(வராஹப்ராதுர்பாவவர்ணநம்)
The boar incarnation of Vishnu | Bhavishya-Parva-Chapter-29 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : வராக அவதார விளக்கம்; யுக முடிவில் அண்ட அழிவு; விஷ்ணுவின் யோகத்துயில்; நாராயண மந்திரம்; விஷ்ணுவின் மகிமை...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்},[1] "பக்திமான்களான தவசிகள் புராணங்களை உரைக்கும்போது, ஒப்பற்ற சக்திவாய்ந்த விஷ்ணுவின் பன்றி அவதாரம் குறித்து நாங்கள் கேட்டிருந்தாலும்,(1) {அவனது வரலாற்றையும்}, அவனது பணிகளையும், சாதனைகளையும், நோக்கத்தையும் குறித்து ஏதும் அறிந்தோமில்லை.(2) அந்தத் தலைவன் வேள்வியின் வடிவமா? யோகத்தின் வடிவமா? அவனது உடல் பூதங்களாலானதா? மாயையால் ஆனதா? அதன் {அந்த அவதாரத்தின்} தலைமை தேவன் ஹரியா? ஹரனா? அவனது ஆற்றலும், ஒழுக்கமும் எப்படிப்பட்டது? பழங்காலத்தில் அவன் என்ன செய்தான்?(3) ஸ்ருதிகளில் பதியப்பட்டிருக்கும் இந்தப் பன்றி அவதாரத்தைக் குறித்துப் பெரியவர்களும், இருபிறப்பாளர்களுமான இவர்களின் முன்னிலையில் விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)
[1] சித்திரசாலை பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பில், ஹரிவம்சத்தின் பவிஷ்ய பர்வத்தில் 7ம் அத்யாயம் முதல் 32ம் அத்தியாயம் வரை மொழிபெயர்ப்பு இன்னும் நிறைவடையாமல் இருக்கிறது. 33 முதல் 53ம் அத்தியாயம் வரை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ள இந்த 29ம் அத்தியாயமே சித்திரசாலை பதிப்பில் 33ம் அத்தியாயமாக வருகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் ஸ்லோக எண்கள் (1-4) என்று இந்த அத்தியாயத்தின் முதல் பத்தி குறிக்கப்பட்டிருந்தாலும், சித்திரசாலை பதிப்பின் துணை கொண்டு இங்கே ஸ்லோக எண்களைக் குறிக்கத் தொடங்குகிறேன். பவிஷ்ய பர்வத்தில் 7ம் அத்தியாயத்திற்கு முன்பும், விஷ்ணுபர்வத்தின் சரி பாதி அத்தியாயங்களுக்கும் சித்திரசாலை பதிப்பின் துணை கொண்டே சுலோக எண்கள் பதியப்பட்டன. மன்மநாததத்தரின் பதிப்பில் விஷ்ணுபர்வத்தின் பாதிப் பகுதிகளுக்குப் பிறகு (1-10), (25-18) என மொத்த மொத்தமாகவே ஸ்லோக எண்கள் பதியப்பட்டிருக்கின்றன. 7 முதல், கடந்த 28ம் அத்தியாயம் வரை இப்படி மொத்தமாகக் கொடுக்கப்படும் ஸ்லோக எண்களுக்கு, சித்திரசாலை பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லாதிருந்தாலும், அதன் மூல ஸம்ஸ்கிருத ஸ்லோகங்களை ஒப்புநோக்கி ஐயத்திற்கிடமான வகையில் { } என்ற அடைப்புக்குறிக்குள் ஸ்லோக எண்கள் கொடுக்கப்பட்டு வந்தன. ஒன்றும் புரியாத இடங்களில் மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொத்தமாக ஸ்லோக எண்கள் கொடுக்கப்பட்டு வந்தன. இனி அதற்கான அவசியம் இல்லை.
வைசம்பாயனர், "ஓ! மன்னா, அறநூல்களில் கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} விரிவாக விளக்கப்பட்டிருக்கும் பேரற்புதச் செயல்களைச் செய்த கிருஷ்ணனின் பன்றி அவதாரத்தைக் குறித்து {மஹாவராஹசரிதத்தை} நான் சொல்லப் போகிறேன்.(5) ஓ! ஜனமேஜயா, நாராயணன் எவ்வாறு பன்றியின் வடிவை ஏற்றான் என்பதையும், பகைவரைக் கொல்பவனான அந்த ஹரி, ஸ்ருதியின் புனித மந்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட பன்றியின் வடிவை ஏற்று, பெருங்கடலின் அடியில் மூழ்கியிருந்த பூமியைத் தன் தந்தங்களால் எவ்வாறு உயர்த்தினான் என்பதையும் தூய்மையடைந்தவனாகவும், தற்கட்டுப்பாட்டுடனும் கேட்பாயாக.(6,7) புனிதமிக்க இந்தப் புராணம் வேதங்களைப் போன்றதும், ஸ்ருதிகளால் அலங்கரிக்கப்பட்டதுமாகும். எனவே இதை ஒரு நாத்திகனுக்கு உரைக்கக்கூடாது.(8) இந்த முழுப் புராணத்தின் பொருளையும், இதில் விளக்கப்பட்டுள்ள சாங்கிய, யோக அமைப்புகளையும் அறிந்த மனிதன் ஆன்ம அறிவை அடைந்தவனாவான்.(9)
ஆயிரம் யுகங்கள் கடந்து, பிரம்மனின் ஒரு நாள் முடிவடைந்தபிறகு, அனைத்து வகைத் தீய சகுனங்களும் தோன்றி, பூதங்கள் அனைத்தும், ஹரியையும், ஹரனையும் போன்ற புலப்படாத விருஷாகபியாகி, நெருப்பு, காற்று, சூரியனைப் போல ஹிரண்யரேதஸின் வடிவை ஏற்கும்போது, தன் தழல்களால் உலகை எரிப்பதைப் போல, விஷ்வேதேவர்கள், சாத்யர்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், அசுவினிகள் இருவர், குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்} அனைவர், ரிஷிகள் எழுவர், வசுக்கள், அப்சரஸ்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், தைத்தியர்கள், பிசாசங்கள், நாகர்கள், பலவகைப் பூதங்கள், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், மிலேச்சர்கள் ஆகியோரையும், நான்கு கால் உயிரினங்களையும், பூமியில் வாழும் தாழ்ந்த விலங்குகள் பிறவற்றையும் {அந்த விருஷாகபி} வாடச் செய்கிறான்[2].(10-15)
[2] "ஜனமேஜயன் கேட்ட கேள்விக்கான விடை 10 முதல் 14ம் ஸ்லோகத்திற்குள் சொல்லப்படுகிறது" என்ற அடிக்குறிப்பு சித்திரசாலை பதிப்பில் இருக்கிறது. இன்னும் விளங்கிக் கொள்ள இதைத் தொடர்ந்து சித்திரசாலை பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழ் பொருள் ஸ்லோகங்கள் வாரியாகத் தரப்படுகிறது. சித்திரசாலை பதிப்பில் இந்தப் பகுதி, "உலகின் தேவர்களும், சாத்யஸ்கள், ருத்திரர்கள், ஆதித்யர்கள், அசுவினி இரட்டையர், உயிரினங்களின் தலைவர்கள், சப்தமஹாரிஷிகள்,(10) மனத்தின் கருத்துகளில் இருந்து பிறந்தவர்கள், பூர்வமஹாரிஷிகள், வசுக்கள், அப்சரஸ்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள்.(11) தைத்தியர்கள், பிசாசங்கள், நாகர்கள், பல்வேறு வகைப் பூதங்கள், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் சூத்திரர்கள், பூமியில் உள்ள மிலேச்சர்கள் ஆகியோரும்,(12) நான்கு கால் உயிரினங்களும், சேதன உலகம் மொத்தமும், அசையும் உயிரினங்கள் அனைத்தும், உயிரினங்களாக அறியப்படும் அனைத்தும் (விஷ்ணுவின் (வராஹத்தின்) வடிவங்களே).(13) ஆயிரம் யுகங்களின் முடிவில், பிரம்மனின் ஒரு நாள் முடிவடையும் போது, அந்த உயிரினங்கள் அனைத்தும் (எரிகொள்ளி, நிலநடுக்கம் போன்ற) பேரிடர்களால் அழிவடையும்போது,(14) நெருப்பு, காற்று, சூரியன் என்ற மூன்று தலைகளைக் கொண்ட நெருப்பின் தேவனாக {ஹிரண்யரேதஸாக} வெளிப்படும் தலைவன் {விஷ்ணு}, மூவுலகங்களின் உடல்கள் பலவற்றையும் எரிக்கிறான்.(15)" என்றிருக்கிறது.
பிரம்மனுடைய நாளின் இறுதிப் பகுதியில் ஈஷ்வரனின் விருப்பப்படி, இதிஹாசங்கள், உபநிஷத்கள், வேதங்கள், பிற அறிவியல்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களும், நற்பணிகளில் ஈடுபடுபவர்களுமான முப்பத்துமூன்று தேவர்களும் {முப்பத்து முக்கோடி தேவர்களும்}, அவனது பிரகாசத்தால் முகங்கள் நிறம் மங்கியவர்களாக அங்கங்கள் எரிந்து, அண்டத்தின் பிறப்பிடமான பிரம்மனைத் தங்கள் முன் வைத்துக் கொண்டு, அன்னத்தின் வடிவில் இருந்த பெரும் யோகியான நாராயணனின் முன் தோன்றி அந்த ஹரிக்குள் நுழைந்தனர். இவ்வுலகில் தினமும் தோன்றி மறையும் சூரியனைப் போலத் தேவர்களும் நாராயணனில் தோன்றி மறைகின்றனர். அதை நான் விளக்கப் போகிறேன்.(16-20)
ஒரு கல்பத்தில் முழுமையாக ஆயிரம் வருடங்கள் நிறைவடையும் நேரம் நிஷேஷம் என்று அழைக்கப்படுகிறது. அஃது அழிவுக்கான கருவியாக அமைவதால் அப்போது உலகம் இருப்பதில்லை, எனவே, உயிரினங்களின் பணிகள் அனைத்தும் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன.(21) தேவர்கள், அசுரர்கள், பன்னகர்கள் உள்ளிட்ட உலகங்கள் அனைத்தையும் அழித்த பிறகு உலகத்தின் ஆசானான தலைவன் மட்டுமே தன் சுயத்தில் வாழ்கிறான்.(22) ஒவ்வொரு கல்பத்தின் முடிவிற்குப் பிறகும் தலைவன் உயிரினங்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் படைக்கிறான்.(23) தலைவன் வெளிப்படாதவனாகவும், நித்தியனாகவும் இருக்கிறான். மொத்த அண்டமும் அவனில் இருக்கிறது. சூரிய சந்திரக் கதிர்களும், புகையும், நெருப்பும், வேள்விகளும், அறச்சடங்குகளும் இல்லாத போது,(24) பறவைகள் அசைவற்று, விலங்கேதும் நகராத போது, மொத்த உலகும் இருளில் மூழ்கி அனைத்துப் புலப்படாத நிலையை அடையும்போது,(25) செயல்கள் அனைத்தும் இல்லாது போகும்போது, இடியும், நிலநடுக்கமும், பிற தீய சகுனங்களும் மறையும்போது, பகைவர்கள் அழிவடையும்போது,(26) நாராயணனாக இருக்கும் அண்டமானவன், பேராத்மாவான ரிஷிகேசனின் சமநிலையை அடைந்து உறங்க முயற்சிக்கிறான்.(27)
ஆயிரம் தழல்களைப் போன்ற சடாமுடி தரித்தவனும், மஞ்சள் பீதாம்பரம் உடுத்தியவனும், மேகத்துக்கு ஒப்பான வண்ணத்தையும், சிவந்த கண்களையும்,(28) செஞ்சந்தனம் பூசிய மார்பையும் கொண்டவனும், ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியால் அலங்கரிக்கப்பட்டவனுமான கிருஷ்ணன் {விஷ்ணு}, மின்னலுடன் கூடிய ஒரு மேகத்தைப் போல அங்கே தோன்றுகிறான்.(29) ஆயிரந்தாமரைகளைக் கொண்ட மாலை அவனது கழுத்தை அலங்கரிக்கிறது, அவனது மனைவியான லக்ஷ்மி மட்டுமே அவனுடன் {அவனில் பாதி உடலாக} இருக்கிறாள்.(30) அதன்பிறகு ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவனும், அறமேயானவனும், அனைவரின் பெரும்பாட்டனுமான விஷ்ணு, விவரிக்க முடியாத யோகத்துயிலுக்குள் நுழைகிறான்.(31)
தேவர்கள் அனைவரையும் ஆள்பவனான அவன், ஆயிரம் ஆண்டுகள் முடிந்த பிறகு தலைவன் புருஷோத்தமனாக விழித்தெழுகிறான்.(32) அப்போது தலைவன் அண்டத்தைப் படைக்க மீண்டும் நினைக்கிறான். அவன் தன்னுடைய பரமசக்தியைக் கொண்டு பித்ருக்களையும், தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் படைக்கிறான்.(33) அதன் பிறகு தேவர்களின் பணிகளை அவன் நினைக்கிறான். வாக்கின் தேவனான அவன் அதன் பிறகு உலகங்கள் அனைத்தையும் படைக்கிறான்.(34) அந்தத் தலைவனே படைப்பவனாகவும், பாதுகாப்பவனாகவும், அழிப்பவனாகவும் இருக்கிறான்; அவனே விதியை விதிப்பவனாக இருக்கிறான். தற்கட்டுப்பாடாகவும், விதியாகவும் அவனே இருக்கிறான்.(35)
தேவர்களனைவரும் நாராயணனே, செயல்களனைத்தும் நாராயணனே, மதிப்புகளனைத்தும் நாராயணனே, யஜ்ஞமும், ஸ்ருதியும் நாராயணனே.(36) முக்தியாயிருப்பவன் நாராயணனே, அனைவரின் கதியும் நாராயணனே, அறமும், பலமும் நாராயணனே.(37) ஞானமும், தவங்களும் நாராயணனே, வாய்மையெதுவும் நாராயணனே. நாராயணனுக்கும் மேலான தேவன் வேறெவனும் இல்லை; இருக்கவும் முடியாது[3].(38)
[3] இதன் ஸம்ஸ்கிருத மூலம்,"நாராயணபரா தே³வா நாராயணபரா꞉ க்ரியா꞉ |நாராயணபரோ யஜ்ஞோ நாராயணபரா ஷ்²ருதி꞉ ||36நாராயணபரோ மோக்ஷோ நாராயணபரா க³தி꞉ |நாராயணபரோ த⁴ர்மோ நாராயணபரம் க்ரது꞉ ||37நாராயணபரம் ஜ்ஞாநம் நாராயணபரம் தப꞉ |நாராயணபரம் ஸத்யம் நாராயணபரம் பத³ம் |நாராயணபரோ தே³வோ ந பூ⁴தோ ந ப⁴விஷ்யதி ||38" என்றிருக்கிறது.
சுயம்புவாக எழுந்த தேவனும், அண்டத்தின் தலைவனும் அவனே; உற்றறியும் ஞானத்திற்குள்ளும், காற்று என்று கருதப்படுவதற்குள்ளும் பிரம்மனாக இருப்பவன் இருக்கிறான். யஜ்ஞம் அவனே.(39) வெளிப்பட்டவனாகவும், வெளிப்படாதவனாகவும் அறியப்படுபவன் அவனே. எல்லாம் வல்லவனும், அனைத்தையும் படைத்தவனும் அவனே.(40) புலன்களால் முடியாததை வெளிப்படுத்துபவன் அவனே. அவனால் வெளிப்படுத்த முடியாததைப் புலன்களால் உணர முடியாது. தேவர்களாலும், குடிமுதல்வர்களாலும், சப்தரிஷிகளாலும் கூட அறிந்து கொள்ள இயலாத எல்லையைக் கொண்டவன் அவனே.(41)
எல்லையற்றவன் என ஸ்ருதியால் சொல்லப்படுபவன் அவனே. தேவர்களாலும் காண முடியாத உயர்ந்த வடிவைக் கொண்டவன் அவனே.(42) அவதாரத்தின்போது அவன் ஏற்கும் வடிவையே அவர்கள் துதிக்கிறார்கள். அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வடிவில் மட்டுமே தேவர்கள் அவனைப் பார்க்கிறார்கள். அவன் காட்டாத வடிவை எவராலும் தேடிக் காண முடியாது.(43) பூதங்களின் தலைவனும், உயிர் காற்றின் {பிராணவாயுவின்} அசைவும், செரிமானமெனும் நெருப்பும் அவனே. சக்தியையும், தவத்தையும், அமுதத்தையும் பகிர்ந்தளிப்பவன் அவனே.(44) நான்கு ஆசிரமங்களின் சதுர்ஹோத்ரப் பலன்களை அனுபவிப்பவன் அவனே. நான்கு யுகங்களையும், நான்கு பெருங்கடல்களையும் விதிப்பவன் அவனே.(45) பெரும் யோகி அவனே. அண்டத்தை அழித்து, ஆயிரம் வருடங்கள் தன் கருவறையில் கொண்டு, முட்டையைப் பொறிக்கச் செய்பவன் அவனே.(46) எல்லாம் வல்ல இந்தப் பிரஜாபதியே தேவர்கள், அசுரர்கள், பிராமணர்கள், நாகர்கள், அப்சரஸ்கள், மூலிகைகள், அண்டத்தைத் தாங்கும் லோகபாலர்கள், யக்ஷர்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள் ஆகியோரைப் படைக்கிறான்" என்றார் {வைசம்பாயனர்}.(47).
பவிஷ்ய பர்வம் பகுதி – 29ல் உள்ள சுலோகங்கள் : 47
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |