(கூடோத்காடனம்)
Krishna explains the mystery | Vishnu-Parva-Chapter-171-115 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கண்ணால் கண்ட அற்புதங்களைக் குறித்துக் கேட்ட அர்ஜுனன்; கிருஷ்ணன் தன்னைப் பரம்பொருளென வெளிப்படுத்திக் கொண்டது...
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதரே, ரிஷிகளைப் போன்ற நூறு பிராமணர்களுக்கு உணவளித்துவிட்டு, என்னோடும், விருஷ்ணி, போஜ குலத்தவரோடும் சேர்த்து தானும் உண்ட பிறகு அற்புதமும், தெய்வீகமுமான பல்வேறு காரியங்களைக் குறித்துக் கிருஷ்ணன் பேசினான்.(1-2)
ஜனார்த்தனன் பேசி முடித்ததும், நான் கண்டவை {கண்களால் கண்ட அற்புதங்களைக்} குறித்த ஆவலில் நிறைந்திருந்த நான் அவனை அணுகி,(3) "ஓ! தாமரைக் கண் கிருஷ்ணா, அந்தப் பெருங்கடலின் நீர் அசையாமல் இறுகியது எவ்வாறு? {மலைகளின் வழியாக நாம் செல்ல முடிந்தது எவ்வாறு?}.((4)பயங்கரம் நிறைந்த அந்தக் காரிருள் உன் சக்கரத்தால் விலகியது எவ்வாறு? அந்த ஒளிக்குவியலுக்குள் நீ நுழைந்தது எவ்வாறு?(5) ஓ! தலைவா, அந்த ஒளிக்குவியலால் அந்தப் பிராமணச் சிறுவர்கள் அபகரிக்கப்பட்டது ஏன்? அவ்வளவு நீண்ட தொலைவு குறுகியது எவ்வாறு?(6) ஓ! கேசவா, இவ்வளவு குறுகிய காலத்திற்குள் நம்மால் சென்று திரும்ப முடிந்தது எவ்வாறு? இவை அனைத்தையும் எனக்கு முறையாக விளக்குவாயாக" என்று கேட்டேன்.(7)
வாசுதேவன், "பிராமணருக்காக நான் அங்கே செல்வேன், மற்றபடி அங்கே செல்ல மாட்டேன் என்று நினைத்த அந்தப் பேராத்மா {அந்தப் பேரொளிக் குவியல்} என்னைக் காண்பதற்காகவே அந்தப் பிராமணரின் மகன்களை அபகரித்துச் சென்றான்.(8) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, அங்கே நீ கண்ட தெய்வீகப் பேரொளி பிரம்ம ஒளியால் நிறைந்த நானேயன்றி வேறில்லை. என்னுடைய நித்தியமான ஒளி சக்தியே அது {அந்தப் பரம்பொருள்}.(9) வெளிப்பட்டும், வெளிப்படாமலும் இருக்கும் என்னுடைய நித்தியமான பெரும் பிரகிருதியே {பேரியல்பே} அஃது. (அதனைப் புரிந்து கொண்டு) அதற்குள் நுழையும் பெரும் யோகிகள் இறுதி விடுதலையை {முக்தியை} அடைகிறார்கள்.(10) பிரகிருதியானது, சாங்கிய யோகிகளுக்கும் {ஞான யோகிகளுக்கும்}, கர்ம யோகிகளுக்கும் பெரும்புகலிடமாகும். அதுவே பரப்ரம்மம். அதுவே அண்டத்தில் பல பிரிவுகளே உண்டாக்குகிறது.(11) ஓ! பாரதா, என்னுடைய படைப்பாற்றலாக அதை அறிவாயாக. அசையாமல் இறுகிய நீரைக் கொண்ட அந்தப் பெருங்கடல் நானே. நீரை இறுகச் செய்தவனும் நானே.(12) நீ கண்ட அந்த ஏழு மலைகளும், புழுதியால் உண்டான அந்தக் காரிருளும் நானே.(13) மேகத்தைப் போன்ற இருளும், அதை விலக்கியவனும் நானே. பூதங்களையும், நித்தியமான அறத்தையும் {ஸனாதன தர்மத்தையும்} படைத்தவன் நானே.(14) சந்திர சூரியர்களும், பெருமலைகளும், ஆறுகளும் தடாகங்களும், நான்கு திசைகளும் என்னுடைய நான்கு வகை ஆன்மாக்களே.(15) நான்கு வர்ணங்களும், நான்கு ஆசிரமங்களும் என்னில் இருந்தே வெளிப்பட்டன. நான்கு வகைப் படைப்புகளின்[1] படைப்பாளனாக என்னை நீ அறிவாயாக" என்றான் {கிருஷ்ணன்}".(16)
[1] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜராயுஜம் - ஈன்று பிறந்தவை {பாலூட்டி}, அண்டஜம் - முட்டையில் இருந்து பிறந்தவை, ஸ்வேதஜம் - வியர்வையில் பிறப்பவை, உத்பிஜம் - பூமியில் பிறப்பவை {நிலத்தில் விளைபவை} ஆகியன நான்கு வகைப் படைப்புகள் என்று கீதா பிரஸ்ஸின் உரையில் இருக்கிறது" என்றிருக்கிறது. மஹாபாரதம், அஸ்வமேத பர்வம் பகுதி 42ல், {உப பர்வமான} அனுகீதா பர்வத்தின் 27ம் பகுதியில் 33ம் ஸ்லோகத்திலும் இது குறிப்பிடப்படுகிறது.
{வைசம்பாயனர் சொன்னார்}, "அர்ஜுனன், "ஓ! தலைவா, ஓ! உயிரினங்கள் அனைத்தின் தெய்வீக ஆட்சியாளா, ஓ! புருஷோத்தமா, உன்னை வணங்குகிறேன். நான் உனது உண்மையான சுயத்தை {ஆன்மாவை} அறிந்து கொள்ள விரும்புவதால் உன் பாதுகாப்பை நாடி {உன்னைச் சரணடைந்து} இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன்" என்றான்.(17)
வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, "ஓ! பரதனின் வழித்தோன்றலே, ஓ! பாண்டுவின் மகனே, பிரம்மனும், பிராமணர்களும், தபங்கள், வாய்மை, பெரியவையும், சிறியவையுமான மற்ற அனைத்தும் என்னில் இருந்தே வெளிப்பட்டன.(18) ஓ! பெருங்கரங்களைக் கொண்ட தனஞ்சயா, நான் உனக்குப் பிடித்தமானவன், நீ எனக்குப் பிடித்தமானவன். அதற்காகவே நான் இதை உனக்குச் சொல்கிறேனேயன்றி வேறில்லை. ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ஓ! பிருதையின் மகனே, ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் நானே.(19) முனிவர்களும், தேவர்களும், யக்ஞங்களும் {வேள்விகளும்} என் ஆற்றலைக் கொண்டவர்களே. பூமி, காற்று, ஆகாயம், நீர், ஒளி ஆகிய ஐம்பூதங்களும்,(20) சந்திர சூரியர்கள், பகலிரவு, பக்ஷம், மாதங்கள், பருவகாலங்கள், முஹூர்த்தங்கள், கலைகள், க்ஷணங்கள், வருடங்கள்,(21) பல்வேறு மந்திரங்கள், பல்வேறு சாத்திரங்கள், கல்வி {ஞானம்} ஆகியவையும், இன்னும் பிற அனைத்தும் என்னில் இருந்தே வெளிப்பட்டன.(22) ஓ! குந்தியின் மகனே, படைப்பும், அழிவும் என்னில் இருந்தே நேர்கின்றன. மெய்யும், மெய்யற்றதும் நானே, {சத், அசத் ஆகியனவும் நானே}, தூய பிரம்மமும் நானே" என்றான் {கிருஷ்ணன்}.(23)
அர்ஜுனன், "அந்த நேரத்தில் ரிஷிகேசன், என் மீது கொண்ட அன்பின் காரணமாக இதை எனக்குச் சொன்னான், அதுமுதல் என் மனம் எப்போதும் ஜனார்த்தனனிடம் பற்றுள்ளதாக நிலைத்திருக்கிறது.(24) நான் கேசவனின் சக்தியைக் கேட்டுமிருக்கிறேன், இதை நானே கண்டும் இருக்கிறேன். உமது வேண்டுகோளுக்கு இணங்க இப்போது நான் சொன்னதைவிட ஜனார்த்தனனின் பெருஞ்சக்திவாய்ந்த செயல்கள் பல இருக்கின்றன" என்றான்".(25)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "குருக்களில் முதன்மையானவனும், அறம்சார்ந்த மன்னனுமான யுதிஷ்டிரன் இந்தச் சொற்களைக் கேட்டுத் தன் மனத்தில் புருஷோத்தமனான கோவிந்தனை வழிபட்டான்.(26) அந்த நேரத்தில் யுதிஷ்டிரனும், அவனது தம்பிகள் அனைவரும், அங்கு இருந்த மன்னர்களும் ஆச்சரியத்தில் நிறைந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(27)
விஷ்ணு பர்வம் பகுதி – 171 – 115ல் உள்ள சுலோகங்கள் : 27
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |