(அநிருத்தஸ்யோஷயா ஸஹ காந்தர்வேந விவாஹோ பாணதத்ஸைந்யாப்யாம் யுத்தம் ச)
Chitralekha unites Aniruddha with Usha; Anirudda's fight with Vana's Soldiers | Vishnu-Parva-Chapter-176-120 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : தாமஸ வித்தையால் அநிருத்தனை உஷையிடம் கொண்டு வந்த சித்ரலேகை; பாணனுக்கும், அநிருத்தனுக்கும் இடையில் நடந்த போர்; துவாரகைக்கு வந்த நாரதர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சித்திரலேகை துவாரகா நகரை வந்தடைந்து, வாசுதேவனின் அரண்மனையின் அருகில் இருந்து கொண்டு, பாணன் நகருக்கு அநிருத்தன் வந்த வழிமுறையை அறிந்து கொள்ளும் வழிவகைகள் குறித்துச் சிந்தித்தாள்.(1) அவள் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, நீரில் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நாரத முனிவரை அவள் கண்டாள்.(2) சித்திரலேகை அவரைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கண்கள் விரிய அவரை அணுகினாள். அவள் அவரை வணங்கிவிட்டு அவரது முன்னிலையில் தலைவணங்கி நின்றாள்.(3)
நாரதர், சித்திரலேகைக்கு ஆசிகூறிவிட்டு, "நீ இங்கே ஏன் வந்திருக்கிறாய் என்பதை உண்மையாக நான் அறிய விரும்புகிறேன்" என்று கேட்டார்.(4)
இதைக் கேட்ட சித்திரலேகை, உலகால் வழிபடப்படும் தெய்வீக முனிவரான நாரதரிடம் கை கூப்பியபடியே,(5) "ஓ! மதிப்புமிக்க ஐயா, கேட்பீராக. நான் என்னுடன் அநிருத்தனை அழைத்துச் செல்லும் தூதராக இங்கே வந்திருக்கிறேன். ஓ! முனிவரே, அவனை ஏன் என்னுடன் அழைத்துச் செல்லப் போகிறேன் என்பது குறித்துக் கேட்பீராக.(6) சோணிதபுர நகரத்தில் பாணன் என்ற பெயரில் ஒரு பேரசுரன் வாழ்கிறான். அவனுக்கு உஷை என்ற பெயரில் பேரழகுடன் திகழும் ஒரு பெண்ணிருக்கிறாள்.(7) அவள், மனிதர்களில் சிறந்தவனும், பிரத்யும்னன் மகனுமான அவனை {அநிருத்தனை}, {பார்வதி} தேவி கொடுத்த வரத்தின் மூலம் தன் கணவனாகத் தேர்ந்தெடுத்தாள்.(8) அவனை என்னுடன் {சோணிதபுரத்திற்கு} அழைத்துச் செல்லவே நான் இங்கே வந்திருக்கிறேன். என் வெற்றிக்கு வழிவகுக்கும் செயலைச் செய்வீராக.(9) ஓ! பெரும் முனிவரே, கிருஷ்ணருக்கும், பாணனுக்கும் இடையில் உண்மையில் ஒரு போர் நிகழும் என்பதால், சோணிதபுரத்திற்கு அநிருத்தனை நான் அழைத்துச் சென்ற பிறகு, அந்தச் செய்தியை செந்தாமரைக் கண்ணனான கேசவனிடம் தெரிவிப்பீராக.(10) போரில் பேரசுரன் பாணன் பெருஞ்சக்திவாய்ந்தவன் என்பதால் அநிருத்தனால் நிச்சயம் அவனை வீழ்த்த இயலாது. பெருந்தோள்களைக் கொண்ட கேசவர், ஆயிரங்கரங்களைக் கொண்ட அந்த அசுரனை வீழ்த்துவார்.(11) நான் அநிருத்தனை அபகரித்துச் செல்வது எவ்வாறு? கேசவர் உண்மையை அறிவது எவ்வாறு?(12) ஓ! ஐயா, நீர் என்னிடம் நிறைவடைந்தால், கிருஷ்ணரிடம் நான் அச்சங்கொள்ளத் தேவையில்லை.(13) பெருங்கரங்களைக் கொண்ட கேசவர் கோபமடைந்தால் மூவுலகங்களையும் எரித்துவிடுவார்; பேரனுக்காக வருந்தும் கேசவர் சாபத்தால் என்னை எரித்துவிடாதபடிக்கு வேண்டியதைச் செய்வீராக.(14) ஓ! தெய்வீக முனிவரே, உஷை தன் கணவனை அடையவும், நான் எதற்கும் அஞ்சாமல் இருக்கவும் வேண்டிய வழிமுறைகளை நீர் சொல்வீராக" என்று கேட்டாள்.(15)
சித்திரலேகையால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தெய்வீகரான நாரதர் பின்வரும் இனிய சொற்களில் அவளிடம், "நான் உனக்குப் பாதுகாப்பை வழங்குகிறேன். அச்சம் விலகி நான் சொல்வதைக் கேட்பாயாக.(16) ஓ! இனிய புன்னகையைக் கொண்டவளே, கன்னியரின் அந்தப்புரத்திற்குள் அநிருத்தனை நீ அபகரித்துச் சென்ற பிறகு மோதல் ஏதும் ஏற்பட்டால் என்னை நினைத்துக் கொள்வாயாக.(17) ஓ! அழகிய பெண்ணே, போர்களைக் காண்பதில் பெரும் விருப்பம் கொண்டவன் நான், அவற்றால் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.(18) கடுந்தவங்களைப் பயின்று நான் தேர்ச்சியடைந்ததும், உலகங்கள் அனைத்தையும் மயங்கச் செய்வதுமான இந்தத் தாமஸ வித்தையை ஏற்றுக் கொள்வாயாக" என்றார்.(19)
அந்தப் பெரும் முனிவர் இதைச் சொன்னதும், வேகமான மனமுடைய சித்திரலேகை, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு,(20) உயரான்ம நாரத முனிவரை வணங்கிவிட்டு, அநிருத்தனின் வீட்டைத் தேடி வானத்தில் புறப்பட்டாள்.(21) துவாராவதியின் மத்திய பகுதிக்குச் சென்றதும் அவள் காமனின் {பிரத்யும்னனின்} அழகிய அரண்மனையைக் கண்டாள். அதன் அருகே அவள் அநிருத்தனின் அரண்மனையையும் கண்டாள்.(22) பொன்னாலான பீடங்களையும், பொன் மற்றும் வைடூரியங்களாலான தூண்களையும் அது கொண்டிருந்தது. மலர்மாலைகளாலும், நீர்நிறைந்த குடுவைகளாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(23) மாடியில் மயில்களின் அழகிய தோற்றங்களையும், ரத்தினங்களாலும், பவளங்களாலும் ஆன தெய்வீக மாளிகைகளின் வரிசைகளையும் கொண்டிருந்த அது தேவ கந்தர்வர்களின் இசையால் நிறைந்திருந்தது.(24) பிரத்யும்னன் மகிழ்ச்சியாக வாழும் துவாரகையின் மத்திய பகுதியில் உள்ள அந்தப் பெரும் மாளிகையைக் கண்ட சித்திரலேகைத் திடீரென அங்கே அநிருத்தனைக் கண்டாள்.(25) விண்மீன்களின் மத்தியில் ஒளிரும் சந்திரனைப் போலப் பேரழகிகளின் மத்தியில் விளையாடிக் கொண்டிருக்கும் காமனின் மகனை {அநிருத்தனை} அங்கே கண்டாள்.(26) நூற்றுக்கணக்கான பெண்கள் அவனைக் கவனித்துக் கொண்டனர். மிகச்சிறந்த அழகிய இருக்கையில் குபேரனைப் போல அமர்ந்திருந்த அநிருத்தன் மாத்விக மதுவைப் பருகிக் கொண்டிருந்தான். அந்தக் காலத்திற்கு ஏற்றவகையில் இனிய பாடல்கள் அங்கே பாடப்பட்டன.(27,28) ஆனால் அநிருத்தனின் மனம் எதனிலும் பற்றுக் கொள்ளாமல் இருந்தது. நற்குணங்கள் பொருந்திய அழகிய பெண்கள் பலர் அங்கே ஆடிக் கொண்டிருந்தாலும்,(29) அவர்களால் மகிழ்ச்சியடைபவனாகச் சித்திரலேகை அவனைக் காணவில்லை. அந்நேரத்தில் அவனது மனம் இன்பத்தில் நாட்டம் கொள்ளாதிருந்தது, மது பருகுவதிலும் அவன் விருப்பமின்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.(30)
அப்போது, "இவனது மனத்தில் நிச்சயம் அந்தக் கனவு சுழன்று கொண்டிருக்கிறது" என்று நினைத்த சித்திரலேகைத் தன் கவலையைக் கைவிட்டாள்.(31)
அந்த நுண்ணறிவுமிக்கச் சித்திரலேகை, அழகிய பெண்களின் மத்தியில் இந்திரனின் கொடிமரம் போல இருந்த அநிருத்தனைக் கண்டு,(32) "இப்பணியை நான் எவ்வாறு நிறைவேற்றப் போகிறேன்? நமக்கு நன்மை நேர்வது எவ்வாறு?" என்று தன் மனத்தில் சிந்திக்கத் தொடங்கினாள். அழகிய கண்களைக் கொண்டவளும், சிறப்புமிக்கவளுமான அந்தச் சித்திரலேகை, அநிருத்தனை அவனது மாளிகையில் பெண்களின் மத்தியில் கண்டு,(33) "என்னுடைய தாமஸ மாயையின் மூலம் அநிருத்தனைத் தவிர அனைவரையும் மயங்கச் செய்யப் போகிறேன்" என்று நினைத்தாள்.(34)
அதன்பிறகு அந்த மாளிகைக்கு மேலே வானத்தில் தன்னை மறைத்துக் கொண்ட அவள், {அவனுக்கு தெய்வீகப் பார்வையை அளித்து, அவனுக்கு மட்டும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு} இனிய சொற்களில் அந்தக் காமனின் மகனிடம் {அநிருத்தனிடம்},(35) "ஓ! வீரா, ஓ! யதுவின் வழித்தோன்றலே, நீ நலமாக இருக்கிறாயா?(36) பகலையும், மாலை வேளையையும் உன்னால் நன்றாகக் கழிக்க முடிந்ததா? ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, ரதியின் {மாயாவதியின்} மகனே, நான் உன்னிடம் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(37) என் தோழியான உஷை குறித்து உன்னிடம் தெரிவிக்கவே இங்கே நான் வந்துள்ளேன். ஓ! வீரா, உன்னைக் கனவில் கண்டு மணந்து கொண்டவளும், இதயத்தில் உன்னை விரும்புபவளுமான உஷையால் நான் உன்னிடம் அனுப்பப்பட்டேன். ஓ! மென்மையானவனே, அந்தக் கன்னிகை உன்னைக் காண்பதற்காக மீண்டும் மீண்டும் அழுது விம்மிக் கொண்டும், பெருமூச்சு விட்டுக் கொண்டும் இருக்கிறாள். ஓ! வீரா, நீ அங்கே சென்றால் அவள் உயிருடன் இருப்பாள்.(38-40) உண்மையில் நீ இல்லையென்றால் அவள் இறந்துவிடுவாள். ஓ! யதுவின் வழித்தோன்றலே, ஆயிரக்கணக்கான பெண்கள் உன் இதயத்தை ஆண்டாலும்,(41) இதயத்தால் உன்னை விரும்பும் அவளது கைகளை நீ பற்ற வேண்டும். தேவி அவளுக்கு வரம் அளிக்கும்போது உன்னையே அவளது கணவனாகச் சுட்டிக் காட்டினாள்.(42) நான் உன் ஓவியத்தை அவளிடம் கொடுத்தேன், அவள் அதைத் தன் மார்போடு அணைத்து வைத்திருக்கிறாள். அந்த ஓவியத்தைத் தன் மேனியில் வைத்துக் கொண்டே உன்னைக் காணும் நம்பிக்கையில் அவள் வாழ்ந்து வருகிறாள். ஓ! யதுக்களில் முதன்மையானவனே, அவளது விருப்பத்தை அன்புடன் நிறைவேற்றுவாயாக.(43) ஓ! யதுவின் வழித்தோன்றலே, நானும், உஷையும் உன்னிடம் தலைவணங்குகிறோம். ஓ! வீரா, அவளது பிறப்பு, குலம், {தோற்றம்},(44) குணம், இயல்பு, அவளது தந்தையின் வரலாறு ஆகியவற்றைச் சொல்கிறேன் கேட்பாயாக. விரோசனன் பேரனும்,(45) சோணித நகரத்தில் வாழ்பவனும், வீரனுமான அசுர மன்னன் பாணனின் மகள் {உஷை} உன் கையை நாடுகிறாள். அவளது மனம் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது, அவளது உயிர் உன்னைச் சார்ந்திருக்கிறது.(46) உன்னை அவளது கணவனாகத் தேவியே உண்மையில் தேர்ந்தெடுத்தாள். ஓ! காமனின் மகனே, அந்த அழகிய கன்னிகை, உன்னுடன் சேரும் நம்பிக்கையிலேயே உயிர் வாழ்ந்து வருகிறாள்" என்றாள் {சித்திரலேகை}.(47)
சித்திரலேகையின் சொற்களைக் கேட்ட அநிருத்தன், "ஓ! அழகிய பெண்ணே, நான் அவளைக் கனவில் கண்டது எவ்வாறு என்பதைக் கேட்பாயாக.(48) அவளது அழகு, அழுகை, அசைவுகள் ஆகியவற்றைப் பகலும் இரவும் நினைத்தவாறே இருக்கிறேன். ஓ! சித்திரலேகா, நான் என் காதலியைக் காண விரும்புகிறேன்.(49) நான் உன்னுடைய ஆதரவுக்குத் தகுந்தவனாக இருந்தால், நீ என்னுடன் நட்பு கொள்ள விரும்பினால், என்னை அங்கே அழைத்துச் செல்வாயாக.(50) {என் ஆசை நிறைவேறாமல் நான் கவலையால் எரிந்து கொண்டிருக்கிறேன். நான் என் காதலியைச் சந்திக்க விரும்புகிறேன். நான் உன்னிடம் கைகூப்பி நிற்கிறேன். என் கனவை மெய்யாக்குவாயாக}" என்றான்.(51)
தெய்வீகக் காரிகையரில் முதன்மையான அப்சரஸ் சித்திரலேகை மகிழ்ச்சியுடன், "என் தோழி விரும்பியது இன்று நிறைவேறப் போகிறது" என்றாள்".(52)
வைசம்பாயனர், "அநிருத்தன் விருப்பத்தை அறிந்த நுண்ணறிவுமிக்கச் சித்திரலேகை, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்னாள்.(53) {பிறகு அவள் அந்த அழகிய மாளிகையில் பெண்களுக்கு மத்தியில் இருந்து அவனை மறையச் செய்தாள். அவள், போர்த்திறனில் செருக்குக் கொண்ட அநிருத்தனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வானத்தில் உயர்ந்தாள்}.(54) {மனோ வேகம் கொண்ட சித்திரலேகை} சித்தர்களும், சாரணர்களும் செல்லும் வழியைக் கடந்து திடீரெனச் சோணிதபுர நகரத்திற்குள் நுழைந்தாள்.(55) விரும்பிய வடிவங்களை ஏற்கவல்ல சித்திரலேகை, {மற்றவர் பார்வையில் இருந்து அவனை மறைத்து} தன் மாயா சக்திகளைப் பயன்படுத்தி உஷை இருந்த இடத்திற்கு மறைவாக வந்து,(56) அழகிய உடை அணிந்தவனும், பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், கந்தர்பனைப் போன்ற அழகனுமான வீரன் அநிருத்தனை அழைத்துச் சென்று உஷையிடம் காட்டினாள்.(57) தன் தோழியின் மூலம் அந்த மாளிகையில் அவனைக் கண்ட உஷை ஆச்சரியத்தால் நிறைந்தவளாக அவனைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றாள்.(58) {உண்மைப் பொருள்களைப் புரிந்து கொள்வதில் திறன்மிக்கவளான} உஷை, தன் காதலனைக் கண்ட மகிழ்ச்சியால் விரிந்த கண்களுடன் கூடியவளாக, தன் அறையில் அந்த யது இளவரசனுக்கு அர்க்கியம் கொடுத்து வழிபட்டாள்.(59)
அதன்பிறகு, இனிய சொற்களுடன் சித்திரலேகையை வரவேற்ற அந்தக் கன்னிகை {உஷை}, அச்சத்துடன் விரைவாக அவளிடம்,(60) "ஓ! பணியில் நுண்ணறிவுமிக்கவளே, இந்தக் காரியத்தை எவ்வாறு இரகசியமாகச் செய்வது? தனிமையில் செய்யப்பட்டால் அனைத்தும் நன்றாக இருக்கும். வெளிப்படையானால் நம் உயிர் ஆபத்துக்குள்ளாகும்" என்றாள்.(61)
{ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த உஷை ஒரு தனிமையான இடத்தில் இவ்வாறு பேசினாள். அவள் தன் காதலனுடன் சேர்ந்தவளாக அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தாள்}.(62)
இதைக் கேட்ட சித்திரலேகை, "ஓ! தோழி, இக்காரியத்தில் நான் சொல்வதைக் கேள். வருங்காலத்துக்குத் தேவையான முன்னறிவானது ஆண்மையையே அழித்துவிடும் {முயற்சியால் ஒருவன் விதியை வெல்லலாம்}.(63) தேவியின் அருளால் அனைத்தும் உனக்கு ஆதரவாக மாறும். அதையும் தவிர, நாம் இக்காரியத்தைக் கவனமாகவும், ரகசியமாகவும் செய்தால் எவராலும் இதை அறிய முடியாது" என்றாள்.(64)
இவ்வாறு தன் தோழியால் சொல்லப்பட்டதும் ஆறுதலடைந்த அவள், "{நீ சொல்வது சரிதான்}, அவ்வாறே ஆகட்டும்" என்றாள். அதன் பிறகு, அநிருத்தனிடம்,(65) "காணக்கிடைக்காதவரென எவருக்காகத் துயருற்றிருந்தேனோ, கனவில் கள்வனாகச் செயல்பட்டவரும், காதலராக என்னால் நாடப்பட்டவருமான அந்த நற்பேறுபெற்றவரை என் நல்லூழால் காண்கிறேன்.(66) ஓ! வீரரே, பெண்களின் இதயம் உண்மையில் மிக மென்மையானது என்பதால் "யாவும் நலமா?" என உம்மை நான் கேட்கிறேன்" என்று கேட்டாள்.(67)
யதுக்களில் முதன்மையான அநிருத்தன், உஷையின் பொருள் பொதிந்த, அந்த இனிமையான சொற்களைக் கேட்டு, இன்னும் இனிமையான சொற்களால் மறுமொழி கூறினான்.(68) அவன், பாணன் மகளின் கண்களில் இருந்த கண்ணீரைத் துடைத்துப் புன்னகைத்தவாறே அவளது மனத்தை ஈர்க்கும் சொற்களில்,(69) "ஓ! தேவி, ஓ! அழகியே, ஓ! இனிய சொல் சொல்பவளே, உனக்கு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்கிறேன். உன் ஆதரவால் எனக்கு எங்கும் யாவும் நலமே {உன்னால் அனைத்து வகையிலும் நான் நலமாக இருக்கிறேன்}.(70) ஓ! அழகியே, நான் இந்த இடத்தை முன்னர் ஒருபோதும் கண்டதில்லை. ஒரேயொரு முறை கனவில் இந்தக் கன்னிகைகளின் நகரத்திற்கு வந்தேன்.(71) ஓ! மருட்சியுடைய பெண்ணே, ருத்திரனின் மனைவியுடைய சொற்கள் ஒருபோதும் பொய்யாகாது என்பதால் உன் ஆதரவின் மூலம் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.(72) தேவி மகிழ்வாள், நீயும் நிறைவடைவாய் என்ற எண்ணத்தில் நான் இங்கே வந்து உன் பாதுகாப்பை நாடியிருக்கிறேன். மகிழ்வாயாக" என்றான்.(73)
அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட உஷை, இவ்வாறு தன் காதலனால் சொல்லப்பட்டதும், ஒரு தனி அறைக்குள் அவனை அழைத்துச் சென்று, பேரச்சத்தால் பீடிக்கப்பட்டவளைப் போல அங்கே காத்திருந்தாள் {அவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள்}.(74) அதன்பிறகு அவர்கள் காந்தர்வச் சடங்குகளின்படி திருமணவுறவில் இணைந்து சக்கரவாகப் பறவைகளின் இணையைப் போலத் தங்கள் நாட்களைக் கடத்தி வந்தனர்.(75) தெய்வீக மலர்மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அழகிய உஷை, தன் கணவனான அநிருத்தனுடன் சேர்ந்து பேரின்பம் துய்த்தாள்.(76)
அவள் அநிருத்தனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும் எவரும் அதை அறிந்தாரில்லை. ஆனால் ஒரு சில நாட்களுக்குப் பிறகு, தெய்வீக மலர்மாலைகளாலும், ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டவனும், தெய்வீகக் களிம்புகளைப் பூசிக்கொண்டவனுமான அநிருத்தனுடன் உஷை வாழ்ந்து வருவதைப் பாணனின் காவலர்கள் அறியவந்தனர்.(77,78) அவர்கள் பாணனிடம் விரைந்து சென்று, தாங்கள் கண்ட அவனது மகளின் ஒழுக்கத்தை அவனிடம் தெரியப்படுத்தினர்.(79)
பகைவரைக் கொல்பவனும், பலியின் வீர மகனுமான பாணன், இதைக் கேட்டுவிட்டு அநிருத்தனைக் கொல்லுமாறு தன் பணியாட்களான படைவீரர்களுக்கு {கிங்கரசேனைக்கு} ஆணையிட்டான்.(80) அவன், "நீங்கள் அனைவரும் விரைந்து சென்று தீயவனும், என் குலப் பண்புக்குக் கேடு விளைவித்த இழிந்தவனுமான அந்தப் பாவியைக் கொல்வீராக.(81) ஐயோ, உஷை களங்கமடைந்ததால் நம் பெருங்குலத்துக்குப் பெருங்களங்கம் உண்டானது. ஐயோ, என் நகருக்குள்ளும், அரண்மனைக்குள்ளும் புகுந்து, என்னால் கொடுக்கப்படாவிட்டாலும் வலுக்கட்டாயமாக என் மகளைக் கெடுத்த அந்த மூடனின் பலமென்ன, பொறுமையென்ன, செருக்கென்ன?" என்று சொன்னான்.(82,83)
பாணன், இதைச் சொல்லிவிட்டு மீண்டும் தன் படைவீரர்களைத் தூண்டினான். அவர்கள் அவனது ஆணைக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் கவசங்களை அணிந்து கொண்டு புறப்பட்டனர்.(84) பயங்கரம் நிறைந்தவர்களும், பலமிக்கவர்களுமான அந்தத் தானவர்கள், பெருங்கோபத்துடன் பல்வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, அநிருத்தனைக் கொல்வதற்காக அவன் இருந்த இடத்திற்கு வந்தனர்.(85)
அணுகிவரும் அந்தப் படையின் ஆரவாரத்தைக் கேட்ட பிரத்யும்னனின் வீர மகன், "என்ன அது?" என்று கேட்டுத் திடீரென எழுந்தான். பல்வேறு ஆயுதங்களுடன் படைவீரர்கள் அந்தப் பெரிய வீட்டைச் சூழ்ந்து நிற்பதை அவன் கண்டான்.[1] பாணனின் சிறப்புமிக்க மகள், அந்தப் படையைக் கண்டு அநிருத்தன் கொல்லப்படுவான் என்று அஞ்சி அழத் தொடங்கினாள். அவளது கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன.(86)
[1] பின்னர் வர வேண்டிய இந்த வாக்கியம் மன்மதநாததத்தரின் பதிப்பில் இங்கே வந்திருக்கிறது. மற்ற பதிப்புகளில் இந்த வாக்கியம் இங்கே இடம்பெறவில்லை. பின்னர் 90ம் ஸ்லோகத்திலும் இந்த வாக்கியம் மீண்டும் வருகிறது.
மான்விழி கொண்ட உஷை, "ஓ! என் கணவா! ஓ! என் கணவா!" என்று சொல்லி பரிதாபகரமாக அழுது நடுங்குவதைக் கண்ட அநிருத்தன்,(87) "உன் அச்சம் விலகட்டும். ஓ! அழகிய இடையாளே, நான் இங்கிருக்கும் வரை உனக்கு அச்சம் தேவையில்லை. ஓ! சிறப்புமிக்கப் பெண்ணே, உனக்கு அஞ்சுவதற்கு ஏதுமில்லை. மாறாக உன் இன்பத்துக்கான நேரம் வந்துவிட்டது.(88) பாணனின் பணியாளர்கள் அடங்கிய மொத்த திரளும் இங்கே வந்துவிட்டாலும் நான் கிஞ்சிற்றும் கவலை கொள்ள மாட்டேன். ஓ! மருட்சியுடைய பெண்ணே, இன்று என் சக்தியைப் பார்" என்றான்.(89)
படைவீரர்களின் ஆரவாரத்தைக் கேட்ட பிரத்யும்னனின் மகன், திடீரென எழுந்து, "இஃது என்ன" என்று கேட்டான்.(90) அந்தப் பெரும் மாளிகையின் அனைத்துப் பக்கங்களிலும் பல்வேறு ஆயுதங்களுடன் சூழ்ந்திருந்த படைவீரர்களை அவன் கண்டான்.(91) அநிருத்தன் இதைச் சொல்லிவிட்டு, தன் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, கோபத்தில் உதடுகளைக் கடித்தபடியே படைவீரர்கள் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றான்.(92) பாணனின் தொண்டர்களுடன் போர் விரைவில் நிகழ இருப்பதைப் புரிந்து கொண்ட சித்திரலேகை, தேவரைப் போன்ற {தேவர்களால் வழிபடப்படுபவரான} நாரத முனிவரை நினைத்துக் கொண்டாள்.(93) சித்திரலேகையால் நினைவுகூரப்பட்ட அந்த முனிவர்களில் முதன்மையானவர், சோணிதம் என்ற பெயரைக் கொண்ட அந்த நகரத்திற்கு ஒரு கணத்தில் வந்து சேர்ந்தார்.(94)
அவர் {நாரதர்}, வானத்தில் நின்றவாறே, அநிருத்தனிடம், "ஓ! வீரா, அஞ்சாதே, நான் இந்த நகரத்துக்கு வந்துவிட்டேன்" என்றார்.(95) பெருஞ்சக்திவாய்ந்த அநிருத்தன், நாரதரைக் கண்டு, அவரை வணங்கிவிட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்து போருக்குத் தன்னை ஆயத்தம் செய்து கொண்டான்.(96)
அப்போது படைவீரர்களின் ஆரவாரத்தைக் கேட்ட அவன், ஈட்டியால் குத்தப்பட்ட ஒரு யானையைப் போலத் திடீரென எழுந்தான்.(97) பெருந்தோள்களைக் கொண்ட அந்த வீரன் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டே அந்த மாளிகையில் இருந்து வருவதைக் கண்ட அவர்கள் {அந்தப் படைவீரர்கள்}, அச்சத்ததால் பீடிக்கப்பட்டவர்களாகத் தப்பி ஓடினர்.(98) போர்முறைகளின் பல்வேறு வடிவங்களில் திறன்மிக்கவனான பிரத்யும்னன் மகன் {அநிருத்தன்}, அந்தப்புரத்தில் கிடந்த பரிகத்தை எடுத்துக் கொண்டு அதை அவர்கள் மீது ஏவினான்.(99) போரில் திறன்மிக்கவர்களான அந்தப் படைவீரர்களும், கதாயுதங்கள், தண்டங்கள், வாள்கள், ஈட்டிகள், கணைகள் ஆகியவற்றை மழையாகப் பொழிந்து அநிருத்தனைத் தாக்கினர்.(100) பிரத்யும்னன் மகன், திறன்மிக்கத் தானவர்களின் நாராசங்களாலும், பரிகங்களாலும் முழுமையாகக் காயமடைந்திருந்தாலும், மாலை மேகத்தைப் போல முழங்கியபடியே வீழாதிருந்தான்.(101) வானத்தில் மேகங்களுக்கு மத்தியில் உலவும் சூரியனைப் போலவே அவனும் பயங்கரமான பரிகத்தை எடுத்துக் கொண்டு அவர்களின் மத்தியில் நின்றான்.(102)
தண்டமும், கருப்பு மான் தோலும் தரித்த நாரதர், மகிழ்ச்சியாக அநிருத்தனிடம், "நன்று செய்தாய், நன்றாகச் செய்தாய்" என்றார்.(103)
ஒப்பற்ற சக்தி கொண்ட பிரத்யும்னனின் பயங்கரப் பரிகத்தால் இவ்வாறு தாக்கப்பட்ட அந்தப் படை வீரர்கள், காற்றால் சிதறடிக்கப்படும் மேகங்களைப் போலத் தப்பி ஓடினர்.(104) பெருஞ்சக்திவாய்ந்தவனான வீரன் அநிருத்தன், பரிகத்தைக் கொண்டு போர்க்களத்தில் இருந்து தானவர்களை விரட்டிவிட்டு, மழைக்கால முடிவில் வானில் முழங்கும் மேகங்களைப் போலச் சிங்க முழக்கம் செய்தான்.(105) பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னன், போரில் பயங்கரர்களான தானவர்களிடம், "காத்திருங்கள், நில்லுங்கள்" என்று சொல்லிவிட்டுச் சிரிக்கத் தொடங்கினான்.(106) போரில் அந்த உயரான்ம வீரனால் இவ்வாறு தாக்கப்பட்ட அவர்கள், போர்க்களத்தில் இருந்து தப்பிச் சென்று அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாகப் பாணனிடம் சென்றனர்.(107) குருதியில் குளித்தவர்களும், அச்சத்தால் விரிந்த விழிகளுடன் கூடியவர்களுமான அந்தத் தானவர்களால், பாணனின் அருகில் சென்ற பிறகும் கூட அமைதியை அடைய முடியவில்லை.
அவர்கள் மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தனர்;(108,109) "அச்சமில்லை, அஞ்சாதீர்! ஓ! முன்னணி தானவர்களே, உங்கள் அச்சத்தைக் களைந்து, மீண்டும் போரிடுங்கள்" என்று அவர்கள் பாணனால் தூண்டப்பட்டனர். அச்சத்தில் விரிந்த கண்களுடன் கூடிய அவர்களிடம் பாணன் மீண்டும்,(110) "மூவுலகங்களிலும் நன்கறியப்பட்ட உங்கள் மகிமையை மறந்து, அலிகளைப் போல ஏன் கலங்குகிறீர்கள்?(111) அவன் யார்? நன்கறியப்பட்ட குலத்தில் பிறந்தவர்களும், போரில் நுண்ணறிவுமிக்கவர்களுமான நீங்கள் யாருக்கு இவ்வளவு அஞ்சுகிறீர்கள்?(112) நீங்கள் இன்று எனக்கு உதவ வேண்டாம். என் பார்வையில் இருந்து அகல்வீராக" என்றான்.(113)
பெருஞ்சக்திவாய்ந்தவனான பாணன், இவ்வாறும், இன்னும் பிற கடுஞ்சொற்களாலும் அவர்களை நிந்தித்துவிட்டு, இன்னும் பத்தாயிரம் படைவீரர்களைப் போர்க்களம் புக ஏவினான்.(114) பிறகு அவன், அநிருத்தனை வீழ்த்த பல்வேறு ஆயுதங்களுடன் கூடிய பிரமதர்கள் {சிவனின் பிரமதகணங்கள்} பலர் அடங்கிய ருத்திரப் படையை நியமித்தான்.(115) எரியும் கண்களைக் கொண்டவர்களும், மின்னலுடன் கூடிய மேகங்களுக்கு ஒப்பானவர்களுமான பாணனின் படைவீரர்கள் மொத்த ஆகாயத்தையும் மறைத்தனர்.(116) அவர்களில் சிலர் யானைகளைப் போலப் பூமியின் பரப்பில் நின்று கொண்டு பிளிறிக் கொண்டிருந்தனர், வேறு சிலர் மழைக்கால மேகங்களைப் போலத் தோன்றினர்.(117)
அப்போது அங்குக் கூடியிருந்த அந்தப் பெரும்படையினர், "நிற்பீர், எழுவீர்" என்ற கூச்சலை அனைத்துப் பக்கங்களிலும் கேட்டனர்.(118) வீரன் அநிருத்தன் அவர்களை நோக்கி விரைந்தான். ஓ! மன்னா, அப்போது அவன் தனியொருவனாகப் பலருடன் போரிட்டது உண்மையில் ஆச்சரியகரமாக இருந்தது.(119) பெருஞ்சக்திவாய்ந்த தானவர்களுடன் போரிட்ட அவன், அவர்களின் பரிகங்களையும், தோமரங்களையும் பிடுங்கி அவற்றைக் கொண்டே அவர்களைக் கொன்றான்.(120) பெருஞ்சக்திவாய்ந்த அநிருத்தன் போர்க்களத்தில் மீண்டும் மீண்டும் மிகச்சிறந்த பரிகத்தை எடுத்துப் பெருஞ்சக்திவாய்ந்த தைத்தியர்களைக் கொன்றான்.(121) பகைவரைக் கொல்பவனான அந்தக் காமனின் மகன், தன் நிஷ்திருங்ஷத்தையும் {வாளையும்}, தோலுறையையும் {கேடயத்தையும்} தரித்துக் கொண்டு பனிரெண்டு வழிகளில் {முப்பத்திரண்டு வழிகளில்} திரிபவனாகக் காணப்பட்டான்.(122) இவ்வாறு அவன் அந்தப் போர்க்களத்தில் ஆயிரம் வெவ்வேறு வழிகளில் திரிந்தபோது, ஆயிரம் வாய்களை அகலத்திறந்து விளையாடிக் கொண்டிருக்கும் யமனைப் போலப் பகைவர்கள் அவனைக் கண்டனர்[2].(123)
[2] சித்திரசாலை பதிப்பில், "பகைவரைக் கொல்பவனான அநிருத்தன், மீண்டும் உலக்கையை எடுத்துக் கொண்டு போர்க்களத்தில் தனியொருவனாகத் திரிந்தபடியே சுழன்றும், மேல்நோக்கிச் சென்றும், திரும்பியும், குதித்தும், துள்ளியும், உயர்ந்தும் என இவ்வழிகளில் முப்பத்திரண்டு போர்முறைகளை வெளிப்படுத்தினான். பல்வேறு வழிமுறைகளில் போரிட்ட அநிருத்தன், வாயை அகல விரித்திருக்கும் யமனைப் போலப் போர்க்களத்தில் காணப்பட்டான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தப் பகைவரைக் கொல்பவன், அந்தப் போரில் ஒரு வாளையும், கேடயத்தையும் பிடித்திருந்தான். சுழன்றும், குதித்தும், இறங்கியும், துள்ளியும், விழுந்தும், குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்தும் எனப் பல்வேறு வழிமுறைகளில் போரிட்டுத் திரிந்து கொண்டிருந்தான். அவன் போரில் முப்பத்திரண்டு வழிமுறைகளை வெளிப்படுத்தினான். போரின் முன்னணியில் இருந்த ஒருவன் ஆயிரம் வடிவங்களில் தோன்றினான். அந்தப் போரில் அவன் அகலத்திறந்த வாயுடன் கூடிய யமனைப் போலப் பல வழிகளில் போரிட்டான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "வாளையும், கேடயத்தையும் கொண்டு போரிடுவதில் முப்பத்திரண்டு நுட்பங்களைத் தனுர்வேதம் குறிப்பிடுகிறது. எனினும் அவற்றின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "மறுபடியும் பரிகத்தை எடுத்து வீசி சத்ருக்களைக் கண்டிக்கவல்ல அவன் தான் ஒருவனாகவே நாலா வழியிலும் சென்று சுற்றிக் குதித்துத் தாவித் துள்ளி, ஆடியோடி இவ்விதம் முப்பத்திரண்டு வழிகளில் திரிந்து கண்ணுக்குப் புலப்படவில்லை. போர்க்களத்தில் பல படியாகப் போரிட்டு விளையாடும் திறந்த வாயுடன் யமன் போல் இருக்கும் ஒருவரை ஆயிரமாய் இருப்பவனாகக் கண்டனர்" என்றிருக்கிறது.
அநிருத்தனால் மீண்டும் தாக்கப்பட்ட அசுரர்கள், குருதியில் குளித்தவர்களாகப் போர்க்களத்தில் இருந்து தப்பிப் பாணன் இருக்குமிடத்திற்கு ஓடிச் சென்றனர்.(124) பெருஞ்சக்திவாய்ந்த அந்த அசுரர்கள், அனைத்துப் பக்கங்களிலும் யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும் செலுத்திக் கொண்டும், பரிதாபகரமாகக் கதறியபடியும் தப்பி ஓடினர்.(125) அந்த நேரத்தில் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடிய தானவர்கள், கவலையாலும், அச்சத்தாலும் பீடிக்கப்பட்டவர்களாக ஒருவர் மீது ஒருவர் விழுந்து, குருதி கக்கினர்.(126) அநிருத்தனோடு போரிட்டுக் கொண்டிருந்த தானவர்கள், பழங்காலத்தில் தேவர்களுடன் போரிட்டபோது கூட இவ்வளவு அச்சமடையவில்லை.(127) கைகளில் கதாயுதங்கள், தண்டங்கள், வாள்கள் ஆகியவற்றைக் கொண்டவர்களும், மலைச்சிகரங்களுக்கு ஒப்பானவர்களுமான அந்தத் தானவர்களில் சிலர் குருதி கக்கினர், வேறு சிலர் பூமியில் விழுந்தனர்.(128) வீழ்ந்துவிட்ட அந்தத் தானவர்கள் போர்க்களத்தில் பாணனை விட்டுவிட்டு அச்சத்தில் வானத்தில் தப்பிச் சென்றனர்.(129) ஒரு மனிதனால் தன் படை இவ்வாறு முறியடிக்கப்பட்டதைக் கண்ட பாணன், நெய்யூற்றப்படும் வேள்வி நெருப்பைப் போலக் கோபத்தில் எரிந்து கொண்டிருந்தான்.(130) அநிருத்தன் போரிடுவதைக் கண்டு மகிழ்ந்த நாரதர், ஆகாயமெங்கும் திரிந்து, "நன்று, நன்று" என்று சொல்லி ஆடத் தொடங்கினார்.(131)
அதேவேளையில், பெருஞ்சக்திவாய்ந்தவனும், கோபத்தில் தூண்டப்பட்டவனுமான பாணன், கும்பாண்டனால் கொண்டு வரப்பட்ட தேரில் ஏறி, தன் வாளை உயர்த்திக் கொண்டே அநிருத்தன் இருக்கும் இடத்திற்குச் சென்றான். ஆயிரம் கொடிமரங்களுடன் ஒளிரும் சக்ரனைப் போலவே அந்த அசுரனும், தன்னுடைய ஆயிரங்கரங்களில் பட்டிசங்கள், வாள்கள், தண்டங்கள், ஈட்டிகள், கோடரிகளை ஆகியவற்றைத் தாங்கி அழகாகத் தோன்றினான்.(132-134) தானவர்களில் சிறந்தவனான அவன் {பாணன்}, தன் ஆயிரங்கரங்களிலும் கையுறைகளாலும், விரலுறைகளாலும், பல்வேறு ஆயுதங்களாலும் அலங்கரித்துக் கொண்டு பேரழகுடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(135) கோபத்தில் கண்கள் சிவந்த அந்த அசுரன், சிங்க முழக்கம் செய்து, தன் பெரும் வில்லை வளைத்து, "நில், நிற்பாயாக" என்று சொன்னான்.(136) வெல்லப்படமுடியாதவனான பிரத்யும்னன் மகன், போர்க்களத்தில் பாணனின் இந்தச் சொற்களைக் கேட்டுவிட்டு, அவனது முகத்தைப் பார்த்துச் சிரித்தான்.(137)
தேவாசுரப் போரில் பயன்படுத்தப்பட்ட ஹிரண்யகசிபுவின் தேரைப் போலவே நூற்றுக்கணக்கான சிறு மணிகள் பொருத்தப்பட்டதும், சிவப்புக் கொடிமரங்களாலும், கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டதும், கரடித் தோலால் மறைக்கப்பட்டதும், பத்துப் பர்லாங் {தச நல்வம்}[3] நீளம் கொண்டதுமான பெருஞ்சக்திவாய்ந்த பாணனின் தேரும் ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்டது.(138,139) யதுகுலத்தில் முதன்மையான அநிருத்தன், அந்த அசுரன் தன்னைத் தாக்கப் போவதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்து கோபத்தால் நிறைந்தான்.(140) பழங்காலத்தில் தைத்திய இளவரசனைக் கொன்ற நரஹரியைப் போல அவன், போரிட உணர்ச்சிவசப்பட்டவனாக வாளுடனும், கேடயத்துடனும் நின்றான்.(141) அப்போது, பாணன் வாளுடனும், தோல் கேடயத்துடனும் வரும் அவனை {அநிருத்தனைக்} கண்டான். குத்துவாளுடனும், தோல் கேடயத்துடனும் காலாளாக இவ்வாறு முன்னேறி வரும் அவனைக் கண்ட பாணன், தன்னால் அவனைக் கொல்ல முடியும் என்று நினைத்துப் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(142) அந்த யாதவன், தன் கையில் வாளை வைத்திருந்தாலும், கவசமணிந்தவனாக இருக்கவில்லை. இருப்பினும் வெல்லப்பட முடியாத அநிருத்தனை நினைத்துக் கொண்டே பெருஞ்சக்திவாய்ந்த பாணன் அவனைப் போரில் எதிர்த்து வந்தான். அவன் {பாணன்}, "அவனைப் பிடியுங்கள், கொல்லுங்கள்" என்று கூச்சலிட்டான்.(143,144) அவன் போர்க்களத்தில் இவ்வாறு கூச்சலிட்ட போது, கோபத்திலிருந்து பிரத்யும்னன் மகன் அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்தான்.(145) அந்த நேரத்தில் அச்சத்தால் பீடிக்கப்பட்ட உஷை அழத் தொடங்கினாள். அநிருத்தன், தன் புன்னகையால் அவளைத் தேற்றி போரை எதிர்பார்த்து அங்கே நின்றிருந்தான்.(146)
[3] ஒரு நல்வம் {ஃபர்லாங்} என்பது 400 முழங்களைக் கொண்ட அளவாகும். எனவே தசநல்வம் {10 ஃபர்லாங்} என்பது நாலாயிரம் முழங்களைக் கொண்ட அளவாகும். அதாவது கிட்டத்தட்ட 1.25 மைல் அளவு, அல்லது 2 கி.மீ. அளவைக் கொண்டதாகும்.
கோபத்தால் நிறைந்திருந்த பாணன், அநிருத்தனைக் கொல்ல விரும்பி, க்ஷூத்ரகம் என்ற பெயரிலான எண்ணற்ற கணைகளை ஏவினான்.(147) அவனை வீழ்த்த விரும்பிய அநிருத்தனும், க்ஷூத்ரகம் என்ற பெயரிலான கணைமாரியை வெட்டி வீழ்த்தினான்.(148) போர்க்களத்தில் அநிருத்தனைக் கொன்றுவிடுவோம் என்று விரும்பிய பாணனும், க்ஷூத்ரகக் கணைகள் பலவற்றை அவனது தலைக்கு இலக்காக்கினான்.(149) அநிருத்தனும் அவற்றைத் தன் தோல் கேடயத்தால் கலங்கடித்து, எழுஞாயிறைப் போல அவன் {பாணனின்} முன்பு தோன்றினான்.(150) {யாதவ வழித்தோன்றலான அநிருத்தன், காட்டின் தலைவனான சிங்கத்தைத் தனியாக எதிர்த்து நிற்கும் யானையைப் போலப் பாணனனை எதிர்த்து நின்றான்}.(151) அதன்பிறகு, பாணன், வேகமாகச் செல்லக்கூடிய கூரிய கணைகளைக் கொண்டு பிரத்யும்னனின் வெல்லப்படமுடியாத மகனை முக்கிய உறுப்புகளில் துளைத்தான்.(152) {கணைகளால் துளைக்கப்பட்டவன் வாளையும், கேடயத்தையும் ஏந்தியவாறு விரைந்து வந்தான். அவ்வாறு விரைந்து வரும் அவன் மீது பாணன் கூரிய கணைகளை ஏவினான்}.(153) பெருந்தோள்களைக் கொண்ட அநிருத்தன், அந்தக் கணைகளால் காயமடைந்து கோபம் தூண்டப்பட்டவனாகக் கடுஞ்செயல்களைச் செய்து அற்புதங்களை வெளிப்படுத்தினான்.(154) அவன் மேனியெங்கும் கணைமழையால் தாக்கப்பட்டுக் குருதியால் நனைந்தவனாகப் பாணனின் முன்னிலையை அடைந்தான்.(155) அப்போது படைவீரர்கள், கூரிய வாள்களாலும், கதாயுதங்களாலும், ஈட்டிகள், பட்டிசங்கள், தோமங்கள் ஆகியவற்றாலும் பிரத்யும்னனைத் தாக்கினர். இவ்வாறு கடுங்காயம் அடைந்திருந்தாலும் அவன் நடுங்கினானில்லை.(156) அப்போது அந்தப் போரில் தன் குத்துவாளுடன் குதித்த அவன், பாணனுடைய தேரின் கடிவாளங்களை அறுத்துக் குதிரைகளைத் தாக்கினான்.(157) போரில் பெருந்திறம் கொண்ட பாணன் இதைக் கண்டு, அவன் மீது கணைகள், பட்டிசங்கள், தோமரங்கள் ஆகியவற்றின் மழையைப் பொழிந்தான்.(158) அப்போது அநிருத்தன் இறந்து விட்டான் என்று கருதிய தானவர்கள் போரில் இருந்து விலகி, சிங்க முழக்கம் செய்து, தங்கள் தேரில் குதித்தனர்.(159)
கடுங்கோபம் அடைந்த பாணன், பயங்கரத் தோற்றத்தைக் கொண்டதும், சூரியனைப் போன்று பிரகாசிப்பதும், எரிகொள்ளியைப் போல எரிவதும், மணிகள் பொருத்தப்படுதுமான சக்தி ஆயுதத்தை எடுத்து உஷையை விதவையாக்குவதற்காக ஏவினான்.(160) பெருஞ்சக்திவாய்ந்தவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான காமனின் மகன் {அநிருத்தன்}, உயிரைக் குடிக்கும் சக்தி ஆயுதம் தன் மீது பாய இருப்பதைக் கண்டு, குதித்தெழுந்து அந்தச் சக்தியைப் பிடித்து, அதைக் கொண்டே பாணனைத் துளைத்தான். அஃது அவனது உடலைப் பிளந்து கொண்டு பூமியில் நுழைந்தது.(161-163)
இதனால் கடுங்காயம் அடைந்த பாணன், கொடிமரத்தைப் பிடித்தபடியே தன்னைத் தாங்கிக் கொண்டான். அப்போது அவனை {பாணனை} நனவற்றவனாகக் கண்ட கும்பாண்டன்,(164) "ஓ! தானவர்களின் மன்னா, எழுச்சியுடன் கூடிய இந்தப் பகைவனை நீ ஏன் அலட்சியம் செய்கிறாய்? இந்த வீரன் தன் இலக்கை அடைந்தும், உணர்ச்சிவசப்படாதவனாக இருப்பதை நாம் காண்கிறோம்.(165) உன் மாயா சக்திகளைப் பயன்படுத்திப் போரிடுவாயாக, இல்லையெனில் இவனைக் கொல்ல இயலாது. ஈடுபாட்டுடன் கூடிய இத்தகைய பகைவனை அலட்சியம் செய்யாதே. உன்னுடைய மாயாசக்தியால் உன்னையும், எங்களையும் காப்பாயாக.(166) உன் மாயா சக்தியால் இவனை உன்னால் வீழ்த்தமுடியவில்லையெனில் நிச்சயம் இவன் அசுரர்கள் அனைவரையும் கொன்றுவிடுவான். ஓ! வீரா, இவன் நம் அனைவரையும் கொல்லும் முன்னர் நீ இவனைக் கொல்வாயாக. நூற்றுக்கணக்கான இன்னும் பிறரைக் கொன்றேனும் இவன் உஷையை அபகரித்துச் செல்வான்" என்றான்.(167)
பேசுபவர்களில் முதன்மையான தானவர்களின் மன்னன் {பாணன்}, கும்பாண்டனின் இந்தச் சொற்களால் தூண்டப்பட்டுப் பெருங்கோபத்தால் நிறைந்தவனாக, பின்வருங்கடுஞ்சொற்களைச் சொன்னான்,(168) அவன் {பாணன்}, "இந்தப் போரில் நான் அவனைக் கொல்வேன். ஒரு பாம்பைக் கருடன் பிடிப்பதைப் போல அவனை நான் பிடிப்பேன்" என்றான்.(169)
பெருஞ்சக்திவாய்ந்த பாணன், இதைச் சொல்லிவிட்டு, கந்தர்வர்களின் நகரத்துக்கு ஒப்பானதும், குதிரைகள், கொடிமரத்துடன் கூடியதுமான தன் தேருடன் கூடியவனாகக் கணைகளை மழையாகப் பொழிந்தபடியே அவற்றால் அவனை மறைத்து அங்கிருந்து மறைந்தான்.(170) வெற்றிகொள்ளப்பட முடியாதவனும், ஆண்மையுடன் கூடியவனுமான பிரத்யும்னன் மகன் {அநிருத்தன்}, பாணன் புலப்படாததைக் கண்டு பத்து திக்குகளிலும் தன் பார்வையைச் செலுத்தினான்.(171) பெருஞ்சக்திவாய்ந்தவனும், கோபத்தால் நிறைந்தவனுமான அந்தத் தானவன், மாயையால் தன்னை மறைத்துக் கொண்டு, தன் தாமஸ வித்தையின் மூலம் கூரிய கணைகளை ஏவத் தொங்கினான்.(172) பிரத்யும்னன் மகன் பாம்புக் கணைகளால் மெல்ல மெல்ல கட்டப்பட்டான். அவனது உடல் பல்வேறு பாம்புகளால் கட்டப்பட்டது.(173) இவ்வாறு அங்கங்கள் முழுவதும் பாம்புகளால் கட்டப்பட்ட பிரத்யும்னன் மகன், போரில் மைநாக மலையைப் போல அசையாது நின்றான்.(174) பாம்புகளின் எரியும் நாக்குகளால் சூழப்பட்டு மலையைப் போல அவன் அசையாதிருந்தாலும் அவன் அச்சத்தால் பீடிக்கப்படவில்லை.(175) பாம்புக் கணைகளால் முழுமையாகக் கட்டப்பட்டு, செயலற்றவனாகவும், அசைவற்றவனாகவும் ஆக்கப்பட்டாலும் அனைத்துடனும் அடையாளங்காணப்படுபவனான அவன், கிஞ்சிற்றும் துன்புறவில்லை.(176)
அப்போது கொடிமரத்தில் தன்னைத் தாங்கிக் கொண்ட பாணன், கோபத்தில் நிறைந்தவனாகக் கடுஞ்சொற்களில் அநிருத்தனை நிந்தித்தபடியே,(177) "ஓ! கும்பாண்டா, உலகில் நம் குணத்திற்குக் களங்கம் கற்பித்தவனும், குலக்கேடானவனுமான இந்த இழிந்த பாவியை விரைந்து கொல்வாயாக" என்றான்.(178)
இவ்வாறு சொல்லப்பட்ட கும்பாண்டன், "ஓ! மன்னா, சில சொற்களை நான் சொல்ல விரும்புகிறேன். நீ விரும்பினால் அவற்றைக் கேட்பாயாக.(179) இந்திரனின் ஆற்றுலடன் கூடிய இந்த வீரன் யாருடைய மகன்? இவன் எங்கிருந்து வந்தான் என்பதையும், எதற்காக இங்கே வந்தான் என்பதையும் முதலில் கேட்டறிவாயாக.(180) இவன் வீரச்சமர் புரிந்தான், ஒரு தேவ இளவரசனைப் போல இவன் போரிட்டதை நான் கவனித்தேன்.(181) இவன் பெருஞ்சக்தி வாய்ந்தவனாகவும், ஆற்றல் வாய்ந்தவனாகவும், ஆயுதங்களில் திறன் மிக்கவனாகவும் இருக்கிறான்.(182) ஓ! தைத்தியர்களில் முதன்மையானவனே, இவன் உன் மகளைக் காந்தவத் திருமண முறைப்படி மணந்திருக்கிறான். இவன் கொல்லத்தக்கவனல்லன்.(183) நீ அவளைக் கொடுக்கவில்லை என்பதால் இவனிடம் இருந்து அவளை நீ அழைத்துக் கொள்ளலாம். இது குறித்துச் சிந்தித்த பிறகே நீ இவனைக் கொல்ல வேண்டும். இதை அறிந்த பிறகு இவனைக் கொல்லவோ, புகழவோ செய்யலாம்.(184) இவனைக் கொல்வதில் பிழையையும், இவனைக் காப்பதில் பெருங்குணத்தையும் நான் காண்கிறேன். இவன் மனிதர்களிற்சிறந்த ஒருவன், அனைத்து வகையிலும் மதிக்கத் தகுந்தவன்.(185) இவனது உடல் பாம்புகளால் கட்டப்பட்டிருந்தாலும் இவன் துன்பத்தை உணரவே இல்லை. நற்பிறவி, வீரம், சக்தி, குணங்கள் ஆகியவை இவனிடம் இருக்கின்றன.(186) ஓ! மன்னா, பேராற்றல் படைத்த இந்த மனிதர்களிற்சிறந்தவனைப் பார். பெருஞ்சக்திவாய்ந்த இந்த வீரன் கட்டப்பட்டிருந்தாலும், நம் அனைவரையும் அலட்சியம் செய்கிறான்.(187) உன் மாயையால் இவன் கட்டப்படவில்லையென்றால், நிச்சயம் இவன் அசுரர்கள் அனைவருடனும் போரிட்டிருப்பான். {இதில் ஐயமில்லை}.(188) இவன் போர்முறைகள் அனைத்தையும் அறந்திருக்கிறான், உன்னைவிட சக்தி வாய்ந்தவனாகவும் இருக்கிறான். இவனுடைய மேனி பாம்புகளால் கட்டப்பட்டும், குருதியால் மறைக்கப்பட்டும் இருக்கிறது; இருப்பினும் இவன் மூன்று கோடுகள் தெரிய நெற்றியைச் சுருக்கி நமக்கு இலக்கு வைப்பவனைப் போல முகஞ்சுளிக்கிறான்.(189) ஓ! மன்னா, இவன் இத்தகைய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டாலும் தன் கரங்களில் பலத்தைச் சார்ந்து எதையும் மதிக்காமல் அலட்சியம் செய்கிறான். யாரிந்த இளைஞன்?(190) இவன் இரண்டே கைகளைக் கொண்டவனாக இருந்தாலும், ஆயிரங்கரத்தோனின் ஆற்றலைக் கருதாமல் உன்னுடன் மோதுகிறான். இத்தகைய ஆற்றலைப் படைத்தவன் எவன்?(191) அதையுந்தவிர, ஓ! மன்னா, உன் மகள் இவனிடம் பற்றுக் கொண்டிருக்கும்போது அவளை வேறு எவனுக்கும் உன்னால் கொடுக்க முடியாது. மறுபுறம் இந்த வீரனோ பேராற்றல் படைத்தவனாக இருக்கிறான்.(192) ஓ! அசுரர்களில் முதன்மையானவனே, விரும்பத்தகுந்தவனான இவன் ஒரு பெரும் மனிதனின் குலத்தில் பிறந்திருந்தால், நிச்சயம் உன் பாராட்டைப் பெறத் தகுந்தவனாவான்.(193) இவனைக் காக்க வேண்டுமென உன்னை நான் வேண்டுகிறேன்" என்றான்.
உயரான்ம கும்பாண்டனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பகைவரைக் கொல்பவனான பாணன், "அவ்வாறே ஆகட்டும்" என்றான்.(194) நுண்ணறிவுமிக்கவனும், பலியின் சிறப்புமிக்க மகனுமான அவன் {பாணன்}, அநிருத்தனைக் காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு தன் மாளிகைக்குச் சென்றான்.(195)
முனிவர்களில் முதன்மையான நாரதர், பெருஞ்சக்திவாய்ந்த அநிருத்தன் மாயா சக்தியின் மூலம் கட்டப்பட்டதைக் கண்டு {வாயில்களில் நகரம் என்றழைக்கப்படும்} துவாராவதி நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.(196) முனிவர்களில் சிறந்தவரான அவர் {நாரதர்}, ஆகாய வழியின் மூலம் துவாராவதியை அடைந்ததும், அநிருத்தன் சிறை பட்டதைக் கருட வாகனனான கேசவனிடம் சொன்னார்.(197)
முனிவர்களில் முதன்மையான நாரதர் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்ற போது, அநிருத்தன், "{இந்தத் தானவன் அழியப் போகிறான். இந்தக் கொடூரன் போரிடுவான் என்பதில் ஐயமில்லை}.(198) சங்கு, சக்கர, கதாதாரியான கேசவரிடம் பல காரியங்களைக் குறித்து நாரதர் உண்மையாகப் பேசுவார் என்பதால் இந்தக் கொடுந்தானவன் நிச்சயம் போரில் கொல்லப்படுவான்" என்று நினைத்தான்.(199)
அந்த நேரத்தில், பாம்புகளால் கட்டப்பட்ட தன் கணவனைக் கண்ட உஷை, கண்கள் நிறைந்த கண்ணீருடன் இருந்தபோது, அவன் {அநிருத்தன்} அவளிடம் {உஷையிடம்},(200) "ஓ! மருட்சியுடைய பெண்ணே, நீ ஏன் இவ்வாறு அழுகிறாய்? அஞ்சாதே, ஓ! மான் போன்ற அழகிய கண்களைக் கொண்டவளே, எனக்காக மதுசூதனர் விரைவில் இங்கே வரப்போகிறார் பார்.(201) அவரது சங்கொலியையும், {பலதேவரின்} கைகள் தட்டும் ஒலியையும் கேட்டுத் தானவர்கள் அழிவார்கள், அசுரப் பெண்கள் கருக்கலைவார்கள்" என்றான்.(202) அநிருத்தனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், இளமை நிறைந்த உஷை ஆறுதலடைந்தாலும், இரக்கமற்ற தன் தந்தைக்காக அழத் தொடங்கினாள்" என்றார் {வைசம்பாயனர்}.(203)
விஷ்ணு பர்வம் பகுதி – 176 – 120ல் உள்ள சுலோகங்கள் : 203
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |