Thursday 18 February 2021

தன் காதலனை அழைத்து வர சித்திரலேகையை அனுப்பி வைத்த உஷை | விஷ்ணு பர்வம் பகுதி – 175 – 119

(உஷாயா꞉ ஸ்வப்நதர்ஷநமநிருத்தாநயநார்தம் சித்ரளேகாயா த்வாரகாகமநம் ச)

Usha meets her lover while asleep and exhorts her friends to bring him | Vishnu-Parva-Chapter-175-119 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : உஷையைத் தேற்றிய தோழியர்; சித்ரலேகையிடம் தன் கனவைக் கூறிய உஷை; அநிருத்தனே உஷையின் துணையென நிச்சயித்த சித்ரலேகை...


Usha and apsara Chitralekha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{சோணிதபுரத்துப் பெண்களில் முக்கியமானவர்கள் ஓர் அற்புத நிகழ்வால் பீடிக்கப்பட்டனர்}. அதன்பிறகு வைசாக மாதத்தின் வளர்பிறை பனிரெண்டாம் நாளில் {சித்திரை மாத வளர்பிறை துவாதசியில்} அழகிய உஷை தன் தோழியர் சூழ உறங்கிக் கொண்டிருந்தாள். தேவியின் சொற்களால் தூண்டப்பட்டும், அழுதுகொண்டும் அந்த அழகிய கன்னிகை அசைவற்றவளாகக் கிடந்த போது, ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல ஒரு மனிதன் கனவில் தோன்றி அவளை அறிந்தான். {அவனிடம் இருந்து விடுபடுவதற்காகத் துடிக்கும் உடலுடன் அழுது கொண்டிருந்த அவளை அவன் பெண்ணாக உணரச் செய்தான்}. அவள் திடீரெனக் குருதியால் குளித்தவளாகும் அளவுக்கு அந்த மனிதன் அவளை அறிந்தான்.(1-3)

சித்திரலேகை, அச்சத்தால் பீடிக்கப்பட்டவளாகவும், இவ்வாறு அழுது கொண்டிருப்பவளாகவும் தன் தோழியைக் கண்டு பின் வரும் அற்புத ஆறுதல் சொற்களைச் சொன்னாள்.(4) அவள், "ஓ! உஷை, அஞ்சாதே. நீ ஏன் இவ்வாறு அழுது புலம்புகிறாய். கொண்டாடப்படும் பலியின் பேத்தியாக இருந்து கொண்டும் அச்சத்தால் நீ ஏன் பீடிக்கப்பட்டாய்?(5) ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, மூவுலகத்திலும் உனக்கு அச்சமேதும் இல்லை. உன் தந்தை போரில் தேவர்கள் அனைவரையும் அழித்தவராவார். பின் ஏன் அஞ்சுகிறாய்?(6) ஓ! அழகியே, இதைப் போன்ற ஓர் அறையில் உனக்கு அச்சமேதுமில்லை. எழு, எழுவாய், வருந்தாதே.(7) சச்சியின் தலைவனான தேவர்களின் மன்னன், உன் தந்தையால் பல முறை வீழ்த்தப்பட்டான் என்பதையும், அவனாலும் இந்த நகருக்குள் வர முடியாது என்பதையும் நீ அறிய மாட்டாயா?(8) பேரற்புதம் வாய்ந்த அசுரன் பலியின் மகனான உன் தந்தை தேவர்கள் அனைவரின் அச்சத்திற்கு ஊற்றுக் கண்ணாகத் திகழ்கிறார்" என்று சொன்னாள்.(9)

இவ்வாறு தன் தோழியால் சொல்லப்பட்ட களங்கமற்ற பாணன் மகள், தான் கனவில் கண்டவற்றை அவளிடம் சொன்னாள்.(10) உஷை, "இவ்வாறு களங்கமடைந்த தூய கன்னிகையால் எவ்வாறு உயிருடன் இருக்க முடியும்? தேவர்களின் பகைவரும், பகைவரைக் கொல்பவருமான என் தந்தையிடம் நான் என்ன சொல்வேன்?(11) பெருஞ்சக்திவாய்ந்த இந்தக் குலத்திற்குக் களங்கமேற்படுத்திய எனக்கு மரணமே உகந்தது. நான் வாழ்வதில் மகிழ்ச்சியேதும் இல்லை.(12) ஐயோ, விழித்திருக்கும்போதும் காதலனுடன் வாழ்வதைத் போன்ற இழிநிலையில் நான் தாழ்ந்து இருக்கிறேன். {நான் விரும்பும் ஒருவரைக் கனவில் கண்டேன். கனவிலும் விழித்திருப்பவளைப் போன்ற நிலையிலேயே நான் இருந்தேன்}.(13) ஒரு கன்னிகை இத்தகைய நிலைக்குத் தாழும்போது (இவ்வுலகில்) எவ்வாறு அவள் வாழத் துணியலாம்?(14) தூய காரிகையரில் முதன்மையான ஒரு பெண் வாழ விரும்பலாம், தன் குலத்துக்குக் களங்கமேற்படுத்திய ஓர் அபலை எவ்வாறு அப்படி விரும்பலாம்?" என்று சொன்னாள்.(15) தன் தோழியரால் சூழப்பட்டிருந்த தாமரைக்கண் உஷை, கண்கள் நிறைந்த கண்ணீருடன் சிறிது நேரம் அழுது புலம்பினாள்.(16)

{சித்திரலேகை சென்ற பிறகு}[1] அங்கே இருந்த தோழியரும் உஷை அழுவதைக் கண்டு அவளைக் கவனித்துக் கொள்ள யாருமே இல்லாததைப் போலத் தன்னையே மறந்திருந்தனர்.(17) அவர்கள், கண்கள் நிறைந்த கண்ணீருடன், "ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, தீய நோக்கத்துடன் நீ ஏதாவது செய்திருந்தால் உன் மனம் களங்கமடைந்ததாகும்.(18) ஓ! மங்கலப் பெண்ணே, கனவில் வலுக்கட்டாயமாக அறியப்பட்டதால் உன் நோன்புக்கு முடிவேற்படாது. {கனவு நிலையில் தேவர்களுடன் கலவியில் ஈடுபட்டிருந்தாலும் உன் கன்னித்தன்மைக்குப் பங்கம் ஏற்படாது}.(19) அதையுந்தவிர, ஓ! அழகிய பெண்ணே, மனிதர்களின் நிலத்தில் கனவில் பாவமேதும் இழைக்கப்படுவதில்லை. எனவே, இத்தகைய ஒழுக்கத்தால் நீ விதிமுறையேதும் மீறவில்லை.(20) சாத்திரங்களை {தர்மங்களை} நன்கறிந்த முனிவர்கள் மனத்தாலோ, சொற்களாலோ, குறிப்பாகச் செயல்களாலோ பாவமிழைத்த பெண்ணையே வீழ்ந்தவளாகக் கருதுகிறார்கள்.(21) ஓ! மருட்சியுடைய பெண்ணே, நீ எப்போதும் பிரம்மச்சரியத்தைப் பின்பற்றியிருக்கிறாய் {பிரம்மசாரிணி விரதமுடையவளாக இருக்கிறாய்}, உன் மனமும் வீழவில்லை எனும்போது நீ களங்கமடைந்ததாகக் கருதுவது எவ்வாறு?(22) நீ கற்புடைய, தூய்மையான, உன்னதப் பெண்ணாகவே இருக்கிறாய். உறக்கத்தின் போது நீ இந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்டதால் உன் அறம் கெடாது.(23) பாவம் நிறைந்த செயல்களுக்கு வழிவகுக்கும் பாவம் நிறைந்த மனம் கொண்டவளே கற்பற்றவளாகச் சொல்லப்படுகிறாள்.(24) ஆனால், ஓ! பெண்ணே, நீ கற்புடையவளாக இருக்கிறாய்; நீ பெருங்குலத்தில் பிறந்த அழகிய பெண்ணாகவும் இருக்கிறாய். நீ எப்போதும் கன்னித்தன்மை காத்து வந்தாலும் இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாய். ஐயோ, விதியை மீறுவது கடினம்" என்றனர்.(25)

[1] அடைப்புக்குறிக்குள் இங்கே கொடுக்கப்படும் வாக்கியம், அடுத்தடுத்த அடிக்குறிப்புகளில் வரும் செய்திகளுக்காகச் சேர்க்கப்படுகிறது.

அழுது கொண்டிருந்த உஷையிடம், கண்ணீர் நிறைந்த கண்களுடன் இதைச் சொன்னதும், கும்பாண்டனின் மகளானவள் {ராமை} [2], பின்வரும் மதிப்புமிக்கச் சொற்களைச் சொன்னாள்.(26) அவள், "ஓ! அகன்ற விழிகளைக் கொண்டவளே {விசாலக்கண்ணி}, உன் கவலையைக் கைவிடுவாயாக. ஓ! அழகிய முகத்தினளே, நீ மாசற்றவள் என்பதை நிறுவும் நிகழ்வொன்றை உனக்கு நான் நினைவுகூர்கிறேன். அதை உண்மையாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(27) கணவனை அடைவது குறித்து நீ நினைத்த போது, மஹாதேவன் முன்னிலையில் பார்வதி தேவி சொன்னதை நினைவுகூர்வாயாக. அந்த நேரத்தில், உன் இதயம் விரும்பும் பின்வரும் சொற்களை அந்தத் தேவி மகிழ்வுடன் சொன்னாள்.(28) {அந்தப் பார்வதி தேவி}, ‘வைகாச மாத பனிரெண்டாம் பிறைநாளில் {சித்திரைமாத துவாதசியில்} நீ உன் மாளிகையில் உறங்கும்போது, அழுது கொண்டிருக்கும் உன்னுடன் எந்த மனிதன் வசித்து உன்னைப் பெண்ணாக்குவானோ {பெண்ணாக உணரச் செய்வானோ},(29) பகைவரைக் கொல்பவனான அந்த வீரனே உன் கணவனாவான்’ என்று சொன்னாள்.(30) ஓ! மதிமுகத்தாளே, பார்வதி சொன்னது ஒருபோதும் பொய்க்காது. உண்மையை மறந்து நீ அழுது கொண்டிருக்கிறாய்" என்றாள் {பாணனின் அமைச்சன் கும்பாண்டனின் மகள்}.(31) பாணனின் மகள், தன் தோழியின் சொற்களைக் கேட்டும், தேவியின் சொற்களை நினைவுகூர்ந்தும் கவலையைக் கைவிட்டாள்.(32)

[2] அப்சரஸ் சித்திரலேகையும், கும்பாண்டனின் மகள் என இங்கே சொல்லப்படுபவளும் ஒருத்தியே எனச் சித்திரசாலை பதிப்பும், பிபேக்திப்ராயின் பதிப்பும் கொள்கின்றன. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் அவ்வாறு இல்லை. ஹரிவம்ச விஷ்ணு பர்வத்தின் இறுதி அத்தியாயத்தில் சித்திரசாலை, உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்கார் பதிப்புகளில் இவளது பெயர் "ராமா / ராமை" என்று குறிப்பிடப்படுகிறது.

உஷை, "ஓ! அழகிய பெண்ணே, பவனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்தத் தேவி என்ன சொன்னாள் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவள் சொன்னதே என் அறையிலும் சரியாக நடந்தது.(33) உலகின் தலைவனான பவனின் மனைவி அவரையே என் கணவராக்க விரும்பினால், அவர் இருக்கும் இடத்தை நான் அறிந்துகொள்ளத் தக்க ஏற்பாடுகளைச் செய்வாயாக" என்றாள்.(34)

உஷை இதைச் சொன்னதும், சொற்களைப் புரிந்து கொள்வதை நன்கறிந்த கும்பாண்டனின் மகள், அறிவுக்குப் பொருந்தும் பின்வரும் சொற்களைச் சொன்னாள்.(35) அவள், "ஓ! பெண்ணே, நீ ஏன் இவ்வளவு வருந்துகிறாய்? அவனது குலத்தின் மகிமைகளையும், அவனது ஆண்மையையும் அறிந்தவர் யாருமில்லை. {அவனைக் குறித்து உண்மையில் அறிந்தவர் யாரும் இல்லை. பிறகு ஏன் நீ இவ்வாறு குழம்புகிறாய்?}(36) நீ கனவில் கண்டவனும், கேட்கப்படாதவனும், பார்க்கப்படாதவனுமான கள்வனை நாங்கள் அறிவது எவ்வாறு?(37) ஓ! சிவந்த கண்ணாளே, அவன் உன் அந்தப்புரத்திற்குள் திடீரென நுழைந்து, அழுது கொண்டிருந்த உன்னை வலுக்கட்டாயமாக அறிந்தவன்.(38) பகைவரை அடக்குபவனான அவன், கொண்டாடப்படும் நமது நகரத்திற்குள் வலுவில் நுழையவல்லவனாக இருப்பதால் நிச்சயம் சாதாரணன் அல்லன்.(39) பயங்கர ஆற்றல்படைத்த ஆதித்யர்கள், ருத்திரர்கள், வசுக்கள் ஆகியோராலும், ஏன் அசுவினிகளாலும் கூட இந்தச் சோணித நகருக்குள் நுழைய முடியாது.(40) எனவே, சோணிதபுரத்திற்குள் நுழைந்தவனும், பகைவரைக் கொல்பவனும், {இவ்வகையில்} பாணனின் தலையில் தன் காலை வைத்தவனுமான அவன், உண்மையில் {மேற்சொன்ன} இவர்களைவிட நூறு மடங்கு சக்திவாய்ந்தவனாகவே இருப்பான்.(41) ஓ! அழகிய கண்களைக் கொண்டவளே, இத்தகைய வீரக் கணவனை அடையாத பெண்ணுக்கு வாழ்வினாலும், இன்பநுகர் பொருட்களினாலும் பயன் என்ன?(42) தேவியின் உதவியால் மன்மதனைப் போன்ற இத்தகைய கணவனை அடைந்திருக்கும் போது, நற்பேறு பெற்றவளாகவும், அருளப்பட்டவளாகவும் உன்னை நீ கருத வேண்டும்.(43) நீ செய்ய வேண்டியதை இப்போது கேட்பாயாக. அவனது பெயர், குலம் ஆகியவற்றையும், அவனது தந்தை யார் என்பதையும் நாம் அறிய வேண்டும்" என்றாள்.(44)

கும்பாண்டனின் மகள் இதைச் சொன்னதும், காதலால் பீடிக்கப்பட்டிருந்த உஷை, "ஓ! தோழி, இவையாவற்றையும் என்னால் எவ்வாறு அறிய முடியும்? மக்கள் பெரும்பாலும் தாங்கள் செய்யும் செயல்களாலேயே வீழ்கிறார்கள்.(45) எனவே என்ன மறுமொழி சொல்வது என எனக்குத் தெரியவில்லை. என் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்கான வழிவகையைக் காண்பாயாக" என்றாள்.(46)

கும்பாண்டனின் அழகிய மகள் இதைக் கேட்டுவிட்டு, அழுது கொண்டிருக்கும் தன் தோழியான உஷையிடம்,(47) "ஓ! தோழி, ஓ! நீள்விழியாளே, உடன்படுத்துவதிலும், வேற்றுமை விதைப்பதிலும் அப்சரஸ் சித்திரலேகை திறன்மிக்கவள். எனவே, உடனே இதை அவளுக்குத் தெரிவிப்பாயாக.[3](48) {மூவுலகங்களில் உள்ள அனைத்தையும் அவள் எப்போதும் அறிந்திருப்பாள்.}" என்றாள்.

[3] அப்சரஸ் சித்திரலேகையும், கும்பாண்டனின் மகளும் வெவ்வேறானவர்கள் என்பது இந்த ஸ்லோகத்தின் மூலம் புலப்படுகிறது. இந்த ஸ்லோகம் சித்திரசாலை பதிப்பிலும் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இவ்வாறு இல்லாமல் சித்திரலேகையே பேசுவது போல் உள்ளது.

இதைக் கேட்டதும் உஷை பேராச்சரியத்தாலும், மகிழ்ச்சியாலும் நிறைந்தாள்.(49) அபலையான அந்த உஷை, தன் தோழியான அப்சரஸ் சித்திரலேகையிடம் கூப்பிய கரங்களுடன் சோகமாகப் பேசினாள்.(50) {உஷையால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்ட அந்தத் தெய்வீகப் பெண் {சித்திரலேகை}, பாணனின் புகழ்பெற்ற பெண்ணான தன் தோழிக்கு ஆறுதல் கூறினாள்.(51) வெட்கமடைந்த உஷை தன் தோழியான தெய்வீகப் பெண் சித்திரலேகையிடம் சொல்லக்கூடாத சொற்களை அன்புடன் சொன்னாள்}.(52) உஷை "ஓ! அழகிய பெண்ணே, மிக முக்கியமான செய்தியைச் சொல்கிறேன் கேட்பாயாக. மதங்கொண்ட யானையின் நடையையும், தாமரைக் கண்களையும் கொண்ட என் காதல் கணவரை நீ இங்கே கொண்டு வராவிட்டால் நான் என் உயிரை விடுவேன்" என்றாள்.(53,54)

இதைக் கேட்ட சித்திரலேகை, உஷைக்கு மகிழ்ச்சியேற்படுத்தும் வகையில், "ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவளே, நீ சொல்பவனை நான் அறிந்ததில்லை.(55) அந்தக் கள்வனின் பெயரையோ, குணத்தையோ, நிறத்தையோ, சாதனைகளையோ, அவன் வசிக்கும் நாட்டையோ நான் அறிந்ததில்லை.(56) ஆனால், ஓ! தோழி, என் புத்தியால் எதைச் சாதிக்க முடியும் என்பதையும், நீ விரும்பியதை எவ்வாறு அடைவாய் என்பதையும் அறிய காலத்திற்குத் தகுந்த என் சொற்களைக் கேட்பாயாக.(57) ஓ! தோழி, தேவர்கள், தானவர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்களின் மத்தியிலும், மனிதர்களின் நிலத்தில் நன்கறியப்பட்ட முன்னணி நபர்களின் மத்தியிலும் பிறந்தவர்களையும், அழகால் பிரபலமானவர்களையும் ஓவியங்களாக நான் தீட்டப் போகிறேன்.(58,59) ஓ! மருட்சியுடைய பெண்ணே, ஏழு இரவுகளுக்குள் அவர்களின் ஓவியங்களை நான் உனக்குக் காட்டுகிறேன், உன் காதல் கணவனின் ஓவியத்தை அடையாளம் கண்டு அவனை அடைவாயாக" என்றாள்.(60)

உஷை, தன்னை மகிழ்விக்கும் ஆவலில் இருந்த சித்திரலேகையால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தன் அன்புக்குரிய தோழியான அந்தச் சித்திரலேகையிடம் அவ்வாறே செய்யும்படி கேட்டுக் கொண்டாள்.(61) அழகிய சித்திரலேகையும், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டுத் தன் கற்பனையினாலும், தேர்ந்த கைகளினாலும் ஏழு இரவுகளுக்குள் முன்னணி நபர்களின் ஓவியங்களைத் தீட்டினாள்.(62)

அவள், தன்னால் தீட்டப்பட்ட ஓவியங்கள் அனைத்தையும் விரித்து வைத்து, தோழியர் அனைவரின் முன்னிலையில் உஷையிடம்,(63) "இதோ பார், தேவர்கள், தானவர்கள், கின்னரர்கள், உரகர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், தைத்தியர்கள், பல்வேறு நாகக் குலங்கள் ஆகியவற்றிலும், மனித குலத்திலும் முன்னணி நபர்கள் அனைவரையும் நான் ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறேன். நான் அவர்கள் அனைவரையும் சரியாக வரைந்திருக்கிறேன். (64-66) {நான் வரைந்திருக்கும் இவை யாவற்றையும் காண்பாயாக}. நீ கனவில் கண்ட உன் கணவனை இப்போது அடையாளம் காண்பாயாக" என்றாள்.(67)

மெதுவாக ஒவ்வொன்றையும் கடந்து சென்ற உஷை, {தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், வித்யாததர்கள் ஆகியோரின் ஓவியங்களைக் கண்டாள்}.(68) யாதவர்களுக்கு மத்தியில் உள்ள யது மன்னன் கேசவனின் {கிருஷ்ணனின்} ஓவியத்தைக் கண்டாள். அவனது அருகில் இருந்த அநிருத்தனைக் கண்டதும் அவளது விழிகள் அச்சரியத்தால் விரிந்தன.(69) அவள் சித்திரலேகையிடம், "என் மாளிகையின் மாடியில் கற்புடைய பெண்ணாக உறங்கிக் கொண்டிருந்த என்னைக் கனவில் அறிந்த கள்வர் இவரே.(70) இவரது அழகால் இவரை அடையாளம் கண்டேன். அந்தக் கள்வர் இவரே. ஓ! அழகிய சித்திரலேகா, இவரது பெயர், சாதனைகள், குணம், குலம் ஆகியவற்றை விரிவாக எனக்குச் சொல்வாயாக. அதன் பிறகு உகந்ததை நாம் செய்ய வேண்டும்" என்றாள் (71)

சித்திரலேகை, "ஓ! அகன்ற விழியாளே {விசாலாக்ஷி}, பயங்கர ஆற்றலைக் கொண்டவனும், உன்னுடைய கணவனுமான இவன், மூவுலகங்களின் தலைவனும், நுண்ணறிவு மிக்கவனுமான கிருஷ்ணனின் பேரனாவான், இவன் பிரத்யும்னனின் மகனாவான்.(72) அற்றலில் இவனுக்கு நிகராக மூவுலகங்களிலும் எவனும் இல்லை. இவன் மலைகளைப் பிடுங்கி அவற்றை நொறுக்கவல்லவன்(73). இத்தகைய பெரும் யது குல இளவரசனை உன் கணவனாகப் பவானி தேர்ந்தெடுத்திருப்பதால், ஓ! தோழி, நீ அருளப்பட்டவளாகவும், {அருள் கொடுத்து} ஆதரிக்கப்பட்டவளாகவும் இருக்கிறாய்" என்றாள்.(74)

உஷை, "ஓ! அகன்ற விழியாளே, ஓ! அழகிய முகத்தாளே, எங்களை இணைசேர்க்க வல்லவள் நீ மட்டுமே. ஆதவற்றவளான எனக்குப் புகலிடம் எதையாவது அறிவாயாக.(75) வானில் உலவவும், பல்வேறு வடிவங்களை ஏற்கவும் வல்லவள் நீ. {யோகம் பூண்டவள் நீ}. வழிமுறைகளை அறிவதில் நுண்ணறிவுமிக்கவள் நீ. என் காதலரை விரைவில் இங்கே கொண்டு வருவாயாக.(76) ஓ! தோழி, ஓ! அழகியே, இப்பணியை நிறைவேற்றவல்ல வழிமுறைகளைச் சிந்திப்பாயாக.(77) கல்விமான்கள், துயரில் உதவி செய்யும் நண்பரை உயர்வாகச் சொல்கிறார்கள். ஓ! அழகிய இடையாளே, நான் காமத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறேன். என் உயிரை எனக்குத் தருவாயாக.(78) தேவனைப் போன்ற என் கணவரை இன்றே விரைவில் இங்கே நீ கொண்டு வராவிட்டால் என் உயிரை நான் கைவிடுவேன்" என்றாள்.(79)

உஷையின் சொற்களைக் கேட்ட சித்திரலேகை, "ஓ! மங்கலமானவளே, இனிமையாகப் புன்னகைக்கும் பெண்ணே, நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மருட்சியுடைய பெண்ணே,(80) பாணனின் நகரம் பாதுகாக்கப்படுவதைப் போலவே, துவாராவதி நகரமும் நிகரான வல்லமை பெற்றதே. {தேவர்களாலும் அதற்குள் நுழைய முடியாது}.(81) அந்த நகரம் இரும்புச் சுவர்களால் சூழப்பட்டிருக்கிறது, {இரகசிய வழிகளைக் கொண்டிருக்கிறது}, விருஷ்ணி குல இளவரசர்களும், துவாரகாவாசிகளும் அதைப் பாதுகாக்கின்றனர்.(82) அந்த நகரத்தைச் சுற்றிலும் தேவதச்சனான விஷ்வகர்மனால் கட்டப்பட்டதும், நீர் நிறைந்ததுமான அகழி இருக்கிறது, தாமரை உந்தி படைத்த தேவனின் ஆணையால் பெரும் வீரர்கள் அதைப் பாதுகாக்கின்றனர்.(83) {மலை போன்ற கோட்டைகளுடனும், அகழிகளுடனும் அது கடக்க முடியாததாக இருக்கிறது. தாதுக்களால் அலங்கரிக்கப்பட்ட மலைகளும், ஏழு கோட்டைகளும் அங்கிருக்கின்றன}. அந்த நகரத்தைச் சுற்றிலும் மலைகளாலான மதில்கள் இருக்கின்றன, கோட்டை வழியாகவே எவனும் அதற்குள் நுழைய முடியும்.(84) அந்நியன் எவனாலும் அந்நகருக்குள் நுழைய முடியாது. எனவே, என்னையும், உன்னையும், குறிப்பாக உன் தந்தையையும் நீ காப்பாயாக {இம்முயற்சியில் என்னை ஈடுபடுத்தாதே}" என்றாள்.(85)

உஷை, "உன் யோக சக்தியின் மூலம் உன்னால் அங்கே நிச்சயம் நுழைய முடியும். ஓ! தோழி, நான் வேறென்ன சொல்வது? நான் சொல்வதைக் கேட்பாயாக.(86) நிலவைப் போன்ற முகம் கொண்ட அநிருத்தரை நான் காணாவிட்டால், உண்மையில் யமனின் கோவிலை {யமலோகத்தை} நான் அடைவேன்.(87) ஓ! தாராள மனம் கொண்ட பெண்ணே, இதுபோன்ற பணிகள் உடனே நிறைவேறும். நீ என்னை உயிரோடு காண விரும்பினால் உடனே உன் பணியில் ஈடுபடுவாயாக.(88) நீ என்னை உன் தோழியாகக் கருதினால், நான் உன் உதவியை நாடி என் காதலரை விரைவில் அழைத்து வருமாறு உன்னிடம் அன்புடன் கேட்டுக் கொள்வேன்.(89) ஒருத்தி தன் உயிருக்கு அஞ்சினால் அவளது குடும்பம் அழிவடையும். காதலால் பீடிக்கப்பட்ட பெண் தன் குலத்தின் குறையைக் காணமாட்டாள். காதலால் பீடிக்கப்பட்டவளுக்கு அவளுக்கு இன்பம் தருபவையே பிடித்தமானவையாகின்றன.(90) அவர்கள் எப்போதும் கவனமாக அவற்றையே நாடுகின்றனர். இதுவே சாத்திரங்களின் இசைவாணையாகும்.(91) ஓ! நீள்விழியாளே, உன்னால் நிச்சயம் துவாரகைக்குள் நுழைய இயலும். நான் மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன். என் காதலரை இங்கே கொண்டு வருவாயாக" என்றாள்.(92)

சித்திரலேகை, "உன் அமுதமொழியால் நான் நிறைவடைந்தேன். உன் இனிய சொற்களால் உன் பணிக்கான ஏற்பாடுகளை நீ செய்துவிட்டாய்.(93) இதோ நான் துவாராகா நகரத்திற்குப் புறப்படுகிறேன். இன்றே அந்நகருக்குள் புகுந்து விருஷ்ணி குலத்தில் பிறந்த உன் கணவன் அநிருத்தனைக் கொண்டு வருவேன்" என்றாள்.(94)

மனோவேகம் கொண்ட சித்திரலேகை, தானவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அந்த உண்மையான சொற்களைச் சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தாள்.(95) அவள், தன் தோழிக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்காகக் கிருஷ்ணனால் ஆளப்பட்ட துவாரகையை மூன்றாம் முஹுர்த்தத்தில் அடைந்தாள்.(96) கைலாச மலைச் சிகரங்களைப் போன்ற பெரும் மாளிகைகளால் அலங்கரிக்கப்பட்ட துவாரகையை வானில் நிலைத்திருக்கும் நட்சத்திரத்தைப் போல அங்கே அவள் கண்டாள்" என்றார் {வைசம்பாயனர்}.(97,98)

விஷ்ணு பர்வம் பகுதி – 175 – 119ல் உள்ள சுலோகங்கள் : 98
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்