Sunday 29 November 2020

சாலிக்ய காந்தர்வம் | விஷ்ணு பர்வம் பகுதி – 146 – 090

(சா²லிக்யக்ரீடா³)

The sport of Yadavas continued | Vishnu-Parva-Chapter-146-090 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நீர் விளையாட்டுத் தொடர்ந்தது; கிருஷ்ணனும், பலராமனும் இரு தரப்பாகப் பிரிந்து விளையாடியது; அவர்களுடன் இணைந்து கொண்ட அர்ஜுனன்; சாலிக்ய காந்தர்வமெனும் தெய்வீகப் பாடல்...


Krishna and his family

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சந்தனம் பூசிய பெருங்கரங்களைக் கொண்ட பேரழகன் பலன் {பலராமன்}, காதம்பரி மது உண்டு தன் மீதும், தன் உடல் இயக்கத்தின் மீதுமான கட்டுப்பாட்டை இழந்து கண்கள் சிவந்தவனாக ரேவதியுடன் விளையாடத் தொடங்கினான்.(1) சந்திரக்கதிர்களைப் போன்று வெண்மையான தெய்வீக ராமன், மேகத்துக்கு ஒப்பான கருவண்ண ஆடை உடுத்தி, போதையில் கண்கள் உருள மேகத்தில் ஒளிரும் முழு நிலவைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(2) அழகிய தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், இடது காதில் மட்டும் குண்டலம் கொண்டவனுமான ராமன், புன்னகைத்தபடியே சாய்வுப்பார்வையில் தன் அன்புக்குரிய துணைவியின் முகத்தை மீண்டும் மீண்டும் பார்த்து பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(3)

அப்போது, கம்சனையும், நிகும்பனையும் அழித்த கேசவனின் {கிருஷ்ணனின்} ஆணையின் பேரில் அழகிய அப்சரஸ்கள் ரேவதியையும், ராமனையும் பார்ப்பதற்காகச் செழிப்பில் சொர்க்கத்திற்கு இணையான கடலுக்குச் சென்றனர்.(4) அழகு பொருந்திய சிறந்த உடற்கட்டைக் கொண்ட அந்த அப்சரஸ்கள், ரேவதியையும், ராமனையும் வணங்கிவிட்டு, இசைக்கு இணக்கமாக நடனமாடத் தொடங்கினர்.(5) அவர்கள், பலதேவனின் ஆணையின் பேரிலும், ரைவத மன்னனுடைய மகளின் {ரேவதியின்} ஆணையின் பேரிலும் யாதவர்களின் விருப்பத்திற்கிணங்க தங்களால் அடையப்பட்ட பல்வேறு அங்க அசைவுகளை {அபிநயங்களை} வெளிப்படுத்த தொடங்கினர்.(6) மெலிந்தவர்களான அந்த அழகிய காரிகையர், யாதவர்களின் நாட்டில் உள்ள பெண்கள் உடுத்தவது போன்ற உடைகளை உடுத்திக் கொண்டு, ஆயிரக்கணக்கான பண்களில் அமைக்கப்பட்ட பாடல்களை அவர்களின் மொழியிலேயே பாடினர்.(7)

ஓ! வீரா, அந்தச் சபையின் முன்பே ராமனுக்கும் {சங்கர்ஷணனுக்கும்}, கேசவனுக்கும் {அதோக்ஷகனுக்கும்} மகிழ்ச்சி தரக்கூடிய புனிதக் கருப்பொருள்களை அவர்கள் பாடினர். கம்ச, பிரலம்ப, சாணூர வதங்களையும்;(8) யசோதையால் ஜனார்த்தனின் மகிமை நிறுவப்படவும், அவன் தாமோதரன் என்ற பெயரைப் பெறவும் காரணமாக இருந்த உரலோடு அவன் கட்டப்பட்ட கதை; அரிஷ்ட, தேனுக வதங்கள்; அவனது விரஜவாசம் {ஆயர்பாடி வாசம்}; பூதனை வதம்;(9) யமலார்ஜுன மரங்களை முறித்தது; கன்றுகளுடன் அவன் ஓநாய்களைப் படைத்தது; தடாகத்தில் {யமுனையின் மடுவில்} இருந்த பாம்புகளின் தீய மன்னன் காளியன் கிருஷ்ணனால் ஒடுக்கப்பட்டது;(10) அந்தத் தடாகத்தில் இருந்து தாமரைகள், நீலோத்பலங்கள், சங்குகள், நிதிகள் ஆகியவற்றுடன் மதுசூதனன் திரும்பியது; உலக நன்மையின் பிறப்பிடமான கேசவனால் பசுக்களின் நன்மைக்காகக் கோவர்த்தன மலை உயர்த்தப்பட்டது;(11) நறுமணப் பொருட்களை விற்கும் கூனி {குப்ஜை} கிருஷ்ணனால் குணமடைந்தது ஆகியவற்றையும், பிறப்பும், குற்றமும் அற்ற அந்தத் தலைவனின் பிற கதைகளையும் அந்தத் தலைவன் குள்ளனாக இல்லாவிட்டாலும் மிக இழிந்த குள்ள வடிவை ஏற்றதையும் அந்த அப்சரஸ்கள் பாடினர்;(12) சௌபன் கொல்லப்பட்டது; இந்தப் போர்கள் அனைத்திலும் பலதேவன் தன் கலப்பையை உயர்த்திய வகை; தேவர்களின் பகைவர் பிறரின் அழிவு; தேவர்களின் பகைவனான முராசுரனைக் கொன்றது; காந்தார இளவரசியின் {சைப்யையின்} திருமணத்தின் போது செருக்குமிக்க மன்னர்களுடன் நடந்த போர்;(13) சுபத்ரை அபகரிக்கப்பட்டது; பலாஹகன், ஜம்புமாலியுடனான போர்; சக்ரனை வீழ்த்திவிட்டு அவனது முன்னிலையிலே ரத்தினங்கள் அனைத்தையும் அபகரித்த விதம் ஆகியவற்றையும் அவர்கள் பாடினர்[1].(14)

[1] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "சில உரைகளில் இந்த ஸ்லோகம் விஷ்ணு பர்வத்தின் 33ம் அத்யாயம் 23, 24 ஸ்லோகங்களைக் குறிப்பிடுவதாக இருக்கிறது" என்றிருக்கிறது. 

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அழகிய பெண்கள் இவை அனைத்தையும், சங்கர்ஷணனுக்கும், அதோக்ஷஜனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} மகிழ்ச்சி தரக்கூடிய இன்னும் பிற கருப்பொருள்களையும் பாடிக் கொண்டிருந்தபோது,(15) காதம்பரி மது பருகிய பேரழகன் பலராமன், தன் மனைவியான ரேவதியுடன் சேர்ந்து கைகளைத் தட்டி {கைத்தாளமிட்டுக் கொண்டு} பாடத் தொடங்கினான்.(16) நுண்ணறிவுமிக்கவனும், பேரான்மாவும், பெருஞ்சக்தியும் கொண்டவனுமான மதுசூதனன், ராமன் இவ்வாறு பாடுவதைக் கண்டு அவனை மகிழ்விப்பதற்காகச் சத்யாவுடன் {சத்யபாமாவுடன்} சேர்ந்து பாடத் தொடங்கினான்.(17) கடல் பயணத்திற்காக அங்கே வந்திருந்தவனும், உலகின் பெரும் வீரனுமான பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனுடனும், அழகிய சுபத்ரையுடனும் சேர்ந்து மகிழ்ச்சியாகப் பாடினான்.(18) ஓ! மன்னா, நுண்ணறிவுமிக்கக் கதன், சாரணன், பிரத்யும்னன், சாம்பன், சாத்யகி, சத்ராஜித்தின் மகளுடைய மகன் {சத்யபாமாவின் மகனான பானு}, பெருஞ்சக்திவாய்ந்த சாருதேஷ்ணன் ஆகியோரும் அவர்களுடன் சேர்ந்து பாடினர்.(19) ராமனின் மகன்களும், பெரும் வீரர்களுமான இளவரசர்கள் நிசடனும், உல்முகனும், தளபதியான அக்ரூரன், சங்கன் ஆகியோரும் முன்னணி பைமர்கள் பிறரும் அங்கே பாடினர்.(20)

ஓ! மன்னா, அந்நேரத்தில் கிருஷ்ணனின் சக்தியால் படகுகள் அளவில் பெருகின, முன்னணி பைமர்களுடன் சேர்ந்து ஜனார்த்தனன் மிகச் சிறப்பாகப் பாடினான்.(21) ஓ! வீர இளவரசே, தேவர்களைப் போன்ற யதுகுலத் தலைவர்கள் இவ்வாறு பாடிக் கொண்டிருந்தபோது மொத்த உலகமும் மகிழ்ச்சியில் நிறைந்தது, பாவங்களும் கழிந்தன.(22) அப்போது தேவர்களின் விருந்தினரான நாரதர், யாதவர்களுக்கு மத்தியில் மதுசூதனான கேசவனை மகிழ்விப்பதற்காகத் தமது சடையின் ஒரு பகுதி உருகும் அளவுக்குப் பாடினார்.(23) ஓ! இளவரசே, அளவற்ற சக்திவாய்ந்த அந்த முனிவர், அங்கேயே அப்போதே பாடல்களைத் தொகுத்துப் பல்வேறு உடல் அசைவுகளுடன் பைமர்களுக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் பாடினார்.(24) அந்த நுண்ணறிவுமிக்க முனிவர், பலதேவன், ரைவத மன்னனின் மகள் {ரேவதி}, கேசவன், பிருதையின் மகன் {அர்ஜுனன்}, சத்யபாமா, சுபத்ரை ஆகியோரைக் கண்டு மீண்டும் மீண்டும் புன்னகைத்தார்.(25) கேசவனின் மனைவியர் இயல்பாகவே பொறுமைசாலிகளாக இருந்தாலும், கேலி பேசுவதை எப்போதும் விரும்புபவரான நுண்ணறிவுமிக்க நாரதர், {பிறரைப் போலச் செய்து காட்டும்} தமது அங்க அசைவுகள், புன்னகை, உணர்வுகள் ஆகியவற்றின் மூலமும், பல்வேறு வழிமுறைகளின் மூலமும் அவர்களின் சிரிப்பைத் தூண்டி அவர்களைச் சிரிக்கச் செய்தார்.(26) தெய்வீக முனிவரான நாரதர், ஏற்கனவே அறிந்ததைப் போலவே உயர்ந்து தாளும் பல்வேறு ராகங்களைப் பாடினார்; மேலும் கிருஷ்ணனை மகிழ்விப்பதற்காக உரக்கச் சிரித்தார், மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினார்.(27) ஓ! இளவரசே, அங்க அசைவுகளை நன்கறிந்த இளங்காரிகையர், கிருஷ்ணனின் ஆணையின் பேரில், உலகின் சிறந்த ரத்தினங்களையும், அழகிய ஆடைகளையும், சொர்க்கத்தில் செய்யப்பட்ட மாலைகளையும், சந்தானக மலர்களையும், முத்துகளையும், அனைத்துப் பருவ காலங்களிலும் மலரும் மலர்கள் பிறவற்றையும் {நாரதருக்குக்} கொடையளித்தனர்.(28,29)

அந்த இசைக் கொண்டாட்டத்தின் முடிவில் ஒப்பற்ற பெருமுனிவரான நாரதரின் கரங்களைப் பற்றிக் கொண்ட தெய்வீக கிருஷ்ணன், சத்யபாமாவுடனும், அர்ஜுனனுடனும் சேர்ந்து கடலுக்குள் குதித்தான்.(30) பேரழகனும், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவனுமான கிருஷ்ணன், சற்றே புன்னகைத்தபடியே சினியின் மகனிடம் {சாத்யகியிடம்}, "நாம் இரு தரப்பாகப் பிரிந்து காரிகையருடன் சேர்ந்து கடல் நீரில் விளையாடுவோம். இந்தக் கடல் நீரில், பலதேவரும், ரேவதியும், என் மகன்களும், பைமர்களில் சிலரும் ஒரு தரப்பாகட்டும், எஞ்சிய பைமர்களும், பலராமரின் மகன்களும் என் தரப்பாகட்டும்" என்றான்.(31,32)

பேருறுதி கொண்ட கேசவன், தன் முன் கூப்பிய கரங்களுடன் நின்றிருந்த கடலிடம் {சமுத்ரதேவனிடம்}, "பெருங்கடலே, உன்னுடைய நீர் இனிமையானதாகவும், சுறாக்கள் அற்றதாகவும் இருக்கட்டும்.(33) உன்னுடைய நீர்ப்படுகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்படட்டும், உன்னுடைய கரைகள் பாதங்கள் இரண்டும் தீண்டத் தகுந்ததாகட்டும். மானுட சுவைக்குத் தகுந்தவை அனைத்தையும் என் சக்தியால் கொடுப்பாயாக.(34) மக்களால் விரும்பப்படும் அனைத்துவகைப் பானங்களையும் நீ கொடுப்பாயாக, பொன், வைடூரியம், முத்துக்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மென்மையான மீன்கள் உன் நீரில் திரியட்டும்.(35) ரத்தினங்களையும், தீண்டலுக்கு இனியவையும், வண்டுகளால் தொண்டாற்றப் படுபவையுமான நறுமணமிக்க அழகிய செந்தாமரைகளையும், நீலோத்பலங்களையும் நீ தரித்திருப்பாயாக.(36) பைமர்கள் பருகும் மதுக்களான மைரேயம், மாத்வீகம், ஸுரா, ஆஸவம் போன்ற பானங்களைப் பொற்குடுவைகளிலும், எண்ணற்ற குடங்களிலும் நீ தரித்திருப்பாயாக.(37) ஓ பெருங்கடலே, மலர்களின் நறுமணத்துடன் கூடிய குளிர்ந்த நீருடன் நீ இருப்பாயாக. யாதவர்களுக்கும், அவர்களுடைய பெண்டிருக்கும் குறையேதும் ஏற்படாத வகையில் மிகக் கவனமாக இருப்பாயாக" என்றான் {கிருஷ்ணன்}.(38)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கிருஷ்ணன், பெருங்கடலிடம் இதைச் சொல்லிவிட்டு அர்ஜுனனுடன் விளையாடத் தொடங்கினான். கிருஷ்ணனால் கொடுக்கப்படும் குறிப்புகளை நன்கறிந்த சத்ரஜித்தின் மகள் {சத்யபாமா}, நாரதரின் உடலில் நீரைத் தெளித்தாள்.(39) அப்போது ராமன், போதையில் சுழலும் உடலுடனும் ஆசையுடனும் கூடியவனாக ரேவதியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு கடலின் நீரில் குதித்து விளையாடினான்.(40) போதையில் உருளும் கண்களுடன் கூடிய கிருஷ்ணனின் மகன்களும், முன்னணி பைமர்கள் பிறரும், ராமனைப் பின்பற்றிக் களிம்புகள், ஆடை ஆபரணங்களைக் களைந்து, பெருங்கடலுக்குள் மகிழ்ச்சியாகக் குதித்தனர்.(41) கழுத்தில் சந்தானக மலர் மாலைகளுடனும், பல்வேறு வண்ணங்களிலான ஆடைகளுடனும் கூடியவர்களும், குடித்தவர்களும், விளையாட்டில் விருப்பம் கொண்டவர்களும், பலதேவனின் மகன்களுமான நிசடன், உல்முகன் ஆகியோரும், அவனது பிறமகன்களும், பைமர்களில் எஞ்சியோரும் கேசவனின் தரப்பை அடைந்தனர்.(42) பெருஞ்சக்தி வாய்ந்தவர்களும், அழகிய அறிகுறிகளைக் கொண்டவர்களும், மேனியில் குழம்புகளைப் பூசிக் கொண்டவர்களுமான யாதவர்கள், தங்கள் கைகளில் நீரொழுகும் குடுவைகளுடன் அந்த இடத்திற்குத் தகுந்த இனிய ராகங்களிலான அழகிய பாடல்களைப் பாடினர்.(43)

அதன்பிறகு, இசைவிருப்பம் கொண்டவர்களும், நன்கு உடுத்தியவர்களுமான நூற்றுக்கணக்கான காரிகையர், தேவலோகத்தில் வாழும் அப்சரஸ்களுடன் சேர்ந்து பல்வேறு இனிய ஒலிகளை இசைத்து விளையாடத் தொடங்கினர்.(44) ஆகாயக் கங்கையின் நீரில் இசைக்கருவிகள் இசைப்பதை அறிந்த அந்த இளங்கன்னியர், காமனால் முழுமையாகப் பீடிக்கப்பட்ட மனங்களுடன் மகிழ்ச்சியாக ஜலதர்துரம் {ஜலதரங்கம்}[2] இசைத்து, அதற்கு இணக்கமான பாடல்களைப்பாடினர்.(45) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர்களும், தாமரைத் தண்டுகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான தேவலோகத்தின் அழகிய ஆடற்பெண்கள் அந்த நேரத்தில் சூரியக் கதிர்களாக முற்றாக மலர்ந்த தாமரையின் அழகை அடைந்தனர்.(46) ஓ! மன்னா, தாங்களே விரும்பியோ, எதிர்காலத் தேவைக்கான ஆதிக்கத்தின் கீழோ அங்கே வந்திருந்தவர்களும், நூற்றுக்கணக்கான முழுநிலவுகளைப் போலத் தோன்றுபவர்களுமான அந்தப் பெண்களின் நிலவு போன்ற முகங்களால் நிறைந்திருந்த அந்தப் பெருங்கடலானது, ஆயிரக்கணக்கான நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட வானத்தைப் போலத் தோன்றியது.(47) ஓ! மன்னா, மேகம் போன்ற பெருங்கடல், மின்னல் போன்ற பெண்களால் அழகூட்டப்பட்டது. நீர்நிலைகளின் தலைவன் மின்னலால் வானில் விலக்கப்படும் மேகங்களைப் போலத் தெரிந்தான்.(48)

[2] "நீரில் இசைக்கப்படும் ஒருவகை இசைக்கருவி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "க்ருஷ்ணனின் கட்டளையால் ஸ்வர்க்க வாஸிகளான அப்ஸரஸ்களுடன் நூற்றுக்கணக்கான பணிப்பெண்கள் ப்ரியமான கோஷ வாத்தியங்களையும் நானாவித ஸ்வரத்துடன் கூடிய ஜலதரங்கம் போன்ற ஜலவாத்யங்களையும் இசைத்தனர். ஸதா யுவதிகளான அந்த அப்ஸரஸ் ஸ்த்ரீகள் காமத்திலேயே நோக்கங்கொண்டவர். ஆகாச கங்கா ஜலவாத்யமறிந்தவர். ஜலவாத்யங்களையும் வாசித்தனர். மகிழ்ந்து வாத்யத்துக்கு ஒத்துப் பாடவும் செய்தனர்" என்றிருக்கிறது.

உடலில் அழகிய அடையாளங்களைக் கொண்ட நாராயணன், நாரதர் ஆகியோரும் அவனது {கிருஷ்ணனின்} தரப்பைச் சார்ந்தோர் பிறரும் உடலில் அழகிய அடையாளங்களைப் பூண்ட பலதேவன் மீதும், அவனது தரப்பினர் மீதும் நீரைத் தெளித்தனர். இவர்களும், அவர்கள் மீது நீரைத் தெளித்தனர்.(49) அந்த நேரத்தில் கிருஷ்ணன், சங்கர்ஷணன் ஆகியோரின் மனைவியர் வாருணி மது கொடுத்த போதையின் மூலமும், இசையால் தூண்டப்பட்டும் தங்கள் கரங்களாலும், நீர் தெளிக்கும் கருவிகள் மூலமும் மகிழ்ச்சியாக நீரைத் தெளித்தனர்.(50) மதுவாலும், காமனாலும், தன்மானத்தினாலும் பீடிக்கப்பட்ட பைமர்கள், போதையில் சிவந்த கண்களுடன் ஒருவர் மீது மற்றொருவர் நீர் தெளித்து, இவ்வகையிலேயே பெண்களின் முன்னிலையில் முரட்டுத் தன்மையை அடைந்தனர்; நீண்ட நேரமாக விளையாடிக் கொண்டிருந்தாலும் அவர்கள் விலகாமல் இருந்தனர்.(51)

சக்கரபாணியான கிருஷ்ணன், இவ்வாறு கட்டுமீறும் கலவியைக் கண்டு, ஒரு கணம் சிந்தித்து, அவர்களைத் தடுத்தான். அவனும், பார்த்தன், நாரதர் ஆகியோருடன் சேர்ந்து நீரில் கருவிகளை இசைப்பதில் இருந்து விலகினான்.(52) பைமர்கள், தங்கள் அன்புக்குரிய பெண்டிருக்கும் எப்போதும் மகிழ்ச்சியை அளிப்பவர்களாகவும், பேருணர்வு கொண்டவர்களாக இருந்தாலும், கிருஷ்ணனின் குறிப்பறிந்தும், அவனது நோக்கத்தை உடனே புரிந்து கொண்டு நீரில் விளையாடுவதில் இருந்து விலகினர்; ஆனால் அந்தக் காரிகையர் தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.(53) அந்த நடனக் கொண்டாட்டம் முடிந்தும் பிற யாதவர்கள் நீரில் இருந்த போதே உபேந்திரன் {கிருஷ்ணன்} கரையேறினான். அதன் பிறகு அவன் முனிவர்களில் சிறந்த நாரதருக்கு சுகமான களிம்புகளைக் கொடுத்து, தானும் தன் மீது பூசிக் கொண்டான்.(54) உபேந்திரன் நீரைவிட்டு எழுந்ததைக் கண்ட ஒப்பற்ற பைமர்களும் விரைவில் நீரை விட்டகன்றனர். பிறகு தங்கள் மேனியில் களிம்புகளிட்டுத் தூய்மையாகி, கிருஷ்ணனின் அனுமதியுடன் பானம் பருகும் இடத்திற்குச் சென்றனர்.(55) அங்கே அந்தப் புகழ்வாய்ந்த வீரர்கள் தங்கள் வயதுக்கும், தகுதிக்கும் ஏற்ற வரிசையில் அமர்ந்து கொண்டு பல்வேறு உணவுகளுடனும், பானங்களுடனும் புத்துணர்ச்சி அடைந்தனர்.(56)

அப்போது சமையற்கலைஞர்கள், சமைத்த இறைச்சியையும், புளிக்காடியையும் {புளித்த பழச்சாறுகளையும்}, மாதுளைகளையும், சூலங்களில் {இரும்புக் கம்பிகளில் வைத்து} வாட்டப்பட்ட விலங்கு இறைச்சிகளையும் மகிழ்ச்சியாக அங்கே கொண்டு வந்தனர்.(57) பிறகு சூலத்தில் நன்கு வாட்டப்பட்டதும், சூடானதும், புளி, ஆளிவிதை, புளிக்காடி ஆகியவை கலந்து தெளிந்த நெய்யில் பொரிக்கப்பட்டதுமான இளம் எருமை அங்கே படைக்கப்பட்டது.(58) திறன்மிக்கச் சமையற்கலைஞர்களின் நடைமுறைப்படி வாட்டப்பட்ட பருத்த மான்கள் பலவற்றின் இறைச்சியும், புளிக்காடியில் இனிமையாக்கப்பட்டு அடுத்ததாகக் கொண்டு வரப்பட்டது.(59) உப்பு, கடுகு ஆகியவை கலந்து தெளிந்த நெய்யில் பொரிக்கப்பட்ட விலங்குகளின் கால்களும் அங்கே படைக்கப்பட்டன.(60) ஒப்பற்றவர்களான யாதவர்கள், கிழங்கு, மாதுளை, பெருங்காயம், மஞ்சள் ஆகியவையும், நறுமணமிக்கப் பிற காய்கறிகளும் கலந்த அந்த உணவுகளைப் பெரும் மகிழ்ச்சியுடன் உண்டனர்.(61) தெளிந்த நெய், புளிச்சாறு, உப்பு ஆகியவற்றுடனும் புளிப்பான பிற பொருட்களுடனும் சேர்த்துச் சூலத்தில் வாட்டப்பட்ட பறவைகளின் இறைச்சிகளை உண்டு, மைரேயம், மாத்வீகம், ஆஸவம் போன்ற பல்வேறு மதுவகைகளைத் தங்கள் அன்புக்குரிய காரிகையர் சூழ அவர்கள் பருகினர்.(62) தயிரும், தெளிந்த நெய்யும் சேர்க்கப்பட்டவையும், வெள்ளை, சிவப்பு வண்ணங்களிலானவையும், உப்பு சேர்க்கப்பட்டவையுமான மணமிக்கப் பல்வேறு சிற்றுண்டிகளையும் அவர்கள் உண்டனர்.(63) ஓ! மன்னா, மது பருகாதவர்களான உத்தவன், போஜன் போன்ற பிற வீரர்கள், காய்கனிகளையும், மரக்கறி குழம்பையும், தயிர், பருப்பு ஆகியவற்றையும் மகிழ்ச்சியாக உண்டனர்.(64) பாலவி என்ற பெயர் கொண்ட கோப்பைகளில் அவர்கள் பல்வேறு வகையான மணமிக்கப் பானங்களையும், பால், நெய், பாயஸம் ஆகியவற்றையும் பருகி, பல்வேறு வகைக் கனிகளையும் உண்டனர்.(65) இவ்வாறே அந்த வீரப் பைமர்கள் தங்களுக்கு நிறைவாக உண்டு மகிழ்ந்திருந்தனர். அதன்பிறகு அவர்கள் தங்கள் மனைவியரால் தூண்டப்பட்டு அவர்களுடன் சேர்ந்து, மீண்டும் மகிழ்ச்சியுடன் இசையில் கலந்தனர்.(66)

அப்போது இரவும் வந்தபடியால் தெய்வீகனான உபேந்தரன் அந்தக் கொண்டாட்டத்தில் இருந்த அனைவரையும் சேர்ந்து பாடக் கேட்டுக் கொண்டான். தேவர்களாலும், கந்தர்வர்களாலும் பல்வேறு ராகங்களில் அமைக்கப்பட்ட சாலிக்யம் {என்ற பாடல் / காந்தர்வ கானம்} அங்கே பாடப்பட்டது.(67) ஓ! மன்னா, அப்போது நாரதர், மனத்தில் ஓர்மையைக் கொண்டு வரும் ஸ்வரங்களையும், ஆறு ராகங்களையும் கொண்ட {சத்கிராமம் இசைக்கவல்ல}[3] தன் வீணையை மீட்டினார், கிருஷ்ணன் தன் புல்லாங்குழல் இசையுடன் சேர்த்து ஹல்லீசகம் {நாட்டிய கீதம்}[4] இசைத்தான்; பார்த்தன்(68) மிருதங்கம்[5] இசைத்தான்; முன்னணி அப்சரஸ்கள் பல்வேறு இசைக்கருவிகளை இசைத்தனர். அதன் பிறகு அசாரிதையும்[6], நல்ல நடிகையுமான அழகிய ரம்பை எழுந்து இசைக்குத் தக்க இசைந்து {நடனமாடி}(69) ராமனையும், கேசவனையும் மகிழ்வித்தாள். அதன் பிறகு, ஓ! மன்னா, அழகிய அகன்ற விழிகளைக் கொண்ட ஊர்வசி, ஹேமா, மிஷ்ரகேசி,(70) திலோத்தமை, மேனகை ஆகியோரும் பிற தெய்வீக நடிகையரும் முறையான வரிசையில் எழுந்து ஆடல், பாடலுடன் ஹரியை மகிழ்வித்தனர்.(71) அவர்களுடைய ஆடலிலும், பாடலிலும் ஈர்க்கப்பட்ட வாசுதேவன், அவர்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியடைந்தவனாக அவர்களுடைய இதயம் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் கொடையாக அளித்தான். ஓ! இளவரசே, அங்கே அழைத்துவரப்பட்டவர்களும், மதிப்புமிக்கவர்களுமான அந்த முன்னணி அப்சரஸ்கள், கிருஷ்ணனின் விருப்பத்தின் பேரால் வெற்றிலை {தாம்பூலம்} கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர்.(72)

[3] பைரவம், மாலவ சாரங்கம், இந்தோளம், வசந்தம், தீபகம், மேகம் என்ற இசையின் ஆறு வகை ராகங்கள் இவை. செய்யுள்களிலும், தொன்மங்களிலும் இவை வடிவம் கொண்ட நபர்களாக உருவகப் படுத்தப்படுகின்றன" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "ச,ரி,க,ம,ப,த,நி எனத் தொடங்கும் ஏழு ஒலிகளில் "ச" எனத் தொடங்குவது சத்கிராமம் என்று அழைக்கப்படுகிறது. "ம" வில் தொடங்கினால் மத்யமகிராமம் என்றும், "க" வில் தொடங்கினால் காந்தாரக்ராம் என்றும், "ப" வில் தொடங்கினால் பஞ்சமக்ராமம் என்றும் அழைக்கப்படும். சத்கிராமமும், மத்யமகிராமமும் மனிதர்களின் உலகில் பயிலப்படுவனவாகும். நாரதர் சொர்க்கத்தில் காந்தாரக்ராமத்தைப் பயன்படுத்துகிறார். இங்கே சொல்லப்படும் இசையின் ஆறு ராகங்கள் மத்ய, சுத்த, பின்ன, கௌட, மிஷ்ர, கீதம் ஆகியனவெனக் கீதா பிரஸ் நீலகண்டர் உரை, பக்கம் 704 சுலோகம் 68 அடிக்குறிப்பு 1ல் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றிருக்கிறது.

[4] "ஓர் ஆடவனும், எட்டு அல்லது பத்து பெண்களும் பாடி, ஆடி நடத்தும் ஒருவகை நாடகம் போன்றது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். குடக்கூத்து, குரவைக் கூத்து, கரகாட்டம் போன்றது எனத் தெரிகிறது. சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "பல பெண்களுடன் ஆடல் புரிவது ஹல்லீசகம் அல்லது ராச நடனம் என்று அழைக்கப்படுகிறது எனக் கீதா பிரஸ் நீலகண்டர் உரை, பக்கம் 704 சுலோகம் 68 அடிக்குறிப்பு 2ல் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றிருக்கிறது.

[5] "ஒரு வகை இசைக்கருவி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். மிருதங்கம் நமக்கு அறிமுகமான சொல்லாக இருந்தாலும் அந்நிய ஆங்கில வாசகர்களுக்காக இவ்வாறு விளக்கியிருக்கிறார்.

[6] சித்திரசாலை பதிப்பில், "நான்காம் நிலையின் முடிவில் ஆடற்கலை, நடிப்புக் கலை ஆகியவற்றின் கோட்பாடுகளை அறிந்த அப்சரஸ் ரம்பை எழுந்தாள். அழகிய உடல்படைத்த ரம்பையின் ஆடலிலும், நடிப்பிலும் பலராமனும், ஜனார்த்தனனும் மகிழ்ச்சியடைந்தனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "பரத முனிவரின் நிருத்யவிதியின்படி அசாரிதைகளில் நான்கு நிலைகள் உள்ளன. முதல் நிலை என்பது ஆடற்கலைஞரின் நுழைவைக் குறிக்கும், அடுத்து வரும் நாட்யம் என்பது பொருளுடன் நடிக்கும் ஆட்டமாகும். மூன்றாம் நிலை முகம், கை முதலிய அங்கங்களைப் பயன்படுத்திப் பாவனைகள் மற்றும் அசைவுகளுடன் ஆடுவதாகும். நான்காம் நிலை தெய்வீகக் குறியீடுகளுடன் ஆடுவதாகும் எனக் கீதா பிரஸ் நீலகண்டர் உரை, பக்கம் 704 சுலோகம் 69 அடிக்குறிப்பு 3ல் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "நாட்டிய முடிவில் அபிநய அர்த்த தத்வமறிந்த ரம்பை எழுந்தாள். அழகிய உடலமைப்புள்ள ரம்பையால் அபிநயம் பிடிக்கப்பட்டதும் பலராமனும், ஜனார்த்தனனும் மிக மகிழ்ந்தனர்" என்றிருக்கிறது

ஓ! மன்னா, இவ்வாறு கிருஷ்ணனின் விருப்பம், மானுடத்தின் மீது அவன் கொண்ட தயவு ஆகியவற்றின் மூலமும் தேவலோகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட நறுமணமிக்கப் பல்வேறு கனிகளும், அந்தச் சாலிக்ய பாடலும் {சாலுக்ய காந்தர்வமெனும் தேவலோகப் பாட்டும்} ருக்மிணியின் நுண்ணறிவுமிக்க மகன் {பிரத்யும்னன்} மட்டுமே அறிந்தவையாக இருந்தன. அவனே அவற்றைப் பயன்படுத்தினான்; அவனே அந்நேரத்தில் வெற்றிலைகளை {தாம்பூலத்தைக்} கொடுத்துக் கொண்டிருந்தான்.(73,74) நலம்பயக்கவல்லதும், ஊட்டத்தையும், செழிப்பையும் கொடுக்கவல்லதும், நாராயணனின் புகழைச் சொல்வதும், மகிமைவாய்ந்ததும், மங்கலமானதும், மனிதர்கள் புகழையும், அறத்தையும் ஈட்டச் செய்வதுமான அந்தச் சாலிக்ய பாடலை இந்திரனைப் போன்ற கிருஷ்ணனும், ராமன், பிரத்யும்னன், அனிருத்தன், சாம்பன் ஆகியோரும் பாடினர்.(75,76) அங்கே பாடப்பட்ட சாலிக்யம், அறத்தின் அச்சாணியை நிலைநிறுத்தவல்லதாகவும், கவலையையும், பாவத்தையும் அழிக்கவல்லதாகவும் இருந்தது. சிறப்புமிக்க ரேவத மன்னன், தேவலோகத்திற்குச் சென்று, இந்தச் சாலிக்யப் பாடலைக் கேட்டு, நான்கு யுகங்களை ஒரு நாளாகக் கருதினான். அதிலிருந்தே குமாரஜாதி முதலிய காந்தர்வங்களின் பல்வேறு பிரிவுகள் {கானப் பிரிவுகள்} தோன்றின.(77,78)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு விளக்கால் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்படுவதைப் போலவே சாலிக்யத்திலிருந்தே காந்தர்வங்களின் பல்வேறு பிரிவுகள் உண்டாகின. ஓ! மன்னா, பிரத்யும்னனும், முன்னணி பைமர்கள் பிறரும், கிருஷ்ணன், நாரதர் ஆகியோரும் இவை அனைத்தையும் அறிந்திருந்தனர்.(79) இந்த உலகத்தின் மக்கள் ஓடைகளையும், பெருங்கடலின் நீரையும் அறிந்ததைப் போல ஓர் எடுத்துக்காட்டாக மட்டுமே சாலிக்யத்தை அறிந்திருந்தனர். இமயத்தின் குணங்களையும், கனத்தையும் அறிந்துவிடலாம், சாலிக்யத்தின் மூர்ச்சனைகளையும்[7], கால அளவுகளையும் கடும் தவம் {கடும் பயிற்சி} செய்யாமல் அறிய முடியாது.(80,81) ஓ! மன்னா, மனிதர்கள் பெருஞ்சிரமத்துடன் முயன்றாலும் பதினோராவது பிரிவான சுகுமாரஜாதியின் எல்லையையே அடைய முடியாது எனும்போது ஆறு ஸ்வர ராகங்களைக் கொண்ட சாலிக்யத்தைக் குறித்து என்ன சொல்ல முடியும் {அஃது எவ்வளவு கடினமானதாக இருக்க வேண்டும்?}. ஓ! மன்னா, தேவர்களும், கந்தர்வர்களும், பெரும் முனிவர்களும் சாலிக்யத்தினுடைய குணங்களின் காரணமாகப் பக்தி கொள்ளும் மனநிலையை அடையக்கூடும் என்பதற்காகவே மதுசூதனன் அதை ஏற்படுத்தினான் என்பதை அறிவாயாக.(82,83)

[7] "ஒரு கிராமத்தின் ஏழாவது பகுதியில் வெளிப்படும் தொனி அல்லது அரைத் தொனி இஃது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

உலகத்திற்குத் தயவு காட்டும் வகையில் மனிதர்களுக்கு மத்தியில், பைமர்களின் முன்னிலையில் தேவன் கிருஷ்ணனால் பாடப்பட்டதன் காரணமாக, அதுவரை தேவர்களால் மட்டுமே பாடப்பட்டு வந்த சாலிக்யம், முற்காலத்தில் {பிறந்த நாள் முதலிய} விழாக் காலங்களில் பைமச் சிறுவர்கள் எடுத்துக் காட்டாக மேற்கோள் காட்டும் அளவுக்குப் புகழடைந்தது. அவர்கள் சொல்வதை முதியவர்களும் அங்கீகரித்தனர் {மதித்துப் புகழ்ந்தனர்},(84,85) சிறுவர்களும், இளைஞர்களும், முதியவர்களும், தங்கள் குலத்தில் இத்தகைய குணம் கொண்ட மனிதர்களும், புராதன அறச்சடங்குகளை வகுத்தவர்களுமான வீர யாதவர்களை நினைவுகூருவதற்காக "அன்பே இன்றியமையாதது, வயதல்ல" என்று கூட்டாகச் சேர்ந்து பாடினர்.(86) ஓ! மன்னா, நட்பு அன்பால் அறியப்படுகிறது; எனவே, கேசவனுடன் சேர்த்து விருஷ்ணிகள், அந்தகர்கள், தாசார்ஹர்கள் பிறரும் தங்கள் மகன்களைத் தங்கள் நண்பர்களாகவே கருதினர்.(87) அதன்பிறகு நிறைவடைந்தவர்களான அப்சரஸ்கள், கம்சனைக் கொன்றவனான மதுசூதனனை மகிழ்ச்சியாக வணங்கிவிட்டு, இன்பத்தில் நிறைந்திருந்த தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றனர்" என்றார் {வைசம்பாயனர்}.(88)

விஷ்ணு பர்வம் பகுதி – 146 – 090ல் உள்ள சுலோகங்கள் : 88
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்