(பாணஸைந்ய꞉ ஸஹ க்ருஷ்ணஸ்ய யுத்தம் பாணஸைந்யாபயாநம் ருத்ரேண ஸஹ க்ருஷ்ணயுத்தாதிகீர்தநம் ச)
The fight between Krishna and Shankara | Vishnu-Parva-Chapter-182-126 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : புறமுதுகிடும் அசுரப் படையைத் தடுத்துப் பேசிய பாணாசுரன்; சிவனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையிலான போர்; பாணனுடனான நேரடிப் போர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "போர்க்களத்தில் மூன்று அக்னிகளாக நின்று கொண்டிருந்த அந்த மூன்று வீரர்களும் {கிருஷ்ணன், பலராமன், பிரத்யும்னன் ஆகியோர்}, வினதையின் மகனுடைய {கருடனின்} முதுகில் விரைந்து ஏறி அங்கே பகைவருடன் போரிடத் தொடங்கினர்.(1) பெருஞ்சக்திவாய்ந்த வீரர்களான அம்மூவரும் கருடனின் முதுகில் அமர்ந்து, கணைமாரியைப் பொழிந்து அந்தத் தானவப் படையை விரட்டினர்.(2) சக்கரம், கலப்பை, கணைகள் ஆகியவற்றின் தாக்குதல்களால் பீடிக்கப்பட்டவர்களும், தடுக்கப்பட முடியாதவர்களும், பெரிய படையினருமான அந்தத் தானவப் படையினர் கோபமடைந்தனர்.(3) காய்ந்த விறகுகளால் அறையில் பெருகும் நெருப்பைப் போலவே கிருஷ்ணனின் கணைகளால் மூண்ட நெருப்பானது, சுற்றிலும் பெருகி,(4) அண்ட அழிவின் போது எரியும் நெருப்பெனப் பெருகி, போர்க்களத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தானவர்களை எரித்தது.(5)
கிருஷ்ணனின் பல்வேறு கணைகளால் தன் படைவீரர்கள் தாக்கப்படுவதையும், எரிக்கப்படுவதையும், அவர்கள் தப்பி ஓடுவதையும் கண்ட பாணன், அங்கே வந்து அவர்களைத் தடுத்து,(6) "தைத்தியர்களின் குலத்தில் பிறந்த நீங்கள் அச்சத்தில் மூழ்கி, உங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தி ஏன் போர்க்களத்தில் இருந்து ஓடுகிறீர்கள்?(7) {வானில் உலவ வல்லவர்களான நீங்கள்} கவசங்கள், வாள்கள், கதாயுதங்கள், பராசங்கள், கேடயங்கள், கோடரிகள் ஆகியவற்றை விட்டு விட்டு ஏன் தப்பி ஓடுகிறீர்கள்?(8) உங்கள் பிறவியையும், ஹரனுடன் சேர்ந்து வாழ்ந்ததையும் நினைத்துப் பார்த்து நீங்கள் தப்பிச் செல்லலாமா என்பதைத் தீர்மானியுங்கள். இப்போது {உங்களைப் பாதுகாப்பதற்காக} நான் உங்கள் முன்னிலையில் நிற்கிறேன்" என்றான்.(9)
பாணன் சொன்ன சொற்கள் கேட்டாலும், அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் அவற்றைக் கவனியாமல் தப்பி ஓடினர்.(10) எஞ்சிய படைவீரர்களில் பிரமதர்கள் மட்டுமே உறுதியாக நின்று மீண்டும் போரிட விரும்பினர்.(11)
பெருஞ்சக்திவாய்ந்த பாணனின் அமைச்சனும், அவனது நண்பனுமான கும்பாண்டன், தன் படைவீரர்கள் முறியடிக்கப்பட்டதைக் கண்டு,(12) "ஓ! முன்னணி தானவர்களே, போர்க்களத்தில் சங்கரனும், கார்த்திகேயனும் {குஹனும்}, பாணனும் இருப்பதைப் பாருங்கள். இன்னும் அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாகப் படையை விட்டு ஏன் தப்பி ஓடுகிறீர்கள்?(13) உயிரைத் துச்சமாக மதித்துப் போரிடுவீராக" என்றான்.
கிருஷ்ணனின் சக்கர நெருப்பில் கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட அந்தத் தானவர்கள், கும்பாண்டனின் அந்தச் சொற்களைக் கேட்பதற்கு முன்பே அனைத்துப் புறங்களிலும் தப்பி ஓடினர்.(14) ஒப்பற்ற ஆற்றல் படைத்தவனான சிவன் {ஸ்தாணு}, கிருஷ்ணனால் படைவீரர்கள் அனைவரும் முறியடிக்கப்பட்டதைக் கண்டு, கோபத்தால் கண்கள் சிவந்தான் {போர்க்களத்திற்கு வந்தான்}.(15) பாணனைப் பாதுகாப்பதற்காக அவனே {சிவனே} ஒளிமிக்கத் தேரொன்றில் ஏறி போரிட ஆயத்தமானான். குமாரனும் {முருகனும்}, எரியும் நெருப்பு போன்ற ஒரு தேரில் ஏறினான்.(16)
பெருஞ்சக்திவாய்ந்த ருத்திரன் {நந்தீஸ்வரன்}, சிங்கங்களால் இழுக்கப்படும் தேரில் ஏறி, தன் உதடுகளைக் கடித்தபடியே, ஹரி இருந்த இடத்திற்குச் சென்றான்.(17) வானத்தை விழுங்கிவிடுவதைப் போலச் செல்வதும், பேரொலியை உண்டாக்குவதும், சிங்கங்களால் இழுக்கப்படுவதுமான அந்தத் தேர், மேகங்களில் இருந்து விடுபட்ட முழு நிலவைப் போலத் தெரிந்தது.(18) பல்வேறு வகை ஒலியை உண்டாக்கும் பல்வேறு கணங்களால் நிறைந்திருந்த தேவதேவனின் தேர் போர்க்களத்தை நோக்கிச் சென்றது.(19)
அந்தக் கணங்களில் {சிவகணங்களில்} சிலர் சிங்க முகங்களைக் கொண்டவர்களாகவும், சிலர் புலி முகங்களுடனும், சிலர் பாம்பு முகங்களுடனும், சிலர் குதிரை முகங்களுடனும், சிலர் ஒட்டக முகங்களுடனும் இருந்தனர்; அவர்களும் {கணைகளால் பீடிக்கப்பட்டு} அச்சத்தால் நிறைந்தவர்களாக நடுங்கிக் கொண்டிருந்தனர்.(20) பெருஞ்சக்திவாய்ந்த கணங்களில் சிலர் {பாம்புகளையே தங்கள் புனிதப் பூணூலாகத் தரித்திருந்தனர், சிலர்} கழுதைகளின் முகங்களைக் கொண்டவர்களாகவும், சிலர் ஒட்டக முகங்களுடனும், சிலர் மயில் {யானை} முகங்களுடனும், சிலர் குதிரை முகங்களுடனும் {கழுதை போன்ற கழுத்தைக் கொண்டவர்களாகவும்},(21) சிலர் வெள்ளாட்டு முகங்களுடனும், சிலர் பூனை முகங்களுடனும் இருந்தனர். சிலர் செம்மறியாட்டு முகங்களுடனும் இருந்தனர். சிலர் மரவுரி தரித்திருந்தனர், சிலர் தங்கள் தலைகளில் குடுமிகளுடன் இருந்தனர், சிலர் சடாமுடி தரித்திருந்தனர், சிலர் தங்கள் சிகையை உயர்த்திக் கட்டியிருந்தனர், சிலர் நிர்வாணமாக இருந்தனர்.(22) அவர்கள் அனைவரும் சங்குகளையும், பேரிகைகளையும் முழக்கியபடியே போர்க்களத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களில் சிலர் அழகிய முகங்களைக் கொண்டவர்களாகவும், தெய்வீக ஆயுதங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.(23) {சிலர் தங்கள் தலையில் பல வகை மலர்களைச் சூடியிருந்தனர்}. சிலர் குள்ளர்களாகவும், வேறு சிலர் கோர முகம் படைத்தவர்களாகவும் இருந்தனர். சிலர் சிங்கத் தோல்களையும், புலித்தோல்களையும் உடுத்தியிருந்தனர்.(24) சிலர் குருதியால் மறைக்கப்பட்ட முகமும் {ரத்தம் வழியும் வாயும்}, பெரும்பற்களும் கொண்டவர்களாகவும், இறைச்சிப் பிரியர்களாகவும் {தங்களுக்கு அளிக்கப்படும் பலிகளை விரும்புகிறவர்களாகவும்} இருந்தனர். அவர்கள் அனைவரும் அந்தப் போர்க்களத்தில் பெரும்பகைவரை அழிப்பவனான சங்கரனைச் சூழ்ந்து நின்று, சுகமாகக் காத்திருந்தனர்.(25)
{அவர்கள் போர்க்களத்தில் விளையாடிக் கொண்டிருப்பவர்களைப் போலப் பகைவனை எதிர்த்துப் போருக்கு ஆயத்தமாக இருந்தனர்}. சோர்வற்றவனான ருத்திரனின் தேரைக் கண்ட கிருஷ்ணன், கருடன் மீதேறி போர்க்களத்திற்குச் சென்றான்.(26) போர்க்களத்தில் எப்போதும் முன்னணியில் நிற்பவனான ஹரன், கணைகளை ஏவிக் கொண்டு கருடன் மீதேறி வரும் ஹரியைக் கண்டு, கோபமடைந்தவனாகச் சிறகு படைத்த நூற்றுக்கணக்கான கணைகளால் அவனைத் தாக்கினான்.(27) பகைவரைக் கலங்கடிப்பவனான ஹரனின் கணைகளால் தாக்கப்பட்ட ஹரியும் சினமடைந்தவனாக இந்திரனால் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த ஆயுதங்களை {பார்ஜன்ய அஸ்திரத்தை} எடுத்தான்.(28)
கிருஷ்ணனாலும், ருத்ரனாலும் தாக்கப்பட்ட பூமியும், திக் கஜங்களும் {பாம்புகளும்} தங்கள் தலைகளை உயர்த்தியபடி நடுங்கின.(29) ஓடைகளின் நீரால் மலைகள் மறைக்கப்பட்டன; சில மலைகளின் சிகரங்கள் அனைத்துப் பக்கங்களிலும் தகர்ந்தன.(30) ஹரனுக்கும் {ஸ்தாணுவுக்கும்}, ஹரிக்கும் இடையில் நடந்த அந்தப் போரில் பூமியும், வானும், திசைகள் அனைத்தும் எரிவன போன்று தோன்றின.(31) பூமியில் அனைத்துப் பக்கங்களிலும் எரிகொள்ளிகள் விழுந்தன, பயங்கரத் தோற்றம் கொண்ட நரிகள் மங்கலமற்ற வகையில் ஊளையிடத் தொடங்கின.(32) இந்திரன் {வாசவன்} பேரொலியுடன் கூடிய குருதி மழையைப் பொழியத் தொடங்கினான், பாணனுடைய படையின் பின்புறத்தை எரிகொள்ளிகள் மறைத்தன {தூமகேது பீடித்தது}.(33) காற்றுப் பலமாக வீசியது, விண்மீன்களும், மூலிகைகளும் {ஔஷதிகளும்} ஒளியிழந்து மங்கின, வானுலாவிகள் {பறவைகள்} பறக்கவில்லை.(34) அந்த நேரத்தில், திரிபுரத்தை அழித்தவனான ருத்திரன், போரில் நுழைந்ததை அறிந்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, தேவர்களால் சூழப்பட்டவனாக அங்கே வந்தான்.(35) அப்சரஸ்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோரும் வானில் வந்து நின்று அந்தப் போரைக் காணத் தொடங்கினர்.(36)
அப்போது விஷ்ணு, ருத்திரனின் மீது இந்திரனின் ஆயுதத்தை {பார்ஜன்ய அஸ்திரத்தை} ஏவினான். அஃது எரிந்து கொண்டே ருத்திரன் இருந்த தேருக்குச் சென்றது.(37) அடுத்தக் கணத்தில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகள் ஹரனின் தேர் முன்பு விழுந்தன.(38) இதைக் கண்டு கோபத்தால் நிறைந்த {வில்லாளிகளில் சிறந்தவனுமான} ஹரன் {ருத்திரன்}, பயங்கரமிக்க நெருப்பாயுதத்தை {ஆக்னேயாஸ்த்ரத்தை} ஏவினான். அஃது உண்மையில் அற்புதம் நிறைந்ததாகத் தோன்றியது.(39) அந்த நேரத்தில் கிருஷ்ணனும், பிற வீரர்கள் மூவரும் {பலராமன், கருடன், பிரத்யும்னன் ஆகியோரும்} கணைகளால் முற்றாக மறைக்கப்பட்டனர்; அவ்வாயுதத்தின் நெருப்பால் எரிக்கப்பட்ட அவர்கள், காட்சியில் புலப்படாத அளவுக்குத் தளர்ந்தனர். அப்போது அந்த நெருப்பாயுதத்தால் கிருஷ்ணன் கொல்லப்பட்டதாகக் கருதிய அசுரர்கள் சிங்க முழக்கம் செய்தனர்.(40,41)
பெருஞ்சக்திவாய்ந்தவனும், அனைத்து வகை ஆயுதங்களிலும் திறன்மிக்கவனுமான வாசுதேவன், போர்க்களத்தில் அந்த நெருப்பாயுதங்களைப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டு வாருண ஆயுதத்தை {வாருணாஸ்த்ரத்தை} எடுத்தான்.(42) உயரான்ம வாசுதேவனால் வாருண ஆயுதம் ஏவப்பட்டபோது, அந்த நெருப்பாயுதத்தின் {ஆக்னேயாஸ்திரத்தின்} தீ தணிந்தது.(43) வாசுதேவனால் அவ்வாயுதம் கலங்கடிக்கப்பட்டபோது, அண்ட நெருப்புக்கு {ஊழித்தீக்கு} ஒப்பானவையும், பைசாசம், ராட்சசம், ரௌத்ரம், ஆங்கீரஸம் என்ற பெயர்களைக் கொண்டவையுமான நான்கு ஆயுதங்களைப் பவன் ஏவினான்.(44,45) வாசுதேவன், அவ்வாயுதங்களைக் கலங்கடிக்கும் வகையில், {வாயுவின் ஆயுதமான} வாயவ்யம், {சூரியனின் ஆயுதமான} ஸாவித்ரம், {இந்திரனின் ஆயுதமான} வாசவம், {நனவை இழக்கச் செய்யும்} மோஹனம் என்ற பெயர்களைக் கொண்ட நான்கு கணைகளை ஏவினான்.(46)
மாதவன் {கிருஷ்ணன்}, இவ்வாறு தன்னுடைய நான்கு கணைகளால் அந்த நான்கு ஆயுதங்களுக்கு எதிர்வினையாற்றிய பிறகு, வாயை அகலத் திறந்திருக்கும் அந்தகனைப் போன்ற வைஷ்ணவ ஆயுதத்தை {வைஷ்ணவாஸ்த்ரத்தை} ஏவினான்.(47) அந்த வைஷ்ணவ ஆயுதம் ஏவப்பட்டதும், பாணனின் படையைச் சேர்ந்த பூதங்கள், யக்ஷர்கள், அசுரர்கள் அனைவரும் நினைவிழந்து, அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாக அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(48) அப்போது பேரசுரனான பாணன், பிரமதர்களால் நிறைந்த தன் படை இவ்வாறு முறியடிக்கப்பட்டதைக் கண்டு, போர்க்களத்தை நோக்கி விரைந்து சென்றான்.(49) வஜ்ரபாணியான தேவர்களின் மன்னன், தேவர்கள் சூழச் செல்வதைப் போலவே பாணனும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பயங்கர ஆயுதங்களைத் தரித்தவர்களுமான தைத்தியர்கள் சூழப் புறப்பட்டுச் சென்றான்".(50)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்த நேரத்தில், பாணனின் சார்பில் பிராமணர்கள், ஜபங்களும், மந்திரங்களும் ஓதி நன்மைக்கான சடங்குகளைச் செய்தனர். பலியின் மகனான பாணனும், அந்தப் பிராமணர்களுக்கு, மங்கலமான பசுக்களையும், ஆடைகளையும், கனிகள், மலர்கள் மற்றும் தங்க நாணயங்களையும் அளித்து வளங்களின் தலைவனை {குபேரனைப்} போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(51,52) பொன்பூச்சுக் கொண்டதும், நூறு நிலவுகளாலும், லட்சம் விண்மீண்களாலும், எண்ணற்ற மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டதுமான பாணனின் பெருந்தேர், நெருப்பைப் போலவோ, ஆயிரஞ்சூரியர்களைப் போலவே அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது. வில் தரித்தவனாகப் பயங்கரத் தோற்றத்தை ஏற்ற பாணன், யதுக்களில் முதன்மையானவர்களுடன் போரிடுவதற்காகத் தானவர்களால் {அமைச்சன் கும்பாண்டனால்} கொண்டுவரப்பட்ட தேரில் ஏறினான்.(53) அதன்பிறகு, அண்ட அழிவின் போது, காற்றால் பெருகும் அலைகள் நிறைந்த கடல் கலங்குவதைப் போலவே வீரர்களின் தேர்களால் நிறைந்திருந்த அந்தப் பெரும்படை கலக்கமடைவது தொடர்ந்தது.(54) அந்த நேரத்தில் ஓ! மன்னா {ஜனமேஜயா}, வில் தரித்தவர்களும், பெரும் தேர்வீரர்களுமான அந்தத் தானவர்கள் காடுகளால் மறைக்கப்பட்ட மலைகளைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தனர்; அவர்களைப் பார்ப்பதே அனைவருக்கும் அச்சத்தை ஊட்டியது" {என்றார் வைசம்பாயனர்}.(55,56)
விஷ்ணு பர்வம் பகுதி – 182 – 126ல் உள்ள சுலோகங்கள் : 56
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |