Tuesday 30 March 2021

ஜனமேஜயன் வேள்வியில் வியாசர்! | பவிஷ்ய பர்வம்

(வியாஸம் ப்ரதி ராஜஸூயவிஷயே ஜநமேஜயப்ரஷ்நம்)

Vyasa's presence at Janamejaya's sacrifice | Bhavishya-Parva-Chapter-02 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : நாக வேள்வி நிறைவடைந்ததும், ராஜசூய வேள்வி செய்ய விரும்பி அதற்கான பொருட்களைத் திரட்டிய ஜனமேஜயன்; வியாசர் அங்கே வந்தது; ஜனமேஜயனின் ஐயங்களைத் தீர்த்தது...


Vyasa at Janamejaya's Sacrifice

சௌனகர் {சௌதியிடம்}, "வியாசரின் சீடரால் {வைசம்பாயனரால்} மீளுரைக்கப்பட்டதைப் போலவே அனைத்துப் பர்வங்களுடன் ஹரிவம்சத்தை மொத்தமாக எனக்கு உரைத்திருக்கிறாய்.(1) அமுதத்தைப் போன்றதும், பாவங்கள் அனைத்தையும் அழிக்கவல்லதுமான முடிவற்ற ஹரிவம்ச வரலாறு நம்மை நிறைவடையச் செய்யட்டும்.(2) ஓ! பொறுமையுடன் கூடியவனே, இந்த வரலாறு காதுகளுக்கு இனிமையாக இருப்பதால் எங்கள் இதயங்களுக்கு {மனங்களுக்குப்} பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. ஓ! சௌதி, சர்ப்ப யக்ஞம் {நாக வேள்வி} நிறைவடைந்ததும் அற்புதமிக்க இந்த வரலாற்றை {ஹரிவம்சத்தைக்} கேட்ட பிறகு, மன்னன் ஜனமேஜயன் என்ன செய்தான்?" என்று கேட்டார்.(3)

சௌதி, "சர்ப்பயக்ஞத்தின் முடிவில் அற்புதமிக்க இந்த வரலாற்றைக் கேட்ட பிறகு மன்னன் ஜனமேஜயன் செய்தவை அனைத்தையும் நான் உமக்கு விளக்கிச் சொல்கிறேன்.(4) இந்த வேள்வி நிறைவடைந்ததும், பரீக்ஷித்தின் மகனான ஜனமேஜயன் {பாரீக்ஷிதன்} குதிரை வேள்விக்கான {அஷ்வமேத யக்ஞத்துக்கான} பொருட்களைத் திரட்டினான்.(5) பிறகு, ரித்விக்குகள், புரோஹிதர்கள், ஆசான்கள் ஆகியோரை அழைத்த அவன், "நான் குதிரை வேள்வியைச் செய்ய விரும்புகிறேன். இந்தக் குதிரைகளை நீங்கள் அர்ப்பணிப்பீராக" என்றான்.(6)

அற ஆன்மாவும், அனைத்தையும் அறிந்தவர்களில் முதன்மையானவருமான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, தளர்வில்லா ஆற்றலைக் கொண்டவனும், பரீக்ஷத்தின் மகனுமான ஜனமேஜயனின் நோக்கத்தை அறிந்து கொண்டு, அவன் செயலைக் (வேள்வியைக்) காண்பதற்காகத் திடீரென அங்கே வந்தார்.(7) மஹாரிஷியான வேதவியாசர் அங்கே வந்ததைக் கண்ட மன்னன் ஜனமேஜயன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின் படி அர்க்கியத்தையும், இருக்கையையும், கால்களைக் கழுவிக் கொள்வதற்கான நீரையும் அவருக்குக் கொடுத்தான்.(8) ஓ! சௌனகரே, அவர்கள் இருவரும் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, சபை உறுப்பினர்கள் அனைவரும் வேதக் கருப்பொருகள் பலவற்றைக் குறித்து உரையாடத் தொடங்கினர்.(9)

பாண்டவர்களின் பாட்டனாரும், தன்னுடைய பெரும்பாட்டனாருமான பெரும் முனி வேத வியாசரிடம் மேற்கொண்ட உரையாடல்களின் நிறைவில், மன்னன் ஜனமேஜயன், (10) "ஸ்ருதிகளில் காணப்படும் பல பொருள்கள் நிறைந்திருக்கும் மஹாபாரதக் கதை காதுகளுக்கு இனிமையாக இருந்தது. {தொடர்ந்து பல நாட்கள் கேட்கப்பட்டாலும்} அஃது ஒரு கணத்தில் நிறைவடைந்ததைப் போல இருந்தது.(11) {விஷ்ணுவின்} மகிமைகளைப் பரப்புவதும், பாற்கடலே சங்குக்குள் நிறைந்ததைப் போன்ற புகழைக் கொடுப்பதுமான அவ்வரலாறு உம்மால் அழகாகப் பதியப்பட்டுள்ளது.(12) அமுதத்திலும், சொர்க்கத்தின் அருளிலும் நிறைவடையாத மனிதனைப் போலவே நானும் மஹாபாரதக் கதைகளைக் கேட்டும் நிறைவடைந்தேனில்லை. {நான் இன்னும் கேட்க விரும்புகிறேன்}.(13) ஓ! பிராமணரே, நீர் அனைத்தையும் அறிந்தவர். எனவே, குருக்களின் அழிவுக்கு ராஜசூயந்தான் காரணமா? அவ்வாறு இல்லையா? என்பதை உம்மிடம் வேண்டிக் கேட்கிறேன்.(14)

பெரும்புரட்சி {குருக்ஷேத்ரப் பெரும்போர்} நடந்த காலத்தில் வெல்லப்பட முடியாதவர்களான மன்னர்கள் பலர் மரணமடைந்ததால், ராஜசூய யக்ஞம் போருக்காகவே விதிக்கப்பட்டது என்று எனக்குத் தோன்றுகிறது.(15) சோமனால் {சந்திரனால்} இந்த ராஜசூயம் மேற்கொள்ளப்பட்ட போது, அதைத் தொடர்ந்து {பிருஹஸ்பதியின் மனைவியான} தாரையை மையமாகக் கொண்ட {தாரகாமாயப்} பெரும்போர் நடைபெற்றது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(16) அதன் பிறகு வருணன் இந்தப் பெரும் வேள்வியை மேற்கொண்ட போது, தேவாசுரப் போர் அதைப் பின்தொடர்ந்து வந்தது.(17) அரசமுனியான ஹரிஷ்சந்திரன் இந்த வேள்வியை மேற்கொண்ட போது, க்ஷத்திரியர்கள் பலர் கொல்லப்பட்ட அடீபகப் போர்[1] அதைப் பின்தொடர்ந்து வந்தது.(18) அனைத்திலும் இறுதியாக, வழிபடத்தகுந்தவர்களான பாண்டவர்கள், கடினமான இந்த வேள்வியை மேற்கொண்ட போது, பெரும்பாரத {மஹாபாரதப்} போர் அதைப் பின்தொடர்ந்து வந்தது.(19)

[1] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "அடீ என்றழைக்கப்படும் நீர்க்கோழியின் வடிவில் இருந்த வசிஷ்டருக்கும், பகம் என்றழைக்கப்படும் நாரையின் வடிவில் இருந்த விஷ்வாமித்ரருக்கும் இடையில் நடந்த போரிஃது என்று நீலகண்டர் உரையில் விளக்கப்படுகிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அரசமுனியான ஹரிஷ்சந்திரன் ஒருவேள்வியைச் செய்தான். அடீபகம் என்றறியப்படும் ஒரு போர் அங்கே நடந்தது. அது க்ஷத்திரியர்களின் அழிவுக்கு வழிவகுக்கது. பின்னர், உன்னதப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, நடைமுறைக்கு மிகக் கடுமையானதும், நெருப்பைப் போன்றதுமான வேள்வியைச் செய்தான். அதுவே மஹாபாரத அழிவுக்கான விதைகளைத் தூவியது" என்றிருக்கிறது.

ஓ! ஐயா, பெரியவரே, உலக அழிவுக்கு வேராக இருந்த அந்த ராஜசூய யக்ஞத்தை நீங்கள் அனைவரும் ஏன் நிறுத்தவில்லை?(20) இந்த வேள்வியை அதற்குரிய அனைத்துக் கிளைகளுடன் {அங்கங்களுடன்} மேற்கொள்வது மிகக் கடினமானது. வேள்வியின் கிளைகளில் ஒன்று புறக்கணிக்கப்பட்டாலும் அது மக்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.(21) நீர் எங்கள் மூதாதையரின் பாட்டனாகவும், முதல் தலைவனாகவும், கடந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்தவராகவும் இருந்தீர்.(22) நுண்ணறிவுமிக்க அந்த மன்னர்களின் வழிகாட்டியாக நீர் வாழ்ந்து வந்த போது, கவனிக்க ஆளில்லாதவர்களைப் போல அவர்கள் ஏன் அறவழிகளில் இருந்து நழுவி இந்தப் பாவத்தை இழைத்தனர்?" என்று கேட்டான் {ஜனமேஜயன்}".(23)

வியாசர், "ஓ! மன்னா, உண்மையில் அந்த மன்னர்கள் விதியால் தூண்டப்பட்டவர்களாகவே நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் முரணாகச் செயல்பட்டனர். அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து என்னிடம் ஏதும் கேட்கவில்லை. நானும் கேட்கப்படாத எதையும் அவர்களுக்குச் சொல்லவில்லை.(24) அதையுந்தவிர, விதியின் பணியை எதிரக்கவல்லவர் எவரும் இல்லை என்பதால், நானும் எதிர்கால விளைவுக்கு எதிர்வினையாற்ற வல்லனல்லன்.(25) எதிர்காலத்தைக் குறித்து நீ கேட்பனவற்றை நான் விளக்கிச் சொல்கிறேன். ஆனால் விதி வலிமைமிக்கதாகும். என் சொற்களைக் கேட்ட பிறகும் கூட உன்னால் அவற்றைச் செயல்படுத்த இயலாது.(26) விதிக்கப்பட்ட விதியை வெல்வது சாத்தியமில்லை என்பதால் அச்சத்தாலோ, ஆசையாலோ உன்னால் மனிதனின் வழிகளில் நிற்க இயலாது {காலத்தால் வகுக்கப்பட்ட பாதையை எந்த வழிமுறைகளினாலும் மீற முடியாது}.(27)

வேள்விகளில் முதன்மையான அஸ்வமேதத்தை {அஸ்வமேத யக்ஞத்தை / குதிரை வேள்வியை} க்ஷத்திரியர்கள் செய்ய வேண்டுமென ஸ்ருதியில் விதிக்கப்பட்டிருக்கிறது.(28) அந்த வேள்வியுடைய மகிமையின் காரணமாக வாசவன் {இந்திரன்} உன்னுடைய அஸ்வமேதத்தைக் களங்கப்படுத்துவான். ஓ! மன்னா, உன்னுடைய ஆண்மையின் காரணமாகவோ, விதியின் விருப்பத்தாலோ நீ வாசவனை எதிர்க்கவல்லவனாக இருந்தாலும் கூட அத்தகைய ஒரு வேள்வியை நீ செய்யாதே.(29) எனினும், விதியானது வல்லமையின் தொகுப்பாக இருப்பதால் நீயோ, சக்ரனோ, தலைமை தாங்கும் புரோகிதர்களோ அதன் மூலம் பாவம் இழைத்தவராக மாட்டீர்.(30) விதி வகுத்த விதியால் பிரம்மன் இந்திர வேள்வியை நிறுத்துவான். காலப்போக்கிலும், விதியின் விருப்பத்திற்கு இணங்கவும், யுக முடிவில் படைப்பு யாவும் முடிவை எட்டும்[2].(31) பிராமணர்கள் வேள்விகளின் பயன்களை விற்பனை செய்வார்கள். எனவே, அசைவன, அசையாதன உள்ளிட்ட இந்த அண்டம் விதியின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதை அறிவாயாக" என்றார் {வியாசர்}.(32)

[2] சித்திர சாலைப் பதிப்பில், "காலத்தை வெல்ல முடியாது. படைப்பாளன் என்ற தலைவனால் பரிந்துரைக்கப்பட்ட காலத்தின் இயல்பு இதுவே. தலைவன் கண்டது போலவே படைப்புகள் அனைத்தும் யுகத்தின் முடிவில் இயல்பாக அழிவடையும். படைப்பாளனால் பரிந்துரைக்கப்பட்டதைப் போலவே வேள்வியின் பயன்கள் பிராமணர்களால் கையாளப்படும். மூவுலகங்களிலுமுள்ள அசைவன, அசையாதன அனைத்தும் காலத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "விதியே உயர்ந்தது. நான் சொல்வதைக் கேட்பாயாக. மூவுலகங்களின் அசைவன, அசையாதன உள்ளிட்ட ஒவ்வொன்றின் ஒழுங்கும், செயல்பாடும் விதியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. யுகம் அழியும்போது வேள்விகள் செய்த மன்னர்கள் அனைவரும் சொர்க்கம் புகுவார்கள். வேள்விகளின் பயன்களை விற்பனை செய்யும் பிராமணர்களும் அவ்வாறே நுழைவார்கள்" என்றிருக்கிறது.

ஜனமேஜயன், "ஓ! மதிப்பிற்குரிய ஐயா, குதிரை வேள்வி நிற்பதற்கு எது காரணமாக அமையும்? அது குறித்து நான் கேட்டதும் அதைத் தவிர்த்து விலகுவேன்" என்றான்.(33)

வியாசர், "ஓ! மன்னா, பிராமணர்களின் சாபமே அதற்குக் காரணமாக அமையும். நீ அதை {சாபத்தை} நிறுத்த முயன்றால் உனக்கு நன்மையே நேரும்.(34) ஓ! பகைவரைக் கொல்பவனே, இனி இந்த உலகம் உள்ளவரை, குதிரை வேள்விக்கான பொருட்களைத் திரட்ட க்ஷத்திரியர்களால் இயலாது. {நீ செய்வதைப் போன்ற குதிரை வேள்வியை உலகம் உள்ளளவும் வேறு யாராலும் செய்ய இயலாது}" என்றார்.(35)

ஜனமேஜயன், "ஒரு பிராமணருடைய கடுஞ்சாபத்தின் சக்தியால் அஸ்வமேதம் நிறுத்தப்படும் என்றாலும் அதன் கருவியாக நான் இருப்பேன். உண்மையில், நான் அச்சத்தாலும், நாணத்தாலும் நிறைகிறேன்.(36) நற்செயல்கள் பலவற்றைச் செய்த என்னைப் போன்ற ஒரு மனிதன், கயிற்றில் கட்டப்பட்ட ஒரு பறவை வானத்தில் பறந்து செல்வதைப் போல இத்தகைய சபிக்கப்பட்ட பணியில் ஈடுபட்டு வாழ்வது எங்ஙனம்?(37) இத்தகைய பணியில் நான் ஈடுபட்டால், தலைமுறை தலைமுறையாகப் பயிலப்படும் சடங்கு என்னால் கெட்டுப் போகும். (மன்னர்களால்) மீண்டும் குதிரை வேள்வி பயிலப்படும் என்று எனக்கு ஆறுதல் சொல்வீராக" என்று கேட்டான்.(38)

வியாசர், "சிறப்பில் {வேள்வியில்} இருந்து உண்டாகும் சிறப்பானது, நிச்சயம் மற்றொரு சிறப்பில் மட்டுமே இருப்பதைப் போல, அஸ்வமேதம் நிறுத்தப்பட்டாலும், தேவர்களிடமும், பிராமணர்களிடமும் அது நிலைத்திருக்கும்.(39) படைவீரனின் வாழ்வை மேற்கொள்ளும் கசியபரின் வழித்தோன்றல்கள் சிலர், கலியுகத்தில் மீண்டும் குதிரை வேள்வியை மீட்டெடுப்பார்கள்[3].(40) ஓ! மன்னா, அண்ட அழிவுக்காலமானது, வெண்கோள் உள்ளிட்ட பல தீய சகுனங்களைக் கொண்டு வருவதைப் போலவே அதே குலத்தில் பிறந்த ஒரு பிராமணன், கலியுகத்தில் ராஜசூய வேள்வியையும் மீட்டெடுப்பான்.(41) இந்த வேள்வி, அதைச் செய்யும் மனிதர்களுக்கு உரிய பயன்களை வழங்கும். அவர்களும், இந்த யுக முடிவின் தொடக்கத்தில் ரிஷிகள் சூழத் திரிவார்கள்.(42) அந்தக் காலத்தில் இருந்து மனிதர்களின் புலன்கள், மாசற்ற நற்செயல்களின் பயன்களைக் கைவிடாது, இம்மையில் அவற்றுடன் பற்றற்றிருக்கும்.(43) அப்போது, நுட்பமானதும், உயர்ந்ததுமான ஓர் அறம், நான்கு வகைகளுக்கான கடமைகளில் {நான்கு ஆசிரமங்களில்} இருந்து நழுவி, ஈகையை மட்டுமே தன் வேராகக் கொண்டு, காலத்தின் விளைவாகப் புகழ்பெறும்.(44) ஓ! ஜனமேஜயா, இந்த யுகத்தின் முடிவில் மனிதர்கள் சிறதளவே தவம் பயின்றாலும், அவர்கள் ஆன்ம சக்திகளை அடைவார்கள். இவ்வாறு அருளப்பட்டவர்களே பக்திச் சடங்குகளைச் செய்வார்கள்" என்றார் {வியாசர்}[4].(45)

[3] 39ம் ஸ்லோகம் சித்திரசாலை பதிப்பில் உள்ளபடி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சித்திரசாலை பதிப்பில் 40ம் ஸ்லோகத்தில், "பூமியின் குடல்களில் இருந்து உதிப்பவனும், சேனானி என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு கசியப பிராமணன், கலி யுகத்தில் குதிரை வேள்வியை மீண்டும் செய்வான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒருவன் இந்த வேள்வியைச் செய்வதில் இருந்து விலகினால், தேவர்கள் பிராமணர்களிடம் வசிப்பார்கள். ஏனெனில், சக்தி திரும்பப் பெறப்படும்போது, அந்தச் சக்தி இன்னொரு சக்தியில் மட்டுமே வசிக்கும். நிலம் உழப்படும்போது, கசியப குலத்தைச் சேர்ந்தவனும், சேனானி என்ற பெயரைக் கொண்டவனுமான பிராமணன் உண்டாவான். அவனே, கலியுகத்தில் குதிரை வேள்வியை மீண்டும் செய்வான்" என்றிருக்கிறது.

[4] சித்திரசாலை பதிப்பில், "அந்த நாளில் இருந்து மனிதர்களின் ஆன்மாவானது, பழங்காலத்தில் நிறுவப்பட்ட நல்லொழுக்கத்தைக் கைவிடும். பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்கானது உலகக் காரியங்களில் நிலைத்திருக்காது. அப்பொது நுட்பமான அறம் நல்ல விளைவுகளை உண்டாக்கும். ஆனால் பல தடங்கல்களின் விளைவாக அந்த அறத்தைப் பின்பற்றுவது கடினமானதாக இருக்கும். ஈகையே அந்த அறத்தின் வேராக இருக்கும். அறமானது, நான்கு நிலைகள் {ஆசிரமங்கள்} என்ற தன் வடிவில் இருந்து விலகும். அப்போது செய்யும் சிறு தவத்தாலும் மனிதர்கள் வெற்றியை அடைவார்கள். ஓ! ஜனமேஜயாக, யுகத்தின் முடிவில், அருளப்பட்டவர்கள் மட்டுமே அறவழியைப் பின்பற்றுவார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்த நேரத்தில் நான்கு ஆசிரமங்களை அடிப்படையாகக் கொண்ட தர்மம் பலவீனமடையும். அந்த நேரத்தில், கொடைகள் அளிப்பதை அடிப்படையாகக் கொண்டதும், பின்பற்றக் கடினமானதுமான அந்த நுட்பமான தர்மத்தில் இருந்தே பெரும்பயன்கள் கிடைக்கும். அந்த நேரத்தில் மனிதர்கள் சிறிதளவே தவம் செய்தாலும் வெற்றியை ஈட்டுவார்கள். ஓ! ஜனமேஜயா, யுக முடிவின் நெருக்கத்தில் தர்மத்தில் மூழ்கி இருக்கும் மனிதர்களே அருளப்படுவார்கள்" என்றிருக்கிறது.

பவிஷ்ய பர்வம் பகுதி – 02ல் உள்ள சுலோகங்கள் : 45

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்