39,40) அறம், தவம், வாய்மை ஆகியவை ஆட்சி செய்யும் இடத்திலேயே வெற்றியும் இருக்கிறது என்பதால் தேவர்கள் மேன்மையானவர்களாக இருக்கிறார்கள்.(41) இந்த வித்தையை நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்; நீங்களும் இரு தெய்வீக இளைஞர்களை உங்களுக்கு வரப்போகும் கணவர்களாகத் தேர்ந்தெடுக்கலாம். என் சக்தியின் மூலம் நீங்கள் அவர்களை விரைவில் அடையலாம்" என்றாள்.(42)

இதைக் கேட்ட அந்தச் சகோதரிகள் இருவரும், அழகிய கண்களைக் கொண்ட பிரபாவதியிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்றனர். அதன்பேரில் வஜ்ரநாபனின் மதிப்புமிக்க மகள் {பிரபாவதி}, பிரத்யும்னனிடம் இது குறித்துக் கேட்ட போது,(43) அழகர்களும், குணவான்களும், துணிவுமிக்கவர்களுமான தன் சிற்றப்பன் கதன், வீர சாம்பன் ஆகிய இருவரின் பெயர்களையும் அவன் குறிப்பிட்டான்.(44)

பிரபாவதி {தன் தங்கையரிடம்}, "முன்பு என்னிடம் நிறைவு கொண்ட துர்வாசர் இந்த வித்தையை எனக்கு அளித்தார்; இது நல்லூழையும், எப்போதும் கன்னிகையாக இருக்கும் தன்மையையும் கொடுக்கிறது.(45) அந்தப் பெரும் முனிவர், "தேவர்கள், தானவர்கள், யக்ஷர்கள் ஆகியோருக்கு மத்தியில் எவனை நீ நினைக்கிறாயோ அவன் உன் கணவனாவான்" என்றார். நான் இந்த வீரரை {பிரத்யும்னரை} விரும்பினேன்.(46) நீங்கள் இந்த வித்தையை அடைந்து, உங்கள் காதலர்களை உடனே அடைவீராக" என்றாள்.

ஓ! மன்னா, சுநாபனின் மகள்களான அந்த அழகியர் இருவரும் இதனால் மகிழ்ச்சியில் நிறைந்து, தன் சகோதரியின் வாயில் இருந்து வந்த வித்தையை ஏற்றுக் கொண்டு,(47) அதைப் பயின்றனர். பிறகு அவர்கள் கதனையும், சாம்பனையும் நினைத்தனர். வீரப் பைமர்களான அவர்கள் இருவரும் பிரத்யும்னனின் மாயையால் மறைக்கப்பட்டவர்களாக அவனுடன் அங்கே நுழைந்தனர்.(48) நல்லோரை விரும்புகிறவர்களும், பகைவரைக் கொல்பவர்களுமான அந்த வீரர்கள் இருவரும், மந்திரங்களை உரைத்து காந்தர்வ சடங்குகளின்படி அவர்களை மணந்து கொண்டனர். அவர்களில் கதன் சந்திரவதியையும், கேசவனின் மகன் சாம்பன் குணவதியையும் மணந்து கொண்டனர்.(49,50) அந்த முன்னணி யதுக்கள், இவ்வாறு சக்ரன், கேசவன் ஆகியோரின் ஆணைக்காகக் காத்திருந்த போது, அசுரப் பெண்களுடன் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(46-51)

விஷ்ணு பர்வம் பகுதி – 151 – 095ல் உள்ள சுலோகங்கள் : 51
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்