Saturday, 13 February 2021

உமையிடம் உஷை பெற்ற வரம் | விஷ்ணு பர்வம் பகுதி – 174 – 118

(பார்வத்யா꞉ ஸகாஷாத் உஷாயா வரளாப)

Bhava's sport and Vana's daughter obtains a boon | Vishnu-Parva-Chapter-174-118 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : அப்சரஸ் சித்திலேகை; பாணனின் மகள் உஷை; பார்வதி தேவியின் அருள்; உஷையின் காமம்...


Vana's daughter Usha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒரு காலத்தில் ஓர் அழகிய ஆற்றங்கரையில் தலைவன் பவன் {உமாதேவியுடன் உலவியபடி} விளையாடிக் கொண்டிருந்தான்.(1) அனைத்துப் பருவகாலங்களும் செழிக்கும் அந்த அழகிய காட்டில் அனைத்துப் பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான அப்சரஸ்களுடன் சேர்ந்து கந்தர்வர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.(2) பாரிஜாத, சந்தானக மலர்களின் நறுமணத்துடன் கூடிய வானத்தைப் போல அந்த ஆற்றங்கரை மணங்கமழ்ந்து கொண்டிருந்தது.(3)

புல்லாங்குழல், வீணை, மிருதங்க, பணவ இசைகளுடன் அப்ரசஸ்கள் பாடிக் கொண்டிருப்பதைச் சங்கரன் கேட்டான்.(4) அழகிய மேனியனும், தேவதேவனும், வரங்களை அளிப்பவனும், செவ்வாடை சூடி மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனுமான ஹரனையும், உமையையும் மதிக்கும் வகையில் அந்த அழகிய அப்ரசஸ்கள், சூதர்களையும், மாகதர்களையும் போலப் பல்வேறு பாடல்களைப் பாடி அவர்களை நிறைவடையச் செய்தனர்.(5,6) முன்னணி அப்சரஸான சித்திரலேகை, அந்த நேரத்தில் தேவியின் {உமையின்} வடிவை ஏற்றுப் பவனை நிறைவடையச் செய்தாள். தேவி {உமை} அதைக் கண்டு சிரித்தாள். ஈசானனை அவள் மகிழ்விப்பதைக் கண்டு அப்சரஸ்கள் பிறரும் சிரித்தனர்.(7) பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், தெய்வீகர்களுமான பவனின் தொண்டர்கள் {கணங்கள்}, தேவியின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, பல்வேறு வடிவங்களை ஏற்று அனைத்துப் பக்கங்களிலும் விளையாடத் தொடங்கினர்.(8) மகிழ்ச்சியுடன் கூடிய அந்தப் பார்ஷதர்கள், அடையாளங்களுடன் கூடிய மஹாதேவனின் வடிவை ஏற்றும் விளையாடத் தொடங்கினர்.(9) அப்சரஸ்களும் தேவியின் வடிவை ஏற்று அங்கே விளையாடினர். அதைக் கண்டு தேவி சிரித்தாள்.(10) அனைத்துப் பக்கங்களிலும் சிரிப்பொலிகள் எழுந்தன, பவனும் பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(11)

உஷை என்ற பெயரைக் கொண்ட பாணனின் அழகிய மகள், பார்வதியுடன் அந்த முக்கண் தேவன் ஆற்றில் விளையாடிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகக் கண்டாள்.(12) பனிரெண்டு சூரியர்களின் பிரகாசத்தைக் கொண்ட மஹாதேவன், பல்வேறு வடிவங்களை ஏற்றுத் தேவியை மகிழ்விப்பதற்காக விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட உஷை,(13) தன் மனத்திற்குள், "நற்பேறு பெற்ற பெண்டிர் இவ்வாறு {இந்த தேவியைப் போல} தங்கள் தங்கள் கணவர்களுடன் விளையாடுவார்கள்" என்று நினைத்தாள்.(14)

அவள் {உஷை}, தன் மனத்தின் தீர்மானத்தைத் தன் தோழியரிடம் சொன்னாள். உஷையின் விருப்பத்தை அறிந்த பார்வதி, மகிழ்ச்சியுடன் மெதுவாக,(15) "ஓ! உஷா, பகைவரைக் கொல்பவரான தலைவர் சங்கரருடன் நான் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலவே நீயும் விரைவில் உன் கணவருடன் இன்புற்றிருப்பாய்" என்றாள்.(16)

தேவியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், கவலையில் பீடிக்கப்பட்டிருந்த கண்களுடன் கூடிய உஷை தன் மனத்திற்குள், "நான் எப்போது என் கணவருடன் விளையாடுவேன்?" என்று நினைத்தாள்.(17)

அப்போது ஹைமவதி தேவி {உமை} புன்னகைத்தவாறே, "ஓ! உஷா, உன் கணவனுடன் எப்போது நீ சேர்வாய் என்பதைக் கேட்பாயாக.(18) வைசாக மாதத்தின் பனிரெண்டாம் நாள்[1] இரவில் உன் அரண்மனை மாடியில் உறங்கிக் கொண்டிருக்கையில் நீ கனவில் காண்பவனே உனது கணவனாவான்" என்றாள்.(19)

[1] சித்திரைமாத வளர்பிறை துவாதசி. இங்கே வளர்பிறை என்பது குறிப்பிடப்படவில்லையெனினும், அடுத்த அத்யாயத்தில் இது வளர்பிறை என்று குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு சொல்லப்பட்டதும், தோழியரால் சூழப்பட்ட அந்தத் தைத்தியக் கன்னிகை {உஷை}, மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டே அந்த இடத்தைவிட்டுச் சென்றாள்.(20) அப்போது இன்பத்தில் விரிந்த விழிகளுடன் கூடிய உஷையை அவளது தோழியர் கேலி செய்யத் தொடங்கினர்.(21) யக்ஷர்கள், நாகர்கள், தைத்தியர்கள் ஆகியோரின் மகள்களும், கின்னரிகளும், அப்சரஸ்களும் உஷையின் தோழிகளாக இருந்தனர்.(22) அவர்கள் அவளைப் பரிகசித்துவிட்டு, "ஓ அழகியே பெண்ணே, தேவியால் சொல்லப்பட்டது போல நீ விரைவில் உன் கணவனை அடைவாய்.(23) நீ விரும்பியவாறே உயர்குடியில் பிறந்த அழகனை நீ கணவனாக அடைவாய். தேவியின் சொற்கள் ஒருபோதும் பொய்க்காது" என்றனர்.(24)

உஷை தன் தோழிகள் சொன்ன சொற்கள் அனைத்தையும் மதித்து, தேவியால் வழங்கப்பட்ட ஆசை நிறைவேறும் எதிர்பார்ப்பில் தன் நாட்களைக் கழிக்கத் தொடங்கினாள்.(25) அங்கே வந்திருந்த பேரற்புதம் நிறைந்த பெண்கள் உமையுடன் சில நாட்கள் மகிழ்ச்சியாக விளையாடிய பிறகு, தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர். தேவியும் மறைந்தாள்.(26) பெண்களில் சிலர் குதிரையிலும், சிலர் பல்லக்குகளிலும், சிலர் யானைகளிலும் {தங்கள் தங்கள்} நகரத்திற்குள் நுழைந்தனர். சிலர் வானத்தில் எழுந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}[2].(27)

[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த இடத்தோடு 28 என்ற ஸ்லோக எண்ணுடன் இந்தப் பகுதி நிறைவடைகிறது. சித்திரசாலை பதிப்பிலும், பிபேக்திப்ராய், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்கார் ஆகியோரின் பதிப்புகளிலும் இந்தப் பகுதியில் இன்னும் அதிகச் செய்திகள் இருக்கின்றன. அடைப்புக்குறிக்குள் இருக்கும் பின் வரும் பகுதி சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்த்து அளிக்கப்படுகிறது.

{வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ! தலைவா, அதுமுதல் அந்தத் தேவியின் {உமையின்} சொற்களை நினைவுகூர்ந்தும், {வருங்காலக்} கணவனைக் குறித்து நினைத்துக் கொண்டும் இந்தத் தேவி {உஷை} ஆசையால் பீடிக்கப்பட்டிருந்தாள்.(28) அவள் {உஷை} இரவில் உறங்கவும் இல்லை, பகலில் உண்ணவும் இல்லை. மன்னனின் {பாணனின்} மகள் {வருங்காலக்} கணவனை நினைத்து இவ்வாறு வருந்திக் கொண்டிருந்தாள்.(29) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இந்த ஆசையால் குழப்பமும், வேதனையும் அடைந்த அந்தப் பெண் (சந்திரக் கதிர்களால் ஆறுதலடையாதவளாக} வானத்து நிலவை அவமதித்து (மேனியைக் குளிர்விப்பதற்கான) சந்தனக் குழம்பைப் பயன்படுத்தாதிருந்தாள்.(30) காதற்பிணியால் பீடிக்கப்பட்டு விருப்பமற்றவளாக இருந்த அவளை அவளது தோழியர் கவனித்துக் கொண்டனர். {அவர்கள் அவளது} மார்பில் சந்தனக்குழம்பைப் பூசினாலும் அவளது இதயம் எரிந்து கொண்டிருந்தது.(31) கன்னங்கள் நிறம் மங்கி வெளுத்தன. அவளது கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. உறக்கமும், உடலில் உணர்வின்மையும் வளர்ந்தன.(32) ஆசை நெருப்பின் வேதனையில் இருந்த அவளது மார்பில் அவளது தோழியர் குளிர்ந்த தாமரைத் தண்டின் பொடிகளை மீண்டும் மீண்டும் பூசினர்.(33)

விசிறியால் அவளுக்கு வீசிவிட்ட அவளது தோழியர் மீண்டும் மீண்டும் அவளிடம்,(34) "ஓ! அழகிய பெண்ணே, உன் மேனியில் இவ்வளவு வேதனையை உண்டாக்கும் பிணியென்ன? ஓ! தேவி, நீ விரும்புவதென்ன? ஓ! அழகிய முகத்தைக் கொண்டவளே, எங்களுக்குச் சொல்வாயாக.(35) ஓ! மனத்துக்கு இனிமை தருபவளே, இந்தக் கவலை எங்கிருந்து வந்தது? உன் மனத்தின் ஆசையை வெளிப்படுத்தும் சொற்களில் இந்தப் பறவைகள் {மைனாக்கள்} பேசுகின்றன.(36) ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, அடர்நீலக் கிளிகளும் ஆண்களைப் போலப் பேசுகின்றன. மகிழ்ச்சியை உண்டாக்கும் இந்தச் சொற்களை நீ பேசாதிருப்பது ஏன்?(37) உன் தந்தை, தேவர்களாலும் வெல்லப்பட முடியாத பெரும் வீரர். ஓ! அழகிய நிறத்தைக் கொண்டவளே, பூமியில் ஒருபோதும் எவராலும் அவரை எதிர்க்க இயலாது?(38) பலியின் மகனான பாணன், எளிதில் மீற முடியாத பெருவீரர் ஆவார். அவர் அமராவதியை வென்று இந்தக் குருதிநகரத்தை {சோணிதபுரத்தை} நிறுவினார். திரிசூலபாணியும், தலைவர்களில் பெரியவனுமான தலைவன் சிவன் இங்கே நிறுவப்பட்டிருக்கிறான் {இங்கே மஹேஷ்வரன் சூலமேந்தி நிற்கிறான்}.(39) ஓ உஷா, பாணன் குறித்துப் பெருந்தலைவனான அந்தச் சிவன் சொன்னதைக் கேட்பாயாக. அந்த ஹரன், மலைமகளிடம் {உமையிடம்}, "இவன் என் மகன் என்று அறிவாயாக" என்று சொன்னான்.(40) உன் கவலைதான் என்ன? குளிர் காலத் தாமரை இலையின் பனித்துளி போல உன் முகமும், மூக்கு நுனியும் மிளிரவில்லையே.(41) முழுநிலவைப் போன்ற உன் அழகிய முகத்தின் நிறம் மங்கியதால் மேகங்களின் மத்தியில் உள்ள நிலவைப் போல அது மிளிராமல் இருக்கும் காரணத்தை எங்களுக்குச் சொல்வாயாக.(42) ஓ! பெண்ணே, நீயோ ஆழமான பெருமூச்சுகளை விடுகிறாய். எதனிலும் விருப்பங்கொள்ளாதிருக்கிறாய். நீ விரும்பும் இந்தத் தெய்வீக உணவையாவது உண்பாயாக.(43) முன்பெல்லாம் நீ வெற்றிலை மெல்ல விரும்புவாயே. இப்போது மெல்வதில்லையே ஏன்? பிறருக்கு அரிதாகக் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் இங்கே ஏராளமாக இருக்கின்றன.(44) ஓ! தேவி, எழுவாயாக. உணவை உண்டு, உன் மேனியின் வேதனை குறித்து எங்களுக்குச் சொல்வாயாக" என்று கேட்டனர்.

உஷை தன் வீட்டில் உண்டான இந்தக் கொந்தளிப்பைக் கேட்டாள்.(45) பணிப்பெண்களும் அவளது அன்னையின் முன்பு இது குறித்துப் பேசும் வகையில் {உஷையின் தாயிடம்}, "ஓ! தேவி, நல்ல பெண்ணான இந்த மன்னன் மகள் {உஷை}, வீடு திரும்பியதில் இருந்து,(46) அதாவது நீர் விளையாட்டுக்குப் பிறகு, ஓர் ஊமையைப் போல நடந்து கொள்கிறாள். ஓ! தேவி, பணிப்பெண்களான நாங்கள் இது குறித்து உனக்குச் சொல்கிறோம்.(47) இந்தக் குழப்பம் ஏன்? இந்த மௌனம் ஏன்? இந்த உணர்வின்மை ஏன்? இந்தக் கவலை ஏன்? ஓ! தேவி, இது குறித்துச் சிந்தித்து, இந்தச் சிரமத்திலிருந்து அவள் விடுபட மருத்துவர்களைக் கேட்பாயாக.(48) ஓ! தேவி, ஓ! அழகிய முகத்தைக் கொண்டவளே, ஸ்ரீஷ மலரை {அனிச்ச மலரைப்} போன்ற அவளது அழகிய மென்னுடலால் இந்தப் பிணியின் சுமையை எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்?" என்று கேட்டனர்.(49)

அன்னத்தின் நடையைக் கொண்ட அந்தத் தேவி {உஷையின் அன்னை}, இந்தச் சொற்களைக் கேட்டதும், உஷை இருக்குமிடத்திற்கு வந்து அவளிடம், "இந்தச் சிரமத் தோற்றம் ஏன்?" என்று கேட்டு,(50) இளந்தளிர்களைப் போன்ற மென்மையான உஷையின் மென்கரத்தைப் பற்றினாள். அந்த அழகிய பெண், அவளது விரல்களில் சுடக்கிட்டபடியே,(51) "ஓ! மங்கலப் பெண்ணே {கல்யாணி}, உனக்கு நேர்ந்தது என்ன? உன் கவலை என்ன? இங்கே மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள். உன் தேவையென்ன என்பதை அவர்கள் கேட்கிறார்கள்" என்றாள்.(52)

அப்போது அந்த மருத்துவர்கள், "மன்னனின் மகள், தன் தோழியருடன் நீர்விளையாடச் சென்றாள். அங்கே பார்வதி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அதன் பிறகே இந்தப் பலவீனம் இவளுக்கு நேர்ந்தது.(53) இந்தப் பலவீனத்தின் காரணமாகவே உறக்கமும், உணர்வின்மையும் இவளுக்கு நேர்ந்தன. இதில் அஞ்சுவதற்கு ஏதுமில்லை" என்றனர்.(54)

அதற்குத் தேவி {உஷையின் அன்னை}, "ஓ! மருத்துவர்களே, ஓ! அமைச்சர்களே, உறைபணியுடன் இவளது மார்பில் பூசப்பட்ட சந்தனக் குழம்பு ஏன் வேகமாகக் குமிழ்கிறது {கொதித்துப் பொங்குகிறது}?(55) {இவளது மேனி} அதிக வெப்பமாக இருக்கிறது, அதிகம் வியர்க்கவும் செய்கிறது. பசியோ, தாகமோ இல்லை. இவள் புலம்பிக் கொண்டே இருக்கிறாள். தயவு செய்து இதைச் சரிபார்த்து உறுதியாகச் சொல்லுங்கள்" என்று கேட்டாள்.(56)

மருத்துவர்கள், "ஓ! தேவி, மன்னனின் மகளும், அழகில் ஒப்பற்றவளுமான இந்த அழகிய பெண், மற்ற பெண்களுடன் சேர்ந்து விளையாடச் சென்ற இடத்தில் தலைவனின் (சிவனின்) முன்னிலையை அடைந்தாள்.(57) அவர்கள் {அந்தப் பெண்கள்} இவளை கண்டிருக்கலாம் {கண் பட்டிருக்கலாம் / திருஷ்டி பட்டிருக்கலாம்}. அது முதல் இந்தப் பலவீனம் உன் மகளைப் பீடித்திருக்கலாம்.(58) பாதுகாப்பைத் தரும் புனித சொற்களை {ரக்ஷாமந்திரங்களை} ஓதி, இந்த இளம்பெண்ணின் பாதுகாப்புக்காக இவள் மேனியில் மஞ்சள் கடுகை {அருகுகளைத்} தூவி நீர் தெளித்தால் வேதனையில் இருந்து விடுபடுவாள்" என்றனர். மருத்துவர்கள் அனைவரும் இதைச் சொல்லிவிட்டு மன்னனின் வீட்டை விட்டு அகன்றனர்.(59)

அவர்கள் அனைவரும் ஆசையின் {காமத்தின்} காரணமாகவே இந்தப் பலவீனம் ஏற்பட்டது என்பதை மீண்டும் குறிப்பிட்டனர். நாணத்துடன் கூடியவளும், அழகிய உடலைக் கொண்டவளுமான அந்த அழகிய பெண் (உஷை),(60) தன் அன்னையால் இவ்வாறு கேட்கப்பட்டதும், சிறிது நேரம் அழுத பிறகு, "ஓ! தாயே, எனக்குப் பசியேதும் இல்லை. தினமும் இதுபோல் உரையாடுவதையோ, உண்பதையோ நான் விரும்பவில்லை.(61) எந்த விழாவையும் நான் விரும்பவில்லை. என் இதயம் எரிகிறது. தயவு செய்து நான் சொல்வதைக் கேட்பாயாக" என்றாள்.

அழகிய முகத்துடன் கூடிய அந்த அழகிய பெண் இதைச் சொல்லிவிட்டு நிறுத்தினாள்.(62) பெண்கள் அனைவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர். அந்தப் பெண்கள் அனைவரும் "{பெண்களின்} இளமை எப்போதும் நாணத்துடன் கூடியதே.(63) மன்னனின் மகளான இந்தக் கன்னிகை கணவனை அடையத் தகுந்தவளாக இருக்கிறாள். சொல்வதற்கு வேறென்ன? தந்தை தாயின் ஆசியுடன் இவள் சிறந்த, தகுந்த கணவனை அடைவாளாக" என்றனர்" என்றார் {வைசம்பாயனர்}[3].(64)}

[3] 28 முதல் 64ம் ஸ்லோகம் வரையுள்ள செய்திகள் சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு இங்கே அளிக்கப்பட்டிருக்கின்றன.

விஷ்ணு பர்வம் பகுதி – 174 – 118ல் உள்ள சுலோகங்கள் : 64
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்