Thursday 1 April 2021

கலியுகம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 03

(வியாஸோக்தம் கலியுகபவிஷ்யம்)

An account of Kali yuga | Bhavishya-Parva-Chapter-03 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : கலியுகத்தை வர்ணித்த வியாசர்...


Kalachakram

ஜனமேஜயன் {வியாசரிடம்}, "ஓ! அறமறிந்தவனே, உயிரினங்களுக்குக் கேட்டையும், அறத்திற்கு அழிவையும் ஏற்படுத்தும் கலியுகம் தொடங்கப் போகிறது. எனவே, அதன் தன்மைகளைக் குறித்து விளக்குவாயாக" என்றார்.(3)

சௌதி, "தெய்வீகரான வியாசர், இவ்வாறு கேட்கப்பட்டதும், கலியுகத்தில் மனிதர்களின் நிலை குறித்துத் துல்லியமாகச் சிந்தித்து, எதிர்கால யுகத்தை விளக்கத் தொடங்கினார்.(4)

வியாசர், "கலி தொடங்கியதும், குடிமக்களைப் பாதுகாக்க இயலாத மன்னர்கள், காலமேதும் பார்க்காமல் அவர்களிடம் இருந்து கப்பங்களைப் பெற்றுக் கொண்டு தங்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்வர்.(5) இந்த யுகத்தின் முடிவில் மன்னர்கள் க்ஷத்திரியர்களாகச் செயல்படமாட்டார்கள் {க்ஷத்திரியர்கள் மன்னர்களாக மாட்டார்கள்}, பிராமணர்கள் சூத்திரர்களைப் போன்ற வாழ்வை மேற்கொள்வார்கள் {பிராமணர்கள் சூத்திரர்களிடம் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவார்கள்}, சூத்திரர்கள் பிராமணர்களைப் போல நடந்து கொள்வார்கள் {சூத்திரர்கள், பிராமணர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவார்கள்}.(6)

ஓ! ஜனமேஜயா, இந்த யுகத்தின் முடிவில் ஸ்ருதிகளையும், வேதங்களையும் நன்கறிந்த பிராமணர்கள், {க்ஷத்திரியர்களுக்கான} கணைகளை எடுத்துக் கொண்டு, வேள்விகளில் இருந்து ஹவிஸை விலக்குவார்கள் {ஹோமம் செய்ய மாட்டார்கள்}, மக்கள் அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து உண்பார்கள்[1].(7) இறுதி யுகமான கலி தோன்றும்போது மனிதர்கள் சிற்பிகளாகவும், பொய்யர்களாகவும், இறைச்சியையும், மதுவையும் விரும்புகிறவர்களாகவும், நண்பர்களின் மனைவியரை அறிபவர்களாகவும் இருப்பார்கள்[2].(8) கலியுகத்தில் கள்வர்கள் மன்னரைப் போலவும், மன்னர்கள் கள்வரைப் போலவும் செயல்படுவார்கள், பணியாட்கள் உரிமையில்லாத வருவாயை அனுபவிப்பார்கள்.(9)

[1] சித்திரசாலை பதிப்பில், "யுக முடிவில், போரிடும் தர்மத்தைப் பின்பற்றும் க்ஷத்திரியர்களிடம் இருந்து கணையையும், வில்லையும் எடுத்துக் கொள்ளும் பிராமணர்களும், வேதங்களைக் கற்ற பிராமணர்களும், நெருப்பில் ஆகுதிகளைச் செலுத்தாமல் ஒரே வரிசையில் அமர்ந்து உண்பார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "யுக முடிவில் காண்டேஸ்ப்ருஷ்டர்களும், கல்விமான்களான பிராமணர்களும் ஒரே வரிசையில் ஒன்றாக அமர்ந்து வேள்வி உணவை உண்பார்கள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "காண்டேஸ்ப்ருஷ்டம் என்பதற்குக் கணையின் பின்புறம் என்று பொருள். இவர்கள் கணைகளையும், பிற ஆயுதங்களையும் விற்பனை செய்வதன் மூலம் வாழ்வாதாரம் ஈட்டும் பிராமணர்கள். இவர்கள் பிராமண ஒழுங்கில் இருந்து வழுவியவர்கள். அந்தக் காலத்தில், கல்விமான்களான ஷ்ரோத்ரிய பிராமணர்களுடன் அவர்கள் ஒரே வரிசையில் அமர்ந்து உண்பது முறையாகாது" என்றிருக்கிறது.

[2] சித்திரசாலை பதிப்பில், "யுக முடிவில் பொய்பேசும் சிற்பிகளும், இறைச்சியையும், மதுவையும் விரும்பும் மனிதர்களும், மனைவியரை நண்பர்களாகக் கருதும் மனிதர்களும் இருப்பார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "யுக முடிவில் மனிதர்கள் சிற்பிகளாகவும், பொய் பேசுபவர்களாகவும், இறைச்சிக்கும், மதுவுக்கும் அடிமைகளாகவும், தங்கள் மனைவியரைப் பகைவராகக் கருதுபர்களாகவும் இருப்பார்கள்" என்றிருக்கிறது. ஐயமேற்படும் இடங்களில் அல்லனவன்றி நல்லனக் கொள்ளல் இயல்பாம்.

இறுதி யுகத்தில் செல்வமே உயர்வாகப் பேசப்படும், நல்லோரின் குணம் இகழப்படும், {குணத்தில்} வீழ்ச்சியடைந்தவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.(10) பாவ புண்ணியம் கருதாத கைம்பெண்களும், தவசிகளும், பதினைந்து வயதே உடைய மனிதர்களும் {பதினாறு வயதைக் கடக்காதவர்களும்} வரைமுறையற்ற கலவியின் மூலம் பிள்ளைகளைப் பெறுவார்கள்.(11) அந்த இறுதி யுகத்தில் ஊரார் உணவை விற்பனை செய்வர், பிராமணர்கள் வேதங்களை விற்பனை செய்வர், பெண்கள் தங்கள் மேனிகளை விற்பனை செய்வர்.(12) இந்த யுகத்தில் அனைவரும் வேதங்களைப் படிப்பார்கள், வாஜஸநேயி வேள்விகளைச் செய்வார்கள், சூத்திரர்கள் அனைவரையும் "ஓ! {ஏய்}" என்றழைப்பார்கள்.(13) {யுகம் தாழும்போது பிராமணர்கள், தவப்பயன்களையும், வேள்விப் பயன்களையும் விற்பனை செய்வார்கள், பருவகாலங்கள் முரண்படும்}.(14) புத்தனின் {நல்லோனின்} போதனைகளைப் பின்பற்றும் சூத்திரர்கள் இறைச்சி உண்பதை விலக்குவார்கள். வெண்பற்களையும், கூரிய கவனத்தையும் கொண்ட அவர்கள், தங்கள் தலைகளை மழித்துக் கொண்டு, பட்டாடைகளை உடுத்திக் கொண்டு {சாக்கிய} அறம் பயில்வார்கள்[3].(15)

[3] 14ம் ஸ்லோகத்தில் உள்ள செய்தி மன்மதநாததத்தரின் பதிப்பில் இங்கே இல்லை. மாறாக 17ம் ஸ்லோகத்திற்குப் பிறகு வருகிறது. இங்கே அடைப்புக்குறிக்குள் கொடுத்துவிட்டதால் இந்த ஸ்லோகத்தில் உள்ள செய்தியை மீண்டும் அங்கே கொடுக்கவில்லை. சித்திரசாலை பதிப்பில் இருந்து இங்கே மொழிபெயர்த்துத் தரப்பட்டிருக்கிறது. 15ம் ஸ்லோகமானது சித்திரசாலை பதிப்பில், "வெண்பற்களையும், அஞ்சனமிட்ட கண்களையும், மழித்த தலைகளையும் கொண்டவர்களும், பட்டுடை உடுத்தியவர்களுமான சூத்திரர்கள், சாக்கிய புத்த தர்மத்தைப் பின்பற்றித் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சூத்திரர்கள், சாக்கிய புத்தனால் குறிப்பிடப்பட்ட வாழ்வாதாரத்தைப் பின்பற்றித் தர்மம் பயில்வார்கள். அவர்கள் தங்கள் வெண்பற்களை வெளிப்படுத்துவார்கள், தங்கள் கண்களைத் தாழ்த்த மாட்டார்கள் {இமைக்கமாட்டார்கள்}. அவர்கள் தங்கள் தலைகளை மழித்துக் கொண்டு, பட்டாடை உடுத்திக் கொள்வார்கள்" என்றிருக்கிறது.

தந்தங்களையும், பற்களையும் கொண்ட விலங்குகள் ஏர்களிலும், வண்டிகளிலும் பூட்டப்படும், மனிதர்கள் குளங்களில் உள்ள நீரைக் கொண்டு உழுவார்கள், மேகங்கள் ஒழுங்கற்ற முறையில் நீரைப் பொழியும்.(16+18) மிலேச்சர்கள் குரு பாஞ்சால மாகாணத்தில் வாழ்வார்கள், அந்த {குரு பாஞ்சால} நாட்டைச் சேர்ந்த மக்கள் முன்னவர்களின் {மிலேச்சர்களின்} மாகாணத்தில் வாழ்வார்கள். யுகத்தின் முடிவில் மனிதர்கள் வீழ்ச்சியடைவார்கள்[4].(17[16-18]) பிராமணர்கள், தவப்பயன்களையும், வேள்விப் பயன்களையும் விற்பார்கள். கள்வர்கள் ஒருவருக்கொருவர் செல்வத்தைக் களவு செய்வார்கள், இழிந்த மனிதர்கள் சொற்ப செல்வத்தை அடைந்து வளமாகத் திகழ்வார்கள்.(19) இந்த இறுதி யுகத்தில் மனிதர்கள் அறச்சடங்குகளைப் புறக்கணிப்பார்கள், நிலப்பகுதிகள் பாலைவனங்கள் நிறைந்ததாக இருக்கும், நகரங்களில் பல சாலைகளின் மூலம் போக்குவரத்து நடைபெறும்.(20) கலியுகத்தில் அனைவரும் வணிகராவர், மகன்கள் தங்கள் மூதாதையரின் {தந்தைமாரின்} கொடைகளை உடனே பிரித்துக் கொள்வார்கள். பேராசையாலும், பொய்மையினாலும் தூண்டப்படும் மக்கள் ஒருவரோடொருவர் போரிட்டுச் செல்வங்களைக் கொள்ளையடிப்பர்.(21) பெண்கள், அழகும், நளினமும், ஆபரணங்களும் இல்லாதவர்களாக மயிரால் மட்டுமே தங்களை அலங்கரித்துக் கொள்வர்.(22)

[4] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்தப் பகுதி ஸ்லோக எண்களின் அடிப்படையிலும், கொண்ட பொருளின் அடிப்படையிலும் குழப்பமாகவே அளிக்கப்பட்டிருக்கிறது. 17, 14, 16, 18 என்ற ஸ்லோக வரிசையில் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. தனித்தனி சுலோக எண்களைக் குறிக்காமல் 16-22 என்று மொத்தமாகக் கொடுக்கும்போது இந்தக் குழப்பம் நேரிடுகிறது. விஷ்ணு பர்வத்தின் முக்கால் பாகத்திற்குப் பிறகு மன்மதநாததத்தர் ஸ்லோக எண்களை மொத்தமாகவே {அதாவது 8-13, 14-20, 21-35 என்ற வகையிலேயே} அளித்து வருகிறார். சித்திரசாலை பதிப்பின் துணை கொண்டு நமது தமிழ்ப்பதிப்பில் ஒவ்வொரு செய்திக்கும் ஸ்லோக எண்கள் கொடுக்கப்படுகின்றன. இப்போதும் இங்கே அதன்படியே வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி பொருள் மாறுபாட்டை நோக்குவோம். சித்திரசாலை பதிப்பில் 16ம் ஸ்லோகம், "யுகம் முடிவை எட்டும்போது நாய் வகையைச் சேர்ந்த விலங்குகள் அதிகமாக இருக்கும், பசுக்களின் எண்ணிக்கை குறையும், சுவையான உணவு அரிதாக இருக்கும்" என்றும், 18ம் ஸ்லோகம், "யுகம் வீழ்ச்சியடையும்போது, இரண்டு வயதேயான எருதுகளும் வண்டி இழுக்கவும், ஏர் உழவும் பயன்படும், மேகங்கள் ஆச்சரியமான வகையில் மழை பொழியும்" என்றிருக்கிறது. மேற்கண்ட இரண்டு ஸ்லோகங்களுக்கான செய்தியானது பிபேக்திப்ராய் பதிப்பில், "ஊனுண்ணும் விலங்குகள் எண்ணிக்கையில் பெருகும், கால்நடைகளின் எண்ணிக்கை குறுகும். யுக முடிவில் சுவையுள்ள உணவைப் பெற அரிதாகும், கல்வி வீழ்ச்சியடையும். யுகம் அழியும்போது, இரண்டு வயதேயான காளைகள் ஏரில் பூட்டுவதற்கும், உழுவதற்கும் பயன்படும், இயல்புக்கு மீறிய வகையில் மழை பொழியும்" என்றிருக்கிறது.

யுகத்தின் முடிவு நெருங்கும்போது, எந்த வித இன்பத்துக்கும் இடமில்லாத இல்லறவாசிக்கு, அவனுடைய மனைவியே இறுதி கதியாக இருப்பாள்[5].(23) தீயவர்களும், ஆரியரல்லாதவரும் {உன்னதரல்லாதவரும்} பெருகும்போது, பொருத்தமில்லாத வகையில் பெண்களின் எண்ணிக்கைப் பெருகி, ஆண்களின் எண்ணிக்கைக் குறையும் போது, அதுவே யுக முடிவுக்கான அறிகுறி என்பதை அறிவாயாக.(24) அப்போது அனைவரும் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள், எவரும் பிச்சை அளிக்க மாட்டார்கள். மக்கள் எந்த வேறுபாடும் இன்றிப் பிற வர்ணத்தாரிடம் இருந்து கொடைகளை ஏற்பார்கள்.(25) மன்னர்கள், கள்வர்கள், நெருப்பு ஆகியவற்றால் பீடிக்கப்படும் மக்கள் அழிவை அடைவார்கள். இந்த இறுதியுகத்தில் மக்கள் பயிர்களைப் பெற மாட்டார்கள் {விதைத்த விதை பயன்தராது}. இளைஞர்கள் முதுமையை அடைவார்கள். மக்கள் தங்கள் தீய நோக்கத்தின் காரணமாக மகிழ்ச்சியை அடையமாட்டார்கள் {அவர்கள் இன்புறுவது பகல்கனவே}.(26) மழைக்காலத்தில் காற்றானது மேலும், கீழுமாக வீசி புழுதியை {அல்லது கற்களைப்} பொழியும், மக்களிடம் மறுமை குறித்த ஐயங்கள் இருக்கும்.(27) அனைவரும் இயல்பாகவே தீயவர்களாகவும், கடவுளைப் பழிப்பவர்களாகவும், அகங்காரம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பேராசை கொண்ட பிராமணர்கள் ஒருவரையொருவர் பழித்துக் கொள்வார்கள்.(28) க்ஷத்திரியர்கள், வைசியர்களின் வழிகளைப் பின்பற்றி வேளாண்மையிலும், வணிகத்திலும் ஈடுபடுவார்கள். பிராமணர்கள் அறத்தின் கண்ணியத்தைக் கெடுப்பார்கள்.(29)

[5] இந்த ஸ்லோகத்தில் உள்ள செய்தி மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. மேலே சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்த்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "யுக முடிவின்போது, இல்லறவாசிகள் புகலிடம் ஏதும் இல்லாமல் அச்சமடைவார்கள். மனைவியைப் போல வேறு எவரிடமும் அன்பு செலுத்தக் கூடாது என்று அவர்கள் நம்புவார்கள்" என்றிருக்கிறது.

யுக முடிவில் மனிதர்கள் தங்கள் நோன்புகளையும், {உடன்பாடுகளையும்}, உறுதிமொழியையும் பின்பற்றமாட்டார்கள். அவர்கள், தங்கள் மதிப்பைக் கைவிட்டுக் கடன்களை அடைக்காமல் இருப்பார்கள்.(30) மனிதனின் இன்பம் பயனற்றதாகவும், அவனது கோபம் பயனுள்ளதாகவும் இருக்கும். ஆடுகளும், பாலுக்காகவே மதிக்கப்படும்.(31) யுக முடிவில், சாத்திர ஞானமற்ற மனிதர்கள் இயல்பாக இவ்வாறே நடந்து கொள்வார்கள். கல்வியில் செருக்குடைய மனிதர்கள், அற விதிகளை அலட்சியம் செய்வதோடல்லாமல் {தங்களுக்கு ஏற்ற வகையில்} சாத்திரங்களுக்கு விளக்கமுமளிப்பார்கள்.(32) இறுதி யுகத்தின் போது, பெரியோரின் போதனைகள் இல்லாமலேயே அனைத்துக் கிளைகளிலும் தாங்கள் ஞானத்தை அடைந்ததாக அனைவரும்  கருதுவார்கள்.(33)  கவியல்லாதவன் {ஞானியல்லாதவன்} எவனும் இருக்க மாட்டான் {விதிவிலக்கின்றி அனைவரும் தங்களை ஞானியாகவே கருதுவார்கள்}. பிராமணர்கள், தங்கள் அறக்கடமைகளில் இருந்து விலகி கணிகர்களாவார்கள் {சோதிடர்களாவார்கள்}, மன்னர்கள் கள்வர்களாவார்கள்[6].(34)

[6] சித்திரசாலை பதிப்பில், "சாத்திரங்களுக்கு முரண்பட்ட செயல்களைச் செய்வதில் நிலைத்திருக்கும் பிராமணர்கள், அறம் செய்ய க்ஷத்திரியர்களுக்கு வழிகாட்ட மாட்டார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஞானி என்ற பட்டத்துக்குத் தகுந்தவன் எவனும் இருக்கமாட்டான், க்ஷத்திரியர்கள் முரண்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடும்போது பிராமணர்கள் அவர்களைத் தடுக்க மாட்டார்கள்" என்றிருக்கிறது.

யுக முடிவில், கள்ள உறவில் பிறந்த பெண்களுடன் வசிப்பவர்கள் {குண்டர்கள்}, வஞ்சகர்கள், குடிகாரர்கள் {சுராபானம் அருந்துவோர்} ஆகியோர் பிரம்மவாதிகளாகி குதிரை வேள்விகளைச் செய்வார்கள்.(35) பிராமணர்கள், செல்வமீட்டும் விருப்பத்தில் தகுதியில்லாதவர்களுக்குப் புரோஹிதம் செய்து, விலக்கப்பட்ட உணவை உண்பார்கள்.(36) அனைவரும் "போ {ஏய்}" என்பார்கள் {மதிப்பின்றியே பேசுவார்கள்}, எவரும் வேதங்களைக் கற்க மாட்டார்கள். பெண்கள் ஒரேயொரு சங்கு வளையலை அணிவார்கள், நெல்லின் வடிவிலான ஆபரணத்தையே பயன்படுத்துவார்கள்.(37) யுக முடிவு நெருங்கும் வேளையில், விண்மீன்கள் உரிய கோள்களுடன் சேராது, திக்குகள் முரண்படும், மாலை வேளையின் தோற்றம் எப்போதும் எரிவதைப் போலவே தெரியும்.(38)

மகன், தன் தந்தையைப் பணிகளில் ஈடுபடுத்துவான், மருமகள் மாமியாருக்கு ஆணையிடுவாள். மனிதர்கள், விலங்குகளுடனும், பல்வேறு சாதிப் பெண்களுடனும் கூடி வாழ்வார்கள் {உறவு கொள்வார்கள்}.(39) சீடர்கள், சொற்கணைகளால் ஆசான்களைக் காயப்படுத்துவார்கள், மேலும் வெறிபிடித்த மனிதர்கள் பல காரியங்கள் குறித்துப் பேசுவார்கள்.(40) அக்னிஹோத்ரிகள், முதல் நான்கு ஆகுதிகளைத் தேவர்களுக்குப் படைக்காமல், தங்கள் உணவை உண்பார்கள். மனிதர்கள், தங்கள் விருந்தினர்களுக்கு உணவை அளிக்காமல் தாங்களே உண்பார்கள்.(41) பெண்கள், உறங்கிக் கொண்டிருக்கும் தங்கள் கணவர்களை வஞ்சித்துப் பிறரிடம் செல்வார்கள், ஆண்களும், உறங்கிக் கொண்டிருக்கும் தங்கள் மனைவிகளை விட்டு விட்டு பிற பெண்களிடம் செல்வார்கள்.(42) யுகம் முடியும்போது, பிணிகள், மன வேதனை, பொறாமை ஆகியவை மனிதர்களைப் பீடிக்கும், அவர்கள் தங்கள் செயல்களுக்குத் தீர்வு காண மாட்டார்கள்" என்றார் {வியாசர்}.(43)

பவிஷ்ய பர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 43

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்