Wednesday 8 July 2020

போட்டிக்கான ஏற்பாடுகள் | விஷ்ணு பர்வம் பகுதி – 83 – 028

(கம்ஸஸ்ய ஜன்மாதிவ்ருத்தம்)

Arrangements for the match | Vishnu-Parva-Chapter-83-028 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  கம்ஸனின் வண்ணானைக் கொன்ற கிருஷ்ணன்; பூமாலை கட்டும் குணகன்; திரிவிக்ரையின் கூன் நிமிர்த்திய கிருஷ்ணன்; வில் ஒடித்த கிருஷ்ணன்; செய்தியை அறிந்த கம்ஸன்...

Kamsa and Narada

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "போஜ குலத்தைச் சேரந்தவனான கம்ஸன், வில் முறிக்கப்பட்ட இந்நிகழ்வைக் குறித்துத் தியானித்துப் பெருந்துன்பத்தால் பீடிக்கப்பட்டவனாகவும், மனமுடைந்தவனாகவும் இருந்தான்.(1) அவன், "மனிதர்களால் பாதுகாக்கப்படும் இரும்பாலான வில்லை முறிக்கவும், {அரங்கைவிட்டு} வெளியேறவும் ஒரு சிறுவனால் எவ்வாறு இயலும்?(2) நாரதர் முன்னறிவித்தபடியே, தேவகியின் ஆறு வீர மகன்களை அழிக்கும் பெரும் நிந்தனைக்குரிய, பயங்கரமான செயலை அச்சத்தின் காரணமாக நான் செய்ததன் விளைவால் உண்டான விதியை இப்போது ஆண்மையினால் எவனாலும் தாக்குப்பிடிக்க முடியாது" என்று நினைத்தான்.(3,4)

இவ்வாறு நினைத்த மன்னன் {கம்ஸன்}, தன் அறையில் இருந்து வெளிவந்து, {அரங்கத்தின்} மேடைகளை ஆய்வு செய்வதற்காக அரங்கத்திற்குச் சென்றான்.(5) நன்கு பொருத்தப்பட்ட மேடைகள் நிறைந்தாகவும், அழகிய அறைகளைக் கொண்ட கோபுரங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் நுண்ணறிவுமிக்கக் கைவினைஞர்களால் அந்த மண்டபம் கட்டப்பட்டிருந்தது. அகன்ற முற்றத்தையும், ஒரே அளவிலான தூண்கள் பலவற்றையும் அது கொண்டிருந்தது.(6,7)  அனைத்துப் பக்கங்களிலும் வலுவான யானைத் தந்தங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும், அகன்றவையும், உயர்ந்தவையுமான அரச இருக்கைகளுடன் கூடியதாகவும் இருந்தது.(8) நடைபாதைகள் பலவற்றைக் கொண்டிருந்த அது, பல மனிதர்களைச் சுமக்கவல்லதாகவும், பீடங்கள் நிறைந்ததாகவும் இருந்தது.(9) நுண்ணறிவு மிக்கவனான அந்தச் சிறந்த மன்னன் {கம்ஸன்}, அகலமாகவும், நல்ல முறையிலும் கட்டப்பட்டிருந்த அந்த வலுவான அரங்கத்தைக் கண்டு ஓர் ஆணையை வெளியிட்டான்.(10) {அவன்}, "வில்வேள்வி (நாளை) நடைபெற இருக்கிறது. மேடைகளும், கோபுரங்களும், நடைபாதைகளும் மலர்மாலைகளாலும், கொடிகளாலும், விரிப்புகளாலும் பளபளப்பாக்கப்படட்டும், இனிய நறுமணமுள்ளதாக ஆக்கப்படட்டும்.(11) மணிகளாலும், விரிப்புகளாலும், நலம்பயக்கும் உணவுகளாலும் சுற்றம் அலங்கரிக்கப்படட்டும், பசுஞ்சாணம் ஏராளமாக வைக்கப்படட்டும்.(12) நீர் நிறைந்தவையும், சிறந்தவையுமான பொற்குடுவைகள் முறையான வரிசையில் இங்கே வைக்கப்படட்டும்.(13) உணவு மற்றும் நறுமணப் பொருட்கள் நிறைந்த குடுவைகள் வைக்கப்படட்டும், போர்முறையில் நுண்ணறிவுமிக்க நடுவர்களும் {மத்யஸ்தர்கள்}, குடிமக்களும் அழைக்கப்படட்டும்.(14) மற்போர் வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என்னுடைய இந்த ஆணை அறிவிக்கப்படட்டும், அழகாக அலங்கரிக்கப்பட்டவையும், வேலியுடன் கூடியவையுமான மேடைகள் தனித்தனியாக அமைக்கப்படட்டும்" {என்று ஆணையிட்டான்}.(15) கம்ஸன், விழா ஏற்பாடு தொடர்பான இந்த ஆணையை வெளியிட்ட பிறகு அரங்கத்தை விட்டுத் தன் மாளிகைக்குச் சென்றான்.(16)

தன் அறைக்குள் நுழைந்த கம்ஸன், பலத்தில் ஒப்பற்றவர்களான சாணூரனையும், முஷ்டிகனையும் அழைக்கச் சொன்னான்.(17) பெருஞ்சக்தி கொண்டவர்களும், நீண்ட கரங்களைக் கொண்டவர்களுமான அந்த மற்போர் வீரர்கள் இருவரும் கம்ஸனின் ஆணையின் பேரில் மகிழ்ச்சியான இதயங்களுடன் அவனது அறைக்குள் நுழைந்தனர்.(18) மன்னன் கம்ஸன், உலகப் புகழ்பெற்ற மற்போர் வீரர்களான அவ்விருவரையும் கண்டு, பொருத்தமான பின்வரும் சொற்களை அவர்களிடம் சொன்னான்.(19) {கம்ஸன்}, "நீங்கள் இருவரும் (உலகில்) நன்கறியப்பட்டவர்களும், வீரர்களுமான என் மற்போர் வீரர்களாவீர். நீங்கள் நன்கு நடத்தப்படத் தகுந்தவர்களாக இருப்பதால் எப்போதும் நான் உங்களிடம் மதிப்பு கொண்டவனாக இருக்கிறேன்.(20) நான் உங்கள் மீது பொழிந்திருக்கும் கௌரவங்களை நீங்கள் நினைவுகூர்ந்தால், என் சார்பாகப் பெருஞ்சக்தியுடன் பெரும்பணியில் ஈடுபடுவீராக.(21) உண்மையில், காடுலாவும் ஆயர்களும், விரஜத்தில் வளர்ந்தவர்களுமான கிருஷ்ணன், ஸங்கர்ஷணன் என்ற அந்தச் சிறுவர்கள் இருவருடனும் அரங்கத்தில் எனக்காகப் போரிட்டு அவர்களைப் பூமியில் வீசி எறிந்து உங்களால் கொல்ல முடியும்.(22,23) அவர்களைக் கொல்வதில் நீங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்; நிலையற்ற இயல்புடைய சிறுவர்களென அவர்களை அலட்சியம் செய்யாதீர்கள்.(24) அரங்கத்தில் நடக்க இருக்கும் மற்போரில் அந்தச் சிறுவர்கள் இருவரும் கொல்லப்பட்டால், நான் இம்மையிலும், மறுமையிலும் நலமாக இருப்பேன்" என்றான் {கம்ஸன்}.(25)

போர்வெறி கொண்ட மல்லர்களான சாணுரனும், முஷ்டிகனும், மன்னனின் இந்த அன்புச் சொற்களைக் கேட்டு, மகிழ்ச்சியுடன்,(26) "கோபர்கள் {ஆயர்கள்} செய்த பாவமாக இருக்கும் அந்த ஆதரவற்ற சிறுவர்கள் இருவரும் எங்கள் முன்பு வந்தால், அவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டவர்கள் என்றும், ஆவியின் வடிவை அடைந்த சடலங்கள் என்றும் அறிவீராக.(27) பேராபத்துகளால் சூழப்பட்ட அந்தக் காடுலாவிகள் கோபத்துடன் இருக்கும் எங்களை எதிர்த்து நின்றால் உமது முன்னிலையிலேயே நாங்கள் அவர்களை அழிப்போம்" என்றனர்.(28) இந்த நச்சுச் சொற்களைச் சொன்னவர்களும், மல்லர்களில் முதன்மையானவர்களுமான சாணூரன், முஷ்டிகன் என்ற அவ்விருவரும் மன்னன் கம்ஸனால் ஆணையிடப்பட்டவர்களாகத் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(29)

அதன்பிறகு கம்ஸன், தன் யானைக்குப் பயிற்சி அளிப்பவனான {மாவுத்தனான} மஹாமாத்ரனிடம், "நிலையற்ற இயல்பைக் கொண்டதும், பலம்வாய்ந்ததும், பிற யானைகளை ஒடுக்குவதும், மதநீரால் நனைக்கப்பட்ட குமடுகளைக் கொண்டதும், எப்போதும் வெறிகொண்ட கண்களுடன் கூடியதும், மனிதர்களிடம் எப்போதும் கோபம் கொண்டதுமான குவலயாபீடம் என்ற யானையை அரங்கத்தின் வாயிலில் நிறுத்துவாயாக.(30,31) காடுலாவும் அற்பர்களான வஸுதேவன் மகன்கள் வரும்போது, அவர்களின் உயிரை உடனே பறிக்கும் வகையில் அந்த யானையை நீ செலுத்துவாயாக.(32) தடுக்கப்பட முடியாத கோபர்களான அவ்விருவரும் உன்னால் அந்த யானைத் தலைவனைக் கொண்டு கொல்லப்பட்டால், உன்னைக் கண்டு என் கண்கள் களிப்படையும்.(33) அவர்கள் கொல்லப்பட்டதைக் காணும் வஸுதேவன், தன் வேர் அறுந்தவனாக, ஆதரவற்றவனாகத் தன் மனைவியுடன் {தேவகியுடன்} சேர்ந்து அழிவை அடைவான்.(34) மூடர்களான யாதவர்கள் அனைவரும், கிருஷ்ணன் வீழ்ந்ததைக் கண்டு நம்பிக்கையிழந்தவர்களாகி கொல்லவும் படுவார்கள்.(35) மல்லர்கள் மூலமோ, யானையின் மூலமோ அந்த ஆயச் சிறுவர்கள் இருவரையும் கொல்லும் நான், மதுரா நகரை யாதவர்கள் அற்றதாகச் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பேன்.(36) என் தந்தை {உக்ரஸேனர்} யது குலத்தைச் சார்ந்தவர் என்பதாலேயே நான் அவரைக் கைவிட்டேன். இப்போது கிருஷ்ணனிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக எஞ்சியிருக்கும் யாதவர்களையும் கைவிடப்போகிறேன்.(37) நாரதர் சொன்னதைப் போலவே, மகனிடம் பெரும் விருப்பமும் {மகப்பேற்றில் விருப்பமும்}, பலவீனமான சக்தியும் கொண்ட மனிதரான உக்ரஸேனரால் உண்மையில் நான் பெறப்படவில்லை" என்றான் {கம்ஸன்}.(38)

மஹாமாத்ரன் {கம்ஸனிடம்}, "ஓ! மன்னா, ஓ! பகைவரைக் கொல்பவரே, தெய்வீக முனிவரான நாரதர், எவ்வாறு அந்த அற்புதக் கதையை உம்மிடம் சொன்னார்.(39) ஓ! மன்னா {கம்ஸா}, உமது தந்தையைத் தவிர வேறு யாருக்கும் நீர் எவ்வாறு பிறக்க முடியும்? சராசரி பெண்ணாலும் செய்யமுடியாத இத்தகைய அருவருப்பான செயலை உமது தாயாரால் எவ்வாறு செய்ய முடிந்தது? ஓ! பெரும் மன்னா, இவை அனைத்தையும் விபரமாகக் கேட்க நான் ஆவல் கொண்டிருக்கிறேன்" என்றான்.(40,41)

கம்ஸன், "நீ மிகவும் ஆர்வமாக இருப்பதால், பிராமணர்களில் முதன்மையானவரும், பலம்வாய்ந்த முனிவருமான நாரதர் சொன்னதைச் சொல்லப் போகிறேன்.(42) ஒருகாலத்தில், அழிவற்றவரும், கல்விமானும், தெய்வீக முனிவரும், இந்திரனின் நண்பருமான நாரதர், அவனது {இந்திரனின்} அரண்மனையில் இருந்து என்னிடம் வந்தார். சந்திரக் கதிர்களைப் போன்ற வெண்மையான உடையுடுத்தியிருந்த அவர், கழுத்தில் மானின் தோலுடனும், கடினமான புனித நூலுடனும் {பொன்னாலான பூணுல் அணிந்தும்}, கைகளில் தண்டம் மற்றும் கமண்டலத்துடனும் இருந்தார். அவர், நான்கு வேதங்களை ஓதுபவரும், இசைக் கலையில் நிபுணரும், பிரம்மலோகத்தில் இரண்டாவது பிரம்மாவைப் போலத் திரிபவருமாவார்.(43-45) அந்த முனிவர் வருவதைக் கண்ட நான், அர்க்கியம், கால் கழுவுதற்கு நீர், இருக்கை ஆகியவற்றைக் கொடுத்து முறையாக அவரைத் துதித்து, என் வீட்டுக்கு அழைத்து வந்து அவரை அமரச் செய்தேன்.(46) தெய்வீக முனிவர்களில் முதன்மையானவரும், எப்போதும் ஆன்மாவை தியானிப்பதையே நோக்கமாகக் கொண்டவருமான நாரதர், சுகமாக அமர்ந்து கொண்டு என் நலத்தை விசாரித்து மகிழ்ச்சியான மனத்துடன் என்னிடம் பேசினார்.(47)

நாரதர் {கம்ஸனிடம்}, "ஓ! வீரா, புனிதமான ஆவணங்களில் {சாத்திரங்களில்} சொல்லப்பட்டுள்ள சடங்குகளுடன் உன்னால் நான் வழிபடப்பட்டேன். இப்போது நான் சொல்லும் சொல்லைக் கேட்டு ஏற்பாயாக.(48) நான் தேவர்களின் வசிப்பிடமான மேரு எனும் பொன்மலைக்குச் சென்றேன். அப்போது, சுமேரு மலையின் உச்சியில் தேவர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. உனக்கும், உன் தொண்டர்களுக்கும் ஏற்படப்போகும் பயங்கராமன அழிவைக் குறித்து அவர்கள் செய்யும் ஆலோசனைகளை அங்கே நான் கேட்டேன்.(49,50) தேவகியின் எட்டாம் மகனும், அனைவராலும் வழிபடப்படுபவனுமான விஷ்ணுவே கம்ஸனுக்கு மரணத்தைக் கொண்டு வருவான் என்பதை நான் அங்கே கேட்டேன்.(51) தேவர்களுக்கு எல்லாமான அவனே, தேவலோகத்தை ஆதரிப்பவனும், தேவர்களின் பெரும்புதிரும் ஆவான். அவனே உனக்கு யமனாவான்.(52) ஓ! மன்னா, தன் பகைவன் பலவீனமாக இருந்தாலும், தனக்கு உற்ற உறவினனே ஆனாலும் அவனை ஒருவன் அலட்சியம் செய்யக் கூடாது. தேவகியின் பிள்ளைகளைக் கொல்வதில் கவனமாக இருப்பாயாக.(53) ஓ! பெருஞ்சக்தி கொண்டவனே, உக்ரஸேனன் உன் தந்தையல்ல. சக்திவாய்ந்தவனும், பயங்கரனும், ஸௌபத்தின்[1] மன்னனுமான திருமிலனே உன் தந்தையாவான்" என்றார்.(54)

[1] "இஃது ஆகாய மத்தியில் மிதந்து கொண்டிருக்கும் ஹரிஷ்சந்திரனின் நகரமாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அவரது சொற்களைக் கேட்டுச் சற்றே கோபத்தால் நிறைந்த நான், "ஓ! பிராமணரே, தானவரான திருமிலர் எவ்வாறு என் தந்தையாவார்? ஓ! விப்ரரே, அவர் எவ்வாறு என் அன்னையை அறிந்தார்? ஓ! பெரும் தவசியே, இவை அனைத்தையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்" என்று மீண்டும் கேட்டேன்.(55,56)

நாரதர் {கம்ஸனிடம்}, "ஓ! மன்னா, உன் அன்னை {பத்மாவதி}[2] எவ்வாறு திருமிலனுடன் கலந்தாள் என்பதை நான் உனக்கு உள்ளபடியே சொல்கிறேன்.(57) ஒரு காலத்தில் உன் அன்னை, தன் மாதவிடாய் முடிந்ததும், ஸுயாமுனம் என்ற மலையைக் காணும் ஆவலில் தன் தோழிகளுடன் புறப்பட்டுச் சென்றாள். அழகிய மரங்களும், மேட்டுச் சமவெளிகளும் நிறைந்த அழகிய மலைச் சிகரங்களிலும், குகைகளிலும், ஆற்றங்கரைகளிலும் அவள் திரிந்து கொண்டிருந்தாள்.(58,59) காதுகளுக்கு இன்பமளிக்கக் கூடியவையும், கின்னரர்களின் பாடல்களைப் போன்று இனியவையும், காமந்தூண்டுபவையுமான சொற்களையும், அனைத்துப் புறங்களிலும் எதிரொலிக்கும் மயில்களின் அகவல்களையும், பிற பறவைகளின் ஒலிகளையும் மீண்டும் மீண்டும் கேட்ட அவளது மனம், பெண்களுக்கே உரிய வழக்கத்துடன் ஆசையில் திளைத்திருந்தது.(60,61) அதே நேரத்தில் (காதல் தேவனான) மன்மதனை விழிப்படையச் செய்யும் காட்டு மலர்களின் மணத்தைச் சுமந்தபடி தென்றலும் வீசிக்கொண்டிருந்தது.(62) தொடர் மழையால் நனைதிருந்தவையும், கருவண்டுகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான கதம்ப மலர்கள் காற்றால் உந்தப்பட்டவையாக அபரிமிதமான மணத்தைப் பொழியத் தொடங்கின.(63) மலர்களும், மலரிதழ்களும் பொழிந்ததால் நீப மரங்கள் {கடப்ப மரங்கள்} அங்கே விளக்குகளைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தன.(64) பச்சைப் புற்களால் மறைக்கப்பட்டவளும், இந்திரகோபப் பூச்சிகளால் {மின்மினிப் பூச்சிகளால்} அலங்கரிக்கப்பட்டவளுமான பூமியானவள், தன் மாதவிடாய் காலத்தைக் கொண்ட ஓர் இளம்பெண்ணைப் போலத் தோன்றினாள்.(65)

[2] உக்ரஸேனனின் மனைவியான பத்மாவதி, விதர்ப்ப மன்னன் சத்யகேதுவின் மகளாவாள். இந்தக் கதை பத்மபுராணத்திலும் சொல்லப்பட்டுள்ளது. பாகவதத்திலும், விஷ்ணுபுராணத்தில் இக்கதை சொல்லப்படவில்லை.

அந்த நேரத்தில், ஓ! கம்ஸா, விரும்பிய இடமெங்கும் செல்ல வல்லவனும், ஸௌபத்தின் மன்னனுமான அழகிய தானவன் திருமிலன், விதியால் உந்தப்பட்டவனைப் போல(66) ஸுயாமுன மலையைக் காண்பதற்காக, விரும்பிய இடம் எங்கும் செல்ல வல்லதும், புதிய சூரியனின் {விடியலின்} பிரகாசத்தைக் கொண்டதும், வேகமாகச் செல்லவல்லதுமான தேரில் ஏறி(67) ஆகாய வழியில் அங்கே வந்தான். அந்த முதன்மையான மலையை அடைந்து, தேரில் இருந்து இறங்கி,(68) பிற தேர்கள் அனைத்தையும் அழிக்கவல்ல அந்தத் தேரை மலையின் தோட்டத்தில் நிறுத்திவிட்டு, தன் தேரோட்டியுடன் அந்தச் சிகரத்தில் நடக்கத் தொடங்கினான்.(69) அவர்கள் அந்தச் சிறந்த மலையில் நடந்து சென்றபோது, பல காடுகளையும், பல்வேறு பருவகாலங்களின் தன்மைகளுடன் கூடியவையும், தெய்வீக நந்தனத் தோட்டத்திற்கு ஒப்பானவையுமான தோட்டங்களையும்,(70) பொன், வெள்ளி, அஞ்சனமை வண்ணங்களிலான பல்வேறு ரத்தினங்களையும், பல்வேறு தாதுபொருட்களால் மறைக்கப்பட்ட சிகரங்களையும்,(71) பல வகையான கனிகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு மரங்களையும், மலர்களின் நறுமணத்தால் நிறைந்தவையும், பல்வேறு உயிரினங்களாலும், பல்வேறு வகைப் பறவைகளாலும் நாடப்படுபவையும், மூலிகைகள் நிறைந்தவையுமான பல்வேறு இடங்களையும், பக்தியில் சாதித்த ரிஷிகளையும், எண்ணற்ற வித்யாதரர்களையும், கிம்புருஷர்களையும், வானரர்களையும், ராட்சசர்களையும், சிங்கங்கள், புலிகள், பன்றிகள், எருமைகள், சரபங்கள், சலங்கள், ஸ்ரீமரங்கள், மஹாசத்வங்கள், யானைகள் ஆகியவற்றையும், யக்ஷர்களையும் அங்கே கண்டனர்.(70-75)

அப்போது, தைத்தியர்களின் மன்னனான திருமிலன், தேவர்களின் மகளைப் போல மரங்களில் மலர் கொய்தும், தன் தோழிகளுடன் தொலைவில் விளையாடியும் கொண்டிருந்த உன் அன்னையை {பத்மாவதியைக்} கண்டான்.(76) தோழிகளால் சூழப்பட்ட அழகிய இடை கொண்ட அந்தத் தேவியைத் தொலைவில் கண்ட சௌபத்தின் மன்னன், ஆச்சரியத்தால் நிறைந்தவனாகத் தன் தேரோட்டியிடம்,(77) "உயர்ந்த மனமும், திறமும் கொண்ட காரிகையாகக் காட்டுப்புறத்தில் நிற்கும் இந்த அழகிய மான்விழியாள் யார்?" {என்று கேட்டான்}.(78) {பிறகு தனக்குள்}, "இவள் மதனனின் {மன்மதனின்} ரதியோ? இந்திரனின் சச்சியோ? திலோத்தமையோ? அல்லது நாராயணனின் தொடைகளைப் பிளந்து வந்த பெண்ரத்தினமான ஐலனின் மகள் {மருமகள்} ஊர்வசியோ?(79) மந்தர மலையை மத்தாக்கி தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமுதத்திற்காகப் பாற்கடலைக் கடைந்த போது, உலகின் வேராக இருக்கும் ஸ்ரீதேவியானவள், அங்கிருந்து எழுந்து வந்து நாராயணனின் மடியை அலங்கரித்தாளே. இவள் அந்த அழகிய ஸ்ரீதானோ?(80,81) பெண்கூட்டத்திற்கு மத்தியில் திரியும் இவள், கருமேகங்களுடன் சேர்ந்து திசைகள் அனைத்திற்கும் ஒளியூட்டும் மின்னலைப் போன்ற தன் அழகால் காட்டுக்கு ஒளியூட்டுகிறாளே, யாரிவள்?(82) குற்றமற்ற அங்கங்களையும், சந்திரனைப் போன்ற முகத்தையும் கொண்ட இந்தப் பேரழகியை காணும்போது என் புலன்கள் அனைத்தும் கலக்கமடைகின்றனவே.(83) என் மனம் காமத்தால் பெரிதும் பீடிக்கப்படுகிறது. மலர்வில்லை கொண்டவன்[3] {மன்மதன்} தன் மலர்க்கணைகளால் என் உடலைப் பெரிதும் காயப்படுத்துகிறான்.(84) இரக்கமற்றவனைப் போல அவன் என் இதயத்தை அறுத்து, ஐந்து கணைகளால் அதை எரிப்பதால் தெளிந்த நெய் தெளிக்கப்பட்ட நெருப்பைப் போல காமம் என்னில் பெருக்கெடுக்கிறது. இந்தக் காம நெருப்பைத் தணிப்பதற்கு இன்று நான் என்ன செய்யப் போகிறேன்?(85) எதைச் செய்தால் இந்த அழகிய காரிகை என்னை வழிபடுவாள்?" என்று நீண்ட நேரம் நினைத்தவாறே இருந்த அந்தத் தானவன் திருமிலனால் அமைதியை அடைய முடியாமல், மீண்டும் தன் தேரோட்டியிடம், "ஓ! பாவமற்றவனே, ஒருக்கணம் இங்கே காத்திருப்பாயாக. இவள் யாருடைய மனைவி என்பதை நானே சென்று பார்க்கப் போகிறேன்.(86,87) எனவே, நான் திரும்பி வரும் வரை இங்கேயே காத்திருப்பாயாக" என்றான். அவனது சொற்களைக் கேட்ட தேரோட்டியும், "அப்படியே ஆகட்டும்" என்றான்.(88)

[3] "இது மதனனை (காமனைக்) குறிப்பிடுகிறது. அவன் மலராலான வில்லையும், மலர்க் கணைகளையும் கொண்டவனாகக் குறிப்பிடப்படுகிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

தானவர்களின் பலம்வாய்ந்த மன்னன், தன் சாரதியிடம் இதைச் சொல்லிவிட்டு, தன் வாயைக் கொப்பளித்துவிட்டு, அங்கே செல்லும் விருப்பத்தில் தியானத்திலும், சிந்தனையிலும் ஈடுபட்டான்.(89) ஒரு கணம் தியானித்த அவன், தன் ஞானத்தால் அவள் {பத்மாவதி} உக்ரஸேனனின் மனைவி என்பதை அறிந்து மிகவும் நிறைவடைந்தான்.(90) நீண்ட கரங்களைக் கொண்டவனான அந்தத் தானவ மன்னன், தன் வடிவத்தை மாற்றி உக்ரஸேனனின் வடிவை ஏற்றுக்கொண்டு சிரித்தபடியே சென்றான்.(91) ஓ! கம்ஸா, இவ்வாறு அந்தப் பலம் வாய்ந்தவன் (தானவன்) உக்ரஸேனனின் வடிவத்தில் புன்னகைத்தவாறே மெல்ல மெல்லச் சென்று உன் அன்னையைப் பிடித்து அவளைக் கற்பழித்தான்.(92) கணவனிடம் இதயத்தை அர்ப்பணித்திருந்தவளும், அவனது ஆன்மாவாக இருந்தவளுமான அந்தப் பெண் {பத்மாவதி}, அளவுக்குமீறிய தன் உணர்வுப் பெருக்கால் அவனுடன் கலந்தாள். அப்போது அவள், அவனது தீண்டலின் கனத்தை உணர்ந்து, அச்சத்தால் நிறைந்தாள்.(93)

பிறகு எழுந்த அவள், பீதியடைந்தவளாக அவனிடம், "உண்மையில் நீ என் கணவரில்லை. தூய்மையற்ற ஒழுக்கத்தால் என்னைக் களங்கப்படுத்திய நீ யார்?(94) வளர்ந்த இயல்பிலேயே அற்பனான நீ என் கணவரின் வடிவை ஏற்று, என் கணவரிடம் அர்ப்பணிப்புக் கொண்ட என் நோன்பை {கற்பைச்} சூறையாடிவிட்டாய்.(95) ஐயோ, என் குலத்திற்கு அவமானத்தைக் கொண்டு வந்த என்னிடம் கோபமடைந்தவர்களாக என் உற்றாரும், உறவினரும் என்னை சொல்வார்கள்? என் கணவரின் உறவனர்களால் கைவிடப்பட்டு நிந்திக்கப்படும் நான் இனி எங்கே வாழ்வேன்?(96) ஓ! இழிகுலத்தில் பிறந்தவனே, நீ உணர்ச்சிவசப்பட்டவனும், பொறுமையற்றவனுமாக இருக்கிறாய். உனக்கு ஐயோ. மாற்றான் மனைவியரை கற்பழிக்கத் தொடங்கியிருக்கும் நீ நம்பத் தகாதவனும், வாழ்நாள் {ஆயுள்} தீர்ந்தவனும் ஆவாய்" என்றாள்.(97)

அந்தப் பெண் {பத்மாவதி} இவ்வாறு தன்னை நிந்தித்துக் கொண்டிருந்தபோது கோபத்தால் நிறைந்த அந்தத் தானவன், "நான் ஸௌபத்தின் மன்னனான திருமிலன் ஆவேன்.(98) ஓ! கல்வியறிவற்ற மூடப்பெண்ணே, அற்பமாக இறக்கக்கூடிய மனிதக் கணவனின் பாதுகாப்பில் இருந்து கொண்டு என்னை நீ நிந்திக்கிறாய்.(99) ஓ! பெண்களுக்கே உரிய செருக்கைக் கொண்டவளே, பெண்களின் புத்தி நித்தியமானதல்ல என்பதால் அவர்கள் (என்னைப் போன்ற ஒருவனுடன் தொடர்பு கொள்வதன் மூலம்) அடக்கமின்மை {கற்பை இழத்தல்} என்ற பாவத்தை அடைவதில்லை[4].(100) வழிதவறிச் செல்வதன் மூலம் பெண்கள் பலர் தேவர்களைப் போன்ற வரம்பற்ற ஆற்றல் கொண்ட மகன்களைப் பெற்றெடுத்ததாக நான் கேட்டிருக்கிறேன்.(101) பெண்களுக்கு மத்தியில் நீ கற்புநிறைந்தவளாகவும், அர்ப்பணிப்புள்ள மனைவியாகவும் இருப்பதால், நான் பாவமற்றவனாக இருப்பினும், விரும்பம்போல் சொற்களைச் சொல்லி என்னை நீ நிந்திக்கிறாய்.(102) ஓ! சிறந்த பெண்ணே {பத்மாவதியே}, "கஸ்யத்வம் (யார் நீ {யாரைச் சேர்ந்தவன்})" என்று நீ என்னைக் கேட்டதால், கம்ஸன் என்ற பெயரைக் கொண்டவனும், பகைவரை அழிக்கவல்லவனுமான மகனை நீ பெற்றெடுப்பாய்" என்றான் {திருமிலன்}.(103)

[4] "பெண்கள் இறக்கக்கூடியவர்கள் என்பதால், அவர்கள் நெறியற்ற வகைகளில் மனிதர்களுடன் கலக்கும்போது உண்டாகும் பாவத்தைப் போல, இறப்பில்லாதவர்களுடன் {தேவர்களுடன்} வாழ்வதன் மூலம் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை என்பது இங்கே கருத்து" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

இந்தச் சொற்களைக் கேட்ட அந்த ராணி {பத்மாவதி}, கோபத்தால் நிறைந்தவளாகவும், இதய வலியுடன் கூடியவளாகவும், அவனது வரத்தை இழித்துச் சொல்பவளாகவும் திமிர் நிறைந்த அந்தத் தானவனிடம்,(104) "ஓ! கொடுந்தீயவனே, உன் ஒழுக்கத்துக்கு ஐயோ. பெண்கள் அனைவரையும் நீ இழிவாகப் பேசுகிறாய். ஆனால் அவர்களில் பலர் கற்பு நிறைந்தவர்களாகவும், சிலர் கற்பற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.(105) ஓ! உன் குலத்தில் இழிந்தவனே, நாம் கேள்விப்படும் அருந்ததி முதலிய கற்புநிறைந்த பெண்மணிகளாலேயே இந்த உயிரினங்கள் அனைத்தும், உலகங்களும் தாங்கப்படுகின்றன.(106) என் நோன்பை அழிக்கும் வகையில் நீ எனக்குக் கொடுத்திருக்கும் உன் மகனை நான் விரும்பவில்லை. அது குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(107) ஓ! அற்ப உயிரினமே, என் கணவரின் {உக்ரஸேனரின்} குடும்பத்தில் பிறக்கப் போகும் நித்திய புருஷன் {பரமன்}, உன்னையும், உன்னால் கொடுக்கப்படும் மகனையும் அழிப்பவனாக {மிருத்யுவாக} இருப்பான்" என்றாள் {பத்மாவதி}.(108)

இவ்வாறு சொல்லப்பட்டதும், திருமிலன், தடுக்கப்பட முடியாததும் மிகச் சிறந்ததுமான தன் தேரில் ஏறி ஆகாய வழியில் சென்றான்.(109) உன் அன்னையும் அதே நாளில் கவலைநிறைந்த இதயத்துடன் தன் நகருக்குச் சென்றாள்" {என்றார் நாரதர்}. நெருப்பைப் போன்ற தவச் சக்தியில் எரியும் முனிவர்களில் முதன்மையானவரும், தெய்வீகருமான நாரதர், என்னிடம் இதைச் சொல்லிவிட்டு,(110) ஏழு ஸ்வரங்களிலான தன் வீணையை[5] இசைத்துப் பாடிக் கொண்டு, பெரும்பாட்டனை {பிரம்மனை} சந்திப்பதற்காகப் பிரம்மலோகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஓ! மஹாமாத்ரா, என்னால் சொல்லப்பட்ட சொற்களை நீ கேட்டாய்.(110-112) நிகழ்காலம், கடந்தகாலம், எதிர்காலம் ஆகியவற்றின் ஞானத்தை நன்கறிந்தவரும், நுண்ணறிவுமிக்கவருமான நாரதரால் உண்மை சொல்லப்பட்டது. பலம், சக்தி, பணிவு, தகுநிலை {அந்தஸ்து}, வீரம், ஆண்மை, வாய்மை, தயாளம் ஆகியவற்றில் என்னைப் போன்று எந்த மனிதனும் இல்லை.(113,114) இவை (மேற்கண்ட அருஞ்செயல்கள்} அனைத்தையும் என்னிடம் கண்டே நான் அவரது {நாரதரின்} சொற்களில் நம்பிக்கை கொண்டேன். ஓ! மாவுத்தா {யானைக்குப் பயிற்சியளிப்பவனே}, நான் உக்ரஸேனரின் க்ஷேத்ரஜ மகன்[6] ஆவேன்.(115) பெற்றோர் இருவரும் என்னைக் கைவிட்டாலும் என் சக்தியின் மூலம் நான் அரியணையில் இருப்பேன். அவர்கள் இருவராலும் நான் வெறுக்கப்பட்டேன், குறிப்பாக என் உற்றார் உறவினராலும் நான் வெறுக்கப்பட்டேன்.(116) முதலில் ஆயர்குலச் சிறுவர்களான அந்தப் பாவிகள் இருவரையும் யானையின் மூலம் கொன்றபிறகு, கிருஷ்ணனின் தரப்பைச் சார்ந்த யாதவர்கள் அனைவரையும் நான் கொல்வேன்.(117) ஓ! மஹாமாத்ரா, அங்குசங்கள், வாள்கள், தோமரங்களுடன் கூடியவனாக யானையைச் செலுத்திச் சென்று அரங்கத்தின் வாயிலில் காத்திருப்பாயாக. தாமதிக்காதே" என்றான் {கம்ஸன். என்றார் வைசம்பாயனர்}.(118)

[5] மன்மதநாததத்தரின் பதிப்பில் இங்கே புல்லாங்குழல் என்று சொல்லப்பட்டாலும், சித்திரசாலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் உள்ளது போல "வீணை" என்று இங்கு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

[6] "{உக்ரஸேனனின்} மனைவிக்குப் பிறந்தவன் என்பதை இலக்கிய வடிவில் களத்தில் விளைந்தவன் என்று சொல்லப்படுகிறது. உறவினர் மூலமோ, சந்ததி பெறுவதற்காக முறையாக நியமிக்கப்பட்ட நபரின் மூலமோ கணவனுக்காக மனைவி பெறும் வாரிசான மகன் {க்ஷேத்ரஜன் என்றழைக்கப்படுவான்}. பண்டைய இந்து விதியின் படி அங்கீகரிக்கப்பட்ட பனிரெண்டு வகை வாரிசுகளில் இதுவும் ஒன்றாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

விஷ்ணு பர்வம் பகுதி – 83 – 028ல் உள்ள சுலோகங்கள் : 118
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்