Friday 20 November 2020

யாகத்தடை செய்த அசுரர்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 140 – 084

(யஷவிஸ்தரோ துஷ்டநிக்ரஹஷ்ச)

The Asuras obstructing a Yajna | Vishnu-Parva-Chapter-140-084 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரம்மதத்தர் செய்த யாகம்; யாகத்தைக் காத்த வசுதேவன்; யாகக் காணிக்கையில் பங்கு கேட்ட அசுரர்கள்; பிரம்மதத்தரின் மகள்களைக் கடத்திச் சென்ற அசுரர்கள்; அசுரர்களுக்கு அலோசனை வழங்கிய நாரதர்...

Narada Muni

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்த நேரத்தில், ஓ மன்னா, யாஜ்ஞவல்கியரின் சீடரும், நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் நன்கு அறிந்தவரும், அறநெறி சார்ந்தவரும்,(1) பிரம்மதத்தன் என்ற பெயரைக் கொண்டவருமான வாஜஸ்நேய பிராமணர் ஒருவர்,(2) ஷத்புர நகரத்தில் முனிவர்களால் அடையப்பட்ட ஆவர்த்தகை எனும் நல்லாற்றின் புனிதக்கரையில் ஓராண்டு காலம் நீளும் யஜ்ஞம் செய்யும் தீக்ஷை பெற்றார்[1].(3) 

[1] யாஜ்ஞவல்கியரின் சீடரும், நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் நன்கு அறிதவரும், அறநெறி சார்ந்தவரும், வாஜஸ்னேய ஸம்ஹிதையைக் கற்றவரும், பிரம்மதத்தன் என்ற பெயரைக் கொண்டவருமான பிராமணர் ஒருவர், ஷட்புர நகரத்தில் முனிவர்களால் அடையப்பட்ட ஆவர்த்தகை எனும் மங்கலமான ஆற்றின் புனிதக்கரையில் ஓராண்டு காலம் நீளும் வேள்வியின் தொடக்கச் சடங்கைச் செய்தார்.

ஓ! குருவின் அரச வழித்தோன்றலே {குருகுலத்தவனே/ ஜனமேஜயனே}, வசுதேவனின் நண்பரும், அவனுடன் கல்வி பயின்ற மாணவருமானதால், ஓர் ஆசானும், பேரான்மா கொண்டவரும், அலுவல்முறை புரோகிதரும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவருமான அவர் {பிரம்மதத்தர்}, (4) யஜ்ஞம் செய்வதற்காக ஷட்புரத்திற்குச் சென்ற போது, (தேவர்களின் மன்னனான) சக்ரன் (தங்கள் ஆசானான) பிருஹஸ்பதியைப் பாதுகாப்பதைப் போலவே அவரை {பிரம்மதத்தரைப்} பாதுகாப்பதற்காகத் தேவகியுடன் சேர்ந்து வசுதேவன் அங்கே சென்றான்.(5) உணவும், கொடைகளும் நிறைந்திருந்த பிரம்மதத்தரின் அந்த யஜ்ஞத்தில் {வேள்வியில்} அர்ப்பணிப்பில் உறுதிமிக்கப் பெரியோரும்,(6) ஓ! பாரதக் குலத்தோனே, வியாசர், யாஜ்ஞவல்கியர், சுமந்து, ஜைமினி, திருதிமானான ஜாபாலி, தேவலர் ஆகியோரும், முன்னணி முனிவர்கள் பிறரும் அங்கே இருந்தனர். {வைசம்பாயனனான} நானும் அங்கே சென்றிருந்தேன்.(7) அந்த யஜ்ஞத்தில், பூமியில் அவதரித்திருக்கும் அண்டப்படைப்பாளனான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அருளால் அறம்சார்ந்த தேவகி, வசுதேவனின் பெருமைக்குத்தகுந்த முறையில் இரவலர்கள் விரும்பிய பொருட்களை அவர்களுக்கு மத்தியில் கொடையளித்தாள்.(8)

யஜ்ஞம் தொடங்கியதும், ஷத்புரவாசிகளும், வரங்களால் செருக்கடைந்தவர்களுமான நிகும்பனும், பிற தைத்தியர்களும் அங்கே கூடி,(9) "எங்களுக்குரிய யஜ்ஞபாகத்தை {வேள்விப்பங்கைக்} கொடுப்பீராக. நாங்கள் சோம பானம் பருகப் போகிறோம், பிரம்மதத்தன் தன்னுடைய மகள்களை எங்களுக்குக் கொடுக்கட்டும்.(10) இந்தப் பெரும் மனிதனிடம் அழகிய மகள்கள் பலர் இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, அவன் அவர்களை அழைத்து எங்களிடம் கொடுக்கட்டும்.(11) தான் கொண்ட மதிப்புமிக்க ரத்தினங்களையும் அவன் எங்களுக்குக் கொடுக்கட்டும். இந்த ஆணையை மீறினால், இந்த யஜ்ஞத்தை நடத்த நாங்கள் அவனை  அனுமதிக்க மாட்டோம்" என்றனர்.(12)

இதைக் கேட்ட பிரம்மதத்தர், அந்தப் பேரசுரர்களிடம், "ஓ! முன்னணி அசுரர்களே, வேள்விக் காணிக்கைகளில் உங்களுக்கென எந்தப் பங்கும் வேதங்களில் விதிக்கப்படவில்லை.(13) அவ்வாறிருக்கையில், இந்த யஜ்ஞத்தில் சோமம் பருக நான் எவ்வாறு உங்களை அனுமதிப்பேன்? உங்களுக்கு என் சொற்களில் நம்பிக்கை ஏற்படாவிட்டால், வேதங்களையும், அவற்றின் விளக்கங்களையும் நன்கறிந்த இந்தப் பெரும் முனிவர்களிடம் நீங்கள் கேட்பீராக.(14) வேதங்களைப் பின்பற்றி {கொடுப்பேனென ஏற்கனவே நான் மனத்தில் உறுதி ஏற்றுள்ள} உரிய மணமகன்களுக்கே என் மகள்களை நான் திருமணம் செய்து கொடுப்பேன்; இதுவே என் தீர்மானம்.(15) எனினும் நீங்கள் உடன்பட்டால் என்னிடம் உள்ள ரத்தினங்கள் அனைத்தையும் நான் உங்களுக்குத் தருவேன். நீங்கள் உங்கள் பலத்தைக் காட்டினால் தேவகியின் மகனுடைய {கிருஷ்ணனின்} ஆதரவைப் பெற்றவனான நான் அதையும் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்" என்றார் {பிரம்மதத்தர்}.(16)

ஷட்புரத்தைச் சேர்ந்த தீய தானவர்களும், நிகும்பனும், பிறரும், இந்தச் சொற்களைக் கேட்டு, யஜ்ஞத்திற்குரிய பொருட்களை வாரி இறைத்து, அவற்றைச் சிதறச்செய்து அவனுடைய மகள்களையும் அபகரித்துச் செல்லத் தொடங்கினர்.(17) அசுரர்களால் வேள்விப் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்ட ஆனகதுந்துபி {வசுதேவன்}, சிறப்புமிக்கக் கிருஷ்ணனையும், பலபத்ரனையும் {பலராமனையும்}, கதனையும் நினைத்தான்.(18) அவன் அவ்வாறு நினைத்த உடனேயே அனைத்தையும் அறிந்து கொண்ட கிருஷ்ணன், {தன் மகன்} பிரத்யும்னனிடம், "ஓ! என் மகனே, செல், உன் மாயா சக்திகளைப் பயன்படுத்தி அந்தக் கன்னியரைக் காப்பாயாக.(19) ஓ வலிமைமிக்க வீரா, யாதவப் படையுடன் சேர்ந்து விரைவில் நானும் ஷட்புரத்திற்கு {அனுபுரத்திற்குப்} புறப்படுவேன்" என்றான்.

நுண்ணறிவுமிக்கவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், எப்போதும் தந்தைக்குக் கீழ்ப்படிபவனும், வீரனுமான பிரத்யும்னன், இதைக்கேட்டுவிட்டு, ஒரு கணத்திற்குள் {கண்ணிமைக்கும் நேரத்திற்குள்} ஷட்புரத்திற்குச் சென்று,(20) தன்னுடைய மாயா சக்திகளால் அந்தக் கன்னியரை அபகரித்தான். ருக்மிணியின் அறம் சார்ந்த மகன் {பிரத்யும்னன்}, தன்னுடைய மாயா சக்தியால் அவர்களை {அந்தக் கன்னியரைப்} போன்றே மாயாவடிவங்களை உண்டாக்கி, அவற்றை அந்தத் தைத்தியர்களின் முன் வைத்து, தேவகியிடம், "அஞ்சாதீர்" என்று சொன்னான்.(21,22) ஓ! மன்னா, தடுக்கப்பட முடியாதவர்களான அந்தத் தைத்தியர்கள், பிரம்மதத்தரின் மகள்களை விட்டு அந்த மாயக் கன்னியரை அபகரித்துக் கொண்டு தங்கள் நகருக்குள் நிறைவுடன் நுழைந்தனர்.(23)

அதன்பிறகு, ஓ! மன்னா, அந்த மகத்தான பெரும் யஜ்ஞம் {வேள்வி}, உரிய சடங்குகளுடன் கொண்டாடப்பட்டது.(24) ஓ! பரதனின் வழித்தோன்றலே, நுண்ணறிவுமிக்கப் பிரம்மதத்தரால் அழைக்கப்பட்ட மன்னர்கள் அனைவரும் வேள்விக்களத்தை அடைந்தனர்.(25) ஜராசந்தன், தந்தவக்தரன், சிசுபாலன், பாண்டவர்கள், திருதராஷ்டிரனின் மகன்கள், தொண்டர்களுடன் கூடிய மாளவன், (26) ருக்மி, ஆஹ்விருதி, நீலன், தர்மன் ஆகியோரும், அவந்தியின் மன்னர்களான விந்தனும், அனுவிந்தனும், சல்யன் {அல்லது சால்வன்}, சகுனி ஆகியோரும்,(27) உன்னதமான போர்வீரர்களான மன்னர்கள் பிறரும் ஷட்புரத்தின் அருகில் முகாம் அமைத்தனர்.(28)

இதைக் கண்ட குற்றமற்ற நாரதர், "இந்த யஜ்ஞத்தில் ஷத்திரியர்கள், யாதவர்கள் என அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர். நிச்சயம் இது பிணக்கிற்கு வழிவகுக்கும். {நானே போருக்குக் காரணமாவேன்}.(29) எனவே நான் அதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும்" என்று நினைத்தார். இவ்வாறு நினைத்துக் கொண்டே அவர் நிகும்பனின் வீட்டை அடைந்தார்.(30)

அவர் நிகும்பனாலும், பிற தானவர்களாலும் வழிபடப்பட்டார். அற ஆன்மா கொண்ட அந்த முனிவர், அதன் பிறகு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு நிகும்பனிடம்,(31) "யாதவர்களைப் பகைத்துக் கொண்டு எவ்வாறு இங்கே நீங்கள் சுகமாக அமர்ந்திருக்கிறீர்கள்? பிரம்மதத்தர், கிருஷ்ணனுடைய தந்தையின் {வசுதேவனின்} நண்பன் என்பதை நீங்கள் அறியமாட்டீரா?(32) நுண்ணறிவுமிக்கப் பிரம்மதத்தரின் ஐநூறு மனைவியரும், வசுதேவனின் மகனுடைய {கிருஷ்ணனின்} நிறைவுக்காக வேள்விக்களத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.(33) அவர்களில் இருநூறு பேர் பிராமணர்களுக்குப் பிறந்தவர்கள், நூறு பேர் க்ஷத்திரியர்களுக்குப் பிறந்தவர்கள், நூறு பேர் வைசியர்களுக்குப் பிறந்தவர்கள், இன்னும் நூறு பேர் சூத்திரர்களுக்குப் பிறந்தவர்கள்.(34)

ஓ! மன்னா, கல்விமானும், அறம்சார்ந்தவருமான துர்வாச ரிஷியை அவர்கள் அனைவரும் வழிபட்டனர். அவர், "நீங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக ஒரு மகனையும், ஒரு மகளையும் அடுத்தடுத்து பெறுவீர்கள்" என்று அவர்கள் அனைவருக்கும் வரமளித்தார்.(35,36) ஓ! வீர அசுரா, அந்த வரத்தால் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கணவனுடன் கலந்து அழகிய மகள்களை ஈன்றனர். அவர்கள் ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களாகவும்,(37) மென்மையானவர்களாகவும், எப்போதும் இளமை நிறைந்தவர்களாகவும், கற்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அனைத்து மலர்களின் நறுமணமும் அவர்களின் உடல்களில் கமழும்.(38) ஓ தைத்தியா, அந்த நுண்ணறிவுமிக்க ரிஷியின் {துர்வாசரின்} வரத்தால் ஆடற்பாடற்கலைகளையும், அப்சரஸ்களின் திறன்களையும் அவர்கள் அறிந்தார்கள்; அவர்கள் அனைவரும் நற்சிறப்புகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.(39)

அதே போல அவருடைய {பிரம்மதத்தரின்} மகன்களும், தங்கள் தங்கள் வகைக்குரிய கடமைகளை முறையாகப் பின்பற்றி வருகின்றனர். அவர்கள் புனித உரைகளுக்கு விளக்கம் சொல்லும் புத்திசாலிகளாகவும், அழகர்களாகவும் இருக்கின்றனர்.(40)

ஓ! வீரா, நுண்ணறிவுமிக்கப் பிரம்மதத்தர், கிட்டத்தட்ட தம்முடைய மகள்கள் அனைவரையும் {நானூறு பேரை} முன்னணி பைமர்களுக்கு {பீம குலத்தோருக்குக்} கொடுத்துவிட்டார். எஞ்சிய நூறு பேரை நீங்கள் அபகரித்து வந்திருக்கிறீர்கள்.(41) அவர்களுக்காக யாதவர்கள் போரிடுவார்கள். எனவே, ஓ! வீரா, பிற மன்னர்களின் உதவியைப் பெற முறையாக அவர்களை அழைப்பாயாக.(42) ஓ! அசுரர்களே, பிரம்மதத்தரின் மகள்களை நீங்களே வைத்துக் கொள்ள விரும்பினால், பெருஞ்சக்திவாய்ந்த மன்னர்களுக்குப் பல்வேறு ரத்தினங்களைக் கொடுத்தும்,(43) இங்கே வரும் மன்னர்கள் அனைவரையும் உன் விருந்தினர்களாக மதித்தும் அவர்களின் உதவியை நீங்கள் நாடுவீராக" என்றார் {நாரதர்}. நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட அசுரர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் அவரது ஆணைகளை நிறைவேற்றினர்.(44)

அந்த மன்னர்கள், பல்வேறு ரத்தினங்களையும், அர்ப்பணிப்புமிக்க ஐநூறு கன்னிகையரையும் பெற்றுத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.(45) மறுபுறம் சிறப்புமிக்க நாரதர் ஒரு கணத்திற்குள் பாண்டுவின் வீர மகன்களிடம் சென்று, அவர்களைத் தடுத்ததால் அவர்கள் அந்தக் காணிக்கையில் எந்தப் பங்கையும் பெற்றுக் கொள்ளவில்லை.(46)

அதன்பேரில் மகிழ்ச்சி அடைந்த முன்னணி மன்னர்கள் அந்த அசுரர்களிடம், "வானத்தில் செல்லவல்லவர்களும், இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் பெற்றவர்களுமான உங்களைப் போன்ற தெய்வீக வீரர்களால்,(47) இதற்கு முன்னர்ப் பலமுறை க்ஷத்திரியர்கள் துதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்போதும் அவர்கள் முறையாக உங்களால் கௌரவிக்கப்பட்டனர். பதில்மதிப்பாக உங்களுக்கு அவர்கள் என்ன தர வேண்டும்?" என்று கேட்டனர்.(48)

தேவர்களின் பகைவனான நிகும்பன் இதைக் கேட்டு இன்பத்தில் நிறைந்தான். அவன், க்ஷத்திரியர்களின் பெருமையையும், வாய்மையையும் விளக்கிவிட்டு அவர்களிடம்,(49) "ஓ! முன்னணி மன்னர்களே, இன்று எங்கள் பகைவருடன் நாம் போரிட வேண்டும். உங்கள் சக்திக்குத் தகுந்த வகையில் நீங்கள் எங்களுக்கு உதவி செய்வீராக" என்றான்.(50)

ஓ! தலைவா, நாரதரிடம் இருந்து உண்மையை அறிந்து கொண்ட பாண்டுவின் வீர மகன்களைத் தவிர, க்ஷத்திரியர்களில் பாவம் நிறைந்த அனைவரும் நிகும்பனின் சொற்களைக் கேட்டு, "அப்படியே ஆகட்டும்" என்றனர்.(51) {ஓ! குரு குலத்தோனே, அதன்பிறகு அந்த க்ஷத்திரியர்கள் போருக்கு ஆயத்தமாகினர். பிரம்மதத்தரின் மனைவியரும் யஜ்ஞசாலையை அடைந்தனர்}.(52)

மறுபுறம், ஓ! மன்னா, பலம்நிறைந்தவனான கிருஷ்ணன், தன் மனத்தில் மஹாதேவனின் {சிவனின்} சொற்களை நினைவுகூர்ந்து, தன் படையுடன் ஷட்புரத்திற்குப் புறப்பட்டான்.(53) தலைவன் வாசுதேவன் {கிருஷ்ணன்}, குடிமக்களின் நலன் விரும்பி ஆஹுகனை {உக்ரசேனனைத்} துவாரகையில் விட்டுவிட்டு படையுடன் ஷட்புரத்தை அடைந்து,(54) வசுதேவனின் ஆணையின் பேரில் வேள்விக்களத்தின் அருகில் ஒரு மங்கலமான இடத்தில் முகாமிட்டான். பலம்நிறைந்தவனும், அழகனுமான கிருஷ்ணன்,(55) புதர்களைக் கொண்டு அடைதற்கரிதான இடமாக அந்த முகாமை மாற்றி, அங்கே பிரத்யும்னனைக் காவற்பணியில் ஈடுபடுத்தினான்" என்றார் {வைசம்பாயனர்}.(56)

விஷ்ணு பர்வம் பகுதி – 140 – 084ல் உள்ள சுலோகங்கள் : 56
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்