Sunday, 7 February 2021

பேரசுரன் பாணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 173 – 117

(பாணாஸுராக்யானம்)

The great asura | Vishnu-Parva-Chapter-173-117 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பாணாசுரன் வரலாறு; போரில் பெருவிருப்பம் கொண்ட பாணன்; சிவன், முருகன் ஆகியோரின் உதவியைப் பெற்றது; கும்பாண்டனின் கவலை...


Shiva and Vanasura

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, நுண்ணறிவுமிக்கவனான அந்த யது மன்னனின் {கிருஷ்ணனின்} ஒப்பற்ற செயல்கள் பலவற்றை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.(1) ஓ! அறவோரில் முதன்மையானவரே, ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, முன்னர் உம்மால் சொல்லப்பட்டதைப் போலப் பாணனிடம் வாசுதேவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை இப்போது கேட்க விரும்புகிறேன்.(2) ஓ! பிராமணரே, சங்கரனின் பாதுகாப்பையும், அந்தத் தேவதேவனின் மகன் என்ற உரிமையையும், குஹனுடைய {முருகனுடைய} பாதுகாப்பையும் அந்த அசுரனால் பெற முடிந்தது எவ்வாறு? அவனால் கணங்களுடன் வாழ முடிந்தது எவ்வாறு?(3,4) பெருஞ்சக்தி வாய்ந்த பலியின் மகனான அவன் {பாணன்}, தன் சகோதரர்களில் {பலியின் நூறு மகன்களில்} மூத்தவனும், நூற்றுக்கணக்கான தெய்வீக ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் கரங்களைக் கொண்டவனும்,(5) பேருடல் படைத்த எண்ணற்ற அசுரர்களால் சூழப்பட்டவனும், நூற்றுக்கணக்கான மாயைகள் செய்வதில் தேர்ச்சியடைந்தவனும் ஆவான். போரில் விருப்பம் கொண்டவனும்,(6) கோபத்தால் தூண்டப்பட்டவனுமான அந்தப் பாணன், போரில் வாசுதேவனால் வீழ்த்தப்பட்டது எவ்வாறு? கேசவன் அவனை உயிருடன் விட்டது ஏன்?" என்று கேட்டான்.(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, மனிதர்களின் நிலத்தில் ஒப்பற்ற சக்தி கொண்ட கிருஷ்ணனுக்கும் பாணனுக்கும் இடையில் அந்தப் பயங்கரப் போர் நடைபெற்றது எவ்வாறு என்பதைக் கவனமாகக் கேட்பாயாக.(8) ஓ! மன்னா, பலியின் மகனான பாணன், ருத்திரனுக்கும், குமாரனுக்கும் எவ்வாறு உதவினான் என்பதையும், போரில் எப்போதும் உயர்வாகப் பேசப்படும் அவன் வாசுதேவனால் வீழ்த்தப்பட்டும் எவ்வாறு உயிரோடு விடப்பட்டான் என்பதையும்,(9) உயரான்ம சங்கரன் எவ்வாறு அவனை எப்போதும் தன்னுடன் வைத்து, கணங்களின் மீதான ஆட்சியுரிமையை அவனுக்கு அளித்தான் என்பதையும், அந்தத் தேவதேவனின் மகன் என்ற உரிமையைப் பாணாசுரன் எவ்வாறு அடைந்தான் என்பதையும், அவனுக்கும் வாசுதேவனுக்கும் இடையில் எவ்வாறு பெரும்போர் நேர்ந்தது என்பதையும், அவன் எவ்வாறு உயிருடன் விடப்பட்டான் என்பதையும் இப்போது கேட்பாயாக.(10,11)

ஒரு காலத்தில் பெருஞ்சக்திவாய்ந்த பலியின் மகன் {பாணன்} விளையாடிக் கொண்டிருக்கும்போது உயரான்ம குமாரனை (கார்த்திகேயனைக்) கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்.(12) அப்போது, "என்னால் எவ்வாறு ருத்ரனின் மகனாக முடியும்?" என்று நினைத்து, ருத்திரனை வழிபடுவதற்காகக் கடுந்தவங்களைச் செய்ய விரும்பினான்.(13) அசுரர்களில் முதன்மையான அவன், கடுந்தவங்களைச் செய்து படிப்படியாகப் புகழை அடைய அடைய எளிதில் நிறைவடையக் கூடிய சிவன், உமையுடன் கூடியவனாகப் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(14) பாணனின் கடுந்தவங்களால் பெரும் நிறைவடைந்த நீலகண்ட தேவன் {சிவன்} தானே அங்கே சென்று அந்த அசுரனிடம், "உனக்கு நன்மை நேரட்டும்; உன் இதயத்தில் நீ பேணி வளர்க்கும் வரத்தை வேண்டுவாயாக" என்றான்.(15)

அப்போது பாணன், தேவர்களின் தேவனான அந்த மஹேஷ்வரனிடம், "ஓ! முக்கண் தேவா, தேவியின் மகனாகும் நிலையை நீ அளிக்க வேண்டும் என்பதே என் வேண்டுதல்" என்றான்.(16)

"அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்ன சங்கரன், தேவியிடம் {ருத்ராணி உமையிடம்}, "இவனை உன் மகனாக ஏற்பாயாக. இவன் கார்த்திகேயனின் தம்பியாகட்டும்.(17) நெருப்பால் {அக்னி தேவனால்} உண்டாக்கப்பட்ட குருதியில் இருந்து முன்பு மஹாசேனன் {முருகன்} எழுந்த இடத்தில் இவனது நகரம் அமையட்டும்.(18) நகரங்களில் சிறந்த அது சோணிதபுரம் {ஸ்ரோணிதபுரம் / குருதியாலான நகரம்} என்ற பெயரில் கொண்டாடப்படட்டும். என்னால் முழுமையாகப் பாதுகாக்கப்படும் அந்த அழகிய நகரத்தை எவனாலும் தாக்க முடியாது" என்றான் {சிவன்}.(19)

அதன்பிறகு அந்தப் பாணன், சோணித நகரத்தில் வாழ்ந்து கொண்டு, தேவர்களை ஒடுக்கியவாறு தன் நாட்டை ஆண்டு வந்தான். அந்த ஆயிரம் கரத்தோன் {பாணன்}, தேவர்களை அவமதித்து அவர்களுடன் போரிடும் அளவுக்குப் படிப்படியாகத் தன் ஆற்றலில் செருக்குற்றான்.(20,21) அந்த நேரத்தில் குமாரன் {முருகன்}, நெருப்பைப் போல எரியும் ஒரு கொடிமரத்தையும், அவனைச் சுமந்து செல்வதற்கான பிரகாசமிக்க ஒரு மயிலையும் அவனுக்குக் கொடுத்தான்.(22) அதன் பிறகு, தேவதேவனான மஹேஷ்வரனின் சக்தியின் மூலம் அந்தப் பாணன், தேவர்களிலோ, கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்களிலோ எவராலும் உறுதியாக நிற்க முடியாத அளவுக்குத் திறனுடன் போரிட்டான்.(23) திரையம்பகனால் {முக்கண்ணனால்} முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுச் செருக்கில் மிதந்து கொண்டிருந்த அந்த அசுரன், போரிடும் விருப்பத்தால் மீண்டும் சிவனை அணுகினான்.(24)

பலியின் மகனான அவன் {பாணன்}, ருத்ரனை அணுகி, அவனை வணங்கிவிட்டு, அந்த விருஷபத்வஜனிடம் இவ்வாறு கேட்டான்.(25) {அவன்}, "உமது பாதுகாப்பைக் கொண்டும், என் படையின் உதவியைக் கொண்டும் என்னால் மீண்டும் மீண்டும் வீழ்த்தப்பட்ட தேவர்கள், சாத்யர்கள், மருத்துகள் ஆகியோர்,(26) இங்கே வந்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஓ! தேவா, என்னால் வெல்லப்பட்டவர்களும், அச்சத்தால் நிறைந்தவர்களும், என்னிடம் அடைந்த தோல்வியால் துயரடைந்தவர்களுமான தேவர்கள்,(27) உமது பாதுகாப்பில் உள்ள தெய்வீக நகரத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். போரில் வென்றும் துயருற்றிருக்கும் நான் இனியும் வாழ விரும்பவில்லை;(28) நான் போரிட முடியாதென்றால் இந்தக் கைகள் அனைத்தினாலும் பயனேதும் இல்லை. போரைத் தவிர வேறு எதனிலும் என் மனம் நிலைபெறவில்லை. அமைதியடைந்தவராக, என்னால் எப்போது போரிட இயலும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்றான்.(29)

தெய்வீகனான அந்த விருஷபத்வஜன் {சிவன்} புன்னகைத்தவாறே, "ஓ! தானவ பாணா, நீ போர்ப்புகுவது எவ்வாறு என்பதைக் கேட்பாயாக. எப்போது உன் நகரத்தில் நடப்பட்டிருக்கும் இந்தக் கொடிமரம் {த்வஜம்} நொறுக்கப்படுமோ, அப்போது நீ போர்ப்புகுவாய்" என்றான்.(30,31)

இவ்வாறு சொல்லப்பட்ட பாணன் மீண்டும் மீண்டும் சிரித்தபடியே பவனின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, "இந்த ஆயிரந்தோள்களும் பயனற்றவை ஆகாமல் இருந்தது என் நல்லூழே. என்னுடைய நற்பேற்றின் மூலம் ஆயிரங்கண் தேவனை {இந்திரனை} மீண்டும் நான் வீழ்த்துவேன்" என்றான்.(32)

இன்பக்கண்ணீர் நிறைந்த கண்களுடன் கூடியவனும், தன் பகைவரை கலங்கடிப்பவனுமான பாணன், தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஐநூறு முறை தொழுது மஹேஷ்வரனைத் துதித்தான்.(33)

மஹேஷ்வரன், "ஓ! வீரா, எழுவாயாக. உன் குலத்திற்கும், ஆயிரம் கைகளுக்கும் தகுந்த போர் விரைவில் உனக்குக் கிட்டும்" என்றான்".(34)

வைசம்பாயனர் சொன்னார், "உயரான்ம முக்கண் தேவனான விருஷபத்வஜனால் {சிவனால்} இவ்வாறு சொல்லப்பட்ட பாணன், மகிழ்ச்சியடைந்தவனாக அவனை வணங்கிவிட்டு விரைவாக எழுந்தான்.(35)

இவ்வாறு நீலகண்ட தேவனால் விடைகொடுத்து அனுப்பப்பட்டவனும், பகை நகரங்களை வெற்றி கொள்பவனுமான பாணன், கொடிமரங்களைக் கொண்ட தன் அரண்மணையில் நுழைந்தான்.(36) அங்கே அமர்ந்த அவன் கும்பாண்டனிடம், "உன் இதயத்திற்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியைச் சொல்லப் போகிறேன்" என்றான்.(37)

இதைக் கேட்ட அமைச்சன் கும்பாண்டன், போரில் ஒப்பற்றவனான பாணனிடம் புன்னகைத்தவாறே, "ஓ! மன்னா, என்னிடம் நீ சொல்ல விரும்பும் இனிய செய்தி என்ன?(38) ஓ! தைத்தியர்களில் முதன்மையானவனே, என் கண்கள் இன்பத்தாலும் ஆச்சரியத்தாலும் விரிகின்றன. நீ அடைந்த வரமென்ன என்பதை அறிய விரும்புகிறேன்.(39) நீலகண்ட தேவனின் அருளாலும், ஸ்கந்தனின் அருளாலும் நீ அடைந்த வரமென்ன? தேவனான திரிசூலபாணி மூவுலகங்களின் ஆட்சியுரிமையைக் கொடுத்தானா?(40) இந்திரன், உன் மீது கொண்ட அச்சத்தால் பாதாளத்திற்குள் நுழைவானா? விஷ்ணுவின் சக்கரத்திற்கு அஞ்சி பெருங்கடலுக்குள் நுழைந்த திதியின் மகன்கள் அவனிடம் கொண்ட அச்சத்தில் இருந்து விடுபடுவார்களா?(41) கைகளில் சாரங்க வில்லுடனும், கதாயுதத்துடனும் போரில் நிலைத்திருக்கும் விஷ்ணுவிடம் திதியின் மகன்கள் அச்சமில்லாமல் இருப்பார்களா?(42) உன் சக்தியால் பாதுகாக்கப்படும் பேரசுரர்கள், பாதாளத்தை விட்டகன்று தெய்வீக நகரத்தில் {தேவலோகத்தில்} வசிப்பார்களா?(43) ஓ! மன்னா, உன் தந்தையான பலி, விஷ்ணுவின் சக்தியால் வீழ்த்தப்பட்டுச் சங்கிலிகளில் பிணைக்கப்பட்டு {பாதாளத்தில்} வாழ்கிறான். அவன் நீரில் இருந்து எழுந்து தன் அரசை மீண்டும் அடைவானா?(44) விரோசனனின் மகனான உன் தந்தை பலியை, தெய்வீக மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனாகவும், தெய்வீகக் களிம்புகள் பூசப்பட்டவனாகவும் நாம் காண்போமா?(45) ஓ! தலைவா, மூவடிகளில் கொள்ளையிடப்பட்ட உலகங்களைத் தேவர்களை வீழ்த்தி மீண்டும் நம் ஆளுகைக்குள் கொண்டு வருவோமா?(46) சங்கின் மிடுக்கொலியுடன் {கம்பீரத்வனியுடன்} முன் சென்று, படைகளை வெல்பவனான நாராயணத் தேவனை நாம் வெல்வோமா?(47) உன் இதயம் பூரிப்பதிலும், இன்பக்கண்ணீரிலும் இருந்து விருஷபத்வஜன் உன்னால் நிறைவடையச் செய்யப்பட்டான் என்று தெரிகிறது.(48) அந்தத் தலைவனின் விருப்பத்துடனும், கார்த்திகேயனின் அனுமதியுடனும் பூமியின் மன்னன் என்ற மதிப்பை நம் அனைவருக்காகவும் அடைந்தாயா?" என்று கேட்டான்.(49)

அசுரர்களில் முதன்மையானவனும், பேசுபவர்களில் முதன்மையானவனுமான பாணன், கும்பாண்டனின் சொற்களில் கிடைத்த ஊக்கத்தால் பெருஞ்சக்திவாய்ந்த இந்தச் சொற்களை உதிர்த்தான். {பாணன்},(50) "{அனைவரையும் வீழ்த்திவிட்டதால்} வெகு காலமாக என்னால் போரிட முடியவில்லை. எனவே, கவலையில் பீடிக்கப்பட்ட நான் தெய்வீகனான நீலகண்டரிடம்,(51) "ஓ! தலைவா, நான் போரிடும் பேராசையால் நிறைந்திருக்கிறேன். என் மனத்திற்கு நிறைவை அளிக்கும் போரில் நான் நுழைவது எப்போது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டேன்.(52)

தேவதேவரும், பகைவரைக் கொல்பவருமான ஹரர், இதைக் கேட்டுவிட்டு, சிறிது நேரம் சிரித்த பிறகு, இனிய சொற்களில் என்னிடம், "ஓ! பாணா, பெரும்போரை நீ விரைவில் எதிர்கொள்வாய்.(53) ஓ! திதியின் மகனே, உன்னுடைய மயில் கொடிமரம் {மயூரத்வஜம்} நொறுங்கும்போது நீ விரும்பும் பெரும்போரை எதிர்கொள்வாய்" என்றார்.(54) தெய்வீகரான விருஷபத்வஜர் இதைச் சொன்ன பிறகு அவரை வணங்கிவிட்டு உன்னிடம் வந்தேன்" என்றான் {பாணன்}.(55)

இவ்வாறு சொல்லப்பட்ட கும்பாண்டன், அசுரர்களின் மன்னனிடம் {பாணனிடம்}, "ஓ! மன்னா, நீ சொன்ன சொற்கள் மிக அழகானவையாகத் தெரிகின்றன" என்றான்.(56)

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, பெரும் கொடிமரம் ஒன்று இந்திரனின் வஜ்ரத்தால் {இடியால்} தாக்கப்பட்டு வேகமாக விழுந்தது.(57) மிகச் சிறந்ததான அந்தக் கொடிமரம் இவ்வாறு வீழ்த்தப்பட்டதைக் கண்ட பாணாசுரன் நெருங்கும் போரை எதிர்பார்த்து மகிழ்ச்சியால் நிறைந்தான்.(58) அந்த நேரத்தில் இந்திரனின் வஜ்ரத்தால் தாக்கப்பட்ட பூமி நடுங்கினாள், பூனை பூமிக்குள் மறைந்து கொண்டு சீறியது.(59) தேவர்களின் மன்னனான வாசவன் {இந்திரன்}, சோணித நகரத்தில் மன்னனின் {பாணனின்} அரண்மனையைச் சுற்றிலும் குருதி மழையைப் பொழியத் தொடங்கினான்.(60) சூரியனைத் துளைத்தபடியே பெரும் எரிகொள்ளிகள் பூமியில் விழுந்தன. கிருத்திகை கோளுடன் உதித்த சூரியன் ரோஹிணியைப் பீடித்தான்[1].(61) சைத்திய {சம்சான} மரங்களில் இருந்து பயங்கரம் நிறைந்த குருதி ஓடைகள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பாய்ந்தன. நட்சத்திரங்கள் தொடர்ந்து (வானில் இருந்து) விழுந்தன.(62) மனிதர்களுக்கு அழிவை உண்டாக்கும் அந்த நேரம் பர்வமல்ல {தகுந்த காலமல்ல} என்றாலும் ராகு சூரியனை விழுங்கினான், {உலகின் வீழ்ச்சிக்கான அக்காலத்தில் பேரிடியைப் போன்ற} பெரும் எரிகொள்ளிகள் விழுந்தன.(63) தெற்கில் ஒரு வால்நட்சத்திரம் தோன்றியது. பயங்கரம் நிறைந்த காற்று தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது.(64) மூவண்ண பரிகங்களால் சூழப்பட்டவனும், மின்னலைப் போன்று பிரகாசிப்பவனும், வெள்ளையும், சிவுப்புமான விளிம்புகளையும் {பிரபைகளையும்} கரிய கழுத்தையும் உடையவனுமான சூரியன் அந்த மாலைப்பொழுதின் வண்ணத்தை மறைத்தான்.(65) பயங்கரம் நிறைந்த அங்காரகன் {செவ்வாய் கோள்}, பாணனின் பிறவி நட்சத்திரமான ரோஹிணியைத் தண்டிப்பவனைப் போலவும், கிருத்திகைக்குள் நுழையும் ராஹுவைப் போலவும் {வக்கிர கதியில்} அதனுள் நுழைந்தான்[2].(66) பல கிளைகளைக் கொண்டதும், தானவக் கன்னிகையரால் வழிபடப்படுவதுமான பெரும் சைத்ய மரம் பூமியில் விழுந்தது.(67) பலத்தில் கொண்ட செருக்கில் மிதந்த பாணன், இந்தத் தீய சகுனங்கள் அனைத்தையும் கண்டாலும், வீழப்போகிறான் என்பதை உணர்ந்தானில்லை.(68)

[1] சித்திரசாலை பதிப்பில், "சூரியன் தன் அருகே இருந்த பரணியைப் பீடித்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சூரியன் தன் பாதை தடைபட்டதால் பூமியை ஒடுக்கினான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "தன் பக்கத்தில் தேவர்களால் தூண்டப்பட்ட சூரியன் பரணி நக்ஷத்திரத்தைப் பீடித்தான்" என்றிருக்கிறது. இரண்டு பதிப்புகளில் சூரியன் பரணி நட்சத்திரத்தைப் பீடித்தான் என்றிருக்கிறது.

[2] சித்திரசாலை பதிப்பில், "பயங்கரனான அங்காரகன், பாணனின் பிறவி நட்சத்திரமான ரோஹிணியை முற்றிலும் அவமதிக்கும் வகையில் அதற்குள் நுழைந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பாணனின் பிறவி நட்சத்திரம் கிருத்திகையாகும். வக்கிர கதியில் இருந்த அங்காரகன் அதனுள் நுழைந்து சாத்தியப்படும் அனைத்து வகையிலும் அதனைத் தண்டிப்பதாகத் தெரிந்தது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "பயங்கரச் செவ்வாய் பாணனின் ஜன்ம நக்ஷத்ரம் ரோஹிணியைக் கண்டிக்கிறவனாகி கார்த்திகை நக்ஷத்திரத்தில் வக்கரக் கதி செய்தான்" என்றிருக்கிறது.

விவேகியும், சரியாகக் காண்பனுமான பாணனின் அமைச்சன் கும்பாண்டன், கவலையில் பீடிக்கப்பட்டவனாக அந்தத் தீய சகுனங்கள் அனைத்தையும் குறித்துப் பலவற்றைச் சொன்னான்.(69) அவன், "இந்தச் சகுனங்கள், இனி விளைய இருக்கும் தீமையை முன்னறிவிக்கின்றன; {இதில் ஐயமேதும் இல்லை}.(70) உன்னைப் போன்ற தீய ஒழுக்கம் கொண்ட மன்னனின் காரணமாக அமைச்சர்களான நாங்களும், உன் பணியாட்களும் அழிவடையப் போகிறோம்.(71) ஐயோ, சக்ரனின் கொடி போன்ற இந்த மரம் விழுந்ததைப் போலவே அறியாமையுடன் எப்போதும் தற்பெருமை பேசி செருக்குடன் இருக்கும் பாணனும் நிச்சயம் வீழ்வான்.(72) தேவதேவனின் உதவியினால் மூவுலகங்களையும் வெல்ல விரும்பும் பாணன், போரை அறைகூவி அழைக்கிறான். ஆனால், மறுபுறம் அவனது அழிவே நெருங்கி வருகிறது" என்றான்.(73)

பேராற்றலைக் கொண்ட பாணன், தைத்திய தானவப் பெண்டிரின் துணையுடன் மகிழ்ச்சியாகச் சிறந்த மதுவைப் பருகத் தொடங்கினான்.(74) அந்தச் சகுனங்களைக் கண்ட கும்பாண்டன், கவலையால் நிறைந்தவனாக மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தான்; அந்தத் தீய சகுனங்களை நினைத்தவாறே அவன்,(75) "தீயவனும், பொறுப்பற்றவனுமான அசுர மன்னன் பாணன், வெற்றியின் செருக்கால் தூண்டப்பட்டவனாகப் போரை விரும்புகிறான். இவன் தன்னுடைய அறியாமையின் காரணமாகத் தன் பலவீனத்தைக் காணாமல் இருக்கிறான்.(76) இப்போது காணப்படும் தீய சகுனங்கள் இப்போதைக்கு உண்மையாகாவிட்டாலும், அதனால் உண்டாகும் அச்சம் ஒருபோதும் வேறுவகையில் ஆகாது.(77) தாமரைக் கண்ணனான சிவனும், சக்திவாய்ந்த கார்த்திகேயனும் இங்கே வாழ்வதால் இந்தத் தீய சகுனங்கள் அழிவடையலாம்.(78) ஆனால் நம் பாவங்கள் ஒருபோதும் அழிவடையாது. செருக்கால் வந்த பேரழிவு நெருங்கி வருகிறது.(79) ஐயோ, இந்த மன்னனின் ஒடுக்குமுறைகளால் தானவர்கள் அனைவரும் பாவத்தால் தீண்டப்பட்டனர், இஃது அவர்களின் அழிவுக்கு வழிவகுக்கப் போகிறது.(80) மூவுலகங்களின் தலைவனும், தேவ தானவரை ஆள்பவனுமான ஹரனும், தெய்வீகனான கார்த்திகேயனும் நமது நகரத்தில் வாழ்கின்றனர்.(81) பவன், குஹனைத் தன் உயிரைவிட அதிகம் விரும்புகிறான். ஆனால் பாணன் இன்னும் அவனுக்கு அதிகம் பிடித்தமானவன்.(82) பாணன், தன் அதிகச் செருக்காலும், தன் அழிவுக்காகவும், பவனிடம் போரை வேண்டினான். அதையும் அவன் அடைந்தான்.(83) ஆனால் போர் நடைபெறப் போவதாகத் தெரியவில்லை. விஷ்ணுவின் தலைமையிலான இந்திரனுடனும், பிற தேவர்களுடனும் ஒரு போர் நேரிட்டாலும் பவனின் படைப்பாகவே அது கருதப்பட வேண்டும் {சிவனின் உதவி அங்கே நமக்கு நிச்சயம் தேவைப்படும்}.(84) பவனும், குமாரனும் பாணனுக்கு உதவ விரும்பினால் அவர்களுடன் எவராலும் போரிட இயலாது.(85) முக்கண் தேவனின் சொற்கள் ஒருபோதும் பொய்யாகாது. உண்மையில், தைத்தியர்களுக்கு அழிவை உண்டாக்கும் பெரும்போர் விரைவில் நடக்க இருக்கிறது" என்று நினைத்தான் {கும்பாண்டன்}.(86)

இவ்வாறு நினைத்தவனும், பரிவு கொண்டவனும், சரியாகக் காண்பவனுமான அசுரன் கும்பாண்டன், தன் புத்தியை நல்லோரை நோக்கிச் செலுத்தி,(87) "பலி ஒடுக்கப்பட்டதைப் போலவே, அறம்சார்ந்த தேவர்களுடன் போரிடுவோர் அழிவை அடைவார்கள்" என்று சொன்னான்" {என்றார் வைசம்பாயனர்}.(88)

விஷ்ணு பர்வம் பகுதி – 173 – 117ல் உள்ள சுலோகங்கள் : 88
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு