(ஹிரண்யகர்பாத்யுத்பத்திகதநம்)
The creation of Vedas | Bhavishya-Parva-Chapter-32 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : ஹிரண்யகர்பனின் பிறப்பு; காயத்ரி, சாவித்ரி, வேதங்கள் படைக்கப்பட்டது; பிரம்மனின் சந்ததி; தக்ஷன், கசியபர், மனு, தர்மன், சந்திரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு அண்டத்தைப் படைக்க விரும்பிய தலைவன் சிந்திக்கத் தொடங்கினான். இவ்வாறு அவன் தியானித்துக் கொண்டிருந்த போது அவனுடைய வாயில் இருந்து ஒரு புருஷன் வெளியே வந்தான்.(1)
தலைவனுக்கு முன் வந்த அந்தப் புருஷன், "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அண்டத்தை ஆளும் தலைவன், புன்னகைத்தவாறே,(2) "உன்னை {ஆன்மாவை} இரண்டாகப் பிரித்துக் கொள்வாயாக" என்றான். இதைச் சொல்லிவிட்டு அந்தத் தலைவன் மறைந்தான். ஓ! பாரதா, அந்தத் தலைவன் உடலால் மறைந்தபோது,(3) விளக்கு அணைந்ததைப் போல அவனது இயக்கத்திற்கான எந்தத் தடமும் காணப்படவில்லை. வேதங்களைப் பாடிய ஹிரண்யகர்பன் {அந்தப் புருஷன்}, அவனால் சொல்லப்பட்ட சொற்களை அப்போது தியானிக்கத் தொடங்கினான்.(4) {அந்தப் புருஷன் வேத மந்திரங்களின் புனித உரைகளில் பொன்மயமான கருவறையில் கருத்தரிக்கப்பட்டவன் {ஹிரண்யகர்பன்} என்று புகழப்படுபவன் ஆவான்}.முன்னர் அண்டத்தின் தலைவன் மட்டுமே ஒரே குடிமுதல்வனாக {பிரஜாபதியாக} இருந்ததால் அவன் மட்டுமே வேள்விக் காணிக்கைகளுக்கு உரிமை கொண்டவனாக இருந்தான்.(5)
குடிமுதல்வன், "அந்தப் பெரியவன் {பரமாத்மா}, என்னை {என் ஆன்மாவை} இரண்டாகப் பிரியும்படி கேட்டுக் கொண்டான் என்றாலும், என்னை இரண்டாகப் பிரித்துக் கொள்வதில் எனக்குப் பெரும் ஐயம் ஏழுகிறது.(6) குடிமுதல்வன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது "ஓம்" என்ற சொல் ஓதப்பட்டது; அதன் ஒலியால் பூமியும், வானமும், சொர்க்கமும் நிறைந்திருந்தன.(7) அந்தப் பிரஜாபதியின் மனம் ஓம் என்பதைப் பயின்று கொண்டிருந்தபோது, அந்தத் தேவதேவனின் இதயத்தில் இருந்து மீண்டும் வஷட்காரம் எழுந்தது.(8) அதன் பிறகு, பூமி, வானம், சொர்க்கம் ஆகியவற்றின் ஆன்மாவாக அமைந்த பூர், புவ, ஸுவ என்ற {ஏழு உலகங்களின் பெயர்களைச் சார்ந்த} முதல் மூன்று பெரும் மந்திரங்கள் எழுந்தன.(9) அதன் பிறகு சந்தங்களின் பிறப்பிடமானதும், இருபத்து நான்கு சொற்களால் அமைந்ததுமான புனித காயத்திரி உண்டாக்கப்பட்டது. அந்தத் தெய்வீக மந்திரத்தை முழுமையாக நினைவு கூர்ந்து சாவித்ரியைப் படைத்தான்.(10) அதன்பிறகு, அந்தத் தலைவன், ரிக், சாம, அதர்வண, யஜுர் என்ற நான்கு வேதங்களையும், அறச்சடங்குகளையும் படைத்தான்.(11)
அதன்பிறகு அவனது மனத்திலிருந்து ஸநர், ஸநகர், ஸநாதனர், வரதர், ஸநந்தனர் ஆகியோர் வெளிப்பட்டனர்.(12) பிறகு எல்லாம் அறிந்த ஸநத்குமாரரும் வெளிப்பட்டார். ருத்திரனுடன் சேர்த்து இந்த ஆறு ரிஷிகளும் பிரம்மனின் மனத்தில் பிறந்த மகன்களாவர்.(13) யோக தந்திரத்தில் இந்த ஆறு ரிஷிகளையும், பிரம்மனையும், கபிலரையும் உயர்ந்தவர்களாக யதிகளும், பிராமணர்களும் சொல்கின்றனர்.(14) சுயம்புவான அந்தத் தேவன் {பிரம்மன் / ஹிரண்யகர்ப்பன்} அதன்பிறகு தன் மனத்தில் இருந்து பிறந்த மரீசி, அத்ரி, புலஸ்த்யர், புலஹர், கிரது, பிருகு, அங்கிரஸ், {பிரஜாபதியான} மனு ஆகிய எட்டு மகன்களையும்,(15) அனைத்து உயிரினங்களின் பித்ருக்கள், தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோரையும், {மஹாரிஷிகள் பிறரையும்} படைத்தான்.(16) ஆயிரம் யுகங்கள் முடிந்து, நிஷேஷ கல்பத்தின் முடிவில் இவர்கள் அனைவரும், இவர்களின் சந்ததிகளும் உலகில் இருந்து மறைகின்றனர்.(17) சந்ததிகளை உண்டாக்கவல்ல இந்தத் தெய்வீக யோகிகள் ஆயிரம் வருடங்கள் கழிந்ததும், மீண்டும் தங்கள் பிறவியை அடைகிறார்கள்.(18) ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு குறிப்பிட்ட பணிக்காகத் தேவர்கள் தங்கள் பெயர்களையும், பிறவிகளையும் மாற்றிக் கொள்கிறார்கள்.(19) பிரஜாபதியின் வலது கை கட்டைவிரலில் இருந்து தெய்வீகனான தக்ஷன் பிறந்தான். அவனது மனைவி பிரம்மனின் இடது கை கட்டைவிரலில் இருந்து பிறந்தாள்[1].(20) தக்ஷன், உலகத்தின் அன்னையராக கொண்டாடப்படும் மகள்களை அவனது மனைவியிடம் பெற்றான். ஓ! மன்னா, அவர்களின் சந்ததியால் மொத்த உலகமும் நிறைந்தது.(21)
[1] கட்டை விரல்களில் இருந்து பிறந்தார்கள் என்று மன்மதநாததத்தரின் பதிப்பில் சொல்லப்படும் இவர்கள், சித்திரசாலை பதிப்பில் சுட்டுவிரலில் இருந்து பிறந்தார்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.
மனத்தில் சந்ததியைப் பெருக்க நினைத்த தக்ஷன், தன் மகள்களான அதிதி, திதி, காலை, அநாயு, ஸிம்ஹிகை, முனி, பிராதை, குரோதை, ஸுரபி, வினதை, ஸுரஸை, தனு, கத்ரு ஆகியோரை {13 மகள்களை} கசியபருக்கு {திருமணம் செய்து} கொடுத்தான்.(22,23) மேலும் தக்ஷன், தன் மகள்களான அருந்ததி, வஸு, யாமீ, லம்பை, பானு, மருத்வதி, ஸங்கல்பை, ஸாத்யை, விஷ்வை ஆகிய பத்து {10} கன்னிகையரை பிரம்மனின் மகனான மனுவுக்கு {திருமணம் செய்து கொடுத்தான்.(24) பிறகு அவன், குற்றங்குறையற்ற அங்கங்களையும், தாமரை போன்ற கண்களையும், முழு நிலவைப் போன்ற முகங்களையும் கொண்ட தன் மகள்களான கீர்த்தி {புகழ்}, லக்ஷ்மி {செல்வம்}, திருதி, புஷ்டி, புத்தி, மேதை, கிரியை, மதி, லஜ்ஜை {நாணம்} ஆகிய பத்து {10} கன்னிகையரை தர்மனுக்கு {திருமணம் செய்து} கொடுத்தான்.(25,26) அதன் பிறகு அத்ரியின் மகனான ஆத்ரேயன் {சசி / சந்திரன்} நீர் நிறைந்தவனாக {நீரின் ஆன்மாவாகப்} பிறந்தான். கோள்களின் தலைவனும், இருளை விலக்குபவனுமான அவன் ஆயிரங்கதிர்களைக் கொண்டவனாக இருந்தான்.(27,28) தக்ஷப்ரசேதஸ் தன் மகள்களான ரோகிணி முதலிய இருபத்தேழு {27} கன்னிகையரை அவனுக்கு {சந்திரனுக்குக்} கொடுத்தான்.(29)
கசியபர், மனு, தர்மன், சசி {சந்திரன்} ஆகியோரின் சந்ததியை உரைக்கிறேன் கேட்பாயாக.
கசியபர் அதிதியிடம் அர்யமான், வருணன், மித்ரன், பூஷன், தாதா, புரந்தரன்,(30) துவஷ்டா, பகன், அம்ஷன், சவிதன், பர்ஜன்யன் என்ற தேவர்களைப் பெற்றார்.
கசியபர் திதியிடம் இரண்டு மகன்களைப் பெற்றார் என நாம் கேள்விப்படுகிறோம். அவர்கள் ஹிரண்யகசிபுவும், சக்திமிக்க ஹரிண்யாக்ஷனும் ஆவர். அவர்கள் இருவரும் தவத்தில் கசியபரைப் போலவே ஒப்பற்ற ஆற்றலுடன் திகழ்ந்தனர்.(31,32) ஹிரண்யகசிபு, பெருஞ்சக்திவாய்ந்த ஐந்து மகன்களைப் பெற்றான். அவர்கள் பிரஹலாதன், அனுவலம், ஸம்லாதன், அனுராதன் ஆகியோராவர்(33). {அவர்களில் பிரஹலாதன் மூத்த மகன், அநுராதன் ஐந்தாவது மகன்}.(34)பிரஹலாதனுக்கு, விரோசனன், ஜம்பன், குஜம்பன் {ஸுஜம்பன்} என்ற பெயரில் பெருஞ்சக்திவாய்ந்த மூன்று மகன்கள் இருந்தனர்.(35) விரோசனனுக்குப் பலி என்றொரு மகன் இருந்தான், பலிக்கு பாணன் என்ற ஒரு மகன் இருந்தான். பாணனின் மகன், பகை நகரங்களை வெல்பவனான இந்திரதமனனாவான்.(36)
உலகில் பெரும் அசுரர்களாகக் கொண்டாடப்பட்ட எண்ணற்ற அசுரர்களைத் தனு பெற்றாள். அவர்களில் முதலில் பிறந்த விப்ரசித்தி மன்னனானான்.(37)
குரோதை, குரோதவசர்கள் என்றழைக்கப்பட்ட பல மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் பெற்றிருந்தாள். அவர்கள் அனைவரும் பெரும் பயங்கரர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும் இருந்தனர்.(38)
சிம்ஹிகை, சூரியனையும், சந்திரனையும் பீடித்த ராகுவைப் பெற்றாள். அவன் சந்திரனை விழுங்கி, சூரியனை அழிக்கிறான்.(39)
காலையின் பிள்ளைகள் காலனைப் போன்றவர்களாகவும், பெரும் பயங்கரர்களாகவும், கருநீல மேகங்களைப் போலப் பிரகாசமிக்கவர்களாகவும், சூரியனைப் போன்று ஒளிரும் கண்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(40)
கத்ருவுக்கு இருந்த மகன்கள் பலரில் ஆயிரம் தலைகளைக் கொண்ட சேஷன், வாசுகி, தக்ஷகன் ஆகியோர் ஏற்றமடைந்தனர்.(41) அவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்தவர்களாகவும், உயிரினங்களுக்கு நன்மை செய்பவர்களாகவும், வரங்களை அளிப்பவர்களாகவும், விரும்பிய வடிவங்களை ஏற்பவர்களாகவும் இருந்தனர்.(42)
வினதையின் மகன்கள் தார்க்ஷ்யன், அரிஷ்டநேமி, பெருஞ்சக்திவாய்ந்த கருடன், அருணன், அருணி ஆகியோராவர்.
{பெரும்பேறு பெற்றவளான} பிராதை, தெய்வீக முனிவர்களாலும் வழிபடப்பட்டவர்களும், {மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவர்களுமான} எட்டு அழகிய அப்சரஸ்களைப் பெற்றாள். அவர்கள் அநவத்யை, அநூகை, அநூநை, அருணை, பிரியை, அநூகை, ஸுபகை, பாசி ஆகியோராவர்.(43,44) அலம்புஷை, மிஷ்ரகேஷி, புண்டரீகை, திலோத்தமை, ஸுரூபை, லக்ஷ்மணை, க்ஷேமை, ரம்பை, மநோரமை,(45) அஸிதை, ஸுபாஹை, ஸுவிருத்தை, ஸுமுகீ, ஸுப்ரியை, ஸுகந்தை, ஸுரஸை, பிரமாதினி,(46) காஷ்யை, ஷாரத்வதி ஆகியோர் மௌநேய அப்சரஸ்கள் என்று கொண்டாடப்படுபவர்கள். விஷ்வாவஸு, பரண்யன் ஆகியோர் கந்தர்வர்களாக அறியப்பட்டனர்;(47) மேனகை, ஸஹஜன்யை, பர்ணிகை, புஞ்ஜிகஸ்தலை, கிருதஸ்தலை, கிருதாசி, விஷ்வாசி, ஊர்வசி,(48) அநும்லோசை, பிரம்லோசை, ஆகிய பத்து பேரும் மநோவதியும் கொண்டாடப்பட்ட அப்சரஸ்களாக இருந்தனர்.(49)
பிராமணர்கள், பசுக்கள், ருத்திரர்கள் ஆகியோராலும், மொத்த உலகத்தாலும் விரும்பப்பட்ட அமுதம் பிரஜாபதியின் தீர்மானத்தினால் உண்டானது. அவர்கள் அனைவரும் சுரபியின் சந்ததியினர் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.(50)
இதுவரை நான் கசியபரின் சந்ததியைச் சொன்னேன், இனி நான் மனுவின் சந்ததியைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(51) ஓ! பாவமற்றவனே நான் அவற்றைச் சுருக்கமாகச் சொல்லப் போகிறேன். விஷ்வை விஷ்வதேவர்களையும் {தேவர்கள் அனைவரையும்}, சாத்யை சாத்யர்களையும் பெற்றனர்.(52) மருத்வதி மருத்துகளைப் பெற்றாள், வஸுவுக்கு வஸுக்கள் பிறந்தனர். பானுவின் மகன்கள் பானுக்களாகவும், முஹூர்த்தையின் மகன்கள் முஹூர்த்தஜர்களாகவும் இருந்தனர்.(53) லம்பை கோஷனைப் பெற்றாள். ஜாமி, நாகவீதியையும், அருந்ததி உலகப் பொருட்கள் அனைத்தையும் பெற்றனர்.(54) ஸங்கல்பை ஸங்கல்பனைப் பெற்றாள், லக்ஷ்மி தர்மனின் மகனும், உலகத்துக்கு மிகவும் பிடித்தமானவனுமான காமனைப் பெற்றாள்.(55) காமன் தன் மனைவியான ரதியிடம், யஷன், ஹர்ஷன் என்ற இரு மகன்களைப் பெற்றான். சோமன் தன் மனைவியான ரோஹிணியிடம் பெருந்தலைவன் வர்சஸைப் பெற்றான்.(56) அவனே {வர்சஸே} சந்திரன் எழுந்தவுடனே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறான். {ஊர்வசி காதலில் விழுந்த புரூரவஸ் தலைவன் வர்சஸுக்குப் பிறந்தவனாவான்.(57) இவ்வாறே ஆயிரக்கணக்கான மனைவிமாரும், மகன்களும் பிறந்தனர். இதுவே உலகத்தின் {முன்னேற்றத்திற்கும், நிர்வாகத்திற்கும்} வேராகத் திகழ்கிறது.(58) தலைவன் பிரஜாபதி உயிரினங்களின் தகுதிகளுக்குத் தக்கபடி அவற்றின் மத்தியில் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தான்.(59) அதன் பிறகு தலைவன் பத்துத் திக்குகளையும், பூமி, ரிஷிகள், பெருங்கடல்கள், பறவைகள், மரங்கள், மூலிகைகள், நாகங்கள், ஆறுகள், தேவர்கள், அசுரர்கள், வானுலாவிகள், வேள்விகள், மலைகளை ஆகியவற்றையும் படைத்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(60)
பவிஷ்ய பர்வம் பகுதி – 32ல் உள்ள சுலோகங்கள் : 60
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |