(ஹிரண்யாக்ஷவத)
The Lord comes out as a boar | Bhavishya-Parva-Chapter-35 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : ஹரிண்யாக்ஷனுக்கும், வராகனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; ஹிரண்ய வதம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு, அவர்களுடைய மன்னன் {இந்திரன்} அசைவற்றிருந்தபோது, சக்கரபாணி (விஷ்ணு), கதாயுதம் தரித்த ஹிரண்யாக்ஷனை அழிப்பதில் தன் மனத்தை நிலைநிறுத்தினான்.(1) அசுரர்களைக் கொல்பவனான அந்தத் தலைவன் {விஷ்ணு}, ஏற்கனவே சொல்லப்பட்ட பெரும்பன்றியின் வடிவை ஏற்று {வராகனாக} அங்கே வந்தான்.(2) அவன், நிலவு போல ஒளிர்ந்து கொண்டிருந்த தன் சங்கையும், சக்கர மலைக்கு ஒப்பானதும், ஆயிரங்கத்திகளுடன் கூடியதுமான தன் சக்கராயுதத்தையும் எடுத்துக் கொண்டான்.(3)
சிதைவற்ற அந்தத் தலைவனுக்குரிய மஹாதேவன், மஹாபுத்தி, மஹாயோகி, மஹேஷ்வரன் என்பவை போன்ற ரகசிய பெயர்களை அமரர்கள் எப்போதும் ஓதுவார்கள்.(4) அவன், ஆத்ம ஞானத்தை அறிந்தவர்களில் முதன்மையானவன். அவன், பக்திமான்களால் எப்போதும் தொண்டாற்றப்படுபவன். அண்டத்தைப் படைத்தவனான அந்தப் புராதன புருஷன், மூவுலகங்களிலும் கொண்டாடப்படுகிறான்.(5) அவன் தேவர்களில் வைகுண்டனாகவும், போகிகளில் {பாம்புகளில்} அனந்தனாகவும், யோகிகளில் விஷ்ணுவாகவும், வேள்விச் சடங்குகளில் தலைமைத் தேவனாகவும் இருக்கிறான்.(6) {பூமியில் செய்யப்படும் வேள்விகளில் பெரும் முனிவர்களால் கொடுக்கப்படும்} மூன்று வகை வேள்விக் காணிக்கைகளை அவனுடைய அருளால் தேவர்கள் உண்கிறார்கள்.(7)
{அவனே தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கதியாக இருக்கிறான். அவனே சூரர்களுக்கு {தேவர்களுக்கு} பரகதியாக இருக்கிறான். அவனே புனிதங்களில் மிகப் புனிதனாக இருக்கிறான். சுயம்புவான அவன், தாழ்ச்சி ஏதும் இல்லாத தலைவனாவான்.(8) ஒவ்வொரு யுகத்திலும் அசுரர்கள் பலம்பெறுவதைக் கண்டு, அவர்களைச் சக்கரத்திற்குள் நுழையச் செய்து, அவர்களுக்குத் துன்ப நிலையைக் கொடுக்கிறான்.(9) அப்போது அவன், சங்குகளில் சிறந்த தன் புராதன சங்கை எடுத்துத் தன் வாயால் முழக்கி, பெருஞ்சக்தி வாய்ந்த அந்த அசுரனின் {ஹிரண்யாக்ஷனின்} உயிரை நடுங்கச் செய்தான்.(10)}[1]
[1] 8 முதல் 10ம் ஸ்லோகம் வரையுள்ள செய்தி மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்த்து இங்கே அளிக்கப்பட்டிருக்கிறது.
அசுரர்களுக்கு அச்சத்தை ஊட்டும் அந்தப் பயங்கரச் சங்க முழக்கத்தைக் கேட்டுத் தானவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் {பத்து திக்குகளிலும்} தப்பி ஓடினர்.(11) அப்போது, செந்நிறக் கண்களைக் கொண்ட அந்தப் பேரசுரன் ஹிரண்யாக்ஷன், கோபத்துடன், "இவன் யார்?" எனக் கேட்டு, பன்றியின் வடிவில் இருந்தவனும், தேவர்களின் துயரங்களை விலக்குபவனும், சக்கராயுத்துடன் அவன் முன்பு நின்றவனுமான நாராயணன் மீது தன் பார்வையைச் செலுத்தினான்.(12)
{புருஷர்களில் சிறந்தவனும், தேவர்களின் துயரத்தை அழிப்பவனுமான தலைவன் தன் முன்னே சங்கு சக்கர பாணியாக வராக வடிவில் நிற்பதை அவ்வசுரன் {ஹிரண்யாக்ஷன்} கண்டான்.(13) அசுரர்களைக் கொல்பவனான அவன் {வராகன்}, சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் மின்னுவதும், மழை தருவதுமான கரு நீல மேகம் போலச் சங்கு, சக்கரத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(14)}[2]
[2] 13,14 ஸ்லோகங்களில் உள்ள செய்தி மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்த்து இங்கே அளிக்கப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு ஹிரண்யாக்ஷனும், பிற அசுரர்களும் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு நாராயணனுடன் போரிட்டனர்.(15) அந்த ஹரி, பெருஞ்சக்திவாய்ந்த தைத்தியர்களால் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்டாலும், ஒரு மலையைப் போலப் போர்க்களத்தில் இருந்து அசையாமல் நின்றான்.(16) அதன் பிறகு பெருஞ்சக்திவாய்ந்த ஹிரண்யாக்ஷன், பன்றி வடிவில் இருந்த வராஹனின் {நாராயணனின்} மார்பில் எரியும் சக்தி ஆயுதத்தை ஏவினான்.(17)
{அந்தச் சக்தி ஆயுதத்தின் ஒளியைக் கண்ட பிரம்மன்} ஆச்சரியத்தால் நிறைந்தான். பெருஞ்சக்திவாய்ந்த அந்தப் பன்றியானவன் {வராகன்}, தன் மீது விழப்போகும் அந்தச் சக்தி ஆயுத்தத்தைக் கண்டு,(18) பெருமுழக்கம் {ஹுங்காரம்} செய்து, அதைத் தரையில் வீழ்த்தினான். {இவ்வாறு அந்தச் சக்தியாயுதம் நொறுக்கப்பட்டதும், பிரம்மன், "நன்று" என்று சொன்னான்}.(19) அதன்பிறகு அந்தத் தலைவன், அசுரனால் தாக்கப்பட்ட போது, சூரியனைப் போன்ற தன் சக்கராயுதத்தைச் சுழற்றி,(20) அந்தத் தானவ மன்னன் மீது ஏவி, {சிறந்த காரணத்திற்காக அவனது தலையை} வீழ்த்தினான். வஜ்ரத்தால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் சிகரத்தைப் போல அந்தத் தைத்திய மன்னனின் தலை, சக்கரத்தால் வீழ்த்தப்பட்டுத் தரையில் விழுந்தது.(21) அவன் மரணமடைந்ததும் தைத்தியர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தவர்களாக அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(22) {சக்கரபாணியும், உலகங்களெங்கும் எதிர்ப்பில்லாதவனும், எதிர்ப்பற்ற, பயங்கரமான சக்கரத்தைத் தரித்தவனுமான அவன் {விஷ்ணு}, யுக முடிவில் தண்டத்துடன் கூடிய காலனைப் போல அந்தப் போர்க்களத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்}[3]" என்றார் {வைசம்பாயனர்}.(23)
[3] இடையிடையே { } என்ற அடைப்புக்குறிக்குள் உள்ள செய்திகள் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. அவை சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்த்து இங்கே அளிக்கப்பட்டிருக்கின்றன.
பவிஷ்ய பர்வம் பகுதி – 35ல் உள்ள சுலோகங்கள் : 23
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |