(தேவாஸுரயுத்தோத்யோக꞉ தத்யுத்தவர்ணநம் ச)
The mountains set Asuras fighting with the Gods | Bhavishya-Parva-Chapter-34 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : தேவர்களிடம் அசுரர்கள் கோபம் கொள்ளத் தூண்டிய மலைகள்; ஹிரண்யாக்ஷனின் தலைமையிலான அசுரர்கள் தேவர்களை முறியடித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பூமியை ஆதரிக்கும் {சிறகு படைத்த} மலைகள் ஒரு காலத்தில் தலைவனின் மாயைக்கு வசப்பட்டு அதை {பூமியைக்} கைவிட்டன.(1) அதன்பிறகு கிழக்குத் திசைக்கு வந்து, தடாகத்தில் மூழ்கும் யானைகளைப் போல ஹிரண்யாக்ஷனால் ஆளப்படும் அசுரர்களின் வசிப்பிடத்தில் விழுந்தன.(2)
அதன் பிறகு அவை, தேவலோகத்தின் அரசுரிமை குறித்து அசுரர்களிடம் கேட்கும் வகையில், "உங்களுக்குப் பின் பிறந்தவர்களாக இருப்பினும், தேவர்கள் அரசுரிமையை அடைந்திருக்கின்றனர்; முதலில் பிறந்தவர்களாக இருப்பினும், நீங்கள் மன்னர்களாகவில்லை" என்றன. அசுரர்கள் மிகச்சிறந்த ஆயத்தங்களைச் செய்தனர்.(3)
அவர்கள் பூமியை அடைவதில் தங்கள் மனத்தை நிலைநிறுத்தி, தங்கள் ஒப்பற்ற தீய புத்தியைப் பயன்படுத்தினர். பயங்கர ஆற்றல் படைத்த அசுரர்கள்,(4) சக்கரம், வஜ்ரம், வாள், புசுண்டி, வில், கயிறு, பராசம், சக்தி, முசலம், கதாயுதம், தண்டம் போன்ற பல்வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர்.(5) கவசம்பூண்ட சிலர் மதங்கொண்ட யானைகளைச் செலுத்தினர். பெருந்தேர்வீரர்கள் சிலர், குதிரைகளால் இழுக்கப்படும் தேர்களைச் செலுத்தினர். சிலர் குதிரைகளைச் செலுத்தினர்,(6) வேறு சிலர், தங்கள் கரங்களின் பலத்தைச் சார்ந்து ஒட்டகங்களை {காண்டமிருகங்களையும்} செலுத்தினர், சிலர் எறுமைகளையும், சிலர் கழுதைகளையும் செலுத்தினர், வேறு சிலர் காலாட்களாகச் சென்றனர்.(7) போரில் விருப்பம் கொண்ட படைவீரர்கள், ஹிரண்யாக்ஷனைச் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியாகப் புறப்பட்டுச் சென்றனர்.(8)
போருக்காகத் தைத்தியர்களால் செய்யப்படும் ஆயத்தங்களைக் கேள்விப்பட்ட புரந்தரனின் தலைமையிலான தேவர்களும் மிகச் சிறந்த ஏற்பாடுகளைச் செய்தனர்.(9) அவர்கள் {தேவர்கள்}, தங்கள் நால்வகைப் படையால் சூழப்பட்டவர்களாகக் கவசங்களும், விரலுறைகளும் தரித்துக் கொண்டு, அம்பறாதூணிகளையும், விற்களையும் எடுத்துக் கொண்டனர்.(10) படைக்கு மத்தியில் கடுமையான ஆயுதங்களைத் தரித்து நின்ற தேவர்கள், ஐராவதத்தில் அமர்ந்திருந்த புரந்தரனைப் பின்தொடர்ந்த சென்றனர்.(11)
அப்போது ஹிரண்யாக்ஷன், பேரிகைகளின் முழக்கம், எக்காள ஒலி ஆகியவற்றால் தூண்டப்பட்டுத் தேவர்களின் மன்னனுடன் {இந்திரனுடன்} போரிட்டான்.(12) அவன் கோடரிகள் {பரசுகள்}, {நிஸ்திரிம்சங்கள்}, கதாயுதங்கள், தோமரங்கள், ஷக்திகள், முஸலங்கள், பட்டிசங்கள் ஆகியவற்றால் வாசவனை மறைத்தான்.(13) {அசுரர்கள் பிறர், பெருஞ்சக்திவாய்ந்தவையும், பயங்கர வடிவங்களையும், வேகத்தையும் கொண்டவையுமான கணைகளின் மழையைப் பொழிந்தனர்}.(14) எஞ்சிய தைத்தியர்கள் கூரிய கோடரிகள், இரும்பு வாள்கள், கதாயுதங்கள், க்ஷேபணிகள், முத்கரங்கள் ஆகியவற்றையும்,(15) பெரும் கற்கள், மலைகளைப் போன்று பெரிய கற்பாறைகள், சதாக்னிகள் ஆகியவற்றையும்,(16) {இயந்திரங்களில் இருந்து ஏவப்படும்} பிற ஆயுதங்களையும் கொண்டு வாசவனையும், பிற தேவர்களையும் தாக்கினர்.(17)
புகைபோன்ற தலைமயிரையும், மஞ்சள் தாடியையும் கொண்டவனும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவனும், மாலை நேர மேகங்களைப் போன்ற கரிய நிறம் கொண்டவனும், மிகச் சிறந்த மகுடத்தையும்,(18) கருநீல ஆடைகளையும், மஞ்சள் ஆடைகளையும் தரித்தவனும், {தந்தங்களைப் போன்ற கூரிய பற்களைக் கொண்டவனும்}, கால்மூட்டுகள் வரை கைகள் நீண்டவனும், வைடூரியங்களாலான ஆபரணங்களை அணிந்தவனுமான ஹிரண்யாக்ஷன்,(19,20) அண்ட அழிவின் போது தோன்றும் பயங்கரமிக்கக் காலனைப் போல அசுரர்களின் படைக்கு முன்பு நின்று கொண்டிருப்பதைக் கண்ட வாசவனும், தேவர்கள் அனைவரும் கவலையுற்றனர்.(21)
விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, போர்க்களத்தில் தங்களுக்கு முன்னால் நிற்கும் புரந்தரனுடன் இருந்த தேவர்கள், அசைந்து வரும் மகேந்திர மலையைப் போல முன்னேறும் ஹிரண்யாக்ஷனைக் கண்டதும் கவலையால் நிறைந்தனர்.(22) {தேவர்கள் போர்க்களத்தில் ஆயிரங்கண்களைக் கொண்ட இந்திரனைத் தங்கள் முன் கொண்டிருந்தனர்}. பொற்கவசங்களின் ஒளியால் ஒளியூட்டப்பட்ட அந்தத் தைத்திய படை,(23) விண்மீன்கள் பொருந்திய கூதிர்கால வானத்தைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் ஒருவரையொருவர் வீழ்த்தினர்;(24) சிலர் துவந்தத்தில் இருந்து விலகி, தங்கள் கரங்கள் நொறுங்கி நின்றனர். சிலரின் அங்கங்கள் கதாயுதங்களால் சிதைந்திருந்தன, சிலர் கணைகளின் காயத்தை மார்பில் தாங்கியிருந்தனர்.(25) சிலர் வீழ்ந்தனர், சிலர் சுழற்றி வீசப்பட்டனர். சிலர் தேர்களை நொறுக்கினர், சிலர் அவற்றால் {தேர்களால்} நசுக்கப்பட்டனர்.(26) போரின் நெருக்கடியில் அசையமுடியாமல் சில தேர்கள் நின்றன. கெடுநாளைப் போன்றதும், தானவர்களைப் போன்ற பெரும் மேகங்களாலும், தெய்வீக ஆயுதங்களின் வடிவில் இருந்த மின்னல்களாலும் மறைக்கப்பட்டதுமான அந்தப் போர், இரு படைகளாலும் ஏவப்பட்ட கணைகளின் மழையில் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(27)
பெருஞ்சக்திவாய்ந்த திதியின் மகனும், பேரொளி படைத்தவனுமான ஹரிண்யாக்ஷன் கோபத்தால் தூண்டப்பட்டு, பர்வத்தின் போது {அமாவாசையில் / பௌர்ணமியில்} பெருகும் பெருங்கடலைப் போலத் தன்னைப் பெருக்கிக் கொண்டான்.(28) கோபத்தால் தூண்டப்பட்ட ஹிரண்யாக்ஷனின் வாயில் இருந்து எரியும் கங்குகள் வெளிப்பட்டன. புகையிலும், நெருப்பிலும் நிறைந்த காற்றுத் தேவர்களை எரித்தது.(29) ஓர் உயரமான மலை எழுந்து நிற்பதைப் போல மொத்த வானமும் ஆயுதங்களாலும், விற்களாலும், பரிகங்களாலும் மறைக்கப்பட்டது.(30) ஹிரண்யாக்ஷனின் பல்வேறு ஆயுதங்களால் போரில் தாக்கப்பட்டவர்களும், சிறகு படைத்த கணைகளால் மார்பிலும், தலைகளிலும் காயமடைந்தவர்களுமான தேவர்களால் போர்க்களத்தில் அசையவும் முடியவில்லை(31). போரில் ஹிரண்யாக்ஷனால் முறியடிக்கப்பட்ட தேவர்கள் மிகக் கவனமாக இருந்தாலும் தங்கள் நனவை இழந்தனர். இவ்வாறே தேவர்கள் அனைவரும் ஹிரண்யாக்ஷனால் அச்சுறுத்தப்பட்டனர்.(32) ஆயிரங்கண்களைக் கொண்டவனும், யானையில் அமர்ந்திருந்தவனுமான சக்ரன் {இந்திரன்}, ஹிரண்யாக்ஷனின் ஆயுதங்களால் தாக்கப்பட்டு, அச்சத்தால் போர்க்களத்தில் திரியமுடியாதவனாக இருந்தான். தேவர்கள் அனைவரையும் வென்று, அவர்களின் மன்னனை வீழ்த்திய அந்தத் தானவன், அண்டம் தன் வசப்பட்டதாக நினைத்தான்.(33,34) {மழை நிறைந்த மேகத்தைப் பழிப்பது போல் ஒலி {குரல்} கொண்டவனும், மதங்கொண்ட யானையைப் போன்ற உடல் கொண்டவனும், அகன்ற மார்பைக் கொண்டவனுமான அசுரேந்திரன் (ஹிரண்யாக்ஷன்} தன் வில்லை அசைத்துக் கொண்டிருப்பதைத் தேவர்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்}[1]" என்றார் {வைசம்பாயனர்}.(35)
[1] { } என்ற அடைப்புக்குறிக்குள் தென்படும் வாக்கியங்கள் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. அவை சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு இங்கே அளிக்கப்பட்டுள்ளன. இறுதியில் வரும் 35ம் ஸ்லோகமும் அவ்வாறே மொழிபெயர்க்கப்பட்டது.
பவிஷ்ய பர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 35
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |