Saturday 19 September 2020

ருக்மவதியின் திருமணம் | விஷ்ணு பர்வம் பகுதி – 118 – 062

(பிரத்யும்நவிவாஹோ ருக்மிவதம்)

Marriage of Rukshmavati | Vishnu-Parva-Chapter-118-062 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ருக்மியின் மகளான சுபாங்கி கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னனைத் திருமணம் செய்து கொண்டது; கிருஷ்ணனின் பேரனான அநிருத்தன் ருக்மியின் பேத்தியான ருக்மவதியைத் திருமணம் செய்து கொண்டது; பகடையால் உயிரை இழந்த ருக்மி...

Rukmi and Kalinga being killed by Balaraama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வெகு காலம் கழிந்ததும், பகைவர்களைக் கொல்பவனான பலம்வாய்ந்த ருக்மி, தன் மகள் {சுபாங்கி சுயம்வரத்தில்} கணவனைத் தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவித்தான்.(1) செல்வந்தர்களும், பலம்வாய்ந்தவர்களுமான மன்னர்களும், இளவரசர்கள் பலரும் பல்வேறு நாடுகளில் இருந்து ருக்மியால் அழைக்கப்பட்டு அவனுடைய வீட்டுக்கு வந்தனர்.(2) மற்ற இளவரசர்களுடன் சேர்ந்து {கிருஷ்ணனின் மகனான} பிரத்யும்னனும் அங்கே சென்றான். ருக்மியின் மகள் அவனைக் கண்டதும் அவனையே மணந்து கொள்ள விரும்பினாள். அருளுடனும், பிரகாசத்துடனும் கூடிய அவளும் தன் அழகுக்காகப் பூமியில் கொண்டாடப்பட்டாள். எனவே, கேசவனின் மகன், அழகிய கண்களைக் கொண்ட அவளை மணந்து கொள்ள விரும்பினான்[1].(3,4) பலம்வாய்ந்த மன்னர்கள் அனைவரும் சுயம்வர மண்டபத்தில் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, விதர்ப்ப மன்னனின் மகள் {சுபாங்கி} பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னனைத் (தன் கணவனாகத்) தேர்ந்தெடுத்தாள்.(5)

[1] முதல் ஸ்லோகத்தில் "சில நாட்கள்" என்றிருந்தது, மற்ற பதிப்புகளை ஒப்புநோக்கி "வெகு காலம்" என்று மாற்றப்பட்டுள்ளது. சித்திரசாலை பதிப்பில், "இளவரசர்கள் சூழ பிரத்யும்னன் அங்கே சென்றான். அந்தக் கன்னிகை அவனை (பிரத்யும்னனை) விரும்பினாள். மங்கலக் கண்களைக் கொண்ட அவளை (அந்தக் கன்னிகையை) அவனும் விரும்பினான். சுபாங்கி என்ற பெயர் படைத்த அந்த விதர்ப்ப கன்னிகை எழிலொளி மிகுந்தவளாக இருந்தாள். அந்தக் காலத்தில் ருக்மியின் மகள் பூமியில் புகழ்பெற்றவளாக இருந்தாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இளவரசர்கள் சூழ பிரத்யும்னன் அங்கே சென்றான். அந்தக் கன்னிகை அவனை விரும்பினாள். மங்கலக் கண்களைக் கொண்ட அவளை அவனும் விரும்பினான். விதர்ப்பத்தைச் சேர்ந்த இந்தப் பெண் அழகையும், ஒளியையும், சுபாங்கி என்ற பெயரையும் கொண்டவளாக இருந்தாள். அக்காலத்தில் ருக்மியின் மகள் பூமியில் புகழுடன் இருந்தாள்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அங்கு மற்ற ராஜகுமாரர்களால் சூழப்பட்டு (க்ருஷ்ணன் மகன்) ப்ரத்யும்னன் வந்தான். அந்தப் பெண் (ருக்மி புத்ரி) அவனையே விரும்பினாள். அவனும் அழகிய கண்களுடைய அவளை விரும்பினான். அப்போது விதர்ப்ப ராஜன் "சுபாங்கி" எனும் பெயர் கொண்டவள். ருக்மி புத்ரி, காந்தியுடனும், ஒளியுடனும் கூடி பூமியில் புகழ் பெற்றவளாயிருந்தாள்" என்றிருக்கிறது.

அவன் {பிரத்யும்னன்} ஆயுதங்களில் தேர்ச்சி பெற்றவனாகவும், சிங்கம் போன்ற கட்டுடலுடனும் இருந்தான். அதையுந்தவிர அந்தக் கேசவன் மகன் பூமியில் ஒப்பற்ற அழகனாகவும் இருந்தான்.(6) அழகும், இளமையும், குணமும் கொண்ட அந்த இளவரசியும் நாராயணனின் மனைவியான இந்திரசேனையைப் போல அவனுடன் அன்புடன் இருந்தாள்.(7) சுயம்வரம் முடிந்ததும் மன்னர்கள் தங்கள் தங்களுக்குரிய நகரங்களுக்குச் சென்றனர், பிரத்யும்னனும் விதர்ப்ப இளவரசியுடன் {சுபாங்கியுடன்} துவாரகைக்குச் சென்றான்.(8) அந்த வீரன், நளனும் தமயந்தியும் வாழ்ந்ததைப் போல அவளுடைய துணையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.(9) பிரத்யும்னன் அவளிடம், தேவனின் மகனைப் போன்றவனும், பூமியில் ஒப்பற்ற செயல்களைச் செய்பவனும், அநிருத்தன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைப் பெற்றான்.(10) வேதங்களிலும், வில் அறிவியலிலும், அறநெறி விதிகளிலும் தேர்ச்சியடைந்த அநிருத்தன், வயதை அடைந்த போது, ருக்மியின் பேத்தியும், பொன் போன்ற அழகியுமான[2] ருக்மவதியை அவனுடைய மனைவியாகத் தேர்ந்தெடுத்தான்.(11) ஓ! ஜனமேஜயா, பெருஞ்சிறப்புமிக்கவனும், நுண்ணறிவுமிக்கவனுமான மன்னன் ருக்மி எப்போதும் கிருஷ்ணனிடம் பகைமை பாராட்டி வந்தாலும், அவனுடைய மகனிடமும் {பிரத்யும்னனிடமும்}, ருக்மிணியிடமும் கொண்ட அன்பினால் தன் பகைமையைக் கைவிட்டு, "குணம் நிறைந்தவனும், அமைதியான இயல்பைக் கொண்டவனுமான அநிருத்தனுக்கு ருக்மவதியை நான் கொடுப்பேன்" என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.(12,13)

[2] ருக்மம் என்றால் பொன் என்று பொருள்

அந்தச் சந்தர்ப்பத்தில் கேசவன், ருக்மிணியுடனும், சங்கர்ஷணனுடனும் {பலராமனுடனும்}, தன் மகன்களுடனும், பிற யாதவர்களுடனும் சேர்ந்து தன் படை சூழ விதர்ப்பத்திற்குச் சென்றான்.(14) ருக்மியின் உற்றார் உறவினர், நண்பர்கள், கூட்டாளிகள் ஆகியோரும் அவனது {ருக்மியின்} அழைப்பின் பேரில் அங்கே வந்தனர்.(15) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதன் பிறகு மங்கல நட்சத்திரம் கொண்ட ஒரு மங்கல நாளில் அநிருத்தனின் திருமணம் பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.(16) இவ்வாறு அநிருத்தன், விதர்ப்ப இளவரசியைத் திருமணம் செய்து கொண்ட போது, வைதர்ப்பர்களும், யாதவர்களும் பெரும் விழா எடுத்தனர்.(17) விருஷ்ணிகள் தேவர்களைப் போலக் கொண்டாடப்பட்டவர்களாக அங்கே வாழ்ந்தனர்.

அப்போது, தயாள மன்னன் அஷ்மகன், வேணுதாரி,(18) அக்ஷன், சுருதர்வன், சாணூரன், கிராதன், அம்சுமான், பெருஞ்சக்திவாய்ந்த கலிங்க மன்னன் ஜயத்சேனன்,(19) பாண்டிய மன்னன், ரிஷீகத்தின் அழகிய மன்னன் ஆகிய தக்காணத்தின் {தென்னாட்டைச் சேர்ந்த} பெருஞ்செல்வந்த தலைவர்கள் அனைவரும்,(20) பலம்வாய்ந்த ருக்மியிடம் ரகசியமாக, "பகடையில் {சொக்கட்டானில்} வல்லவன் நீ, நாங்களும் விளையாட விரும்புகிறோம்; ராமன் {பலராமன்} அனுபவமற்றவன்.(21) எனவே உன்னைப் பின்தொடர்ந்து ராமனை நாங்கள் வீழ்த்த விரும்புகிறோம்" என்றனர்.

பெருந்தேர்வீரனான ருக்மி இவ்வாறு வேண்டிக்கொள்ளப்பட்டதும் (அவர்களின் முன்மொழிவை) ஏற்றுக் கொண்டான்.(22) அதன் பிறகு அவர்கள் அனைவரும் தங்கத் தூண்களைக் கொண்டதும், மலர்களால் தரை மறைக்கப்பட்டதுமான ஓர் அழகிய மண்டபத்திற்குள் நுழைந்தனர். அங்கே சந்தன நீர் தெளிக்கப்பட்டிருந்தது.(23) அழகிய மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரிக்கப்பட்டவர்களும், வெற்றியடைய விரும்பியவர்களுமான அந்த மன்னர்கள், அந்த மண்டபத்திற்குள் நுழைந்து, அங்கே இருந்த பொன் இருக்கைகளில் அமர்ந்தனர்.(24) வஞ்சகம் நிறைந்தவர்களும், பகடையாட்டத்தில் நிபுணர்களுமான அந்த மன்னர்களால் அழைக்கப்பட்ட ராமனும், "நான் விளையாடுகிறேன்"[3] என்று மகிழ்ச்சியாகச் சொன்னான்.(25) தக்காணத்தின் தலைவர்கள் {தென்னாட்டு மன்னர்கள்} வஞ்சகமாக விளையாடி ரேவதியின் கணவனை வீழ்த்துவதற்காக எண்ணற்ற ரத்தினங்களையும், முத்துக்களையும், பொன் நாணயங்களையும் சூதாட்டக்களத்திற்குக் கொண்டு வந்தனர்.(26)

[3] சித்திரசாலை பதிப்பில், "விளையாடுவோம். பணயம் வையுங்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "விளையாடுவோம். பணயமென்ன?" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "சேர்ந்து விளையாடுவோம். பந்தயம் வைக்கப்படட்டும்" என்றிருக்கிறது.

அதன்பிறகு, பயங்கரச் சச்சரவுகளைத் தோற்றுவிக்கவல்லதும், தீய மனம் கொண்டோரின் அழிவுக்குப் பிறப்பிடமும், நட்புக்குப் பகையுமான பகடையாட்டம் தொடங்கியது.(27) ருக்மியுடனான பகடையாட்டத்தில் பலதேவன் பத்தாயிரம் பொன் நாணயங்களைப் பணயம் வைத்தான்.(28) பெருஞ்சக்திவாய்ந்த பலதேவன் மிகக் கவனமாக இருந்தாலும், அந்த ஆட்டத்தை வென்ற ருக்மி மேலும் அத்தகைய தொகையைப் பணயமாக வைத்தான்.(29) பெருஞ்சக்திவாய்ந்தவனும், கேசவனின் அண்ணனுமான அவன் {பலராமன்}, இவ்வாறு மீண்டும் மீண்டும் ருக்மியால் வீழ்த்தப்பட்டு ஒரு கோடி பொன் நாணயங்களைப் பணயமாக வைத்தான்.(30) வஞ்சகம் நிறைந்த ருக்மி, "நீ வீழ்த்தப்பட்டாய்" என்று முசலாயுதனிடம் {உலக்கையை ஆயுதமாகக் கொண்ட பலராமனிடம்} சொல்லி புன்னகைத்தவாறே பகடையை வீசினான். பிறகு அவன் மீண்டும் செருக்குடன்,(31) "போரில் வெல்லப்பட முடியாதவனாக இருப்பினும், பகடையில் திறனற்றவனும், அனுபவமற்றவனுமான பலதேவன் எண்ணிலடங்கா பொன் நாணயங்களை என்னிடம் இழந்து விட்டான்" என்று சொல்லி ஏளனம் செய்தான்.(32)

இதைக் கேட்ட கலிங்க மன்னன், மகிழ்ச்சியடைந்தவனாகத் தன் பற்களைக் காட்டி உரக்க நகைத்தான். ஹலாயுதன் (பலராமன்), தன் தோல்வி தொடர்பாக ருக்மி சொன்ன அந்தச் சொற்களைக் கேட்டுக் கோபமடைந்தான்.(33,34) ரோஹிணியின் அற மகன் {பலராமன்}, கோபத்தை அடக்கி ஆள்பவனாக இருந்தாலும், பீஷ்மகனின் மகன் {ருக்மி} சொன்ன கூரிய சொற்களால் தாக்கப்பட்டவனாக மீண்டும் பெருங்கோபம் அடைந்தான்.(35) பெருஞ்சக்திவாய்ந்த ராமன், கோபத்துடன் இருந்தாலும், தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாக, "ஓ! மன்னா, நூறு கோடி பொன் நாணயங்கள் என் அடுத்தப் பணயம்.(36) பாவம் நிறைந்த {தூசி படிந்த} இந்த நாட்டில் தாமிரச் சிவப்பு வண்ணப் பாச்சிகைகளை உருட்டி இவை அனைத்தையும் எடுத்துக் கொள்வாயாக[4]" என்றான்.(37)

[4] சித்திரசாலை பதிப்பில், "பாவம் நிறைந்த இந்த இடத்தில் (கோபம் நிறைந்த இந்த நேரத்தில்) கருப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கொண்ட பாச்சிகைகளை வீசுவாயாக" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "புழுதி நிறைந்த இந்த இடத்தில் கருப்பு, சிவப்பு பாச்சிகைகளை வீசுவாயாக" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அதிகத் தூசி படிந்தவிடத்தில் கருப்பு மஞ்சள் பாசகங்களை உருட்டு" என்றிருக்கிறது.

ரோஹிணியின் மகனால் {பலராமனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், மனிதர்களில் இழிந்தவனான ருக்மி முதலில் ஒன்றையும் சொல்லாமல், பிறகு "மிக்க நன்று" என்று சொல்லிக் கொண்டே மீண்டும் பாச்சிகையை உருட்டினான்.(38) நான்கு அடையாளங்களைக் கொண்ட பாச்சிகையை ருக்மி உருட்டிய போது, அவன் ராமனால் நியாயமாக வெல்லப்பட்டான்.(39) ஆனால் போஜனின் வழித்தோன்றல் {ருக்மி} அதை ஏற்காமல் புன்னகைத்தவாறே, "நானே வென்றேன்" என்றான்.

வஞ்சகம் நிறைந்த அந்தச் சொற்களைக் கேட்ட பலதேவன் மீண்டும் கோபத்தால் நிறைந்ததால் எந்த மறுமொழியும் கொடுக்காதிருந்தான்.(40,41) அப்போது உயரான்ம பலதேவனின் கோபத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் புலப்படாத குரலொன்று {அசரீரியானது}, மேக முழக்கத்தைப் போல விழுமிய முறைமையுடன்,(42) "அழகிய ராமன் உண்மையைச் சொன்னான். நியாயமான விளையாட்டில் ருக்மி வீழ்த்தப்பட்டான். தோல்வியை இவர்களின் இதயம் அறிந்தாலும் சொற்களில் ஏற்காமல் இருக்கிறார்கள். பலதேவன் ஏதும் சொல்லாதிருந்தாலும், உண்மையில் அவனே ஆட்டத்தை வென்றான். இதுவே உண்மை" என்றது.(43,44)

பலம்வாய்ந்த சங்கர்ஷணன் {பலராமன்}, நன்கு வெளிப்படுத்தப்பட்ட இந்த வாய்மை நிறைந்த சொல்லை வானத்தில் இருந்து கேட்டு எழுந்து, ருக்மிணியின் அண்ணனை பகடைப் பலகையால் பூமியில் தள்ளி நையப் புடைக்கத் தொடங்கினான்.(45) யதுக்களில் முதன்மையான ராமன் {பலராமன்}, இந்தச் சொற்களால் கோபமடைந்து, கொடுஞ்சொல் பேசுபவனும், பொறாமை கொண்டவனுமான ருக்மியை {எட்டுப் பகுதிகளைக் கொண்ட பகடைப் பலகையால்} அடித்துக் கொன்றான்.(46) அங்கிருந்து கோபத்துடன் வெளிப்பட்ட அவன், கலிங்க மன்னனின் பற்களை நொறுக்கி, அங்கே சிங்கம் போலக் கோபத்தில் முழங்கத் தொடங்கினான்.(47) அதன் பிறகு தன் குத்து வாளை எடுத்துக் கொண்டு அங்கிருந்த மன்னர்கள் அனைவரையும் அச்சுறுத்தினான். பலவான்களில் முதன்மையான சங்கர்ஷணன், ஒரு யானையைப் போல மண்டபத்தின் தங்கத் தூண்களைப் பிடுங்கி அங்கிருந்த கைசிகர்களை அச்சுறுத்தி வாயில் வழியே வெளிப்பட்டான்.(48,49) யதுக்களில் முதன்மையான ராமன், அற்ப மானை {அற்ப விலங்கைத்} தாக்கும் சிங்கத்தைப் போலத் தீய ருக்மியைக் கொன்று,(50) தன் மக்கள் சூழத் தன் கூடாரத்திற்குத் திரும்பி, நடந்தவை அனைத்தையும் கேசவனிடம் சொன்னான்.(51)

பேரொளி படைத்த கிருஷ்ணன் பலராமனிடம் ஏதும் சொல்லாதிருந்தான். தன் மனத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்திக் கொண்ட அவன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் அழுதான்.(52) பகைவீரர்களைக் கொல்பவனும், ருக்மிணியின் அண்ணனுமான ருக்மியை, ருக்மிணியின் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக வாசுதேவன் முன்பே கொல்லாதிருந்தான்.(53) வஜ்ரதாரியுடன் (இந்திரனுடன்) ஒப்பிடத்தக்க அந்தப் பலம்வாய்ந்த மன்னன் (ருக்மி), பகடையாட்டத்தின் போது பலராமன் கையில் இருந்து விடுபட்டதும், எட்டு பகுதிகளைக் கொண்டதுமான பகடைப் பலகையால் கொல்லப்பட்டான்.(54) {கிம்புருஷன்} துருமனுக்கும், பார்க்கவருக்கும் (பரசுராமருக்கும்) இணையானவனும், அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவனும், பெரும் வீரனும், பீஷ்மகனின் மகனுமான அந்த மன்னன் {ருக்மி} இவ்வாறே கொல்லப்பட்டான்.(55) சாதனைகளைச் செய்தவனும், போரில் நிபுணனும், நாளுக்கு நாள் வேள்விகளைச் செய்து வந்தவனுமான அவன் கொல்லப்பட்டதில் விருஷ்ணிகளும், அந்தகர்களும் என அனைவரும் கவலை கொண்டனர்.(56) சிறப்புமிக்கவளான ருக்மிணி துன்பம் நிறைந்த சொற்களைச் சொல்லி அழுதாள். கேசவன், ருக்மிணி அழுவதைக் கண்டு அவளைத் தேற்றினான்.(57) ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, ருக்மி விருஷ்ணிகளுடன் பகை கொண்டது, அவன் கொல்லப்பட்டது ஆகிய அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(58) ஓ! மன்னா, ராமனையும், கிருஷ்ணனையும் சார்ந்திருந்த விருஷ்ணிகள், தங்களால் ஈட்டப்பட்ட செல்வங்கள் அனைத்துடன் துவாராவதி நகருக்குச் சென்றனர்[5]" என்றார் {வைசம்பாயனர்}.(59)

[5] மேற்கண்ட 52-59ம் ஸ்லோகங்களில் உள்ள செய்தி சித்திரசாலை பதிப்பில் உள்ளது போல மாற்றப்பட்டுள்ளது. மற்ற இரண்டு பதிப்புகளிலும் {பிபேக்திப்ராய், உ.வே.எஸ்.இராமானுஜ ஐயங்கார் ஆகியோரின் பதிப்புகளிலும்} இவ்வாறே சொல்லப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால் அவை பின்வருமாறு இருக்கும்: பேரொளிபடைத்த கிருஷ்ணன், ராமனிடம் ஏதும் சொல்லாதிருந்தான். ருக்மிணி தன்னுடன் பிறந்தானின் மரணத்தைக் கேட்டு, தன்னையே சபித்துக் கொண்டு, கோபத்தில் கண்ணீர் சிந்தத் தொடங்கி,(52) "ஐயோ, இந்திரனைப் போன்ற பலம்வாய்ந்தவரும், பகைவீரக் கூட்டத்தைக் கொல்பவரும், முன்பே வாசுதேவரால் கொல்லப்படாதவருமான ருக்மி, சூதாட்ட மண்டபத்தில் ராமரால் வீசப்பட்ட பகடைப் பலகையால் கொல்லப்பட்டார்" என்றாள்.(53,54) பெரும்பலம் வாய்ந்தவனும், பார்க்கவரால் {பரசுராமரால்} பயிற்றுவிக்கப் பட்டவனும், பார்க்கவரைப் போன்றே போர்க்கலையை நன்கறிந்தவனும், ஆற்றல்வாய்ந்தவனும், பீஷ்மகனின் மகனுமான ருக்மி கொல்லப்பட்டதால் விருஷ்ணிகளும், அந்தகர்களும் கவலையில் நிறைந்தனர். ஓ பாரதர்களில் முதன்மையானவனே, எவ்வாறு விருஷ்ணிகள் ருக்மியின் பகைவராகினர் என்பதையும், அவன் {ருக்மி} எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதையும் நீ கேட்டாய். ஓ மன்னா, இந்நிகழ்வு நடந்த சில நாட்களுக்குப் பிறகு ராமகிருஷ்ணர்களின் ஆளுகையில் இருந்த விருஷ்ணிகள் ஏராளமான செல்வங்களுடன் துவாராவதி நகரத்தை அடைந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(55-58) மன்மதநாததத்தரின் பதிப்பில் 58 ஸ்லோகங்களே உள்ளன. மற்ற இரண்டு பதிப்புகளில் 59 ஸ்லோகங்களும், பிபேக்திப்ராயின் பதிப்பில் 53 ஸ்லோகங்களும் உள்ளன. இம்மொழிபெயர்ப்பில் 52 முதல் இறுதி வரையுள்ள ஸ்லோகங்கள் சித்திரசாலை பதிப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதால் இதிலும் 59 ஸ்லோகங்களே குறிப்பிடப்பட்டுள்ளன.

விஷ்ணு பர்வம் பகுதி – 118 – 062ல் உள்ள சுலோகங்கள் : 59
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்