(சகடபங்கபூதனாவதௌ)
Superhuman deeds of Krishna. He upsets a carriage and kills Putana | Vishnu-Parva-Chapter-61-006 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : சகடாசுரனையும், பூதனையையும் கொன்ற கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தலைவன் {விஷ்ணு}, தன்னை முறையாக வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே நந்தனின் கிராமத்தில் {கோகுலத்தில்} ஒரு குறிப்பிட்ட காலத்தைக் கோபாலனாகக் கழித்தான்.(1) அவ்விரு சிறுவர்களில் மூத்தவனுக்கு ஸங்கர்ஷணன் {பலராமன்} என்றும், இளையவனுக்குக் கிருஷ்ணன் என்றும் பெயர்கள் சூட்டப்பட்டன. அவர்கள் அங்கே பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.(2) கிருஷ்ணனாக அவதரித்த தலைவன் ஹரி, மேகம் போன்ற கருநீல நிறத்தை ஏற்று, பெருங்கடலில் உள்ள மேகத்தைப் போல அங்கே ஆயர்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்தான்.(3)
ஒரு நாள் ஒரு வண்டியின் அடியில் கிருஷ்ணன் உறங்கிக் கொண்டிருந்த போது, மகன்களிடம் அன்பு கொண்டவளான யசோதை, அவனை அங்கேயே விட்டுவிட்டு யமுனை ஆற்றுக்குச் சென்றாள்.(4) அப்போது கிருஷ்ணன் ஒரு குழந்தையைப் போல விளையாட்டாகத் தன் கைகளை வீசி அழத் தொடங்கினான். அவன் தன் கால்களை உயர்த்தி, அவற்றில் ஒன்றால் அந்த வண்டியைப் புரட்டிப் போட்டான். பிறகு தன் கால்களால் தவழ்ந்தபடியே பாலுக்காக அவன் அழத் தொடங்கினான்.(5,6) அதே வேளையில் நீராடி முடித்த யசோதை, கட்டப்பட்டிருக்கும் கன்றை நோக்கிச் செல்லும் பசுவைப் போலத் தன் முலைப் பாலால் மேனி நனைந்தவளாக, அச்சத்தால் மனம் பீடிக்கப்பட்டவளாக அங்கே வந்தாள்.(7) அங்கே அவள் காற்றேதும் இல்லாமலே புரட்டப்பட்டுக் கிடக்கும் வண்டியைக் கண்டாள். அதன்பிறகு உரக்க அழுதபடியே விரைவாகத் தன் குழந்தையை எடுத்துக் கொண்டாள்.(8)
அந்த வண்டி எவ்வாறு புரண்டது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை; அச்சத்தால் நிறைந்த அவள் தன் பிள்ளையிடம் {கிருஷ்ணனிடம்},(9) "ஓ! என் குழந்தாய், உன் தந்தை பெருங்கோபம் கொண்டவர். வண்டியின் அடியில் நீ உறங்கியதையும், அது புரண்டதையும் அறிய வரும்போது அவர் என்ன சொல்வார் என நான் அறியேன்.(10) {வண்டியின் அடியில் நீ நசுங்கியிருந்தால்} நீராடலால் எனக்கு என்ன பயன்? ஆற்றுக்கு நான் செல்ல வேண்டிய காரியமென்ன? என்னுடைய இந்த மூடச் செயலின் விளைவாலேயே புரட்டப்பட்ட வண்டியின் அடியில் நான் உன்னைக் காண்கிறேன்" என்றாள்.(11)
பட்டுடை தரித்தவனான நந்தன், தன் பசுக்களை மேய்ப்பதற்காகக் காட்டுக்குச் சென்றிருந்தான். அவன், விரஜத்தில் {கோகுலத்தில்} உள்ள தன் வீட்டுக்குத் திரும்பியபோது, வண்டி {சகடாசுரன்} தலைகீழாகப் புரண்டு கிடப்பதைக் கண்டான். அதன் சக்கரங்கள் இரண்டும் மேலே உயர்ந்திருந்தன. அச்சுகள், குடங்கள் மற்றும் தடிகள் அனைத்தும் உடைந்திருந்தன.(12,13) இதைக் கண்டதும் பேரச்சம் கொண்ட அவன், விரைந்து வந்து கண்கள் நிறைந்த கண்ணீருடன், "என் மகன் நலமா?" என்று மீண்டும் மீண்டும் கேட்டான்.(14) அவன் {நந்தன்} தன் மகன் {கிருஷ்ணன்} யசோதையின் முலையுண்பதைக் கண்ட போது, தன் கவலையில் இருந்து விடுபட்டு, "காளைகள் சண்டையிடாமல் வண்டி புரண்டதெவ்வாறு?" என்று கேட்டான்.(15)
அச்சமடைந்த யசோதை, ஒடுங்கிய குரலுடன், "ஓ! மென்மையானவரே {சாதுவே}, இந்த வண்டியைப் புரட்டியது எவர் என்பதை நான் அறியேன். நான் என் துணியைத் துவைப்பதற்காக ஆற்றுக்குச் சென்றிருந்தேன். நான் திரும்பி வந்தபோது இது புரண்டு கிடப்பதைக் கண்டேன்" என்றாள்.(16,17)
அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சிறுவர்கள், "நாங்கள் விரும்பியபடி உலவிக் கொண்டிருந்தபோது, இந்தச் சிறுவன் தன் காலால் வண்டியைப் புரட்டிப் போட்டதைக் கண்டோம்" என்றனர். இதைக் கேட்ட நந்தகோபன் பெரும் ஆச்சரியமடைந்தான்.(18,19) மனம்நிறைந்தவனும், அச்சமடைந்தவனுமான அவன், இஃது எவ்வாறு நேருமெனச் சிந்திக்கத் தொடங்கினான். சாதாரண மனித புத்தியைக் கொண்ட ஆயர்கள் பிறர், அந்தச் சிறுவர்களின் சொற்களில் நம்பிக்கையேதும் கொள்ளவில்லை.(20) அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தவர்களாகவும், அதன்படியே கண்கள் அகல விரிந்தவர்களாகவும் அந்த வண்டியைத் திருப்பி அதன் சக்கரங்களைக் கட்டினர்".(21)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒரு காலத்தில் நடு இரவில் கம்ஸனின் செவிலியும் {தாதி / வளர்ப்புத்தாய்}[1], பயங்கரம் நிறைந்தவளும், விரும்பிய வடிவை ஏற்கவல்லவளுமான பூதனை, உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பறவையின் வடிவை ஏற்று, தன் சிறகுகளை அசைத்தபடி கோபர்களின் கிராமத்திற்கு {கோகுலத்திற்குச்} சென்றாள்.(22,23) பூதனை, புலி போல முழங்கியபடியே நடு இரவில் விரஜத்திற்குள் {கோகுலத்திற்குள்} நுழைந்து ஒரு பெண்ணின் வடிவை ஏற்றாள். பால் நிறைந்த முலைகளுடன் கூடிய அவள், வண்டியின் சக்கரத்திற்கடியில் கிடந்தாள். விரஜத்தில் வசிப்பவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவள் கிருஷ்ணனுக்குப் பால் கொடுக்கத் தொடங்கினாள்.(24,25) அப்போது கிருஷ்ணன், பாலோடு சேர்ந்து அவளது உயிர்மூச்சுகள் அனைத்தையும் பருகி, பயங்கர ஒலியை எழுப்பினான். முலைகள் சிதைந்த அவளும் கீழே பூமியில் விழுந்தாள்.(26) நந்தனும், ஆயர்கள் பிறரும், யசோதையும் அந்த ஒலியைக் கேட்டு விழித்தெழுந்தனர். அவர்கள் அனைவரும் அச்சத்துடன் கூடியவர்களாக அருகருகே நின்றனர்.(27) நனவையும், முலைகளையும் இழந்தவளான பூதனை வஜ்ரத்தால் {இடியால்} நசுங்கியவளைப் போல அங்கே தரையில் கிடப்பதை அவர்கள் கண்டனர்.(28) "இஃது என்ன? இதைச் செய்தது யார்?" என்று அலறியபடியே நந்தனின் தலைமையிலான ஆயர்கள் அனைவரும் அவளைச் சூழ்ந்து நின்றனர்.(29) "ஆச்சரியம், ஆச்சரியம்" என்று மீண்டும் மீண்டும் சொல்லி ஆச்சரியமடைந்தபடியே தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.(30)
[1] சித்திரசாலை பதிப்பில், "பூதனை கம்ஸனின் வளர்ப்புத்தாய்" என்று சொல்லப்பட்டிருக்கிறாள். பிபேக்திப்ராயின் பதிப்பில், "செவிலித் தாய்" என்றிருக்கிறது. உ.வே.எஸ். இராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் வளர்ப்புத் தாய் என்றே இருக்கிறது. மூலத்தில், "தா⁴த்ரீ கம்ஸஸ்ய போ⁴ஜஸ்ய பூதனேதி பரிஸ்ஹ்ருதா" என்றிருக்கிறது.
ஆச்சரியத்தால் நிறைந்தவர்களான ஆயர்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்ற பிறகு, நந்தன் யசோதையிடம் மதிப்புடன், "ஓ! புத்திசாலிப் பெண்ணே, நான் பேராச்சரியம் அடைந்தேன். இதன் காரணத்தை என்னால் அறிய இயலவில்லை. அஃது எதுவாக இருந்தாலும், உண்மையில் நான் அஞ்சுகிறேன். என் மகனுக்கு ஆபத்து ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டான்.(31,32)
அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த யசோதையும், "ஓ! மதிப்புக்குரிய ஐயா, என் மகனுடன் உறங்கிக் கொண்டிருந்த நான், இந்தப் பயங்கர ஒலியால் விழித்தெழுந்தேன். எனவே, முன்பு என்ன நடந்தது என்பதை நான் அறியேன்" என்று மறுமொழி கூறினாள்.(33)
யசோதையின் இந்த மறுமொழியைக் கேட்ட நந்தன், தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆச்சரியத்தால் நிறைந்து, கம்ஸனிடமிருந்து ஏற்படப்போகும் அச்சத்தை எதிர்பார்த்திருந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(34)
விஷ்ணு பர்வம் பகுதி – 61 – 006ல் உள்ள சுலோகங்கள் : 34
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |