(கார்திகேயாபயாநம் பாணபாஹுச்சேதநம் பாணஸ்ய ஹராத்வரளாபாதிகீர்தநம் ச)
Kartikeya goes to the battle-field | Vishnu-Parva-Chapter-184-128 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : குகனோடு போரிட்ட கிருஷ்ணன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "உயரான்ம கிருஷ்ணனும், ருத்ரனும் போர்க்களத்தில் இருந்து ஓய்ந்த பிறகு, மயிர் சிலிர்ப்பைஏற்படுத்தும் பகைவருடனான போர் எவ்வாறு தொடர்ந்தது?" என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "குஹன் (கார்த்திகேயன்), கும்பாண்டனால் கொண்டுவரப்பட்ட தேரில் நின்று, கிருஷ்ணன், பலதேவன், பிரத்யும்னன் ஆகியோரை நோக்கி அதைச் செலுத்தி,(2) பயங்கரமான நூற்றுக்கணக்கான கூரிய கணைகளால் அவர்களைத் தாக்கினான். {குமாரன் (கார்த்திகேயன்) பெருங்கோபம் அடைந்தான். அந்த மிகச்சிறந்தவன் (குமாரன்) உரத்த குரலில் முழங்கினான்.(3) மூன்று நெருப்புகளைப் போன்ற அந்த மூன்று தேவர்களும், குருதியில் குளித்தவர்களாகக் குமாரனுடன் போரிட்டனர்.(4) போரில் திறன்மிக்கவர்களான அந்த மூன்று வீரர்களும் {கிருஷ்ணன், பலராமன், பிரத்யும்னன் ஆகியோர்}, காற்றின் தேவன் {வாயு}, நெருப்பின் தேவன் {அக்னி}, இந்திரன் ஆகியோரால் கொடுக்கப்பட்ட மூன்று ஆயுதங்களால் குமாரனைத் தாக்கிய பிறகு, அவனும், சைலன், வாருணம், சாவித்ரம் என்ற மூன்று ஆயுதங்களால் எதிர்வினைபுரிந்து அந்த யாதவர்களைத் தாக்கினான்.(5,6) எனினும் அவர்கள், பெருமைமிக்கவனும், எரியும் வில்லையும், கணைகளையும் கொண்டவனுமான குமாரனால் ஏவப்பட்ட ஆயுதங்கள் அனைத்தையும் தங்கள் மாய சக்திகளால் விழுங்கினர்.(7) அப்போது பெருஞ்சக்தி வாய்ந்தவனும், பிரகாசத்தில் எரிந்து கொண்டிருந்தவனுமான குஹன், தன் உதடுகளைக் கடித்தபடியே, காலனைப் போன்றதும், பயங்கரமானதுமான பிரம்மசிரஸ் ஆயுதத்தை எடுத்தான்.(8)
பயங்கரமிக்கதும், ஆயிரஞ்சூரியர்களின் பிரகாசத்துடன் கூடியதும், உலகிற்கு அழிவை ஏற்படுத்துவதுமான பிரம்மசிரஸ் ஆயுதம் அந்தக் குமாரனால் ஏவப்பட்ட போது,(9) அதன் வெப்பத்தால் உயிரனங்கள் தங்கள் நனவை இழந்து அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின, மொத்த அண்டமும் {ஹா, ஹாவென} ஓலமிட்டது.(10) பெருஞ்சக்திவாய்ந்தவனும், கேசியைக் கொன்றவனுமான கேசவன் இதைக் கண்டதும் அழிவை ஏற்படுத்துவதும், அனைத்து ஆயுதங்களுக்கும் எதிர்வினை புரிவதுமான தன் சக்கரத்தை எடுத்தான்.(11) மழைக்காலத்தில் மேகங்கள் சூரியக் கதிர்களை மறைப்பதைப் போலவே உயரான்மக் கிருஷ்ணனுடைய அந்தச் சக்கரமும் அந்தப் பிரம்மசிரஸ் ஆயுதத்தின் ஒளியை மறைத்தது.(12)
அந்தப் பிரம்மசிரஸ் ஆயுதம் தன் ஒளி, ஆற்றல், சக்தி ஆகியவற்றை இழந்த போது, கோபத்தால் கண்கள் சிவந்த குஹன், தெளிந்த நெய் ஊட்டப்பட்ட நெருப்பைப் போலத் தூண்டப்பட்டான்.(13) பிறகு அவன், பயங்கரமாக எரிந்து கொண்டிருப்பதும், நிச்சய இலக்கைக் கொண்டதும், பகைவரை அழிப்பதும், உயிரினங்கள் அனைத்திற்கும் அச்சத்தை ஏற்படுத்துவதுமான பொன் சக்தியை {பொன்வேலை} எடுத்துக் கொண்டான்.(14) அப்போது அவன், எரிகொள்ளியைப் போலப் பிரகாசிப்பதும், அண்ட அழிவின் போது உண்டாகும் நெருப்புக்கு ஒப்பானதும், மணிவரிசைகளுடன் கூடியதுமான எரியும் தெய்வீக சக்தியைக் கோபத்துடன் ஏவினான்.(15) பிறகு அவன், பகைவருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பயங்கரமாக முழங்கினான்.(16) உயரான்ம குஹனால் அந்தச் சக்தி ஆயுதம் ஏவப்பட்டபோது, அது கிருஷ்ணனைக் கொல்லும் விருப்பத்துடன் வானுக்குச் சென்று கொட்டாவி விட்டபடியே பெரும் வேகத்தில் சென்றது.(17) அந்த எரியும் சக்தி ஆயுதத்தைக் கண்ட தேவர்களுடன், அவர்களுடைய மன்னனும் {இந்திரனும்} பெரிதும் மனந்தளர்ந்தவர்களாக, "கிருஷ்ணன் நிச்சயம் எரிக்கப்படுவான்" என்றனர்.(18) எனினும், அந்தப் பெரும்போரில், பெருஞ்சக்திவாய்ந்த மாதவன், தன்னெதிரே அந்தப் பெரும் சக்தியாயுதம் வந்தவுடன் அதைக் கண்டிப்பவனைப் போல ஹூங்காரம் செய்தே அதைத் தரையில் வீழ்த்தினான்.(19) அந்தப் பெரும் சக்தி அங்கே வீழ்த்தப்பட்டபோது, அனைத்துப் பக்கங்களில் இருந்தும், "நன்று, நன்றாகச் செய்தாய்" என்று முழக்கங்கள் எழுந்தன.(20) வாசவனும், தேவர்களும் சிங்க முழக்கம் செய்தனர். தேவர்கள் இவ்வாறு முழங்கிக் கொண்டிருந்தபோது, பெருஞ்சக்திவாய்ந்த வாசுதேவன், தைத்தியர்களைக் கொல்வதற்காகத் தன் சக்கரத்தை எடுத்தான்.(21)
ஒப்பற்ற சக்தி கொண்டவனான கிருஷ்ணன், தன் சக்கர ஆயுதத்தை ஏவ முற்பட்ட போது, மஹாதேவனின் ஆணையின் பேரில் குமாரனைக் காப்பதற்காக அழகிய கோடவி தேவி, அங்கே நிர்வாணமாக வந்தாள்.(22) தேவியின் எட்டாம் பாகமான லம்பை, அழகிய பொன் சக்தியை {பொன்வேலைப்} போல அவர்களுக்கிடையில் இடைமறித்து நின்றாள்.(23) பெருந்தோள்களைக் கொண்ட கிருஷ்ணன், குமாரனின் முன்பு அந்தத் தேவி நிற்பதைக் கண்டு கலக்கமடைந்து,(24) "சீ, சீ, இந்த இடத்தில் இருந்து உடனே செல்வாயாக; நிச்சய அழிவின் பாதையில் ஏன் தடைகளை நீ வீசுகிறாய்?" என்று கேட்டான்"[1].(22-25)
[1] பிபேக்திப்ராயின் பதிப்பில், "அளவற்ற ஆற்றல் படைத்த கிருஷ்ணன் தன் சக்கரத்தைச் சுழற்றிய போது, கோடவி தேவி இதைக் கண்டாள். அவள், "வெட்கம், வெட்கம், விலகுவாயாக, விலகுவாயாக" என்று சொல்லி அவனது முன்னிலையில் நின்றாள்" என்றிருக்கிறது. அத்துடன் குஹனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த போர் முற்று பெறுகிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஒப்பற்ற வீர்யமுடைய க்ருஷ்ணனால் சக்கரம் சுழற்றப்பட்டதும், பார்வதி தேவியின் எட்டாவது பாகமான மஹாப பாக்யசாலி கோடவி என்பவள் அழகிய ரூபமெடுத்து ருத்ரன் வார்த்தை கொண்டு முருகன் ரக்ஷணத்திற்காக வஸ்த்ரமில்லாமல் அங்குப் போர்க்களம் வந்து ஆச்சர்ய ஸ்வர்ண சக்தி ரூபமாக ஆகாயத்தில் நக்னையாக நின்றாள். பிறகு முருகனுக்கு நடுவில் தேவியைப் பார்த்து மஹாபுஜன் மதுஸூதனன் முகத்தைத் திருப்பிக் கொண்டு வார்த்தை சொன்னான். பகவான் க்ருஷ்ணன் சொன்னான்: "சீ! சீ! நீ தூரச் செல். வதம் செய்யும் என் முடிவான எண்ணத்துக்கு ஏன் விக்னம் செய்கிறாய்?" என்றிருக்கிறது. சித்திரசாலை பதிப்பில், "ஒற்றப்பாற்ற ஆற்றல் படைத்த கிருஷ்ணன் சக்கரத்தை சுழற்றியபோது, கோடவி தேவி, அழகிய உடலை ஏற்றுக் கொண்டு, தேவனின் {சிவனது} சொற்களின் படி குமாரனை {குஹனை, கார்த்திகேயனைப்} பாதுகாப்பதற்காக நிர்வாணமாக அங்கே சென்றாள். நெடுதுயர்ந்தவளும், பெருஞ்சிறப்புமிக்கவளும், பார்வதியின் எட்டாம் பாகமாகத் திகழ்பவளுமான, சித்தை, கனகசக்தி என்று அறியப்படுபவளுமான அந்தத் தேவி, கிருஷ்ணனுக்கும், குமரனுக்கும் இடையில் நிர்வாணமாக நின்றாள். பெருந்தோள்களைக் கொண்ட மதுசூதனன், தனக்கும், குஹனுக்கும் இடையில் நிற்கும் தேவியைக் கண்டு, தன் தலையை தாழ்த்திக் கொண்டு, "சென்றுவிடு, வெட்கம், சென்றுவிடு" என்றான். பிறகு, "மரணம் தீர்மானிக்கப்பட்டவனைக் கொல்வதில் ஏன் நீ தடங்கலை உண்டாக்குகிறாய்?" என்றான்" என்றிருக்கிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனின் அந்தச் சொற்களைக் கேட்டும் கூட, குமாரனைக் காப்பதற்காகக் கோடவி உடையை உடுத்திக் கொள்ளவில்லை.(26)
தலைவன் {கிருஷ்ணன்}, "உன்னுடன் குஹனை அழைத்துக் கொண்டு போர்க்களத்தில் இருந்து விரைந்து ஓடிவிடு. இதை நீ செய்தால் இன்று நமக்கு நன்மை நேரும். மாறாக நான் {சக்கரம் ஏவுவதில் இருந்து} விலகினால் அவன் {குஹன்} என்னுடன் போரிடுவான்" என்றான்.(27) வாசவனின் தம்பியும், தெய்வீகத் தலைவனுமான ஹரி, போர்க்களத்தில் அந்த நிர்வாண தேவியைக் கண்டு தன் சக்கரத்தை விலக்கி {பின்னிழுத்துக்} கொண்டான்.(28) அந்தத் தேவி {கோடவி}, நுண்ணறிவுமிக்கவனும், தேவதேவனுமான மாதவனின் அந்தச் சொற்களைக் கேட்டு, ஹரனின் முன்பு குஹனைக் கொண்டு வந்தாள்.(29) பேரபாயம் நேர்கையில் தேவியால் குஹன் காக்கப்பட்டபோது, பாணன் அந்த இடத்திற்கு வந்தான்.(30) குஹன், கிருஷ்ணனின் சக்கரத்தில் இருந்து விடுபட்டுப் போர்க்களத்தில் இருந்து ஓய்ந்து செல்வதை அவன் {பாணன்} கண்டபோது, மாதவனுடன் தானே போரிட விரும்பினான்.(31)
அதன்பிறகு கணங்கள், யக்ஷர்கள், பாணனின் படைவீரர்கள் ஆகியோர் குழப்பமடைந்தவர்களாக அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(32) பிளந்துவிட்ட அந்தப் படையில் பிரமதர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அந்தப் பேரசுரன் {பாணன்} அவர்களுடன் விரைவில் போர்க்களத்தில் அணிவகுத்து வந்தான்.(33) முன்னணி தேவர்களின் துணையுடன் அணிவகுக்கும் வஜ்ரதாரியைப் போலவே பாணனும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், பயங்கரர்களும், ஆற்றல் வாய்ந்தவர்களுமான பெருந்தைத்தியப் படைத்தலைவர்களுடன் அணிவகுத்துச் சென்றான்.(34) உயரான்ம பாணனின் புரோஹிதர்களும், ஸ்ருதிகளை நன்கறிந்த பெரியோர் பிறரும் அவனுடைய பகைவரின் அழிவுக்காக மந்திரங்களை ஓதி, மூலிகைகளைக் காணிக்கையளித்து அவனது சார்பில் நன்செய் சடங்குகளைச் செய்தனர்" என்றார் {வைசம்பாயனர்}[2].(35)
[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த அத்யாயம் இங்கே முடிகிறது. பிற பதிப்புகளில் இன்னும் அதிகச் செய்திகள் இருக்கின்றன. அவை இந்தப் பதிப்பில் அடுத்த அத்யாயமாகத் தொடர்ந்தாலும் ஸ்லோக எண்கள் இங்கு முடிந்ததில் இருந்து தொடங்குகின்றன. பிற பதிப்புகளில் இந்த அத்யாயமும், அடுத்த அத்யாயமும் சேர்ந்து ஒரே அத்யாயமாக இருக்கிறது.
விஷ்ணு பர்வம் பகுதி – 184 – 128ல் உள்ள சுலோகங்கள் : 35
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |