(பானுமதீஹரணம் நிகும்பவதஷ்ச)
Nikumbha carries away Bhanumati | Vishnu-Parva-Chapter-147-091 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பிரத்யும்னன் செயலுக்குப் பழிதீர்க்க பானுமதியை அபகரித்த நிகும்பன்; நிகும்பனுடன் நடந்த கடும்போர்; நிகும்பன் வதம்; பானுமதியை சகாதேவனுக்கு மணமுடித்துக் கொடுத்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அறம்சார்ந்த யாதவர்கள் இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்தபோது, கொடியவனும், அணுகப்படமுடியாதவனும், தேவர்களின் பகைவனுமான தானவன் நிகும்பன், தன்னழிவை விரும்பி, ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து பானுமதி என்ற பெயரைக் கொண்டவளான பானுவின்[1] அழகிய மகளை அபகரித்தான்.(1,2) ஓ! வீரா, முற்காலத்தில் அவனது சகோதரனான வஜ்ரநாபனின் மகள் பிரபாவதியைப் பிரத்யும்னன் கடத்தியிருந்தான், வஜ்ரநாபனும் கொல்லப்பட்டான். மாயைகளில் திறன்மிக்க அவன் {நிகும்பன்}, இந்தப் பழைய பகையை நினைத்து, தன்னை மறைத்துக் கொண்டு யாதவப் பெண்களைக் குழம்பச் செய்து பானுமதியை அபகரித்துச் சென்றான்.(3,4)
[1] சத்யபாமாவின் மகன் ஒருவன் பானு என்ற பெயரைக் கொண்டவன் ஆவான். அவன் இவனாக இருந்தால் இங்கே சொல்லப்படும் பானுமதி கிருஷ்ணனின் பேத்தியாவாள். ஆனால் இங்கே சொல்லப்படும் பானுவும், சத்யபாமாவின் மகனான பானுவும் வெவ்வேறானவர்களாகவும் இருக்கலாம். இந்த அத்யாயத்தின் 6ம் அடிக்குறிப்பு இவர்கள் வெவ்வேறானவர்கள் என்ற முடிவையே எட்ட வழிவகுக்கும்.
பானுவின் பெண்களுக்குரிய அந்தப்புரத்தோடு {கன்யாபுரத்தோடு} இணைந்த தோட்டம் அணுகப்பட முடியாததாக இருந்தாலும், யாதவர்கள் விளையாட்டில் {சமுத்ரக்ரீடை / சாலிக்யக்ரீடை ஆகியவற்றில்} கவனமாக இருந்ததால் அந்நேரத்தில் அங்கே காவலர்கள் யாரும் இல்லை. இழிந்தவனான அந்தத் தானவன் {நிகும்பன்}, பாதுகாப்பில்லாத அந்தக் கணத்தைப் பயன்படுத்திக் கொண்டு அந்தக் கன்னிகையைக் கடத்திச் சென்றான்.(5) ஓ! படைகளை வெல்பவனே, அழுது கொண்டிருந்த அந்தக் கன்னிகை கடத்திச் செல்லப்பட்ட போது, பெண்களின் அந்தப் புரத்தில் {கன்யாபுரத்தில்} திடீரெனப் பெருஞ்சலசலப்பு எழுந்தது.(6) பானுவின் அந்தப்புரதில் எழுந்த ஓலத்தைக் கேட்ட வீரர்களான வசுதேவனும், ஆஹுகனும் {உக்ரசேனனும்} கோபத்தால் நிறைந்தவர்களாக வெளியே வந்தனர். குற்றம் இழைத்தவனைத் தங்கள் முன் காணாத அவர்கள், தாங்கள் அணிந்திருந்த கவச உடைகளுடன் பெருஞ்சக்தி வாய்ந்த கிருஷ்ணன் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.(7,8) பகைவரைக் கொல்பவனான ஜனார்த்தனன் இந்த அவமதிப்பைக் கேள்விப்பட்டு, பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} சேர்ந்து பாம்புகளின் பகைவனான கருடன் மீதேறி புறப்பட்டுச் சென்றான்.(9) அவன் {கிருஷ்ணன்}, மகரச்சின்னத்தைக் கொடியில் கொண்ட வீரனிடம் {தன் மகன் பிரத்யும்னனிடம்} தேரில் தன்னைப் பின்தொடந்து வரும்படி ஆணையிட்டு, கசியபரின் மகனான கருடனிடம் புறப்படச் சொன்னான்.(10)
ஓ! மன்னா, போரில் வெல்லப்பட முடியாதவனான நிகும்பன், வஜ்ரம் என்ற நகரத்தை {வஜ்ரபுரத்தை} அடைவதற்கு முன்பே பகைவரைக் கொல்பவர்களான பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனும் அவனை வழியிலேயே தடுத்தனர்.(11) மாயைகளை அறிந்தோரில் முதன்மையானவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான பிரத்யும்னனும் அங்கே வந்த போது அவன் {நிகும்பன்} தன்னைத் தானே மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டான்[2].(12) நிகும்பன் ஒரு தேவனைப் போலப் புன்னகைத்தவாறே கதாயுதத்தைக் கொண்டு அவர்கள் அனைவருடனும் {மூவருடனும்} போரிட்டான்.(13) பேரசுரன் நிகும்பன், கன்னிகையான பானுமதியைத் தன் இடது கையில் பிடித்துக் கொண்டு, தன் வலது கையால் கதாயுதத்தை மீண்டும் மீண்டும் வீசினான்.(14) கேசவன் {கிருஷ்ணன்}, காமன் (பிரத்யுமனன்), அர்ஜுனன் ஆகியோர் இவ்வாறு தாக்கப்பட்டாலும், அந்தக் கன்னிகைக்குச் சிறு காயமும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால் அவர்கள் அவனை முரட்டுத்தனமாகத் தாக்காதிருந்தனர்.(15) ஓ! மன்னா, தடுக்கப்படமுடியாத அந்தப் பகைவனைக் கொல்லவல்லர்களாக இருப்பினும் அந்தக் கன்னிகையிடம் கொண்ட பெருங்கருணையால் அவர்கள் பரிதாபகரமாகப் பெருமூச்சு விடத் தொடங்கினர்.(16)
[2] மற்ற இரு பதிப்புகளை ஒப்பிட்டு இந்த வாக்கியம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ள படியே மொழிபெயர்த்தால் "பிரத்யும்னன் தன்னைத் தானே மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டான்" என்று இருக்கும்.
ஒரு பாம்பு ஓர் ஒட்டகத்தைச் சுற்றிக் கொள்ளும்போது ஆயுதப் பயன்பாட்டை நன்கறிந்த ஒரு மனிதன் எவ்வாறு ஒட்டகத்தைவிட்டு விட்டுப் பாம்பை மட்டும் அடிப்பானோ அதே போலவே வில்லாளிகளில் முதன்மையான பார்த்தனும், தன்னுடைய கணைகளால் அந்தத் தைத்தியனைத் தாக்கத் தொடங்கினான்[3].(17) பார்த்தன் {அர்ஜுனன்}, காமன் {பிரத்யும்னன்}, கிருஷ்ணன் ஆகியோர் தங்கள் பயிற்சி, அறிவு, கலையின் விதிகள் ஆகியவற்றைப் பின்பற்றி அந்தக் கன்னிகையைத் தாக்காமல் பிரம்பு போன்ற {பனிரெண்டு விரல்களின் நீளம் கொண்ட / சாண் நீளம் கொண்ட} தங்கள் கணைகளால் தானவர்களை {நிகும்பனின் மூன்று வடிவங்களைத்} தாக்கினர்.(18) அப்போது நிகும்பன் தன் மாய சக்திகளைப் பயன்படுத்தி எவரும் அறியாதவாறு அந்தக் கன்னிகையுடன் அந்த இடத்தில் இருந்து மறைந்தான்; இருப்பினும், கிருஷ்ணன், காமன், தனஞ்சயன் ஆகியோர் உடனே அவனைப் பின் தொடர்ந்தனர்; அவன் {நிகும்பன்} மஞ்சள் நிறக் கழுகின் வடிவை ஏற்றுப் பறந்து சென்றான்[4].(19,20) வீரத் தனஞ்சயன் அந்தக் கன்னிகையைத் தவிர்த்துவிட்டுப் பிரம்பு போன்ற தன் கணைகளால் அவனது {நிகும்பனின்} முக்கிய உறுப்புகளைத் தாக்கினான்.(21) இவ்வாறு அந்த வீரர்களால் பின்தொடரப்பட்டவனும், பகைவரைக் கொல்பவனுமான அந்தப் பேரசுரன், தனித்தீவுகளாக இருக்கும் ஏழு கண்டங்களை {த்வீபங்களைக்} கொண்ட பூமி முழுவதும் பயணித்து, இறுதியாக {களைப்படைந்து}கோகர்ண மலையில் பாயும் கங்கையாற்றங் கரையின் மணற்திட்டில் அந்தக் கன்னிகையுடன் சேர்ந்து கீழே விழுந்தான்.(22,23)
[3] சித்திரசாலை பதிப்பில், "வில்தரித்தவர்களில் சிறந்தவனும், போரின் அனைத்து வழிமுறைகளிலும் நிபுணனுமான பிருதையின் மகன் நாகோஷ்ட்ரமெனும் நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தத் தைத்தியன் மீது கணைக்கூட்டத்தை ஏவினான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "நாகோஷ்ட்ரவிதி என்பது ஒட்டகத்தின் உடலில் ஒரு பாம்பு சுற்றியிருக்கும்போது, அந்த ஒட்டகத்தைத் தாக்காமல் கணைகளை ஏவி அந்தப் பாம்பைக் கொல்லும் நுட்பமாகும்" என்றிருக்கிறது.
[4] சித்திரசாலை பதிப்பில், "நிகும்பன் ஹாரிதப் பறவையின் வடிவை ஏற்றான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அவன் பச்சைக் குருவியாக இருந்தான்" என்றிருக்கிறது.
தேவர்களிலோ, அசுரர்களிலோ, பெரும் முனிவர்களிலோ எவராலும் மஹாதேவனின் சக்தியால் பாதுகாக்கப்படும் அந்த மலையைக் கடக்க முடிந்ததில்லை.(24) போரில் வெல்லப்பட முடியாதவனும், வேகமாகச் செல்லக்கூடியவனுமான பைமத் தலைவன் பிரத்யும்னன், நிகும்பனின் இந்தப் பலவீனத்தைக் கண்டு {அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு} கன்னிகையான பானுமதியைப் பிடித்துக் கொண்டான். கிருஷ்ணனும், அர்ஜுனனும் தங்கள் கணைகளால் அந்த அசுரனைப் பெரிதும் தாக்கத் தொடங்கினர். பிறகு நிகும்பன் கோகர்ண மலையின் வடக்கு எல்லையைவிட்டு அகன்று, தெற்கு எல்லைக்குத் தப்பி ஓடினான். இருப்பினும் அந்த இரு கிருஷ்ணர்களும் கருடனைச் செலுத்திக் கொண்டு அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(25,26)
அதன் பின்னர் அந்தப் பேரசுரன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தன் உற்றார் உறவினரின் வசிப்பிடமான ஷட்புரத்திற்குள் நுழைந்தான். அந்த இருவீரர்களும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} அந்தக் குகையின் வாயிலிலேயே அவ்விரவைக் கழித்தனர். ருக்மிணியின் வீர மகன் {பிரத்யும்னன்}, கிருஷ்ணனின் அனுமதியுடன் அந்தப் பைமர்களின் மகளைத் துவாரகை நகருக்கு மகிழ்ச்சியுடன் கொண்டு சென்றான். அவன், அவளை அங்கே விட்டுவிட்டு, தானவர்கள் நிறைந்த ஷட்புரத்திற்குத் திரும்பி, பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் குகையின் வாயிலில் கண்டான்.(27-29) இவ்வாறு நிகும்பனைக் கொல்ல விரும்பிய பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணனும், அர்ஜுனனும், ஷட்புர நகரத்தின் நுழைவாயிலைப் பிரத்யும்னனுடன் சேர்ந்து காத்து நின்றனர்[5].(30)
[5] இதன்பிறகு, பிரத்யும்னன், நிகும்பனின் கோபத்தைத் தூண்டும் வகையில் பேசி அவனை வெளியே வர வைத்தான் என்று நாம் ஒப்பு நோக்கும் பதிப்புகளைத் தவிர வேறு பதிப்புகளில் உண்டு.
அதன்பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெருஞ்சக்திவாய்ந்த நிகும்பன் போரிடும் விருப்பம் கொண்டவனாகக் குகையைவிட்டு வெளியே வந்த உடனேயே தனஞ்சயன் தன் காண்டீவ வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் அவனை முற்றிலும் தடுத்தான். பலம்வாய்ந்தவர்களில் முதன்மையான நிகும்பன் அவற்றையும் மீறி வெளியே வந்து, முட்களால் நிறைந்த தன் கதாயுதத்தைக் கொண்டு பார்த்தனின் {அர்ஜுனனின்} தலையில் தாக்கினான்.(31-33) இவ்வாறு அந்தக் கதாயுதத்தால் தாக்கப்பட்ட பிருதையின் மகன், குருதி கக்கி தன் நினைவை இழந்தான். மாயைகளில் திறன்மிக்கவனான அந்த அசுரன், சிரித்துக் கொண்டே தன் முகத்திற்கு எதிரில் காத்திருந்தவனும், மாயைகளை அறிந்தோரில் முதன்மையானவனுமான ருக்மிணியின் வீர மகனை {பிரத்யும்னனைத்} தாக்கினான். அப்போது புலப்படாத கதாயுதத் தாக்குதலால் தலையில் காயமடைந்த வீரப் பிரத்யும்னனும் தன் நினைவை இழந்தான். கதனின் அண்ணனான கோவிந்தன், இவ்வாறு அவர்கள் தாக்கப்படுவதையும், உணர்விழந்ததையும் கண்டு, கௌமோதகீ எனும் தன்னுடைய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு நிகும்பனை நோக்கி ஓடினான். தடுக்கப்பட முடியாத வீரர்களான அவ்விருவரும் முழங்கியவாறே ஒருவரோடொருவர் போரிட்டனர்.(34-37)
சசியின் தலைவன் {இந்திரன்}, தன் யானையான ஐராவதத்தைச் செலுத்திக் கொண்டு, தேவர்களுடன் அங்கே வந்து, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடக்கும் போரைப் போன்ற அந்தப் பயங்கர மோதலைக் கண்டான். பகைவரைக் கொல்பவனான ரிஷிகேசன், அந்தத் தேவர்களைக் கண்டதும், அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி, அந்த அற்புதப் போரில் தானவர்களைக் கொல்ல முயன்றான்.(38,39) பெருந்தோள்களைக் கொண்டவனும், படை அறிவியலை அறந்தவனுமான கேவசன், தன் கௌமோதகீயைச் சுழற்றி பல்வேறு அற்புத மண்டலங்களை {கதைவீசும் முறைகளை} வெளிப்படுத்தினான்.(40) அசுரர்களில் முதன்மையான நிகும்பனும், தன் பயிற்சியின் காரணமாக, முட்கள் பலவற்றால் நிறைந்திருந்த தன் கதாயுதத்தைச் சுழற்றி பல்வேறு மண்டலங்களை வெளிப்படுத்தினான்.(41) அந்த நேரத்தில் அவர்கள் இருவரும், ஒரு பசுவுக்காகப் முழங்கும் இரு காளைகளைப் போலவோ, பிளிறும் இரு யானைகளைப் போலவோ, கோபத்தில சீறும் இரண்டு சிறுத்தைகளைப் போலவோ போரிட்டனர்.(42) ஓ! பாரதா {ஜனமேஜயா}, நிகும்பன் பயங்கர முழக்கம் செய்பவனாக எட்டு மணிகளைக் கொண்ட தன் கதாயுதத்தால், கதனின் அண்ணனான கிருஷ்ணனைத் தாக்கினான். கிருஷ்ணனும் தன்னுடைய பெரும் கதாயுதத்தை நிகும்பனின் தலையில் வீசினான்.(43,44) அந்த நேரத்தில் உலகின் நுண்ணறிவுமிக்க ஆசானான ஹரி, கௌமோதகீ எனும் தன்னுடைய கதாயுதத்தை ஒரு கணம் சுழற்றாமல் {கிருஷ்ணன்} உணர்வற்றவனாகப் பூமியில் விழுந்தான்.(45) ஓ! மன்னா, உயரான்ம கிருஷ்ணன் இந்த அவல நிலையை அடைந்தபோது, மொத்த உலகமும் ஓலங்களால் நிறைந்து.(46) அமுதம் கலந்த மந்தாகினியின் {மந்தாகினியாற்றின்} குளிர்ந்த நீரைத் தேவர்களின் மன்னனே {இந்திரனே} கேசவன் மீது தெளித்தான்.(47) ஓ! மன்னா, தேவர்களில் முதன்மையான கிருஷ்ணன் தானே தன் விருப்பத்தின் பேரில் அவ்வாறு செய்தான், இல்லையெனில் உயரான்ம ஹரியை எவனால் உணர்வற்றவனாகச் செய்ய இயலும்?(48)
ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, அதன்பிறகு பகைவரைக் கொல்பவனான கிருஷ்ணன், தன் உணர்வுமீண்டவனாக எழுந்து தன் சக்கரத்தை எடுத்துக் கொண்டு, தீயவனான அந்த அசுரனிடம் அதைத் தாங்கிக் கொள்ளச் சொன்னான்.(49) தடுக்கப்பட முடியாதவனும், பெரும் மாயாவியுமான அந்த நிகும்பன், அந்த நேரத்தில் தன் உடலைக் கைவிட்டு ஓடிவிட்டான். எனினும் கேசவன் அதை அறிந்தானில்லை.(50) அவன் இறந்துவிட்டான், அல்லது இறக்கும் தருவாயில் இருக்கிறான் என்று நினைத்தும், வீரர்களின் கடமையை நினைவுகூர்ந்தும் வீழ்ந்துவிட்ட அவனை அவன் மேலும் அடித்தானில்லை. அப்போது தங்கள் உணர்வுகள் மீண்ட பிரத்யும்னனும், அர்ஜுனனும் அங்கே வந்து நிகும்பன் இறந்துவிட்டதாகக் கருதி கிருஷ்ணனின் அருகில் நின்றனர்.(51,52) அதன்பிறகு மாயைகளை அறிந்தவனான பிரத்யும்னன் உண்மையை அறிந்து கொண்டு, கிருஷ்ணனிடம், "ஓ! தந்தையே, தீயவனான நிகும்பன் இங்கே இல்லை. அவன் எங்கோ தப்பி ஓடிவிட்டான்" என்றான்.(53) பிரத்யும்னன் இதைச் சொன்னதும், நிகும்பனின் உடல் அங்கேயே அப்போதே மறைந்தது. பெருஞ்சக்தி வாய்ந்த அந்தத் தலைவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனுடன் சேர்ந்து இதைக் கண்டு சிரித்தான்.(54)
ஓ! வீர மன்னா, சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் ஆகாயம் முழவதும், பூமி முழுவதும் ஆயிரக்கணக்கான நிகும்பர்களைக் கண்டனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் வீரர்களான கிருஷ்ணன், பார்த்தன், ருக்மிணியின் மகன் ஆகியோரின் எண்ணற்ற வடிவங்களைக் கண்டனர். இஃது உண்மையில் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.(55,56) அந்த நேரத்தில், அந்தப் பேரசுரர்களில் சிலர் பார்த்தனின் வில்லைப் பிடித்தனர், சிலர் அவனுடைய பெரிய கணைகளையும், சிலர் அவனது கரங்களையும், சிலர் அவனது காலையும் பிடித்தனர்.(57) இவ்வாறு பார்த்தனின் எண்ணற்ற உடல்கள் பிடிபட்டபோது, {நிகும்பனின் எண்ணற்ற வடிவங்களாக இருந்த} அசுரர்கள் அந்த வீரத் தனஞ்சயனை {அர்ஜுனனை} வானத்தில் கொண்டு சென்றனர் {பிடித்துச்சென்றனர்}. வீரக் கிருஷ்ணனும், அவனுடைய மகனும் பார்த்தனிடம் இருந்து பிரிந்த போது, எண்ணற்ற கணைகளால் நிகும்பனைத் துளைத்தனர். இருந்தாலும் அவர்களால் அவனுடைய எல்லையைக் காண முடியவில்லை. ஒரே நிகும்பன் இரண்டாகப் பிளந்து இருவரானான், பலரானான். தெய்வீகனும், கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் அறிந்தவனும், அசுரர்களைக் கொல்பவனுமான தலைவன் கிருஷ்ணன், தன்னுடைய தெய்வீக அறிவால் அனைத்தையும் சரியாகப் பார்த்து, மாயைகளைப் படைப்பவனும், தனஞ்சயனை அபகரித்துச் சென்றவனுமான நிகும்பனின் உண்மையான வடிவைக் கண்டான். அவன் அனைத்து உயிரினங்களின் முன்னிலையிலேயே தன் சக்கரத்தால் அவனுடைய தலையை அறுத்தான்.(58-62) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அசுரர்களில் முதன்மையான அவனுடைய {நிகும்பனுடைய} தலை இவ்வாறு அறுக்கப்பட்ட போது, அவன் தனஞ்சயனை விட்டுவிட்டு, வேரறுந்த மரம் போலக் கீழே விழுந்தான்.(63) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அந்த நேரத்தில் பார்த்தன் வானத்தில் இருந்து கீழே விழ இருந்தான். கிருஷ்ணனின் ஆணையின் பேரில் அவனுடைய மகன் {பிரத்யும்னன்} அவனை {அர்ஜுனனைத்} தாங்கிப் பிடித்துக் கொண்டான்.(64) இவ்வாறு நிகும்பன் பூமியில் விழுந்ததும் தேவனான கிருஷ்ணன் பார்த்தனைத் தேற்றி அவனுடன் சேர்ந்து துவாரகைக்குச் சென்றான்.(65) யதுவின் வழித்தோன்றலும், தசார்ஹர்களில் முதன்மையானவனுமான தலைவன் கிருஷ்ணன் மகிழ்ச்சியாகத் துவாரகைக்குத் திரும்பி உயரான்ம நாரதரை வணங்கினான்.(66)
அப்போது பெருஞ்சக்திவாய்ந்தவரான நாரதர், பானுவிடம், "ஓ! பைமனின் வழித்தோன்றலே[6], உன் மகள் (மற்றொருவனால்) அபகரிக்கப்பட்டதால் அவமதிக்கப்பட்டதாகக் கருதாதே. ஓ! பானு, அதற்கான பெருங்காரணத்தைக் கேட்பாயாக.(67) ஓ! வீரா, ஒரு சந்தர்ப்பத்தில் உன்னுடைய இந்த மகள் ரைவதத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, முனிவர்களில் முதன்மையான துர்வாசரின் கோபத்தைத் தூண்டினாள். கோபம் நிறைந்த அந்த முனிவரும், அவளைச் சபிக்கும் வகையில், "தீய நடை கொண்டவளாக இருப்பதால், இவள் பகைவனின் கைளில் விழுவாள்" என்று சொன்னார். அந்த நேரத்தில் நானும், என்னுடன் இருந்த முனிவர்களும் உன் மகளின் சார்பாக அந்த முனிவரிடம், "ஓ! நல்லோரில் முதன்மையான முனிவரே, அறத்தின் சாரத்தை அறிந்த நீர் அறக்கடமைகளை நோற்கும் ஓர் அப்பாவிப் பெண்ணான இவளை இவ்வாறு சபிக்கலாமா? நீர் இவளுக்குக் கருணை காட்ட வேண்டுமென உம்மை நாங்கள் வேண்டுகிறோம்" என்று கேட்டோம்.(68-70) ஓ! பைமத் தலைவா, நாங்கள் துர்வாசரிடம் இதைச் சொன்னதும் ஒரு கணம் முகம் கவிழ்ந்த அவர் கருணையால் பீடிக்கப்பட்டவராக, "நான் சொன்னது நிச்சயம் நடக்கும். ஒருபோது மாறாகாது. இவள் மெய்யாகவே பகைவனின் கைகளில் விழுவாள். அவ்வாறு பகைவனின் கைகளில் விழுந்தாலும் இவள் ஒருபோதும் களங்கமடையமாட்டாள். இவள் அழகிய கணவனை அடைவாள், நற்பேறு பெற்றவளாகவும், பல மகன்களைப் பெற்ற அன்னையாகவும், ஏராளமான செல்வத்தின் தலைவியாகவும் இருப்பாள். மெலிந்த உடல் கொண்ட இந்தப் பெண் தன் அழகிய மேனியைச் சுற்றிலும் எப்போதும் நறுமணத்துடன் கூடியவளாகவும், எப்போதும் இளமை நிறைந்தவளாகவும் இருப்பாள். பகைவனால் அபகரிக்கப்பட்டதால் விளையும் கவலையையும் இவள் மறந்திருப்பாள்" என்றார்.(71-74) ஓ! வீரா, இவ்வாறே இது பானுமதிக்கு நடக்க வேண்டுமென ஏற்கனவே விதிக்கப்பட்டதாகும்; பாண்டுவின் மகனான சகாதேவன் அறவோனாகவும், மதிப்புமிக்கவனாகவும், வீரனாகவும் இருப்பதால் அவனுக்கே அவளைக் கொடுப்பாயாக" என்றார் {நாரதர்}.(75)
[6] இந்த அத்யாயம் நெடுகிலும் பானுமதியின் தந்தையான பானு, பைமத் தலைவன், பைமனின் வழித்தோன்றல் என்றே குறிப்பிடப்படுகிறான். கிருஷ்ணனின் மகன் என்றோ, சத்யபாமாவின் மகன் என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. பிரத்யும்னனும் பைமத் தலைவன் என்று குறிப்பிடப்பட்டாலும் கிருஷ்ணனின் மகன் என்றும், ருக்மிணியின் மகன் என்றும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான் என்பதை இங்கே நாம் கருத்தில் கொண்டால் இந்த அத்யாயத்தில் சொல்லப்படும் பானு, கிருஷ்ணனின் மகனாக இருக்க முடியாது என்ற கருத்தையே எட்ட வேண்டியிருக்கும்.
அறம் சார்ந்தவனான பைமனும் {பானுவும்}, நாரதரின் சொற்களுக்கு மதிப்பளித்துப் பானுமதியை மாத்ரியின் மகனான சகாதேவனுக்கே கொடுத்தான்.(76) சக்கரபாணியான கேசவன், ஒரு தூதனை அனுப்பிச் சகாதேவனை அங்கே {துவாரகைக்கு} அழைத்து வந்தான். திருமண விழா நிறைவடைந்ததும் அவன் {சகாதேவன்} தன் மனைவியுடன் சேர்ந்து தன் நகருக்குத் திரும்பினான். கிருஷ்ணனின் இந்த வெற்றியை மதிப்புடன் கேட்கவோ, படிக்கவோ செய்யும் மனிதன் அனைத்துக் காரியங்களிலும் வெற்றியை ஈட்டுவான்" என்றார் {வைசம்பாயனர்}.(77,78)
விஷ்ணு பர்வம் பகுதி – 147 – 091ல் உள்ள சுலோகங்கள் : 78
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |