(வராஹக்ருதோ தரோத்தாரம்)
The work of creation and upraising of the earth | Bhavishya-Parva-Chapter-30 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : மலைகளின் கனம் பொறாமல் நீருக்குள் மறைந்த பூமி; பூமியை மீட்க வராக அவதாரம் எடுத்த விஷ்ணு; பூமியை அவளது நிலையில் மீண்டும் நிறுவியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பிரம்மனின் வடிவில் இருந்து உண்டான இந்த அண்டம் முன்னர் ஒரு பொன் முட்டையின் வடிவில் இருந்ததாக வேத ஸ்ருதி சொல்கிறது.(1) அதன்பிறகு, {ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகு} எல்லாம்வல்ல தலைவன் உலகைப் படைப்பதற்காக, அந்த முட்டையின் மேல்பகுதியை வெட்டினான்.(2) அனைத்துப் பிரிவுகளின் அறிவையும் அறிந்த தலைவன் மீண்டும் அதை எட்டு பகுதிகளாக[1] வகுந்தான்.(3) முட்டையின் பரப்பில் இருந்த ஆகாயத் துளையானது, அறம் சார்ந்த நல்லோருக்கான மிகச்சிறந்த பிரம்ம லோகமாகவும், கீழ்ப்பகுதியின் துளையானது ரஸாதலமாக மாற்றப்பட்டது.(4) தலைவன், அண்டத்திற்கான பொருள் காரணமான அந்த முட்டையை எட்டு வகைத் துளைகளுடன் படைத்தான்;(5) அதன் பிறகு அவன் துளைகளின் வடிவில் இருந்த புலன்களைத் திரள் பூதங்களாகவும், நுட்பமான பூதங்களாகவும் வகுத்தான்.(6) பல்வேறு வண்ணங்களில் இருந்த அந்த முட்டையின் பல்வேறு பொதிகள் பலவண்ண மேகங்களாக மாற்றப்பட்டன. அந்த முட்டையில் இருந்த நீர்மம் {திரவப் பொருள்} பூமியில் தங்கமானது {ஜாதரூபமானது}.(7)
[1] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "வாக், பாணி, பாதம் என்ற மூன்று பகுதிகளாகவும், ஸ்ரோத்ரம், த்வக், சக்ஷு, ஜிஹ்வம், கிராணம் என்ற ஐந்து பகுதிகளாகவும், உபஸ்தத்தில் உள்முகமாக அபானமாகவும் பிரித்தான் என நீல கண்டர் உரை சொல்கிறது" என்றிருக்கிறது.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அண்ட அழிவின்போது உலகம் பெருங்கடல்களால் மறைக்கப்பட்டிருந்ததால் மொத்த அண்டமும் அந்த முட்டையில் ஓடும் சாற்றால் மறைக்கப்பட்டிருந்தது.(8,9) முன்பு தலைவன் தேவலோகத்தைக் கட்டமைத்தபோது, படைக்கப்பட்ட முட்டையில் இருந்து வெளிவந்த நீரானது பொன்மலைகளானது.(10) திக்குகள் அனைத்தும்; வானம், நாகலோகம், பிற இடுக்குள் அனைத்தும் அந்த நீரால் மறைக்கப்பட்டது. அந்த நீர் விழுந்த இடமெங்கும் மலைகள் படைக்கப்பட்டன.(11) மலைகளால் அடர்த்தியாக நிறுவப்பட்டிருந்ததால் பூமியானது கடப்பதற்கரிதானதாக இருந்தது.(12) பல யோஜனைகளுக்கு நீண்டு கிடந்த அந்த மலைகளின் கனத்தால் பூமி நசுங்கியது.(13) நாராயணனேயான அந்தத் தெய்வீக நீரானது பூமியில் பாய்ந்து, தங்கமயமான ஆற்றலானது.(14) அந்த ஆற்றலால் தாக்கப்பட்டு, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பூமாதேவி பாதாள லோகத்திற்குள் புகுந்தாள்[2].(15) பூமி பாதாளலோகத்திற்குள் புதைந்ததைக் கண்ட மதுசூதனன், அனைத்தின் நன்மைக்காக அவளை உயர்த்துவதில் தன் கவனத்தை அர்ப்பணித்தான்.(16)
[2] இங்கே பூமி என்பதை நிலமல்லது தரையெனக் கொள்க.
மங்கலத்தலைவன் {பகவான்}, "என் பலத்தின் கனத்தால் தாக்கப்பட்டவளும், பரிதாபத்திற்குரியவளுமான பூமாதேவியானவள், ஆதரவற்றவளாகத் தூக்கி வீசப்படும் ஒரு பசுவைப் போல ரஸாதலத்திற்குச் செல்கிறாள்" என்றான்.(17)
பூமி, "மூன்று காலடிகளையும், ஒப்பற்ற பலத்தையும் கொண்டவரும் {திரிவிக்ரமனும்}, நான்கு கரங்களைக் கொண்ட பெருஞ்சிங்கமனிதரானவரும் {நரசிங்கமானவரும்}[3], மார்பில் ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியைக் தரித்தவரும், சாரங்கவில், சக்கரம், வாள், கதாயுதம் ஆகியவற்றை ஏந்தியவருனுமான புருஷோத்தமனை வணங்குகிறேன்.(18) ஆத்மாவைத் தாங்குபவர் நீரே, அண்டத்தையும், பூதங்களையும் நிலைநிறுத்தி உலகைப் பாதுகாப்பவர் நீரே.(19) ஆற்றலையும், பலத்தையும் கொண்டு அனைத்தையும் ஆள்பவர் நீரே, அதன்பிறகே நான் அவற்றைத் தாங்குகிறேன்.(20) {இந்த உலகத்தை நீர் தாங்குவதாலேயே அதை என்னால் தாங்க முடிகிறது. நீர் தாங்காத எதையும் நான் தாங்கவில்லை}[4]. உம்மால் ஆதரிக்கப்படாத பூதமேதும் இல்லை.(21) ஓ! நாராயணரே, ஒவ்வொரு யுகத்திலும் உலக நன்மைக்காக, சுமையில் இருந்து என்னை விடுவிப்பவர் நீரே.(22) உமது ஆற்றலால் தாக்கப்பட்டு நான் ரஸாதலத்திற்குள் புகுந்துவிட்டேன். நான் இப்போது உமது புகலிடத்தை நாடுகிறேன் {உம்மை நான் சரணடைந்தேன்}. என்னைக் காப்பீராக.(23) தானவர்களாலும், தீய ஆன்மா படைத்த ராட்சசர்களாலும் நான் ஒடுக்கப்படும்போதெல்லாம் நித்தியரும், ஸநாதருமான உமது புகலிடத்தையே நாடுகிறேன் {உம்மையே நான் சரணடைகிறேன்}.(24) என் மனம் அச்சத்தால் பீடிக்கப்படும்போதெல்லாம், அகன்ற தோள்களைப் படைத்தவரும், காளையைப் போன்றவருமான உம்மிடமே நூறுமுறை மனத்தால் வேண்டி உமது புகலிடத்தை நாடுகிறேன்" என்றாள்.(25)
[3] பின்வரப்போகும் நரசிம்ம, வாமன அவதாரங்களை இங்கே பூமாதேவி குறிப்பிடுகிறாள்.
[4] { } என்ற அடைப்புக்குறிக்குள் இருக்கும் இந்தத் தகவல் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை.
மங்கலத் தலைவன் {பகவான்}, "ஓ! பூமாதேவி, அஞ்சாதே. தற்கட்டுப்பாட்டுடன் அமைதியை அனுபவிப்பாயாக. உனக்குரிய இடத்திற்கு நீ விரும்பியவாறே உன்னைக் கொண்டு வருவேன்" என்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(26)
வைசம்பாயனர் {மீண்டும் ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு அந்தப் பெருந்தலைவன் தன்னுடைய தெய்வீக வடிவங்களை மனத்தில் நினைத்து, "எவ்வடிவை ஏற்று நான் பூமியை உயர்த்த வேண்டும்? {நீரில் மூழ்கியிருக்கும் பூமியை எதைக் கொண்டு நான் உயர்த்த வேண்டும்?}" என்று எண்ணினான்.(27) நீரின் அடியில் மூழ்கியிருக்கும் பூமியை உயர்த்துவது எவ்வாறு என்பதை உறுதி செய்து கொண்ட தலைவன், நீரில் விளையாடும் தன்னுடைய பன்றி வடிவை நினைத்தான்.(28) நிலத்தை நிலைநிறுத்துபவனான ஹரி, பூமியை உயர்த்துவதில் இவ்வாறே தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.(29)
வாங்மயமான {ஆயிரம் பேரொலிகளுடன் கூடிய} அந்தப் பிரம்ம வடிவம் {வராக ரூபம்} எவரும் அடைய முடியாத பத்து யோஜனைகள் அகலமும், நூறு யோஜனைகள் உயரமும் கொண்டிருந்தது.(30) அது {வராக வடிவம்} நிறத்தால் கருநீல மேகம் போல இருந்தது. அதன் குரல் மேக முழக்கத்தைப் போல இருந்தது. அஃது ஒரு பெருமலையைப் போன்ற உடல் பலத்துடனும், எரிந்து கொண்டிருக்கும் வெள்ளி தந்தங்களுடனும் இருந்தது.(31) அந்தத் தந்தங்கள் மின்னலைப் போன்றும், சூரியக் கதிர்களைப் போன்றும் ஒளிமிக்கவையாக இருந்தன. அவனது {அந்த வராகனுடைய} தோள்கள் பருத்தும், அகன்றும் இருந்தன. அவனது நடை செருக்குமிக்க வேங்கையைப் போல இருந்தது.(32) காளையின் அடையாளங்களுடன் கூடிய தோள்பட்டைகள் {காளையின் திமில்களைப் போல} நிமிர்ந்திருந்தன. ஹரி, இவ்வாறு ஒரு பெரும்பன்றியின் வடிவத்தை ஏற்று,(33) பூமியை உயர்த்துவதற்காக ரஸாதலத்திற்குள் நுழைந்தான்.
வேதங்கள் அந்தப் பன்றியின் கால்களாக இருந்தன, வேள்வியூபங்கள் அதன் பற்களாகின, வேள்வியே அதன் கைகளாகின, சித்தி {ஆன்மா} அவனது முகமானது,(34) நெருப்பு அதன் நாவானது, தர்ப்பைப் புல் அதன் மயிரானது, {ஓங்காரமான} பிரம்மமே அதன் தலையானது. பகலையும், இரவையும், கணங்களையும் பகிர்ந்தளிக்கும் அந்தப் பெரும் யோகி, வேதங்களாகவும், அவற்றின் அங்கங்களாகவும் ஸ்ருதிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(35)
{வேள்விகளின்போது ஆகுதிகளுக்குப் பயன்படுத்தப்படும் நெய் அவனது மூக்கானது. வேள்வி ஆகுதிகளையூற்றும் கரண்டிகள் அவனது நகங்களாகின. சாம வேதம் அவனது குரலானது. அவன் தர்மத்தாலும், வாய்மையாலும் நிறைந்திருந்தான். அந்த மங்கலத் தலைவன் சக்தியாலும், வீரத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(36) அவனது மூக்கு பெரும் வேள்வி பீடமாக இருந்தது. விலங்கைப் போன்ற கால்மூட்டுகளை அவன் கொண்டிருந்தான். வேள்வி அவனது வடிவமானது. உத்காதம் அவனது எல்லையானது. வேள்விச் செயல் அவனது சின்னமானது. வித்துகளும், மருந்துகளும் அவனிடம் இருந்து அடையப்படும் பேரருள்களாக இருந்தன.(37) வாயு அவனது ஆன்மாவாகவும், மந்திரங்கள் அவனது தீண்டலாகவும் இருந்தன. சோமச்சாற்றைக் குருதியாகக் கொண்ட வீரனாக அவன் இருந்தான். அவனது மணம் ஆகுதிகளுக்கு ஒப்பாக இருந்தது. தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் அளிக்கப்படும் ஆகுதிகள் அவன் செயல்படும் வேகமாக இருந்தன.(38) வேள்வியைச் செய்பவனின் உறவினர்களும் நண்பர்களும் கூடும் பிராங்வம்சம் என்ற அறையாக அவனது உடல் இருந்தது. அவன் ஒளிமிக்கவனாகத் திகழ்ந்தான். பல்வேறு அர்ப்பணிப்புகளால் அவன் வழிபடப்பட்டான். புரோஹிதருக்குக் கொடுக்கப்படும் காணிக்கையாக அவனது இதயம் இருந்தது. அவன் யோகம் பயிலும் பெரும் யோகியாக இருந்தான். வேள்விப் பொருட்கள் நிறைந்தவனாக அவன் பெரியவனாக இருந்தான்.(39) வேதங்களில் உள்ள துணைச் செயல்கள் அவனது உதடுகளை அலங்கரித்தன. அவனது உந்தி பிரவர்ஷிய செயல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மந்திர வகைகள் அவனது பாதைகளாக அமைந்தன. ரகசிய உபநிஷத்துகள் அவனது இருக்கையாகின.(40) அவன் நீரின் நிழலான தன் மனைவி சாயா தேவியுடன் இருந்தான். ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மலைச் சிகரத்தைப் போல அவன் உயரமாக இருந்தான்}[5]. உலகின் ஆசானான அவன், இவ்வாறு ஒரு வேள்விப்பன்றியின் வடிவை ஏற்று ரஸாதலத்திற்குள் நுழைந்தான்.(41)
[5] 36 முதல் 41 வரையுள்ள 5 ஸ்லோகங்களில் சொல்லப்படும் விவரிப்புகள் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. இவை சித்திர சாலை பதிப்பில் இருந்து இங்கே மொழிபெயர்த்து அளிக்கப்பட்டிருக்கிறது.
நீர்த்தாரையால் மறைக்கப்பட்டிருந்த பூமியை அவன் {ரஸாதலத்தில் கண்டான்}.(42) அந்தத் தலைவன் உலகின் நன்மைக்காக ரஸாதலத்திற்குள் நுழைந்து, அங்கே மூழ்கியிருந்த பூமியைத் தன் தந்தங்களால் உயர்த்தினான்.(43) அதன்பிறகு அந்தத் தலைவன் {வராகன்}, பூமாதேவியை அவளுக்குரிய இடத்தில் மீண்டும் நிறுவிவிட்டு லோகபாலர்களையும் நிலைநிறுத்தி அவளை விடுவித்தான். தலைவன் விஷ்ணுவால் தாங்கப்பட்டதன் விளைவால் பூமாதேவி அமைதியை அடைந்து அவனை வணங்கினாள்.(44) இவ்வாறு அந்தத் தலைவன் வேள்விப்பன்றியின் வடிவை ஏற்று, அனைவரின் நன்மைக்காகப் பூமாதேவியை உயர்த்தினான்.(45) சூரர்களில் {தேவர்களில்} முதன்மையானவனான அவன், பூமியை ரஸாதலத்தில் இருந்து உயர்த்திவிட்டு, உலகத்தின் பல்வேறு பிரிவுகளை வகுப்பதில் தன் கவனத்தை அர்ப்பணிப்பதில் தன் கண்களைக் கொண்டான்.(46,47) பெருஞ்சிறப்புவாய்ந்தவனும், ஒப்பற்ற ஆற்றல் படைத்தவனுமான அச்யுதன், ஒரு பெரும்பன்றியின் {வராக} வடிவை ஏற்று, உலக நன்மைக்காக ஒற்றைத் தந்தத்தால் பூமியை உயர்த்தினான்" என்றார் {வைசம்பாயனர்}.(48)
பவிஷ்ய பர்வம் பகுதி – 30ல் உள்ள சுலோகங்கள் : 48
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |