(பாண்டவவம்ஷப்ரதிஷ்டாகீர்தனம்)
An Account of Janamejaya's family | Bhavishya-Parva-Chapter-01 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : ஜனமேஜயனின் வம்சம் கூறப்படல்...
சௌனகர் {சௌதியிடம்}, "ஓ! லோமஹர்ஷணர் மகனே, ஜனமேஜயனின் மகன்கள் யாவர்? பாண்டவர்களின் வம்சம் யாரால் நிறுவப்பட்டது?(1) இந்த வரலாற்றைக் கேட்கும் ஆவலால் நான் பீடிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, நீ சொன்னவற்றில் உள்ள ஒவ்வொரு தகவலையும் நான் கற்க விரும்புகிறேன்" என்று கேட்டார்.(2)
சௌதி, "பரிக்ஷித்தின் மகனான ஜனமேஜயன், தன் மனைவியான காசியையிடம் {காசியின் இளவரசியான வபுஷ்டமாவிடம்}, மோக்ஷ ஞானம் அறிந்த மன்னர்களான சந்திரபீடன், சூரியபீடன் என்ற இரு மகன்களைப் பெற்றான்[1].(3) நுண்ணறிவுமிக்க வில்லாளிகளாகத் திகழ்ந்த சந்திரபீடனின் நூறு மகன்களும், க்ஷத்திரியர்களுக்குத் தகுந்த பணிகளைச் செய்ததன் மூலம் ஜனமேஜயர்கள் என்ற பட்டப்பெயர்களுடன் பூமியில் புகழை அடைந்தனர்.(4)
[1] மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதி 95ன், 85ம் ஸ்லோகத்தில் {1:95:85ல்} ஜனமேஜயனின் மகன்கள் சதானீகன், சங்குகர்ணன் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
அவர்களில் மூத்தவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனும், ஏராளமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தவனுமான சத்யகர்ணன்[2], வாரண நகரத்தின் {ஹஸ்தினாபுரத்தின்} அரியணையில் நிறுவப்பட்டான்.(5) சத்யகர்ணனின் மகனும், அறம்சார்ந்தவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான ஸ்வேதகர்ணன், பிள்ளையற்றவனாக இருந்ததால், தன் மனைவியுடன் காடு புகுந்தான்.(6) அழகிய புருவங்களைக் கொண்டவளும், {ஸுசாருவின் மகளும்}, எழில்மிகு யதுகுல இளவரசியுமான மாலினி, கானுலாவியான ஸ்வேதகர்ணனின் மூலம் கருவுற்றாள்.(7) அவள் கருவுற்றதும், குடிமுதல்வனான ஸ்வேதகர்ணன், நன்மையைத் தேடி தன் முப்பாட்டன்களைப் போலக் கான்புகுந்தான்.(8)
[2] மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதி 95ன், 86ம் ஸ்லோகத்தில் {1:95:86ல்} ஜனமேஜயனின் பேரன் அஸ்வமேததத்தன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறான்.
கருவுற்றிருந்த மாலினி, தன் கணவன் காட்டுக்குள் ஓய்ந்து செல்வதைக் கண்டு, அவனைப் பின்தொடர்ந்து சென்று, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட ஒரு மகனை வழியில் ஈன்றெடுத்தாள்.(9) பழங்காலத்தில் தன் கணவர்களைப் பின்தொடர்ந்து சென்ற திரௌபதியைப் போலவே[3], கற்புடையவளும், உன்னதமானவளுமான மாலினியும், புதிதாகப் பிறந்த குழந்தையை விட்டுவிட்டு தன் துணைவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.(10) அன்னையிடம் இருந்து பிரிந்த பச்சிளங்குழந்தை, மலைக்குகையில் அழுது கொண்டிருந்தபோது, அந்தப் பேரிளவரசனிடம் இரக்கங்கொண்ட சில நாரைகள் அங்கே வந்தன[4].(11)
[3] சூதாட்டத்தில் தோற்று நாட்டை இழந்து பாண்டவர்கள் கான்புகுந்தபோது, திரௌபதி தன் மகன்களைத் தன் அண்ணன் திருஷ்டத்யும்னனுடன் அனுப்பிவிட்டு, கணவர்களுடன் கான்புகுந்தாள்.
[4] சித்திரசாலை பதிப்பில், "மன்னனின் மகன் அந்த மலையின் புதர்களுக்குள் அழுது கொண்டிருந்தான். மேகங்கள், அவனுக்கு நிழலை உண்டாக்குவதற்காக வானத்தில் சுற்றிலும் கூடின" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தப் பச்சிளங்குழந்தை மலைப் பாதையில் அழுது கொண்டிருந்தது. உயரான்மாவான அந்தக் குழந்தையின் மீது இரக்கங்கொண்ட மேகங்கள் அவனை மறைத்தன" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில் ஹரிவம்சத்தின் விஷ்ணு பர்வம் மட்டுமே உண்டு. ஹரிவம்ச பர்வமும், பவிஷ்ய பர்வமும் கிடையாது. சித்திரசாலை பதிப்பில் பவிஷ்ய பர்வம் 135 அத்யாயங்களைக் கொண்டதாகும். ஆனால் அப்பதிப்பின் பவிஷ்ய பர்வ மொழிபெயர்ப்பு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. பிபேக்திப்ராய் பதிப்பில் பவிஷ்ய பர்வம் 4 அத்யாயங்களை மட்டுமே கொண்டதாகும். மன்மநாததத்தரின் பதிப்பில் பவிஷ்ய பர்வம் 48 அத்யாயங்களைக் கொண்டதாகும்.
சிரவிஷ்டரின் மகன்களான ரிஷிகள் பிப்பலாதரும், கௌசிகரும், அழுது கொண்டிருக்கும் இளவரசனைக் கண்டு, இரக்கம் கொண்டு அவனை எடுத்தனர். பாறையில் தேய்ந்து, குருதியில் நனைந்திருந்த அவனது விலாப்புறங்களை அவர்கள் நீரால் கழுவினர்.(12) அந்த இளவரசனின் விலாப்புறங்கள், ஆட்டுக்கு இருப்பதைப் போன்ற அடர்நீல வண்ணத்தில் வலுவான கட்டமைப்புடன் பருத்திருந்தன. எனவே அவன் அஜபார்ஷன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.(13) இருபிறப்பாளர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும் {பிப்பலாதரும், கௌசிகரும்}, அவனுக்கு அஜபார்ஷன் என்ற பெயரைச் சூட்டி, வேமகர் என்ற பெயரைக் கொண்ட ஒரு ரிஷியின் வீட்டில் அவனை வளர்த்து வந்தனர்.(14) வேமகரின் மனைவியானவள், அஜபார்ஷனைத் தன் மகனாக வளர்த்ததால், அவன் வேமகரின் மகனானான், அவ்விரு பிராமணர்களும் {பிப்பலாதரும், கௌசிகரும்} அவனது குடும்ப உறுப்பினர்களானார்கள். அஜபார்ஷனும், பிப்பலாதர், கௌசிகர் ஆகியோரின் மகன்களும், பேரர்களும் ஒன்றாகவே வாழ்ந்தனர். பூரு குலத்தில் பிறந்த இந்த அஜபார்ஷனே பாண்டவ வம்சத்தைத் தழைக்கச் செய்தான்[5].(16)
[5] ஜனமேஜயன், சந்திரபீடன், சத்யகர்ணன், ஸ்வேதகர்ணன், அஜபார்ஷன் என ஐந்து தலைமுறைகளுக்குப் பிறகு சொல்லப்படுவது பவிஷ்ய பர்வம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. மஹாபாரதத்தை நைமிசாரண்யத்தில் சௌனகரிடம் சௌதி சொன்ன போது ஜனமேஜயனின் பேரன் பிறப்பு வரை மட்டுமே சொன்னார் என்பதை மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதி 95ல் நாம் காணலாம். இப்போதோ இன்னும் மூன்று தலைமுறைகளை அதிகமாகச் சொல்கிறார். எனவே மஹாபாரதம் சொல்லப்பட்டதற்கும், இந்த பவிஷ்ய பர்வம் சொல்லப்பட்டதற்கும் இடையில் நிச்சயம் மூன்று தலைமுறை இடைவெளி இருக்க வேண்டும்.
நுண்ணறிவுமிக்கவனும், நகுஷனின் மகனுமான யயாதி, நீண்ட காலத்திற்கு முன்பு முதுமைப் பரிமாற்றம் செய்து கொண்டபோது, இந்த ஸ்லோகத்தை மகிழ்ச்சியுடன் பாடினான்.(17) {யயாதி}, "பூமியில், சூரிய, சந்திரர்களும், கோள்களும் இல்லாமல் போகலாம், ஒருபோதும் அது {பூமி} பூருக்கள் {பூரு குலத்தவர் / பௌரவர்கள்} அற்றதாகாது" {என்று பாடினான் யயாதி" என்றார் சௌதி}.(18)
பவிஷ்ய பர்வம் பகுதி – 01ல் உள்ள சுலோகங்கள் : 18
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |