(மிருதப்ராஹ்மணபுத்ரஸ்ய புன꞉ ப்ரத்யாநயனம்)
Krishna rescues the Brahmana's sons | Vishnu-Parva-Chapter-170-114 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பிராமணனின் நான்கு மகன்களையும் மீட்டுக் கொடுத்த கிருஷ்ணன்...
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "மலைகளையும், ஆறுகளையும், காடுகளையும் கடந்து சென்ற நாங்கள் மகரங்களின் வசிப்பிடமான பெருங்கடலைக் கண்டோம்.(1) அப்போது பெருங்கடலானவன் {சமுத்ரராஜன்}, தன் சொந்த வடிவில் கரங்களைக் கூப்பிய படியும், அர்க்கியத்தைச் சுமந்தபடியும் ஜனார்த்தனனின் முன்பு தோன்றி, "நான் செய்ய வேண்டியதென்ன?" என்று கேட்டான்.(2)
பெருங்கடலின் துதியை ஏற்றுக் கொண்ட ஜனார்த்தனன், "ஓ! ஆறுகளின் தலைவா, "என் தேருக்கான வழியை நீ வழங்க வேண்டுமென விரும்புகிறேன்" என்றான்.(3)
அப்போது சமுத்ரன், கூப்பிய கரங்களுடன் கூடியவனாகக் கருடத்வஜனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தலைவா, அருளப்பட்டிருப்பாயாக. இவ்வாறு செயல்படாதே, பின்னர்ப் பிறரும் இவ்வாறு செய்வார்கள்.(4) ஓ! ஜனார்த்தனா, எட்டாத ஆழமுடைய பரந்த பரப்பில் முன்பு நீயே என்னை நிலை நிறுத்தினாய். நீ நிறுவிய வழியையே நான் பின்பற்றுவேன்.(5) நீ இவ்வாறு செய்தால், பலத்தில் செருக்குடைய பிற மன்னர்களும் இந்த வழியின் மூலம் என்னைக் கடந்து செல்வார்கள். எனவே, ஓ! கோவிந்தா, சரியென நீ கருதுவதைச் செய்வாயாக" என்றான்.(6)
வாசுதேவன், "எனக்காகவும், இந்தப் பிராமணருக்காகவும் என் சொற்களைப் பின்பற்றுவாயாக. என்னைத் தவிர வேறு எவராலும் உன்னைத் தாக்க {கடந்து செல்ல} முடியாது" என்றான்.(7)
சாபத்திற்கு அஞ்சிய பெருங்கடல் அப்போது ஜனார்த்தனனிடம், "ஓ! கிருஷ்ணா, ஓ! கேசியைக் கொன்றவனே, அவ்வாறே ஆகட்டும்.(8) நான் வற்ற செய்யும் பாதையில் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட உன்னுடைய தேர் அதன் சாரதியுடன் செல்லட்டும்" என்றான்.(9)
வாசுதேவன், "ஓ! பெருங்கடலே, உன்னில் உள்ள ரத்தினக் குவியலைக் குறித்து மக்கள் அறியாத வரையில் நீ ஒருபோதும் வற்றமாட்டாயென முன்பு நான் உனக்கு வரமளித்திருந்தேன் {எனவே உன் நீரை நீ வற்ற செய்யாதே}.(10) என்னையும், என் தேரையும் அனுமதிக்கும் எல்லை வரை மட்டும் உன் நீர் கலங்காதிருக்கட்டும் {அசையாமல் இறுகட்டும்}. அவ்வாறு செய்தால் ஒருபோதும் எந்த மனிதனாலும் உன்னில் உள்ள ரத்தினக் குவியலின் அளவை மதிப்பிட முடியாது" என்றான்.(11)
இதைக் கேட்டப் பெருங்கடல், "அவ்வாறே ஆகட்டும்" என்றான்; நாங்கள் ஒளிபெருந்திய அந்தச் செந்நீரில் நிலத்தில் செல்வது போலச் சென்றோம்.(12) ஒரு கணத்தில் நாங்கள் பெருங்கடலையும், உத்தரக் குருவையும், கந்தமாதனத்தையும் கடந்து சென்றோம்.(13) அப்போது ஏழு மலைகளான ஜயந்தம், வைஜயந்தம், நீலம், ரஜதம்,(14) மஹாமேரு, கைலாசம், இந்திரக்கூடம் ஆகியவை பல்வேறு அற்புத வடிவங்களை ஏற்றுக் கேசவனின் முன்பு தோன்றி கோவிந்தனை வணங்கிவிட்டு,(15) "நாங்கள் செய்ய வேண்டியதென்ன?" என்று கேட்டன.
மதுசூதனனான ரிஷிகேசன், அவர்கள் அனைவரையும் வரவேற்று,(16) தன் முன் தலைவணங்கி நின்ற அந்த மலைகளிடம், "நீங்கள் எனக்கு வழி வழங்க வேண்டும்" என்றான்.(17)
அந்த மலைகள், கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டு அவற்றை ஏற்றுக் கொண்டு அவனுக்கு வழி வழங்கி மறைந்தன. ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே},(18) இக்காரியத்தைக் கண்டு நான் பேராச்சரியத்தால் நிறைந்தேன். மேகங்களின் ஊடாகச் செல்லும் சூரியனைப் போல நாங்கள் தடங்கலேதும் இன்றிப் பயணித்தோம்.(19) அந்தச் சிறந்த தேர், ஏழு த்வீபங்கள், பெருங்கடல்கள், ஏழு ஆறுகள் ஆகியவற்றையும், லோகாலோகத்தையும் {லோகாலோக மலையையும்} கடந்து மற்றொரு பகுதிக்குள் {உலகத்திற்குள்} நுழைந்தது.(20)
இவ்வாறு சென்று கொண்டிருந்த போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் குதிரைகள் தேரை இழுக்கப் பெரிதும் சிரமப்படுவதை நான் கண்டேன். என் கரங்களால் அவற்றைத் தீண்டியபோது, இருளானது அடர்த்தியான புழுதியைப் {சேற்றைப்} போல இருப்பதை உணர்ந்தேன்.(21) அது படிப்படியாக ஒரு மலையின் வடிவை ஏற்றது. {குதிரைகள் மேலும் நகர முடியாமல் நின்றன}.(22)அதைக் கண்ட கோவிந்தன், தன் சக்கரத்தால் அந்த இருளையும், புழுதியையும் விலக்கினான், தேருக்கான வழியும் புலப்பட்டது.(23)
வானம் புலப்பட்டு, இருளில் இருந்து நாங்கள் வெளிப்பட்டு என் அச்சம் அகன்ற பிறகே நான் இன்னும் உயிரோடிருக்கிறேன் என நினைத்தேன்.(24) ஒரு கணத்தில், உலகங்கள் அனைத்திலும் படர்ந்து பரந்திருக்கும் ஒரு மனிதனின் வடிவில் ஓர் ஒளிக் குவியலை வானத்தில் கண்டேன்.(25) பிறகு, ரிஷிகேசன் அந்த ஒளிக் குவியலுக்குள் நுழைந்தான், அந்தப் பிராமணர்களில் சிறந்தவரும், நானும் தேரில் காத்திருந்தோம்.(26) பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன் ஒரு கணத்தில் அந்தப் பிராமணரின் நான்கு மகன்களுடன் திரும்பி வந்து,(27) முன்பு களவாடப்பட்ட மூன்று சிறுவர்களையும், புதிதாகப் பிறந்த குழந்தையையும் அந்தப் பிராமணரின் கரங்களில் ஒப்படைத்தான்.(28)
ஓ! பேரரசே {யுதிஷ்டிரரே}, அந்தப் பிராமணர் தமது மகன்களைத் திரும்பப் பெற்றதும் பெருமகிழ்ச்சியடைந்தார், நானும் பேராச்சரியத்திலும், பெருமகிழ்ச்சியிலும் நிறைந்தேன்.(29) ஓ! பாரதர்களில் முதன்மையானவரே, அதன் பின்னர் நாங்கள் ஏற்கனவே சென்ற வழியிலேயே அந்தப் பிராமணரின் மகன்களுடன் திரும்பி வந்தோம்.(30) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, ஒரே கணத்தில் துவாரகையை அடைந்த நாங்கள் அந்தப் பகலின் முதல் பகுதியே {முற்பகலே} கூட நிறைவடையாததைக் கண்டோம். அதைக் கண்ட நான் மீண்டும் ஆச்சரியத்தால் நிறைந்தேன்.(31) அதன் பிறகு, பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன், அந்தப் பிராமணருக்கும், அவரது மகன்களுக்கும் உணவளித்து, செல்வத்தால் அவர்களை நிறைவடையச் செய்து, அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தான்" என்றான் {அர்ஜுனன்}.(32)
விஷ்ணு பர்வம் பகுதி – 170 – 114ல் உள்ள சுலோகங்கள் : 32
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |