Sunday, 4 April 2021

கலியுக விளக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 04

(கலியுகவர்ணநம்)

Kali yuga described | Bhavishya-Parva-Chapter-04 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : கலியுகத்தை வர்ணித்த வியாசர்...


satya-yuga, the end of Kali Yuga

ஜனமேஜயன் {வியாசரிடம்}, "மொத்த உலகும் இவ்வாறு மாசடையும்போது, மனிதர்கள் எவரால் பாதுகாக்கப்படுவார்கள்? அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்? அவர்கள் எதை உண்பார்கள்? அவர்கள் எவ்வாறு இன்புற்றிருப்பார்கள்?(1) அவர்களின் செயல்பாடுகளும், முயற்சிகளும் எவ்வாறு இருக்கும்? அவர்கள் எவ்வளவு காலம் வாழ்வார்கள்? அவர்கள் {மனிதர்கள்} எந்த எல்லையை எட்டியதும் சத்திய யுகத்தை அடைவார்கள்?" என்று கேட்டான்.(2)

வியாசர், "அறம் ஆட்டம்கண்டு, நல்லொழுக்கம் அரிதாகும்போது, அருஞ்செயல்களைச் சாதிக்காத மனிதர்கள் குறுகிய காலமே வாழ்வார்கள்.(3) வாழ்நாள் குறைந்ததும், அவர்களின் வலிமையும் குறையும், அஃது அவர்களின் நிறத்தில் பிறழ்வுகளுக்கு வழிவகுத்து பிணிகளை உண்டாக்கும்.(4) இது மனவருத்தத்தை உண்டாக்கி கடவுளின் நினைவை ஏற்படுத்தும் {உலகம் சார்ந்த நோக்கங்களில் ஏற்படும் அக்கறையின்மையால் அவர்கள் தங்கள் ஆன்மாவை உணரும் நிலையை அடைவார்கள்}. அது மீண்டும் அறத்தை விளைவிக்கும். இந்த எல்லையுடன் அவர்கள் சத்திய யுகத்தை அடைவார்கள்.(5)

சிலர், சொற்களில் மட்டுமே அறத்தைப் பின்பற்றி அக்கறையற்றவர்களாக இருப்பார்கள், மனசாட்சியுடன் கூடிய சிலர் ஆர்வத்துடன் காரணங்களை ஆய்ந்து அறிவார்கள்.(6) ஐயங்களில் இருந்து விடுபட்ட மனங்களைக் கொண்டவர்களும், கல்வியில் செருக்குடையவர்களுமான சில மனிதர்கள், ஊகங்களுக்கும் {அனுமானங்களுக்கும்}, சான்றுகளுக்கும் {ஆதாரங்களுக்கும்} இடையிலான ஒற்றுமையைக் காண்பார்கள்.(7) வேறு சிலர் வேதங்களை ஏற்க மாட்டார்கள். {இந்த யுகத்தில் பெண்கள் பலர், தங்கள் பிறப்புறுப்புகளால் செய்வதைத் தங்கள் வாயால் செய்வார்கள்}.(8) அறியாமை கொண்ட தீய மனிதர்கள், கல்வியில் செருக்குண்டு நாத்திகர்களாவார்கள். {மனிதர்கள் குழப்பம் நிறைந்தவர்கள் ஆவார்கள், மந்த புத்தி கொண்டோர் தங்களை ஞானிகளாகக் கருதுவார்கள்}[1].(9) அவர்கள் செருக்கடைந்தவர்களாகச் சாத்திர ஞானத்தில் இருந்து விலகுவார்கள். அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் பொருள்களில் மதிப்பு கொண்டவர்களாகவும், விவாதங்களை விரும்புகிறவர்களாகவும் இருப்பார்கள்.(10) யுக சுழற்சி ஆட்டங்காணும்போது, சில மனிதர்கள் (விஷ்ணுவின்) இறுதி வகைமையைப் பின்பற்றுவார்கள். கொடைகளுடனும், வாய்மையுடனும் அவர்கள் கருணைச் செயல்கள் பலவற்றைச் செய்வார்கள்[2].(11)

[1] 8, 9ம் ஸ்லோகங்களில் அடைப்புக்குறிகளுக்குள் இருப்பவை சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவையாகும். இவை மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வேறு சிலர் வேதங்களில் பேசப்படுபவை நிரூபிக்கப்பட்டவை அல்ல என்று கருதுவார்கள். சிலர் நம்பிக்கையற்றவர்களாவார்கள். சிலர் தர்மத்திற்கு அழிவை ஏற்படுத்துவார்கள். மனிதர்கள் மூடர்களாகவும், தீயவர்களாகவும், கல்வியில் செருக்கு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்" என்றிருக்கிறது.

[2] சித்திரசாலை பதிப்பில், "இவ்வாறு தர்மத்தில் இருந்து பிறழும்போதே மக்கள் எஞ்சியிருக்கும் தர்மங்களையும் (விஷ்ணு பக்தி போன்ற தர்மங்களையும்), மங்கலமான பிற செயல்களையும் செய்து, கொடையளித்து வாய்மையுடன் திகழ்வார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தர்மம் இவ்வழியில் அழிவடையும் என்றாலும், மங்கலமானவற்றையும், கருணை நிறைந்தவற்றையும், வாய்மையுடன் கூடியவற்றையும் எஞ்சியிருக்கும் சிலர் பின்பற்றுவார்கள்" என்றிருக்கிறது.

அந்தக் காலத்தில் மக்கள் அனைத்து வகைப் பொருட்களையும் உண்பார்கள், கட்டுப்பாடு இல்லாத புலன்களுடன் கூடியவர்களாகவும், சாதனைகளற்றவர்களாகவும், வெட்கம் கெட்டவர்களாகவும் இருப்பார்கள். பாவத்தின் மொத்த அடையாளமாக இதை அறிவாயாக.(12) பிராமணர்களுடைய வாழ்வுத் தேவையின் நித்திய வழிமுறையான இரத்தலை க்ஷத்திரியர்களும், பிற வகையினரும் {வர்ணத்தாரும்} தங்கள் வாழ்வாதாரமாகக் கொள்ளும்போது, பாவம் பீடித்ததன் {யுகம் வீழ்ந்ததன்} அடையாளமாக அதை அறிவாயாக.(13) ஞானத்திற்கும், கல்விக்கும் அழிவைக் கொண்டு வரும் இந்த யுகம், பாவத்தால் நிறைந்ததாக இருக்கும், பிரம்மச்சரிய {பற்றற்ற} வாழ்க்கையைப் பின்பற்றும் மக்கள், குறுகிய காலத்திற்குள் ஆன்மிக முழுமையை அடைவார்கள்.(14)

இறுதி யுகத்தில் பெரும்போர்களும், பெருங்குழப்பங்களும், பெரும் மழைகளும், பேரச்சங்களும் விளையும்; பாவம் நிறைந்த தன்மையின் {யுக வீழ்ச்சியின்} அடையாளங்களாக இவற்றை அறிவாயாக.(15) யுக முடிவில், ராட்சசர்கள், கடுஞ்சொற்களைப் பேசுவதையே நோக்கமாகக் கொண்ட பிராமணர்களாகவும், மன்னர்களாகவும் இருந்து பூமியை அனுபவிப்பார்கள்[3].(16) வேத கல்வி கற்றல், வேள்விகள் வேட்டல், அறநெறிகளைப் பின்பற்றல் ஆகியவற்றில் இருந்து விலகும் மனிதர்கள், செருக்குடையவர்களாகவும், அவதூறு பேசுபவர்களாகவும், அனைத்தையும் உண்பவர்களாகவும், பயனற்ற சடங்குகளைச் செய்பவர்களாகவும்,(17) மூடர்களாகவும், தன்னலம் கொண்டவர்களாகவும், பேராசை கொண்டவர்களாகவும், தகாத உடைகளை உடுத்துபவர்களாகவும், இழிந்தவர்களாகவும், நிலைத்து நீடிக்கும் அறத்தில் {சனாதன தர்மத்தில்} இருந்து வழுவியவர்களாகவும்,(18) பிறரின் செல்வங்களைக் கொள்ளை அடிப்பவர்களாகவும், பிறன் மனைவியரைக் கெடுப்பவராகவும், காமாந்தகராகவும், தீயவர்களாகவும், வஞ்சகர்களாகவும் இருப்பார்கள்.(19) மக்கள் ஒரே {தீய} குணத்துடன் கூடியவர்களாக எங்கும் புகழ்பெறும்போது, {ஆன்மா இல்லை என்று சொல்பவர்களான} பல்வேறு வடிவங்களிலான தவசிகளும் தோன்றுவார்கள்.(20) பிரதான புருஷனை {பரமாத்மாவைச்} சார்ந்தவர்களும், கிருத யுகத்தில் பிறந்தவர்களுமான அனைவரும் சொற்களின் மூலம் {கதைகளின் மூலம் (சொற்பொழிவுகளில்) இந்த யுகத்தில்} மக்களால் வழிபடப்படுவார்கள்[4].(21)

[3] சித்திரசாலை பதிப்பில், "யுகம் வீழும்போது, ராட்சசர்கள் பிராமணர்களின் வடிவில் தோன்றுவார்கள். மன்னர்கள், வதந்திகளை உண்மையாகக் கருதி, பூமியைப் பாழாக்குவார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ராட்சசர்கள் பிராமணர்களின் வடிவில் தோன்றுவார்கள், மன்னர்கள் வதந்திகளைக் கேட்பார்கள்" என்றிருக்கிறது.

[4] சித்திரசாலை பதிப்பில், "கிருத யுகத்தில் பிறந்தவர்களும், பரமனைச் சார்ந்தவர்களுமான அனைவரும் கதைகளின் மூலம் (சொற்பொழிவுகளின் மூலம்) மக்களால் வழிபடப்படுவார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "எனினும், சிறந்த மனிதர்களைச் சார்ந்து மீண்டும் கிருத யுகம் எழும். தர்மக் கதைகளைச் சொல்லும் அவர்கள் அனைவரும் கலியுகத்தில் மக்களால் வழிபடப்படுவார்கள்" என்றிருக்கிறது.

மனிதர்கள் தானியங்களையும், உடைகளையும், உணவுப் பொருட்களையும், ஏன் பசுஞ்சாணத்தையும் கூடக் கொள்ளையடிப்பார்கள்.(22) கள்வர்கள், பிற கள்வர்களின் உடைமைகளைக் கொள்ளையடிப்பார்கள், கொலைகாரர்கள், பிற கொலைகாரர்களைக் கொல்வார்கள். கள்வர்கள், பிற கள்வர்களைக் கொல்லும்போது மக்களுக்கு நன்மை விளையும்.(23) உலகம் நலிவடைந்து, ஒடுக்கப்பட்டு, மாலை ஜபங்களில் இருந்து விலகும்போது, அனைத்து வகை மனிதர்களும் ஒரே வகை வாழ்வை வாழும்போது, அவர்கள் வரிகளின் சுமையால் ஒடுக்கப்பட்டுக் காடுகளுக்குள் ஓய்ந்து செல்வார்கள்.(24) மகன்கள் தந்தையை அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுத்துவார்கள், மருமகள் மாமியாரை பணி செய்ய வைப்பாள்[5]. வேள்விகள் வேட்கப்படாமல் நிறுத்தப்படும்போது, சீடர்கள் சொற்கணைகளால் ஆசான்களைத் துன்புறுத்துவார்கள்[6].(25) ராட்சசர்களாலும், பெரும்பசியுடைய விலங்குகள், பூச்சிகள், எலிகள், பாம்புகள் ஆகியவற்றாலும் மனிதர்களுக்குத் தீங்கு விளையும்.(26) ஓ! மன்னா, யுக முடிவின் நெருக்கத்தில், மக்களின் அமைதி, செழிப்பு, உடல்நலம், நண்பர்கள், இலக்கியம் ஆகியவை நலிவடையும்.(27)

[5] ஹரிவம்ச பவிஷ்ய பர்வம் 3:39ல் இதே செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.

[6] ஹரிவம்ச பவிஷ்ய பர்வம் 3:40ல் இதே செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.

யுகத்தின் துன்பங்களால் பீடிக்கப்பட்ட மன்னர்கள், தாங்களே தலைவர்களாகவும், கள்வர்களாகவும் இருந்து கொண்டு, பல்வேறு நாடுகளில் வலம் வருவார்கள்.(28) அவர்கள் தங்கள் நண்பர்களுடன் தங்கள் நாடுகளில் பயணித்து, பயனற்றவற்றை விளைவித்து, குறித்த காலத்திற்காகக் காத்திருப்பார்கள்[7].(29) அச்சத்தாலும், பசியாலும் பீடிக்கப்படும் மக்கள், தங்கள் மகன்களைத் தங்கள் தோள்களில் சுமந்தவாறே கௌசிகி ஆற்றைக் கடந்து,(30) அங்கம், வங்கம், கலிங்கம், காஷ்மீரம், மேகலம், ருஷிகாந்தகிரி ஆகிய மாகாணங்களில் உறைவிடம் நாடுவார்கள்.(31) மக்கள், இமயத்தின் சாரல்களிலோ, உப்பு நீராலான பெருங்கடலின் கரைகளிலோ, காடுகளிலோ மிலேச்சர்களுடன் சேர்ந்து வாழ்வார்கள்.(32) அப்போது பூமியானது வெறுமையாகவோ, மனிதர்களால் நிறைந்தோ இருக்காது. காவலர்கள் ஆயுதந்தரித்தவர்களாக இருப்பினும் தங்கள் கடமைகளைச் செய்ய மாட்டார்கள்.(33) மனிதர்கள், மான்களையும், மீன், பறவைகள், இரைதேடும் விலங்குகள், பாம்புகள், பூச்சிகள், காய்கறிகள், கனிகள், கிழங்குகள் ஆகியவற்றையும் உண்டு வாழ்வார்கள்.(34)

[7] 28, 29 ஸ்லோகங்களில் உள்ள செய்தி சித்திரசாலை பதிப்பில், "அந்த யுகத்தில் உள்ள மனிதர்கள், தங்களையே பாதுகாத்துக் கொண்டும், தங்களையே கொள்ளையடித்துக் கொண்டும், அந்த யுகத்திற்குத் தகுந்த பொருட்களைத் திரட்டுவார்கள். அவர்கள் கூட்டங்கூட்டமாக, நாடு நாடாகச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். யுகம் வீழ்ச்சியடையும்போது, மக்கள் அனைவரும் தங்கள் பிறப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, செல்வங்களையும், உறவினர்களையும் இழப்பார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மக்கள் தங்களையே பாதுகாத்துக் கொண்டும், தங்களையே கொள்ளையடித்துக் கொண்டும், அந்த யுகத்திற்குத் தகுந்தவற்றைத் திரட்டுவார்கள். அவர்கள் கூட்டங்கூட்டமாகப் பல்வேறு நாடுகளில் திரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து நாடுகளில் இருந்து விரட்டப்படுவார்கள்" என்றிருக்கிறது.

மனிதர்கள், முனிவர்களைப் போல மரவுரிகளையும், இலைதழைகளையும், மான்தோல்களையும் திரட்டி உடுத்திக் கொள்வார்கள்.(35) மலைக்குகைகளில் வசிக்கும் மனிதர்கள், கிராமங்களிலோ காடுகளிலோ வளரும் நெல்லை அறிந்து கொள்ளவும், உண்ணவும் ஏங்குவார்கள். அவர்கள் செம்மறி ஆடுகளையும், வெள்ளாடுகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும் வளர்ப்பார்கள்.(36) அவர்கள், நீருக்காக ஆற்றங்கரைகளில் வாழ்ந்து கொண்டு, நீரோட்டத்தைத் தடுப்பார்கள். அவர்கள் சமைத்த உணவை விலைக்கு வாங்கவும், விற்பனையும் செய்வார்கள்.(37) மகன்கள், தங்களுக்குரிய பங்குகளை அடைய மூலதனத்தின் மீது {மூலதனத்தையும், வட்டியையும் மறைத்துப்} போரிடுவார்கள். மக்கள், வயதின் ஆதிக்கத்தினால் குழந்தைகளைப் பெறுவார்கள், குழந்தைகளைப் பெறாமலும் இருப்பார்கள், அவர்கள் தங்கள் குடும்பங்களின் நற்குறிகளை {குல அடையாளங்களை} இழந்திருப்பார்கள்.(38) அந்த யுகத்தின் மக்கள், இழிந்தவர்களால் போதிக்கப்படும் இழிந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுவார்கள் {தர்மங்களில் இழிவான தர்மத்தைப் பின்பற்றுவார்க்ள}.(39) மனிதனின் வாழ்நாள் முப்பது ஆண்டுகளாக இருக்கும். {வலிமை இழந்த மக்கள் மெலிந்தவர்களாகவும், ஆசைகள் மற்றும் உணர்வுகளின் காரணமாகப் பலவீனர்களாகவும் இருப்பார்கள்}.(40) அவர்கள் பிணிகளால் பீடிக்கப்பட்டுப் பலவீனமடைந்து, தங்கள் செல்வத்தை இழப்பார்கள்; அவர்களின் உடலுறுப்புகள் பிணிகளால் பீடிக்கப்படும், அவர்களின் வாழ்நாள் குறைவதன் விளைவாக அவர்கள் துயரால் பீடிக்கப்படுவார்கள்.(41) {உடல்நலக்கேட்டின் விளைவால்} அவர்கள் நேரங்காலம் பார்க்காமல் நல்லோரைச் சந்தித்து, தொண்டாற்றுவதில் ஈடுபடுவார்கள், தங்கள் ஒழுக்கம் அடையும் நலிவினால் அவர்கள் சத்திய யுகத்தை அடைவார்கள் {வாய்மையைப் போற்றுவார்கள்}.(42) விருப்பத்திற்குரிய பொருட்களை அடையாததால் அவர்கள் அறச் சடங்குகளைச் செய்வார்கள்; தங்கள் மக்களின் அழிவில் உண்டாகும் பலவீனத்தின் காரணமாக அடக்குமுறைகள் செய்வதில் இருந்து அவர்கள் ஒடுங்குவார்கள்.(43)

இவ்வாறே அவர்கள், தங்கள் வாழ்வைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கொடைகள் அளித்து, வாய்மை நோற்று, {தொண்டு, ஈகை, வாய்மை, ஆன்மப் பாதுகாப்பு என்ற} நான்கு வகைக் கடமைகளை நிறைவேற்றி நன்மையை அடைவார்கள்(44). புலன்களுடனும், புலன்களுக்குரிய பொருட்களுடனும் உழலும் மக்களில் சிலர், உண்மை ஞானத்தை அடைந்து, "அறமோ, மரணமோ இனிய பயன்களைக் கொண்டவையே" என்று சொல்வார்கள்[8].(45) படிப்படியாக வீழ்ச்சி நடந்ததைப் போலவே வளர்ச்சியும் படிப்படியாக நிகழும். அதன்பிறகு அறம் முழுமையாகப் பின்பற்றப்படும்போது, கிருத யுகம் தொடங்கும்.(46) மாதத்தின் வளர்பிறையில் வளர்ந்து, தேய்பிறையில் தேயும் சந்திரனைப் போலவே நல்லொழுக்கமும் கிருத யுகத்தில் பெருகி, கலியுகத்தில் வீழ்ச்சியடையும். எனினும் காலம் ஒன்றுதான்; இந்த வளர்ச்சி, வீழ்ச்சிகளின் படி அது சத்யம், திரேதம், துவாபரம், கலி என்ற நான்கு நிலைகளைக் கொண்டிருக்கிறது.(47) தேய்பிறையில் இருளில் மூழ்கி, வளர்பிறையில் முழுமையடையும் நிலவைப் போலவே அறமும் சத்யத்தில் பெருகி, கலியுகத்தில் வீழ்ச்சியடையும்.(48)

[8] சித்திரசாலை பதிப்பில், "(தர்மத்தின்) பயன்களை ஊகித்து வளர்ச்சி அடைந்து எது சுவையானது (உகந்தது) என்பதை அறிந்தோர், தர்மத்தின் இயல்பைக் குறித்துப் பேசுவார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தர்மத்தின் நற்சுவையைச் சுவைத்தவர்கள் அதை அறிந்தவர்களாகத் தம்மைக் கருதிக் கொண்டு அது குறித்துப் பேசுவார்கள்" என்றிருக்கிறது.

புழுதியால் மறைக்கப்பட்ட மூதாதையர் காலத்துத் தங்கக்கட்டியைப் பொன்னாகக் கருதாமல் தன்னைத் தானே வறியவனாக நினைக்கும் மனிதன், தூய்மையடைந்த தங்கத்தைக் கண்டதும் தன்னைச் செல்வந்தனாகக் கருதுவதைப் போலவே தமோ குணம் நிறைந்த மாயையால் மறைக்கப்பட்ட பரமாத்மாவை ஏதோவொன்றாக அழைக்கும் மனிதர்கள், மாயையில் இருந்து விலகும்போது அதைத் தூய அறிவு என்று அழைப்பார்கள். இவ்வாறே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, கல்விமான்களும் அதன் பொருளை விளக்கியிருக்கிறார்கள்[9].(49) சொர்க்கம் முதலியவற்றை நோக்கமாகக் கொண்ட தவங்களின் மூலம் நித்திய பயன்கள் அடையப்படுகின்றன; இந்தப் பயன்கள் குணங்களை விளைவிக்கின்றன, இவ்வாறே செயல்கள் நிறைவேறுகின்றன. உண்மையான இந்தச் செயல்பாடுகளின் மூலம் உடல் கூட விடுதலை அடைவதில்லை.(50) செயல்களின் பயன்கள், பல்வேறு யுகங்களில் நாடு {இடம்}, நேரம் {காலம்}, தகுந்தவர் ஆகியவற்றைப் பின்தொடர்கின்றன; இவ்வாறே அவற்றில் வேறுபாடுகள் தென்படுகின்றன. ரிஷிகள் அவ்வாறே சொல்லியிருக்கின்றனர்.(51) பல்வேறு யுகங்களில், உலகம்சார்ந்த ஆதாயம், இன்பத்திற்குரிய பொருட்கள், தேவ வழிபாடு, வாழ்நாள் காலம் ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டாகின்றன.(52) விதியின் இயல்பில் யுகச் சுழற்சி நடைபெறுகிறது என்பதால் ஒரு கணமும் செயல்படாமல் இருக்க முடியாத உலகில் இவ்வாறான எழுச்சியும், சிதைவும் ஏற்படுகின்றன" என்றார் {வியாசர்}".(53)

[9] சித்திரசாலை பதிப்பில், "வேதத்தின் உண்மைப் பொருள் பிரம்மத்தின் வடிவில் வெளிப்படுகிறது. வேதத்தின் உண்மைப் பொருளாக ஞானிகள் இதையே அறிகிறார்கள். தங்கக்கட்டியில் உள்ள மாசு தூய்மை செய்யப்படும் வரை அதற்கு மதிப்பேதும் கிடையாது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தர்மத்தின் உயர்ந்த பொருள் வேதங்களின் சாரத்திலேயே இருக்கிறது என்பதைக் கல்விமான்கள் அறிவார்கள். நிச்சயமற்ற, அறியப்படாத ஒன்று, கைவிடத்தக்க ஒன்று என்றே கருதப்படும்" என்றிருக்கிறது.

பவிஷ்ய பர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 53

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்