(கிருஷ்ணஸ்யோதீசீகமநம்)
Arjuna goes to recue the brahmana and becomes unsuccessful | Vishnu-Parva-Chapter-169-113 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : குழந்தையைக் காக்க முடியாமல் துவாரகை திரும்பிய அர்ஜுனன்; தீப்புகுவதில் இருந்து அர்ஜுனனைத் தடுத்த கிருஷ்ணன்; அர்ஜுனனை தனக்குத் தேரோட்டியாக நியமித்தது...
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஒரு கணத்திற்குள் {ஒரு முஹூர்த்த காலத்திற்குள்} அந்தக் கிராமத்தின் எல்லையை அடைந்த நாங்கள், எங்கள் விலங்குகள் அனைத்தும் களைப்படைந்து இருந்ததால் அங்கேயே {எல்லையிலேயே} தங்கினோம்.(1) சில கணங்களுக்குப் பிறகு நான் விருஷ்ணிகளின் பெரும்படை சூழ நகருக்குள் நுழைந்தேன்.(2) அந்த நேரத்தில் அனைத்தும் எரிந்து கொண்டிருந்தன, எரியும் கழுகுகளும், விலங்குகளும் எங்களை அச்சுறுத்தின.(3) பெரிய கருங்கொள்ளிகள் அங்கே விழுந்தன, சூரியன் தன் பிரகாசத்தை இழந்திருந்தான், பூமி நடுங்கினாள்.(4) பயங்கரம் நிறைந்தவையும், மயிர் கூச்சத்தை ஏற்படுத்துபவையுமான அந்தத் தீய சகுனங்களைக் கண்ட நான் கவலையில் நிறைந்தவனாக என்னுடைய படை வீரர்களிடம் ஆயத்தமாக இருக்குமாறு ஆணையிட்டேன்.(5) யுயுதானனின் {சாத்யகியின்} தலைமையிலான விருஷ்ணிகள், அந்தகக் குலப் பெருந்தேர் வீரர்கள் அதைக் கேட்டுவிட்டுத் தங்கள் தங்கள் தேர்களை ஆயத்தம் செய்தனர், நானும் ஆயுதம் தரித்தவனானேன்.(6)
நள்ளிரவு கடந்ததும் அச்சத்தால் பீடிக்கப்பட்ட அந்தப் பிராமணர் எங்களை அணுகி, "என் மனைவி பிள்ளை பெறும் தருவாயில் இருக்கிறாள். நான் வஞ்சிக்கப்படாத வகையில் நீங்கள் {கவனமாக} உங்களை நிலைநிறுத்திக் கொள்வீராக" என்றார்.(7,8)
ஓ! மன்னா, {அவர் சொல்லிச் சென்ற} ஒரு கணத்திற்குள், "அபகரிக்கப்பட்டான், அபகரிக்கப்பட்டான்" என்று கதறியவாறு பரிதாபகரமான அழுகுரல் அந்தப் பிராமணரின் வீட்டில் இருந்து கேட்டது.(9)
குழந்தையின் அழுகுரல் வானத்தில் கேட்டாலும் அந்த ராட்சசனை எங்களால் காண முடியவில்லை.(10) திசைகள் அனைத்தையும் கலங்கடித்தவாறு கணைமாரியை நாங்கள் பொழிந்தாலும் {அவ்வாறு பொழிந்து குழந்தை அபகரிக்கப்படுவதைத் தடுக்க முயன்றாலும்} அந்தப் பிள்ளை அபகரிக்கப்பட்டான்.(11)
அந்தப் பிள்ளை அபகரிக்கப்பட்டதும் அந்தப் பிராமணர், விருஷ்ணிகளும், நானும் எங்கள் உணர்வுகளை இழக்கும் வகையில் கடுஞ்சொற்களால் எங்களை ஏசினார். அவர் குறிப்பாக என்னிடம்,(12,13) "நீ என்னைப் பாதுகாப்பதாகச் சொன்னாய். ஆனால் உன்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. எனவே, ஓ! தீய புத்தியைக் கொண்ட இழிந்தவனே, இந்த நல்ல சொற்களைக் கேட்பாயாக.(14) ஒப்பற்ற புத்திமானான கேசவனிடம் {போட்டி போடுவது போல} எப்போதும் நீ வீணாகக் கொக்கரிக்கிறாய். கோவிந்தன் இங்கிருந்தால், இக்கொடுமை நேர்ந்திராது.(15) ஓ! மூடா, அறத்தின் நான்கில் ஒரு பகுதிக்கு உரியவனாக ஒரு காவலன் இருப்பதைப் போலவே ஒருவனைப் பாதுகாக்க முடியாதவனும் {அதன் மூலம்} விளையும் பாவத்தில் பங்குடையவனே;(16) என்னைப் பாதுகாப்பதாக நீ சொன்னாலும் உன்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. உன்னுடைய காண்டீவமும், ஆற்றலும், புகழும் வீணே[1]" என்றார்.(17)
[1] மஹாபாரதம், கர்ண பர்வம் பகுதி 69ல் காண்டீவத்தைப் பழித்ததற்காக யுதிஷ்டிரனைக் கொல்ல விழைகிறான் அர்ஜுனன்.
எனினும், நான் அந்தப் பிராமணரிடம் ஏதும் பேசாமல் விருஷ்ணி, அந்தகக் குல இளவரசர்களுடன் சேர்ந்து, பெரும்பிரகாசம் கொண்ட கிருஷ்ணன் இருக்குமிடத்திற்குப் புறப்பட்டேன்.(18) துவாராவதி நகரை அடைந்த நான் மதுசூதனனான கோவிந்தனைக் கண்டேன், வெட்கத்தாலும், கவலையாலும் நிறைந்திருந்த என்னை அவனும் கண்டான்.(19) வெட்கி நின்ற என்னைக் கண்ட மாதவன், இனிய சொற்களால் என்னையும், அந்தப் பிராமணரையும் தேற்றினான்[2].
[2] 19ம் ஸ்லோகத்திற்குப் பின் வரும் இந்த வரி சித்திராசலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இருக்கிறது.
{அந்தப் பிராமணர், கிருஷ்ணனின் முன்பு வெட்கி நின்ற என்னை நிந்திக்கும் வகையில், "ஓர் அலியின் சொற்களைக் கேட்ட என் மடமையைப் பார்.(20) பிரத்யும்னனாலோ, அநிருத்தனாலோ, பலனாலோ {பலராமனாலோ}, கேசவனாலோ காக்க முடியாதவனை வேறு எந்தத் தேவனால் காக்க முடியும்?(21) பயனற்ற சொற்களைப் பேசும் இந்த அர்ஜுனனும் பயனற்றவனே. தற்பெருமை பேசும் இவனுடைய வில்லும் பயனற்றதே[3]. மூடத்தனத்தால் தீய புத்தி கொண்டவன், தேவனால் காக்கமுடியாததை இவன் காக்க வருகிறான்" என்றார்.(22)
[3] இந்தப் பிராமணர் இப்போது இரண்டாவது முறையாகக் காண்டீவத்தைப் பழிக்கிறார். அதுவும் கிருஷ்ணனின் முன்னிலையில் வைத்து.
இவ்வாறு அந்தப் பிராமணர் சபித்துக் கொண்டிருந்தபோது நான் வைஷ்ணவி வித்தையைக் கையாண்டு வீரத் தலைவனான யமன் இருக்கும் ஸம்யமணிக்கு {ஸம்யமபுரத்திற்குச்} சென்றேன்.(23) அங்கே அந்தப் பிராமணரின் மகனைக் காணமுடியாமல், இந்திரனின் நகருக்கு {அமராவதிக்குச்} சென்றேன். அதன் பிறகு நெருப்பு தேவனின் {அக்னிதேவனின்} நகரமான நிர்ருதிக்கும், சோமனின் நகரான உதீசீக்கும், வருணனின் நகருக்கும் {வாருணிக்கும்} சென்றேன்.(24) அதன்பிறகு என் ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ரசாதலத்திற்கும், சொர்க்கத்திற்கும் சென்றேன். எங்கேயும் அந்தப் பிராமணரின் மகனை என்னால் காண முடியவில்லை. என்னால் என் சொற்களைக் காக்க முடியவில்லை.(25)
நான் நெருப்புக்குள் நுழைய இருந்தபோது[4], கிருஷ்ணனும், பிரத்யும்னனும் என்னைத் தடுத்தனர். கிருஷ்ணன், "உன் ஆன்மாவை அவமதிக்காதே {உன்னை நீயே அவமதித்துக் கொள்ளாதே}. இந்தப் பிராமணரின் மகனை நீ காண்பாய் {உன் இலக்கை நீ அடைவாய்}.(26) உன்னுடைய பெரும் புகழை மனிதர்கள் எப்போதும் நிலைநிறுத்துவார்கள்" என்றான். மாதவன் இவ்வாறு அன்புடன் பேசி எனக்கு ஆறுதல் கூறினான்.(27)}[5]
[4] இருமுறை காண்டீவத்தை நிந்தித்தாலும் அவ்வாறு செய்தது ஒரு பிராமணர் என்பதைக் கருத்தில் கொண்டும், தன்னால் தன் சொல்லைக் காக்க முடியவில்லை என்ற வேதனையிலும் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் அர்ஜுனன் தீப்புக விழைகிறான். அப்போது அவனைத் தடுத்து கிருஷ்ணன் சொல்லும் வாக்கியம் தற்கொலை செய்யும் எண்ணம் கொண்ட அர்ஜுனனைப் பின்வாங்கச் செய்கிறது. எவரையும் பின்வாங்கச் செய்யும். துரோண பர்வம் பகுதி 145ல் அர்ஜுனனின் சபதத்தை மெய்ப்பிப்பதற்காகவும், அவனது உயிரைக் காப்பதற்காகவும் சூரியனை மறைத்தான் கிருஷ்ணன். ஜெயத்ரதன் விஷயத்தில் அர்ஜுனன் ஏற்ற சபதத்தைப் படிக்கத் துரோண பர்வம் 73ம் பகுதிக்குச் செல்லவும்
[5] { } என்ற அடைப்புக்குறிக்குள் 20 முதல் 27ம் ஸ்லோகம் வரையுள்ள செய்திகள் மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இல்லை. சித்திராசலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் இருக்கிறது. 20 முதல் 27ம் ஸ்லோகம் வரையுள்ள இந்தப் பகுதி சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
அவன் {கிருஷ்ணன்}, அந்தப் பிராமணரையும் தேற்றிய பிறகு, {தன் தேரோட்டியான} தாருகனிடம், "என் குதிரைகளான சுக்ரீவம், சைப்யம், மேகபுஷ்பம், பலாஹகம் ஆகியவற்றை ஆயத்தம் செய்வாயாக" என்றான்.(28)
சூரனின் வழித்தோன்றலான கிருஷ்ணன், அந்தப் பிராமணரைத் தேரில் ஏறச் செய்து, தாருகனை கீழே இறக்கி, என்னைத் தேரோட்டும்படி கேட்டுக் கொண்டான். ஓ! குருவின் வழித்தோன்றலே, அதன்பிறகு, கிருஷ்ணனும், அந்தப் பிராமணரும், நானும் அந்தத் தேரில் வடக்கு நோக்கிப் புறப்பட்டோம்" என்றான் {அர்ஜுனன்}.(30)
விஷ்ணு பர்வம் பகுதி – 169 – 113ல் உள்ள சுலோகங்கள் : 30
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |