மஹாபாரதத்தில் கிருஷ்ணன் திரௌபதியின் சுயம்வர நேரத்தில் இளைஞனாக நமக்கு அறிமுகமாகிறான். அவனது குழந்தைப் பருவம் முதல், முதுமைப் பரும் வரையுள்ள செய்திகளை ஹரிவம்சமே தருகிறது. இந்தச் செய்திகளை அறிய பாகவதத்தையும், விஷ்ணு புராணத்தையும் நாடலாமே என்பவர்களுக்கு, அவற்றை விட ஹரிவம்சமே காலத்தால் மிக முந்தையது என்பதும், மஹாபாரதத்தைச் சொன்ன அதே வைசம்பாயனரே ஹரிவம்சத்தையும் உரைப்பவர் என்பதும் நிச்சயம் நிறைவைத் தரும். ஹரிவம்சத்தை அறியாமல், மஹாபாரதத்தின் பெரும்பகுதிகளை நுணுக்கமாகப் புரிந்து கொள்ள இயலாது என்பதே இதன் முக்கியத்துவத்தை இன்னும் அதிகரிக்கிறது.
1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மன்மதநாததத்தரின் ஆங்கிலப் பதிப்பின் அடிப்படையில் இந்தத் தமிழ்மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டாலும், 2007 முதல் தற்போது வரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வரப்படும் சித்திரசாலை பதிப்பையும், 2016ல் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட பிபேக்திப்ராயின் ஆங்கிலப்பதிப்பையும், 1993ல் வெளிவந்த உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பையும் ஒப்புநோக்கியே இந்தத் தமிழ் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. தேவைப்படும் இடங்களில் உரிய அடிக்குறிப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மஹாபாரதத்தைப் போலவே ஹரிவம்சத்திலும், வரலாற்றையும், மீமானிடத்தன்மையுடன் அமைக்கப்பட்ட பகுதிகளையும் தெள்ளெனப் பகுத்துவிட முடியும். உலக மாந்தர் பெரும்பான்மையோரின் உள்ளங்கவர் கள்வனை வரலாற்று மாந்தனாகக் காண விரும்புவோருக்கும், தெய்வீகனாக உணர விரும்புவோருக்கும் ஹரிவம்சம் கிடைத்தற்கரிய கருவூலமாகும். குறிப்பாக ஹரிவம்சத்தின் இரண்டவாது பர்வமான இந்த விஷ்ணுபர்வம் அந்தத் தாமரைக் கண்ணனின் வரலாற்றையும், குறியீடுகளாகத் திகழும் தொல் படிமங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
யயாதியின் மகன் யதுவின் வழித்தோன்றல்களே யாதவர்கள் என்று அறிந்து வந்தோருக்கு, அதற்கு முன்பே ஹரியஷ்வன் வழித்தோன்றலான யது என்றொருவன் இருந்தான்; அவனுக்குப் பிறந்து, அவனது வழியில் வந்தவர்கள் யாதவர்கள் என்பது புதுச் செய்தியாக இருக்கலாம். யாதவ வம்சத்தின், பைமர், குகுரர், போஜர், அந்தகர், யாதவர், தாசார்ஹர், விருஷ்ணி என்ற ஏழு குலங்கள் எவ்வாறு எழுந்தன என்பதை அறிய இந்த ஹரிவம்சம் உதவும். பைமர்கள் ஆநர்த்த நாட்டை ஆண்டுக் கொண்டிருந்தபோது, அயோத்தியை ஆண்டவன் தசரத ராமன். மது அசுரன் ஆண்ட பகுதி மதுவனம், அவனுடைய மகளின் பெயர் மதுமதி, அந்த மதுமதியைத் திருமணம் செய்து கொண்டவன் ஹரியஷ்வனின் மகனான யது, மதுவனத்தை அழித்து, அந்த இடத்திலேயே மதுரா என்ற நகரத்தை அமைத்தவன் ராமனின் தம்பியான லக்ஷ்மணன். இவை அனைத்தும் பலருக்குப் புருவத்தை உயர்த்தும் செய்திகளாக அமையும். மேலும், ராதை என்றொரு கதாப்பாத்திரமே இந்த ஹரிவம்சத்தில் இல்லை என்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
விரஜ கிராமம் {ஆயர்ப்பாடி}, பிருந்தாவனம், மதுரா, துவாரகை என்று கிருஷ்ணன் தன் வாழ்வில் மீண்டும் மீண்டும் புலம்பெயர்ந்த செய்திகள், அக்ரூரன் கண்ட தெய்வத் தரிசனம், கம்ஸ வதம், மஹாபாரதத்தில் சிறிதளவே கண்ட ஜராசந்தன், இங்கே விரிவாகப் பேசப்படுவது, கோமந்த மலைப் போர், ருக்மிணி சுயம்வரம், சுபாங்கி, ருக்மவதி ஆகியோரின் திருமணம், பலராமன் மகிமை, நரகாசுர வதம், பாரிஜாத மர அபகரிப்பு தொடர்பான வரலாறு, புண்யக நோன்பு, துவாரகை சீரமைப்பு, பிரத்யும்னன், அநிருத்தன் வரலாறு என நீண்டு செல்லும் பல குறிப்புகளையும், பூதனை கம்சனின் வளர்ப்புத்தாய் (6:22,23), தாமோதரன் என்பதற்கான பெயர்க்காரணம் (7:36) பலராமனுக்குப் பலதேவன் பட்டம் (14:58), இந்திரன் தன் மகன் அர்ஜுனனைக் கிருஷ்ணனின் பாதுகாப்பில் ஒப்புவித்தல் (19:80), கம்ஸனின் பெயர்க்காரணம் (28:103), கம்சனுடைய தம்பியின் பெயர் ஸுநாமன் (32:60), பலராமன் ருக்மியைக் கொல்வது (62:46) என்று செல்லும் ஆச்சரியமான சில துணுக்குச் செய்திகளையும் ஹரிவம்சம் தரத்தவறவில்லை. மேலும் இயற்கை வளம், பருவ கால வர்ணனைகள் ஆகியவையும் சிறப்பாக இதில் இடம்பெறுகின்றன. கண்ணனின் பரமபக்தனான எனக்கு, அவன் அருகிலேயே இருந்து, அவனுடன் வாழ்ந்த அனுபவத்தை இந்த ஹரிவம்ச மொழிபெயர்ப்புத் தந்தது என்று சொன்னால் அஃது எள்ளளவும் மிகையாகாது.
வழக்கம் போலவே நண்பர் ஜெயவேலன் அவர்கள் இந்த ஹரிவம்ச விஷ்ணுபர்வ மொழிபெயர்ப்பிலும், பிழைகள் திருத்தியும், தக்க இடங்களில் தகுந்த படங்களைச் சேர்த்தும், முக்கியமான இடங்களில் சொற்களின் வண்ணம் மாற்றியும் உதவியிருக்கிறார். சென்ற வருடம் வைகாசி விசாகத்தன்று (04.06.2020) விஷ்ணு பர்வம் தொடங்கப்பட்டது. சிவராத்ரி (11.03.2021) அன்று நிறைவடைந்தது. மொத்தம் 131 அத்யாயங்களை நிறைவு செய்ய 282 நாட்கள் ஆகியிருக்கின்றன. தமிழில் இந்த 131 அத்யாயங்களை மொழிபெயர்ப்பதற்காக, சம்ஸ்கிருதத்தில் இருந்து 128 அத்யாயங்களைத் தமிழுக்கு ஒலிபெயர்த்து, ஆங்கிலத்தில் 131 அத்யாயங்களை ஒளிவழியில் எழுத்துருக்களை அறிந்து, பிழைதிருத்தி தனித்தனி அத்யாயங்களாகப் பதிவிட வேண்டியிருந்தது. இதன் காரணத்தை முந்தைய "ஹரிவம்ச பர்வம் - சுவடுகளைத் தேடி" பதிவில் குறிப்பிட்டிருந்தேன். விஷ்ணு பர்வத்தில் மட்டும் இந்த 390 பதிவுகளுக்கான வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. அதுவும் போக விஷ்ணு பர்வத்திற்கு முந்தைய ஹரிவம்ச பர்வத்தின் சம்ஸ்கிருத, ஆங்கிலப் பதிவுகளுக்காக இந்தக் காலத்திலேயே இணையாக 110 அத்யாயங்களைப் பதிவிட வேண்டியிருந்தது. ஆகமொத்தமாக இந்த 280 நாட்களில் இந்த ஹரிவம்சம் வலைப்பூவில் (https://harivamsam.arasan.info) ஹரிவம்ச பர்வம், விஷ்ணு பர்வம் அடக்கமாகச் சரியாக 500 பதிவுகள் வலையேற்றப்பட்டன. விஷ்ணு பர்வத்தில் மட்டும் 7787 ஸ்லோகங்களும், 700க்கும் மேலான அடிக்குறிப்புகளும் இருக்கின்றன. கொரோனா பெருந்தொற்றின் பொதுமுடக்கத்தில் கிடைத்த ஓய்வை இதில் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.
மஹாபாரதத்தைத் தமிழில் தொகுத்துத் தந்த ம.வீ.ராமானுஜாசாரியர், இந்த ஹரிவம்சத்தைத் தமிழில் செய்த அவரது மருமகன் உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்கார் ஆகியோரை மனதார வணங்குகிறேன். சம்ஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதில் இழந்த பொருளைப் புரிந்து கொள்ள இவர்களின் பதிப்புகளே பெரிதும் உதவின. அடுத்து வருவதும், இறுதியானதுமான பவிஷ்ய பர்வம் பங்குனி உத்திரம் (28.3.2021) முதல் வெளிவரும். அனைத்தும் பரமன் சித்தம்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
202103171308