Thursday 31 December 2020

பிரத்யும்னன் கடத்தப்பட்டான் | விஷ்ணு பர்வம் பகுதி – 161 – 105

(பிரத்யும்நஹரணம்)

An account of Pradyumna | Vishnu-Parva-Chapter-161-105 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரத்யும்னனின் முற்பிறவி வரலாறு; சம்பரனால் கடத்தப்பட்ட பிரத்யும்னன்; ரதிதேவியான மாயாவதியின் காதல்...


Mayavati and Pradyuman

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பிரத்யும்னன் சம்பரனைக் கொன்றான் என்று முன்பு நீர் சொன்னீர். பிரத்யும்னன் அவனை எவ்வாறு கொன்றான் என்பதை இப்போது எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உறுதிமிக்க நோன்புகளைக் கொண்ட காமன் (மன்மதன்), சம்பரனைக் கொல்வதற்காக வாசுதேவனின் அழகிய மகன் பிரத்யும்னனாக லக்ஷ்மியின் அம்சமான ருக்மிணிக்குப் பிறந்தான்.(2) குழந்தையாக இருந்த கிருஷ்ணனின் மகன் பிறந்த ஏழாம் நாள் நள்ளிரவில் பேற்றறையில் {பிரசவ அறையில்} இருந்து காலசம்பரன் அவனை அபகரித்துச் சென்றான்.(3) தெய்வீக மாயையைப் பின்பற்றும் கிருஷ்ணன் அனைத்தையும் அறிந்தாலும்[1], போரில் வெல்லப்பட முடியாத அந்தத் தானவனை அந்நேரத்தில் கொல்லாமல் இருந்தான்.(4)

[1] இதே அத்யாயத்தின் 28,29ம் ஸ்லோகங்களில் உள்ள செய்தி இதற்கு முரணாக இருக்கிறது. இங்கே சொல்வது வைசம்பாயனர், அங்கே சொல்வது மாயாவதி என்பதால் இந்த வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம்.

அந்தப் பேரசுரன் {காலசம்பரன்}, காலனால் தூண்டப்பட்டவனைப் போலக் கிருஷ்ணனின் மகனை அபகரித்துச் சென்றான். அவனைத் தன் தோள்களில் போட்டுக் கொண்டு தன் நகருக்குச் சென்றான்.(5) அழகியும், குணவதியும், மாயையின் அம்சமாகத் திகழ்ந்தவளுமான அவனது மனைவி மாயாவதி {ரதிதேவி} பிள்ளையற்றவளாக இருந்ததால், காலனால் தூண்டப்பட்ட அந்தத் தானவன், வாசுதேவனின் மகனைத் தன் மகன் போல் அவளிடம் கொடுத்தான்.(6,7) அவனைக் கண்டதும் அவள் இன்பத்தில் நிறைந்தாள், அவளுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது; அவள் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியாக அவனைக் கண்டாள்.(8) இவ்வாறே அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அவள், அவன் தன் அன்புக்குரிய கணவனாக இருந்ததை நினைவுகூர்ந்தாள். அதை எண்ணிப் பார்த்த அவள் மீண்டும்,(9) "எவரால் எந்த இடத்திலும் மனமகிழ்ச்சியை அடைய முடியாமல் இருந்தேனோ, எவருக்காகத் துன்பக்கடலில் மூழ்கியிருந்தேனோ அந்தத் தலைவரே இவன்.(10) முற்காலத்தில் சதியால் {சதிதேவியால்} கவலையில் பீடிக்கப்பட்டிருந்தவனும், தெய்வீகனுமான தேவன் திரிசூலபாணியால் அவர் {மன்மதன்} சாம்பலாக்கப்பட்டார்.(11) அவருடைய மனைவியான நான் அந்தக் கணவர் இவனே என்று அறிந்த பின்பும் எவ்வாறு முலை கொடுத்து மகனென்று அழைப்பேன்?" என்று நினைத்தாள்.(12)

இவ்வாறு நினைத்த மாயாவதி அந்தக் குழந்தையைச் செவிலித் தாயிடம் கொடுத்து ஊட்டமிக்க மருந்துகளின் மூலம் விரைவாகவே வளர்த்தாள்.(13) ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, செவிலியால் சொல்லப்பட்டும், அறியாமையினாலும் மாயாவதியைத் தன் அன்னையாக அறிந்தான்.(14) காமத்தால் பீடிக்கப்பட்ட மாயாவதியும், தாமரைக் கண்களைக் கொண்ட கமலத்தலைவனின் மகனை {பிரத்யும்னனை} வளர்த்து, அனைத்து வகை மாயைகளையும் அவனுக்குக் கற்பித்தாள்.(15) மெல்ல மெல்ல இளமையின் வரம்பைத் தொட்ட பிரத்யும்னன் பேரழகனாகத் தெரிந்தான், அனைத்து வகை ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும், பெண்களின் அசைவுகளைப் புரிந்து கொள்வதிலும் திறன்மிக்கவனானான்.(16)

அப்போது மாயாவதி, அழகிய பெண்ணின் தோற்றத்தை ஏற்றுக் கொண்டு, தன் அன்புக்குரிய கணவனின் துணையை நாடி, தன் உடலசைவுகளால் {முக அபிநயங்களால்} அவனை மயக்க முற்பட்டாள். பிரத்யும்னன், தன்னிடம் பற்றுடன் இருப்பவளும், இனிய புன்னகையுடன் கூடியவளுமான அந்தப் பெண்ணிடம்,(17) "இஃது என்ன? தாய்மையுணர்வுக்குப் பிறழ்முரணாக ஏன் நடந்து கொள்கிறாய்? ஐயோ, பெண்கள் எவ்வளவு தீமையானவர்களாக இருக்கிறார்கள்? அவர்களது மனம் ஏன் இவ்வாறு நிலையற்றிருக்கிறது?(18) காமத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் நீ என்னை உன் மகனாகக் கருதாமல் பிறழொழுகி முரணாக நடந்து கொள்கிறாய். ஓ! மென்மையான பெண்ணே, இத்தகைய பிறழியல்பின் காரணம் யாது? நான் உன் மகன் இல்லையா?(19) ஓ!தேவி, நீ ஏன் என்னிடம் இவ்வாறு நடந்து கொள்கிறாய்? இந்த உண்மையை நான் உன்னிடம் இருந்தே அறிய விரும்புகிறேன். பெண்களின் இயல்பு மின்னலைப் போன்று நிலையற்றது {சஞ்சலத்துடன் கூடியது}.(20) மலைச் சிகரங்களுடன் இணைந்திருக்கும் மேகங்களைப் போலவே அவர்கள் ஆண்களுடன் இணைந்திருக்கிறார்கள்.(21) ஓ! மென்மையான பெண்ணே, நான் உன் மகனா, இல்லையா என்பது முக்கியமானதல்ல. உன் உடல் அசைவுகளின் நோக்கத்தை {உண்மையை} உன் வாயின் மூலமே நான் அறிய விரும்புகிறேன்" என்றான்.(22)

காமத்தால் பீடிக்கப்பட்ட இதயத்தைக் கொண்டவளும், {மான் போன்று} மருண்டவளுமான அந்தக் காரிகைத் தனிமையான ஓரிடத்தில் கேசவனின் மகனான தன் காதலனிடம் {பிரத்யும்னனிடம்}, "நீ என் மகனில்லை, சம்பரன் உன் தந்தையுமில்லை.(23) பலம்வாய்ந்தவனும், அழகனுமான நீ விருஷ்ணியின் வழித்தோன்றலாவாய்; நீ வாசுதேவன், ருக்மிணியின் இனிமை மிகுந்த மகனாவாய்.(24) நீ பிறந்த ஏழாம் நாளில் இங்கே கொண்டு வரப்பட்டாய். ஆதரவற்ற மழலையாக நீ பேற்றறையில் கிடந்த போது பலம்வாய்ந்தவனான என் கணவன் {சம்பரன்} உன்னை அபகரித்து வந்தான்.(25) அந்தச் சம்பரன், பாகசாசனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவரும், உன் தந்தையுமான வாசுதேவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உன்னை அபகரித்து வந்தான்.(26) மகனின் நிமித்தமான கவலையில் பீடிக்கப்பட்டிருக்கும் உன் அன்னை {ருக்மிணி} கன்றைப் பிரிந்த பசுவைப் போல அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள்.(27) கொடியில் கருடனைச் சின்னமாகக் கொண்டவரும், சக்ரனைவிடப் பலம்வாய்ந்தவருமான உன் தந்தை {கிருஷ்ணன்}, நீ குழந்தையாக இருக்கும்போதே இங்கே கொண்டவரப்பட்டதால் அதை அறியாமல் இருக்கிறார். ஓ! தலைவா, நீ விருஷ்ணி இளவரசனேயன்றி சம்பரனின் மகனல்ல.(28,29) மேலும் தானவர்களால் உன்னைப் போன்ற ஒரு மகனைப் பெற முடியாது. ஓ! மென்மையானவனே, நான் உன்னை ஈன்றெடுக்காததால் என் காதலனாக உன்னை நாடுகிறேன்.(30) உன் அழகைக் கண்டு என் பலவீனமான இதயம் தளர்கிறது. மேலும், ஓ! விருஷ்ணி வீரா, என் இதயத்தில் இருக்கும் விருப்பத்தை நீயே தேடுவாயாக.(31) நீ என் மகனுமில்லை, சம்பரனின் மகனுமில்லை என்பதையும், நான் உன்னை வளர்த்ததையும் இவ்வாறே நான் சொன்னேன்" என்றாள் {மாயாவதி}.(32)

சக்கரபாணியின் மகனான பிரத்யும்னன், அனைத்து வகை மாயைகளிலும் தேர்ச்சி அடைந்திருந்தான். எனவே மாயாவதியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், கோபத்தால் தூண்டப்பட்டவனாகத் தன் பெயரை உரக்க அறிவித்தபடியே சம்பரனை அறைகூவியழைத்தான். அவன்,(33,34) "ஐயோ, குழந்தையாக இருந்த கேசவனின் மகனை அபகரித்தவனும், தீய ஆன்மா கொண்டவனுமான தானவனுக்கு அஞ்சி நான் இங்கே இருப்பேனோ?(35) இழிந்தவனான அந்தப் பாவியைக் கோபமடையச் செய்வது எவ்வாறு? நான் அவனைக் கொல்வது எவ்வாறு? அவனது கோபத்தைத் தூண்டும் செயலையே நான் செய்ய வேண்டும்.(36) அவனது வாயிலில் சுமேரு மலையைப் போல நிற்பதும், சிங்கச் சின்னம் பொறித்த முக்கோணக் கொடி பறந்து கொண்டிருப்பதும், அற்புதமானதுமான அவனது கொடிக்கம்பத்தை(37) என் கூரிய பல்லத்தால் நான் வீழ்த்தப் போகிறேன். கொடிமரம் அவமதிக்கப்பட்டதை அறிந்தால் சம்பரன் நிச்சயம் வெளியே வருவான்.(38) அப்போது நான் அவனுடன் போரிட்டு, அவனைக் கொன்றுவிட்டுத் துவாரகை திரும்புவேன்" என்று சொன்னான்.

நீண்ட கரங்களைக் கொண்ட பிரத்யும்னன், தன் வில்லின் நாணேற்றி,(39) கணைகளை ஏவி கொடிமரங்களின் ரத்தினமான சம்பரனின் கொடிமரத்தை வெட்டி வீழ்த்தினான்.(40) உயரான்ம பிரத்யும்னனால் தன் கொடிமரம் அழிக்கப்பட்டதைக் கேட்ட சம்பரன், கோபத்தால் நிறைந்தவனாகத் தன் மகன்களிடம்,(41) "ஓ! பெரும் வீரர்களே, ருக்மிணியின் மகனை உடனே கொல்வீராக. எனக்கு இந்தத் தீங்கைச் செய்த அவனை நான் காண விரும்பவில்லை" என்று ஆணையிட்டான்.(42) சம்பரனின் சொற்களைக் கேட்ட அவனது மகன்களான சித்ரஸேனன், அதிஸேனன், விஷ்வக்ஸேனன், கதன்,(43) ஸ்ருதனேபன், ஸுஷேணன், ஸோமஸேனன், மநன், ஸேனாநீ, ஸைன்யஹந்தன், ஸேனாஹன், ஸைனிகன்,(44) ஸேனஸ்கந்தன், அதிஸேனன், ஸேனகன், ஜனகன், ஸுதன், ஸகாலன், விகலன், சாந்தன், சாந்தந்தகரன், விபு {அஸுசி},(45) கும்பகேது, ஸுதமஷ்ட்ரன், கேசி ஆகியோர் நன்கு ஆயுதம் தரித்தவர்களாக மகிழ்ச்சியுடன் பிரத்யும்னனைக் கொல்வதற்காக வெளியே வந்தனர். கோபத்தால் தூண்டப்பட்டவர்களான அவர்கள், சக்கரங்கள், தோமரங்கள், சூலங்கள், பட்டிசங்கள், வாள்கள், பராஸ்வதங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பிரத்யும்னனை அறைகூவியழைத்தபடியே போர்க்களத்திற்குச் சென்றனர்.(46,47)

பெருங்கரங்களைக் கொண்ட பிரத்யும்னன் தன் வில்லை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் தேரில் ஏறி போர்க்களத்தை நோக்கி அதைச் செலுத்தினான்.(48) அப்போது கேசவனின் மகனுக்கும், சம்பரனின் மகன்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தக் கூடியதும், பயங்கரம் நிறைந்ததுமான ஒரு போர் நடந்தது.(49) அந்தப் போரைக் காண்பதற்காகக் கந்தர்வர்கள், உரகர்கள், சாரணர்கள், தேவர்கள் ஆகியோர் தங்கள் மன்னனுடன் {இந்திரனுடன்} சேர்ந்து வானத்தில் நின்றிருந்தனர்.(50) நாரதர், தும்புரு, ஹாஹா, ஹுஹு, பிற பாடகர்கள் ஆகியோர் அப்சரஸ்கள் சூழ அங்கே நின்றிருந்தனர்.(51) அப்போது தேவர்களின் மன்னனுடைய அவையைச் சேர்ந்த அத்புதநாமன் என்ற கந்தர்வன், வஜ்ரதாரியான வாசவனிடம்,(52) "சம்பரனின் மகன்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றனர், கிருஷ்ணனின் மகனோ தனி ஒருவனாக இருக்கிறான். பலருடன் போரிட்டு எவ்வாறு அவனால் வெற்றியை அடைய இயலும்?" என்று கேட்டான்.(53)

பலனைக் கொன்றவனான வாசவன் {இந்திரன்}, அவனது சொற்களைக் கேட்டுப் புன்னகைத்தவாறே, "அவனுடைய ஆற்றலைக் குறித்துக் கேட்பாயாக.(54) முற்பிறவியில் காமனாக {மன்மதனாக} இருந்த அவன் {பிரத்யும்னன்}, ஹரனின் கோப நெருப்பால் எரிக்கப்பட்டான். அதன் பிறகு, அவனது மனைவி {ரதிதேவி} முக்கண் தேவனைத் தணிவடையச் செய்தாள்.(55)

அவனும் {சிவனும்} அவளுக்கு {ரதிதேவிக்கு} ஒரு வரம் கொடுக்கும் வகையில், "விஷ்ணு மனித வடிவை ஏற்று, துவாராகா நகரில் வாழும்போது, இவன் அவனது மகனாகப் பிறந்து, அதன்பிறகு உன் கணவனாவான்.(56) பெருஞ்சக்திமிக்கவனும், ஆற்றல் வாய்ந்தவனுமான உன் கணவன், அங்கங்களற்றவனாக {அனங்கன் என்று} மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டாலும் அங்கே {துவாரகையில்} தன் பிறவியை அடைவான். பிரத்யும்னனாகப் பிறந்து, ஏழாம் நாளில் ருக்மிணியின் மடியில் இருந்து மாய சக்திகளின் மூலம் அபகரிக்கப்படும் காரணத்தால் சம்பரனைக் கொல்வான்.(57,58) எனவே நீ சம்பரனின் வீட்டுக்குச் செல்வாயாக; உன் மாய உடலில் அவனுடைய {சம்பரனின்} மனைவியான மாயாவதியாக இருந்து அவனுக்கு மகிழ்ச்சியளிப்பாயாக.(59) அங்கே குழந்தையாக வரும் உன் கணவனை ஊட்டி வளர்ப்பாயாக. இளமையை அடைந்ததும் அவனே சம்பரனைக் கொல்வான்.(60) அதன் பிறகு அனங்கன் {மன்மதனான பிரத்யும்னன், ரதியான} உன்னுடன் சேர்ந்து துவாரகைக்குச் சென்று, கிரிஜையுடன் {சைலப்புத்ரியிடம் / மலைமகளிடம்} நான் இருப்பது போல் உன்னுடன் இன்புற்றிருப்பான்" என்றான் {சிவன்}.(61)

தேவர்களின் மன்னனான ஹரன் இவ்வாறு சொல்லிவிட்டு, சித்தர்களும், சாரணர்களும் விரும்பிச் செல்வதும், சுமேருவுக்கு ஒப்பானதுமான கைலாச மலைக்குச் சென்றான்.(62) காமனின் மனைவியும் {ரதி தேவியும்}, உமையின் தலைவனை {சிவனை} வணங்கிவிட்டு, குறித்த நேரம் நிறைவடைவதற்காகச் சம்பரனின் வசிப்பிடத்தில் காத்திருந்தாள்.(63) ஓ! பிரதிகரா {ஓ! கந்தர்வன் அத்புதநாமா}, நீண்ட கரங்களைக் கொண்ட பிரத்யும்னன் நிச்சயம் சம்பரனைக் கொல்வான். அந்தத் தீய தானவனையும், அவனது மகன்களையும் அழிப்பவனாக அவனே விதிக்கப்பட்டிருக்கிறான்" என்றான் {இந்திரன்}.(64)

விஷ்ணு பர்வம் பகுதி – 161 – 105ல் உள்ள சுலோகங்கள் : 64
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்