(மஹீவர்ணநம்)
The creation of mountains and rivers | Bhavishya-Parva-Chapter-31 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : பூமியில் மலைகளையும், ஆறுகளையும் படைத்த வராகன்; அதன் பிறகு தேவர்களையும் அசுரர்களையும் படைக்க நினைத்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பூமியானவள், ஒரு படகைப் போல அந்தப் பரந்த நீரில் மிதந்து கொண்டிருந்தாள். அவளுடைய உடல் கனத்தின் விளைவால் அவள் மூழ்காதிருந்தாள்.(1) அப்போது தலைவன் பூமியில் பிரிவுகளை ஏற்படுத்த நினைத்தான். பிறகு அவன் மலைகளின் உயரத்தையும், ஆறுகளின் போக்குகளையும், அவற்றின் குறைந்த அளவுகளையும் {அவை எவ்வாறு அமைய வேண்டும் என்று} நினைத்தான்.(2,3) அவன், தாமரையின் நான்கு இதழ்களைப் போலப் பூமியை நான்கு கண்டங்களாகப் பிரித்துப் பெருங்கடல்களையும் பிரித்துப் பொன்மலையான மேருவையும் {பூமியின் நடுவில்} படைத்தான்.(4)
அதன்பிறகு அவன் கிழக்குப் பக்கம் சென்ற, நூறு யோஜனைகள் அகலமும், ஆயிரம் யோஜனைகள் உயரமும் கொண்ட உதய மலையைப் படைத்தான். தன் சக்தியின் பயன்களுடனும், உதிக்கும் சூரியனைப் போன்ற பிரகாசத்துடனும் அவன் தங்கச் சிகரங்களைப் படைத்து, அதன் உடலையும், அடித்தளத்தையும் படைத்தான்.(5,6) தாமரைக் கண்ணன், தினமும் மலர்களாலும், கனிகளாலும் மறைக்கப்பட்டதும், பருத்த தண்டுகளுடன் கூடியவையுமான பொன்மரங்களை அங்கே படைத்தான்.(7) அடுத்ததாக அந்தப் பெருந்தெய்வமான விஷ்ணு, நூறு யோஜனைகள் பரப்பும், இருநூறு யோஜனைகள் உயரமும் கொண்ட சௌமனஸ {இனிய உணர்வைக் கொடுக்கும்} மலையைப் படைத்தான்.(8) அங்கே அவன் ஆயிரக்கணக்கான ரத்தினங்களையும், மாலை வேளை மேகங்களைப் போல ஒளிரும் பீடங்களையும் படைத்தான்.(9)
அதன்பிறகு அவன், நூற்றுக்கணக்கான ரத்தினங்களின் வசிப்பிடமும், ஆயிரஞ்சிகரங்களைக் கொண்டதுமான {சஹஸ்ரசிருங்க} மலையைப் படைத்தான். அடர்த்தியாக மரங்களால் மறைக்கப்பட்டிருந்த அஃது அறுபது யோஜனைகள் உயரம் கொண்டதாக இருந்தது.(10) அங்கே தேவதச்சன், உயிரினங்கள் அனைத்தாலும் துதிக்கப்படும் {ஆன்மாவுக்கான} மிகச் சிறந்த இருக்கையை நிறுவினான்.(11) அதன்பிறகு அவன் காடால் மறைக்கப்பட்ட சைசிர {பெருங்குளிர்ச்சியுடன் கூடிய} மலையைப் படைத்தான். கடக்கப்பட முடியாத அதன் குகைகள் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.(12) அதனில் இருந்து அவன், பனியைப் பிறப்பிடமாகக் கொண்டதும், பறவைகள் நிறைந்ததும், கரைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான வசுதாரை[1] என்று கொண்டாடப்படும் ஆற்றைப் படைத்தான்.(13) புனித வேள்விகளால் நிறைந்த அந்த ஆறு, கிழக்குத் திசை முழுவதையும் முத்துகளாலும், சங்குகளாலும் நிறைத்தது.(14) அதன் கரைகள், தினமும் அமுதநிகர் கனிகளையும், மலர்களையும் கொடுப்பவையும், ஏராளமான நிழலை அளிப்பவையுமான மரங்கள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(15)
[1] மஹாபாரதத்தில் வன பர்வம் பகுதி 82ல் வசுதாரை என்ற ஓர் ஆறு குறிப்பிடப்படுகிறது. ஆதிபர்வம் பகுதி 6ல் வதுசாரை என்ற ஓர் ஆறு குறிப்பிடப்படுகிறது.
கிழக்கில் பிரிவுகளை உண்டாக்கிய தலைவன், பாதித் தங்கம், பாதி வெள்ளியாலான அழகிய மலையைத் தெற்கில் படைத்தான்.(16) ஒரு பக்கம் சூரியப் பிரகாசத்துடனும், மறு பக்கம் சந்திரப் பிரகாசத்துடனும் கூடிய அந்தச் சிறந்த மலை அங்கே பேரழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(17) அந்த மலையானது, ஒரே நேரத்தில் சூரிய சந்திரக் கதிர்களுடன் கூடி இருப்பதாகத் தெரிந்தது. அதன்பிறகு அவன் அந்தத் திசையில் பானுமந்தம், வபுஷ்டமம் எனும் பெரும் மலைகளைப் படைத்தான்.(18) அந்த மலைகள் விரும்பிய பலன்களை அனைவருக்கும் வழங்கும் தெய்வீக மரங்களால் நிறைந்திருந்தன. அதன் பிறகு அவன் யானையின் வடிவில் குஞ்சர மலையைப் படைத்தான்.(19) அனைத்துப் புறங்களிலும் பொன்னறைகளைக் கொண்டிருந்த அது பல யோஜனைகள் தொலைவுக்குப் பரந்திருந்தது. அதன் பிறகு அவன் கரடியின் வடிவில் ரிஷப மலையைப் படைத்தான். அது பொன்மயமான சந்தன மரங்களால் மறைக்கப்பட்டு மலர்களுடன் புன்னகைப்பதைப் போலத் தெரிந்தது.
அதன் பிறகு அவன் மலைகளின் தலைவனும், நூறு யோஜனைகள் உயரம் கொண்டதுமான மஹேந்திர மலையைப் படைத்தான். அதில் பொன்மயமான சிகரங்களும், பூத்துக் குலுங்கும் பெரும் மரங்களும் இருந்தன. தலைவன் அந்த மலையைப் பல்வேறு ரத்தினங்களும் நிறைந்திருப்பதாகவும், சூரியனையும், சந்திரனையும் போன்று பிரகாசிப்பதாகவும் படைத்தான். அதன் பிறகு அவன், பூத்துக்குலுங்கும் மரங்கள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்ட மலய மலையைப் படைத்தான்.(23) அதன் பிறகு அவன் பாறைகளின் வலையால் மறைக்கப்பட்ட மைநாக மலையைப் படைத்தான். அவன் அந்தப் பெரும் மலையைத் தென் திசையில் நிறுவினான்.(24) அதன்பிறகு அவன் ஆயிரஞ்சிகரங்களுடன் கூடியதும், பல்வேறு மரஞ்செடிகொடிகளால் மறைக்கப்பட்டதுமான விந்திய மலையைப் படைத்தான்.(25) அதன்பிறகு அவன், பால் போன்று இனிய நீர் நிறைந்ததும், சுழல்களையும், அகன்ற கரைகளையும் கொண்டதுமான பயோதாரை என்று கொண்டாடப்படும் ஆற்றைப் படைத்தான்.(26) அந்த ஆறு தென் திசைக்கு அழகூட்டியது. நாற்றுக்கணக்கான கிளையாறுகளைக் கொண்டதும், புனிதத் தலங்கள் பலவற்றைக் கொண்டதுமான அந்தப் புனித ஆற்றைத் தென் திசையில் நிறுவிவிட்டு தலைவன் மேற்குத் திசைக்குச் சென்றான்.(27)
அங்கே {மேற்கில்} அவன் நூறு யோஜனைகள் உயரம் கொண்டதும், பொன்நிறைந்த அற்புதச் சிகரங்களைக் கொண்டதுமான ஒரு பெருமலையைப் படைத்தான்.(28) பலவண்ணங்களைக் கொண்ட பாறைகள், பொன்மயமான பாறைகள், குகைகள், சால மரங்கள், தால மரங்கள், சூரியனைப் போன்ற ஒளிரும் பிற வகை மரங்கள், தங்கத்தாலான அழகிய பீடங்கள் ஆகியவற்றால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(29) தலைவன், மேற்குப் பிரிவில் {பொன் போல் ஒளிர்பவையும், மங்கலக் காட்சிகளைத் தருபவையுமான} அறுபதாயிரம் மலைகளைப் படைத்தான்.(30) {அவன் அங்கே மேரு மலைக்கு ஒப்பானதும், ஆயிரம் நீரோடைகளைக் கொண்டதும், மங்கலமான புனிதத் தலங்களைக் கொண்டதுமான ஒரு மலையை நிறுவினான்.(31) அந்த மலை அறுபது யோஜனைகள் அகலமும், உயரமும் கொண்டதாக இருந்தது} அவன் தன்னுடைய பன்றி வடிவைச் சொல்வது போல வராகம் என்ற பெயரில் அந்த வைடூர்ய மலையை அங்கே படைத்தான்.(32) அங்கே பொன்மயமான, வெள்ளிமயமான பாறைகள் இருந்தன. அங்கே அவன் தன் சக்கரத்திற்கு ஒப்பான ஆயிரஞ்சிகரங்களைக் கொண்ட சக்ரவந்த மலையை நிலைநிறுத்தினான்.(33,34) மேலும் அவன், சங்குக்கு ஒப்பான கருநீல மரங்களால் மறைக்கப்பட்ட வெள்ளிமயமான சங்க மலையையும் அங்கே படைத்தான்.(35) அந்த மலையின் உச்சியில் தங்கத்தாலும், ரத்தினங்களாலும் உண்டாக்கப்பட்ட பாரிஜாதமெனும் பெரும் மரத்தை நிறுத்தினான்.(36) பிறகு தலைவன் வராகன், ஏராளமான நீரைக் கொண்டதும், புனிதமானதும், கொண்டாடப்படுவதுமான கிருததாரம் என்ற ஆற்றைப் படைத்தான்.(37)
இவ்வாறு மேற்கில் பல பிரிவுகளை உண்டாக்கிய அவன், வடக்கில் தங்கமயமான அழகிய மலைகள் பலவற்றை நிறுவினான். பிறகு அவன் சூரியப்பிரகாசம் கொண்டதும், வானமளவு பெரியதும், பொன்மயமானதுமான சௌம்ய மலையை அங்கே படைத்தான்.(38,39) அந்த இடம் சூரியனில்லாதிருக்கும் போதுகூடத் தன்னொளியால் ஒளியூட்டப்பட்டது.(40) சூரியனின் வெப்பத்தால் ஒளியூட்டப்படும் சந்திரலோகத்தைப் போலவே, அந்த மலையின் பிரகாசத்தால் சூரியன் ஒளிர்வதைப் போலத் தெரிந்தது.(41) நுட்பமான அறிகுறிகளாலேயே சூரியன் வெப்பத்தைக் கொடுப்பது தெரிந்தது. அதன் ஆயிரம் சிகரங்களும் பல்வேறு புனிதத்தலங்களால் நிறைந்திருந்தன. அவன் பிறகு பல்வேறு ரத்தினங்களால் நிறைந்த அஸ்த மலையைப் படைத்தான்.(42)
பிறகு அவன் அழகும், எழிலும் மிக்க மந்தர மலையையும், மலர்களால் மறைக்கப்பட்ட கந்தமாதன மலையையும் படைத்தான்.(43) கந்தமாதன மலையின் உச்சியில் அவன் பொன்மயமானதும், அற்புதம் நிறைந்ததுமான ஜம்பு ஆற்றைப் படைத்தான்.(44) அதன் பிறகு அவன், கிரிம்சஷிகரம், புஷ்கரம், ஷுப்ரம், பாண்டுரம், மேக வண்ணம் கொண்டதும், மலைகளில் முதன்மையானதுமான கைலாசம்,(45) மலைகளின் தலைவனும், தெய்வீகத் தாதுக்களைக் கொண்டதுமான இமயம் ஆகிய மலைகளைப் படைத்தான்.(46) பன்றியின் வடிவை ஏற்றத் தலைவன், ஆயிரம் வாய்களைக் கொண்டதும், அறங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதும், தெய்வீகமானதுமான மதுதாரை ஆற்றை வடக்குத் திசையில் படைத்தான்.(47) அந்த மலைகள் அனைத்தும் சிறகுகள் படைத்தவையாகவும், விரும்பிய தோற்றங்களை ஏற்க வல்லவையாகவும் திகழ்ந்தன.(48)
அவை அனைத்தையும் பல வண்ணங்களைக் கொண்டவையாக அமைத்த தலைவன் பரமேஷ்டி, இவ்வாறு பூமியில் பல பிரிவுகளை ஏற்படுத்தி, அடுத்ததாகத் தேவர்களையும் அசுரர்களையும் படைக்க நினைத்தான்.(49) உலகத்தை அழிப்பவனும், குருதி சிவப்புக் கண்களைக் கொண்டவனுமான அந்தத் தெய்வீகன், மனித குலத்தின் நன்மைக்காக அனைத்துப் பக்கங்களிலும் அழகிய மலைகள் பலவற்றையும், நீர் நிறைந்த புனித ஆறுகள் பலவற்றையும் படைத்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(50)
பவிஷ்ய பர்வம் பகுதி – 31ல் உள்ள சுலோகங்கள் : 50
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |