Tuesday 24 November 2020

யாதவக் கடல்நீர்விளையாட்டு | விஷ்ணு பர்வம் பகுதி – 145 – 089

(ஜலக்ரீடாவர்ணனம்)

The Yadavas sport in the oceon | Vishnu-Parva-Chapter-145-089 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பெண்களுடனும், அப்ஸரஸ்களுடனும் கிருஷ்ணனும், யாதவர்களும் கடல் நீரில் விளையாடிய சமுத்ர ஜலக்ரீடை...


Jalakreeda of Krishna

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவரே, நுண்ணறிவுமிக்க மஹாதேவன், மூவுலகங்களில் அமைதியை மீட்டெடுக்கத் தேவையான அந்தகனின் அழிவு பற்றிய கதையை நான் கேட்டேன்.(1) இனி, சக்கரபாணியான கிருஷ்ணனால் நிகும்பனின் மற்றொரு உடல் அழிக்கப்பட்டது ஏன் என்பதை விரிவாகச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனே}, "ஓ! பாவமற்ற மன்னா, அண்டத்தின் பலம்வாய்ந்தவனும், உயர்ந்தவனுமான தலைவன் ஹரியின் வரலாற்றைக் கேட்பதில் பெரும் மதிப்பை வெளிப்படுத்துகிறாய். எனவே நான் இதை உனக்குச் சொல்ல வேண்டும்.(3) ஓ! மன்னா, ஒப்பற்ற சக்தி கொண்ட ஹரி துவாரகை நகரத்தில் வாழ்ந்தபோது, பிண்டாரகம் {பிண்டாலகம்} எனும் புனிதத் தலத்திற்குக் கடல்வழியாகப் பயணம் செய்தான்.(4) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அந்த நேரத்தில் உக்ரசேனனும், வசுதேவனும் நகரத்தின் ஆளுனர்களாக இருந்தனர். மற்றவர் அனைவரும் நாராயணனைப் பின்தொடர்ந்தனர்.(5) ஓ! மன்னா, பலதேவனும், ஜனார்த்தனனும், தேவர்களைப் போன்ற சக்திமிக்கப் பிற இளவரசர்களின் கூட்டங்களும் தனித்தனியே புறப்பட்டுச் சென்றனர்.(6)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய விருஷ்ணி இளவரசர்களுடன் ஆயிரக்கணக்கான ஆடற்பெண்டிரும் சென்றனர்.(7) ஓ! வீரா, பலம்வாய்ந்தவர்களான யாதவர்கள், அந்த ஆயிரக்கணக்கான ஆடற்பெண்டிரையும் கடற்படுகையில் இருந்து நீரை விலக்கி துவாராவதி நகரில் குடியமர்த்தி இருந்தனர்[1].(8) அழகு நிறைந்தவர்களான அந்த ஆடற்பெண்டிர், தங்கள் திறன்களின் காரணமாக இளவரசர்களின் இன்பத்திற்குரியவர்கள் ஆனார்கள்.(9) ஓ! தலைவா, நுண்ணறிவுமிக்கக் கிருஷ்ணன், பெண்களுக்கான உட்பகையால் யாதவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்து பைமர்களுக்கிடையே இந்த நடைமுறையை நிறுவியிருந்தான்.(10)

[1] சித்திரசாலை பதிப்பில், "உறுதிமிக்க வீரம் கொண்ட யாதவர்கள், தைத்தியர்களை வென்று துவாராவதியில் ஆயிரக்கணக்கான வேசிகளைக் குடியமர்த்தினர்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "உறுதியான பராக்ரமமுடைய யது வீரர்களைக் கொண்டு (நிகும்பன் முதலிய) அஸுரர் வஸிக்குமிடத்தை (ஷட்புரத்தை) ஜயித்து த்வாரகையில் ஆயிரக்கணக்கில் வேசியர் வைக்கப்பட்டனர்" என்றிருக்கிறது.

யதுக்களில் முதன்மையானவனும், பலம்வாய்ந்தவனும், மது பருகிய போதையுடன் கூடியவனும், காட்டு மலர்மாலையால் அலங்கரிக்கப்பட்டவனுமான பலதேவன், நீரில் விளையாடிய போது, ஒரு சக்கரவாகப் பறவையைப் போல ரேவதியுடன் மட்டுமே இன்புற்றிருந்தான்.(11,12)

அனைத்தையும் படைத்தவனும், தாமரைக் கண்ணனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, தன் சொந்த உடல்கள் பலவற்றினால் உறவாடியபடியே தன்னுடைய பதினாறாயிரம் மனைவியருடன் கடலில் தனித்தனியாக விளையாடிக் கொண்டிருந்தான்.(13) ஓ! மன்னா, அந்த நேரத்தில் கேசவனின் மனைவியருக்கு மத்தியில், "நானே கேசவருக்கு மிகப் பிடித்தமானவள்; அவர் என்னுடன் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார்" என்ற எண்ணம் இருந்தது.(14) தங்கள் மேனி முழுவதும் போகத்திற்குரிய அடையாங்களைக் கொண்ட அந்தக் காரிகையர் அனைவரும் கோவிந்தனிடம் காதல் சரசமாடினர்.(15) நற்பெண்டிரில் அழகியரான அந்த நாராயணக் காரிகையர் {நாராயணனின் மனைவியர்}, "நான் மட்டுமே கேசவருக்கு மிகப் பிடித்தமானவள்" என்று எண்ணி ஏமாந்தனர் {தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டனர்}.(16) {தாமரையைப் போன்று அழகிய கண்களைக் கொண்ட அந்தப் பெண்கள், தங்கள் முலைகளில் நகக்குறிகளையும், உதடுகளில் பற்குறிகளையும் மீண்டும் மீண்டும் முகக்கண்ணாடியில் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்}[2].(17) கிருஷ்ணனின் மனைவியர், தங்கள் கண்களால் கேசவனின் முக அமுதத்தைப் பருகிவிடுபவர்களைப் போல அவனைக் கண்டனர்.(18) கேசவனிடம் மட்டுமே நிலைத்த மனங்களையும், கண்களையும் கொண்ட அந்தக் காரிகையர் முன்பைவிட அப்போது அழகாகத் தெரிந்தனர்.(19) தலைவன் நாராயணன் அந்தப் பெண்கள் அனைவரையும் நிறைவடையச் செய்ததால், ஒருவனிடமே நிலைத்த மனங்களையும், கண்களையும் கொண்ட அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பொறாமையை வளர்த்துக் கொள்ளவில்லை.(20) அந்த அழகிய பெண்கள், கேசவனால் முற்றிலும் பீடிக்கப்பட்டவர்களைப் போலப் பெருமையுடன் தங்கள் தலைகளை அசைக்கத் தொடங்கினர்.(21)

[2] இந்த ஸ்லோகம் மன்மதநாததத்தரின் பதிப்பில் விடுபட்டிருக்கிறது. மற்ற இரு பதிப்புகளையும் ஒப்பு நோக்கி இங்கே சேர்க்கப்பட்டிருக்கிறது.

தற்கட்டுப்பாட்டைக் கொண்ட ஹரி, தன் அண்ட வடிவின் வழிமுறைகளைப் பின்பற்றி இவ்வாறு கடலின் தூய நீரில் அந்தப் பெண்களுடன் விளையாடத் தொடங்கினான்.(22) ஓ! வீரா, அந்நேரத்தில் வாசுதேவனின் ஆணையின் பேரில் கடலின் நீர் உப்பிலிருந்து விடுபட்டிருந்தது, அந்தப் பெருங்கடல் அனைத்து வகை நறுமணங்களுடன் கூடிய தூய நீரைக் கொண்டிருந்தது.(23) கணுக்காலளவு, முழங்காலளவு, தொடையளவு, முலையளவு என அந்தப் பெண்கள் விரும்பிய அளவுக்கு அந்தக் கடல் நீரைத் தந்தது.(24) ஆறுகள் தங்கள் நீரைக் கடலில் பொழிவதைப் போல, மேகங்கள் மலரும் கொடிகளில் நீரைப் பொழிவதைப் போல அந்த நீர் விளையாட்டில் {ஜலக்ரீடையில்} கேசவனின் மனைவியர் அவன் மீது நீரைத் தெளித்தனர்.(25) மான்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவர்களில் சிலர், கிருஷ்ணனின் கழுத்தைத் தழுவிக் கொண்டு, "ஓ! ஹரி, நான் மூழ்கப் போகிறேன், என்னைக் காப்பீராக" என்றனர்.(26) அழகிய பெண்கள் சிலர் மயில், யானைகளின் வடிவங்களிலான மரப்படகுகளை {தெப்பங்களை} நீரில் செலுத்தத் தொடங்கினர்.(27) மகர {முதலை} வடிவிலான படகுகளைச் சிலரும், மீன்வடிவிலான படகுகளைச் சிலரும் பல்வேறு வடிவங்களிலான படகுகளை இன்னும் சிலரும் செலுத்தத் தொடங்கினர்.(28) கடல் நீரில் ஜனார்த்தனனை மகிழ்விக்க விரும்பிய பெண்களில் நீர்க்குடங்களைப் போன்ற தங்கள் முலைகளைக் கொண்டு சிலரும், நீர்க்குடங்களையே கொண்டு சிலரும் நீந்தினர்.(29)

மகிழ்ச்சியால் நிறைந்த கிருஷ்ணனும் ருக்மிணியுடன் விளையாடத் தொடங்கினான். நாராயணனின் மனைவியர், தேவர்களில் முதன்மையான கேசவனுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் செயல்களையே செய்தனர்.(30) மெலிந்தவுடல் கொண்ட அந்தக் காரிகையருக்கு மத்தியில், மேகம் போன்ற கண்களைக் கொண்டவர்களும், மெலிந்த ஆடை அணிந்தவர்களுமான சிலர் வாசுதேவனின் அசைவுகளை போலத் தாங்களும் செய்து காட்டினர்.(31) அனைவரின் மனவிருப்பத்தையும் அறிந்தவனான கேசவன், அந்தப் பெண்களின் மனங்களில் நுழைந்து, அவர்கள் விரும்பியதைச் செய்து நிறைவடையச் செய்தான்.(32) தெய்வீகனும், நித்தியனும், பலம்வாய்ந்தவனுமான ரிஷிகேசன், தற்கட்டுப்பாட்டைக் கொண்ட அனைவரின் தலைவனாக இருந்தாலும், கால நெருக்கடிக்குத் தகுந்த வகையில் தன் அன்புக்குரிய மனைவியரின் கட்டுப்பாட்டுக்குள் தன்னை நிறுத்திக் கொண்டான்.(33) என்ன ஆச்சரியம்? அந்தக் காரிகையர், மனித வடிவில் இருந்த ஜனார்த்தனனைத் தங்கள் பிறவிக்கும் {குலத்துக்கும்}, தகுதிகளுக்கும் {தரத்திற்கும்} ஏற்ற கணவனாகக் கருதினர்.(34) அந்தப் புத்திசாலிப் பெண்கள், அன்புடனும், பேசுவதற்கு முன் எப்போதும் சிரித்தபடியும் கிருஷ்ணனுக்குத் தகுந்த மதிப்பை வழங்கி அர்ப்பணிப்புடன் அவனை நாடினர்.(35)

இளவரசர்கள், பெண்களுடன் நீரில் விளையாடுவதற்காகத் தனித்தனி குழுக்களை அமைத்தனர். சாதனைகளின் சுரங்கங்களான அந்த வீரர்கள் நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர்.(36) ஓ! மன்னா, பாடும் கலையிலும், ஆடற்கலையிலும் திறன்மிகுந்தவர்களும், அந்த இளவரசர்களால் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டவர்களுமான பெண்கள், அன்புடன் கூடிய அவர்களின் நடத்தையால் மகிழ்ச்சியடைந்தனர்.(37) அந்த அழகிய பெண்களின் எழில்மிகு நடைகளை {அபிநயங்களைக்} கண்டும், இசைக்கருவிகளின் இசையையும், அவர்களின் பாடல்களையும் கேட்டும் அந்த யதுகுல வீரர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.(38)

உலகின் தலைவனும், அளவற்ற சக்தி கொண்டவனுமான தலைவன் கிருஷ்ணன், தன் அண்ட வடிவின் காரணமாக மிக அழகிய அப்சரஸ்களான பஞ்சசூடை, கௌபேரிகள் {குபேரனிடம் உள்ள அப்சரஸ்கள்}, மாஹேந்திரிகள் {இந்திரனிடமுள்ள அப்சரஸ்கள்} ஆகியோரை வரவழைத்ததும்,(39) அவர்கள் கூப்பிய கரங்களுடன் வந்து அவனை வணங்கினர். அவர்களைத் தேற்றிய அந்த உலகத்தலைவன் {ஜகத்பிரபு},(40) "ஓ! அழகிய அப்சரஸ்களே, என்னை நிறைவடையச் செய்வதற்காக இங்கே எந்தவிதக் கவலையுமின்றி நுழைந்து விளையாட்டுப் பெண்களாகி {க்ரீடாஸ்திரீகளாகி} யாதவர்களை மகிழ்வியுங்கள்.(41) பல்வேறு இசைக் கருவிகளிலும், ஆடல் பாடல்களிலும், இன்னும் பிற புதிரான கலைகளிலும் நீங்கள் பெற்ற திறன்கள் அனைத்தையும் அவர்களுக்குக் காட்டுங்கள்.(42) அவர்கள் அனைவரும் என் அங்கங்களைப் போன்றவர்கள். எனவே, அவர்களை மகிழ்வித்தால் நீங்கள் நன்மையை அடைவீர்கள்" என்றான்.(43)

அந்த அப்சரஸ்கள் தலைவணங்கி ஹரியின் ஆணையை ஏற்றுக் கொண்டு யாதவர்களின் விளையாட்டுப் பெண்களாக அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.(44) ஓ! பாவமற்றவனே, மின்னலால் வானத்தில் ஒளியூட்டப்படும் மேகங்களைப் போலவே அங்கே அவர்கள் நுழைந்ததும் கடலின் நீர் பிரகாசமடைந்தது.(45) அவர்கள், நிலத்தில் நிற்பதைப் போல நீரில் நின்று கொண்டு தேவலோகத்தில் இசைப்பதைப் போல நீரில் பல்வேறு பாடல்களைப் பாடினர்.(46) அகன்ற விழிகளைக் கொண்ட அந்தப் பெண்கள், தெய்வீக ஆடைகளாலும், விளையாட்டுப் புன்னகையாலும், முகபாவங்களாலும், விழி அசைவுகளாலும், கோபத்தாலும், தங்கள் இதயம் விரும்பும் வகையிலான தொண்டாலும் பைமர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டனர்.(47,48) முன்னணி அப்சரஸ்களான அவர்கள் போதையில் இருந்த பைமர்களை மீண்டும் மீண்டும் வானத்தில் தூக்கிப் போட்டு மீண்டும் அவர்களைக் கீழே கொண்டு வந்தனர்.(49)

யாதவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதற்காகக் கிருஷ்ணனும் தன் பதினாறாயிரம் மனைவியருடன் மகிழ்ச்சியாக வானத்தில் விளையாடத் தொடங்கினான்.(50) வீரமிக்கப் பைமர்கள், பலம்வாய்ந்த கிருஷ்ணனின் அளவற்ற சக்தியை அறிந்திருந்ததால் அவனது இந்த அருஞ்செயலைக் கண்டு ஆச்சரியமடையவில்லை; மாறாக அதனில் முற்றான ஈர்ப்பைக் கண்டனர்.(51) ஓ! பாரதா, ஓ! பகைவரைக் கொல்பவனே {ஜனமேஜயா}, அவர்களில் சிலர் தாங்களாகவே ரைவதகத்திற்குத் திரும்பிச் சென்றனர், சிலர் தங்கள் வீடுகளுக்கும், மேலும் சிலர் தாங்கள் விரும்பிய வனங்களுக்கும் சென்றனர்.(52) எவராலும் பருக முடியாத கடல் நீரானது, உலகின் பெருஞ்சக்திவாய்ந்த தலைவனான விஷ்ணுவின் ஆணையின் பேரில் அனைவராலும் பருகத்தகுந்த நற்பானமானது.(53) அவர்கள், தாமரைக் கண்களைக் கொண்ட காரிகையரின் கரங்களைப் பற்றிக் கொண்டு, நிலத்தில் நடப்பதைப் போல நீரில் நடந்து, மீண்டும் நீருக்குள் பாய்ந்தனர்.(54) அவர்கள் உணவுப் பொருட்களையோ, பானத்தையோ நினைத்த மாத்திரத்தில் அவை அவர்களின் முன்பு கொண்டு வரப்பட்டன.(55) புத்தம்புது மலர்களாலான மாலைகளைச் சூடியிருந்த அந்தக் காரிகையர், இவ்வாறே அந்தத் தனிமையான இடத்தில் யது குல இளவரசர்களுடன் விளையாடத் தொடங்கினர்.(56)

வெல்லப்பட முடியாதவர்களான விருஷ்ணிகளும், அந்தகர்களும், மாலை வேளை வந்ததும் தங்கள் மேனிகளில் களிம்புகளிட்டு நீராடி, படகுவீடுகளில் விளையாடத் தொடங்கினர்.(57) ஓ! குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, தேவதச்சனான விஷ்வகர்மன், அந்தப் படகுகள் அனைத்திலும் சதுரஸ்ர, ஸ்வஸ்திக முதலிய பல்வேறு அரண்மனைகளை {சதுர, ஸ்வஸ்திக வடிவங்களில் மாடங்களை} அமைத்திருந்தான்.(58) அந்தப் படகுகளில் சில கைலாச, மந்தர, சுமேரு மலைகளைப் போல இருந்தன. அவற்றில் சில பறவைகளைப் போன்றும், மான்களைப் போன்றும் இருந்தன.(59) அந்தப் படகுகளில் அமைக்கப்பட்டிருந்த அறைகள், தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டவையாகவும், மரகதம், சந்திரகாந்தம், சூரியகாந்தம் முதலிய விலைமதிப்புமிக்கக் கற்களால் ஒளியூட்டப்பட்டவையாகவும் இருந்தன.(60) அதன் வாயில்கள் வைடூரியங்களால் அமைக்கப்பட்டிருந்தன. கருடன், கிரௌஞ்சம், சுகம் {கிளி}, யானை ஆகியவற்றின் அழகிய வடிவங்கள் பொன்னால் வரையப்பட்ட அறைகள் அந்தப் படகுகளில் இருந்தன.(61) படகோட்டிகளால் செலுத்தப்பட்ட அந்தத் தங்கப் படகுகள், அலைகள் நிறைந்த கடலின் நீருக்குப் பெரிதும் அழகூட்டின.(62) முழுமையாக தெய்வீகப் பொருட்களால் செய்யப்பட்ட பெரிய கட்டடங்களைப் போன்ற பெரிய கப்பல்கள், சிறிய படகுகள், தெப்பங்கள் ஆகியவற்றால் வருணனின் வசிப்பிடம் {கடல்} அழகூட்டப்பட்டது.(63) கந்தர்வர்களின் வானுலாவும் நகரங்களைப் போலவே பைமர்களின் படகுகளும் கடலில் நகரத் தொடங்கின.(64)

ஓ! பரதனின் வழித்தோன்றலே, தேவதச்சனான விஷ்வகர்மன், தெய்வீக நந்தவனத்தைப் போலவே அந்தப் படகுகள் அனைத்தையும் செய்திருந்தான்.(65) தோட்டங்கள், சபைகள், மரங்கள், குளங்கள், தேர்கள் ஆகியவையும், கலை வடிவங்கள் பிறவும் நந்தவனத்தில் இருப்பதைப் போலவே செய்யப்பட்டிருந்தன.(66) ஓ! வீரா, நாராயணனுடைய ஆணையின் பேரில் தேவலோகத்திற்கு ஒப்பான அந்தப் படகுகளில் அனைத்தும் தெய்வீக வடிவங்களைப் போலவே கட்டப்பட்டிருந்தன. மேலும் நான் என்ன சொல்வேன்.(67)

பெருஞ்சக்திவாய்ந்த பைமர்களின் படகுகளில் அமைக்கப்பட்டிருந்த வனங்களில் பறவைகள் வெளியிட்ட இன்னொலிகள் கேட்போரின் மனங்களைக் கொள்ளை கொண்டன.(68) தேவலோகத்தில் பிறந்த வெண்குயில்கள் யாதவர்கள் விரும்பும் பல்வேறு இன்னொலிகளை வெளியிட்டன.(69) இன்னொலிகளை அகவும் ஆண்மயில்கள், சந்திரக் கதிர்களைப்போன்ற அழகிய வீடுகளின் கூரைகளில் பெண் மயில்கள் சூழ ஆடிக் கொண்டிருந்தன.(70) அந்தப் படகுகளில் ஏற்றப்பட்டிருந்த கொடிகளில் பல்வேறு பறவைகள் நிறைந்திருந்தன, மாலைகளில் வண்டுகள் அமர்ந்து ரீங்காரமிட்டன.(71) நாராயணனுடைய ஆணையின் பேரில் பருவகாலத்தின் அழகிய அறிகுறிகள் வானில் தோன்றின, மரங்கள் தொடர்ந்து மலர்களைப் பொழிந்தன.(72)

மலரிதழ்களுடன் கூடியதும், சந்தனத்தின் குளுமையைச் சுமந்து வருவதும், அழகும், இனிமையும் நிறைந்த {மனோகரமான} காற்று அங்கே வீசி மனிதர்களின் ஆசையைத் தூண்டியது.(73) ஓ! மன்னா, கதாதாரியான வாசுதேவனின் ஆதிக்கத்தின் பேரில் அந்நேரத்தில் பைமர்கள், தங்கள் இன்பத்திற்கேற்ற வெப்பத்தையும், குளிரையும் அனுபவித்தனர்.(74) அந்தச் சக்கரபாணியின் காந்தியினால் அவர்களில் எவரும் பசியையோ, தாகத்தையோ, களைப்பையோ, கவலையையோ அடையவில்லை.(75) இவ்வாறு பேரிகைகளின் ஒலி, இசை, நடனம் ஆகியவற்றால் தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்த அவர்களின் கடல் விளையாட்டில் கிருஷ்ணனால் பாதுகாக்கப்பட்ட பைமர்கள் பல யோஜனைகள் பரப்புடைய நீரைத் தடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.(76,77)

தேவதச்சன், உயரான்ம தேவனான நாராயணனின் படகை அவனது தொண்டர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் அமைத்திருந்தான்.(78) ஓ! மன்னா, பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணனின் படகிற்குள் மூவுலகங்களிலும் மதிப்புமிக்க ரத்தினங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டன.(79) ஓ! பரதனின் வழித்தோன்றலே, கிருஷ்ணனின் ஒவ்வொரு மனைவிக்கும் தங்கத்தால் அமைக்கப்பட்டதும், முத்து, வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான தனி அறை அமைக்கப்பட்டிருந்தது.(80) முன்னணி யாதவர்கள், அனைத்துப் பருவ காலங்களுக்கும் உரிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அனைத்து வகை நறுமணப்பொருட்களும் பூசிக்கொண்டு மங்கலமான தேவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(81)

விஷ்ணு பர்வம் பகுதி – 144 – 089ல் உள்ள சுலோகங்கள் : 81
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்