Wednesday 30 December 2020

கிருஷ்ணனின் சந்ததி | விஷ்ணு பர்வம் பகுதி – 160 – 104

(விருஷ்ணிவம்சவர்ணநம்)

Krishna's children | Vishnu-Parva-Chapter-160-104 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் குடும்பம்; பலதேவன், வசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோரின் குடும்ப வம்சாவளி கூறப்படல்...


Krishna with his children

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மதிப்பிற்குரிய ஐயா, கிருஷ்ணனின் பல்லாயிரம் மனைவியரில் எட்டுப் பெயர்களை முறையாகக் குறிப்பிட்டீர். அவர்களின் பிள்ளைகளைக் குறித்து இப்போது சொல்வீராக" என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர், "கிருஷ்ணனின் எட்டு ராணிகள் {அவனது மனைவியரில்} முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் வீர மைந்தர்களை ஈன்றெடுத்தனர். அவர்களுடைய பிள்ளைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2)

ருக்மிணி, சத்யபாமா, {நக்னஜித்தின் மகளும், சத்யா என்று அழைக்கப்பட்டவளுமான} நாக்னஜிதி தேவி, சைப்யை என்றும் அழைக்கப்பட்ட (சிபி நாட்டு இளவரசி) ஸுதத்தை, அழகிய சிரிப்பைக் கொண்ட லக்ஷ்மணை,(3) காளிந்தி என்றும் அழைக்கப்பட்ட {காளிந்த நாட்டு இளவரசி} மித்ரவிந்தை, பௌரவி என்றும் அழைக்கப்பட்ட ஜாம்பவதி, மாத்ரி {மத்ர நாட்டு இளவரசி} என்றும் அழைக்கப்பட்ட ஸுபீமை ஆகியோரே அவர்கள் {கிருஷ்ணனின் எட்டு மனைவியர்}. இப்போது ருக்மிணியின் பிள்ளைகளைக் குறித்துக் கேட்பாயாக[1].(4)

[1] 2ம் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டவாறு எட்டு மனைவியர் இருக்க வேண்டும். மன்மதநாததத்தரின் பதிப்பில் அவ்வாறு இல்லாததால் மேற்கண்ட 3, 4 ஸ்லோகங்கள் சித்திரசாலை பதிப்பில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளவாறே மொழிபெயர்த்தால், "அவர்கள் ருக்மிணி, சத்யபாமா, நக்னஜித், ஸுதத்தை, சைப்யை, லக்ஷ்மணை, மித்ரவிந்தை, காளிந்தி, ஜாம்பவதி, பௌரவி, ஸுபீமை, மாத்ரி ஆகியோரும் பிறரும் {கிருஷ்ணனின் முக்கிய மனைவியர்} ஆவர். அவர்களில் ருக்மிணியின் மகன்களுடைய பெயர்களைக் கேட்பாயாக" என்றிருக்கும். இதில் 12 பெயர்கள் வருகின்றனர். உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ருக்மிணி, ஸத்யபாமை, நாக்நஜிதி தேவி, சிபிதேசத்து ஸுதத்தை, அழகிய சிரிப்புடைய லக்ஷ்மணா, காளிந்த தேசத்து மித்ரவிந்தை, ஜாம்பவதி, புரு வம்சத்து மத்ரகுமாரி ஸுபீமை. ருக்மிணி பிள்ளைகளைப் பற்றிக் கேள்" என்றிருக்கிறது. இதிலும் சரியாக எட்டு மனைவியர் சொல்லப்பட்டிருக்கின்றனர். விஷ்ணுபர்வம் 65ம் பகுதியில் இருந்து சென்ற பகுதியான 103ம் பகுதி வரை உள்ள செய்திகள் பிபேக் திப்ராயின் பதிப்பில் இல்லை. இங்கிருந்து மீண்டும் தொடங்குகிறது. அதில், "அவர்கள் ருக்மிணி,  நக்னஜித்தின் மகளான ராணி சத்யபாமா, சுதத்தையான சைப்யை, அழகிய புன்னகையைக் கொண்ட லக்ஷ்மணை, மித்ரவிந்தை, காளிந்தி, பௌரவி ஜாம்பவதி, சுபீமையான மாத்ரி" என்றிருக்கிறது. மேலும் அதன் அடிக்குறிப்பில் இந்தப் பட்டியல் குழப்பதையே ஏற்படுத்துகிறது. சுதத்தை சைப்யையுடனும், சுபீமை மாத்ரியுடனும், பௌரவி ஜாம்பவதியுடனும் ஒப்பிடப்படுகிறது. எதுவும் இங்கே பொருந்தவில்லை" என்றிருக்கிறது.

சம்பரனைக் கொன்றவனும், பிரத்யும்னன் என்ற பெயரைக் கொண்டவனுமான மகனையே முதலில் ருக்மிணி ஈன்றெடுத்தாள். அடுத்ததாக அவள் வலிமைமிக்கத் தேர்வீரனும், விருஷ்ணி குலக் கொழுந்துமான சாருதேஷ்ணனையும்,(5) அடுத்தடுத்து சாருபத்திரன், சாருகர்ப்பன், ஸுதேஷ்ணன், துருமன், ஸுஷேணன், சாருகுப்தன்,[2] பெருஞ்சக்திவாய்ந்த சாருவிந்தன் ஆகியோரையும்(6) இளையவனான சாருபாஹுவையும் பெற்றாள். மேலும் அவள் சாருமதி என்ற பெயரைக் கொண்ட ஒரு மகளையும் பெற்றெடுத்தாள்.(7)

[2] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே சாருதேஷ்ணன் என்று மட்டுமே இருக்கிறது. பாஷாபாரதம் தொகுதி 6 பக்கம் 696ல் 1-103-6ல் சாருதேஷ்ணன் என்று மட்டுமே இருக்கிறது" என்றிருக்கிறது. ஆனால் கீதா பிரஸ் பதிப்பில் சுஷேணனும், சாருகுப்தனும் என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பில் உள்ளபடி இட்டால் சாருதேஷ்ணன் என்ற பெயர் இருமுறை வருகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், சுஷேணன், சாருகுப்தன் என்ற பெயர்களே இருக்கின்றன.

கருடத்வஜன் (கிருஷ்ணன்) சத்யபாமாவிடம் பானு, பீமரதன், க்ஷுபன், ரோஹிதன், தீப்திமான், தாம்ரஜாக்ஷன், ஜலாந்தகன் என்ற ஏழு மகன்களையும், பானு, பீமலிகை, தாந்திரபக்ஷை {தாம்ரபர்ணி}[3], ஜலந்தமை ஆகிய நான்கு மகள்களையும் பெற்றாள்.(8)

[3] சித்திரசாலை, உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்கார் ஆகியோரின் பதிப்புகளில் இவளது பெயர் தாம்ரபரணி என்றே இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் மட்டும் தாந்திரபக்ஷை என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தாம்ரஜக்ஷை" என்றிருக்கிறது.

ஜாம்பவதி, போர்க்களத்தின் ரத்தினமும், சாம்பன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனையும், மித்ரவான், மித்ரவிந்தன், மித்ரபாஹு, சுநீதன் என்ற மகன்களையும், மித்ராவதி என்ற ஒரு மகளையும் பெற்றாள்.(9)

நாக்னஜிதியின் பிள்ளைகளை இப்போது கேட்பாயாக. அவள் பத்ரகாரன், பத்ரவிந்தன் என்ற இரு மகன்களையும், பத்ராவதி என்ற பெயரில் ஒரு மகளையும் பெற்றாள்.(10)

சைப்யை {ஸுதத்தை}, ஸங்கிராமஜித், ஸத்யஜித், சேனஜித், ஷூரன், ஸபத்நஜித் என்ற மகன்களைப் பெற்றாள்.(11)

விருகாஷ்வன், விருகநிர்விருதி, விருகதீப்தி, ஸுபீமன் என்ற இளவரசர்கள் மாத்ரியின் {ஸுபீமையின்} மகன்களாவர்.(12)

ஓ! மன்னா, லக்ஷ்மணையின் பிள்ளைகளை இப்போது கேட்பாயாக. காத்ரவான், காத்ரகுப்தன், பெருஞ்சக்திவாய்ந்த காத்ரவிந்தன் ஆகியோர், அவர்களின் தங்கையான காத்ரவதியுடன் {லக்ஷ்மணைக்குப்} பிறந்தனர்.(13)

காளிந்தி {மித்ரவிந்தை}, அஷ்ருதன், சுருதஸம்மிதன் என்ற மகன்களைப் பெற்றெடுத்தாள்,(14) மதுசூதனன் அஷ்ருதனை {முக்கிய மனைவியர் எட்டுப் பேரில் அடங்காத} சுருதசேனை என்பவளுக்குக் கொடுத்தான். அவ்வாறு தன் மகனைக் கொடுத்துவிட்ட ரிஷிகேசன் தன் மனைவியிடம் {காளிந்தியிடம்},(15) "இவன் எப்போதும் உங்கள் இருவருக்கும் மகனாக இருக்கட்டும்" என்றான்.

பிருகதி என்பவள் கதனைப்[4] பெற்றெடுத்தாள். {மற்றுமொரு} சைப்யையிடம் அங்கதன்,(16) குமுதன், ஸ்வேதன் என்ற மகன்களும், ஸ்வேதை என்ற மகளும் பிறந்தனர்.

[4] கதன் என்ற பெயரில் கிருஷ்ணனின் தம்பி ஒருவனும் உண்டு. இங்கே குறிப்பிடப்படுவது அவனது மகன். 

சுதேவை என்பவள் அபாவஹன், சுமித்ரன், சுசி, சித்ரரதன், சித்ரசேனன் என்ற பெயர்களைக் கொண்ட ஐந்து மகன்களையும், சித்திரை, சித்ராவதி என்ற பெயர்களைக் கொண்ட மகள்களையும் பெற்றாள்.(17)

கௌசிகி என்பவளிடம் வனன், ஸ்தம்பவனன் என்றும் அழைக்கப்பட்ட ஸ்தம்பன், நிவாசனன், வனஸ்தம்பன் என்ற மகன்களும், ஸ்தம்பவதி என்ற மகளும் பிறந்தனர்.(18)

ஸுதஸோமையிடம் உபசன்னன், சங்கு, வஜ்ராம்சு, க்ஷிப்ரன் என்ற மகன்கள் பிறந்தனர்.(19)

யௌதிஷ்டிரி என்பவளிடம் போர்க்களங்களில் அற்புத வழிமுறைகளில் போரிடும் யுதிஷ்டிரன், கபாலி, கருடன் ஆகியோர் பிறந்தனர்.(20)

இவ்வாறே நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வாசுதேவனுக்கு மகன்கள் பிறந்தனர் என்பதை அறிந்து கொள்வாயாக.(21) போரில் திறன்மிக்கவர்களான ஜனார்த்தனனின் வீர மகன்களில் எண்பதாயிரம் பேர் என்னால் சொல்லப்பட்டனர்.(22)

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, பிரத்யும்னன் விதர்ப்ப இளவரசியிடம் {ருக்மியின் மகளான ருக்மாவதியிடம்} அநிருத்தன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். அவன் தன் கொடியில் மானைச் சின்னமாகக் கொண்டவனாகவும், போரில் எவராலும் தடுக்கப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(23)

பலதேவன் {பலராமன்} ரேவதியிடம் நிசடன், உல்முகன் என்ற இரு மகன்களைப் பெற்றான். அந்தச் சகோதரர்கள் இருவரும் தேவர்களைப் போன்ற அழகர்களாக இருந்தனர்.(24)

சூரனின் மகனான வசுதேவன், தன் இரு மனைவிகளான சுதானு, நாராச்சி {சுதாரா} ஆகியோரிடம் பௌண்ட்ரகன், கபிலன் என்ற இரு மகன்களைப் பெற்றான்.(25) அவர்களில் நாராச்சி {சுதாரை} கபிலனையும், சுதானு பௌண்டரகனையும் பெற்றனர். அவ்விரு மகன்களில் பொண்டரகன் மன்னனானான், கபிலன் கான்புகுந்தான்.(26) வசுதேவன், பெருஞ்சக்திவாய்ந்தவனும், {நிஷாதர்களின் தலைவனும்} பெரும் வில்லாளியுமான ஜரனை ஒரு சூத்திரப்பெண்ணிடம்[5]  பெற்றான்.(27)

[5] சித்திர சாலை பதிப்பின் அடிக்குறிப்பில் இங்கே சூத்திரன் என்று குறிப்பிடப்படுவது நீலகண்டரின் உரையைப் பின்பற்றியே" என்றிருக்கிறது. நேரடி சொற்களில், "நிஷாதப் பிரபு" நிஷாதர்களின் தலைவன் என்றே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பெரும்பலவனான வசுதேவன், தூர்யையின் மூலம் துணிவுமிக்க ஒரு மகனைப் பெற்றிருந்தான். ஜரன் என்ற பெயரைக் கொண்ட அவன், வில்லாளிகளில் சிறந்தவனாக நிஷாதர்களின் தலைவனானான்" என்றிருக்கிறது.இங்கே குறிப்பிடப்படும் ஜரனே ஏகலவ்யன் என்பாரும் உண்டு. பெரும் வில்லாளி, நிஷாதத்தலைவன் என்பன போன்ற சொற்கள் அதை உறுதி செய்கின்றன. ஆனால், ஹரிவம்ச பர்வம் 34:33ல் ஏகலவ்யன் சூரனின் மூன்றாம் மகனான {வசுதேவனின் தம்பியான} தேவசிரவனின் இரண்டாம் மகனென மறைமுகமாகச் சொல்லப்படாமல் நேரடியாகப் பெயர் குறிப்பிட்டே சொல்லப்படுகிறான். எவ்வாறெனினும் ஏகலவ்யன் கிருஷ்ணனுக்குத் தம்பி முறையில் வருகிறான்

சாம்பன்[6], வேகமாகச் செல்பவனான சுபார்ஸ்வனைக் காசியை என்பவளிடம் மகனாகப் பெற்றான். அநிருத்தனுக்குச் சானு, வஜ்ரன்[7] என்ற இரு மகன்கள் பிறந்தனர், அவர்களில் பின்னவனே மூத்தவனாக இருந்தான்.(28) வஜ்ரனுக்குப் பிரதிரதன் என்பவனும், அவனுக்கு {பிரதிரதனுக்கு} சுசாரு என்பவனும் பிறந்தனர்.

[6] மன்மதநாததத்தரின் பதிப்பில் இங்கே வசுதேவன் என்ற இருக்கிறது. எனினும் மற்ற மூன்று பதிப்புகளிலும் சாம்பன் என்று இருப்பதால் இங்கேயும் சாம்பன் என்றே திருத்தப்படுகிறது.

[7] இந்த வஜ்ரனையே அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தின் மன்னனாக்கினான். இது மஹாபாரதம் மௌசல பர்வம் 7ம் பகுதியிலும், மஹாப்ரஸ்தானிகபர்வம் 1ம் பகுதியிலும் சொல்லப்பட்டுள்ளது. 


விருஷ்ணியின் இளைய மகன் அனமித்ரன் {சுமைத்ரன்}, சினியைப் பெற்றான்,(29) அவனுக்கு {சினிக்கு} சத்யவந்தன், பெருந்தேர்வீரனான சத்யகன் என்ற இரு மகன்கள் பிறந்தனர். வீர யுயுதானன் {சாத்யகி}, இந்தச் சத்யகனின் மகனே ஆவான்.(30) யுயுதானின் மகன் அசங்கன், அவனது {அசங்கனின்} மகன் மணி. மணியின் மகன் யுகந்திரன். இவனுடன் இந்த வம்சம் {ஜனமேஜயனிடம் இதைச் சொல்லும் காலம் வரை} நிறைவடைகிறது" என்றார் {வைசம்பாயனர்}.(31)

விஷ்ணு பர்வம் பகுதி – 160 – 104ல் உள்ள சுலோகங்கள் : 31
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்