(லோகாநாமாதிபத்யவ்யவஸ்தாபநம்)
Various kings are appointed by Brahma | Bhavishya-Parva-Chapter-33 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : அண்டத்தின் அரசுரிமையில் அமர்த்தப்பட்ட இந்திரன்; பல தேவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படல்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பாரதா, தலைவன் {பிரம்மன்}, சூரியனைப் போன்று பிரகாசம் கொண்ட சக்ரனை {இந்திரனை} மூவுலகங்களுக்கும், தேவர்களுக்கும் மன்னனாக நியமித்தான்.(1) வஜ்ரதாரியும், கவசம் தரித்தவனுமான ஜிஷ்ணுவை அதிதி பெற்றெடுத்தாள். நுண்ணறிவுமிக்கவனும், ஸ்மிருதிகளின் புரவலனுமான அவன் அத்வர்யுக்களால் துதிக்கப்படுகிறான்.(2) தலைவன் சக்ரன், அதிதிக்குப் பிறந்ததும் குசப்புல்லால் மறைக்கப்பட்டான் என்பதால் அந்தத் தேவர்களின் மன்னன் கௌசிகன் என்ற பெயரையும் பெற்றான்.(3) பிரம்மன், ஆயிரங்கண் புரந்தரனை மேலான தலைவனாக நியமித்துவிட்டுப் பிற அரசுகளைப் படிப்படியாகப் பகிர்ந்தளித்தான்.(4)
அவன் {பிரம்மன்} சோமனை {சந்திரனை}, யஜ்ஞங்கள், தவம், நட்சத்திரங்கள், கோள்கள், இருபிறப்பாளர்கள், மூலிகைகள் ஆகியவற்றுக்கு மன்னனாக நிறுவினான்.(5) அவன் தக்ஷனைக் குடிமுதல்வர்களின் {பிரஜாபதிகளின்} மன்னனாகவும், வருணனை நீர்நிலைகளின் தலைவனாகவும், அனைத்தையும் அழிப்பவனான வைஷ்வாநரனை பித்ருக்களின் மன்னனாகவும்,(6) வாயுவை மணம், உடலற்ற உயிரினங்கள், ஒலி, ஆகாயம் ஆகியவற்றுக்குத் தலைவனாகவும் நியமித்தான்.(7)
பூதங்கள், பிசாசங்கள், மிருத்யு, பசுக்கள், பேரிடர்கள் {உத்பாதங்கள்}, தீய சகுனங்கள் {கிரஹரோகணங்கள்}, நோய்கள் {வியாதி}, ஏராளமான மழை,(8) பிற இடர்கள், தீய ஆவிகள் ஆகியவற்றின் அரசுரிமையை மஹாதேவனிடம் கொடுத்தான். யக்ஷர்கள், ராட்சசர்கள், குஹ்யர்கள், செல்வகள்,(9) ரத்தினங்கள், செல்வம் ஆகியவற்றின் மன்னனாக அவன் வைஷ்ரவணனை {குபேரனை} நியமித்தான். பற்களைக் கொண்ட விலங்குகள் அனைத்திற்கும் அவன் சேஷனை மன்னனாக நியமித்தான், வாசுகியை நாகர்களுக்கும்,(10) தக்ஷகனை பாம்புகளுக்கும் மன்னர்களாக நியமித்தான். அவன், ஆதித்யர்களில் இளையவனான பர்ஜன்யனை பெருங்கடல்கள், ஆறுகள், மேகங்கள், மழை ஆகியவற்றுக்குத் தலைவனாக நிறுவினான்[1].(11) அவன் சித்திரரதனை கந்தர்வர்களுக்கும், காமனை அப்சரஸ்களுக்கும் மன்னனாக நியமித்தான்.(12) மஹாதேவனின் வாகனமான காளையை {நந்தி தேவனை} அவன் நான்கு கால் விலங்குகள் அனைத்தின் மன்னனாக நியமித்தான்.(13)
[1] சித்திரசாலை பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பையும், மூலத்தையும் ஒப்புநோக்கியும், மன்மதநாததத்தரின் பதிப்பில் இருக்கும் பிழையைத் தெளிவாக உணர்ந்தும் இந்த வாக்கியம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
பெரும் பிரகாசத்தைக் கொண்ட ஹிரண்யாக்ஷன் தைத்தியர்களின் மன்னனாகவும், ஹிரண்யகசிபு இளவரசனாகவும் {யுவராஜனாகவும்} நியமிக்கப்பட்டனர்[2].(14) பெருஞ்சக்திவாய்ந்தவனும், முதலில் பிறந்தவனுமான விப்ரசித்தி தானவர்களுக்கும், அசுரர்களுக்கும் மன்னனாக நியமிக்கப்பட்டான்.[3] மஹாகாலன், பூதகணங்களுக்கும், காலகேயர்களுக்கும் தலைவனாக நியமிக்கப்பட்டான். விருத்திரன், துவஷ்டாவின் மனைவியான அனாயுஷையின் மகன்களுக்கு மன்னனாக்கப்பட்டான்.(15) மேலும் அவன், சிம்ஹிகையின் மகனும், பேரசுரனுமான ராஹுவை, தீய சகுனங்களுக்கும், நிமித்தங்களுக்கும் மன்னனாக்கினான்.(16)
[2] சித்திரசாலை பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பையும், மூலத்தையும் ஒப்புநோக்கியும், மன்மதநாததத்தரின் பதிப்பில் இருக்கும் பிழையைத் தெளிவாக உணர்ந்தும் இந்த வாக்கியம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
[3] விப்ரசித்தி குறித்த செய்தி சித்திரசாலை பதிப்பில் காணப்படவில்லை.
ஓ! பாரதா, பிறகு அவன் பருவகாலங்கள் {ருது}, மாதங்கள், யுகங்கள், பக்ஷங்கள், பகல்கள், இரவுகள், திதிகள், பர்வங்கள்,(17) கலைகள், காஷ்டைகள், முஹூர்த்தங்கள், இரண்டு அயணங்கள், யோக சாத்திரம், கணிதம் ஆகியவற்றுக்கு ஸம்வத்ஸரனை (வருடத்தை) மன்னனாக நியமித்தான்.(18) பெருஞ்சக்திவாய்ந்தவனும், அழகிய சிறகுகளைப் படைத்தவனுமான {சுபர்ணனுமான} கருடன், பறவைகள் அனைத்திற்கும், நெடுந்தொலைவுகளைப் பார்ப்பவர்களுக்கும், பாம்புகள் அனைத்திற்கும் {போகிகளுக்கும்} மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.(19) கருடனின் அண்ணனும், பூஜைகளில் பயன்படுத்தப்படும் செம்மலர்களைப் போன்று ஒளிபொருந்தியவனுமான அருணன், யோகங்கள் அனைத்திற்கும், சாத்யர்களுக்கும் மன்னனாக்கப்பட்டான்.(20)
உயிரினங்களின் தலைவரான கசியபரின் மகனும், பெரும் விரதனை {கிழக்கின் திக்பாலனான} வாசவன் {இந்திரன்} கிழக்குத் திசையின் மன்னனாக நியமித்தான்.(21) நீதி வழங்குபவனும், தலைவன் ஆதித்யனின் மகனும், பெருஞ்சிறப்புவாய்ந்தவனுமான யமன், மஹேந்திரனால் {இந்திரனால்} தெற்கின் மன்னனாக நியமிக்கப்பட்டான்.(22) கசியபருக்குப் பிறந்த மகனும், நீருக்கடியில் இருப்பவனும், அம்புராஜன் என்ற பெயரில் கொண்டாடப்படுபன் {வருணன்}, மேற்கின் மன்னனானான்.(23) புலஸ்தியரின் மகனும், மஹேந்திரனையே போன்றவனுமான குபேரன், வடக்கின் மன்னனாக நியமிக்கப்பட்டான்[4].(24)
[4] அஷ்ட திக்பாலர்கள்: வடக்கு குபேரனுக்கு, தெற்கு யமனுக்கு, கிழக்கு இந்திரனுக்கு, மேற்கு வருணனுக்கு, வடகிழக்கு ஈசானனுக்கு, தென்கிழக்கு அக்னிக்கு, வடமேற்கு வாயுவுக்கு, தென்மேற்கு நைருதிக்கு எனும் வரிசை வழக்கமாகச் சொல்லப்படுவது.
அண்டத்தைப் படைத்த சுயம்புவானவன், இவ்வாறு அதன் அரசைப் பிரித்து, அவர்களுக்குப் பல்வேறு தெய்வீக உலகங்களையும் ஒதுக்கினான்.(25). சிலரின் உலகங்கள் சூரியனைப் போன்று பிரகாசமிக்கதாகவும், சிலருடையது நெருப்பைப் போன்றதாகவும், சிலருடையது மின்னலைப் போன்றதாகவும், சிலருடையது சந்திரனைப் போன்றதாகவும் இருந்தது.(26) பல்வேறு வண்ணங்களில் இருந்த அந்த உலகங்கள் அனைத்தும், விரும்பியபடி உலவவல்லவையாகவும், பல நூறு யோஜனைகள் பரப்பைக் கொண்டவையாகவும், நல்லோரால் எளிதில் அடையத்தக்கவையாகவும், பாவிகளால் அடையப்படுவதற்கு அரிதானவையாகவும் இருந்தன.(27) பார்ப்பதற்கு அழகாகவும், நட்சத்திரங்களைப் போன்ற ஒளியுடனும் இருந்த உலகங்கள் நல்லோருக்கானவையாக இருந்தன.(28) மிகச் சிறந்த கொடைகளுடன் வேள்விகளைச் செய்பவர்கள், தங்கள் மனைவிமாருக்கு உண்மையாக இருப்பவர்கள், பொறுமைசாலிகள், எளியவர்கள், வாய்மை நிறைந்தவர்கள்,(29) வறியோரிடம் அன்பு காட்டும் பிராமணர்கள், பேராசையில் இருந்தும், ரஜஸ் குணத்தில் இருந்தும் விடுபட்டவர்கள் ஆகியோரும், தவசிகளும், முனிவர்களும் அந்த உலகங்களுக்குச் செல்வார்கள்.(30)
உலகின் பெரும்பாட்டனான பிரஜாபதி {பிரம்மன்} இவ்வாறு தன் மகன்களை ஈடுபடுத்திவிட்டு புஷ்கரை என்றழைக்கப்படும் பிரம்மலோகத்திற்குச் சென்றான்.(31) சுயம்புவால் பாதுகாப்புப் பணிகள் ஒப்படைக்கப்பட்ட தேவர்கள், மஹேந்திரனால் நன்றாகக் கவனிக்கப்பட்டுத் தங்கள் தங்களுக்குரிய உலகங்களில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.(32) தேவர்கள் அனைவரும், பாதுகாப்புப் பணியில் முறையாக ஈடுபடுத்தப்பட்டும், சக்ரனால் தலைமை தாங்கப்பட்டும், வேள்விக் காணிக்கைகளில் தங்கள் பங்கையும், சொர்க்கத்தையும், புகழையும், இன்பத்தையும் அனுபவித்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(33)
பவிஷ்ய பர்வம் பகுதி – 33ல் உள்ள சுலோகங்கள் : 33
![]() |
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English | ![]() |